அரவிந்தனின் சிறுகதைகள் : ஒரு பார்வை மறதியற்ற மனதின் சுமைகள் / இமையம்

[ A+ ] /[ A- ]

தொலைக்காட்சி, இணையம், முகநூல், பிளாக், தினசரி, வார மாத இதழ்கள் மனிதனின் நேரத்தையும் மூளையையும் ஆக்கிரமித்துவிட்ட இன்றைய வாழ்க்கையில் எதுவும், எல்லாமும் உடனுக்குடன் என்றாகிவிட்ட நிலையில், எதையும் கேளிக்கையான பொருளாக மாற்றலாம், மாற்ற முடியும் என்ற சமூகச் சூழலில் கதைகளைப் படிப்பது, விவாதிப்பது சாத்தியம்தானா என்ற கேள்விகள் அதிகரித்துவரும் நிலையில் – எல்லாவற்றையும் மீறிக் கதைகள் எழுதப்படுகின்றன. கதைகள் படிக்கப்படுகின்றன. விநோதம்தான். எந்த மாதிரியான கதைகளைப் படிக்கிறோம்?

வார, மாத இதழ்கள் போய் தினசரிகளும் இன்று கதைகளை வெளியிடுகின்றன. வாரத்திற்குத் தமிழ்மொழியில் எத்தனை சிறுகதைகள் வெளியிடப்படுகின்றன? மாதத்திற்கு எவ்வளவு? ஆண்டுக்கு? மலைப்பாக இருக்கிறது. மலைமலையாகக் குவிக்கப்படும் கதைகளில் எதைப் படிப்பது, எப்படி படிப்பது, ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கு ஒவ்வொருவரிடமும் ஒரு பதில் இருக்கிறது. மலைபோன்று குவியும் இந்தக் கதைகளில் எது நம்மைப் பாதிக்கிறது, எது நம்மை அலைக்கழிக்கிறது, நினைவில் நிற்கும் கதைகள் எவை, மற்றவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என்று நாம் விரும்பும் கதை எது என்று பார்த்தால் மலைபோல் குவிந்திருக்கும் கதைகளில் ஒரு கடுகு அளவு தேறும்.

இந்தக் கடுகு அளவுக் கதைகளில்தான் மனித வாழ்வு எதிர்கொள்ளும் அவலங்கள் நேர்மையாகப் பேசப்படுகின்றன. சமூகம் குறித்த உண்மையான அக்கறைகள் இருக்கின்றன. நேர்மையாகவும் உண்மையாகவும் அக்கறையுடனும் இருப்பதால் இந்தக் கதைகளைப் படிக்க வேண்டியிருக்கிறது. இந்தக் கடுகு அளவு கதைகளில் அரவிந்தனின் கதைகளும் இருக்கின்றன.

‘கடைசியாக ஒரு முறை’ தொகுப்பைப் படித்து முடித்தபோது தோன்றியது, அரவிந்தன் கற்பிப்பதற்காக எழுதவில்லை; கற்பதற்காக எழுதியிருக்கிறார் என்று. இலக்கியப் படைப்பின் அடிப்படை கற்பதுதானே. இக்கதைகளில் வாசகர்கள் அவரவர் திறனுக்கேற்பக் கற்றுக்கொள்ள இருக்கிறது. இது எதனால் சாத்தியமாகிறது என்றால் கதையைச் சொன்ன விதம், கதையைச் சொல்லத் தேர்ந்தெடுத்த மொழி, வடிவம், வாழ்க்கையைப் பார்த்த விதம்.

அரவிந்தனின் கதைகளில் வரும் மனிதர்கள் சென்னை வாசிகள். குறிப்பாகப் பல்லாவரம், சேத்துப்பட்டு, மாம்பலம், குரோம்பேட்டைக்காரர்கள்; நடுத்தரக் குடும்பத்து மனிதர்கள். நகரத்து மனிதர்கள் இயந்திரத்தனமாக இருப்பார்கள் என்பதைப் பொய் என இக்கதைகள் நிரூபிக்கின்றன. நிறையவே காதலிக்கிறார்கள். மனைவியை, குழந்தைகளை, முக்கியமாக நண்பர்களை. மனித உறவுகளைப் பொக்கிஷமாக மனதிற்குள் வைத்திருக்கிறார்கள். அன்பை, நட்பைத் தேவைப்படும் இடங்களில்கூட மறைத்தே வைத்திருக்கிறார்கள். அன்பின் வெளிப்பாடு, மரியாதையின் வெளிப்பாடு மௌனமாக இருக்கிறது. ஒரு சொல் கூடுதலாகப் பேசினால் உறவுகள் உதிர்ந்துவிடும் என்பது மாதிரி இருக்கிறார்கள். நகரம் குறித்த, நகரத்து மனிதர்கள் குறித்த நமது நம்பிக்கைகள் பொய் என்று இக்கதைகள் நிரூபிக்கின்றன. கிராமப்புறங்களில்தான் தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படுவார்கள் என்பதெல்லாம் கற்பனை. மாநகரத்து மனிதர்களுக்கும் அதுதான் பெரும் கவலை.

