அஸ்கபானின் சிறைக்கதவுகள் திறக்கப்படுகின்றன / நஸீஹா முகைதீன் ( இலங்கை )

[ A+ ] /[ A- ]

  நஸீஹா முகைதீன் ( இலங்கை )

நஸீஹா முகைதீன் ( இலங்கை )

பெரியப்பா நேற்று இன்னேரத்திற்கு நிகழ்ந்தது மீண்டும் பிறப்பெடுத்தலோ இல்லை உங்களின் பெயரோ,கனவுகளோ அல்லது இன்னோரன்ன சமாச்சாரங்களின் உயிர்த்தெழுதலோ தெரியாது.ஏதோ ஆச்சரியமான நிகழ்ச்சி நடக்கவிருந்தது.பின்னர் நடந்தது.பிறந்த குழந்தையை உச்சிகாயும் முன் சுடச்சுட வீட்டிற்கு அழைத்து வரும் சம்பிரதாயம் போலவும் அது இருந்தது.

நேரம் இரவு பத்து இருபத்தைந்து இருக்கும்.உங்களை மத்தியானம் வாட்டிற்கு பார்க்க வந்ததால் உம்மா எதுவும் சமைக்கவில்லை.எப்படிச் சமைப்பது.குடும்பத்தின் விலாசமே ஆஸ்பத்திரியில் இருக்கும் போது எங்களுக்குச் சாப்பாடா வேண்டிக்கிடக்கிறது.டீ ஊத்தி நாலைந்து மெலிபன் பிஸ்கட்டுகளை தொட்டுத்தின்டு கை கழுவி விட்டு கட்டிலில் ஏறிக் குந்தினேன்.உம்மா மச்சியிடம் கொடுத்து ஆக்கியதில் மிஞ்சிக்கிடந்த சோற்றை பிசைந்து கொண்டிருந்தாள்.அவளுக்கு இந்த வாரம் முழுவதும் உடல் முடியாமல் போகிறது.மச்சினன் பாசம்.போதாக்குறைக்கு ஓடியாடி மாட்டுக்கன்று போல வேலை செய்கிறாள்.சமைப்பது,ஏனம் கழுவுவது பின்னே அவற்றை அடுக்குவது.நாங்கள் கலைத்துப்போட்டு விடுவோம்.எங்களுக்கு அத்தனை இலகு.அவள் பம்பரமாகச் சுழலுவாள்.மீண்டும் கழுவி அடுக்குவாள்.இஞ்சி,உள்ளி தட்டுவது மட்டும் அவளுக்குச் சிரமம்.இருந்தாலும் செய்வாள்.ஈரமான தரைக்கு சாக்கை விரித்து நிமிர்கையில் அடுத்த சாப்பாட்டு நேரம் வந்துவிடும்.

வாப்பாவின் டெலிபோன் அலறியது.நாங்கள் தயாராகி விட்டோம்.வைத்தியசாலையில் யாரையாவது வைத்து விட்டால் இரவுத்தொலைபேசி அழைப்புகளுக்கு மரியாதையும் கூடிவிடுகின்றது.நெஞ்செரிவும்,ஆர்வமும் ஒன்றையொன்று வீழ்த்தத் துடிக்கின்றன.அலைபோல நம்பிக்கை எழுவதும்,பின்னர் காணமல் போவதும்.கடைசியில் கதை முடிந்தது. வாப்பா “இன்னாலில்லாஹ்”என்றார்.

“என்ன மச்சான்”

சோத்துப் பீங்கானை தூக்கி வைத்தபடி சாவை உறுதிப்படுத்திக் கொண்டாள் உம்மா.பெரியவன் என்னயாம்,என்னயாம் என்கிறார்.அவன் திணறிப்போய்விட்டான்.காட்டிக்கொள்ளவில்லை.

“பெரியப்பா மௌத்தாகிட்டாங்களாம்”

தடுமாறிச் சொல்லி முடித்தேன்.

நீங்கள் அவசரக்காரர் போங்கள்.இனியென்ன இருக்கிறது.கண்ணீர் தாரைதாரையாக வழிகிறது.உம்மா தட்டத்தை வைத்து விட்டு முக்கியமானவர்களுக்குச் செய்தி சொல்ல ஓடுகிறாள்.கால்வலி என்று அலட்டும் ஒருத்தியை அங்கே காணமுடியாது.சிறு குமரியாக

,வாப்பாவைக் கலியாணம் முடித்தபோது நீங்கள் கண்ட சின்னப்பெண்ணாக ஓடுகிறாள்.

குழாயை அடித்து முகத்துக் கறைகளைக் கழுவிக்கொண்டேன்.வானத்தில் குளிர்ச்சி பொழிந்தாற் போல இருக்கிறது.

வீதியெல்லாம் பஞ்சையான இருட்டு.நானும்,உம்மாவும், சின்னத்தம்பியும் நடையை விட வாப்பா மோட்டார் சைக்கிள்,மூத்தவன் சைக்கிள்.உங்கள் வீட்டிற்கு வந்தோம். ஏற்கனவே உங்கள் மாமிமார்,மருமகள்,மச்சிமார்,முன் வீடு,பக்கத்து வீடு,அல்லசல்,நண்பர்கள் என வீடு நிறைந்திருந்தது.நான் சொன்னேனே.இது குழந்தையை வரவேற்கும் நிகழ்வு.நீங்கள் பிறந்தபோது சுற்றியிருந்த உங்கள் மாமி இருக்கிறார்.ராத்தாவும்,உம்மாவும் தூரத்திருந்து வர இருக்கிறார்கள்.உங்கள் மாமா கூட உயிர்போகும் போது கைகளைப் பிடித்தபடி பக்கத்தில்.பின்னே இதை நான் வேறென்ன சொல்வது.

