அருண் கொலாட்கர் என் மகன் / சிபிச்செல்வன்

[ A+ ] /[ A- ]

download-8

அருண் கொலாட்கர் என் மகன். ஆம். அருண் கொலாட்கர் என் மகன்தான்.

அவர் மராத்திக் கவிஞர் மற்றும் இந்திய ஆங்கிலக் கவிஞர் என நாம் கேள்விப்பட்டிருக்கிறோமே. அல்லது அவரை முழுமையாக வாசித்திருக்கிறோமே என்ற கேள்விகளும் உங்கள் மனதில் எழுலாம்.

அதுவும் உண்மைதான். அப்படியானால் இரண்டு உண்மைகள் எப்படி இருக்க இயலும் என்ற கேள்வியும் எழும். ஆம் . இரண்டும் உண்மைகள்தான்.

அருண் கொலாட்கர் என்பவர் மராத்தி மற்றும் இந்திய ஆங்கில கவிஞர்தான். அவருடைய கவிதைகளின் மேல் நான் கொண்ட ஆர்வத்தின்காரணமாக என் மகனுக்கு அந்தப் பெயரை வைத்தேன்.

ஆகையால் இந்தக் கட்டுரையில் அருண் கொலாட்கர் என்ற கவியின் கவிதைகளைப் பற்றி நான் பேசப்போவதில்லை.

அருண்கொலாட்கர் என்ற கவிஞருக்கும் எனக்கும் கவிதையைக் கடந்த பந்தம் எப்படி உருவானது என்பதைப் பற்றி பேசப்போகிறேன்.

ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் வெளியிட்ட, பார்த்தசாரதி ( இவரும் இந்திய ஆங்கில கவிஞர்தான் ) தொகுத்த இந்திய ஆங்கில கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பை ஸ்பென்சர் பிளாசா லேண்ட் மார்க் புத்தக கடையில் பார்த்து வாங்கியபோது அதில் அருண் கொலாட்கர் என்ற பெயரை முதன் முதலாகப் படித்தேன்.

அப்போது வரை வெளிவந்திருந்த ஜெஜீரி கவிதைகளில் சிலவற்றை மட்டும் அந்தத் தொகுப்பில் சேர்த்திருந்தார். அக்கவிதைகள் கண்டோபா என்னும் கடவுளை அதுவும் ஒரு மலைக்கோயிலில் இருக்கிற ஒதுங்கியுள்ள கடவுளைக் கிண்டல் செய்தபடி இருந்த கவிதைகள். அக்கவிதைகள் முதல் வாசிப்பிலேயே என்னை ஈர்த்தன. காரணம் அவர் கடவுளையே நையாண்டி செய்திருந்த விதம். நம்மூரிலே கடவுளை பக்தி ரசம் சொட்டச் சொட்ட பாடிய மரபு இருந்ததும் அதற்கு நேர் எதிராக இவர் கடவுளைக் கிண்டல் செய்த அந்த கலகத் தன்மையும் என்னை ஈர்த்தது.

அவருடைய கவிதைகளை வேறு எங்கே வாசிப்பது என்ற விபரங்களும் அப்போது உடனே கிடைத்துவிடவில்லை. ஆனாலும் அவரைப் பற்றிய தேடல்கள் இருந்தன.

ஒருமுறை நான் நாகர்கோவில் போயிருந்த சமயம் சுந்தர ராமசாமியை சந்தித்து, அவரோடு காலை நடைப்பயிற்சிக்காக எஸ்எல்பி பள்ளிக்கு போயிருந்தபோது அருண் கொலாட்கரைப் பற்றிச் சொன்னேன். அவரும் இந்திய கவிஞர்கள் சந்திப்புகளின் போது அவரை ஒரிருமுறை பார்த்திருப்பதாக உற்சாகமாகச் சொன்னார்.

அப்போதெல்லாம் அவர் யாரோடும் ஒட்டாமல் தனித்திருந்தார் என்ற தகவலையும் சொன்னார். முதன் முதலாக அவரைப் பார்த்தபோது அவருடைய காலில் ஏற்பட்டிருந்த காயத்திலிருந்து சீழ் வழிந்து ஓடிக்கொண்டிருந்ததையும் அதை அவர் ஒரு செய்தித்தாளை வைத்து துடைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்த சித்திரத்தையும் சொன்னது இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது.

