அன்றாடங்காய்ச்சி ( சிறுகதை ) – சே. தண்டபாணி தென்றல்

[ A+ ] /[ A- ]

இப்பவெல்லா யாரு சார் சாதி பாக்குறாங்க? இனிமேல் இதை யாராவது தன்னிடம் சொன்னால், அவரை பளார் பளாரென்று அறைந்து , தரத்தரன்னு இழுத்துட்டு வந்து இந்தக் காட்சியைக் காட்டலாம் போலிருந்தது வார்டன் சுகுமாரனுக்கு. தினந்தோறும் காலையில் உணவுக் கூடத்திற்கு வரும்போது அவர் கண்ணில் தவறாமல் பட்டுவிடுகிறது அக்காட்சி . இதற்காகவே வேறொரு நேரத்தில் வரலாமென்றாலும் அவனும் அன்று தாமதமாகவே வருகிறான். இதற்கொரு வழியைப் பார்க்க வேண்டுமே? என்ன செய்வது? கையைப் பிசைந்தவாறே யோசித்துக் கொண்டிருந்தார் வார்டன் சுகுமாரன்.

அப்பல்கலைக் கழகத்தில் முனைவர் சுகுமாரன் அறிவியல் பேராசிரியராகச் சேர்ந்து பத்து வருடங்கள் தாண்டிவிட்டன. ஒரு வருடத்திற்கு முன்னால்தான் ஆண்கள் விடுதியின் வார்டனாக நியமிக்கப்பட்டது அவருக்கும் கூடுதல் மகிழ்ச்சிதான். வெறும் வகுப்பறையில் செயற்கையாக நெகிழியைப் போல பாடத்தை திணிப்பதற்குப் பதிலாக சமுகம், அறிவியல் எனப் பல விஷயங்களில் ஈடுபாடுள்ள மாணவர்களை வழிப்படுத்த முடியுமெனவும் நம்பி புன்னகை பொங்க ஏற்றுக் கொண்டார்.

விடுதிக் காப்பாளராக சுகுமாரன் சார் இணைந்து முதல் நாள். சுமார் எட்டேகால் மணியிருக்கும். உணவுக் கூடத்திற்குள் பழக்கப்பட்ட இடத்தைப் போலவே வார்டன் சுகுமாரன் நுழைகிறார். மாணவர்கள் ஒவ்வொருவராக அங்கு வைக்கப்பட்டிருந்த தட்டுகளை எடுத்து தண்ணீரில் அலசிவிட்டு சாப்பிடச் செல்கின்றனர். சுப்பர் வைசருக்கான சேரில் மெல்ல அமர்ந்தவாறே வார்டன் சுகுமாரன் கவனித்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுதுதான் அவரின் மனம் கசக்கும் படியான ஒரு செயலை கிட்டத்தட்ட யானையைப் போலிருந்த ஒரு பையன் அசால்டாக செய்து கொண்டிருக்கிறான். பின்னொரு நாளில் அதே சம்பவத்தின்போது எழுந்து சென்று விசாரித்துப் பார்க்கலாமா? அல்லது பளாரென்று கன்னத்துடன் பேசிப் பார்க்கலாமா? எனத் தீவிரமாக சிந்தித்துப் பார்த்ததுண்டு. “எடுத்தோம் கவுத்தோமென்று” இருக்கக் கூடாது.

சரியான சந்தர்ப்பம் வரும்வரை பொறுத்திருக்கலாம். வெளியே யாருக்கும் கேட்காமல் தனக்குக் கேட்குமாறு மட்டுமே மனசுக்குள் வார்டன் சுகுமாரன் பொருமிக் கொண்டார்.

வெள்ளிக்கிழமை. மதியம் ஒருமணியிருக்கும் . வகுப்பிற்குச் சென்றுவிட்டு தன் அறைக்கு வந்து அமர்ந்ததும்…கெட்இன் சார்? வகுப்பு மாணவி ரேணுகாவின் குரல்கேட்டு உள்ளே வர அனுமதித்தார்.. சார் யுனிவெர்சிட்டில பெரியார் பிறந்தநாளுக்கு பல போட்டிகள் வெய்க்குறாங்க சார். அதுல கட்டுரைப் போட்டிக்கு “சாதி உண்டு என்பானும் இருக்கின்றானே?” அப்படீன்னு தலைப்பு கொடுத்துருக்காங்க சார் …நல்ல விஷயம் பா… ஆல் தி பெஸ்ட். நல்லா எழுதுங்க.

