இறந்த நாய்களின் இறக்காத மனம்…. ( ‘தி க்யுரியஸ் இன்சிடன்ட் ஆஃப் தி டாக் இன் தி நைட் டைம்’ ) ( மார்க் ஹேடன் ) -நிஜந்தன்

[ A+ ] /[ A- ]

download (88)

பக்கத்து வீட்டு நாய் ஒன்றைக் கொன்றது யார் என்ற புலனாய்வு செய்பவனாக அறிமுகம் ஆகிறான் கிறிஸ்டோஃபர் என்ற 15 வயது கதை சொல்லி. ஒரு துப்பறியும் நாவலை எழுதிக்கொண்டிருப்பதாகவும் அவன் பிரகடனம் செய்துகொள்கிறான். ஷெர்லாக் ஹோம்ஸ் போல தானும் ஒரு துப்பறிவாளன் என்று நினைத்துக்கொள்ளும் அவனுடைய பார்வையில், உணர்வுகளின் ஓட்டத்தில் கதை ஓடுகிறது. அவன் ஆடிசம் அல்லது ஆஸ்பெர்ஜர் பாதிப்பு அடைந்தவன் என்று விளக்கி பல மதிப்புரைகள் வந்தன. அது போன்ற குறைபாடு கொண்டவனைப் பற்றிய நாவல் அல்ல இது என்று நாவலாசிரியர் மார்க் ஹேடன் பல முறை மறுத்திருக்கிறார்.

நரம்பியல் குறைபாடு, உளவியல் குறைபாடு வெவ்வேறு என்று மருத்துவம் கூறினாலும் இவற்றின் தாக்கங்கள் பல சமயங்களில் பகுத்து அறியாதபடி ஒன்றாக இருந்துவிடுகின்றன. நரம்பியல், உளவியலைத் தாக்குகிறது. உளவியல், நரம்பியல் தாக்கமாக மாறிவிடுகிறது. நரம்பியலும், உளவியிலும் கலந்திருக்கும் ஒரு பாத்திரம் ஒரு படைப்பை படைப்பதாகச் சொல்லும்போது அதன் உள்ளீடான சிக்கல்கள் கட்டுடைத்தலை சுவாரஸ்யம் ஆக்குகின்றன. பேச இயலாத, உணர்வுகளைப் பல்வேறு தளங்களில் வெளிப்படுத்த விழையும் மூளை வளர்ச்சியின்மை, உளவியல் சிக்கல் போன்ற அம்சங்கள் அனைத்தும் ஏதோ ஒன்றின் இல்லாமை, இருப்பின் மாற்று போன்ற விருப்பச் சிக்கல்களிலேயே பின்னிக்கொண்டுவிடுகின்றன. மறுக்கப்பட்டது போன்ற வெற்றிடத்தில் காயடிக்கப்பட்டது போன்ற வெறுமையில் தன் (லிங்க) ஆற்றல் மையம் வேறிடத்தில் சென்றுவிட்டதோ என்ற எச்சரிக்கையில், விலகலில் யாரிடமும் ஒட்டாமல் இருந்துவிடுதல் கிறிஸ்டோஃபருக்கு சாத்தியம் ஆகிறது.

யாரிடமும் இசைந்து செல்லாமல் தனி ஆளுமையாக நாவல் முழுவதும் உலவுகிறான் அவன். ஓர் ஆளுமையும், ஆளுகையும் கண்ணாடி பிம்பம் மூலம், பிம்பமாக வடிவாகின்றன என்ற சித்தாந்தத்தை முன் வைத்தார் ழாக் லகான். கண்ணாடியின் பிம்பமும், அதைத் தன் பிம்பமாக உணர்ந்துகொள்ளும் ‘உண்மை’ பிம்பமும் முரண்படும்போது உடல்களின் விலகலும், மூளைப் பிம்பங்களின் சர்ச்சையும் ஏற்பட்டுவிடுகிறது. எதனோடும், யாருடனும் இயைந்துபோகாத ஒரு பிம்பமாக தன்னையும் தன் மூளையையும் மறுவரையறைப் படுத்திக்கொண்டுவிடுகிறான் கிறிஸ்டோஃபர்.