அவருடைய கவிதைகளைப் பற்றியும் அவரைப்பற்றியும் சுந்தர ராமசாமி கொஞ்சம் அறிமுகம் செய்து வைத்தார். அவரைப் பற்றி என் தேடலையும் அவருடைய கவிதைகள் எனக்குப் பிடித்திருப்பதையும் சொன்னேன்.

அதன் பிறகு ஞானக்கூத்தனைச் சந்திக்கிற போதெல்லாம் அருண்கொலாட்கரைப் பற்றி பேசினேன். அவருக்கும் இந்திய கவிஞர்களைப் பற்றி அறிமுகங்களும் வாசிப்பும் இருந்ததால் அவரும் அருண் கொலாட்கரைப் பற்றி பேசியிருந்தார்.

அடுத்ததாக சிக்னேச்சர் என்ற கவிதை தொகுப்பை எங்கேயே பார்த்தேன். அது ஆசிய கவிஞர்களின் கவிதை தொகுப்பு . அதைத் தொகுத்தவர் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தம். அந்தப் புத்தகத்தை எப்படியாவது வாங்கிவிட எங்கெல்லாமோ தேடிக்கொண்டிருந்தேன். சென்னையில் அந்தப் புத்தகம் அப்போது கிடைக்கவில்லை.

நாகராஜன் என்ற நண்பர் அப்போது காலச்சுவடு இதழ்களையும் புத்தகங்களையும் மார்க்கெட்டிங் செய்து கொண்டிருந்தார். அவரோடு எனக்கு நெருங்கிய நட்பு இருந்ததால் அவரிடம் சொல்லி இந்தப் புத்தகத்தை எங்கே பார்த்தாலும் வாங்கி வரச் சொல்லியிருந்தேன்

அப்போது அவர் டெல்லி புத்தக காட்சியிலிருந்து இந்தப் புத்தகத்தை தேடிப்பிடித்து வாங்கி வந்து எனக்கு கொடுத்தார். அந்தப் புத்தகத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கவிதைகள் இருந்தன. அதாவது சுமார் பத்து கவிதைகள் இடம் பெற்றிருந்தன.

அவற்றை ஆர்வத்துடன் வாசித்தேன். அதைப் பற்றி நண்பரும் எழுத்தாளருமான எம்.ஜி.சுரேஷிடம் பேசிக்கொண்டிருப்பேன். எனக்கு அருண் கொலாட்கர் மீதும் அவரின் கவிதைகளின் மீதும் இருக்கிற ஆர்வத்தைப் பார்த்துவிட்டு அக்கவிதைகளை மொழிபெயர்க்க அவர் என்னைத் தூண்டினார். ஆனால் எனக்கு மொழிபெயர்ப்புகளைப் பற்றிய பிரமிப்புகளும், அதை செய்தவர் மிரட்டுவதையும், அதை மொக்கையான மோசமான மொழிபெயர்ப்புகள் என்று அவருக்கு ஆகாத எதிரணியினர் லாவணி பாடுவதைம், அவர் குழுவைச் சார்ந்தவர்கள் புகழ்மாலை பாடுவதையும் பார்த்து பயம் ஏற்பட்டிருந்தது.

ஆனால் எம்.ஜி.சுரேஷ் என்னை விடாப்பிடியாக உற்சாகப்படுத்தியும் தைர்யமுட்டியும் என்னை மொழிபெயர்க்க சொன்னார். அப்படி நான் மொழிபெயர்த்ததை அவர் சரிபார்த்துகொடுத்தார். அத்தோடு நில்லாமல் அப்போது அவர் நடத்திக்கொண்டிருந்த பன்முகம் இலக்கியக் காலாண்டிதழில் அருண் கொலாட்கர் கவிதைகளை வெளியிட்டும் உற்சாகப்படுத்தினார். இப்படித்தான் நான் மொழிபெயர்ப்பாளனாகவும், அதுவும் குறிப்பாக அருண் கொலாட்கரை மொழிபெயர்ப்பவனாகவும் மாறினேன்.

