அன்பாதவன் கவிதைகள் ( துபாய் )

[ A+ ] /[ A- ]

download (4)

1.புலம் பெயர்த் தனிமையோடு சம்சாரிப்பவன்

புலம் பெயர்த் தனிமையோடு சம்சாரிப்பவன்
தினமும் வைக்கிறான் தீனி
புறாக்களுக்கு…
சில போது.. பருப்பு வகை அல்லது
கோதுமை ரவா..அரிசி மணிகள்
கூட்டமாய் வருபவை…
குதூகலமாய்த் திரும்பும்
”குர் குர்” சப்தம்…இசையா..ஓசையா
சாப்பிடும் போது சண்டை எதற்கு.. செல்லங்களே…

கொஞ்சலைக் கொஞ்சம் குறையுங்க மக்கா
தனியேக் கிடந்து தத்தளிப்பவனிந்த கவி

எது வைத்தாலும்.. பிசிறு விடாமல்
தின்று தீர்க்கும் பட்டுப் புறாக்கள்
என் சமையலில் உருவான குழம்பு சாதங்கள்
மட்டும் தீண்டப்படாமலே..கிடக்க
காய்ந்த சோற்றுக்குமியலை..வெறிக்கிறான்
நிராகரிப்பின் காரணம் புரியாத..கவி

2.ஏழு கடல் அவள் வண்ணமடா!

இவள் வங்கியில் பணிபுரிகிறாள்
“ஆம்பளங்களோடு பேசிக்கிட்டே
இருக்குமோ அந்தப் பொண்ணு”

அவள் ஊடகத் துறையில் ஒருத்தி
”எப்பப்பாரு ஆம்பளப்பசங்க கூடத்தான்
குடும்ப மானம் போகுது”

அவள் அரசியலுக்கு வருகிறாள்
”ம்ம்.. இந்தப் பதவி எப்படி கெடச்சதுன்னு
எங்களுக்குத் தெரியாதாக்கும்.”

அவள் முகநூலுக்கு வருகிறாள்
”சபாஷ்…
அருமை…
சூப்பர்…!
அழகுச் சிலை…
ஐ லவ் யூ!
எங்கு சந்திக்கலாம்
என்று சந்திக்கலாம்.”

இவள் இலக்கிய உலகில் நுழைகிறாள்
”எழுதுறாளாம் படிக்கிறாளாம்
மேடைப்பேச்சு வேற
பொட்டக் கோழி கூவியா
பொழுது விடியப்போவுது”

இவள் கலைத்துறையில் காலடி வைக்கிறாளாம்
”பொம்பள சிரிச்சாப் போச்சு
பொகயல விரிச்சாப் போச்சு”

அவளின் கற்பை சந்தேகி
உடலைச் சூறையாடு

பொதுவெளியில் ஆபாசப் படம் தெளித்து
தற்கொலைக்குத் தூண்டு

நடுச்சாலையில் அடித்துத் துவை

பொது இடத்தில் கொலை செய்
அந்தரங்கங்களில் சிகரெட்டால் சுடு
கடப்பாரை செருகு
மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்து

சொற்களால் காயப்படுத்து
கடித்துக் குதறு

அனைத்தையும் சமாளிப்பாள்
ஒரு புன்னகைக் கீற்றுடன்
ஆனால்… தெளி!
உன் முனை அங்குல ஆணதிகாரமும்
நுழைய முடியாது
அவள் சம்மதமின்றி…

களித்தொகை

க.

பாலை நெய்தல்,முல்லை,குறிஞ்சியெனப்
பயணிக்கும் பாணன்
வெக்கை வெயிலில் காத்திருக்கிறான்
மருதத்தின் வாசல் திறக்குமென…
அறைந்து சாத்தப்பட்டதே கதவம்.. அந்தோ!
சுவடிகளில் சுமந்து வந்த காதலை
முற்றத்தில் வீசி வெளியேறியவனுக்கது
கசந்த காலம்

வருவதாய்.ச் சொன்னவன் விழிகளில் நிற்க
வெளி.. உள்ளில் புழுக்கம் சுழல
கதவமாய்க்காத்திருக்கிறாள் பாடினி
சுவடிக் கவிதைகள் காய்ந்து சருகாக….
க உ
.காற்றில் திறந்தது கதவம்
தென்றலாய் பரவினான் கூத்தன்
போர்க்களத்து புரவிக்குண்டோ வேகத்தடை
பசியா[ற்]றி பகிர்ந்த பாடல்களில் சொக்கி
பாதம் பிடித்து போதம் பொங்க
மோக விரல்கள் தீண்ட
முனகல்களில் தெறிக்குமோ கவிப்பரல்
கிறக்க இறுக்கத்தில் கசங்கிக் கிடக்கிறாள் விறலி…
கவிதைகள் வழியும் சுவடிகள் சொல்லுமிது
இசைந்த காலம்

ஒற்றைச் சொல்
ஒற்றைச் சொல் தான்..!
பொங்க வைத்தது சுனாமியாய்
பூகம்பமாய்ச் சிதைத்தது..

க்‌ஷண நொடியில் மறைந்த வசீகரம்
வெளிப்பட்ட நம் சுயம்
சூனியக்காரியும் பெரும்பூதமுமென..
புல்லட்டைப் போல சீறி வந்த சினத்தில்
கவனிக்கத் தவறினோம் கொடுநாக நஞ்சனலை

அருவருப்பில் சிந்திய வார்த்தைகள்
பாதரசமாய் உருண்டோடி பற்ற வைத்தன
இத்தனை நாளும் அடைகாத்த அந்நியோன்யத்தை..

அம்பறாவிலிருந்து பறந்த கணைகள் கருகி வீழ
வதைத்த வார்த்தைகளால் கலைந்த கனவு
இடைவெளியின் இருட்டாழத்தை அளக்க ஏலுமோ
கரைகளில் பிரிந்து தவிக்கும் மனசால்..

வெப்பந்தாங்காமல் மவுனக்குளத்தில் சிறைப்புக
வியர்க்கிறது ஞானம்:
துப்பியிருக்க வேண்டாமோ வெறி மிருகமாய் நம்மை
விழுங்கிய அந்த ஒற்றைச் சொல்லை…?

****

Comments are closed.