பேசவும் கோர்வையாகச் சிந்திக்கவும் முடிகின்ற மனிதன் முழு மனிதன் என்ற தோற்றத்திற்கு எதிராகக் குறைபாடு கொண்டவன் போன்ற பாத்திரமாக இருக்கிறான் கிறிஸ்டோஃபர். அவனைச் சுற்றி இருக்கும் அம்சங்கள் உடலின் பல்வேறு பாகங்களாக மாறிவிடுகின்றன.

தன் பக்கத்து வீட்டுப் பெண் திருமதி ஷியர்ஸ் வளர்த்து வந்த வெலிங்டன் என்ற நாய் கொல்லப்பட்டது எப்படி, அதைக் கொன்றது யார் என்று கிறிஸ்டோஃபர் தேடலில் இறங்குகிறான். ஒரு நெருக்கமான உயிராக நினைத்துக்கொண்டிருந்த நாய் கொல்லப்பட்டதன் மூலம் உயிர் வாழ்தலின் ஆபத்தையும், அதற்குக் காரணமானவர்கள் கண்டறியப்படாமல் போவதன் அவலத்தையும் உணர்ந்தவனாக கிறிஸ்டோஃபர் ஆகிவிடுகிறான். கொல்லப்பட்ட நாயின் அருகில் இருக்கும்போது திருமதி ஷியர்ஸ் கொடுக்கும் புகாரின்படி காவல்துறை வருகிறது. காவலரை அடித்து அவன் காவல் துறையில் மாட்டிக்கொள்கிறான். அவனை அவனுடைய தந்தை மீட்டுக்கொண்டு வருகிறான்.

மொழி ரீதியான அந்நியம் கொண்டவனிடம்கூட அதிகாரப் பிரதிநிதி, சட்டத்தின் வரைமுறைகளோடுதான் அணுகுவார் என்பதன் மூலம் மொழியும் உணர்வுகளும் தொடர்ந்து அதிகாரத்தால் சீரமைக்கப்படுவதை அறிந்துகொள்ளலாம். காவல்துறையிடம் மீண்டும் கிறிஸ்டோஃபர் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று அவனுடைய தந்தை அதிகாரத்தின் பிரதிநிதியாக தொடர்ந்து மிரட்டுகிறான். வீட்டில் இருக்கும் ஒரு அரசாங்கமாக தந்தை மாறிவிடுகிறான்.

கிறிஸ்டோஃபரின் தாய் ஜூடி எப்போதோ இறந்துபோய்விட்டாள் என்று அவனுடைய தந்தை எட் கூறிவிட்டிருக்கிறான். தாய் இறந்துவிட்டாள் என்று தந்தை சொல்வது பொய் என்று பிறகு அவனுக்குத் தெரிகிறது. அவனுடைய தாய் பக்கத்து வீட்டு ஆண் ஷியர்சுடன் தொடர்பில் இருந்தாள் என்று அவனுக்குத் தெரியவருகிறது. அவள் ஓடிப்போன பின்னால் அவள், தன் தந்தை எட்-டுக்கு எழுதிய கடிதங்கள் அவனுக்குக் கிடைக்கின்றன. ஜூடி இறந்துபோனதாகச் சொன்னது தவறு என்று எட் தன் மகனிடம் ஒப்புக்கொள்கிறான். பக்கத்து வீட்டு நாயைக் கொன்றதும் தான்தான் என்றும் அவன் கூறிவிடுகிறான்.

தன் தந்தையால் தனக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சி தன் தாயைத் தேடித் தனியாக தன் செல்லப் பிராணி டோபி என்ற எலியுடன் அவன் நீண்ட ரயில் பயணம் மேற்கொள்கிறான். தாய் இறந்துபோனதாக தந்தை கூறியதை நம்பி தாய் என்ற பிம்பம் மறுக்கப்பட்டதின் குறைபாட்டில் மருகிப் போகிறான் கிறிஸ்டோஃபர். தாயின் தேடலில் அவன் போகிறான். தாய் என்ற பிம்பம் இருந்தால்தான் தந்தை என்ற பிம்பம் முழுமை அடையும். தாய், தந்தை, தான் என்ற முக்கோணம்தான் வாழ்வின் இருப்பை உறுதிப் படுத்துகிறது.

