‘எனக்கு அடுத்திருந்த அறை’ / கபில் ஸ்ரனிஸ்லஸ்

[ A+ ] /[ A- ]

download (20)

எனது பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் பதிவு செய்துவிட்டு அந்த ஏழாம் நம்பர் அறைக்குத் திரும்பி ஒரு இளநீர் ஓர்டர் செய்யும் வரையில் யாவும் சரியாகவே நடந்தது.அதன் பிறகு ஹோட்டல் பரிசாரகன் கதவைத் தட்டி உள்ளேவர அனுமதி கேட்டான்.நான் அனுமதி கொடுத்ததும்,அவன் கதவை திறந்ததிலிருந்து ஆரம்பிக்கிறது பிரச்சினை.சரி,நான் இப்போது யாவற்றையும் ஒழுங்கு வரிசையில் ஞாபகப் படுத்துகிறேன்.

நான் கொளுவியிருந்த முதுகுப்பையில் இரண்டு லினன் சட்டைகளையும் ஒரு அரைக்கால் சட்டையையும் இரண்டு ஆணுறைகளையும் தவிர குறிப்பிடும்படி வேறெதுவும் இருக்கவில்லை.பயணங்களின் போது தேவையற்ற பாரங்களை சுமப்பதில் எனக்கு விருப்பமிருந்ததில்லை.நான் அணிந்திருந்தது கூட ஒரு கையில்லாத பனியனும் சாம்பல் நிற அரைக்கால் சட்டையும் தான்.வெய்யிலுக்காக கூலிங் க்ளாஸும் அணிந்திருந்தேன்.

இலங்கை நாட்டின் காலநிலைக்கு அதுவே பொருத்தாமாயிருந்தது.எனது ஸ்பானிய நண்பன் சொன்னது போலவே அந்த ஹோட்டலின் முகப்பில் ‘ஓல்ட் டச்’ என எழுதப்பட்டிருந்தது.டச்சுக் காலனித்துவ காலத்துக்குரிய கூரை அமைப்பையே அது கொண்டிருந்தது என்பதை தூரத்தில் வரும்போதே கண்டு கொண்டிருந்தேன்.சுவற்றில் வெள்ளை அடிக்கப்பட்டிருந்ததையும் நேர்த்தியாக வெட்டிப் பராமரிக்கப்பட்ட பசுமையான புற் கூட்டத்தையும் தவிர அந்த கட்டடம் உருமாறாமல் அப்படியேதான் இருந்தது.

வரவேற்பறையிலிருந்த சிங்களத் தேசத்து பெண்ணுக்கு எனது பெயர் புரியவில்லை.இரண்டாம் முறையும் உச்சரிக்கச் சொன்னாள்.வலதுகாதை என்பக்கம் திருப்பி புரியாதது போல் பாவனை காட்டினாள்.கடைசியில் நானாகவே எனது ஸ்பானியப் பெயரை குறிப்பேட்டில் எழுதிக் காட்டினேன்.அவள் சிரமம் ஏற்படுத்தியதற்கு வருந்துவதாக ஆங்கிலத்தில் சொன்னாள்.எனக்குரிய ஏழாம் நம்பர் அறைச் சாவியை கையில் தந்துவிட்டு முழுப் பற்களும் தெரிய தொழில் முறைப் புன்னகை ஒன்றைச் செலுத்தினாள்.

என் நண்பன் வர்ணித்தது போலவே அந்த அறை சொகுசு மெத்தையை உடைய கட்டிலையும் திறந்தால் கடல் காற்று அடிக்க கூடிய விசாலமான யன்னலையும் பெற்றிருந்தது.அசதியில் கட்டிலில் சரிந்தேன்.தொண்டை வறண்டு தாகம் எடுத்தது.தோலில் முளைத்திருந்த பொன்னிற உரோமங்களைப் பொசுக்கிய இலங்கை வெய்யில் என்னை உருக்குலைத்துப் போட்டிருந்தது.அருகிலிருந்த தொலைபேசியை எம்பி எடுத்து ஹோட்டலுக்கு அழைப்பை ஏற்படுத்தினேன்.விரலால் சுற்றி பயன்படுத்தும் பழைய பாணியிலான தொலைபேசி எரிச்சலைத் தந்தது.மறு முனையில் ஆண்குரல் ஒலித்ததும்,ஒரு இளநீர் வேண்டுமென ஆங்கிலத்தில் கேட்டேன்.கண நேரத்துக்குப் பதில் வரவில்லை.