தேங்க்ஸ் சார்.. ஆனா சற்றே இழுத்த ரேணுகா தான் வந்ததற்கான நோக்கத்தை மெல்ல மெல்லச் சொல்ல ஆரம்பித்தாள். எப்புடிக் கட்டுரையக் கொண்டுபோய் முடிக்கிறதுன்னு தெரியலைங்க? சார்.

சட்டென்று அவருக்கு தினமும் உணவுக்கூடத்தில் தான் பார்க்கும் அன்றாடங்காய்ச்சி ஞாபகம் வரவும், முடிவுரையில் இதனைக் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ‘தேங்க் யூ சார்’ சொல்லி ரேணுகா விடை பெறவும் சிறிது தண்ணீர் குடித்து பேராசிரியர் சுகுமாரன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

சில விஷயங்களை கதைகளைப் போல சொல்லித் திருத்தலாம். அவைகளுக்கு நிரூபணங்கள் ஒரு பொருட்டாய் இருப்பதில்லை. வேறு சில விஷயங்கள் அறிவியலைப் போல நிரூபித்தே ஆக வேண்டும். சுகுமாரன், தன் அறையில் மாட்டி வைத்திருந்த புகைப்படத்தைப் பார்த்தார். மூன்று குரங்குகள் மூன்று விதத்தில் இருந்ததைக் கண்டதும் சட்டென பேராசிரியர் சுகுமாரனுக்கு ஓர் அனிச்சை யோசனை தோன்றியது. இன்னும் சிறிது நேரத்தில் வேறொரு துறையிலிருக்கும் இன்னொரு பேராசிரியையை சந்தித்தே ஆக வேண்டும்.

மதியம் ஒன்று முப்பது மணி. கண்ணாடிகளால் ஆக்கப்பட்டிருந்த பேராசிரியை அபிராமியின் அறைக்கு முன்பாக பேராசிரியர் சுகுமாரன் நின்றிருந்தார். இதுவரைக்கும் நிறைய அலுவல் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக அவரை சந்தித்திருக்கிறார். ஆனால் இன்று போயும் போயும் ஒரு குரங்கு வேண்டுமென்றா? கேட்கப் போகிறேன். அன்றொரு நாள் பேச்சு வாக்கில் பெண்கள் விடுதியில் நிறையக் குரங்கிருப்பதாக பேராசிரியர் அபிராமி சொன்னது இன்று பயன்படுமென்று அவரே நினைத்துப் பார்க்கவில்லை.

“கேர்ள்ஸ்சோட ஸ்நாக்ஸ், டிரஸ் எல்லாத்தையும் இந்தக் கொரங்கு அதகளம் பன்னிடுதுங்க சார்.? அன்னிக்கி பிடிச்சிட்டு போயும் மறுபடியும் வந்துடுதுங்க சார். சுகுமாரன் புன்னகைத்தவாறே சொன்னார். பாய்ஸ் ஹாஸ்டல்ல கொரங்குகளே இல்லிங்க மேடம்.”

உள்ளேவந்த பேராசிரியர் சுகுமாரனை இருக்கையில் அமரச் சொன்னார். கொஞ்சம் தயக்கத்துடன்தான் தனது தேவையைக் கேட்டார். “கொரங்கா? சார் ஒன்னுதானே? தாராளமாக பிடிச்சுக்குக் கோங்க.. தேங்க்ஸ் மேடம்.” இப்பொழுது பேராசிரியர் சுகுமாரனின் மனதில் தயக்கம் போய் உற்சாகம் பிறந்துவிட்டது.

அன்று மாலை ஐந்து மணி. தன் ஆய்வு மாணவர் அருண்குமாரை, சுகுமாரன் அழைத்தார். கூடவே முதுகலை மாணவன் ராஜேஷையும். நாளைக் காலை என்ன செய்யவேண்டுமென்பதை இன்று இரவு போனில் சொல்வதாகவும், ஆறு மணிக்கெல்லாம் ஆய்வகம் வந்துவிடவேண்டுமென்றும் கூறினார். இதைக் கேட்டதும் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். திகில் கலந்த மர்மமாகவே இருவருக்கும் இருந்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எந்த ஆசிரியராவது காலை ஆறு மணிக்கு, அதுவும் ஆராய்சிக்காக வருவாரா? சுத்தம். சரி பார்ப்போம். இருவரும் ஆசிரியரிடமிருந்து விடைபெற்றனர்.

