இரவில் ( சிறுகதை ) : ஜமைக்கா கின்கெய்ட் – தமிழில் : சமயவேல்

[ A+ ] /[ A- ]

ஜமைக்கா கின்கெய்ட்

இரவில், நடுநிசிக்குச் செல்லும் வழியில், இரவு, மிகச்சிறிய மிடறுகளாக வகுக்கப்படாத ஒரு இனிப்புப் பானமாக இருந்தபோது, நடுநிசி, நடுநிசிக்கும் முன்பு இப்போது என்பது அங்கு இல்லாதபோது, அல்லது நடுநிசிக்குப் பின்பு இப்போது, சில இடங்களில் இரவு உருண்டையாக இருந்தபோது. சில இடங்களில் தட்டையாக, மற்றும் சில இடங்களில் ஒரு ஆழத்துளை போல, விளிம்பில் நீலநிறத்தில், உட்புறம் கறுப்பாக, இரவுக்-கழிவுத் துப்புரவாளர்கள் வருகிறார்கள்.

அவர்கள் வரவும் போகவும், ஈரத்தரை மேல் வைக்கோல் காலணிகளுடன் நடந்து கொண்டிருக்கிறார்கள். வைக்கோல் காலனிகளுக்குள் இருக்கும் அவர்களது பாதங்கள் ஒரு கிறுக்குகிற சப்தத்தை எழுப்பின. அவைகள் எதையும் சொல்வதில்லை.

இரவுக்-கழிவுத் துப்புரவாளர்களால் மரங்களில் ஒரு பறவை நடப்பதைப் பார்க்க முடியும். அது ஒரு பறவை இல்லை. அது தனது தோலைக் கழற்றியிருந்த பெண், அவளது ரகசியப் பகைவர்களின் ரத்தத்தைக் குடிக்கப் போய்க் கொண்டிருக்கிறாள். அது ஒரு பெண், மரத்தால் செய்யப்பட்ட ஒரு வீட்டின் ஒரு மூலையில் தனது தோலை விட்டுவிட்டு வந்திருப்பவள். அது ஒரு பெண், அவள் நியாயமானவள் மற்றும் செம்பருத்திகளின் தேனீக்களைப் புகழ்கிறவள். அது ஒரு பெண், அவள், ஒரு நகைச்சுவையாக, தாகமாக இருக்கும்போது ஒரு கழுதையைப் போலக் கனைக்கிறாள்.

அங்கு ஒரு சிள்வண்டு சப்தமிடுகிறது, அங்கு ஒரு தேவாலயத்தின் மணியோசை கேட்கிறது, அங்கு இந்த வீடு கிறீச்சிடும் சப்தம், அந்த வீட்டின் மற்றும் பிற வீடுகளின் கிறீச்சிடல், அவை தரைக்குள் நிலைத்து இருப்பதால் கிறீச்சிடுதல்கள். அங்கு தூரத்திலிருந்து ஒரு வானொலியின் ஒலி—ஒரு மீனவர் மெரெங்க்யூ1 இசையைக் கேட்டுக் கொண்டிருந்தார். அங்கு ஒரு மனிதன் தூக்கத்தில் குறட்டைவிடும் சப்தம்: அங்கு அவனது குறட்டையால் வெறுப்படைந்த பெண் கத்தும் சப்தம். அங்கே அந்த ஆள் அந்தப் பெண்ணைக் கத்தியால் குத்தும் சப்தம்,

தரையை மோதும் அவளது ரத்தத்தின் சப்தம், பாதுகாவலர் திரு.ஸ்ட்ராஃபி அவளது உடலை வெளியே எடுத்துச் செல்லும் சப்தம். அங்கே இறப்பிலிருந்து மீண்ட அவளது ஆவி, குறட்டை விடும் வழக்கமுள்ள ஆளைப் பார்த்துக் கொண்டிருக்கும் சப்தம்; அவனுக்கு எப்போதும் ஒரு காய்ச்சல் அடித்துக்கொண்டே இருந்தது. அங்கு ஒரு பெண் கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் சப்தம்; அங்கு வெள்ளைத் தாளில் அவளது பேனா முள் எழுதும் சப்தம்; அங்கு மண்ணெண்ணெய் விளக்கு மங்கிக் கொண்டிருக்கும் சப்தம்; அங்கு அவளது தலை வலித்துக் கொண்டிருக்கும் சப்தம்.