இவை நடந்தது 2003 களில் என நினைக்கிறேன்.

அதற்கு அடுத்த வருடம் குறிப்பாக ஆகஸ்டு மாதத்தில் என நினைக்கிறேன். ஆங்கில இந்துவில் கௌரி நாரயணன் என்பவர் அருண் கொலாட்கரின் இரண்டு புதிய தொகுப்புகளை அறிமுகப்படுத்தி விரிவாக எழுதியிருந்தார். கால கௌடா மற்றும் சர்ப்ப சாஸ்திரா என்ற இரண்டு தொகுப்புகளும் ஒரே சமயத்தில் வெளியிட்டிருந்தார்கள். அவைகளுக்கு ஒரே சமயத்தில் மதிப்புரையும் வெளியிட்டிருந்தார்கள்.

கௌரியை இதற்காகத் தொடர்புகொண்டேன். அவருடைய புத்தகங்களை வாங்குகிற வசதி அப்போது சென்னையிலும் இருக்கவில்லை. அவரிடம் கேட்டிருந்தேன். ஆனால் அப்போது அவர் அருண் கொலாட்கரின் கவிதைகளின் மேல் அதீதமான ஆர்வத்தினால் அக்கவிதைகளை நாடகமாக்குகிற முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்காக அந்தப் புத்தகங்கள் கைவசம் இருக்க வேண்டியதன் அவசியத்தை சொன்னார் , இதனால் எனக்கு உடனே அவருடை புத்தகங்களை பார்க்கிற வாய்ப்புகூட கிடைக்கவில்லை.

அந்த சமயத்திலே எழுத்தாளர் இரா.முருகன் அருண் கொலாட்கரின் கவிதைகளை மொழிபெயர்க்க தொடங்கினார்,. அது திண்ணை இணைய இதழில் அவ்வப்போது வெளி வரத் தொடங்கின. அக்கவிதைகளையும் நான் தமிழில் தொடர்ந்து வாசிக்க தொடங்கினேன்.

இரா.முருகன் கிட்டத்தட்ட அருண்கொலாட்கரின் எல்லாக் கவிதைகளையும் இப்போது மொழிபெயர்த்துவிட்டார் என நினைக்கிறேன்.

கௌரி அருண் கொலாட்கரின் கவிதைகளை நாடகமாக்கி அப்போது சென்னையில் அரங்கேற்றினார். அதற்கான அழைப்பும் எனக்கு கொடுத்திருந்தார். அந்த நாடகத்தை பார்க்க நானும் உற்சாகத்தோடு போய்ப்பார்த்தேன்.

இவை எல்லாம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலம் சற்றுமுன்பின்னாக இருக்கலாம். ஆனால் இவை நடந்தவை.

செப்டம்பர் மாத 25 தேதிய ஆங்கில இந்துவில் அருண் கொலாட்கரின் மரணம் பற்றிய செய்தி வெளிவந்தது. அவருக்கு தி இந்துவில் ஆங்கிலத்தில் அஞ்சலிக் கட்டுரை ஒன்றை கௌரி நாராயணன் எழுதியிருந்தார்.

பன்முகத்தில் நான் மொழிபெயர்த்திருந்த அருண் கொலாட்கரின் கவிதைகளைப் படித்திருந்த நண்பர் தளவாய் சுந்தரம் என்னைத் தொடர்பு கொண்டு தீராநதி இலக்கிய இதழில் ஒரு அஞ்சலிக் கட்டுரை எழுதச் சொன்னார்.

அந்த வாய்ப்பினால் அருண் கொலாட்கரைப் பற்றி உரைநடை எழுதவும் வாய்த்தது.

இப்படிதான் அருண் கொலாட்கர் கவிதைகளுக்கும் எனக்கும் நெருக்கம் உருவானது. இவை எல்லாம் நடந்தது செப்டம்பர் மாத இறுதியில் . அக்டோபர் 18 தேதி என் இளைய மகன் பிறந்தான். அருண் கொலாட்கர் மீது அந்த சமயத்தில் அபரிமிதமான ஆர்வத்தில் நான் இருந்ததால் என் இளைய மகனுக்கு அருண் கொலாட்கர் என்ற பெயரை வைத்தேன்.