பிறகு,சிங்கள மொழியில் ஏதோ சொன்னது அந்தக் குரல்.’ட்ரிங்’ என நான் ஆங்கிலத்தில் அழுத்திச் சொன்னதும் அந்தக் குரல் மதுபான வகைகளின் பெயரை அடுக்கிக் கொண்டே போனது.முதுகுப்பையிலிருந்த தண்ணீர் போத்தல் ஞாபகம் வந்து இளநீர் குடிக்கும் ஆசையைக் கைவிடவிருந்த சமயத்தில் இன்னொரு குரல் என்ன வேண்டுமென ஆங்கிலத்தில் பேசியது.தேவையைச் சொன்னேன்.உடனே ஏற்பாடு செய்கிறோம் சிரமத்துக்கு மன்னிக்கவும் என்றவுடன் அழைப்புத் துண்டிக்கப்பட்டது.

காத்திருப்பை அடுத்து ஹோட்டல் பரிசாரகன் இருமுறை கதவைத் தட்டினான்.நான் அனுமதி கொடுத்ததும்,உள்ளே வந்தவன் என்னைப் பார்த்த மாத்திரத்தில் திரும்பவும் காதவைப் பூட்டிவிட்டு வெளியேறிவிட்டான்.நான் எதையுமே கணிக்க முடியாத புதிர் நிறைந்த கண்களோடு அப்படியே கட்டிலில் கிடந்தேன்.மீண்டும் கதவு தட்டப்பட்டது.ஒரு கடலாமையைப் போல தலையை மட்டும் அறைக்குள் நீட்டிய பரிசாரகன் ‘சிரமத்துக்கு மன்னிக்கவும்’ என கொச்சை ஆங்கிலத்தில் கூறிவிட்டு பழையபடி கதவைச் சாத்த போனான்.

நான் கட்டிலிலிருந்து துள்ளி எழுந்து அவனை நிறுத்தினேன்.எனது கண்களிலிருந்து புதிர் மறைந்து கோபம் உருப்பெற்றது.யன்னல் ஊடாக வந்த கடல் காற்றையும் மிஞ்சும்படி மிகக் கடுமையாக “வட் த ஃபக்’ என கத்தினேன்.முழுமையாக திறக்கப்பட்டிருந்த கதவின் எதிரே மரத்துப் போன கைகளில் இளநீரை ஏந்தியபடி அவன் நின்றிருந்தான்.பதில் சொல்லத் தெரியாமல் கூச்சமடைந்த மண்புழுவைப் போல அவன் நெளிந்து கொண்டிருந்தான்.

சற்று முன்னர் தொலைபேசியில் சிங்களத்தில் பேசியவன் அவனாகத்தான் இருக்க வேண்டுமென ஊகித்துத் கொண்டேன்.விரலால் அடுத்த அறையைச் சுட்டிக் காட்டிய அவன்,அங்கு கொண்டு போக வேண்டிய இளநீர் அதுவென வலியுறுத்தினான்.நான் கதவை வேகமாக சாத்தியபோது ஏற்பட்ட பெரும் சப்தம் அவனது முகத்தில் அறைந்திருக்க வேண்டும்.அடுத்த அறையை நோக்கித் தாவிய அவனது காலடி ஓசைகள் என் காதில் விழுந்தது.ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் பிரச்சினையைச் சொல்லத் தோன்றவில்லை.

விரல்களால் சுற்ற வேண்டிய தொலைபேசியின் நினைப்பே சலிப்பை உண்டு பண்ணியது.நானாகவே என் வாயால் ஓர்டர் செய்த இளநீர் எப்படி இன்னொருவரின் வாய்க்குள் போகும் என்பது தெளிவில்லாமலேயே இருந்தது.நடக்கவிருக்கும் குழப்பங்களின் ஆரம்ப முடிச்சு அதுவென அறியாமலேயே தண்ணீரைக் குடித்துவிட்டுக் கட்டிலில் படுத்தேன்.

காலையில் வரவேற்பறையில் இருந்தவளிடம் விசயத்தைச் சொன்னதும் அந்த ஹோட்டலில் ஏழாம் நம்பரில் இரண்டு அறைகள் உள்ளதாக விளக்கினாள்.கட்டட உரிமையாளரான டச்சுக் காரருக்கு ஏழு அதிஷ்டமான நம்பர் என்பதால் அந்த நம்பரையே இரண்டு அறைகளுக்கு வழங்கியதாகவும்,பின்னர் அதையே ஒரு மரபாகப் பேணுவதாகவும் சொன்னாள்.நல்ல வேளையாக அந்த ஹோட்டலிலுள்ள அனைத்து அறைகளுக்கும் ஒரே இலக்கம் வழங்கப்படவில்லை என்பதையிட்டு திருப்தி அடைந்தேன்.

