அணையும் நெருப்பு.. அணையாத கேள்விகள் – கரிகாலன்

[ A+ ] /[ A- ]

download (5)

பெண்ணின் வலி தொட்டு இமையம் எழுதிய அற்புதமான சிறுகதை அணையும் நெருப்பு.இந்நாடகம் விருத்தாசலத்தில் நடைபெற்ற களம்புதிது விருது விழா அரங்கில் நிகழ்த்தப்பட்டது.இமையத்தின் கதை அதன் அத்தனை பரிமாணங்களோடும் கண்முன் நிறுத்தியிருந்தனர் புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறை மாணவர்கள். இதற்கு முன்பாக இவர்கள் இமையத்தின் பெத்தவன்,ஆகாசத்தின் உத்தரவு போன்ற கதைகளையும் இதே அரங்கில் வெற்றிகரமாக நிகழ்த்தியிருந்தனர்.இந்த மூன்று நாடகங்களும் கிராமத்துப் பின்னணியில் அதன் நிலப்பிரபுத் துவ மதிப்பீடு சார்ந்த விழுமியங்கள் மீது ஆழ்ந்த நுணுக்கமான விமர்சனங்களை முன்வைப்பவை.’பெத்தவன்’ காதலுக்குத் தடையாய் இருக்கும் சாதி ஆணவத்தையும், ‘ஆகாசத்தின் உத்தரவு’ வயிற்றுப்பாட்டுக்குத் திருடும் ஒருவன் தன் குலதெய்வத்திடம் தொழிலுக்குச் செல்லும் முன் குறிகேட்பதின் வழி வெளிப்படும் அவனுடைய வாழ்வின் அவலத்தையும் ,’அணையும் நெருப்பு’ கைவிடப்பட்ட பெண்ணின் துயரையும் பேசுபவை.

download (1)

சித்தர்கள் தொடங்கி பெண்ணை பாலியல் இச்சையைத் தீர்த்துக்கொள்ளும் ஒரு பொருளாக மட்டுமில்லை காமவேட்கை கொண்ட உயிரினமாகவே பார்த்து வந்துள்ள சூழலில் மிகுந்த பண்பாட்டு இறுக்கமுடைய நமது சூழலில் பெண்ணின் ச்தவிப்புகளை,ஆதங்கங்களை, கோவங்களை உரத்து பேசியிருக்கிறார் இமையம். இதன் நாயகி ஒரு சாதாரண அதிகம் படிக்காத பெண்.அவளுக்கு பெண்ணியம்,நீதி?அறம் குறித்தெல்லாம் பெரிய பார்வைகளொன்றுமில்லை.அவள் பேசும் சொற்கள் எளிமையானவை.சத்தியம் நிரம்பியவை.அனுபவத்தின் தகிப்புகளிலிருந்து வெளிபடுபவை.நமது மனசாட்சியின் ஆழம்வரை ஊடுறுவக்கூடியவை.கலைப் படைப்புகள் நீதி மறுக்கப்பட்டவர்களுக்கான குரலாக அமைய வேண்டும்.அவ்வகையில் இமையம் தனது படைப்புகளின் வழியாகத் தொடர்ந்து பெண்களுக்காக பெண்களின் குரலிலேயே பேசுகிறார்.அதற்குப்பின்னால் ஆணின் தந்திரங்கள் எதுவுமில்லை.
download (4)