மழை விழுந்து கொண்டிருக்கிறது தகரக் கூரைகளில், மரங்களில் உள்ள இலைகளில், முற்றத்தில் இருந்த கற்களின் மேல், மணல் மேல், தரை மேல். இரவு சில இடங்களில் ஈரமாகவும் சில இடங்களில் வெதுவெதுப்பாகவும் இருக்கிறது.

அங்கு திரு.ஹிஸார்டு இருக்கிறார், முழுவதும் பூத்திருக்கும் ஒரு செடார் மரத்தின் அடியில் நின்றுகொண்டு, அந்த நேர்த்தியான வெள்ளை சூட்டை அணிந்திருந்தார், அதற்குள் அவர் புதைக்கப்பட்ட நாளில் இருந்த அதே புத்தம் புதியதாக அது இருந்தது. வெள்ளை சூட் இங்கிலாந்திருந்து பழுப்பு நிற பொட்டலத்தில் வந்தது: “ஏற்பு: திரு.ஜான் ஹிஸார்டு,” மற்றும் இத்யாதி இத்யாதி. திரு.ஹிஸார்டு மரத்துக்குக் கீழே நிற்கிறார், அவரது நேர்த்தியான சூட்டை அணிந்துகொண்டு மற்றும் அவரது கையில், முழுவதும் ரம் நிரம்பிய ஒரு கோப்பையைப் பிடித்தவாறு—அவர் இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அவர் கையில் பிடித்திருந்த, முழுக்க ரம் நிரம்பிய அதே கோப்பை—மற்றும் அவர் வாழ்ந்து வந்த வீட்டைப் பார்த்துக் கொண்டு.

இப்பொழுது வீட்டில் வசிக்கும் மனிதர்கள், திரு.ஹிஸார்டு அவரது அருமையான சூட்டை அணிந்து கொண்டு மரத்துக்கு அடியில் நிற்பதை அவர்கள் பார்க்கும் போது, பின்வாசல் வழியே நடக்கிறார்கள். திரு.ஹிஸார்டு அவரது அக்கார்டியனைத் தேடுகிறார்; அவரது பாதத்தை அவர் தாளமிட்டுத் தட்டிக் கொண்டே இருக்கும் சீரை வைத்து உங்களால் கூறமுடியும்.

௦௦௦௦௦௦

எனது கனவில் ஒரு குழந்தை பிறந்து கொண்டிருப்பதை நான் கேட்க முடிகிறது. நான் இதன் முகத்தைப் பார்க்க முடிகிறது, ஒரு கூர்ந்த குட்டி முகம்—மிக அருமை. நான் இதன் கைகளைப் பார்க்க முடிகிறது—மிக அருமை, மீண்டும். இதன் கண்கள் மூடியிருக்கின்றன. இது சுவாசிக்கிறது, குட்டிக் குழந்தை. இது சுவாசிக்கிறது. இது ஆட்டுக்குட்டி போலக் கத்துகிறது, குட்டிக் குழந்தை. இது ஆட்டுக்குட்டி போலக் கத்துகிறது. குழந்தையும் நானும் இப்பொழுது புல்வெளியை நோக்கி நடந்து கொண்டிருக்கிறோம். குழந்தை அதன் மென்மையான இளஞ்சிவப்பு உதடுகளால் பசும்புல்லைச் சாப்பிடுகிறது. அம்மா எனது தோள்களைத் தொட்டு என்னை உலுக்குகிறார். எனது அம்மா கூறுகிறார், “ குட்டிப் பெண்ணே, குட்டிப் பெண்ணே.” நான் எனது அம்மாவிடம் கூறுகிறேன், “ஆனால் இது இன்னும் இரவாக இருக்கிறதே.” அம்மா கூறுகிறார், “ ஆமாம், ஆனால் நீ உனது படுக்கையை மீண்டும் நனைத்துவிட்டாய்.” மற்றும் எனது அம்மா, இன்னும் இளமையாக இருப்பவர், இன்னும் அழகாக, மற்றும் இன்னும் இளஞ்சிவப்பு உதடுகளுடன் எனது ஈரமான நைட்கவுனைக் கழற்றுகிறார், படுக்கையிலிருந்து ஈரமான விரிப்பை அகற்றுகிறார். எனது அம்மாவால் எலலாப் பொருள்களையும் மாற்ற முடியும். எனது கனவில் நான் இரவில் இருக்கிறேன்.

