அய்யப்பமாதவன் ( நேர்காணல் ) / ரமாசுரேஷ் ( சிங்கப்பூர் )

[ A+ ] /[ A- ]

unnamed

சமீபத்தில் சிங்கை வந்திருந்த கவிஞர்.அய்யப்பமாதவன் அவர்களை நேர்காணல் செய்யும் வாப்புக்கிட்டியது. லீசா பேச்சாளர் மன்ற மாதாந்திர கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருந்தார். தான் பார்த்து, ரசித்த, அனுபவத்தை தன் கற்பனையோடு கலந்து அழகியளாலும், கவித்துவத்தாலும் கவிதைகளால் வியக்க வைத்துக்கொண்டிருக்கும் கவிஞர் மிகவும் இயல்பாகவும், இனிமையாகவும் பேசினார். இந்த பிரபஞ்சத்தில் அனைத்து சம்பவங்களும் வலியோடு பிறப்பதும் இல்லை, மகிழ்வோடு முடிவதும் இல்லை என்ற எதார்த்தத்தை அவர் கவிதைகளில் மட்டும் அல்ல, உரையாடலிலும் வாசர்களுக்கு உணர்த்தினார். சந்தித்த அனைத்து வாசகர்களையும் புகைப்படம் எடுத்து, அதை அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பிவைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய அன்பான மனிதர். எழுத்தை ஆள்பவன், தன்னையும் ஆள கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்கு இனங்க, கேட்ட கேள்விக்கு பொறுமையாக பதிலளித்தார்.

தங்களை எழுத தூண்டியது வாசிப்பா? அல்லது தங்களுக்குள் துடித்துக்கொண்டிருக்கும் படிமமா?

எனக்குள் இருந்த படிமங்களைக் காட்டிக்கொடுத்தது வாசிப்புதான். என் நண்பர்கள் செழியன், மீராவின் மகன் கதிர் இவர்களோடு சேர்ந்து நிறைய வாசிக்கத் துவங்கினேன். நேரம் போவதுக்கூட தெரியாமல் விவாதிப்போம். அப்போது ஜப்பானிய மொழியிலிருந்து பேராசிரியர் வீ.உண்ணாமலை அவர்களால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை வாசிக்க நேர்ந்தது. எளிமையான முதல் இரண்டு வரியில் நம்மை உள்ளே இழுத்துச்செல்லும் ஹைக்கூ, வலிமையான பொருளுடைய மூன்றாவது வரியில் நம்மை அப்படியே புரட்டிப்போட்டு விடும். அத்தகைய கவிதைகளை வாசிக்க, வாசிக்க நாமும் எழுத வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியது. ஆனால், ஹைக்கூவின் மற்ற இலக்கணங்களைத் தூக்கியெறிந்துவிட்டு மூன்று வரிகளில் எழுதினால் போதுமென்ற எழுத துவங்கினேன். பின்புதான் புரிந்துக்கொண்டேன் நாம் எழுதுவது வெறும் மூன்றுவரிக் கவிதைகள்தான். அவை, ஹைக்கூவே அல்ல, பொய்க்கூ என்பதை. இங்கு ஹைக்கூ என்ற போர்வையில் எழுதப்படும் கவிதைகள், ஹைக்கூ கவிதைகளல்ல என்பது உலகமறிந்த விசயம்.

தங்களுடைய கவிதைகளில் எதை முதன்மைப்படுத்த அல்லது கவனப்படுத்த விழைகிறீர்கள்?

இல்லை! நான் என் கவிதைகளை முதன்மைப்படுத்தவோ அல்லது ஈர்க்கவோ கவிதை எழுதுவது கிடையாது. என்னை எது ஈர்த்ததோ, எது ஆட்கொண்டதோ அதை அப்படியே கவிதையாக கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

இந்த உலகில் மிக அருமையான தருணம் ஒரு பூ மலர்வதுதான். பலநாட்கள் பூக்களின் அருகே தவமிருந்திருக்கேன். அப்பொழுதெல்லாம் என் கைகளில் கேமிரா கிடையாது. வாங்கும் அளவிற்கு வசதியும் கிடையாது. ஆனால், என் உணர்வுகளை என்னிடமிருந்து வெளிக்கொண்டுவர என் கவிதைகள் இருந்தன, அதை மட்டுமே முதன்மைப்படுத்த விழைகிறேன்.

