உடலாரண்யம் – உடலைக் காடுகளுக்குள் ஒளித்துக் கொண்டவள் / ஸ்ரீ பதி பத்மநாபா

[ A+ ] /[ A- ]

18217745_10212819759028352_1441098414_n

download (31)

உடலாரண்யம்

– உடலைக் காடுகளுக்குள் ஒளித்துக் கொண்டவள்

(தேன்மொழி தாஸின் ‘நிராசைகளின் ஆதித் தாய்’ தொகுப்பை முன்வைத்து)

ஆரண்யம் என்பது பெருங்காடு. மலையாளத்தில் பாலைவனத்தை மணலாரண்யம் என்று குறிப்பிடுகிறார்கள். தேன்மொழியின் கவிதைகளினூடே பயணிக்கையில் குறுங்காட்டில் நுழைந்து அடர் வனத்தில் அலைந்து திரிந்து பெருங்காடான ஆரண்யத்தின் பேரமைதியில் தியானித்துத் திரும்புகிறோம்.

காடும் காடு சார்ந்த இடமும் அந்த இடம் சார்ந்த கவி மொழியும் தமிழ் நவீன கவிதைப் பரப்பில் மிகச் சிலருக்கு மட்டுமே கைக்கொள்ள வாய்த்திருக்கிறது. தேன்மொழியின் நினைவுகளில் காடு மட்டுமே இருக்கிறது. அந்தக் காட்டின் ஒவ்வொரு அணுவிலிருந்தும் அவரது சொற்கள் பிறக்கின்றன. மணல்தரி, விசும்பாகவும்; மாமலை, வேரடிச் சிணுக்காகவும் பெருகவும் குறுகவும் செய்கின்றன.

காடு நமக்கு அளிக்கும் நிலை தனிமை. காட்டின் அந்தகாரம் எந்திர ஒலி தவிர்த்த இயற்கையின் மொழியை நம்மிடம் பேசுகிறது. இலைகளின் சலசலப்பு மொழி, பறவைகளின் குறுகுறு மொழி, நீரசைவுகளின் குளிர் மொழி. அங்கு பயமுறுத்துபவை கொடிய மிருகங்களின் உறுமலும், மனிதர்களின் பேச்சும் மட்டுமே. தேன்மொழியின் உட்காடுகளுக்குள் நம் மனம் பரந்து நகரும்போது அங்கு கொடிய மிருகங்களின் உறுமலோ, வெற்று மனிதப் பேச்சுகளோ நம்மை பயமுறுத்துவதில்லை.

**

காற்றுக்குக் காதுநிலை; காற்றுக்குக் காதில்லை என்று பாரதி சொல்வான். தேன்மொழியின் கவிதைகளில் காட்டுக்கு உள்மனதின் நிலை; அவருடைய உள்மனதின் காடு சொற்களில் கரைந்து கரைந்து காடு இல்லாமல் போய் வெட்டவெளியாகி, அந்த வெளியில் பறந்தலைகிறது அவர் கவிதை. அந்த வெளியில் அவரது காதல், ஆசைகள், நிராசைகள், கனவுகள், மயக்கங்கள், முயக்கங்கள் யாவும் ஒரு பட்டாம்பூச்சியாய் உருக்கொண்டு வெடித்து சிதறுகின்றன. அப்படி உட்பிரபஞ்ச வெடிப்புக்காக தன்னையே மாய்த்துக்கொண்ட ஒரு பட்டாம்பூச்சியே தேன்மொழி. உலகில் முதன்முதலில் இறந்த பட்டாம்பூச்சி. அவளே நிராசைகளின் ஆதித்தாய். தனது முத்தங்களால் வனாந்தரங்களை வரைந்துகொண்டே இருந்தவள் அவள். இமையறியாத இடங்களிலும் மலர் அரும்பும் மரங்களை முளைக்கச் செய்தவள். தனதுடலின் தேவைகளைப் புறக்கணித்து மீளும் தருணங்களில் தன்னையே உணர்ந்துகொண்டவள், தமக்கேயான நிறங்களையும் பண்புகளையும் எதற்கெனவும் இழக்காத பூக்களை விரும்பி அவற்றின் அருகே தாயாகி மடிந்தவள்.