இவை நடந்த சில மாதங்கள் கழித்து இந்தத் தகவல் கௌரியின் வழியாக அருண்கொலாட்கரின் மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு இந்த விஷயம் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய அதே சமயம் ஒரு வேண்டுகோளையும் அனுப்பியிருந்தார். அது என்னவெனில் அருண் கொலாட்கர் என்பதில் கொலாட்கர் என்ற பெயரை பள்ளி ஆசிரியைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக உச்சரித்து அந்தக் குழந்தையை பாடாய்படுத்திவிடுவார்கள் என்பதால் அந்தக்குழந்தை ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகுவான் என்பதால் அந்தக் கொலாட்கர் என்ற பெயரை நீக்கிவிடும்படி வேண்டிக்கொண்டார்.

அப்புறம் அருண் கொலாட்கர் என்பதில் கொலாட்கர் என்பது அவருடைய குடும்ப மற்றும் குளக்கரையை குறிப்பிடுவதாகவும் சொன்னாராம். இதை கௌரி என்னிடம் சொன்னார். அதன் பிறகுதான் அருண் கொலாட்கர் என்ற மகனின் பெயரில் இருக்கிற கொலாட்கர் என்ற பின்னொட்டை நீக்கி அருண் என்று பரவலாக அவனை அறிந்தார்கள்.

இந்த விவரங்களை அப்போது எனக்கு நெருக்கமாக இருந்த இலக்கிய நண்பர்கள் அறிவார்கள். இப்படி ஒரு கிறுக்கன் இருக்கிறானே என கள்ளச்சிரிப்புகளை அவர்கள் உதிர்த்ததையும் அறிவேன். ஆனால் நான் எதைப் பற்றியும் கவலைபடவில்லை.

இப்போதும் நான் பிரியத்துடன் என் மகனைக் கொஞ்சும்போது அருண் கொலாட்கர் என்ற முழுப்பெயரோடுதான் கொஞ்சுகிறேன்.••

இந்த மலைகள் இதழ் அருண் கொலாட்கரின் சிறப்பிதழாக கொண்டு வரத் திட்டமிட்டதற்கு காரணம் ஒரு மாதத்திற்கு முன் மறுபடியும் அருண் கொலாட்கரைத் தேடி வாசித்தேன். அப்போதுதான் அவருடைய நினைவு நாள் செப்டம்பர் 25 இல் வரப்போவதையும் அறிந்தேன். ஆகையால் கடந்த ஒரு மாதமாக திட்டமிட்டு நண்பர் சமயவேலிடம் இத்தகவலை சொன்னேன். அவர் உற்சாகப்படுத்தினார். பத்து கவிதைகளையும் அவரைப் பற்றிய கட்டுரை ஒன்றையும் கொடுப்பதாகச் சொன்னார். அதன்பிறகு நான் பெரிதும் மதிக்கும் ஆர்.சிவக்குமாரிடம் இந்தத் திட்டத்தையும் அதற்காக அருண் கொலாட்கரின் கவிதைகளை மொழிபெயர்த்துக்கொடுக்கும்படியும் கோரினேன். அவர் ஒப்புக்கொண்டதோடு உடனே மொழிபெயர்த்து முதல்ஆளாக அனுப்பியும் வைத்தார். அவருடைய நண்பரும் மீட்சி இதழில் பல உலக கவிதைகளை மொழிபெயர்த்தவருமான எதிராஜ் அகிலனிடமும் அருண் கொலாட்கரின் சில கவிதைகளை மொழிபெயர்த்துகொடுக்க வேண்டினேன். அவரும் ஒப்புக்கொண்டபடியே செய்து ஒத்துழைத்தார்.