ஒரு மணிக்கெல்லாம் உங்களைக் கொண்டு வந்துவிடுவார்களாம். காத்திருக்கிறோம்.உடல் எனும் கருவியின் மிக அற்புதமான தரிசனத்திற்காக பாயிலும்,நுழைவாயிலில் போடப்பட்ட கதிரைகளிலும்,உங்கள் அரிசிக்கடைப் படிக்கட்டிலுமாக இருக்கிறோம்.பெரியம்மா அழுது அழுது வெளிறிப் போய்விட்டாள்.இருக்காதா? எத்தனை பெரிய பரிசு நீங்கள்.அவள் குடும்பத்திற்கும்.இல்லாவிட்டால் மைனிமார்கள் அங்கேயும் இங்கேயும் உட்கார்ந்து கண்ணீர் சிந்துவார்களா…

பனி தொண்டையை அடைத்தது.எங்கிருந்து வந்ததோ வின் வின்னென்று தலையைப் புரட்டும் இந்தத் தலைவலி.ஞாபகம் வந்து விட்டது.பகல் பார்க்க வந்த போது உங்கள் நிலைமையைக் கண்டதும் ஆரம்பித்தது.ஊசியைப் போடும் போது பதறிக் கையைத் தூக்கினீர்கள்.தலை வியர்த்து வடிந்தது.அப்படியே மூத்தப்பாவின் சாயல்.சின்ன வயதில் தூங்கும் போது நீங்கள் பயத்தினால் வாப்பாவெனக் கூப்பாடு போடுகையில் “என்னடா மன, நான் இன்னாதானே படுக்கன்”எனக்கூறும் மூத்தப்பாவேதான்.யார் கண்டார்கள் மூத்தப்பா இருந்திருந்தால் உடம்பு தேறியிருக்கும்.

பதின்ம வயதின் ஆரம்பத்திலேயே உழைக்கத் தொடங்கி விட்டீர்களாமே.இறப்பு வரை மாய்ச்சல் படவில்லை இந்தக் கைகள்.வாப்பா கூட சொன்னாரே.எப்போதும் யாவாரத்தில் கவனமாயிருப்பீர்களென்று.வாப்பாவை ஒருநாள் முட்டை விற்க மட்டக்களப்புக்குப் போகும்போது கூட்டிச் சென்று கஞ்சி வாங்கிக் குடுத்தீர்களாமே.வாப்பா சொல்லும் போது ருசி ஏறுகிறது.எனக்குக்கூட அதே பித்து.படிப்பெல்லாம் சும்மா.வியாபாரமே மூச்சில் நிரம்பிக் கிடக்கிறது.நீங்களும் வாப்பாவும் ஒரே ரத்தம்.மறுகா எனக்கில்லாமல் போகுமா.நான் வாப்பாவின் பிள்ளை மட்டுமில்லையே.அதேயளவு மரியாதை வைத்திருக்கும் பெரியப்பாவின் பிள்ளையுமே.ஆஸ்பத்திரியில் அழத் தொடங்கியதும் பக்கத்திலிருந்து கிழவி மனிசி உன்ட வாப்பாவா மன என்று கேட்டேளே..

வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது.எப்படியாச்சும் இன்டைக்கு உங்களைப் பார்த்திடனும்.நல்லநேரமாக வாய்ப்பும் கிடைத்தது.கடைசியாக தம்பியின் கல்யாணத்தில் கண்டது.மருதோண்டிக் கல்யாணத்தன்றும் உற்சாகமாய்த்தானே இருந்தீங்க.அதற்குள் எங்ஙனம் சட்டென்று முன்னும் பின்னுமில்லாத உடல் தளர்ச்சி ஒட்டிக்கொண்டு விட்டதோ தெரியவில்லை.பெண் வீட்டிலிருந்து திரும்பி வந்து உங்கள் வீட்டு விறாந்தையில் உம்மா,பெரியம்மா,நான் மற்றும் நெருங்கிய உறவுகள் அன்றைய நாளின் சாராம்சத்தை பேசிக்கொண்டிருந்த போது தம்பி வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உருளைக்கிழங்கு சிப் டின்னை கையில் திணிச்சீங்க.மூக்கில் ஏறிய இரண்டு சொட்டுக் கண்ணீரைத் தடுமலை உறிஞ்சுவது போல உறிஞ்சிக் கொண்டேன்.ஒன்டு தெரியிமா? உறவுகளுக்குள் உங்களின் மீதான என் அக்கறை நேற்று முளைத்ததில்லை.அது ரொம்ப காலத்திற்கு முந்தியது.நீங்களும் வாப்பாவும் ஒரே குடலில் கிடந்தவர்கள் தானே.அப்படியெண்டா ரெண்டு பேரும் எனக்கு ஒரே மாதிரித்தான்.ஓம்! ஒரே மாதிரித்தான்.

இத்தனை கொட்டித் தீர்க்கிறாளே என்று மனதில் ஒன்றும் நினைக்காதீர்கள். நான் பைத்தியக்காரி.என்னை வெளியில் அப்படித்தான் பேசிக் கொள்கிறார்.போகட்டும்.உங்களை அடிக்கடி வந்து பார்க்கவில்லை என்று நினைக்கிறீர்களா,இப்ப மட்டும் இரக்கம் பொத்துக்கொண்டு வந்து விட்டதோ என்று நினைக்கிறீர்களா.என்னமோ தெரியாது.எல்லாத்தையும் போட்டு அடக்கி அடக்கி எதை,எந்நேரம் வெளிக்காட்ட வேண்டுமென்ற இங்கிதம் தெரியாமல் போய்விட்டது.

“நீ ஊட்டுகுள்ளேயே கிடந்து சாகு” என்று நிறையப்பேர் கைது கழுவியாச்சு.ஆனாலும் தம்பி கல்யாணத்திற்கு வெட்டக்கிரங்கினது உங்களுக்காக.

மூத்தவனுக்கு நல்ல அதிஷ்டம்.வாட்டில் உங்களை நானாவும்,அவனுமாக கவனித்துக்கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது.எனக்கெல்லாம் அத்தனை அவசரமாக சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.நாளையும் உங்களைப் பார்த்துக்கொள்ள போவதாக கூறினான்.நெஞ்செல்லாம் பூரிப்பாய் இருந்தது.

“பக்கத்துல நிண்டு கண்ணக்கசக்க வாணாம்னு சொல்லு.மௌத்தாக்கிடுவாங்க போலருக்கு.அந்த மனிசன்ட உசிர ஞாயன் கொள்ள நாளைக்குப் போட்டுட்டான்டா.டொக்டர் மாரும் ட்ரை பண்றாங்கானே.பெரியப்பாக்கு சுத்தி நடக்கிறதெல்லாம் கேக்குது.அவருக்கு விளங்குது”

நான் நியாயம் கூறிக்கொண்டிருந்தேன்.மறுகா என்ன! அங்கே அழுது வடியும் பாதிப்பேருக்கு உங்களை விட பத்துப்பதினைந்து வருடங்கள் அதிகமாயிருக்கும். உங்களுக்கு கிடந்து கழியிறதுக்கு என்ன.நீங்கள் அவ்வளவு சீக்கிரம் போக மாட்டீர்கள்.அடிக்கடி சீனி வருத்தம் வாட்டினாலும் நீங்கள் நீண்டகாலம் இருப்பீர்கள்.வருத்தம் வரும்,போகும்.அதையெல்லாம் பெரிசுபடுத்தக்கூடாது.