வரவேற்பறையில் இருந்தவள் இளநீரை ஓர்டர் செய்தது நானல்ல,அந்த இன்னொரு ஏழாம் நம்பர்காரர் தான் என அழுத்தமாகக் கூறிக் கொண்டிருந்தாள்.முதல் நாள் இரவே இந்தச் சர்ச்சையான விவகாரம் கலந்து பேசிய பின் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டது எனத் தெரிந்தது.நான் தொடர்ந்து வாக்குவாதம் பண்ண விரும்பவில்லை.பயணங்களின் போது தேவையற்ற பாரங்களைச் சுமப்பது எனக்குப் பிடிக்காது.நான் கடுமையாக நடந்து கொண்ட பரிசாரகனிடம் மன்னிப்பைத் தெரிவிக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

கடற்கரை மணல் துகள்கள் காலில் ஒட்டுவதை விரும்பியதால் செருப்பைக் கழற்றிக் கையிலெடுத்துக் கொண்டேன்.நான் கடந்து வந்த பாதை கடைகளால் நிரம்பியிருந்தது.கோடை காலமாதலால் நிறைய வெளிநாட்டவர்களின் பளிச்சிடும் முகங்களைக் காண நேர்ந்தது.

லூஸியானா இஸபெல்லா குறிப்பிட்டிருந்த கடற்கரையோர உணவு விடுதியைக் கண்டுபிடிக்கச் சிறிது நேரம் எடுத்தது.விடுதியில் அவளுக்காக காத்திருந்த நிமிடங்கள் பதட்டத்தை அளித்தன.ஆனாலும் நான் பொறுமை இழக்க முன்னதாகவே அவள் அங்கு வந்துவிட்டிருந்தாள்.முதன் முறையாக நேரில் சந்தித்ததால் வெட்கமும் சந்தோஷமும் பரவிய கைகளைக் குலுக்கிக் கொண்டோம்.மிக மெல்லிய பருத்தியால் நெய்யப்பட்ட சட்டையை அவள் அணிந்திருந்தாள்.உள்ளே அணிந்திருந்த ஊதா நிற மார்புக்கச்சை அதனூடாக தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

கடல்காற்று என்னை விடவும் மூர்க்கமாக அவளது பருத்திச் சட்டையை தன்பக்கம் இழுத்துக் கொண்டிருந்தது.முலைகளின் பிளவின் ஆரம்பத்திலிருந்து கழுத்தின் முடிவு வரை மஞ்சள் நிறப் புள்ளிகளைப் பெற்றிருந்தது அவளது உடல்.ஒருவாரமாக இன்டர்நெட்டில் பேசிய நாங்கள் அன்று முதல் தடவையாக ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்துப் பரஸ்பரமாகப் பேசிக் கொண்டோம்.ஒரு அந்நிய தேசத்தில் ஸ்பானிய மொழியைக் கேட்பதில் அவளுக்கும்,ஒரு அந்நிய தேசத்தில் பெண்குரலில் ஸ்பானிய மொழியைக் கேட்பதில் எனக்கும் பூரிப்பாயிருந்தது.

எலுமிச்சை சாறில் ஊறிய அவித்த நண்டு வாங்கிச் சாப்பிட்டோம்.வெய்யில் ஏறிய நேரத்தில் கடலில் ஒன்றாகக் குளித்தோம்.நீச்சல் உடையில் லூஸியானாவின் இடை நான் சற்றுமுன்னர் கடைத் தெருவில் பார்த்த தன்னிச்சையாக கழுத்தை ஆட்டும் பொம்மையைப் போல் ஆடிக் கொண்டிருந்தது.அவளது மார்புகள் கடற்கரையில் சிறுவர்கள் குவித்து வைத்திருந்த மணல் மேடுகளை ஒத்திருந்தது.நீரில் நனைந்து அலுத்த பின்னர் ‘ஸ்டவுட்’ பியர் வாங்கி அருந்தினோம்.

கூச்சம் கலைந்து நெருக்கமாக உணரத் தொடங்கியதும் அதுவரையில் யாருக்கும் சொல்லத் துணியாத கதைகளைப் பரிமாறிக் கொள்ளத் தலைப்பட்டோம்.கடலின் நிறம் மங்கி அலையின் சீற்றத்தை மட்டும் கேட்கக் கூடிய இருள் கவிந்தது வரையில் மணலிலேயே குந்தியிருந்தோம்.நான் உப்புப் படிந்திருந்த அவளது கழுத்தில் மெதுவாக முத்தமிட்டேன்.தயக்கமின்றி அவள் அதை ஏற்றுக் கொண்டாள்.

