இசையும் உறவும் சஞ்சரிக்கிற பிரகார வெளி / ந. ஜயபாஸ்கரன்

[ A+ ] /[ A- ]

download (50)

“மறைந்த கோவில் வெங்கலத் தேரையும், கோட்டைப் பாதாளச் சுரங்க வழிகளையும் பராபரிச் செய்திகளென இவன் கேட்டிருக்கிறான்” என்ற மெளனியின் “மனக்கோட்டை“ வரிகள் மனதில் ஊர்கின்றன, ரவிசுப்பிரமணியனின் கவிதை உலகில் நுழையும் போது. கேள்வி மாத்திரமாக அல்லாமல் காட்சியாகவே, இசையும் இருளும் முயங்கும் பிரகார வெளிகள் விரிந்துகிடக்கின்றன அவர் கவிதைகளில். “பிரகாரம் மறந்த நாயனங்கள் / மூலவர் மீதும் தூசிவலை” என்கிறது அவரது முன் தொகுதிக் கவிதை வரி. காலத்தில் சிதைவுறும் விதானச் சித்திரமும், வாய் பிளக்கும் மெளன யாழியும், அசையும் திரிகளின் விசும்பல் நீலமும், பாதாளச் சுரங்க வழி உறவுகளும், கவிதையைக் காலத்தின் கழிவுக்கும் நிகழுக்கும் இடையே கொண்டு வந்து நிறுத்துகின்றன. இந்த வெளி ரவிசுப்பிரமணியனின் கவிதை வெளி. சில தருணங்களில் இருள் விலகும் வெளி. அப்பொழுது,
“நாதஸ்வரத்தில் மிதந்துவரும் / ரசாளி ராகக் குழைவோடு” உஷை பரிசளிக்கப்படுகிறாள் அவரது கவிதையில்.

“மோகமுள்” ரங்கண்ணாவுக்குப் போல, உலகமே ஒரு இசையின் ஊடும் பாவுமாக இழைந்து ஒலிக்கிறது ரவிக்கு. “குழலின் துளையில் மறையும் சூரியன்” கவிதை முழுவதும் விரவியிருக்கும் குளிர்மை, இசை பற்றிய ஞானம் இல்லாத வாசகனுக்கும் எளிதாகக் கடத்தப்படுகிறது.

“சாரலிலே அசைந்தாடும் ஜீவ ஸ்வரங்கள்
ஏறுநிரல் பாதைகளில் ஊதல் காற்று
இறங்கு நிரல் வழியெங்கும் கணுக்கால் வெள்ளம்
மந்த்ரத்தில் நிற்கையிலே குளிரின் விதிர்ப்பு
குழலின் துளைகளிலே மழைநாள் சூரியனை
மறைத்தும் விடுத்தும் விளையாடும்
பிரெய்லி விரல்கள்”

இயல்பாகத் திரண்டுவரும் இந்தக் கவிதையில் பார்வையற்றவரின் குழலிசை வெள்ளம், சூரியனை மறைத்தும் விடுத்தும் விளையாடியவாறு நாதக்கடலில் கலந்துவிடுகிறது. புலன் வழியிலான இசை அனுபவம், ஒரு புள்ளியில் உயிர் அனுபவமாய் உருமாற்றம் கொள்கிறது. “நெடுமால் ஊதி வருகிற / குழலின் தொளைவாய் நீர் கொண்டு / குளிர முகத்துத் தடவீரே” என்ற ஆண்டாள் கவிதை. இசையைத் தாண்டிய உறவுக்குத் தாவிச் சென்றுவிடுகிறது. இங்கு கவிதை இசைக்குள் நின்று அண்டம் அளாவிய உறவைச் சொல்லி விடுகிறது, எளிய சொற்களில். “விளையாடும் பிரெய்லி விரல்கள்” என்ற படிமம், கவிதைக்கு உன்னதமானதும், கிறக்கத்தையும் வியப்பையும் தாண்டியதும் ஆன ஒரு மாயத்தன்மையைப் பூசிவிடுகிறது.