ஆஸ்பத்திரியிலிருந்து வெளியானதும் தம்பி பொண்டாட்டியையும்,உம்மாவையும் விட்டு விட்டு நடந்து வந்து விட்டேன்.மனசு அவ்வளவு நேர்த்தியாக இல்லை.முறிந்து கிடந்தது.அவர்கள் வரும்வரை வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடத்தில் நின்றேன்.பெரிய யேசுவின் சிலை அங்கிருந்தது.அந்த இடத்தில் பரவிய அமைதியில் எனக்குத் தெம்பு வந்தது.எல்லா ஆலயங்களும் அமைதி தருபவை தானே.மௌனத்தை விட இன்பமான பிடிமானம் அங்கெல்லாம் இருக்கிறது.வீட்டுக்கு வந்து தொழுது முடித்துக் கையேந்தியபோது நீங்கள் திரும்பி வருவீர்கள் என்ற தைரியம் இருந்தது.பெரியப்பாவிற்கு பிரார்த்தனை செய்வது கூட மிதப்புத்தான்…

பன்னிரண்டு அரையிலிருந்து ஒன்றுக்குள் மையத்தைக் கொண்டு வந்தாயிற்று.மையத்தென்றா சொல்கிறேன்.பெரிய தவறு.பெரியப்பா வந்துட்டார்.நேரத்தை பார்க்கும் நிதானமில்லை.நீங்கள் வந்தால் ஒன்றாகி விட்டது.வெக்கை,கண்ணீரின் உப்புக்கரித்த கன்னம்,பசியின் கொடுமையுடன் தங்களை தரிசிக்க எட்டிப்பார்த்தோம்.இத்தனை பகுத்திரமாக அதுவும் பத்துப்பன்னிரண்டு பேர்.மகன்,தம்பி,மருமகன்,மச்சான், மச்சினன் என புடைசூழ இரும்புக்கட்டிலில் வைத்து தூக்கி வந்தார்கள்.ஆபத்தில் இருந்து மயிரிழையில் தப்பித்த ஆட்டுக்குட்டி ஈன்ற குட்டி போல பெறுமதியான உடலை இமைகொட்டாமல் பார்த்தோம்.இந்த யுகாந்திரங்கள் முடிந்தாலும் தீராத பார்வையது.எத்தனை பேருக்குச் சொந்த மாமாவின் அருகில் மரணிக்கக் கிடைக்கும்.எத்தனை பேருக்கு மகத்தான படை சூழ் மரணம் கிட்டும்.யுத்தத்தில் புதருக்குள் சுடப்பட்டு

மரணித்த ஆன்மாக்களும் உண்டு.இன்னாரென கண்டுபிடிக்க முடியாதபடி ஆயிரக்கணக்கில் மரணித்துச் சதை தெறித்த ஆன்மாக்களும் உண்டு.பிரியாவிடை சொல்லி,அதற்கு நேரமில்லாமலும்.இனத்தின் பெயரில் கொதிக்கும் தார்ப்பீப்பாயில் எறியப்பட்டு மரணித்தவர்களும் உண்டு.எல்லாமே இறப்பாகவே இருக்கையில் உங்களுக்கு மிகப்பெரும் செஞ்சழிப்பான இறப்பு.

இனி ஆரவாரத்துடன் உடலைக் கழுவும் நிகழ்வு நடைபெறுகிறது.வெள்ளைத்துணிகள் கேட்டு ஒரு கூட்டம்.புதுச் சவுக்காரமென்று ஒரு கூட்டம்,சொப்பின் பேக் கேட்டு ஒரு கூட்டம்.குரலெழுப்புவதும்,ஓய்வதுமாக. மகாராசா வந்தால் கூட இம் மனப்பூர்வமான வரவேற்பு கிடைக்குமோ என்னமோ.பெரியப்பா மகாராசாவை விட பெரிசு.

இந்த சிவப்புத்துணி தேடத்தான் பத்து நிமிசம் கரைந்து விட்டது.சிவப்புப் பாவடை அல்லது முந்தானை என அலுமாரியைப் போட்டுப் புரட்டி விட்டார்கள்.இனி நிறைய நிறைய சிவப்பு வாங்கிக்கனும்.அலுமாரியை நிறைத்தாலும் பரவாயில்லை.உங்களை காக்க வைக்கலாமா.குடும்பத்தின் பெரியவர்கள் எல்லோரும் இளசுகளை நன்றாக ஏசிக் கொண்டார்கள்.நீங்கள் ஆஸ்பத்திரியில் இருந்து வர முந்தியல்லவா தயார்படுத்தியிருக்க வேண்டும்.

பெரியம்மாவை இத்தாவில் வைக்க வேலை நடந்தது.அவளுக்குப் பிரசர் குறைஞ்சி பெய்தென்டு பிரைவட் ஹொஸ்பிடல் போன இடத்தில் செய்தி கேள்வி பட்டிருக்கிறாள்.ஹாட் வேறு சுகமில்லையே.அந்த அடைத்த அறைக்குள் இப்போது கொண்டு போக வேண்டாம்.ஆண்கள் யாருமே இல்லை.கொஞ்சம் பொறுங்கள்.அடைத்த அறையில் இருப்பதே இத்தா என்றில்லையே என தம்பி பொண்டாட்டியைக் கடிந்து விட்டேன்.ஆனால் பெரியம்மாவாக எழுந்து நகைகளைக் கழற்றி அறைக்குள் போகப்போகிறேன் என்றதும் வாயைப் பொத்திக் கொண்டேன்.அது சரியல்லவா.பெரியப்பாவிற்குச் செய்யும் மரியாதை.அவளாகப் போகிறது தானே சுதந்திரம் கேட்டீங்களா…