இத்தொகுப்பில் மலையும் மரணமும் முக்கியப் பாத்திரங்களாக இருக்கின்றன. மலையைப் பற்றி, மரணத்தைப் பற்றிச் சொல்வதற்காகவே இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை. மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? செத்துக்கொண்டிருக்கிறார்களா? வாழ்ந்தபடியே செத்துக்கொண்டிருக்கிறார்கள், செத்துக்கொண்டே வாழ்கிறார்கள். இது எப்படி நிகழ்கிறது என்பதுதான் இக்கதைகள். மரணம்குறித்துப் பலபேர் எழுதியிருக்கிறார்கள். அரவிந்தன் சற்று வித்தியாசமாக மரணத்தை எதிர்கொண்டிருக்கிறார். மரணம் எப்போது, யாருக்கு வரும்? அதைப் பற்றி கவலைப்படாதவர்கள் உலகில் உண்டா? வாழ்வதற்காக எடுக்கப்படும் முயற்சிகளைவிடச் சாகாமல் இருப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகள்தான் அதிகம். இயற்கைகுறித்த அறிவு அற்றவர்கள்தான் மனிதர்கள். மரணம்பற்றிய அரவிந்தனின் கதைகளில் ஒரு துளிக் கண்ணீர் சிந்தப்படவில்லை. கண்ணீருக்கு வலிமை உண்டு. அதைவிட அறிவுக்கு.

அரவிந்தனுடைய மனிதர்கள் பேச வேண்டியதைக்கூடப் பேச மாட்டார்கள். சந்தர்ப்பம் வந்தாலும் பேச மாட்டார்கள். பேசுவார்கள். மனதிற்குள். பேசிப்பேசிக் களைத்துப்போய்விடுவார்கள். ‘உருமாற்றம்’ கதையில் வரும் இளைஞன், ‘மலையும் மலைசார்ந்த வாழ்வும்’ கதையில் வரும் நந்தினியின் புருஷன், ‘கடைசியாக ஒரு முறை’ கதையில் வரும் சாம்பசிவன், ‘குமிழி’ கதையில் வரும் ஹயக்ரீவன் எல்லாருமே மனதிற்குள்ளேயே பேசி, விவாதித்து, தர்க்கம் செய்து ஒரு முடிவுக்கும் வரமாட்டார்கள். காரியங்கள் அதன் போக்கில் நடந்துவிடும். நடந்து முடிந்த காரியம், நடக்கிற காரியம், நடக்க இருக்கிற காரியம் எல்லாவற்றையும் பற்றி மனதிற்குள்ளேயே ஆராய்ந்துஆராய்ந்து பார்த்துவிட்டு ஒடுங்கிப்போவார்கள். இவர்கள் மனநோயாளிகளா என்றால் அதுவும் இல்லை. தர்க்கம் செய்கிறவர்கள்.

தொகுப்பின் எல்லாக் கதைகளும் ஒரே நேர்க்கோட்டில் இணைகின்றன. மரணம்தான் அந்த நேர்க்கோடு. மரணத்தை முன்னிறுத்தி அதன் வழியாகக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மனிதர்களின் ஆசைகளுக்கு, விருப்பங்களுக்கு, கனவுகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? மரணம். நான் இல்லாவிட்டால் வீடு, சொந்தம், உறவு, கணவன், மனைவி, அலுவலகம், நண்பர்கள் என்ன ஆவார்கள்? இதற்குப் பின்னால் இருப்பது மரணம். நான் இல்லை என்றால் எல்லாம் சீர்குலைந்துவிடும் –

இதற்குப் பின்னாலும் மரணம்தான் இருக்கிறது. மலையைப் பார்க்கும்போது, கடலைப் பார்க்கும்போது மனிதனுக்கு ‘தான் ஒன்றுமில்லை’ என்பது ஏன் தோன்ற மறுக்கிறது? சிறுமைப்படாத மனம் மனிதனுக்கு எப்போது வந்தது? தான் இல்லாத உலகம், தான் இல்லாத வீடு, தான் இல்லாத வாழ்க்கை பற்றிய பயம் மனிதனை அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது. அந்தப் பயத்தில் அலறும் மனதின் அவஸ்தைகள்தான் இக்கதைகள். மறதியற்ற மனதின் சுமைகள்.