மாறிவரும் இசைப்பின்னல் போல, மனித உறவின் இழைச் சிடுக்குகளும் ரவியின் கவிதை உலகின் அங்கம் தான். நிலமெங்கும் உருண்டலையும் நெகிழிப்பை ஆகவும், திரும்பிவரும் ஒற்றைச் சொல் ஆகவும் அல்லாடும் உறவை உருவகிப்பவர், இளமையின் களிப்பு நிலை உறவையும் பதிவு செய்யத் தவறுவதில்லை.

“பொறாமை தவிர்த்து
காதலர்களைக் கவனிக்கக்
கற்றுக் கொண்டுவிட்டேன்
லென்சின் கீழே
வீட்டு ஈக்கள் உரசிக்கொள்வதையோ
முத்தமிட்டுக்கொள்வதையோ
அவதானிப்பது போல”

என்ற ஏ.கே. ராமானுஜனின் கவிதை இளமையை விலகியிருந்து பார்க்கும்போது, ரவியின் “இனி நீங்கள் தொடரலாம்”, “இருண்டு ஒளிரும் கணங்கள்” போன்ற கவிதைகள் இளமையின் கட்டுக்கடங்காத திமிறலை விலகியும், இணைந்தும் ரசிக்கின்றன.

“எதிர்பாராத தருணங்களில்
அவர்கள் முத்தமிட்டுப் பிரிகையில்
பூங்கா சில கணங்கள் இருண்டு பின் ஒளிரும்
சரேலென நீங்கள் உங்கள் பருவத்தின் வாசலுக்குச் சென்று திரும்புவீர்கள்”

என்ற “இருண்டு ஒளிரும் தருணம்” கவிதை வரிகள் அவதானிப்பின் மீது பரிவைப் போர்த்துகின்றன. இருண்டு ஒளிர்வதாக அமைவதுதான், தாட்சாயிணிக்குத் தட்சன் சொல்வதாக வரும் கவிதையும். நமக்குத் தெரிய வந்த தொன்மம் மறுதலையாக கட்டமைக்கப்படுகிறது, இந்தக் கவிதையில். தட்சப் பிரஜாபதிக்கும் ருத்திரனுக்கும் இடையே ஆன உறவு, மாமன் – மருமகன் என்ற நிலைக்கு அப்பால், அகங்காரமும் சினமும் பொங்கிவரும் அக்கினிக் குழம்பாகவே சிவ புராணத்தில் பெருகிச் செல்கிறது. “தக்கனது பெருவேள்வி தகர்த்தான்” என்றும் “தக்கனது பெருவேள்வி கெடச் சாடினான்” என்றும் வருகிற திருநாவுக்கரசரின் திருத்தாண்டக வரிகள் வன்மம் நிறைந்த ஒரு உறவையே நம் முன் விரிக்கின்றன. தட்சனுடைய யாகத்தில் சிவனுக்கு இல்லாத அவிர்பாகமும், தாட்சாயணி அடைந்த அவமானமும், அவளை யாக குண்டத்தில் தன்னுடைய தேகத்தை விடுக்கும் அளவு துரத்தி விடுகின்றன. சிவனுடைய சினத்திலிருந்து உற்பவித்த வீரபத்திரன் தட்சனுடைய தலையைத் துண்டித்ததோடு நில்லாமல், தேவர்கள் அனைவரையும் கடுமையாக இம்சிக்கிறான். வன்முறையால் கட்டமைக்கப்பட்ட இந்தத் தொன்மப் பின்னணியை மறுத்து எழுதுகிறது, ரவிசுப்பிரமணியனின் கவிதை. சிவனுடைய குணமுரண்களில் மறைந்திருக்கும் இசைவைத் தாட்சாயணிக்கு மெல்லிய குரலில் தட்சன் உணர்த்துவதாக அமையும் கவிதை, தொன்மத்துக்கு எதிர் திசையில் பயணிக்கிறது. சிவனுடைய விலகலில் இருக்கும் அண்மையும், அண்மையில் இருக்கும் தொலைவும் தட்சனால் உணர்த்தப்படுகிறது. நிலத்திலிருந்து ஆகாயத்தை நேசிப்பவனாக சிவன் தட்சன் முன் எழுகிறான். “முகம் தெரியாத அதிதி ஆனாலும் சுணக்கம் கொள்ளாதே” என்ற அறிவுரை அனைத்துப் பேரிலும், தட்சனுடைய வன்ம உதடுகளிலிருந்தே உதிர்கிறது. தொன்மத்தின் மூலப் படிமம், கவிஞனால் பதிவு உருவப் படிவம் ஆக வேறு வகையில் வார்க்கப்படுகிறது.

