இரண்டு வெயில் ஒரு இருள் ( கவிதைகள் ) / ஷாஅ

[ A+ ] /[ A- ]

images (9)

இரண்டு வெயில் ஒரு இருள்

கூர்மெளனம்

நீர் வேண்டி

நீர் தேடி

வரும் யானைக்கு என்ன பிடிக்கும்

மத்ததைப் பிடிக்காமல் இருந்தால் சரி

நதையின்

நடுவெழுத்து எகிறி மேல் இத்தனை பதமாய்

இடம் மாறி விழுந்து கிடக்கு. அதுவும் நன்று

நன்றின் இழை இழுத்துப் போகிறது கூடு

வயல் வரப்போரம்

ஒரு கூர்மெளனம் ஈரமாய்க் கசிந்து.

எதிரோரம்

ஈரம் காயட்டுமென

வரட்டி தட்டிய மறைப்பில் இன்றொரு அன்றாடம்

நின்று அசை போடுகிறது

அமர்ந்து அசை போடுகிறது, திடுமென

வால் ஆட்டுகிறது

நிழல் தரும் கொட்டகையின்

உள்ளே

சுரீரென்று வெயில் ஏன் சிலிர்க்கிறது

வேண்டும் ஒரு கண்

அலையா மணலா எதற்கும் ஓய்வில்லை தத்தித் தத்தி

போகிறது

வருகிறது

தூரத்தில் என்ன எண்ணெய்ப் பழுப்பா

அருகில் ஒரு பிடரி

அருகில் ஒரு வண்டி

கழன்று சக்கரம் தனியே விண்ணையும் மண்ணையும்

உருட்டிப் புதைந்திருக்கிறது ஒரு நீள்நொடி

சவாரிக்கு என்றோ அழைத்த குரல்

வண்டிக்குள் மணலறக் குத்துக்காலிட்டு பார்க்கிறது

துளையும் முடிச்சுமற்ற வலை சாய்ந்து நீள்வதை

அந்தப் படகு அல்லது இந்தப்

படகுவரை

சிறு கால்களையும்

கடற்காற்றையும் முதுகில் அமர்த்தி

எகிறி எகிறி மாலையில் குதிரை நடக்கும்போது சரியான தமாஸ்

நட்சத்திரங்களுக்கும் சந்தோஷமா. கைதட்டுகின்றன.

அவ்வோசைக்கு வெளியே

துறைமுக வெளிச்சம் படாத அலைகளின்

கீழே

கீழே

நடுவாந்திர இருளில்

நகரும் கடல் குதிரை

மீன் குட்டிக்கா

திமிங்கிலப் பிள்ளைக்கா

எந்தக் குழந்தைக்குக் காட்டுகிறது வேடிக்கை

கண்ணில் படாத வேடிக்கை கண்ணுக்கு நல்லதா

முல்லாவின் வெயில்

மாட்டுச்சாணம் விழுந்திருக்கும் குன்றொன்று

சரியும் அதளப்

பள்ளம். நிலைகுலையும் அத்தனைக் கரடுமுரடிலும்

அசையாத நம்பிக்கையில்

அசைந்து அசைந்து

வருகிறது யானை மேலே யானே

முன்னால் போகிற நீரை நீர்ஆவியை

முல்லாவின் கழுதையெனவாகித்

துரத்துகிறது வெயில்

யாரென்றறியாப்

பின்னாலிருந்து ஒரு குரல் –

காற்றின் குமிழியில் உன்னைக் கண்டுபிடித்தேன்

ஆமாம், நீ யார் என்கிறது.

திரும்பாமல் யானே

யானுமாகிய மண் தேசத்துக்காரன்

யானை பிளீறிடுகிறது

கேட்டுப் புரிந்துரைக்கும் நல் உள்ளங்களின்

கணம் இதுவெனில்

கொஞ்சம் கண் அயர்ந்து கொள்கிறேனே

இப்படியே

இங்கேயே

Comments are closed.