‘மயான நகரம்’ அரசியல் கதை. சமூகக் கதை. கடந்த காலக் கதை மட்டுமல்ல, நிகழ்காலக் கதையும்தான். சக்தி ராஜ்ஜியத்தின், பெரும்திரளான மக்கள் கூட்டத்தின் கதை. அதிகாரம், கீழ்ப்படிதல், சுரணையற்ற மக்கள் கூட்டம் ஆகியவற்றின் கதை.

அதிகாரம் என்பது என்ன? அதிகாரத்தை அடைவதற்கு, அதிகாரத்தைக் காப்பாற்றிகொள்வதற்காக மனிதர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள்? கவிஞர்கள், சிந்தனாவாதிகள், உயர்குலத்தைச் சேர்ந்த பிராமணர்கள், குடிமக்கள் என எல்லாரும் எப்படி அதிகாரத்தின் முன் மண்டியிடுகிறார்கள், மண்டியிட எப்படி போட்டிபோடுகிறார்கள், மண்டியிடுவதைப் பிறவிப் பயனாக எப்படிக் கருதுகிறார்கள் என்பதுதான் கதை. மர்மம். புதிர்.

நாமே நமக்காக உருவாக்கிய அதிகார அமைப்புகள் எப்படிப்பட்டவை? அது மனிதர்களை எப்படி நடத்துகிறது? மண்டியிடுதல் எப்படி நாகரிகமாக, ஒழுக்கமாக, பெருமையாக மாறியது? அதிகாரத்தைத் துறந்த மனம், அதிகாரத்திற்காக விழையாத மனம் யாருக்கு வாய்த்திருக்கிறது? சூழ்ச்சிகள், தந்திரங்கள், கபட நாடகங்கள், துரோகங்கள், கொலைகள், சுரண்டல், வன்முறை இவற்றால் அதிகாரம் உருவாக்கப்படுகிறது. இத்தனையும் நடப்பதால்தான் சக்தி ராஜ்ஜியத்தில் இளவரசன் கொல்லப்பட்டு ரகசியத்தின் கூடாரமாக இருந்த – பிறப்பு விவரம் அறியாத ஓர் இளம்பெண் இளவரசியாக்கப்படுகிறாள். அதிகாரம் வேண்டி எதையும் செய்வார்கள் மனிதர்கள். மனிதர்களுக்கு மட்டும்தான் அதிகாரம் வேண்டியிருக்கிறது. முதலமைச்சர், பிரதமர், கவர்னர், மந்திரி வேண்டியிருக்கிறது. பூனைக்கு, நாய்க்கு, பன்றிக்குப் பிரதமர், முதல்வர் தேவையில்லை. முதல்வர், பிரதமருக்கு அவை பயப்படாது என்பதை ‘மயான நகரம்’ கதையில் பார்க்க முடியும். கதை புதிது. கதை சொன்ன விதம் புதிது. கதை சொல்லத் தேர்ந்தெடுத்த சொற்கள் புதியவை. சின்னச் சின்ன செறிவான வாக்கியங்கள் ஈர்ப்பைத் தருகின்றன.

அரவிந்தனுடைய மனிதர்கள் ஒரு நிலையில் பார்த்தால் மன நோயாளிகள்தான். ஒரு சமயத்தில் ஒருவரைப் பிடித்திருக்கிறது. அதே நபரை மற்றொரு சமயத்தில் பிடிக்காமல் போகிறது. ஏன்? காரணம் தெரியாது. காரணம் இல்லை. நாம் செய்கிற பல காரியங்களும் அப்படித்தான் இருக்கின்றன. தோன்றியது, செய்தேன். காரணம் இல்லை. தெரியாது என்று சொல்கிற மனிதர்கள். அப்படியான ஒரு நபர்தான் ‘உருமாற்றம்’ கதையில் வரும் இளைஞன். சுயசரிதைத் தன்மைகொண்ட கதை. குற்றவுணர்ச்சியால் பேசப்படும் கதை. கதைசொல்லிக்கும் கே. ராமமூர்த்தி என்ற மனிதருக்குமான கதை. இவன் குழப்பமான பேர்வழி. அவர் அவனுக்குப் பல புதிய கதவுகளைத் திறந்துவிடுகிறார்.