“மலைகளில் இருப்பது என்ன வெளிச்சங்கள்?”

“மலைகளில் உள்ள வெளிச்சங்களா? ஓ, அது ஜப்லெஸ்ஸி2.”

“ஒரு ஜப்லெஸ்ஸி! ஆனால் ஏன்? ஜப்லெஸ்ஸி என்பது என்ன?”

“எதுவாகவும் மாற முடிகிற ஒரு ஆள் அது. ஆனால் அவர்களது கண்கள் காரணமாக அவர்கள் உண்மையில்லை என்பதை நீ கூறிவிட முடியும். அவர்களது கண்கள் விளக்குகள் போல ஒளிரும், உன்னால் பார்க்க முடியாதவாறு மிகப் பிரகாசமாக இருக்கும். அதைக் கொண்டு தான் அது ஒரு ஜப்லெஸ்ஸி என்று உன்னால் கூற முடியும். அவைகளுக்கு மலைகளில் ஏறவும் ஊர்சுற்றித் திரியவும் பிடிக்கும். ஒரு அழகான பெண்ணைப் பார்க்கும்போது நன்கு கவனமாக இருக்க வேண்டும். ஒரு ஜப்லெஸ்ஸி எப்போதும் ஒரு அழகான பெண்ணைப் போல இருக்க முயற்சிக்கிறது.”

௦௦௦௦௦௦

ஒருவரும் எப்போதும் என்னிடம் சொல்லியதில்லை, “எனது அப்பா, ஒரு இரவுக்-கழிவுத் துப்பரவாளர், மிக அருமையானவர் மற்றும் மிக அன்பானவர். அவர் ஒரு நாயைக் கடக்கும்போது அதற்கு ஒரு உதையை அல்ல, மெல்லத் தட்டிக் கொடுக்கிறார். அவருக்கு ஒரு மீனின் எல்லாப் பாகங்களும் பிடிக்கும் ஆனால் தலையை விசேஷமாகப் பிடிக்கும். அவர் மிக ஒழுங்காக சர்ச்சுக்குச் செல்கிறார் மற்றும் அவர், அவருக்குப் பிடித்தமான பாட்டான “ஒரு பலமான கோட்டை எங்கள் பரமபிதா”வை ஊழியக்காரர் அறிவிக்கும்போது எப்போதும் சந்தோஷமடைவார். இளஞ்சிவப்பு சட்டைகளையும் இளஞ்சிவப்பு கால்சராய்களையும் அணிவதற்கு அவர் விரும்புவார் ஆனால் அந்த நிறம் ஒரு ஆணுக்குரியதல்ல என்பதுவும் அவருக்குத் தெரியும், ஆகையால் பதிலாக, அவருக்குப் பிடிக்கவே பிடிக்காத அடர்நீலத்தையும் பழுப்பையும் அணிகிறார். அவர் எனது அம்மாவை ஒரு நீண்ட காலத்திற்கு முன்பு இங்கே பேருந்து என்ற மாறுவேடத்தில் அலைவதில் சந்தித்தார், இன்னும் அவர் விசிலடிப்பதை விரும்புகிறார்.