பின் மிக இரகசியமாக எனது காதில் “நாம் இன்னமும் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்” எனச் சொல்லிவிட்டு எழுந்திருந்த போது அவளது புட்டத்தில் ஒட்டியிருந்த மணல் துகள்கள் உதிர்ந்தன.உடையை அணிந்ததன் பின் நானும் அவளோடு சேர்ந்து அவளது வாடகை மோட்டார் பைக் நிறுத்தப் பட்டிருந்த இடத்திற்குப் போனேன்.எனது நடத்தைக்காக மன்னிப்புக் கோரினேன்.ஹெல்மட்டை மூடும் முன் ஒருதடவை சிரித்துவிட்டு இன்னமும் ஈரம் காயாத ஊதாநிற மார்புக்கச்சை உடையோடு ஒட்டியபடியிருக்க திமிறிய மார்புகளோடு அங்கிருந்து விரைந்தாள்.

நான் அங்கிருந்து ‘ஓல்ட் டச்’ ஹோட்டலுக்குத் திரும்பினேன்.வரவேற்பறைப் பெண் முன்பைவிட அழகாக வீற்றிருந்தாள்.”சிங்கள தேசத்துப் பெண்கள் இவ்வளவு அழகானவர்கள் என எனக்குத் தெரியாது” என்றேன்.தெத்திப்பல் மட்டும் ஓரமாகத் தெரிய புன்னகைத்தாள்.அந்தப் புன்னகை தொழில்முறை சார்ந்ததாக இல்லாமல் ஒரு ஸ்பானிய குடிமகனான எனக்கே உரிய பரிசாக அமைந்திருந்தது.அறைக்குப் போய் ஒரு முழுச் சூரை மீன் ஓர்டர் செய்தேன்.தங்கள் ஹோட்டலில் அது கிடைக்காதெனச் சொன்னார்கள்.ஞாபகம் வைத்திருக்கக் கூடியளவேனும் சுவையற்ற ஏதோவொரு உணவை வரவழைத்துச் சாப்பிட்டேன்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் எனக்கு அடுத்திருந்த இன்னொரு ஏழாம் நம்பர் அறையில் பசியில் கத்தும் பூனையில் குரல் கேட்டது.கட்டிலில் விழுந்து கிடந்த போது ஒரு பூனை-அடுத்த அறையில் கத்திய அதே பூனையாக இருக்க வேண்டும்-பெரிய மீன் முள் ஒன்றை வாயில் கவ்வியபடி வந்து எனது அறை யன்னலில் குந்தியிருந்து நக்கிச் சாப்பிட்டது.நான் அரை மயக்கமுற்றிருந்த நேரம் அது ஒரு இராணுவ வீரனின் தோரணையில் என் அறையெல்லாம் சுற்றி வந்ததை உணர முடிந்தது.

முதுகுப் பையைத் துழாவியது.என் காலிலிருந்து முகமெல்லாம் நக்கிப் பிரேதத்தைப் போல என்னை ஆராய்ந்தது.நான் துணுக்குற்று விழித்த சமயத்தில் அறையின் இருட்டில் தனது பச்சைக் கண்கள் ஒளிரும்படி என்னை உற்று நோக்கியது.பின்னர் விருட்டென யன்னல் வழியாகப் பாய்ந்து ஓடி விட்டது.சற்றுக் கழித்து எனக்கு அடுத்திருந்த அறையில் அது அன்போடு ‘மியாவ் மியாவ்’ எனக் குழைந்த வண்ணமிருந்தது.

அடுத்த நாள் மாலையில் ஒரு ‘ஸ்டவுட்’ பியருடன் கடற்கரையில் உலாத்திக் கொண்டிருந்தேன்.லூஸியானா இஸபெல்லா தன்னால் அன்று வரமுடியாதென முன்னறிவித்திருந்தும் நான் ஏன் அங்கு போனேன் என்பது புலப்படாமலே இருந்தது.பலவித வண்ணங்கள் பூசிய மனித முகங்களை சுய பிரக்ஞை இன்றி கடந்தேன்.இனம் புரியாத குற்றவுணர்வு என்னுள் படர்ந்து வந்தது.தன்னால் வர முடியாததற்கு லூஸியானா சொன்ன காரணம் உண்மையானது தானா அல்லது புனையப்பட்டதா என ஆராய்ந்து பார்த்தேன்.சிறிது நேரமாகவே தென்னை ஓலைகளைக் கொண்டு அலங்காரப் பொருட்கள் செய்யும் வியாபாரி ஒருவன் என்னைப் பின்தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருந்தான்.நான் வேண்டாமென மறுத்ததையும் அவன் ஏற்றுக் கொள்ளவில்லை.கையிலிருந்த போத்தலை மண்டையில் ஓங்கி அடிப்பதைப் போல பாவனை காட்டிய பிறகே அவன் என்னிடமிருந்து நகர்ந்தான்.நான் ஆவேசத்துடன் சனத்திரளிலிருந்து விலகி காற்று சுதந்திரமாக அலைந்து கொண்டிருந்த இடத்துக்குப் போனேன்.

