உலகாயுதத்தின் ஞானக் கூத்து / குமாரநந்தன்

[ A+ ] /[ A- ]

images (42)

கவிதை என்றால் அது தீவிரமானதாய் இருக்கவேண்டும். அது பூமியின் மீது நகர்ந்து செல்லும் மானுடக் கூட்டத்தின் வாழ்க்கை என்னும் பெரு நதியை தரிசிப்பதாய் இருக்க வேண்டும் என்கிற சிந்தனையை கலைத்துப் போடுகிறது ஞானக்கூத்தனின் கவிதை. உண்மையில் தீவிரம் என்பது எது? அது என்ன செய்கிறது என்று யோசிக்கவும் வைத்துவிடுகிறது.

அதேபோல உள்ளார்ந்த அர்த்தம் பொதிந்த, கனமான வார்த்தைப் பிரயோகங்களும் கவிதையில் கவனமாக தவிர்க்கப்படுகின்றன.

அவருக்கு அந்த விஷயங்கள் தெரியாது என்பதல்ல. ஒரு பேட்டியில் தான் பதினேழு வயதிலேயே தொல்காப்பியத்தை முழுமையாகப் படித்துவிட்டதாக சொல்கிறார். தவிர சமஸ்கிருத இலக்கியங்களில் அவருக்கு பாண்டித்யம் இருப்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது.

ஆனால், தத்துவார்த்தமான, ஆன்மீகமான விஷயங்களுக்கு சற்றும் குறையாத, கண்ணைக் கூசும்படி ஒளி வீசும் உலகாயத விஷயங்களைத் தான் எடுத்துக் கொள்கிறார். மற்ற நவீன கவிஞர்களுக்கு இந்த ஒளி எப்படி தெரியாமல் போனது என வியப்பாய் இருக்கிறது.

கவிஞன் என்றால் அவன் எல்லாவற்றைப் பற்றியும் கவலைப்பட்டே தீர வேண்டும் என்கிறதும் இல்லை இவரிடம்.

பொதுவாக கவிதையில் பகடி என்பது உள்ளுக்குள் உக்கிரமானதாய் இருக்கும். ஒரு கோபம் அதன் அடியில் மறைந்திருக்கும். கவிதைகளில் விட, கதைகளில் இதை இன்னும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். அப்படிச் செய்யும்போது, பகடி கோபத்தை சுமந்து வரும் ஒரு ஊடகமாய் மாறிவிடுகிறது. கவிதை எப்படி கவித்துவமான உணர்வுகளைச் சொல்லும் ஊடகமாக இருக்கிறதோ அப்படி.

ஆனால் இவருடையது பகடியாக மட்டுமே இருக்கிறது. அதன் கீழ் கோபம் விரக்தி உக்கிரம் போன்ற எந்த நிறங்களும் இல்லை. எனில் நமக்கு ஒரு கேள்வி இயற்கையாகவே தோன்றும். உள்ளுறையான விஷயங்கள் தேவை இல்லையா? உள்ளுறையாக விஷயங்கள் மட்டுமே தேவை. வேறு உணர்வுகள் மீது பகடி என்னும் இனிப்பைப் பூசி விழுங்க வைக்க எந்தத் தேவையும் இல்லை. எல்லாவற்றையும் அபத்தமாக்கிப் பார்ப்பதல்ல. அபத்தங்களை சுட்டிக் காட்டுவதுதான் முக்கியம்.

அபத்தமாகப் பார்ப்பதில் ஆன்மீகம் வந்துவிடும். தத்துவ விசாரம் வந்துவிடும் அதெல்லாம் வந்துவிடக் கூடாது என்பது நோக்கமல்ல. ஆனால் அது ஏன் வர வேண்டும்? வந்துதான் ஆக வேண்டுமா என்பதுதான் கேள்வி?

எனவே எல்லாம் அப்படியே இருக்கின்றன. விஷயங்களை அபத்தமாக மாற்ற முயற்சிக்கும் கவிஞனுக்கு அது ஒரு நிறத்தை தந்துவிடுகிறது. அது அவனுடைய நிறமாகவும் ஆகிவிடுகிறது. விஷயங்களில் உண்மையிலேயே இருக்கும் அபத்தம் கவிஞனுடையதாய் ஆகிவிடும்போது சிக்கலாகிவிடுகிறது. எனவே அதை தன்னுடைய விஷயமாக மாற்றாமல் அதன் அளவில் இருப்பதை மட்டும் சுட்டும்போது மட்டும்தான் கவனம் கவிஞனை விட்டுவிட்டு விஷயத்தின் பக்கம் திரும்புகிறது. ஞானக்கூத்தன் அதைத்தான் செய்தார்.