எனக்குத் திரும்பவும் தலையை ஆட்டிக் கொண்டிருந்தது வலி.பிறந்ததிற்கு அனுபவித்தில்லாத ஏகவலி.ஒருவேளை கண்ணீரையும், மூக்கையும் சீறிச்சீறி மூளை வந்து விட்டதோ என்றிருந்தது.எப்படி ஜீரணிக்க முடியும்.குடும்பத்திற்கே அடையாளம்.வாப்பா என்ன செய்கிறார் என்றால் பெரியப்பாட றைஸ் மில்லில் கணக்கெழுதுகிறார் என்று சொல்லுவேன்.உங்கள் பேரைச் சொன்னாலே பாதிப்பேருக்கு புரிந்து போகும்.அப்போது தலையில் ஏறிக் கொள்ளும் மிடுக்கிற்கு அளவேயிருக்காது.இப்போதும் ஏறித்தானே கிடக்கிறது.நிரம்ப மனிதர்களைச் சம்பாதித்து வைத்திருக்கிறீர்களே.எங்கள் காலத்தில் மற்றவர்களை நினைக்கவோ கடைசி அஞ்சலி செலுத்துவோ எங்களுக்கெல்லாம் நேரம் இடங்கொடுக்குதோ தெரியாது. குடும்பமெல்லாம் இப்போது தனித்தனி பெரியப்பா.குடும்பத்திற்குள்ளும் தனித்தனி.முன்பெல்லாம் குடும்பமொன்றிருந்தது.இன்று அதற்குள்ளேயே பேசக்கூட நேரமில்லை.ஒன்றாகச் சாப்பிட,நாடகத்தை விறைத்தபடி பார்த்து கண்ணீர்விட எதற்காகவுமே.

மிகச்சுத்தமாக நீரில் நனைத்து துணிகளால் ஈரத்தையும் ஒத்தி எடுத்தாயிற்று.பயபத்திரமாக செய்தார்கள்.கூட்டத்திற்கே மகத்துமான பக்தி.மனிதர்களுக்குள் ஒளிந்து போயிருக்கும் அன்பெனும் பக்தி.எதிர்பாராத கோணங்களில் படைக்கப்படும் இதற்கு உடலோடு,மனமோ,பணமோ,நிறமோ தேவைப்படாது.மரணித்த உடல்களுக்கேயென்றது ஊற்றெடுக்கிறது.பிரத்தியேகமானது.

அதற்குள் மண்டகத்தில் இருந்த பொருட்களையெல்லாம் வெளியேற்றி படு சுத்தமாக நிலத்தைத் துடைத்துக் கூட்டி விட்டோம்.மின் விளக்குகள் மிளிர்கின்றன.குழந்தைகளின் சப்தங்களில் சங்கேதங்கள் உண்டாகின்றன.வெள்ளைத் துணி உடுத்தி தூக்கி வந்து பெரியப்பாவின் கட்டிலை போட்டாயிற்று.மேற்குப் பக்கமாக காலைக்காட்டி வைப்பது முறை.வைத்தாயிற்று.

முன் கட்டம் முடிந்து விட்டது.யாவருக்கும் திருப்தி.சிரட்டைகளில் நெருப்பேற்றி தணலில் சாம்பிராணி போட ஆயத்தமானார்கள்.கூடவே தரமான இள ரோசாக்களின் வாசத்தைத் தரும் மணக்குச்சிகள்.ராத்தாவின் வீட்டில் வந்தவர்களுக்கு தேயிலை ஊற்ற ஆயத்தமானார்கள்.உங்களருகேயிருந்து அழகான ராகத்தில் குர்ஆனை வாசிக்கத் தொடங்கினார்கள்.நெஞ்செல்லாம் கரைந்த நொடிகள்.மற்றப் பக்கத்தில் பெண்களெல்லாம் கண்ணீரில் உங்களை பாசம் பாராட்ட,உங்கள் மாமா உங்களோடேயே கிடக்கும் மாமா சொற்களால் பாசாம் பாராட்டுகிறார்.ஒன்பதே காலுக்கெல்லாம் சீவன் விடை பெற்றது என்று சொல்லும் போது எங்களுக்கெல்லாம் எப்படி இருக்கிறது தெரியுமா…

சுற்றி வளைத்து ஆ வென்று கேட்டுக்கொண்டிருக்கிறோம்.பிரசர் கூடியிருந்தால் தங்களைக் காப்பாத்தியிருக்கலாம் எனும் போது எங்களைச் துக்கப்படுத்தனுமென்டே இதை சொல்றீங்க மாமா என அவரைக் கடிந்து கொள்ளத் தோன்றுகிறது.நாங்கள் காலையிலிருந்து வாட்டை மறித்துக்கொண்டு அதை ஏறவிடாமல் பார்த்துக் கொண்டோமே.இனி வாட்டில் தீவிரமாக நோய்வாய்ப்பட்டவர்களைப் பார்க்க குடும்பத்து வயசாளிகளை அனுதிக்க விடக்கூடாது போல தெரிகிறது.

இருப்பினும் குடும்பமே ஒரு வரப்பிரசாதம்.ஒவ்வருத்தராக தலையைத்தடவி குனிந்து ஓலமிடும் போது நாடகமாகத் தோன்றவில்லையே.சின்னக்குழந்தையில் உங்களைச் சீராட்டியவர்கள் அந்த வயசாளிகள்.அவர்களோடு ஒருங்கிணைவதும் சுகமாக இருக்கிறது.பாசத்தின் அடர்த்தி குறைவதில்லையே.அது மாறி மாறிப் பயணிக்கிறது.உம்மா ஏசினால் வாப்பா மீது.வாப்பா முறைத்தால் உம்மா மீது.மூத்தவன் முணங்கிக் கொண்டால் இளையவன் மீது.மாமி அவசரத்துக்கு இல்லையெனில் சாச்சி மீது,மச்சி மீது,மச்சான் மீது.பிறகு மறுபடியும் வாப்பாவில்,உம்மாவின்..மூத்தவனின் தலையசைப்பில் மாமியின் சொட்டுக் கவலையில்,அதைக் களைவதில்.இப்படி நீண்டுகொண்டேயிருந்தது.