அங்கிருந்து கண்ணுக் கெட்டிய தூரத்தை இலக்காக வைத்து நடந்து கொண்டேயிருந்தேன்.இருளடைந்த போது தான் நான் நீண்ட தூரம் நடந்து வந்துவிட்டதையும் அங்கிருந்து ஹோட்டலுக்குப் போக ஓட்டோ பிடிப்பது கடினம் என்பதையும் அறிந்து கொண்டேன்.தொலைவில் கடைகளின் மின்விளக்குகள் நம்பிக்கை தருவனவாய் ஒளிர்ந்தன.வந்த பாதையிலேயே திரும்பி நடந்தேன்.வழியில் இருட்டில் செய்த பொம்மை போல ஒரு பெண் நின்றிருந்தாள்.அவள் தோளில் ஒரு கைப் பையும் முழங்காலுக்கு மேலேறிய குட்டைப் பாவாடையும் அணிந்திருப்பதாய் புலப்பட்டது.

இறுக்கமான மேற் சட்டை அவளுக்குத் தொப்பை விழுந்ததைக் காட்டிக் கொடுத்தது.நேராக நடந்தால் அவளை எதிரே சந்திக்க நேரும் என்பதால்,விலகி கால்கள் அலையோடு தழுவ நடந்து அவளைக் கடந்தேன்.பின்னால் ஏதோ அவரம் கேட்டது.தலையைத் திருப்பாமல் கால்களுக்கு வேகம் கொடுத்தேன்.ஆனால் தீடீரென ஒரு மந்திரப் பிசாசைப் போல அவள் எனக்கு முன்னே தோன்றி மூச்சு வாங்கினாள்.ஓடி வந்திருக்க வேண்டும்.தான் களைத்துப் போயிருப்பதை மறைத்தபடி ஒரு பாலியல் தொழிலாளிக்குரிய மிடுக்குடன் என்னிடம் சிங்களத்தில் பேசினாள்.நான் மறுத்துவிட்டு தொடர்ந்து நடந்தேன்.

அவள் விடாமல் என் பின்னாலேயே வந்தாள்.இதற்குள்ளாக நான் கடைத்தெருவை அண்மித்திருந்தேன்.மங்கிய மின்விளக்கு வெளிச்சத்தில் அவளது முகத்தைப் பார்த்தேன்.அதிலிருந்த பகட்டுத்தனம் மறைந்து அவள் என்னிடம் இரஞ்சிக் கொண்டிருந்தாள்.நான் முற்று முழுதாக விளக்கொளி நிறைந்த பகுதியை அடைந்ததும் அவள் என்னைப் பின் தொடர்வதைக் கைவிட்டாள்.இருள் உலகின் ராணியாக அங்கேயே நின்று கொண்டாள்.ஹோட்டல் அறையில் முதுகுப் பையிலிருந்த ஆணுறை ஞாபகம் வரவே சிறிது தயங்கினேன்.பின்னர்,ஒரேடியாக வேண்டாமென முடிவெடுத்து ஹோட்டலுக்குப் போக ஒரு ஓட்டோவை தேடினேன்.

லூஸியானா பற்றிய ஏக்கம் என்னைப் பீடித்திருக்க தூக்கம் வராத இரவிடம் சிக்கிக் கொண்டு விழித்தேன்.எனக்கு அடுத்திருந்த அறையிலிருந்து ஒரு பெண் முனகும் சப்தம் வந்தது.கடல் காற்றின் இரைச்சலில் அது தெளிவில்லாமல் கேட்கவே யன்னலை அடைத்து விட்டுக் காதை அறைச் சுவரில் வைத்தேன்.அவளது முனகலில் செயற்கைத் தனமிருந்தது.ஒரு பாலியல் தொழிலாளிக்குரிய மிடுக்குடன் அவள் வாயிலிருந்து ஒலிகள் புறப்பட்ட வண்ணமிருந்தன.மீள இயலாத வெறுப்புடன் யன்னலைத் திறந்து விட்டேன்.கட்டிலில் விழுந்து போர்வையால் தலையை மூடி இழுத்துப் போர்த்தினேன்.எந்தப் பலனையும் அடைய இயலவில்லை.அந்த அறையிலிருந்து வந்த ஒலிகளின் வீரியத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இரவு முழுவதும் திணறிக் கொண்டிருந்தேன்.