யோசனை

உனக்கென்ன தோன்றுது

கருத்துக்கு மாறாகப் போலீசார்கள்

கட்டிவைத்து கையெழுத்து வாங்கலாமா?

எனக்கென்ன தோன்றுது?

வருத்தத்துக் காளானான் புலவன் என்றால்

யாப்பிலொரு கவிபாடச் சொன்னால்

போச்சு.

இந்தக் கவிதை விஷயத்தை அதன் மையத்தில் சென்று தாக்குவதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு சராசரி மனிதன் சமூகத்தைப் பற்றி யோசிக்கும் அளவுக்குக்கூட ஒரு கவிஞனால் யோசிக்க முடியாது. அவனுக்கு அதைப் பற்றி கவிதை எழுத வேண்டும் அதுதான் அவனுக்கு முக்கியமான பிரச்னை

உதைவாங்கி அழும் குழந்தைக்கு கவிதை இப்படி முடிகிறது.

அவர்கள் அவர்கள்

பங்குக்கு

உதைகள் வாங்கும்

காலத்தில்

உனக்கு மட்டும்

கிடைத்தாற்போல்

சின்னக் கண்ணா

அலட்டாதே

சிலர் வாழ்க்கையின் இயல்பான விஷயங்களை துன்பங்களை பெருங்கதையாய் சொல்வதைப் பார்க்கும்போது, இந்தக் கவிதையை சொல்லத் தோன்றுகிறது. எல்லோருக்கும் அடிகள் விழும். அடிகளைப் பற்றி சொல்ல முயற்சிக்கும் போது, கவிஞர் இப்படி சொல்கிறார். சின்னக் கண்ணா அலட்டாதே.

மற்றவர்கள் துன்பத்தைப் பார். அதுவும் உன்னுடைய துன்பம் போன்றதுதான் என்று கவிதையின் அர்த்தம் கவிதைக்கு வெளியேயும் நீண்டு சென்று கொண்டே இருக்கிறது.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டேன் என்றால் அது கவிதை

ஆனால் இது அப்படியெல்லாம் புனைந்து சொல்ல விரும்பாத நவீன கவிதை

ஒரு ஏழையின் சிரிப்பில்

அவனது அப்பாவைப் பார்த்தேன்

அவரும் ஓர் ஏழைதான்

அவரது சிரிப்பில்

அவரது மனைவியைப் பார்த்தேன்

அவளும் ஓர் ஏழைதான்

இந்தக் கவிதை கடைசியில் இப்படி முடிகிறது.

காரில் இருப்பவன் சிரித்துச் சொல்கிறான்

அழகாய் இருக்கிறாய் நீ என்று

முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறாள் அந்தப் பெண்

யாரைப் பார்த்தும்

அவள் சிரிக்கவில்லை

அப்படி ஒருவேளை சிரித்திருந்தால்

அந்தச் சிரிப்பில்

தெரியப்போவது

யாராய் இருக்கும் சொல்லுங்கள்.

சாதாரணமாய் இருந்துவிடுவது நல்லது. வரங்கள் பெறுவதில் பிரச்னைகள் உண்டு. அப்புறம் சாதாரணமாய் இருப்பதும் பிரச்னையாகிவிடும்.

யாரோ முனிவன் தவமிருந்தான்

வரங்கள் பெற்றான் அதன் முடிவில்

நீர்மேல் நடக்க தீப் பட்டால்

எரியாதிருக்க என்றிரண்டு

ஆற்றின் மேலே அவன் நடந்தான்

கொடுத்குத் தீயைச் சந்தனம் போல்

உடம்பில் பூசிச் சோதித்தான்.

மக்கள் அறிந்தார் கும்பிட்டார்.

மறுநாள் காலை நீராட

முனிவன் போனான் ஆற்றுக்கு

நீருக்குள்ளே கால்வைக்க

முடியாதவனாய் திடுக்கிட்டான்

கண்ணால் கண்டால் பேராறு

காலைப் போட்டால் நடைபாதை

சிரித்துக் கொண்டு கண்ணெதிரே

ஆறு போச்சு தந்திரமாய்

காலைக் குளியல் போயிற்றா

கிரியை எல்லாம் போயிற்று

வேர்த்துப் போனான். அத் துளிகள்

உடம்பை பொத்து வரக் கண்டான்.

யாரோ பிணத்தைக் கண்டெடுத்தார்.