ஒருமுறை ஒரு பேருந்தைப் பிடிக்க ஓடுகையில் அவர் கீழே விழுந்து அவரது மணிக்கட்டு உடைந்து, ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்க வேண்டியாகியது. இது அவரை மிகப் பரிதாபகரமாக ஆக்கியது, ஆனால் அவரது வெள்ளைக் கட்டில் அருகில் நானும் அம்மாவும் மஞ்சள் ரோஜாக்களின் கொத்தோடு நின்று குனிந்து அவரைப் பார்த்துப் புன்னகைப்பதைக் கண்ட போது அவர் ஒரு சிறிது உற்சாகம் அடைந்தார். பிறகு அவர் கூறினார், “ ஓ, என்னோட, ஓ, என்னோட.” அவர், எனது அப்பா, இரவுக்-கழிவுத் துப்புரவாளர். ஒரு பெரிய சீமைநூக்கு மரத்தடியில் ஒரு பெரிய கல்லின் மீது உட்கார்ந்து, சோற்றாலும் ரத்தப் பொரியலாலும் நிரப்பப்பட்ட மிருகங்களின் குடல்களைச் சாப்பிட்டுக் கொண்டும் ஜிஞ்சர் பீரை அருந்திக் கொண்டும் குழந்தைகள் விளையாட்டுக்-கிரிக்கட் ஆடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பதையே அவர் மிக அதிகம் விரும்புகிறார்.

அவர் என்னிடம் இதைப் பல முறை கூறியிருக்கிறார்: “என் அன்பே நான் மிக அதிகம் செய்ய விரும்புவது,” மேலும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருகிறார். அவர் எப்பொழுதும் தாவரவியல் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருகிறார் மேலும் ரப்பர் தோட்டங்களையும் ரப்பர் மரங்களையும் பற்றி மிக அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்; ஆனால் இது நான் விளக்க முடியாத ஒரு ஆர்வம், ஏனெனில் அவர் எப்போதும் பார்த்திருக்கிற ஒரே ஒரு ரப்பர் மரம், தாவரவியல் பூங்காவில் விசேஷமாக வளர்க்கப்பட்ட ஒன்று தான். எனது பள்ளிக் காலணிகள் வசதியாகவும் பொருத்தமாகவும் இருக்கிறதா என அவர் பார்த்துக் கொள்கிறார். இரவுக்-கழிவு மனிதரான எனது அப்பாவை நான் நேசிக்கிறேன். இரவுக்-கழிவு மனிதரான எனது அப்பாவை எனது அம்மா நேசிக்கிறார்.

ஒவ்வொருவரும் அவரை நேசிக்கிறார்கள் அவரைப் பார்க்கும் போதெல்லாம் கையசைக்கிறார்கள். அவர் மிகவும் அழகு, தெரிந்து கொள்ளுங்கள், பெண்கள் அவரை இரண்டு முறை பார்ப்பதை நான் கண்டிருக்கிறேன். விசேஷ தினங்களில் இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட ஒரு பழுப்பு மென்கம்பளித் தொப்பியை அணிகிறார். மேலும் ஒரு பழுப்பு தோல் சூவையும் அணிகிறார் அதுவும் இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்டது. சாதாரண நாட்களில் வெறும் தலையுடன் செல்கிறார். அவர் என்னை அழைக்கும்போது நான் கூறுகிறேன், ‘ஆமாம், அய்யா.’ எனது அம்மாவின் பிறந்த நாளில் அவர் எப்பொழுதுமே ஒரு புது உடைக்கான ஏதாவது அருமையான துணியை வாங்கிப் பரிசளிக்கிறார். அவர் எங்களுக்கு மகிழ்ச்சி உண்டாக்குகிறார், எனது அப்பா, இரவுக்-கழிவுத் துப்புரவாளர், மேலும் அவர் வாசித்திருக்கும் சர்க்கஸ் என்னும் ஏதோ ஒன்றுக்கு ஒருநாள் எங்களை அழைத்துச் செல்வதாக அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார்.”

