இலங்கை – ரோஷான் ஏ.ஜிப்ரி யின் கவிதைகள்

[ A+ ] /[ A- ]

download (1)

சில குறிப்புகள்

நம்பிக்கைக்கு
துரோகங்கள்தான்
துணை நிற்கின்றன
நற்சான்றை வழங்கியும்
பொய் சான்றை புதுப்பித்தும்

வியாபார சந்தையில்
விசுவாசம் நல்ல
விலைபோகிறது
நிறுவையின் தராசு முள்
நடு நிலைக்கு வருவற்குள்
பொதியாகி விடும்
பொட்டலங்களாய்

எவ்வளவு துலக்கினாலும்
சிரித்து பேசும்
உதடுகளின் ஓரத்தில்
காவிபோல் ஒரு வக்கிரம்
களற்ற முடியாத கறையாய்
பாசியாக படிந்து விடுகிறது

பரிதாபமாக உயிர் துறக்கும்
பட்டினிச் சாவுகளை
அன்மித்திருக்கும் ஆலைகளில்தான்
அரைபட்டு பதப்படுத்திய உணவுகளை உலகம்
பந்தியில் இருந்து
பசி ஆற்றுகின்றது

இயலாமையின் ஏற்ற இறக்கங்களை
தாண்டித்தான் செல்கின்றது
விளை நிலமும் விமோசனமும்
ஆரோக்கியமான அறுவடைகளும்

காயத்தில் கண்ணீர் கண்டால்
துயரத்தை துடைத்து விடுவதான
பாசாங்குகளோடுதான்
விளம்பரத்திற்காக
விரல்களை நீட்டுகின்றன கைகள்

உலகமகா நடிப்புகள் யாதென
சம்பந்தப் பட்டவரை அணுகினால்
சம்பவம் புலனாகும்
குருடாக்கி விடும்
கொலைவெறி பற்றி
குறிப்புகளுடன்..

**


அடங்காப்பிடாரி

தொடங்கிய அன்றிலிருந்தே
கூடவே இருக்கும் கொள்கையால்
பேர் பெற்றுவிட்டான்
பின் தொடர வேண்டாமென
பல தடவை
எச்சரிக்கை விட்டு
ஏசியும் பார்த்தாச்சு
அவனுக்கு எல்லாம் ஒரு மயிர்
அடி பணிதல் அவன் அறியாத பொருள்
அத்து மீறல் அவன் பெற்ற
அருள்
நீங்கள் நினைக்கும்
எந்த ஆயத்தமும்
இல்லை அவனிடம்
நிலம் பற்றுதல்
கூடவே கூடத ஒரு கொள்கை
எவரின் சோற்றுக்குள்ளாவது
மாங்காய் போட்டு பிசைவது
பதுக்கி வைத்தலுடன்
ஊரின் கண்ணீரை
மொத்தமாக குத்தகைக்கு எடுத்து
குடித்து கும்மாளமிடும்
விசித்திரமான
சித்திரக் குள்ளன்

ஆடு,மாடு,கோழி கொக்கு
அடுதவன் பொருள் எல்லாம்
இன்னும்
இளம் சூடு இடுக்கு முடுக்கு
தேடியபடி
கொம்பு தீட்டிக்கொண்டு
ஒரு கோடாரிக் காம்பு
கொள்கையுடன் அலையும்
அடங்காப்பிடாரி!

Comments are closed.