செத்துப் போன ஒரு நாளில்

தீயிலிட்டார். அது சற்றும்

வேகாதிருக்கக் கைவிட்டார்.

நீரின் மேலே நடப்பதற்கும்

தீயாலழியா திருப்பதற்கும்

வரங்கள் பெற்ற மாமுனிவன்

மக்கிப் போக நாளாச்சு

ஏதாவது ஒரு தத்துவத்தின் சாராம்சத்தை ஏற்றிவிடலாம் என்பது போல ஜாலம் காட்டும் இவர் கவிதைகளில் அப்படி முயற்சித்தால் அது நம்மைத் துரத்தியடித்துவிடும். வாழ்க்கைதான் அதன் தத்துவம்

இனி மழித்தலும்

சதைக் கழுவழும் இல்லை

உயர அடுக்கு கட்டையை

மூட்டு அதற்குத் தீயை

என்கிற சீன ஜென் கவி ஒருவரின் கவிதையை தமிழில் மொழி பெயர்த்த சி. மணி ஞானக் கூத்தனின் கவிதைகளுக்கு முக்கியத்துவம் தந்து தன்னுடைய நடை இதழில் வெளியிட்டது ஆழ்ந்த புரிதலை நம்மிடம் கோரி நிற்கிறது.

புதுக் கவிதைகள் இருண்மைப் பொருளைக் கொண்டிருந்தாலும் அவை பெரும்பாலும் இங்கிருந்துதான், இப்படித்தான் என்கிற ஒரு சரியான இடத்திலிருந்து துவங்குகிறது. ஆனால் இவரின் எதிரெதிர் உலகங்கள் கவிதை இப்படித் துவங்குகிறது.

கண்ணிமையாக் கால் தேயாத் தேவர் நாட்டில்

திரிசங்கை போக விடமாட்டேன் என்று

ஒரு முட்டாள் சொன்னது பேராபத்தாச்சு எனத் துவங்கிச் செல்லும் கவிதை

இப்படி முடிகிறது

அன்று முதல் பிரம்மாவும் விஸ்வாமித்ர

மாமுனியும் படைத்தவைகள் அடுத்தடுத்து

வாழ்ந்துவரல் வழக்காச்சு எடுத்துக்காட்டு

மயிலுக்கு வான்கோழி, புலிக்குப் பூனை

குதிரைக்குக் கழுதை குயிலுக்குக் காக்கை

கவிஞர்களுக் கெந்நாளும் பண்டிட் ஜீக்கள்.

இவரின் ஆரம்ப காலக் கவிதைகளில் நாட்டுப்புற இசைத் தன்மையை அதிகம் உணர முடிகிறது.

அதற்குக் காரணம் நவீனக் கவிதை என்பது அனைவ்ருக்கும் பொதுவானது என்கிற சிந்தனையாய் இருக்கலாம். எனவே, மரபுக் கவிதைக்கு இணையாக நவீனக் கவிதைக்கும் இருந்த மேட்டிமை தனத்தை களைத்து அதை மக்களுக்கு நடுவே புழங்க விடுவதுதான் அவருடைய நோக்கமாக இருக்கிறது.

இதனால், கவிதை தன்னுடைய புனிதத்தை ஒன்றும் இழந்துவிடுவதில்லை. உண்மையில் கவிதைக்கு அப்படி ஒரு புனிதத்தை கற்பிக்கத் தேவையும் இல்லை.

அவருடைய கவிதைகளில் புழங்கும் ஆன்மீகம் என்ன எனத் தேடி நாம் மெனக்கெடத் தேவை இல்லை. அப்படிச் செய்வது அவரைக் கண்டுபிடிக்க அவரிடமிருந்து முற்றிலும் எதிர் திசைக்கு செல்வதாய் ஆகிவிடும்.

உலகமும் உலகாயதமும்தான் அவருடைய ஆன்மீகம். மரணத்தைப் பார்த்து பதட்டப்படுவதோ, அது என்ன என ஆராய்வதோ அவருடைய வேலையல்ல.

மரம்பட்ட சாலைக்கென்னை

அனுப்புமுன்

பேரைக் கொஞ்சம்

சோதித்துப் பாருங்கள் சார்.

இதுதான் அவர் மரணத்தை எதிர் கொள்ளும் விதம். மரணத்தை அப்படியே ஏற்றுக் கொள்வது ஆன்மீகத்தில் தோய்ந்த மனதின் வெளிப்பாடு. இவரும் ஏற்றுக் கொள்கிறார் அதில் ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் பெயரை மட்டும் கொஞ்சம் சோதித்துப் பார்க்கச் சொல்லி கேட்டுக் கொள்கிறார். அதுவும் இறைவனே ஆதி பரம் பொருளே என்றெல்லாம் விளிப்பதில்லை. சார் என்றுதான் விளிக்கிறார்.