புரிந்த மொழியில், புரியாத தன்மையில் சொல்வதுதான் நவீன கவிதையா? ஒரு வாசகன் நவீன கவிதையை எவ்வாறு அடையாளம் கண்டு அணுகுவது?

இன்று நவீன கவிதைகளைப்பற்றி வாசகர்களிடம் ஒரு தவறான புரிதல் உள்ளது. அதற்கு காரணம், அவர்கள் தேர்ந்தெடுக்கும் கவிஞர்கள். நீங்கள் சொல்வதுபோல் மொழியின் இறுக்கத்தோடு கவிதை எழுதுபவர்களும் இருக்கிறார்கள். அது அவர்களது பாணி. உங்களுக்கு அது புரியாதபட்சத்தில் அதைத் தூக்கியெறிந்துவிடுங்கள். அதற்காக ஒட்டுமொத்த நவீன கவிதையை நிராகரிக்க வேண்டியதில்லை. எத்தனையோ அருமையான நவீன கவிஞர்கள் தமிழில் இருக்கிறார்கள். நீங்கள் அவற்றைக் கண்டடைவது ஒரு சுகமான அனுபவமாக இருக்கும். ‘ஆத்மாநாம்’ தமிழ் நவீன கவிதையில் மிக முக்கியமானவர். அவரது எளிமையை வேறு எந்த நவீன கவிதைகளிலும் காணவே முடியாது. முதலில் நீங்களெல்லாம் ஆத்மாநாமை வாசியுங்கள். அவருடைய முழுத்தொகுப்பைக் காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது.

ஒரு கவிதை அது மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, நவீன கவிதை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், அந்தக் கவிதை வாசகனின் முதல் வாசிப்பிலேயே புரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், அக்கவிதை வாசகனை உள்ளிழுத்து மறு வாசிப்புக்கு தூண்டவேண்டும். அப்படி உங்களை தூண்டாத, புரியாத கவிதைகளைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. என் கவிதையில் ஒன்றை சொல்கிறேன். புரிகிறதா என்று பாருங்கள்…

அழகெல்லாம் உதிர்கிறது உதிர்கிறது கொன்றை மரக்கிளைகள் தீட்டிய கோலமது நிலமெல்லாம் விழியெல்லாம் மஞ்சள்

ஓயாத காற்று ஓயாத உதிர்வு தீராத ஓவியம்

மரமெல்லாம் பூக்கள் நடனமிடும் கிளைகளிலிருந்து உதிர உதிர மஞ்சள் ஒளிர்கிற நிலம்

நிழல் தரும் மரங்கள் இலையுதிர்க்கும் பூ உதிர்க்கும் காய் உதிர்க்கும் பழம் உதிர்க்கும் உதிர்ப்பதற்கென்றுதான் மரம்

உதிர்த்தபின் உதிர்ப்பதற்கு ஒன்றுமில்லாத மரங்கள் உதிக்கவே துளிர்க்கும்

பூக்கும் காய்க்கும் கனியும்

நானோ உயிரின் உதிர்விற்குபின் மண்ணில் கலப்பேன் கொன்றையின் கீழிருந்து மேலெழுவேன் மஞ்சள் பூவாக மஞ்சள் பூவாக

உலகின் கண்களுக்கு விருந்தாவேன்

இக்கவிதையை முதல் முறை வாசிக்கும்போது ஏதோ ஒன்றை உணர்த்தினால் இரண்டாவது முறை வாசித்து பாருங்கள் புரிதல் ஏற்பட்டு பல உணர்வுகளை உங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும்.