நேரம் ஒன்று நாற்பத்தைந்து.வீதியெல்லாம் இருண்மையில் ஓய்ந்து கிடந்தாலும் உங்கள் வீட்டில் ஒளி வெள்ளம் பரவியிருந்தது.பெரிதாக வெளிச்சம் தரும் லைட்டுகள் இல்லையென்றாலும் சுற்றிக் கிடந்த கருமையில் வீடு இலங்கத் தொடங்கியது.இரவுக்காட்டில் ஒரு பகல்.எனக்குக் கொஞ்சம் தூங்க வேண்டும் பெரியப்பா.காலையில் முகமும் உடலும் தெம்பாயிருக்க வேண்டும்.

உம்மாவும்,நானும்,சின்னவனும் வந்து விட்டோம்.வழியில் எனக்கு வாப்படம்மா சொன்னதெல்லாம் நினைவு வருகிறது.

“அவரு இளம் வயசிலயே போய் உழைக்கத் தொடங்கிட்டாரு.வாப்பாட கஷ்டத்த ஏத்துகிட்டாரு மன”

கிட்டத்தட்ட ஆறேழு வருசங்களுக்கு முன் சொன்னதெல்லாம் இந்த நாளுக்காகவா பெரியப்பா.எப்படியான தொடர்புகள்.திக்குத்திசை தெரியவில்லை.வலுவிழந்த கால்களால் கெந்திக் கெந்தி நடந்து வந்து சேர்ந்தோம் .கைலேஞ்சியைப் பிழிந்து காயப்போட்டேன்.எனக்கொன்றும்,உம்மாவுக்கொன்றுமாக இரண்டு பாயைப் போட்டேன்.உம்மா ஒடுங்கிப் போய்விட்டாள்.நானென்ன?வெளியிலே என்னைத் தைரியசாலி என்கிறார்கள்.அடங்காப்பிடாரி என்கிறார்கள்.ஆனால் நீங்களென்ற பிறகு எனக்கெல்லாமே முடிந்து போன கதை…

இருக்கிற சொந்தங்களெல்லாம் கொண்டாட்டம்,நல்லநாளுக்கு என்று ஒதுக்கினால் எல்லா நாட்களுக்குமான சொந்தம் நீங்கள்.மூத்த மகன் என வாப்பாடம்மா வாய் நிறைத்துச் சொல்லுவார்களே.எத்தனை காலமாக கண் தெரியாத மூத்தப்பாவையும்,முதிர்ந்துபோன வாப்படம்மாவையும் கவனமாக பார்த்துக் கொண்டீர்கள்.அடுத்த சந்ததிகளான எங்களுக்குப் பெரிய வழிகாட்டல்.

தூங்க வந்தேனே தவிர விழிகளை மூடிக்கொள்ள மிகச்சிரமமாக இருந்தது.ஆ ஊ என்று இரவெல்லாம் அணத்த வேண்டும் போல உடல் வலித்தது.

தூக்கத்திற்கும்,விழிப்பிற்குமிடையே உருண்டு புரள்வது கொடூரமானது.ஐந்து நிமிடம் கண்ணயர்வதும்,ஏதோ சிக்கிக்கொண்டது போல திணறி விழிப்பதுமான ஒழுங்கில் இரவைக் கடந்தேன்.

பருவமறிந்து குடும்பத்தில் நான்கைந்து மையத்துகளைப் பார்த்தாலும் நீங்கள் மட்டும் உச்சாணிக் கொம்பில் இருக்கிறீர்களே.சீனி வருத்தம்னா சும்மாவா பெய்த்து.நா வறண்டு போகும்.அடிக்கடி தலையை சுத்திக் கொண்டு வரும்.நல்ல நாளில் கூட ஒன்னும் மனசு நிறஞ்சி சாப்புடேலாது.சரிதான் என்றாகிலும் சீனி வருத்தக்காரன் சாதனை செஞ்சான்னு பேப்பர்ல வரும் போது நீங்க மட்டும் ஏன் இவ்வளவு அலட்டிக் கொள்ளனும்னு இருந்திச்சு.சோறு சிந்துற இடத்துல தானே காக்கா பறக்கும் னு சொல்றதப்போல சுத்திக் கூட்டாளிமாரு.டின் பால் டீ,மீன் பாலாண்டி,கஞ்சி,அலிவா,வட்டிலப்பம்னு எதுல குறை.நிறஞ்ச செல்வமுன்னு சொல்றப்போல வாழ்க்கை.அஞ்சாறு வருசத்துக்கு முந்தியொரு சனிக்கிழமை கடற்கரைக்குப் போறதுக்குன்னு மீன் பாலாண்டி போட்டெடுக்க காத்து,மழை னு வந்துட்டு.உடனே நாலு துண்ட வீட்டுக்கு அனுப்பினீங்க.இன்னும் தொண்டக்குழியத் தாண்டல.என்ன நாக்கு உங்களுக்கு.நீங்கள் எட்டடி என்றால் அது பதினெட்டடி.

நுளம்பு வேறு உடலை பிய்த்து எடுக்க இரண்டு சித்திரனெல்லா நுளம்பு விரட்டி மணக்குச்சிகளைக் கொழுத்தினேன்.உங்கள் வீட்டு வாசம்.அங்கிருந்து தானே தொடக்கம்.மூத்தப்பாவிலிருந்து இப்போது நீங்கள்,பிறகு நாங்கள்,எங்கள் பரம்பரை..ஏன் பூனை கடித்த முன்வீட்டுக் கோழி வரை.அங்கேதானே எங்கள் செல்வம் இருக்கிறது.தாய் நிலமும் அங்கு பரவிக்கிடக்கும் அரிசி வாசமும் தானே சோறு போட்டது.

வீடெங்கிலும் அரிசி வாசமும்,உமிப் படலமும் நுகர நெரும்போதெல்லாம் தலைப் புரட்டிப்போடும்.பெரிய தொட்டிகளில் நெல் அவிக்கும் போது கூட பெரியப்பாவின் வாசனை.களத்தில் பரவியிருக்கும் நெல் சாப்பிட வரும் புறாவில் வரும் வாசம்.அது அரிசி வாசத்தை விட கொஞ்சம் மேலானது.பச்சரிசி,உடைஞ்சரிசி,பாதியரிசி,வெள்ளைக்குருனல்.ஒவ்வொன்றும் தனித்தனி வாசம்.சிவப்பரிசிச் சோறு இதை விட ஒருபடி அதிகம். எல்லாம் பெரியப்பாவின் வாசம்.