காலையில்,எனக்கு அடுத்திருந்த அறையில் வசிப்பவன் யார் என்று அறிய ஆர்வம் உண்டாயிற்று.அறைக்குள்ளிலிருந்தபடியே பக்கத்து அறையின் கதவு திறக்கப்படும் ஓசைக்காகக் காத்திருந்தேன்.ஓடிப் போய் எட்டிப் பார்ப்பதற்கு முன்னேற்பாடாக எனது அறைக் கதவை அகலத் திறந்து வைத்தேன்.நீண்ட நேரமாக சிறு அசைவு ஏற்படும் அறிகுறியும் தென்படவில்லை.அடிக்கடி தேய்ந்து தேய்ந்து வந்த பூனையின் குரல் மட்டுமே அந்த அறையில் யாரோ இருப்பதாக நம்பிக்கை தந்தது.எனது அறைத் தொலைபேசி மணி அடித்தது.

ஹோட்டல் விருந்தினர்களுக்காக இலவச மது விருந்து ஏற்பாடு செய்திருப்பதால் என்னையும் வரச் சொல்லி அழைத்தார்கள்.வருவதாகச் சம்மதம் தெரிவித்தேன்.அவர்கள் எப்படியும் அடுத்த அறையிலிருந்தவனையும் விருந்துக்கு அழைப்பார்களென நினைத்து அந்த அறைத் தொலைபேசி ஒலிக்கும் சப்தத்தைக் கேட்க ஆர்வமுற்றிருந்தேன்.நெடு நேரமாக அது நடக்கவேயில்லை.ஒருவேளை அவன் முன்னரே அங்கு போயிருக்கலாம் அல்லது தாமதமாகவேனும் அங்கு வந்துதானே ஆகவேண்டுமென்று கணக்கிட்டுக் கொண்டு அறையிலிருந்து வெளியேறினேன்.

அதிசயக்கத்தக்க வகையில் விருந்து ஏற்பாடகியிருந்த இடத்தில் பரிசாரகர்களைத் தவிர்த்து என்னோடு சேர்த்து நான்கு பேர்தான் இருந்தோம்.அதில் இரண்டு பேர் இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதியினர்.நானாகவே போய் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்தேன்.ஐஸ் கட்டிகள் நிறைந்த குளிர்ச்சியான மது தொண்டைக்குள் இறங்க இலங்கையின் சுற்றுலா மையங்கள் பற்றி உரையாடினோம்.கொஞ்சம் அதிகமாகவே குடித்திருந்த இங்கிலாந்துக் கணவர் தனது பழைய நாள் வேட்டை அனுபவங்களைக் கற்றை கற்றையாக பிரித்து வைக்கத் தொடங்கினார்.கண்களை கூர்மையாக வைத்தபடி ஏதோ முன்பின் கேட்டிராத கதைகளைக் கேட்கும் ஆர்வத்தில் அவரது மனைவி அவருக்கு எதிரே அமர்ந்திருந்தார்.

நான் மிகவும் சலிப்புற்று எனது பார்வையை அந்த நான்காவது நபரின் மீது செலுத்தினேன்.இலங்கையைச் சேர்ந்த ஐம்பது வயது மதிக்கக் கூடிய அவர் எழுந்து அறைக்குப் போக தயாராகினார்.மிதமிஞ்சிக் குடித்திருந்தும் உதவி புரிய வந்த பரிசாரகனை இருக்கச் சொல்லிவிட்டு தனியாகவே எழுந்து தவ்வி தவ்வி நடக்க ஆரம்பித்தார்.நான் சத்தமில்லாமல் அவரைப் பின் தொடர்ந்தேன்.நேராக அறைக்குப் போகாமல் சில இடங்களில் நின்று நிதானித்தும்,குந்தியிருந்தும் எனது பொறுமையை எல்லை மீறச் செய்து கொண்டிருந்தார்.

இறுதியில் அவர் இருபதாம் இலக்கமிடப்பட்ட அறையின் கதவை திறந்து வாசலிலேயே முகம் அடிபட விழுந்தார்.நான் உதவி செய்ய நினைத்து நான்கு அடிகள் நடப்பதற்குள் எழுந்து கதவைச் சாத்திக் கொண்டார்.நான் திரும்பி வந்து அந்த இன்னொரு ஏழாம் நம்பர் அறையைப் பார்த்தேன்.என்றுமே திறக்கப்படாததைப் போல் அடித்துச் சாத்தப்பட்டிருந்தது.

