ஆ.ஜீவானந்தம் கவிதைகள்

[ A+ ] /[ A- ]

images

1.சொல்நாறும் இசை

சர்ப்பத்தின் தடங்கள் பதிந்த ஆட்டுமந்தை

நேற்றைய அமைதிக்கு ஏங்குகிறது.

இன்னும் திறக்கப்படாத

தூக்குவாளிக்குள்ளிருந்து கசிகிறது

கைவிடப்பட்ட பிரண்டை கொடிகளின்

சொல் நாறும் இசை.

வறுமையின் நிறம் பச்சையென பதிக்கப்பட்ட

ஒரு நெடுவாசல் முற்றத்தில்

தயக்கத்துடன் நின்றிருக்கின்றன

வயோதிகனின் தளர்ந்த கால்கள்.

நீரலைந்தேறும் பொட்டல்வெளியில்

ஊண் குழைத்துண்ண காத்திருக்கிறாள்

கொய்யாப் பிஞ்சுகளுடன்

ஒரு சிறுமி.

**

2.நித்யப்ரவாகம்

பழுத்த இலைகள் பழுத்தபடி

உதிரும் இலைகள் மிதந்தபடி

மென்னயமாய் சன்னதம் கொண்டு

சுழித்தோடும் நித்யப்ரவாகம்.

மனநாவெங்கிலும் தாகத்தின் நீலம் பாரித்து

முற்றுறா வெயிலின் கவிதையுடன்

சூன்யத்தின் மென்மையை

முத்தமிட யெத்தனிக்கிறேன் பேருயிர்ப்பே

அருளும் புங்கமர நிழல்விரிப்பில்

முனகும் அத்தெருநாயின் சிநேகித எச்சிலுடன்

இருள் புணரும் சாபங்கள் தீர

எனை நீ பார்க்கவும்

சில நெற்கதிர்கள் முற்றி

மேகங்கள் திரண்டதும்

மெய்யே மெய்யாகவா…

செங்குருதி மேவிய சொற்தீவுகள்

மோனத்தில் கரைய

உச்சிமலை கற்குகை தனிமையில்

சுனைஜீவித கொடிப்பூக்கள் போன்றே

நற்பிராண வெண்நரம்புகள் குளிர குளிர

உன் ஆழ்விழிகள் எனைக்கண்ட தரிசனம்

அறியாதா அவ்வந்தியும்…

நீர்மதிச்செடிகள் கால்சுற்றிக்கிடக்கவும்

கரையோர நாவல்மரம் பெயர்கூவி அணைக்கவுமாய்

மீண்டும் இந்த புதைமணல் உள்ளிருந்து

தேம்பியழும் அழுகுரலே நீ மேகமாய் நீர்க்கக் கடவாய்…

எவ்வுணர்ச்சியமற்றதென தெரிவதாய்

எங்கிருந்தோ எனை நோக்கி ஈர்ப்பதாய்

திசையெல்லாம் தமக்குள்ளே விரிய விரிய

மிதந்தபடி ஒளிர்கின்றன உன் கண்கள்

பொய்யே பொய்யெனவும்

மெய்யே மெய்யெனவும்.

**

3. பசி அதன் உணவு

பசிக்கு பசியை உணவென்று இட்டபின்

தொட்டி பூச்செடிகளின் பாஷை அறிந்த நாயொன்று

கழுத்து சங்கிலி குரல்வளை அழுத்த

காம்பவுண்ட் சுவர் மீது முன்னிருகால்கள் பாவி

எம்பி எம்பி பார்த்தபடி முணுமுணுக்கிறது

பெருந்தவிப்பின் ரகசிய சொல்லொன்றை.

இதோ என் நெஞ்சின் ஈரம் பேரன்பே

உன் செந்நாவால் நக்கிக்கொள்…

இயலாமையால் ஜோடிக்கப்பட்ட ஒரு பூங்கிண்ணத்தை

உன்முன் என்னால் வைக்கமுடியும்…

வெற்று வார்த்தைகள் ஒழுங்கற்று மிதக்கும்

நீர்த்த திரவமன்றி வேறென்ன அதில் நீ காணமுடியும் சொல்…

உயிர்க்கூட்டின் பசும்கிளிகள்

ஜீவரஸம் தேடி ரெக்கையுறிந்தபின்

தம் செவ்வலகில் ஏந்திவருகின்றன

பிரார்த்தனையின் சிறுதான்யம் ஒன்றை

திசைகளை உனக்கே சமர்ப்பித்து

வழிக்கொடிகள் அறுபட்டு

அம்மணமாய் நிற்கிறேன்

பசிக்கு பசியை உணவென்று இட்டபின்.


4. இசை நிறையும் பூக்காடு

தத்துவங்களின் புதைமேடு

ஓவியவொளிச்சிதறல்

அருமலர் கிளர்ச்சி

செவ்வான நல்லூற்று

மழைநின்ற நற்பொழுது

மண்சட்டி நெய்சோறு

பனங்காய் உருண்டோட

மாம்பிஞ்சு கோதல்

அத்திமர கள்

ஆலமர் செல்வி

இப்படியும் ஒரு குரல்

இங்கேயும் ஒரு வானம்

இவை நிறைந்த உன் கூடு

இசை நிறையும் பூக்காடு.

**


5.ஆயிரம் நீர்வீழ்ச்சிகள்

யாருமற்ற நதிக்கரையில்

ஒரு பட்சியுமற்ற மரத்தடியில்

கருநீல சிலையொன்று.

கூர்கொண்டு கடையப்பட்ட

என் தனிமையின் உதிரத்தை

ஒரு கிண்ணத்தில் நிரப்பி படையலிடுகிறேன்

வற்றா துரோகத்தின் தேநீரை

சுயமோகத்தின் பச்சிலை மிதக்க அருந்தியாடுகிறேன்.

பின்வந்தப் பொழுதில்

சிலையாகும் யெத்தனங்கள் தோல்வியடைய

நுண்மணல் அப்பிய பாதங்களை

வாஞ்சையுடன் தடவும் நுரையெடுத்து

ஊதி ஊதி மந்தரித்து

ஆழ்மன கேவலுடன் சபித்தபடி மௌனிக்க

நானாகும் யெத்தனத்தை கைவிடாத அச்சிலையோ

மெதுமெதுவாய் என்னை நெருங்குகிறது.

சொட்டி சொட்டி சிதறும்

மெய்ம்மையின் பாரம் பொறாமல்

சுழன்றாடும் தலையே

சற்றே திடம் கொள்…

ரமணரின் புன்சிரிப்பில் மிதக்கும்

புத்தனின் தாமரை

உனை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது

ஆயிரம் நீர்வீழ்ச்சிகளுடன்.

**

Comments are closed.