ஐந்து,ஐந்தரைக்கெல்லாம் அடிச்சிப்பிடிச்சு எழும்பி உம்மா தேயிலை வைத்தாள்.சிறுங்குடலை கொன்று தின்றது பெருங்குடல்.இரண்டு வாய்த் தேயிலையில் தொண்டையை நனைத்து விட்டு திரும்பவும் நானும்,உம்மாவும்,சின்னவனும் நடையைக் கட்டினோம்.பழைய சீலையில் பெரிதாக கிழித்த நீலக்கலர் துண்டை கைக்குள் திணித்துக் கொண்டேன்.பெரிய துண்டெடுத்தது உபகாரம் என பின்னர் பெருமூச்சு விட்டேனில்லையா…

பள்ளிவாசலில் அறிவித்தார்கள்.வீதியில் இரண்டு பேர் நின்று அரிசிக்கடை ஜமால் மௌத்தாகிட்டாராமே என்கிறார்கள்.அதற்கு வெகுளித்தனமான தோற்றமுடைய மற்ற மனிதர் கிட்டத்தட்ட ஆறு முறை உங்கள் பெயரை அழுத்தக்கேட்டபடி நின்றார்.அவரு தான் என்று சப்தமாகச் சொல்லத்தோன்றிற்று.எங்கே ஜீவனிருக்கிறது.நேற்றோடு சகலதும் அடங்கி நாரங்களில் எல்லாம் புதைந்து அழுகியதே. அந்த ஆறுதடவை மனிதர்கூட அதையே சொன்னார்.

“போன கிழமை பாத்தனே நல்லாருந்தாரே”…

ஓம்.நல்லா இருந்தார்.நல்லா இருந்திருக்கனும்.தன்னுடைய வருத்தமெல்லாம் சுகப்படுமென பச்சை இலை கணக்காக.பிழைப்பவன் சாகக்கிடப்பான்.சாகக்கிடந்தவன் பிழைப்பவனாக காட்டிக்கொள்வான் என்பார்கள்.இருந்தும் ஆஸ்பத்திரி பார்வைக்குப்பிறகு எந்த சந்தேகமும் இல்லை.உறுதியான முடிவாயிற்று.

உங்கள் வீடு திரும்பும் சந்தியில் வைத்து இன்னொரு பெண்ணும் இணைந்து கொண்டார்.முன் வீட்டு வாசல் ஆண்களால் நிரம்பிக் கிடந்தது.ராத்தாவின் வீட்டுக் கதவால் நுழைந்தோம்.கண்ணீர் வருகிறதே.ராத்தா வீட்டுக்குசினிக்குள் அழுகையும்,கலைந்த தலையுமாக வந்தவர்களுக்கு காலைத் தேநீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.தம்பிமார், மச்சான்மார்,நானாமாரெல்லாம் பாவம். விடிய விடிய கண் விழித்துக் கிடக்கின்றனர்.கடுந்தேயிலைக் குடித்து சூட்டை உடலுக்கு குடுத்தால் நன்றாகவே மற்றக் காரியங்களைச் செய்து முடிக்கலாம்.

பெண்கள் ஒரு பக்கமும் ஆண்கள் ஒரு பக்கமுமாக உங்களைப் பார்க்க முந்தியடிக்கின்றனர்.வாப்பா வாப்படம்மாவை எங்க கொண்டு வருவது என்றிருக்கிறார். சொந்தங்களுக்குள் என்ன சிரமம். மனிசிக்கு கண் விளப்பமில்லை.யாரையும் கண்டால் மதிக்கமாட்டார்.பெற்ற குழந்தைகள், பேரக்குழத்தைகள் என நாங்கள் அவருக்கு வேற்று மனிசர்கள் ஆனோம்.இப்பயும் கூட இறந்தது அவர் மகன் என முதுமைக்கு விளங்கப்போவதில்லை.முதுமை தன்பாட்டிற்கு இயங்கிக்கொண்டிருக்கும்.இருந்தாலும் யாரோ என்றாவது வாப்பம்மா ரெண்டு சொட்டுக் கண்ணீர் விடட்டுமே.சினிமாக்களிலில்லாத மிகச் சோகமான இக்காட்சி நூற்றாண்டிற்கே நிகழ்கிறது.இரண்டு வாரம் கழித்து போனபோதும் நீங்கள் அவரைப் பார்க்க வரவில்லை என்கிறார்.எங்களுக்கெல்லாம் வெடவெடத்துப் போகிறது.காத்திருக்கட்டுமே..

வீட்டிற்கு உள்ளே போனதும் குசினிக்குள் அடைபட்டுக்கொண்டேனே.மூச்சு விடக்கூட இடமில்லாத நெரிசல்.வியர்வை உச்சியிலிருந்து பாதங்களைக் கழுவிச் சென்றது.பக்கத்தில் நின்றவளின் செல்போன் வேறு சத்தமாக அலறத் தொடங்கியது.மனசுக்குள்ளே திட்டினாலும் வெளியில் சொல்லத் திரணியுமில்லை.சிந்தை தெளிவுமில்லை.அவளுக்கு முகத்திற்கு தெரிந்தவர் என்றால் எனக்கு பெரியப்பா வா.என் பெரியப்பாவிற்கில்லாவிட்டாலும் ஏதோ ஆறப்போகும் ஜீவனுக்கென்றாவது துளி மரியாதை இல்லையா..கிடக்கட்டும்.

எப்படியோ முட்டித்தள்ளிக்கொண்டாவது கடைசியாக தள்ளி நின்றாவது கண்டு விட வேண்டும்.நெஞ்சு துடிக்கிறது.கண்ணெல்லாம் நனைந்து மூக்குத்துடைத்த துண்டாலேயே கண்ணையும் துடைக்க வேண்டியதானது.வேறு வழியில்லை.வாழ்க்கையே அட்ஜெஸ்மண்டாயிருக்கும் போது இவை எம்மாத்திரம். இன்னுமே பதினைந்து நிமசத்திலிருந்து பெரியப்பா இல்லாமல் அட்ஜெஸ்ட் செய்யப்போகிறோம்.மறப்பதும்,பண்பு மறைவதும் வரும்,போகும்.பெரியப்பா போவதற்கு இரண்டு மாதம் முந்தி குடும்பத்தில் ஆண்வாரிசு.ஒன்று போகும்,ஒன்று வரும்.அதுவல்லவா பிரபஞ்சத்தின் விதி.