என் இயல்பிலிருந்துதான் கவிதைகளை எழுதுகிறேன். எளிமையாக்குகிறேனென்று வலிந்து எழுதி வீரியமிழக்கச் செய்வதில்லை.

புரிந்தால் மட்டுமே கவிதையாகிவிடாது. சாதாரண எளிய கவிதைகூட புரியவில்லையென்றால், புரிந்துகொள்வதற்கான மனநிலையை வாசகர்கள்தான் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

என் கவிதைகள் கரடு முரடானவை அல்ல. மறுவாசிப்பிலேயே புரிந்துவிடும். மேலும் எளிமைப்படுத்துங்கள் என்றால் மாட்டேன். என் எண்ணம் குவிமையமாகும் பொழுது உருவாகும் உணர்ச்சிகளுக்கு சொற்களால் உருவம் கொடுக்கிறேன்.

இன்று நிறைய கவிஞர்கள் நல்ல கவிதைகள் படைக்கின்றனர். அவர்களின் கவிதைகளை தேர்ந்தெடுத்து வாசிக்கலாம். செல்மா ப்ரியதர்ஸன், யவனிகாஸ்ரீராம், கண்டராதித்தன், பழனிவேள், பாலை நிலவன், லட்சுமி மணிவண்ணன், சங்கர் ராமசுப்பிரமணியன். ஸ்ரீநேசன், ராணிதிலக், நேசமித்திரன், பெண் கவிஞர்களில் மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, தென்றல், உமா மகேஸ்வரி, சுகிர்தராணி, போன்றோரின் கவிதைகள் வாசிப்பிற்கு உகந்ததாக இருக்கின்றன. புதிதாக நிறைய கவிஞர்கள் நன்றாக எழுதுகிறார்கள். அவர்களில் இசை, இளங்கோ கிருஷ்ணன், நரன், வெயில், மண்குதிரை, ஊர்சுலா, நிலாரசிகன், விஸ்வநாதன் கணேசன் கவிதைக்காரன் இளங்கோ, சசிகலா பாபு, கனிமொழி ஜி, அகிலா புகழ், கிருத்திகா தாஸ் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இன்னும் நிறையப் பேர் ஆர்வத்துடன் எழுத வந்திருக்கின்றனர். ஞாபகத்திற்கு வந்த பெயர்களையேக் குறிப்பிட்டிருக்கிறேன்.

ஒரு கவிஞன் சொல் வளத்தை எவ்வாறு வளர்த்துக்கொள்வது? ஏதேனும் யுக்தி வைத்திருக்கிறீர்களா? (நிறைய கவிதைகள் படிக்க வேண்டும் என்பதை தவிர)

நான் யுக்திகளையும் கையாளுவதில்லை. சொல் வளத்தைவிட கவித்துவம்தான் முக்கியம். ஒரு கவிதையில் சொற்கள் அதிகம் தெரியவேண்டியதில்லை. மொழியென்பது உடலாலானது, கவித்துவம் உயிரைப்போன்றது. நமக்குள் இருக்கும் கவித்துவத்தையும், அழகியலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு சம்பவத்தை காட்சியாக பார்க்காமல், அதன் பின்புலம், சுற்றுச்சூழல் இவற்றோடு நம் கவித்துவ பார்வையில் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். அப் பார்வையை ஒரு கவிஞனுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கற்றுக்கொடுக்கவும் முடியாது. அது இயல்பாகவே இருக்கும் உண்மையான கவிஞனுக்கு.

ஒரு கவிதைக்கும், புகைப்படத்துக்கும் எவ்வளவு ஒற்றுமை இருக்கு என்று நினைக்கிறீர்கள்?

ஒற்றுமையென்பது ஒன்றுதான் கவித்துவ உணர்வு மேலெழுவது. எனக்கு புகைப்படம் எடுப்பது மிகவும் பிடித்த ஒன்று. ஆரம்ப காலக்கட்டங்களில் என்னிடம் புகைப்பட கருவி இல்லை. நான் பார்த்து ரசித்த காட்சிகளை என் கவிதைகளில் எழுதிப் பார்த்தேன். இப்பொழுது புகைப்படத்தோடு, கவிதைகளை எழுதுகிறேன்.