௦௦௦௦௦௦

இரவில் பூக்கள் கூம்பிக் கனத்துப் போகின்றன. செம்பருத்திப் பூக்கள், தீக்கொன்றைப் பூக்கள், பட்டன் பூக்கள், வானவில் பூக்கள், வெண்தலைப் புதர்ப் பூக்கள், லில்லிகள், கத்தாழைப்புதர்ப் பூக்கள், ஆமை இலந்தைப்புதர் மேல் உள்ள பூக்கள் முள்ளு சீத்தாமரத்தில் இருக்கும் பூக்கள், சீத்தாப்பழ மரம் மேல் இருக்கும் பூக்கள், மாமரத்தின் மேல் இருக்கும் பூக்கள், கொய்யா மரத்தின் மேல் இருக்கும் பூக்கள், செடார் மரத்தின் மேல் இருக்கும் பூக்கள், அழுகிய குதிங்கால் மரம் மேல் இருக்கும் பூக்கள், டம்ப் மரப் பூக்கள், பப்பாளி மரப் பூக்கள், எங்கெங்கும் கூம்பியும் கனத்தும் போன பூக்கள் வெறுத்துவிட்டன.

எவரோ ஒருவர், ஒரு கூடை செய்து கொண்டிருக்கிறார், எவரோ ஒருவர் செய்து கொண்டிருக்கிறார் ஒரு பெண் ஒரு உடை அல்லது ஒரு பையன் ஒரு சட்டை, எவரோ ஒருவர் அவளது கணவருக்கு நாளைக்கு கரும்பு வயலுக்கு எடுத்துச் செல்வதற்காக மரவள்ளிக்கிழங்கு சூப் செய்து கொண்டிருக்கிறார், எவரோ ஒருவர் அவரது மனைவிக்கு ஒரு அழகிய சீமைத்தேக்குப் பெட்டி செய்கிறார், எவரோ ஒருவர் ஒரு மூடிய கதவுக்கு வெளிப்புறம் ஒரு நிறமற்ற பொடியைத் தூவிக் கொண்டிருக்கிறார் எவரோ ஒருவருடைய குழந்தை இறந்து பிறக்குபடியாக, எவரோ ஒருவர் பிரார்த்தனை செய்கிறார் வெளிநாட்டில் செழிப்பாக வாழும் கெட்ட குழந்தை நல்லதாக மாறும் என்று மேலும் புதிய துணிகள் நிரம்பிய ஒரு மூட்டையை அனுப்புகிறார், எவரோ ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கிறார்.