மறுநாள், பேராசிரியர் சுகுமாரன் சொன்ன அதே நேரம். அவரின் துறைக்கு கைதேர்ந்த குரங்குப்பிடி மூலமாக பெண்கள் விடுதியிலிருந்து குரங்கொன்று வந்திறங்கியது. கூடவே தன்னுடன் அன்றாடங்காய்ச்சி மாணவனையும் அழைத்து வந்துவிட்டார். இந்நாளுக்காகவே இரண்டு மாதங்கள் தீவிரமாக திட்டம் தீட்டிக் கொண்டிருப்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

மூன்று மாணவர்கள், பேராசிரியர் சுகுமாரன், குரங்கு ஆகியோர் ஆய்வகத்திற்குள் சென்றனர். அனைத்துக் கருவிகளும் ஆயத்தமாக இருந்தன. முந்தைய நாள் இரவு, வழிகாட்டி தெளிவாகக் கூறியதைப் போலவே இரண்டு மாணவர்களும் செயல்படத் தொடங்கினர். குரங்கு கையில் வாழைப்பழம் கொடுத்து ஒரு சேரில் கட்டிப் போட்டிருந்தனர். அன்றாடங்காய்ச்சி மாணவன், பேராசிரியர் சுகுமாரன், ராஜேஷ் ஆகியோரிடமிருந்தும் மேலும் சிறப்பு விருந்தாளியான குரங்கிடமிருந்தும் கவனமாக ரத்தம் எடுத்த அருண்குமார், அடுத்தகட்ட சோதனையில் தீவிரமாக இறங்கினார். சோதிப்பது கடவுளல்ல, அறிவியல்தான் என்பது கற்றவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். கூடவே அதை மனிதர்களும் செய்யலாம் என்பதுவும் இன்று அங்கிருந்தவர்களுக்குத் தெரிந்திருந்தது.

தான் புதிதாகச் செல்லும் ஒவ்வொரு வகுப்பிற்கும் மனிதர்களோட உயிர் வேறெங்கும் இல்ல. டி. என் . ஏலதான் இருக்கு என்று போதித்து வருபவர் பேராசிரியர் சுகுமாரன். இன்றும் அதையொட்டிதான் சோதனை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இரண்டு மணி நேரத்தில் நான்கு டி. என் . ஏ சேம்பில்களும் கிடைத்துவிட்டது. எல்லா டி. என் . ஏக்களும் ஒரே நேர்கோட்டில் இருந்தன. எந்த டி. என் . ஏ யாருடையது என்று குறிக்கப் பட்டு அன்றாடங்காய்ச்சி மாணவரிடம் காட்டி “தம்பி இங்க பாருங்கப்பா? ஏறக் குறைய குரங்கும் மனுசனும் ஒன்னுதான் பா. மனுஷனுக்கு மனுஷன் ரத்தக் கலரு மட்டும் ஒன்னில தம்பி உசிரு கூட ஒன்னுதான். தயவுசெய்து உன்னோட பழக்கத்த மாத்திக்கோ தம்பி”. மிகவும் தாழ்மையுடன் சுகுமாரன் சார் கேட்டுக் கொண்டார்.

ஒரு வாரம் கடந்திருந்தது. உணவுக் கூடத்தில், வார்டன் சுகுமாரன் நுழைவதற்கு முன்பே முகப்பில், கதவிற்கு மேல் வைக்கப் பட்டிருந்த ஒரு படம் அவரின் கண்ணில்பட்டது.தலை நிமிர்ந்து பார்த்தார். அவரின் அறையில் வைக்கப் பட்டிருந்த மூன்று குரங்குகளுடன் இன்னொரு புகைப்படம் இணைக்கப் பட்டிருந்தது. அதில் ஒரு மாணவன் நின்றிருந்தான். அவனது கைக்கு அருகாமையில் இரண்டு சிவப்புக் கோடுகள் எக்ஸ் வடிவத்தில் இருந்தன. உள்ளே நுழைந்தார். வரிசையில் முதலாவதாக அன்றாடங்காய்ச்சி மாணவன் நின்றிருந்தான். வார்டன் சுகுமாரனின் கண்கள் அவனின் கைகளைத் தேடின. வழக்கத்திற்கு பதிலாக அவனது கையில் பொதுவாக எல்லோரும் பயன்படுத்தும் தட்டிருந்தது.

Comments are closed.