குழப்பத்திலிருந்து வெளியேற முடியாமல் அறையிலிருந்த போது லூஸியானா என்னைச் சந்திக்க வருவதாக செய்தி அனுப்பினாள்.விரல்கள் நடுநடுங்க ஒரு ஆணுறையை எடுத்து கால்சட்டைப் பையினுள் வைத்தேன்.அவளே ‘ஓல்ட் டச்’ ஹோட்டலுக்கு மோட்டார் பைக்கில் வந்து என்னை அவளது அறைக்கு அழைத்துச் சென்றாள்.மிகவும் குட்டையாகவிருந்த டெனிம் கால்சட்டையிலிருந்து வெளித் தெரிந்த அவளது எலுமிச்சை வண்ணத் தொடைகளில் எனது முழங்கால்கள் உரசிக் கொண்டிருந்தன.

சுற்றுலாப் பயணிகளுக்கென்றே வாடகைக்கு விடப்படும் வீட்டில் அவள் தங்கியிருந்தாள்.அவளது வீட்டில் அவளோடு சேர்த்து ஆண்களும் பெண்களும் அடங்கலாக ஏழெட்டு வெளிநாட்டவர்களும் இருந்தனர்.அவர்கள் இலங்கை முழுவதும் சுற்றிவிட்டு நேற்று காலையில்தான் அங்கு வந்ததாகத் தகவல் சொன்னாள் லூஸியானா.அன்று இரவே அவளும் அவர்களோடு சேர்ந்து ஸ்பானியாவுக்கு பயணப்படவிருப்பதாகவும் கூறினாள்.

இலங்கையிலிருந்து நீங்குவதற்கான சிலமணி நேரங்களை அவர்கள் கொண்டாடித் தீர்க்க முடிவு கட்டியிருந்தனர்.விருந்தில் கலந்து கொள்ள எனக்கும் அழைப்பு விடுத்தார்கள்.லூஸியானா எல்லோரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.கைலாகு கொடுக்கும் போது எனது கை மிகவும் இறுக்கமான இருக்குமாறு பார்த்துக் கொண்டேன்.உதட்டில் செயற்கையான புன்னகையை வரவழைக்கவும் பெரும்பாடு பட்டேன்.ஒரு க்ளாஸில் மதுவை ஊற்றி அதையே நீண்ட நேரமாக உறிஞ்சிக் கொண்டிருந்தேன்.

அங்கங்கள் குலுங்க லூஸியான வெறி கொண்டு நடனமாடினாள்.எனக்கும் அவளோடு சேர்ந்து ஆடவேண்டும் போலிருந்தது.விட்டு விட்டு எரிந்த வண்ணமயமான மின்விளக்கு ஒளியில் அவள் ஒரு பச்சோந்தியைப் போல உருமாறிக் கொண்டிருந்தாள்.எல்லோரும் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த சமயத்தில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் நான் வீட்டை விட்டு வெளியேறினேன்.

லூஸியானாவுடன் இருந்த அதே கடற்கரையில் காற்று தலை முடியைக் குழப்ப நடந்து கொண்டிருந்தேன்.இருட்ட ஆரம்பித்திருந்ததால் சனத்திரள் வடிந்தபடியே இருந்தது.லூஸியானாவிடம் கடுங் கோபம் மூண்டிருந்தது.உடலை இருளில் கரைத்துவிடும் நோக்கில் இருள் கம்மியிருந்த இடங்களாகப் பார்த்து நடந்தேன்.முன்பு பார்த்ததைப் போலவே இருளில் ஒரு உருவம் குந்தியிருப்பதை கண்ணுற்றேன்.ஆர்வத்தோடு அந்த உருவத்திடம் நெருங்கிப் போனேன்.ஒரு ஆண் கடலைப் பார்த்தபடி ஏதோவொரு சிந்தனையில் லயித்திருந்தான்.ஏமாற்றத்தில் எனது செயலை நினைத்து நானே வெட்கத்துக்கு உள்ளானேன்.ஒரு குப்பைத் தொட்டியை தேடிப் பிடித்து பையிலிருந்த ஆணுறையை அதனுள் எறிந்தேன்.கடலின் அலைகள் காதில் இரைந்தது சகிக்க முடியாமலிருந்தது.விரைவாக அங்கிருந்து வெளியேறி ஹோட்டலுக்குப் போனேன்.