அவர் திறந்துவிட்ட கதவு ஒன்று புத்தகம். அவன் தன் கஷ்டங்களை, சிரமங்களை, ஏன் மகிழ்ச்சியைக்கூடக் கொட்டித் தீர்க்கிற இடமாக இருக்கிறார் ராமமூர்த்தி. அவரைப் போன்ற மனிதர்களை அடையாளம் காணவும், நட்புறவைப் பேணவும் சிலருக்கு வாய்க்கிறது. பலருக்கு அப்படி நிகழ்வதில்லை. எல்லாருக்குமே கொட்டித் தீர்ப்பதற்கு மலை போன்று விஷயங்கள் குவிந்திருக்கின்றன. இறக்கிவைக்க, கொட்டித் தீர்க்க. அதற்கான இடம் வேண்டும். இடம் கிடைக்காதவர்கள் பாவப்பட்டவர்கள்.

கதையின் கேள்வி மனித உறவுகள் உண்மையில் மேம்பட்டதுதானா என்பதுதான். இல்லையென்ற பதில் கதைக்குள்ளேயே இருக்கிறது என்று கருதலாம். மனிதர்கள் ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லை? இருக்க முடிவதில்லை? புனிதர்களைத் தேடி மனித மனம் ஓயாமல் அலைந்துகொண்டிருக்கிறது. அதனால்தான் கல்லின் மீது, மரத்துண்டின் மீது, பாம்புப் புற்றின் மீது, நம்பிக்கைகளின் மீது புனிதத் தன்மையை ஏற்றுகிறது. ‘உருமாற்ற’த்தின் கதைசொல்லிக்கு ராமமூர்த்தி.

பல நேரங்களில் நாம் ஏற்றிவைத்த புனிதங்களே நம்மைப் பார்த்துக் கேலி செய்யும். ‘உருமாற்றம்’ கதையில் நிகழ்வது அதுதான். மனிதர்கள் மாறுகிறார்கள். ஏன், எப்படி, எதனால்? தெரியாது. சூழல், சந்தர்ப்பம். புனிதங்கள் நிறமிழக்கும்போது புனிதத்தை ஏற்றிய மனம் நிஜத்தை ஏற்க மறுக்கிறது. மறுபக்கம் புனிதத்தை ஏற்றியவனும் கயமைத்தனம் கொண்டவன்தான். தனக்கான நியாயத்தைக் கற்பித்துக்கொண்டே கடைசிவரை உட்கார்ந்தே இருக்கிறான். புலம்புவதால் பலன் உண்டா? உருமாற்றம் யாருக்கு? கதைசொல்லிக்கா, ராமமூர்த்திக்கா? மனித மனத்தின் விசித்திரங்களை இக்கதை நிகழ்த்திக் காட்டுகிறது.

‘மலையும் மலைசார்ந்த வாழ்வும்’ கதையில் மலைதான் பிரதானப் பாத்திரம். மலை பேசுவதில்லை. எதையும் வெளிப்படுத்துவதில்லை. உணர்ச்சிகளைக் கொட்டுவதில்லை. ஆனால் இதற்கெல்லாம் காரணமாக இருக்கிறது. மலை ஒவ்வொரு நிமிடமும் மனிதர்களுக்கு ரகசியமாக ஒன்றைச் சொல்லிக்கொண்டேயிருக்கிறது. நாம்தான் அதைக் கேட்பதில்லை. மனிதன் எவ்வளவு அற்பமானவன். மனைவி, கணவன், நண்பர்கள், குழந்தைகள் என்று இருந்தாலும் ஒருபோதும் ஒன்றாக இருந்ததே இல்லை. அப்படி இருப்பதாக நடிக்கிறார்கள். மலை நடிப்பதில்லை.