அதனால் தாய் இல்லாதது அவனுக்கு வாழ்வே இல்லாதது போல் ஆகிவிடுகிறது. தாய் இருந்தாலும் இல்லாதது போல் ஆக்கும்போதுதான் ஒரு சிறுவனக்கு தாய் பற்றிய தேடலைச் சாத்தியம் ஆக்குகிறது. தாயைத் தேடித் தேடித்தான் ஆண்கள் தங்கள் உடல் பயணங்களைத் தொடங்குகிறார்கள். அதனால்தான் கிறிஸ்டோஃபரும் தன் நீண்ட ரயில் பயணத்தைத் தொடங்கிவிடுகிறான். அப்போது அவன் பல்வேறு இடர்களை எதிர்கொள்கிறான். தனியாகப் பயணம் போகின்றவனை, தந்தையின் புகாரின் பேரில் காவல்துறை தேடுகிறது.

அவன் வாழ்வைத் தொடரும் எண்ணத்தில் கழிவறையிலும், பெட்டிகளுக்கு இடையிலும் மறைந்து பயணிக்கிறான். ஒரு வாழ்வில் தாயைத் தேடிக் கண்டடைவது அத்தனை சுலபம் ஆகிவிடாது என்பதை இந்தப் பயணம் காட்டுகிறது. தாயை, தாயின் வடிவம் போன்ற குறியீட்டுப் பெண்ணைத் தேடுவதற்கு ஒரு வாழ்க்கையே கழிந்துவிடுகிறது பலருக்கு. கிறிஸ்டோஃபருக்கு ஒரு ரயில் பயணம் மட்டுமே முழுமை ஆகிறது. தன் தாயை அடைந்த பின் அவனை, தாயோடு வாழுகின்ற ஆண் ஷியர்ஸ் வெறுப்பதை உணர்கிறான். தாயைக் கண்டடைந்த பின்னும் அவனை இந்த முக்கோணம்தான் துரத்துகிறது. தாயுடன் இருக்கும் ஆண் இவனை வெறுக்கிறான்.

மாற்றான் பிள்ளை என்ற கோணம் பதிப்பிக்கப்பட்டாலும், தன் அடக்கப்பட்ட பாலியல் உணர்வுக்குப் போட்டியாக வரும் மற்றொரு பிம்பம் என்ற வகையிலேயே இது பதிவாகிவிடுகிறது. லிங்க பிம்பம் எங்காவது ஓரிடத்தில் மையம் கொள்ள வேண்டும். மையம் கொள்ளாமல் போகிற அவலம் மொழியையே மறுத்துவிடுகிறது. ஒரு மொழி மலரும்போது மற்றொரு ஆபத்து வந்து மொழியைச் சிதைக்கத் துணிந்துவிடுகிறது. உயர்நிலை கணிதத் தேர்வு எழுதுவதற்காக அவன் தன் தாயுடன் தன் ஊருக்கே வருகிறான். அவனுடைய செல்லப்பிராணி எலி செத்துப் போகிறது. அவனுக்கு ஒரு நாயைப் பரிசளிக்கிறான் அவனுடைய தந்தை எட். அவனுடைய தேர்வுகளிலும் அவன் தேறி ஓர் அறிவியலறிஞர் ஆக வேண்டும் என்று நம்பிக்கை அடைகிறான்.

இந்த நாவல் முழுவதும் வரைபடங்கள் இடம்பெற்றுள்ளன. இவை கிறிஸ்டோபரின் மனதின் பிம்பங்களாகவும், பிம்பங்களின் குழப்பத்தில் பிரதிகளை உருவாக்கிக்கொள்ளும் மனங்களுக்கான வழிகாட்டிகளாகவும் மாறிவிடுகின்றன. இவை நாவலில் மிச்சம் இருக்கும் வாசகனின் உடலின் சில அம்சங்களாகவும் அவற்றின் விவரணைகளாகவும் மாறி நிற்கின்றன.