இதற்கிடையில் சேலம் நண்பர் ஷாஅ விடம் அருண் கொலாட்கர் பற்றிச் சொல்லி அவரை மொழிபெயர்த்துக் கொடுக்கும்படித் தூண்டினேன்,. ஆனால் மொழிபெயர்த்த அனுபவம் ஏதுமில்லை என அவர் தயங்கினார்,. மேலும் அருண் கொலாட்கரைப் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது எனவும் மறுத்தார். ஆனால் நான் விடாப்பிடியாக அவரிடம் அருண்கொலாட்கரைப் பற்றிய அறிமுகத்தைச் சொன்னதோடுல்லாமல் அவருடைய கவிதைகளை அனுப்பி வைத்து மொழிபெயர்க்கச் சொன்னேன்.

அவரும் தயக்கத்தோடு ஒப்புக்கொண்டு படித்துப் பார்த்துவிட்டுதான் எதையும் தன்னால் செய்ய இயலும் என்றார். அருண் கொலாட்கரின் கவிதைகளை வாசித்துவிட்டு அவரும் பெரும் உற்சாகமாகி உடனே மொழிபெயர்த்து அனுப்பி வைத்திருந்தார்.

இவை நடந்த பின்னர்தான் நான் அருண் கொலாட்கரின் சிறப்பிதழாக மலைகள் வெளிவரப்போகிறது என்ற அறிவிப்பை முகப்புத்தகத்தில் நேற்று அறிவித்தேன்.

முதன் முதலாக உற்சாகமூட்டிய சமயவேல் தவிர்க்கவியலாத காரணங்களால் அவருடைய பங்களிப்பை அனுப்பிவைக்க இயலவில்லை. ஆனால் இந்த இதழ் உருப்பெற்றதில் அவருக்கும் பெரும் பங்கிருக்கிறது.

••

அருண் கொலாட்கரின் சிறப்பிதழை நண்பர்கள் உற்சாகத்தோடு வரவேற்றால் மேலும் அடுத்த இதழ்களில் உலக ஆளுமைகளின் சில சிறப்பிதழ்களை மலைகள் வெளியிடும். அதற்கான பணிகளும் தொடங்கிவிட்டன. விரைவில் அந்த அறிவிப்புகளும் வரும் .

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி . குறிப்பாக சமயவேல் மற்றும் ஆர்.சிவக்குமார் மற்றும் எதிராஜ் அகிலன் மற்றும் ஷாஅ.

மேலும் இந்த இதழில் எழுத கௌரியையும் தொடர்புகொண்டேன். அவர் எம்.எஸ் . சுப்புலட்சுமியின் நூற்றாண்டு என்பதால் அதில் பிசியாக இருப்பதால் எதையும பங்களிக்க தற்போது வாய்ப்பில்லை என்றார் ( கௌரி நாரயணன் கல்கியின் பேத்தி).

நண்பரும் எழுத்தாளருமான இரா.முருகனைத் தொடர்பு கொண்ட போது அவருடைய பங்களிப்பாக படைப்புகளை அனுப்ப சொல்லி கோரியிருந்தேன். ஆனால் இந்த இதழ் பதிவேற்றம் ஆகிற இந்த நொடி வரை அவரிமிருந்து படைப்பு எதுவும் வரவில்லை . ஆனால் அவரும் கௌரியும் வேறொரு சந்தர்ப்பத்தில் நிச்சயம் அருண் கொலாட்கரைப் பற்றி எழுதுவார்கள்.அப்போது அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு இன்னும் கூடுதலாகச் சில காரியங்களைச் செய்வோம்.

அருண் கொலாட்கரின் படைப்புகளை, குறிப்பாகக் கவிதைகளை, தமிழ் வாசகர்களுக்கும் கவிஞர்களுக்கும் கொஞ்சம் பரவலாக அறிமுகப்படுத்தும் பணியில் மலைகள் தொடர்ந்து ஈடுபடும் என்ற நம்பிக்கையோடு நண்பர்களிடமிருந்து விடைபெறுகிறேன்

••

அருண் கொலாட்கரின் கவிதைகளைப் பற்றி விரிவாக வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுவேன்.

இப்போது சொல்லுங்கள் அருண் கொலாட்கர் என் மகன் என்ற முதல் வரி பொருத்தமானதுதானே?

நன்றி

உங்கள்

சிபிச்செல்வன்

ஆசிரியர்

மலைகள் இணைய இதழுக்காக

Comments are closed.