ஆலமரத்தை வெட்டி ரோஜா நட்டு மகிழ்கின்றோம்… / ந.பெரியசாமி

[ A+ ] /[ A- ]

பிரளயன்

பிரளயன்

பார்வைகள் உண்ணும் புறக்காட்சிகள் அகத்துள் இருக்கும் துயர்களையும் வலிகளையும் கலைந்துபோகச் செய்யக் கூடியதெனும் உண்மையை உணர்ந்து இருந்தபோதும் நாம் இயற்கையின் மீது செலுத்தும் வன்முறை காலாதி காலத்திற்கும் கேடுகளை உற்பத்தி செய்துகொண்டே இருக்கும் என்பதை உணர்த்தியது பிரளயன் இயக்கிய ‘ஜென்ம கடன்’ நாடகம். திருவண்ணாமலை பத்தாயத்தில் ஜூலை-15 மாலை பவா.செல்லதுரை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் திருவண்ணாமலை டி.வி.எஸ் பள்ளி மாணவ மாணவியர்களால் இந்நாடகம் நிகழ்த்தப்பட்டது.

அபிதகுஜலாம்பாள் தன் பேரப்பிள்ளைகளிடம் தன் ஊரைப்பற்றிய பெருமிதங்களைக் கூறிக்கொண்டிருக்க, அது அவர்களின் மனதில் எப்போ பார்ப்போம் என்ற ஆர்வத்தில் இருக்க 25 ஆண்டுக்குப் பின் தன் பூர்விகமான திருவண்ணாமலைக்கு வருகிறாள். அங்கு அவள் காலத்தின் அற்புதங்கள் ஏதுமற்றிருக்க பேரதிர்ச்சிக்கு உள்ளாகிறாள். நிலமையை அறிந்துகொள்ள தன் தோழி கமலாவை சந்திக்கின்றாள். அங்கு நிகழ்ந்த மாற்றங்களைக் கூறியதைக்கேட்டு அவ்வூரின் சூழலைக் காப்பாற்ற அவர்களோடு இணைந்து போராட முடிவு செய்கிறாள் என்பதே கதை. அபிதகுஜலாம்பாள் அங்கிருக்கும் ஒரு சிறு தெய்வத்தின் பெயர் என்பதும், அம்மலையில் மரங்களை நட்டு வளர்த்தவர் ஆஸ்திரேலியாவைச் சார்ந்த அபிதா என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரம்மாவிற்கும் திருமாலுக்கும் இடையே உண்டான பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு தலையையும் (முடியையும்) பாதத்தையும் (அடியையும்) கண்டடையச் சொல்லி சிவபெருமான் அக்னியாக உருமாறி திருவுரு கொண்டது என மக்கள் நம்பும் திருவண்ணாமலையின் சூழல்கேட்டை நாடகம் சித்தரித்தபோதும் அதை எல்லா ஊர்களுக்கும் பொருத்திப்பார்க்கலாம். காலப்போக்கில் எல்லா ஊர்களுமே மாற்றம் அடையத்தான் செய்யும், அம்மாற்றம் அவ்வூரின் தனித்துவத்தை தொலைத்து ஏற்பட்டிருப்பின் அம்மாற்றம் எவ்விதமான கேடுகளையெல்லாம் உருவாக்கும் என்பதை நம் காலத்தில் நாம் கண்கூடாக பார்த்துவருகிறோம். பெரும்பாலும் எல்லா ஊர்களிலும் மாற்றங்கள் அவ்வூரின் தனித்துவத்தை தொலைத்ததாவே இருக்கிறது என்பதை ‘ஜென்ம கடன்’ காட்சிபடுத்துகிறது.


பங்கேற்ற மானவ மாணவியர் தங்களின் பாத்திரங்களை உணர்ந்து வெளிக்காட்டியிருப்பது நாடகத்திற்கு பெரும் பலம். தங்கள் ஊரின் பிரச்சினை என்பது அவர்களுக்கு உணர்வுபூர்வமான பிணைப்பையும் லயிப்பையும் ஏற்படுத்தி இருக்கக்கூடும். ஏணி, கோல், சேலைகள், பிளாஸ்டிக் பொருட்கள் இவையே மலையாகவும், அருவியாகவும், உட்காரும் பலகையாகவும், பல்லக்காகவும் மாறி மாறி பார்வையாளரின் மனதுள் சித்திரங்களை தீட்டிக்கொண்டே இருந்தன. ‘பிளாஸ்டிக் துஷ்டன் நானே’ பாடல் பார்வையாளர்களை நாடகத்தில் ஒன்றச்செய்தது.