௦௦௦

இப்பொழுது நான் ஒரு இளம்பெண், ஆனால் ஒருநாள் நான் ஒரு பெண்ணையே திருமணம் செய்வேன்—முட்புதர் போல் அடர்ந்த முடியும் பழுப்பு நிறக் கண்களும் கொண்ட ஒரு சிவப்புத்-தோல் பெண், மிகப்பெரிய ஸ்கர்ட்களை, அவற்றுக்குள் எனது தலையை எளிதாகப் புதைக்க முடியும், அணிபவள் அவள்.இந்தப் பெண்ணை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புவேன் மேலும் கடலுக்கு அருகில் உள்ள ஒரு மண் குடிசையில் அவளோடு வாழ்வேன். மண் குடிசைக்குள் இரண்டு நாற்காலிகள், ஒரு மேஜை, மண்ணெண்ணெய்யில் எரியும் ஒரு தீபம், ஒரு மருந்துப் பெட்டி, ஒரு பானை, ஒரு படுக்கை, இரண்டு தலையணைகள், இரண்டு விரிப்புகள், ஒரு முகம்பார்க்கும் கண்ணாடி, இரண்டு சாஸர்கள், இரண்டு சாப்பாட்டுத் தட்டுகள், இரண்டு முட்கரண்டிகள், இரண்டு குடி-நீர்த் தம்ளர்கள், ஒரு சீனக்களிமண் பானை, இரண்டு தூண்டில்கள், எங்கள் தலைகள் மேல் சுடும் சூரியனை மறைக்கும் இரண்டு வைக்கோல் தொப்பிகள், நாங்கள் மிகக் குறைவாகப் பயன்படுத்தும் பொருட்களை வைப்பதற்காக இரண்டு டிரங்குப்பெட்டிகள், ஒரு கூடை, வெற்றுத் தாள்கள் கொண்ட ஒரு நோட்டுப்புத்தகம், பன்னிரண்டு வெவ்வேறு நிற மெழுகுப் பென்சில்கள் நிரம்பிய ஒரு பெட்டி, ஒரு பிரவுன் காகிதத் துண்டில் சுற்றப்பட்ட ஒரு ரொட்டி, ஒரு நிலக்கரிப் பானை, ஒரு துறைமுகத் தளத்தில் நிற்கும் இரண்டு பெண்களின் படம் ஒன்று, அதே இரண்டு பெண்கள் தழுவிக் கொள்ளும் ஒரு படம், அதே இரண்டு பெண்கள் குட்பை சொல்லிக் கையசைக்கும் ஒரு படம், குச்சிகள் நிரம்பிய ஒரு தீப்பெட்டி. ஒவ்வொரு நாளும் இந்த சிவப்புத்-தோல் பெண்ணும் நானும் காலை உணவுக்கு ரொட்டியும் பாலும் சாப்பிடுவோம், புதர்களில் ஒளிந்து கொண்டு எங்களுக்குப் பிடிக்காத ஆட்கள் மேல் பசுஞ் சாணிக் கட்டிகளை எறிவோம், தென்னை மரங்களில் ஏறி தேங்காய்களைப் பறிப்போம், நாங்கள் பறித்த தேங்காய்களின் நீரைக் குடித்து தேங்காயைத் தின்போம், கடலில் கற்களை எறிவோம், ஜான் காளை முகமூடிகளை அணிந்து கொண்டு பள்ளியிலிருந்து வீடு திரும்பும் பாதுகாப்பற்ற குழந்தைகளைப் பயமுறுத்துவோம், மீன் பிடிக்கப் போய் எங்களுக்குப் பிடித்தமான நான்கே நான்கு மீன்களை மட்டும் இரவு உணவுக்கு வறுப்பதற்காக பிடித்து வருவோம், இரவு உணவில் வறுத்த மீனுடன் சேர்த்து உண்பதற்காக பச்சை அத்திப்பழங்களைத் திருடுவோம். ஒவ்வொரு நாளும் நாங்கள் இதைச் செய்வோம்.

ஒவ்வொரு இரவும் இந்தப் பெண்ணுக்காக நான் ஒரு பாடலைப் பாடுவேன்; சொற்களை எனக்குத் தெரியாது இன்னும், ஆனால் மெட்டு இருக்கிறது என் தலைக்குள். நான் மணக்க விரும்பும் இந்தப் பெண் பல விஷயங்களை அறிவாள், ஆனால் என்னை அழச் செய்வதற்கு ஒருபோதும் கனவு காணாத விஷயங்களைப் பற்றி மட்டும் எனக்குக் கூறுவாள்; மேலும் ஒவ்வொரு இரவும், மேலும் மேலும் என்னிடம் எதையாவது கூறுவாள் அது தொடங்குகிறது, “நீ பிறப்பதற்கு முன்னால்.” இதைப் போன்ற ஒரு பெண்ணையே நான் மணந்து கொள்வேன், மேலும் ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு இரவும் நான் முழுவதுமாக மகிழ்ச்சியாய் இருப்பேன்.

௦௦௦௦௦௦

குறிப்புகள்:

Merengue music…19ம் நூற்றாண்டின் மத்தியில் டொமினிகன் குடியரசில் தோன்றிய இசை லத்தீன் அமெரிக்க இசையாக மாறியது. அமெரிக்காவுக்குப் பரவி இன்று உலகம் முழுவதும் தெரிந்த பிரபல இசையாக இருக்கிறது.

Jablessee…கரீபிய நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஒரு பெண் பேய். அழகிய பெண் வடிவில் வரும் இதன் பக்கத்தில் செல்பவர்கள் இதன் கால்களில் பிளவுபட்ட குளம்புகளைக் காண முடியும். ஆனால் அதற்குள் அவர்கள் சிக்கிவிடுவார்கள்.
. . .

Comments are closed.