உரையாடல்கள் உருவகங்களாக அமைந்துவிடுகின்றன என்று இந்த நாவலில் கிறிஸ்டோஃபர் பதிவு செய்கிறான். சொல்லும் மொழியைத் தாண்டி உடல் சார்ந்த ஒரு மொழி மனித வரலாற்றில் பதிவு ஆகியிருக்கிறது. மொழி இழந்தவன் போன்று இருக்கும் கிறிஸ்டோஃபர் தன்னிடம் மற்றவர்களுக்கான மொழியையும் கொண்டு திரிகிறான். மொழியை மற்றவர்கள் மொழி மூலம்தான் உருவாக்கிக்கொள்ள முடிகிறது. மொழிக் கிடங்கு மற்றவர்களிடத்திலும், மொழி வெளிப்பாடு தன்னிடத்திலும் இருக்கும் அவலத்தை பல கணங்களில் கிறிஸ்டோஃபரைப் போல வாசகர்களும் உணர்ந்துகொள்ள முடிகிறது.
எல்லாம் ஒரு கணக்காகத்தான் நடக்கிறது. அதற்காகத்தான் நிறையக் கணக்குகள் இந்த நாவல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.

கணித சூத்திரங்கள் கதையை முன்னெடுத்துச் செல்கின்றன. கணிதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கும் கிறிஸ்டோஃபர் தன் உணர்வுக் கணக்குகளை கணிதத்தை வைத்தே எடைபோட்டுக்கொள்கிறான். ஜீன்களையும், அவற்றின் பிணைப்புகளையும் கண்டறியும்போது எண்கள்தான் உதவுகின்றன. உணர்வுகளை எண்படுத்திவிடலாம் என்று அவன் எண்ணுவதுபோலத்தான் இது இருக்கிறது. சாலைகளில் வேகமெடுத்துச் செல்லும் கார்களின் நிறங்களை வைத்து நாட்களைக் கணிக்கும் எண்ணம் கொண்டவன் கிறிஸ்டோஃபர்.

download
ஸ்தூலமான கணித எண்களையும், அரூபமான வண்ண ஓட்டங்களையும் ஒருங்கே மூளையின் அலைகளில் கிறிஸ்டோஃபர் படிய வைத்துக்கொள்கிறான். இவற்றில் அவன் காணும் சுயபொருள் மகிழ்வு வெளிப் பொருள்களில் உறைந்துகிடக்கிறது என்று அவன் நினைத்துக்கொள்கிறான். தனக்குள்ளான எல்லைகள் வெளியிலிருந்து உருவாக்கப்படுகின்றன என்ற கிலேசம் அவனுக்குள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. உலகம் என்பதே தன்னை எதிர்க்க புனையப்பட்ட ஒரு மிகப்பெரிய கொடூரமான எந்திரம் என்ற அச்சமும் எச்சரிக்கை உணர்வும் அவன் தனக்கான செயல்-எந்திரத்தை உருவாக்கிக்கொள்வதற்கான சாத்தியங்களை உருவாக்குகிறது.

குடும்பம் என்பது மூளையில் படிந்து இருக்கிறது. அதன் இயக்கம் வெளியே உருக்கொள்கிறது. அதைப் பெறுவதும் அதை இழப்பதுமே வாழ்வியில் பிரதியாகத் தொடர்கிறது. ஒரு குடும்பம் இல்லாத பாதுகாப்பின்மையை மீண்டும் மீண்டும் உணரும் கிறிஸ்டோஃபர் அதை மீண்டும் மீண்டும் நிலைநாட்டும் ஓர் உந்துதலிலேயே தன் மொழியையும், நாவலையும் முன்னெடுத்துச் செல்கிறான். அவன் குற்றவாளிகளைத் தேடுவது போல் கற்பனை செய்துகொள்கிறான். குற்றவாளிகள் தொடர்ந்து அமைப்பின் அடிப்படைகளைக் கேள்விக்குட்படுத்துபவர்களாக இருந்திருக்கிறார்கள்.

நாயைக் கொன்ற தந்தை நாயை மட்டும் கொல்லவில்லை. உறவுச் சங்கிலியின் கட்டுக்கோப்பைக் குலைத்தவனாக அவன் கிறிஸ்டோஃபரின் கண்களுக்குத் தெரிகிறான். இங்கு இயல்பு, முரண் என்ற இருமைகள் தொடர்ந்து பின்னிப் பிணைகின்றன. இயல்பான மனிதர்கள் உறவு மீறல்களைக் கொண்டவர்களாகவும், மொழியும் சிந்தனையும் சிக்கல் கொண்டதாக ஆகிவிட்டவர்கள் அடிப்படை குடும்ப மாண்புகளை காப்பவர்களாகவும் இந்த நாவல் பிரதியில் உருக்கொள்கிறார்கள்.