ஏதாவதொரு நிகழ்வு உங்கள் ஆள் மனதை தாக்கி, அதை பற்றிக் கவிதை எழுதியப்பின், அந்த உணர்வை முழுமையாக கவிதையில் வார்த்தைகளால் கொண்டு வரமுடியவில்லை என்று உங்களுக்கு தோன்றியுள்ளதா? அப்படி நடக்கும் போது என்ன செய்வீர்கள்?

எனக்கு அதுபோல் நடந்ததில்லை.
எழுதியவற்றைச் சரியாக வந்துவிட்டதா? என்ற உணர்வு எனக்கு வருவதே இல்லை. முழுமையான கவிதையை நான் எழுதிவிட்டேனா? அல்லது எழுதிவிடுவேனா? என்று தெரியவில்லை. ஆனால் அதற்கான முயற்சிதான் என்னை இயக்கிக்கொண்டிருக்கிறது.

அந்த ஒரு நல்ல கவிதைக்கெனத்தான் கவிதை எழுதுவதை விட்டுவிடவில்லை. ஒரு நல்ல கவிதைக்கு முன் எழுதப்படும் கவிதைகள் அந்த ஒரு நல்ல கவிதைக்கான பயிற்சியாகவும் இருக்கலாம்.

சமீபத்தில் தங்களை பாதித்த, வியக்க வைத்த படைப்பு?

“ஞாபக சீதா” எனும் கவிதை நூல், நண்பன் கவிஞன் ஷங்கரராம சுப்ரமணியன் எழுதியது. அவனின் கவிதைகள் என்னை வியக்க வைத்தன.

வெற்றிப்பெற்ற தங்களுடைய படைப்புகள் அதிகம் பேசப்படவில்லையே என்ற ஆதங்கம் உண்டா?

ஆதங்கம் ஒரு போதுமில்லை. படிக்கப்படாத கவிதைகள் புத்துணர்ச்சியுடன் எப்போதுமிருக்கும்.

ஒரு படைப்பாளியாக இந்த வாழ்க்கை நிறைவளிக்கிறதா?

சக மனிதர்களிடமிருந்து படைப்பாளி எப்போதுமே வேறுபடுகிறான். அவனால் வேலை, சாப்பாடு, தூக்கமென்று சதவிகித அடிப்படையில் சராசரியாக இயங்கமுடியாது. இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாமே எனக்கு ஆச்சர்யத்தைத் தருகின்றன. ஒரு படைப்பாளியாக இருப்பது மகிழ்வெனினும், நிறைவென்ற ஒன்றில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

தங்களுடைய கவிதைகள் வாசகர்களை ஈர்க்க துவங்கிய தருணங்களை பற்றி
அதுதான் கவிஞன் ஆனதற்கான உண்மையான உணர்ச்சி மிகு கணங்கள்
அதைவிடவும் வேறெந்த விருதும் எனக்குத் தேவையில்லை!

கவிஞன் சிறுகதை எழுத நேரும்போது ஏற்படும் பிரச்சனைகள் ?

கதை கவிதை நடையில் வரும். அது ஒன்றும் குற்றமில்லை. என்னுடைய சிறுகதை தொகுப்பு ” தானாய் நிரம்பும் கிணற்றடி”. முதற்தொகுப்பு என்பதால் கவிஞனின் தலையீடு இருக்கும். எனக்குள்ளிருக்கும் கவிஞன் எங்கேயும் எப்போதும் அனிச்சையாக வெளிப்பட்டுவிடுகிறான். வண்ணதாசன் கதைகளில் ஒரு கவிதைத் தன்மையிருக்கும். கவிஞனுக்குண்டான மனநிலையிலிருந்துதான் கதைகளை எழுதுவாரோ எனத் தோன்றும். நான் இன்னும் நிறைய கதைகள் எழுதவேண்டும். அப்போதுதான் என் கதையிலிருந்து கவிஞன் வெளியேறுவானென்று நினைக்கிறேன்.