“மற்றுமொரு அழுகை” யில் கவிதை ஆகாமல் தடுமாறும் கணம்,
“ஒரு பள்ளிக்கூடம்” கவிதையில் எளிமையாகக் கூடி வந்திருக்கிறது. “இலையளவு இடைவெளி” என்ற தலைப்பே அந்த சிறிய கவிதைக்குக் கூடுதலான பரிமாணத்தைச் சேர்ப்பதாக அமைகிறது.

“முகநூலில் நெடுநாள் நிலைத்தகவல் போடாத திரு. கிருஷ்ணனுக்கு ஒரு பிராது” கவிதை, அதன் முகப்பிலுள்ள நம்மாழ்வாரின் பெரிய திருவந்தாதி வரிகளின் காரணமாக, நவீனத்தையும் தாண்டிய எல்லைக்குச் சென்று விடுகிறது. இறந்த காலத்தால் நெறிப்படுத்தபடும் நிகழ்காலமும், நிகழால் பாதிக்கப்படும் கடந்த காலமும் படைப்புகளின் ஒழுங்கு வரிசையை மாற்றிக்கொண்டே இருப்பதாக டி.எஸ். எலியட் குறிப்பிடுவது நினைவுக்கு வருகிறது. அந்த வகையில் “முகநூலில்”, கவிதை, காலம் தாண்டுதலை இயல்பாக சாதித்திருக்கிறது. அது போலவே கைவிலங்கை மூடியிருக்கும் கச்சேரியில் போர்த்திய துண்டும், ஞாபகநதியில் மிதக்கும் குறைமாச சிசு கலைந்த உதிரக் கவுச்சியும் அவற்றின் எதிர்பாராத எதிர்கொள்ளலில் வாசக மனத்தில் பதிந்துவிடுகின்றன. ”ஒரு வகையில் செப்பிடு வித்தை போல, படித்த சொல்லின் பொருள் ஒன்று கணத்தில் மாயமாகி, அதே சொல்லில் வேறொன்று ஒன்றும் தெரியாதது போல அமர்ந்திருக்கிறது” என்று அபியின் அரூபக் கவிதை குறித்து ரவி எழுதியிருப்பது, அவருடைய உருவப் பிரக்ஞை உள்ள சில கவிதைகளுக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது.

ரவிசுப்பிரமணியனின் ”காலாதீத இடைவெளியில்” கவிதைத் தொகுப்பை முன் வைத்துப் பேசும் போது, ”அதிராத குரலில், ஒரு அடர்ந்த தனிமையில் பயணப்படுகின்றன ரவியின் கவிதைகள்” என்று குறிப்பிடுகிறார் லதா ராமகிருஷ்ணன். அதிராத ரவியின் குரல் இசையின் ஆழத்தை, உறவின் புதிர்த் தன்மையை அளந்து பார்க்கிறது. அவரது அடர்ந்த தனிமை, கசப்பின் மிடறை விழுங்கிய போதிலும், வெறுப்பையோ தன்னிரக்கத்தையோ சுமக்காமல் பயணிக்கிறது.

IMG_0680

••••••••••••

Comments are closed.