ஆண்கள் பார்த்து முடிய பெண்கள் குமிகிறார்கள்.இறுதி மரியாதை என்பது சதவீதப் பொறுத்தம்.கை கட்டிக்கொண்டு பதிபக்குவமாக,பகுத்திரமாக முகத்தை தரிசித்து வழியனுப்புகிறார்கள்.எனக்கு அருகே போக வேண்டாம்.கொஞ்சம் பயம்.உண்மையில் நீங்கள் மரணத்தீர்களா என்றே எனக்கு தெளிவாகவில்லை.

நீங்கள் வாங்கித்தந்த பூப்போட்ட சட்டை ஞாபகமிருக்கிறது.பெருநாளன்று சட்டையைப் போட்டுக்கொண்டு ஒழுங்கையை வலம் வந்ததும்,எங்கள் செட்டுகளுக்குள் பெருமையடித்ததும்,கையால் இரண்டு பக்கமும் பிடித்து விரித்தபடி…..

சின்னத்தம்பியை புறாக்கூட்டை வைத்து நக்கலடித்தது ஞாபகமிருக்கிறது.அவனுக்கு முட்டிக் கொண்டிருக்கும் வயிற்றை,அவனுக்கு தேவைப்படும் டெஸ்ட் பார்சலை..

நான் இந்த மரணத்திற்கு தயாராகவில்லை.என் மனம் மரணத்தை எதிர்கொள்ள போதுமானதாக இல்லை.உண்மையில் போதுமானதாக இருந்தாலும் எனக்குத் தெரியவும் இல்லை.

என்னைப்போல மற்றவர்களினுடைய ஞாபகங்கள்.தன்னோட அப்பாட சவப்பெட்டி செய்யக் காசு கொடுத்தார்.படிக்கக் காசு கொடுத்தார்.எத்தனையோ..

பெரியம்மாவைக் கைத்தாங்கலாக பிடித்து வந்து காண்பிக்கிறார்கள்.இதுவரைக்கும் பெரியம்மாவிற்கும்,பெரியப்பாவிற்கும் இடையிலே இல்லாத புது நேசம் விலாசிக்கிறது.கிடைப்பதற்கு அரிதான நேசமது.அவர்கள் முதல் சந்திப்பில் கூட இத்தனை உயிர்ப்பு இருந்திருக்காது.உருகி அழுகிறாள்.மற்றெல்லாரின் உணர்வுகளையும் விட பெரிதான விஸ்தீரணம்.

பெரியம்மா போனபின் நெஞ்சழுத்தி பெரியப்பாவைப் பார்க்கிறேன்.மிகக் கடைசியான ஒன்று.காற்றில் உயிர் அலைப்புற்ற களைப்பில் ஒரு பூனைக்குட்டி உறங்குவது போல இலேசாக தூக்கம்.இலகுவில் வாய்க்காது.கொடுத்துக் கெட்ட கைகள் ஓய்வைத் தேடி விட்டன.ஏதாவது சொல்லியிருக்கலாம்.உம்மாவிடம் அடிக்கடி புலம்புவதைப் போல பெரியப்பா நான் உங்கள உழைக்கிற காலத்துல நல்லாப் பாத்துக்குவன்! இதையாவது,அல்லாவிட்டால் இதை விடப் பெரிய நன்றியாவது.ஒன்றுமே வேண்டாம் .இந்த நிசப்தம் நன்றாயிருக்கிறது.இந்த மயக்கத்திலே கைகள் நடுங்குவதும்,பரிதவிப்பதும் விடுதலையாகிறது.நீங்கள் இருந்த கதிரை,அரிசிக்கடை,சாய்கதிரை எல்லாமே சுயமெனும் சிறையிலிருந்து விடுதலை பெற்று பெரியப்பா கதிரை,பெரியப்பா கடை என முத்திரையாகும்.கதவுகள் திறக்கட்டும்.

டோனியும் அதேபோலவே.

எனக்கு எட்டொன்பது வயதிருக்கும்.எங்கள் வீட்டில் டீவியில்லை. இலங்கை,இந்திய கிரிக்கிட் மெச்.முதல் முதலில் பெரியப்பா வீட்டு டீவியிலேயே டோனியை பார்த்தேன்.டோனியின் ஆரம்ப கட்டமாயிருக்கலாம்.நீளமான முடியுடன் சின்னப்பையன்.தோனி அடிப்பான் என்றீர்கள்.பின்னாட்களில் பெரியப்பாவின் டோனியில் மிகப்பெரிய ஈடுபாடே ஏற்பட்டு விட்டது.கதவுகள் திறக்கட்டும்.

எட்டுக்கெல்லாம் தூக்கி விட்டார்கள்.நடுமுதுகில் வலி குத்தி நிற்கிறது.கத்தரிக்காய் பூத்து விட்டது.பெரியப்பா! இனி உங்கள் பாதங்கள் இந்த வீட்டை ஒருபோதும் தொடப்போவதில்லை.அதன் பிறகு பெரிதாக ஒன்றும் ஞாபகமில்லை.எல்லாம் மறந்து போய்விட்டது.வந்தவர்களுக்கும், ஞாபகங்களை மீட்போருக்குமாக பாய் விரிக்கிறார்கள்.எனக்கு ஒன்னும் வேணாம் என்று உம்மாவிடம் சொல்லிவிட்டு தனியே வீட்டுக்கு வந்து விட்டேன்.காலம் ஒழுகி சிறு பைக்குள் ஸ்தம்பித்து நிற்கிறது.கிணற்றில் ஏறி உட்கார்ந்தபடி கைகளைத் தட்டித்தட்டி ஸ்கூலில் சொல்லித்தந்த பாடலை சத்தமாக பாடத் தோன்றுகிறது.ஸ்கூல் காலமென்றால் பெரியப்பா திரும்பி வந்து விடுவீர்களே.

நான் எதற்காக மண்ணுக்கு வந்தேன்.நீங்கள் ஏன் வந்தீர்கள்.உங்களுக்கு முந்தியவர்கள் ஏன் வந்தார்கள்.எல்லாவற்றிற்கும் வெவ்வேறு பதில் இருந்தாலும் நோக்கம் ஒன்றாகத்தான் இருக்கும்.