பெண்ணை வெறும் நுகர்வுப் பொருளாகப் பார்க்கும் சமூகம்,ஊடகம், ஆணாதிக்கப் பண்பாடு என அனைத்து நிறுவனங்கள் மீதும் இதன் நாயகி எழுப்பும் வினாக்களுக்கு நம்மிடம் பதிலில்லை.இங்கு காதலாகட்டும்,பாலின்ப விழைவாகட்டும் இவற்றின் விளைவால் ஏற்படும் வலிகளைப் பெணகளே சுமக்கும்படி நமது பண்பாட்டு மதிப்பீடுகள் அமைந்திருக்கின்றன. இளம் வயதில் கைம்பெண்ணாகும் அணையும் நெருப்பின் நாயகி,அவள் கட்டுடல் பொருட்டு தொடர்ந்து வீதியின் கண்களால் வேட்டையாடப் படுகிறாள்.எந்த உதவியை அவள் நாடினாலும் அவள் உடலை விலையாகக் கேட்கப்படுகிறது. இந்நிலையில் காவல் துறை ஆய்வாளரொருவர் அவளுக்கு உதவுகிறார்.இதனால் அவருடைய மனைவி தற்கொலை செய்து கொள்ள ஊடகங்கள்,சமூகம் அவளை வில்லியாக சித்தரிக்கின்றன.தனித்து நிற்பவள் அழைத்தால் வருவாள் எனும் தட்டையான ஆணாதிக்க ஒற்றை பார்வையோடு அவளை அணுகுகின்றனர். பருவத்தின் சுமை பொறுக்காத விடலைப் பையனொருவன் அவள் பின்னால் சுற்ற, வெடித்து எழுகிறாள்..அனாதரவான பெண்ணிடம் இருளில் சுகம் தேட அலைபவர்கள் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளாதத் தன்மை குறித்து வினா எழுப்புகிறாள். பெண்ணின் பார்வையில் ஆணுக்கு தனி முகமில்லை.பெண்ணை எதிர்கொள்ளும் சமூகத்துக்கு தனித்த சொற்களில்லை.இதை வெளிப்படுத்தும் வண்ணம் இந்நாடகத்தின் மையப்பாத்திரம் தவிர்த்து அனைத்து பாத்திரங்களும் முகத்தை கருப்புத் துணியால் மறைத்திருந்தனர்.ஒரு அபலைப் பெண்ணின் வாழ்வைத் தொடர்ந்து வேட்டையாடும் வெளியாக நாம் வாழும் சமூகம் ஏன் மாறிப்போனது எனும் குற்ற உணர்வை இந்நாடகம் பார்வையாளர்களிடம் ஏற்படுத்தியது.

ஒரு பெண் ரௌத்திரம் கொண்டு பொங்கி எழுந்தால் ஆண் எப்படி சிறுமை அடைவான் என்பதின் கலைசாட்சி அணையும் நெருப்பு. ஒரு மூன்றாம் அரங்கை எப்படி அமைப்பது என்பது நாடகத்தை இயக்கிய பேராசிரியர் ராஜு அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. மேடை, நுகர்வர்கள் எனும் எல்லைக்கோட்டை முற்றிலுமாக நாடகம் அழிந்திருந்தது.நாடகக் காட்சிகள் பார்வையாளர் ஒவ்வொருவரின் சுய அனுபவத்தோடும் ஏதோ ஒரு வகையில் அடையாளப்படுத்திக்கொண்டிருந்தது. மையப் பாத்திரத்தை ஏற்றிருந்த அருணா எரியும் நெருப்பாகவே சுடர்விட்டுப் பிரகாசித்தார்.

நந்தினி,இளம்பரிதி,முத்துக்குமார்,சந்தோஷ்,மனீஷ்,தவச்செல்வி,சதீஷ்குமாரு போன்றோரும் தம் நடிப்பின் முழு சாத்தியங்களையும் வெளிப்படுத்தினர். தேவையான அளவில் ஒளியூட்டியிருந்த பாலாபாராட்டுக் குரியவர்.இசையை ஒரு பாத்திரமாக்க முடியும் என நிரூபித்திருந்தார்கள் முருகவேல், சமணராஜா,விநாயகம் மூவரும். இனி இலக்கிய அரங்குகளில் நிகழ்த்து கலைகளின் அவசியத்தை இந்த நாடக முயற்சி யோசிக்க வைத்திருக்கிறது.அணையும் நெருப்பு முடிந்ததும் பார்வையாளர்களின் கைத்தட்டலில் சுடு பறந்தது.அதுவே கதையின் – நாடகத்தின் – கலையின் வெற்றி!

*******

Comments are closed.