மனிதர்கள் மாறக்கூடியவர்கள். பிரிந்து போகக்கூடியவர்கள். நந்தினி இறந்துபோகிறாள். அவள் நேற்று மனைவி நந்தினி. இன்று பிணம். எது உண்மை? எது சரி? எது நித்தியம்? எது அநித்தியம்? வாழ்வின் விநோதம் இது. வாழ்வின் பிரம்மாண்டத்தைப் பார்த்துப் பரிதவிக்கும் மனித மனதின் அவஸ்தை இந்தக் கதை. இயற்கையின் பிரம்மாண்டத்தையும் மனிதனின் நிலையாமையையும் அழகாகத் தனக்கான மொழியில் அரவிந்தன் எழுதியிருக்கிறார். தற்காலத் தமிழ் படிப்பதற்குச் சுவையாகத்தான் இருக்கிறது.

மரணத்தை முன்னிறுத்திப் பேசும் மற்றொரு கதை ‘கடைசியாக ஒரு முறை’. மரணம் நிகழவில்லை. நிகழ்ந்தால் என்னாகும் என்பதுதான் கதை. விபத்து நடக்கிறது. அந்த விபத்தின் வழியே வாழ்வின் நிஜத்தன்மையை உணர்கிறான் சாம்பசிவன். தனிமனித வாழ்க்கை, குடும்ப, சமூக வாழ்க்கையில் ஒரு மனிதனின் இடம் என்ன? கணவன், மனைவி, குழந்தைகள், நண்பர்கள் எல்லாருமே கொடுக்கல் வாங்கல் உறவால் பின்னப்பட்டவர்கள். கொடுக்கல் வாங்கலில் சிறு பிசிறு ஏற்பட்டால் அத்தனை உறவுகளும் விரிசல்கள் காண்கின்றன. இந்த விரிசல்களை மேலும் பெரிதாக்குவது போலவே காரியங்கள் நடக்கின்றன. எந்த உறவாக இருந்தாலும் மனிதர்கள் கண்ணாடி போன்றவர்கள். கைதவறினால் கண்ணாடி உடையத்தானே செய்யும்? இதுதான் கதையின் மையம். இரவில் தூங்கிக்கொண்டிருக்கும் மனைவி பிணமாகத் தெரிகிறாள். குழந்தைகள் பிணமாகத் தெரிகிறார்கள்.

சற்றுச் சிந்திக்கும் திறனுள்ள, தூக்கத்தில் திடீரென்று விழிப்புக் கொள்ளும் மனிதனுக்குத் தோன்றுவது இது. இன்றைய நவீன குடும்ப அமைப்பு, உறவுகள் எப்படி இருக்கின்றன என்பதைப் போதனையில்லாமல் சொல்கிறது ‘கடைசியாக ஒரு முறை’ கதை. பவித்ராவுக்குச் சாவு பற்றிய பயம் இல்லை. பவித்ராவுக்கு மட்டுமில்லை, அரவிந்தனுடைய பெண்களில் யாருக்கும் அந்தப் பயம் இல்லை. ஆனால் எல்லா ஆண்களுக்கும் இருக்கிறது. மரண பயத்தில் தூங்காமல் கிடக்கிறார்கள்.

அரவிந்தனின் பாத்திரங்கள் அதிர்ந்து பேசாதவர்கள் மட்டுமல்ல. அன்பைச் சொல்லத் தெரியாதவர்களும்கூட. ஒருவகையில் தங்களுக்குள்ளேயே சுருங்கிப் போனவர்கள். குறிப்பாக ஆண்கள். பெண்கள் துணிச்சல் மிக்கவர்களாக இருக்கிறார்கள். சக்தி ராஜ்ஜியத்தின் ராணி, பவித்ரா, ஸ்ரீமதி என்று. ‘குமிழி’ கதையில் ஸ்ரீமதிதான் பலகாரம் கொடுக்கிறாள். அவனைப் பற்றி வீட்டில் சொல்கிறாள். கல்யாணத்தைத் தைரியமாக எதிர்கொள்கிறாள். அதே மாதிரி தன் குழந்தைக்குக் காதலனின் பெயரை வைக்கும் தைரியம் அவளிடம் உண்டு.