மனதை உலகமாக உருவகித்தல் ஒரு கவிதைப் போக்கு. உடலை உலகமாக, பேரண்டமாக சித்தரித்தல் சித்தர்களின் வழி. தன்னுடலை கோவிலாக, உயிரை தெய்வமாக வழிபடும் நுண்ணுணர்வு தேன்மொழியின் கவிதைகளில் ஆங்காங்கே இயல்பாக வெளிப்படுகிறது. ஐம்புலன்களை பலவந்தமாக அடக்குவதைக் காட்டிலும் அவை தரும் உணர்வுநிலைகளைப் புரிந்துகொண்டு அவற்றை ஆள்வது என்பதே ‘சித்தி’. வெளிப்படையான உடல் அரசியலைக் கைக்கொள்ளாமல் உணர்வால் எதிர்கொள்கின்றன தேன்மொழியின் கவிதைகள். ”எதன்பொருட்டும் எதுவும் இல்லை
எனினும் அவரவர் உடலிடம்
அவரவர் உலகினை மீட்டுத் தரும்படி
மன்றாடுங்கள்”

இந்த உணர்வுநிலையில் வெளிப்படும் சொற்கள் வெறும் தத்துவார்த்த வழிகளில் அல்லாமல், நவீன கவிதையில் வீறுணர்ச்சியின் (Romanticism) வழி, காதல் மற்றும் காமத்தின் வழி, விடுதலை இறையியலை (Liberation Theology) நோக்கிச் செல்லும் திறவுகோற்சொற்களாலான கவிதைகளாகத் தோன்றுவது எனக்கு மட்டுமாக இருக்காதென்றுணர்கிறேன்.

”எனது தோலும் சதையும் சுகத்தில் தோய்ந்தவை அல்ல
எனது ரத்தமும் துடிப்பும் சமுத்திரத்தை விட ஆழம் குன்றியதும் அல்ல
நம்பிக்கை தரக் கூடிய சொற்களை எழுதினாலும்
எனக்கு அதனால் ஒரு பயனும் இல்லை
உறங்கும் போது வானத்தில் கலையும் நிறங்களை நான் அறியேன்
எனது நேசத்திற்கு உகந்தவர்களையும்
இவ்வாறு இருக்கும்படி சொல்லுகிறேன்”

”எனது பாதங்களை சாம்பலுடனும்
உடலை மேகத்தின் இருட்டிலும் புதைக்கிறேன்
பூமியின் உச்சியில் இட்ட முத்தம் பகலாகிப் போகிறது”

download (30)
**

காட்டின் தனிமை தரும் உன்மத்த நிலையும் நாட்டின் மனிதர்கள் தரும் பைத்திய நிலையும் வீட்டின் தனிமை தரும் பித்த நிலையுமே தேன்மொழி கவிதைகளின் குவிமையம் எனலாம். மனிதர்களை, மனித உறவுகளைக் காட்டிலும் இயற்கையும் செல்ல நாய்க்குட்டிகளுமே அவருக்கு உன்மத்த நிலை அளிக்கின்றன. அந்த உன்மத்தத்தின் வழியே வீடுபேறு அடைவதையே அவர் விரும்புகிறார்.

நீ என் நினைவோடு இருப்பாய் அல்லது வேறு யாரின் நினைவிலும் கூட
எனக்காக வாழ்ந்தான் இவன் – என
எந்த மனிதனையும் யாரலும் காட்ட இயலாது
நான் என் நாய் குட்டிகளின் கண்களுக்குள் வசிப்பதில் நிறைவுருகிறேன்
எனது அறைக்குள் நுழைந்த தனித்த காற்றில்
அகலின் நிழல் வவ்வாலாய் அலைகிறது

***

தேன்மொழிக் கவிதைகளின் ஒட்டுமொத்த உணர்வையும் ஒட்டுமொத்தக் கலைத்தன்மையையும் குறுகத் தரித்து உணரும்போது வால்ட் விட்மனின் ‘லிலாக் பூக்கள் நெடுநாள் மலர்ந்திருக்கும் முன்றில்’ என்கிற நீள்கவிதையும் அதில் வருகின்ற ஒரு சொற்றொடரும் நினைவுக்கு வருகின்றன. “Come lovely and soothing death”.

இவ்வளவு இனிமையோடு மரணத்தை அழைக்கவேண்டியதில்லை தோழி. இங்கே மனிதர்களில் சிலர் இன்னும் மனிதத்தன்மையோடு இருக்கிறார்கள்.

***

Comments are closed.