‘பேக்’கிங் கலாச்சாரத்திற்கு நாம் தள்ளப்பட்டதால் பிளாஸ்டிக் நொடிக்கு நொடி குப்பைகளாக சேர்ந்தபடியே இருக்கிறது. இக்குப்பை சாம்பலாகாத குப்பை. பொசுங்கி பொசுங்கி சூழலை பொசுக்கி மாசாக்கும் இந்தக்குப்பையின் ஆபத்தை மாணவர்கள் தங்களின் நடிப்பால் உணர்த்தினர். அருவி என்னென்ன காரணிகளால் சிறைபிடிக்கப்படுகிறது என்பதை விளக்கும் நாடக காட்சி நம்மையும் குற்றவாளிகளாக உணரச்செய்தது.

அபித குஜலாம்பாள் பேரக்குழந்தைகளோடு கோயிலைப் பார்க்க வருகிறாள். அங்கிருக்கும் கூட்டத்தை பார்த்து மிரண்டு போகிறாள். பன்னீர் பூச்சியை காட்டச் சொல்லியும் அருவிக்கு போகலாமென்றும் பேரப்பிள்ளைகள் அடம் கொள்ள எல்லாம் காணாமலாகிப்போனதை உணர்ந்து அதிர்வுகொள்கிறாள். அமைதி வழியவேண்டிய சூழல் அமைதியற்று தட்சணைக் குரலாகவும் பிச்சை கேட்போர் குரலாகவும் மாறிப்போனது. சாமியார்கள் குறித்த நாடகக் காட்சிகள் சமகால அரசியல் கோமாளித்தனங்களை அம்பலப்படுத்தின. கோவில்கள் காலத்தின் அடையாளம். அக்காலத்தின் தன்மையோடு அவை பராமரிக்கப்படுதல் வேண்டும். அது குறித்தெல்லாம் கிஞ்சித்தும் பிரக்ஞையற்று சந்தைச் சாவடிகளாக மாற்றி வைத்துள்ளோம். எதுவும் தன் காலத்தியது இல்லாதிருக்க அபிதகுஜலாம்பாள் தன் தோழி கமலா இல்லம் அடைகிறாள்.

கமலாவின் இல்லத்தில் மரத்தை வெட்டி பில்டிங் கட்டி, மலையை வெட்டி பில்டிங் செய்து என பேரப்பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்த அவர்களின் தாத்தா எரிச்சலடைந்து திட்டும் காட்சி நம்மை திட்டுவது போன்றே இருந்தது. குழந்தைகளுக்கு எவ்விதமான விளையாட்டை சொல்லிக் கொடுக்கின்றோமென கவனிப்பை ஏற்படுத்தியது. படைப்பூக்கமிக்க குழந்தைகளின் மனதில் விளையாட்டில் எதை கற்றுத் தருகிறோம் என்பது குறித்த அக்கறையை செலுத்தக்கோரியது அக்காட்சி.

அக்கோவிலின் சூழலைக் காக்க எவ்விதமான போராட்டங்களை அடுத்து எடுக்க வேண்டுமென்ற கலந்துரையாடலில் அங்கிருந்த அபிதா தன் பேரப்பிள்ளைகளை ஊரில் விட்டு வந்து தானும் அப்போராட்டக் குழுவில் கலந்து கொள்கிறேன் எனக்கூறும் இடம் நாம் நம் சமகால போராட்டங்களில் எவ்விதமான பங்களிப்பை செலுத்துகிறோம் என்ற கேள்வியை எழுப்பியது.

சமீபத்தில் கிரிவலப்பாதையை பெரிதுபடுத்தும் நோக்கில் அங்கிருக்கும் மரங்களை வெட்டியும் குளங்களை தூர்க்கும் நடவடிக்கையிலும் அரசு இறங்க, சூழல் மற்றம் சமூக அக்கறையுள்ளோர் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி அதை நிறுத்தி வைத்துள்ளச் இச்சூழலில் அப்போராட்டக்காரர்களை கௌரவப்படுத்தும் வகையிலும், அவர்களின் போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையிலும் இந்நாடகம் இருப்பதாக பார்வையாளர்களால் உணரமுடிந்தது.

Comments are closed.