ஹயக்ரீவனுக்கு ஒன்று மட்டும்தான் தெரியும். அது என்னவென்றால் புலம்புவது. ‘குமிழி’ கதையின் நாயகன் மட்டும் இப்படியில்லை. அரவிந்தனுடைய எல்லா ஆண்களுமே அப்படித்தான். கிருஷ்ணா, நந்தினியின் புருஷன், சாம்பசிவன் என்று பலரும் புலம்புகிறவர்கள். ஆண்களின் வீராப்பு, திறமை எல்லாம் மனதிற்குள் புலம்புவதில்தான் இருக்கிறது. ஆண்கள் எப்போதும் இப்படித்தான் இருக்கிறார்கள். ‘குமிழி’ காதல் கதை. தமிழ் சினிமாவில் வருவது மாதிரி காதல்ன்னா என்னா தெரியுமா என்று கேட்டு பக்கம்பக்கமாக வசனம் இல்லை. பிரிவு இருக்கிறது. ஆனால் ஒரு சொட்டுக் கண்ணீர் இல்லை. கூடுதலாக ஒரு வார்த்தை இல்லை.

தொகுப்பின் கடைசிக் கதையான ‘தனியாக ஒரு வீடு’ மற்ற கதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நடைமுறை வாழ்க்கைச் சிக்கலைப் பேசுகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் இன்று மனிதனை இயற்கையிடமிருந்து பிரித்துவிட்டன. அதே மாதிரி இயற்கையான வாழ்க்கை முறையிலிருந்தும் மாற்றிவிட்டன. விவசாயம் இன்று இழிவான தொழில். அதைச் செய்வதற்கு யாருக்கும் விருப்பமில்லை. கம்ப்யூட்டரின் கான்பிகரேசன் தெரிந்தவனே மேதை. மென்பொருள் தயாரிப்புக் கம்பெனியில் வேலை பார்ப்பவனே மனிதன். எல்லாருக்குமே வெள்ளைக்கார துரைமார்களாக மாற வேண்டும் என்பதே லட்சியம். ஏரி, குளங்கள் மண் மேடாக்கப்பட்டு வீடுகள் கட்டப்படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கொடுத்ததுபோக எஞ்சிய விவசாய நிலங்கள் வீட்டு மனைவிரிவுகளாக மாற்றப்படுகின்றன. எல்லாம் சரி, மனிதர்கள் எதைச் சாப்பிடுவார்கள்? கம்ப்யூட்டரின் உதிரி பாகங்களையா? இதுதான் இக்கதையின் கேள்வி. கம்ப்யூட்டர், இணையம், மின்சாரம் ஏன் உடைகூட இல்லாமல் மனிதனால் இருக்க முடியும். உணவு இல்லாமல் இருக்க முடியுமா? இது ஏன் மெத்தப் படித்தவர்களுக்குத் தெரியவில்லை என்பதுதான் அரவிந்தனின் ஆதங்கம். நாகரிகம், வளர்ச்சி என்று நாம் வாழ்வின் ஆதாரத்தையே இழந்துவிட்டோம்.

ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் உணவுக்கான செலவைவிட ஒரு மனிதனுக்கு ஒரு நாளுக்கான தண்ணீருக்காகச் செலவிடப்படும் தொகை அதிகம். ஒரு லிட்டர் தண்ணீரின் விலை இருபது ரூபாய். ஒரு லிட்டர் பால் விலை நாற்பது ரூபாய். நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? வாட்டர் பாட்டில் பெருமையின் அடையாளமாக, நாகரிகத்தின் அடையாளமாக மாறியது, மாற்றியது யாருடைய குற்றம்? இதுகுறித்த குற்ற உணர்ச்சி யாரிடம் இருக்கிறது என்ற கவலை அரவிந்தனுக்கு மட்டுமே உரியதல்ல என்று சொல்கிறது ‘தனியாக ஒரு வீடு’ கதை.

எங்கோ கேட்டோம், எங்கோ படித்தோம், இன்னாருடைய சாயல் இருக்கிறது என்றெல்லாம் இல்லாமல் இருப்பது நல்ல படைப்புக்கான அடையாளம். அந்த அடையாளம் இத்தொகுப்பில் இருக்கிறது.

இலக்கியம் என்பது வெறும் கதை அல்ல. படிப்பு. வாழ்க்கை. வருங்கால சந்ததியினருக்கான சொத்து என்று சொல்கிறது அரவிந்தனுடைய ‘கடைசியாக ஒரு முறை’ கதைத் தொகுப்பு.

••••

கடைசியாக ஒரு முறை (சிறுகதைகள்)
அரவிந்தன்
காலச்சுவடு பதிப்பக வெளியீடு
விலை ரூ: 100

Comments are closed.