சமூக மறுவுற்பத்தியும், மனித மறுவுற்பத்தியும் மாறி மாறி தங்களை நிலைநாட்டிக்கொண்டே போகின்றன. இவற்றில் ஒட்டாதவர்களும் இவற்றின் வரைமுறைகளிலிருந்து மீறுபவர்களும் உபரிமதிப்புகளாக தனித்துவிடுகிறார்கள். அவர்கள் தேவையற்றவர்களாகவும், தேவை மீறி மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்டவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். உபரிமதிப்பு சமூக, மனித அழுத்தத்தையும், மனித சமூக அழுத்தத்தையும் ஒரு வட்டமாக சுழல விட்டுவிடுகிறது.

உளவியல் அழுத்தம் கொண்டவனாக உணரப்படும், வடிக்கப்படும் கிறிஸ்டோஃபர் சமூக அழுத்தம் கொண்டவனாக தன்னை உணர்கிறான். சமூக அழுத்தத்தை உடைத்து எழும்போது தன்னால் உணரப்படும் உளவியல் அழுத்தம் சிதறுறும் என்று அவன் நினைக்கிறான். ஆனால் அவற்றிற்காக அவன் சமூக ஒழுங்குகளை உருவாக்க வேண்டியவன் போலத் தன்னைக் கற்பனை செய்துகொள்கிறான். இந்தப் பூமியில் இல்லாத சமூக ஒழுங்குகளை அவன் விண்வெளியில் அமைக்க முடிக்க நினைப்பவன் போல ஆகவிடுகிறான். விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ள நினைக்கும் அவன் பூமியின் எல்லைகளைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறான்.

பக்கத்து வீட்டு நாயைக் கொன்றவர்களைக் கண்டுபிடித்ததும், தன் தாயைக் கண்டுபிடித்ததும் தான் ஒரு துணிவானவன் என்று நிரூபிப்பதாக கிறிஸ்டோஃபர் பெருமை கொள்கிறான். ஒரு நூலை தான் எழுதி இருப்பதாகவும் அவன் கர்வம் அடைகிறான். இதன் மூலம் தன்னால் எதையும் செய்ய முடியும் என்று நம்புவதாகவும் அவன் நாவலில் இறுதியில் பெருமிதம் அடைகிறான். வரைமுறைப்படுத்துதலின் மரணம் ஒவ்வொரு கட்டத்திலும் வரலாற்றிலும் புனைகதைகளிலும் வரலாற்று மனித பிம்பங்களிலும் நிகழ்ந்துகொண்டே வருகிறது. ஒரு வகைப்பட்ட வரைமுறைப்படுத்துதல் மாண்டவுடன் அதற்கு மாற்றாக மற்றொரு வகையான வரைமுறைப்படுத்துதல் இடம்பிடித்துவிடுகிறது.

ஒன்றை வென்று மற்றொன்றை உருவாக்குவதும் தோற்ற ஒன்றின் மறுவடிவம்தான் என்பதை வரலாறு உணர்த்திக்கொண்டே போகிறது. ஆழ்மன ஆசைகளின் முதலீடுகள் தொடர்ந்து ஒரு மொழியின், புனைகதையின், வரலாற்றின் கட்டமைப்பை உருவாக்குகின்றன. அதை உருவாக்கிவிட்டதாகவும். மீண்டும் உருவாக்குவதற்கான வெற்றித் தகுதிகள் தமக்கு இருப்பதாகவும் கிறிஸ்டோஃபர் இறுமாப்பு அடைகிறான்.

உலகில் உருவான கணக்குகளை விண்வெளியில் முடித்து வைக்க நினைக்கிறான் இந்த நாவலை எழுதுவதாகச் சொல்லிக்கொள்ளும் கிறிஸ்டோஃபர். பூமியில் வடிக்கப்பட்ட நியதிகள்தான் விண்வெளியிலும் நடக்கும் என்றால் பதிப்பிக்கப்பட்ட இந்த வடிவத்தைவிட இந்தக் கதை பெரிதாக நீளும் போலத்தான் இருக்கிறது.

——

knijanthan@gmail.com

Comments are closed.