இந்த இரவு உரையாடிக்கொண்டிருக்கும்வரை / சிபிச்செல்வன்

[ A+ ] /[ A- ]

images (2)

இந்த இரவு உரையாடிக்கொண்டிருக்கும்வரை


இதோ இந்த இரவைப் பற்றி உரையாடிக்கொண்டிருக்கிறேன்
ஒரு இருளைப் பற்றி எழுதவில்லை
ஒரு கிசுகிசுப்பைப் பற்றி எழுதவில்லை
மன்னிக்க
ஒரு காதலைப் பற்றி உரையாடவில்லை
ஒரு காமத்தைப் பற்றி உரையாடவில்லை
ஒரு திருட்டைப் பற்றி வரையவில்லை
ஒரு ஆந்தையின் அலறலைப் பற்றி இசைக்குறிப்புகளை எழுதவில்லை
ஒரு இரவைப் பற்றி உரையாடும்போது
மௌனமாக எழுதவேண்டும் என ஒரு அகராதியில் இருந்ததைப் பற்றி உரையாடவில்லை
இரண்டு காதுகள் கேட்பதைப் பற்றியோ
நான்கு கண்கள் உளவறிவதைப் பற்றியோ பாடவில்லை

ஆனாலும்
ஒரு இரவைப் பற்றி உரையாடுகிறேன்

அதில் நீல நிற இரவு இல்லை
ஒரு கண்ணீர் துளியில்லை
ஒரு காதும் அந்த விடியலோசையைக் கேட்கவில்லையென
இந்த இரவைப் பற்றி
உரையாடிக்கொண்டிருக்கிறேன்

ஆம்
உரையாடிக்கொண்டிருக்கிறேன்
யாரோடு என நீங்கள் முணுகுவது
இந்த இரவுக்கு மெதுமெதுவாக கேட்கிறது
ஆம்
இரவு இரவோடு உரையாடுவதை எனது மூன்று கண்களால் கேட்டுக்கொண்டிருக்கிறேன்

அதை நீங்கள் பல்லாயிரம் காதுகளால் ரஸித்துக்கொண்டிருக்கிறீர்கள்

கேளுங்கள் கேளுங்கள்
கேட்டுக்கொண்டேயிருங்கள்
இந்த இரவு உரையாடிக்கொண்டிருக்கும்வரை

அதுவரை
இந்த இரவு பச்செனவிடிந்துகொண்டிருக்கும்

••••
••••
01 / 09 / 2017
அதிகாலை 3.09 மணி

உறங்கவில்லையா என கேட்கிறது இந்த இரவு
நானும் அதே கேள்வியை திருப்பிக்கேட்கிறேன்
இன்னும் உறங்கவில்லையா என?
அதிகாலையை நோக்கி நானும் இரவும்
பயணித்துக்கொண்டிருக்கிறோம்
காலையில் நான்கு கண்களும்
அதிகாலை சூர்யோதயத்தின் சிவப்பைப்போல சிவந்திருக்க
அனைவரும் கேட்கிறார்கள்
இன்னும்
உறங்க
வில்லை
யா?
என
அவர்
களுக்
கு
சிவந்த கண்கள் ஓராயிரம் பதில்களை கண்களால் உணர்த்திக்கொண்டேயிருக்க
அவர்கள் காதுகளால் கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்
இன்னும் உறங்கவில்லை

••••
ஒரு பைத்தியத்தின் உளறலைப் போல
பிதற்றிக்கொண்டிருக்கிறது இந்த இரவு
யாருக்கோ ஒரு மெல்லிய விசும்பலைப் போல அது கேட்டுக்கொண்டிருக்கிறது
இன்னும் சிலரின் காதுகளில் ரகஸியமாக ஒரு மௌன மொழி கேட்டுக்கொண்டிருக்கிறது
அது பைத்தியத்தின் மொழியை
நள்ளிரவைப்போல உளறிக்கொண்டிருக்கிறது

•••

Comments are closed.