தங்களை ஈர்த்த ஜப்பானிய கவிதைகளை ஒருசில

பாழடைந்த கோயில்
மணியின் மீது உறங்குகிறது
ஒரு வண்ணத்துப்பூச்சி !

வீழ்ந்த மலர்
கிளைக்குத் திரும்புகிறதா
ஓ… வண்ணத்துப்பூச்சி !

அதிகாலை வெள்ளைப்பனியில்
காணாமல் போயின
வெள்ளை நாரைகள் !

பெண் படைப்பாளிகள், அதிகம் பெண்ணியம் பற்றியும் தங்களின் பிரச்சனைகளை பற்றியுமான புலம்பல்களே அவர்களின் படைப்புகளில் உள்ளது என்ற குற்றசாட்டு உள்ளதே அதைப்பற்றி தங்களின் கருத்து?

உண்மைதான் அதை மீறியும் பெண் படைப்புகள் உருவாக வேண்டும். பெண்ணியம் பேசுவது, எழுதுவது, புலம்புவது இலக்கியமாகாது ஒரு போதும். இப்பொழுது நிறைய பெண் படைப்பாளிகள், நல்ல படைப்புகளை தருகின்றனர். அப்படிப்பட்ட படைப்புகளை கண்டு நான் வியந்திருக்கேன்.

சிங்கப்பூர், மலேசிய கவிஞர்கள் பற்றி தங்களுடைய கருத்து?
கவிஞர்களில் என்ன இந்திய, சிங்கப்பூர், மலேசியா? என்னை பொறுத்தவரை கவிஞனுக்கு ஒரே அடையாளம் கவிதை மட்டும்தான். சிங்கப்பூர் நண்பர்களின் கவிதைத் தொகுப்புகளை வாசிக்க தொடங்கியிருக்கேன்.

தங்களுடைய வாழக்கை லட்சியம் சினிமா பற்றி?

உண்மைதான் என் வாழ்க்கை, லட்சியம் சினிமாதான். அத்தருணத்திற்காக காத்திருக்கேன். விரைவில் நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கையில் இயங்கிக்கொண்டிருக்கிறேன். சினிமாவில் என் கதை புதிதாக இருக்காது. ஆனால், நான் சொல்லும் விதம் தனித்துவமாக இருக்கும். கவித்துவமும், அழகியலும் ததும்பும்.

சினிமாவிற்கு பாட்டெழுத மாட்டேன் என்று சொல்லும் நீங்கள் தங்களுடைய படத்திற்கு பாட்டேழுதுவிற்களா?

மாட்டேன்! கண்டிப்பாக எழுதமாட்டேன். யார் படமாக இருந்தால் என்ன? அது சினிமாதான்.

கடைசியாக…. வாசகனுக்கும், படைப்பாளிக்குமான உறவு?

வாசகன் யாரென்று தெரியாமல்தான் ஒரு படைப்பாளி தன் படைப்புகளைப் படைக்கிறான். படிப்பவனைப் பற்றிய அக்கறையோ பொறுப்போ இன்றித்தான் ஒரு படைப்பு உருவாகிறது. அப்படி அவசியமும் இல்லை. ஆனால் படைப்பு படிப்பவனைப் போய்ச் சேருமென்பது உத்திரவாதமில்லை. அது படைப்பாளனின் எழுத்தின் தரம் சம்பந்தப்பட்டது. வாசகனை ஈர்த்தலென்பது ஒரு படைப்பாளியின் தார்மீகக் கடமை கிடையாது. அதுவே அதுவாக நடக்கும்பட்சத்தில்தான் அது அற்புதமானதாகிறது.

ஒரு வாசகன், எழுத்து ஈர்க்கும்பட்சத்தில் படைப்பாளியின் அடையாளமற்று வாசிக்கப் பழகுதல் நன்று.

••••••••

Comments are closed.