ஏன் சார் என்று விளிக்க வேண்டும். சார் என்பது அரசாங்க மொழி. அரசாங்கம் என்கிற ஒன்றை மனிதனுக்கு வழங்கியவனும் அரசு அதிகாரி போன்றவனாய்த்தான் இருக்கக் கூடும். தவறு நடக்க வாய்ப்பிருக்கிறது. எனவே பேரைக் கொஞ்சம் சோதித்துப் பாருங்கள் சார் எனச் சொல்லி அவர் ஆன்மீகத்திலிருந்து முற்றிலும் வேறான பாதைக்குள் சென்றுவிடுகிறார்.

கடவுள் அவரது இருப்பு அவருடைய செயல்பாடுகள் என எதுவும் இருக்குமானால் அது இங்கிருக்கும் ஒரு அரசாங்கம் போலத்தான் இருக்கும் என்பதுதான் அவருடைய முடியாத நிலைப்பாடு.

விட்டுப்போன நரி

குதிரையாகாமல்

விட்டுப் போனதில் ஒருவன் சாமீ

குதிரையாகாமல் விட்டுப்

போனதில் ஒருவன் சாமீ

மேற்படி குரலைக் கேட்டார்

மாதொரு பாகர்.

குற்றம் ஏற்பட வியந்தார்

தேவி ஏளனம் செய்தாள் சற்று

வாதவூரடிகட்காக

நரிகளைத் தேர்ந்தபோது

நீதியோ என்னை மட்டும்

விலக்கிய செய்கை சாமீ

திருவருட் திட்டம்

பொய்த்ததற்கொரு

ஊளைச் சான்றாம்

நரி எதிர் உதித்துக் கீற்று

நிலாத் திகழ் ஈசர் சொன்னார்.

நரிகளைப் பரிகளாக்கும்

திருவிளையாடல்

முற்றும் விடுபட்ட பேரை நாங்கள்

கவனிக்க மாட்டோம் போய் வா

இந்த பூமியில் ஆன்மீகம் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தழைத்திருந்தது. ஆனால் அது குறிப்பிட்ட ஒரு சமூகம் விலக்கப்பட்டிருப்பதைக் கண்டும் அதற்கான குரலை எடுக்காமலேயே பல காலம் தந்திரமாய் இருந்திருக்கிறது. என்கிற அரசியல் இங்கு சட்டென முகத்தில் அறைகிறது. ஆன்மீகத்தின் முகத்தில் விழும் இந்த அறை சாதாரண அறை அல்ல.

இம்மாதிரியான கவிதைகள் ஏராளமானவர்களைக் களத்தில் குதிக்க வைக்கும் தன்மையைக் கொண்டிருந்தாலும், கவிதை என்பது உண்மையிலேயே என்ன என்னும் புரிதல் பொதுஜன சமூகத்திற்கு எட்டிவிடக்கூடிய நன்மையும் இருக்கிறது.

பகடி, அபத்தம் என எளிதாய் தோன்றினாலும் அது அவ்வளவு எளிமையானதும் அல்ல என்கிற விஷயம்தான் இந்தக் கவிதைகளின் உள்ளே ரத்தமாய் ஓடிக் கொண்டிருக்கிறது.

தற்காலத்திய நவீன கவிதைகளை போலி செய்வது எளிது. அதனால் தான் கவிதையில் இத்தனைக் குழப்பங்களும் மோதல்களும். ஆனால் ஞானக்கூத்தனை போலி செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அதில் ஒன்றும் இருக்காது. வெறும் கவிதை பொம்மைதான் இருக்கும்.

அவர் கண்களை வேண்டுமானால் கடன் வாங்கிக் கொள்ளலாம். அதன் மூலம் பார்க்கலாம். அதிலிருந்து நம்முடைய அசலான பார்வைக்கும் கவிதைக்கும் திரும்பிச் செல்ல வாய்ப்பிருக்கிறது. ஒவ்வொரு கவிஞரும் செய்ய வேண்டியது இதைத்தான் நம்மை ஆராய்பவர்களை அவர்களின் உள்ளுக்குள் நோக்கித் திருப்புவது. அவர்களுடைய அசலுக்குள் விழ வைப்பது.

•••••

Comments are closed.