உங்கள் இரகசியங்களைப் பாதுகாத்தல் ( அறிமுக கவிஞர் ) / ம.இல.நடராசன்

[ A+ ] /[ A- ]

கொலை செய்யும் கவிதைகள்

கவிதைகள் எனக்குள்
கலந்துரையாடி,
தினமும்
ஒன்றிரண்டு கவிதைகளை
என்னுள் எழுதுகின்றன.
ஆனால்,
என் கவிதைக்கான இறைவி
நான் கவிதைகள் எழுதுவதையோ
அல்லது
கவிதைகள் சேர்ந்து என்னுள்

எழுதுவதையோ விரும்புவதில்லை என்பதால்,
என் கவிதைகள் அனைத்தையும்
நான் கருணையே இன்றி
கொலை செய்து விடுகிறேன்
இல்லை
கவிதைகள் அனைத்தும்
சேர்ந்து என்னைக்
கொன்று விடுகின்றன.

•••
வேலை முடியும் நேரம்
அறியவோ
இல்லை
இரயிலைப் பிடிப்பதற்காகவோ
இல்லை
பேருந்து பயணத்திலோ
இல்லை
டீ/ காபி குடிக்க
செல்வதற்காகவோ
இல்லை
வெறுமனே தெரிந்து
கொள்ளவோ,
வயது முதிர்ந்த தொழிலாளியோ,
எதிர்வருபவரோ,
அருகில் உள்ளவரோ
“நேரம் என்ன?”
என்று கேட்கும்போது,
கடிகாரம் பார்த்து
நேரத்தைக் கூறியவுடன்
அவர்கள் புன்னகைத்து
செல்லும் கணம்
சாலச்சுகம்.
•••
ரொட்டித் துண்டு

குப்பை மேட்டில்,

கோயில் வாயிலில்,

வீட்டுக் கொல்லையில்,

எங்கோ ஒரு இடத்தில்
கார், கூதிர்,
முன்பனி, பின்பனி,
இளவேனில், முதுவேனில்
காலங்கள் அனைத்திலும்
உணவு, உடை, உறைவிடம்
ஏதும் இல்லாமல்
கிடைத்ததை உண்டு
வாழும்,
எந்நேரமும் வெறித்துப்
பார்க்கும்,
பசியோடு இருக்கும்,
சத்தம் போடும், சண்டையிடும்,

அழுக்கான தெரு நாய்க்கு,
தேநீர் கடையில் அவ்வப்போது

கிடைக்கும்,
அதே ஒரேயொரு

ஒரேயொரு
ரொட்டித் துண்டாக
கிடைக்கலாம்
உன் முத்தம்.

•••

உங்கள் உள் மனதில்
நீண்ட காலமாக இருக்கும்
யாரிடமும் சொல்லாத
தனிப்பட்ட செய்திகளை,
அழிந்து விட்ட காதலை,
சிறுபிள்ளைத்தனமான குணங்களை,
குடும்பச் சச்சரவுகளை,
தனியுரிமை கொள்கைகளை,
உணர்ச்சிப் பெருக்கிலோ
இல்லை
ஏதோ சஞ்சலத்திலோ
இல்லை
நம்பிக்கையிலோ
மறந்தும்
என்னிடம் கூறிவிடாதீர்கள்.
அந்த இரகசியங்களை
வெளியே கசியாமல்
பாதுகாப்பது,
வரப்போகும் ஊழிக்காலத்தை
அறிந்தும் உங்களிடம்
சொல்ல முடியாமல்
காப்பதை விடவும்
கடினமாக இருக்கிறது.

•••

Comments are closed.