அடோனிஸ் ஆறு கவிதைகள் / தமிழில் ப்ரசன்னா ராமஸ்வாமி

[ A+ ] /[ A- ]

adonis1

கவிதையிடம்

என்னிடம் வருகையில் உன் கறுத்த உடையை மாற்றிக் கொள்ளக்கூடாதா?

உன்னுடைய ஒவ்வொரு வார்த்தையிலும் இருளின் ஒரு துண்டைப் பொதியும்படி
ஏன் என்னை வற்புறுத்துகிறாய்?

எங்கிருந்து அடைந்தாய் இந்த
வெளியைத் துளைக்கும் இரைச்சலின் வன்மையை,
காகிதத்தின் மீது பரவிய வெறும் ஒரு சில எழுத்துக்களாக இருக்கும்போதே…

முதுமையல்ல, குழந்தைப்பருவமே உன் முகத்தை சுருக்கங்களால் நிரப்புகிறது

பகல்பொழுது தன் தலையைக் கதிரவனின் தோள்களில் சாய்வதையும்
உன் உடனிருப்பில் களைத்துப்போய்
நான் இரவின் மடியில் உறக்கத்தில் விழுவதையும் பார்

வண்டி உன்னிடம் வந்து விட்டது, அறிமுகமற்றவர்களின் எழுத்துக்களைத் தாங்கி

காற்றிடம் சொல்லிவிடு,
நீ என்னுடைய ஆடைகளுக்குள்
புகுந்து கொள்வதை எதனாலும் தடுக்கவியலாதென்பதை

ஆனாலும், காற்றிடம் கேட்டுவிடு, “உன் வேலைதான் என்ன, யாரிடம் வேலை செய்கிறாய்”

குழந்தமையே, மகிழ்ச்சியும் துயரமும் உன் நெற்றியில் இரண்டு பனித்துளிகளைப் போல

உனக்கு நினைவிருக்கிறதா, அந்த யுத்தத்தை நான் பின்பற்றிய விதம்?
ஒரு முறை காலத்தை நோக்கி,
“உனக்கும் கேட்பதற்கு இரண்டு காதுகள் உண்டெனில் நீயும்
இப்ரபஞ்சம் பூராவும் நடந்திருப்பாய், மனம் தளர்ந்து,
தலை கலைந்து,
ஆரம்பமே இல்லாத உன் முடிவை நோக்கி’…

என்னிடம் வருகையில் உன் கறுத்த உடையை மாற்றிக் கொள்ளக்கூடாதா?
இரண்டு கவிஞர்கள்

எதிரொலிக்கும் ஒலிக்கும் இடையில் நிற்கும் இரண்டு கவிஞர்கள்
முதலாமவர் உடைந்த நிலவைப் போலவும்
மற்றவர் எரிமலையின் கைகளில்
தொட்டிலிட்டு இரவுதோறும் உறங்கும் குழந்தை போல அமைதி காக்கிறார்

மேகத்திற்கான ஒரு கண்ணாடி

சிறகுகள்
எனினும் அது ஆனதோ மெழுகினால்
மேலும் விழும் மழையும் மழையல்ல
ஆனால்
அவை எங்கள் கண்ணீர்
மிதக்கும் கப்பல்கள்

கவிஞர்கள்

அவர்களுக்கென்று ஏதும் இடமில்லை
அவர்கள்
பூமியின் உடலுக்கு கதகதப்பூட்டுவதும்
அதன் திறப்புகளுக்கு இடமளிப்பதுமாக இருக்கிறார்கள்
எந்தவொரு பாரம்பரியத்தையும்
உருவாக்குவதில்லை அவர்கள்
தம்முடைய தொன்மங்களுக்கென ஒரு வீட்டையும் கூட….
அவர்கள் அவற்றை எழுதுகிறார்கள்
சூரியன் தனது சரித்திரத்தை
எழுதிச் செல்வது போல..
இடமில்லை அவர்களுக்கு

பரிசோதனை

நல்லது, நான் உறங்கவில்லை
நான் இந்த வீதிகளை கவனித்து
மற்றவர்கள் அறிந்ததை அறிவேன்
நல்லது, இந்தக் கூட்டத்தோடு சேர்ந்து..
ஓரடி, ஈரடி, மூவடி…
ஓர் இறந்தவர், ஒரு போலீஸ், இறந்தவர், போலீஸ், இறந்தவர்….
மேலும் நீங்கள் எனக்கு எதிரான
சாட்சியமாக மாட்டீர்கள்
இங்கு நான் சொற்களின் கடலில்
காகிதங்கள் மிதந்து பரவ
எனக்குத் தெரிகிறது மற்றவர்கள்
சொன்னதைத்தான் திரும்பவும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்,
மேலும்
தூங்கிவிட்டெனென்றும் தெரிகிறது

நேசம்

வீதியும் வீடும் என்னை நேசிக்கின்றன
இருப்பவர்களும் இறந்தவர்களும் கூட
வீட்டிலுள்ள சிவப்பு மண் ஜாடி
நீரால் நேசிக்கப்பட்டது அதுவும்…
அண்டை வீட்டார் என்னை நேசிக்கிறார்கள்
வயல்காடு, களத்து மேடு, நெருப்பு எல்லாம் கூட.
உலகை மேன்மைப் படுத்தும் உழைக்கும் கரங்கள், அவை
என்னை நேசிக்கின்றன மிகுந்த மகிழ்ச்சியுடன்
அவை எதையும் அடைந்ததில்லை
என் சகோதரனின் எச்சங்கள்
சிதறிக் கிடக்கின்றன, பிளந்த அவனது மார்பிலிருந்து பிய்ந்து போய், கோதுமைக் கதிர்களாலும் பருவத்தாலும்
குருதி கூட வெட்குமபடியான ஒரு கார்னீலியா போல.
நேசத்தின் கடவுளாகவே திகழ்ந்தான் அவன் நான் வாழ்ந்த வரையில். நேசம் என் செய்யும் நானும் போய் விட்டால்?


இரண்டு கவிஞர்கள்

எதிரொலிக்கும் ஒலிக்கும் இடையில் நிற்கும் இரண்டு கவிஞர்கள்
முதலாமவர் உடைந்த நிலவைப் போலவும்
மற்றவர் எரிமலையின் கைகளில்
தொட்டிலிட்டு இரவுதோறும் உறங்கும் குழந்தை போல அமைதி காக்கிறார்

***

Comments are closed.