இனியும் உம்மாவின் முந்தானைக்குள் சிறைப்பட்டுக் கிடக்கலாமா.இந்த உள்ளடக்கம் போதும்.வெளியே வந்திருந்தால் இன்னும் பேசியிருக்கலாம்.நெல் ஊற வைப்பதை, அரிசி தீட்டுவதை,சாக்குத்தைப்பதை குறைஞ்சது எதிரான அரசியலை.எவ்வளவு இருந்திருக்கிறது.டின்பால் டீ போட்டுக் குடுத்திருக்கலாம்.ஒன்றாக கலந்து சாப்பிட்டு,ஏனம் கழுவி,காலை நீட்டி ஆறிக் கொண்டிருக்கலாம்.இனியாவது அம்பட்டும் கலக்கத்தானே வேணும்..

ஒரு வகையில் நீங்கள் மரணத்தை வெல்பவர்கள்.அ,ஆ எனும் முதல் வரி, நடுவரி,கடைசிவரியை சுலுவாக தொட்டுவிட்டீர்களே.நல்ல மௌத்து என பேசிக்கொள்கிறார்கள்.எனக்கெல்லாம் கழுத்துவரை பயம்.சாவு எப்படி வருமோ.நல்லாச் சிரிப்பேன்.சிலவேளைகளில் அது உள்ளுக்குள்ளே உறைந்து சுருட்டி விடுகிறது.விபத்தால்,தூக்குத்தண்டையால்,விச ஊசியால்,ஒரு முழம் கயிற்றால்,துப்பாக்கியால் கரண்ட் சொக் அடித்து,செய்யாத தப்பிற்காக கழுத்து வெட்டப்பட்டு…யாராயிருந்தாலும் உயிர் முக்கியமில்லையா.அதைவிட வலிக்காத மரணம்.

காதுபோறளவு பேச்சு,கொடி பிடிப்பாங்க,அசட்டு தைரியம்,பெருநாள் கொண்டாட்டம்,கல்யாணம்,சீதனம்,டொக்டர் மாப்பிள்ளை,மாடி வீடு..இவையெல்லாம் கென்சர்,டயபடிக்ஸ் பயத்தில் ஓரத்தில் நிற்கும்.பிறகு மீண்டும் சொத்துக்கள் தலைதூக்க மறுபடியும் முதுமை வந்தழிக்கும்.

ஒவ்வருத்தராக கலைந்து விட்டார்கள்.நேசத்தைக் கொப்பளித்து விளாவிய நினைவுகள்.அவரவர்க்கு அவரவர் வயிறு முக்கியமில்லையா.பெரியம்மா அதிகமான டிசைன் போட்ட புது அபாயாக்களை உம்மாவை எடுத்துக்கொள்ளச் சொல்கிறாள்.இது பச்சப்பிழையல்லவா.பெரியம்மா நல்லது உடுத்திக்கொள்வதைத்தானே நீங்கள் விரும்புவீர்கள்.அவள் கன்னத்தில் அரும்பும் மேகங்கள் கண்ணில் முடியச் சிரிக்கும் போது எப்படியிருக்கும்.அவளை அப்படியே இருக்க விடட்டுமே.சொல்றது கூடுமில்லையா.பழைய நிலைக்கு மாறுவோமே.மெல்ல மெல்ல துக்கங்கள் ஆறிவிட்டாலும் உங்கள் பொருட்டான சுவாலை எரியும்.முன்னயதை விட முன்னில்லாத பிரகாசத்துடன் எங்கள் பிள்ளைகள்,அவர்கள் பிள்ளைகளுக்குள்ளும் எரியும்.

நீங்கள் இருந்தவரை இந்த பூமியின் வாசம் வேறானது.இப்போது இன்னொரு வகையில் மணக்கிறது.நீங்கள் இருந்தவரை,நீங்கள் இல்லாமல். எங்களுக்கு நிகழ்ச்சி நிரல்களில் மாற்றம் செய்யவேண்டியுள்ளது.விதியை கோவிச்சிக்கலாமா.எத்தனை கனவுகளோ அத்தனையும் செக்கனுக்கும் குறைந்த நேரத்தில் முடிந்து போய்விட்டது.

ஏதாவது விசித்திரம் உருவாகியிருக்கலாம்.யார் கண்டார்கள்.உங்கள் மருக்கப்பிள்ளை சொன்னது போல இன்னொரு ஐந்தாண்டு காலம் நீடித்திருக்கலாம்.எல்லாம் கண் குளிரக்கண்டு புதுப்பேரனை மாரிலும் தோளிலுமாகப் போட்டு,நன்றி சொல்லி வயிறு குளிர்ந்து,வாசல் வரை பூரிப்புடன் முழுதும் செய்திருந்தேன் என்ற கொண்டாட்டத்தில் ..

ஆறு வயதிருக்கும்.பெரியப்பா வீட்டு மேசையில் கிடக்கும் கல்குலேட்டர் வெயிலிலே வேலை செய்யுமென்பதால் வெளியே கொண்டு வந்து சூரியனுக்குக் காட்டியபடி அடித்துப் பார்ப்பேன்.நம்பர்கள் தேய்ந்து போயிருந்தாலும் பெரியப்பா கடகடவென்று சரியாகத்தானே அடிப்பீர்கள்.நான் மடச்சி.ஒன்று,இரண்டு என எண்ணிப்பார்த்து முதலாமாண்டு ஸ்கூல் கூட்டல் கணக்கினைச் செய்து பார்ப்பேன்.இப்போது கல்குலேட்டரும் இல்லை.பெரியப்பாவுமில்லை.

ஒவ்வருத்தருக்கும் ஒவ்வொரு பெரியப்பாமார்.ஒன்றுக்கொன்று வித்தியாசம்.சிலருக்கு பெரியப்பாமார்களே இருப்பதில்லை.எனக்கு நீங்கள் பெரியப்பாவாகவேண்டுமென்றே பிறந்திருக்கிறீர்கள்.அது மற்றெல்லாப் பெரியப்பாக்காளிலும் இல்லாத ஒன்று.உயிரிகள் படைக்கப்படாத உலகம் பிறந்த நொடியில் உண்டான அமைதியில் உறைந்தது.இம்ரானின் புதல்வியின் உதடுகள் மனிச குமாரனை ஏந்தியபோது பரவிய புனிதத்தில் கலந்தது.ஏன் இனி நீங்கள் கூட அந்த இடத்தை எட்ட முடியாது.

•••••

Comments are closed.