அகோரமாய் பசித்தது.சாப்பாடு ஓர்டர் செய்ய விருப்பமில்லாமல் கட்டிலிலேயே படுத்திருந்தேன்.அடுத்திருந்த அறையில் மீண்டும் ஒரு பெண் முனகுவது போன்ற குரல் காதில் விழுந்து மேலும் மேலும் எரிச்சலைக் கிளப்பிக் கொண்டிருந்தது.யன்னலைத் திறந்து விட்டால் கடல் காற்றின் இரைச்சலில் அந்தக் குரல் கேட்காது என நினைத்து எழுந்தேன்.யன்னல் மூடித்தானிருந்தது.அடுத்து என்ன செய்வதெனப் புரியாமல் சுவரில் காலால் உதைக்கப் போனேன்.அப்போதுதான் அந்தப் பெண் குரல் சில ஸ்பானியச் சொற்களை உச்சரிப்பதைக் காதுபடக் கேட்டேன்.

எந்தவிதப் பிறழ்வுமில்லாமல் அந்தப் பெண் ஸ்பானிய மொழியில் முனகினாள்.நான் உறைந்து போய் அங்கேயே நின்று கொண்டிருந்தேன்.பின்,ஓடிப்போய் கட்டிலில் விழுந்து போர்வையால் உடல் முழுவதும் போர்த்திக் கொண்டேன்.அந்தச் சொற்கள் விடாமல் துரத்தி வந்து போர்வைக்கு மேலாகவும் என்னை மூடிப் பிடித்து துன்புறுத்தின.இரவின் ஒவ்வொரு துளிகளிலும் விஷம் போல் அவை பரவியிருந்தன.வெப்பத்தால் உடலில் கசிந்த வியர்வை கழுத்து வழியாக ஓடிக் கொண்டிருந்தது.

போர்வயை விலக்க முடியவில்லை.மூச்சை உள்வாங்கக் கடினப் பட்டேன்.அரை மணித்தியாலத்துக்கும் மேலாக அந்த அவஸ்தையிலிருந்து நீங்க முடியாதவனாக உழன்றபடியிருந்தேன்.இறுதியில்,ஒரு இசைக் கருவிக்குரிய உச்சஸ்தானியில் குரலெடுத்துக் கத்திய அந்தப் பெண் ஒருவழியாக அடங்கிப் போனாள்.யன்னலைத் திறந்தவுடன் வந்த குளிர்ந்த காற்று என்னில் உயிராக ஒட்டிக் கொண்டது.இன்டர் நெட்டில் அடுத்த நாள் காலையே ஸ்பானியா திரும்புவதற்கான விமான டிக்கட்டைப் பதிவு செய்த பின்னரே கொஞ்சம் ஆறுதலடைய முடிந்தது.அங்கு நடந்த எதைப் பற்றியும் ஆராயாமல் மனதை கட்டுப்படுத்த தீவிரமாக முயன்று தோற்றுக் கொண்டிருந்தேன்.இதயம் அடித்துக் கொள்ளும் ஓசையைக் கேட்குமளவிற்கு அங்கே அமைதி குடியேறியிருந்தது.

விடிந்து விட்டது எனத் தெரிந்ததும் நாடு திரும்பப் போகிறேன் என்று சந்தோஷம் அடைந்தேன்.அவசர

அவசரமாக முதுகுப் பையை கொளுவியபடி வரவேற்பறைப் பெண்ணிடம் சென்று அறையைக் காலி செய்வதாகச் சொன்னேன்.கையடக்கத் தொலைபேசியை மறந்து வைத்து விட்டது ஞாபகம் வரவே திரும்பவும் அறைக்கு விரைந்தேன்.மேசையில் அது இருந்தது.எதேச்சையாக கட்டிலைப் பார்த்தேன்.

சுருண்டு கிடந்த எனது போர்வையோடு போர்வையாக பெண் ஒருத்தியின் உள்ளாடைகள் கிடந்தன.அந்த மார்புக்கச்சை லூஸியானா என்னோடு கடலில் குளிக்கும் போது அணிந்திருந்த அதே ஊதாநிற மார்புக்கச்சைதான் என்பதை என்னால் உறுதியாக அடையாளம் காண முடிந்தது.குடிக்காமலே தலை கிறுகிறுத்தது.திடீரென யன்னலில் அந்தப் பூனை தோன்றி என்னைப் பார்த்து அன்பாகக் குழைந்தது.நான் பயத்தில் கதவை படாரெனச் சாத்திவிட்டு வரவேற்பறையை நோக்கி ஓடினேன்.

ஆரம்பத்தில் நாகரிகம் கருதி எனக்கு அடுத்த அறையிலிருந்தவன் பற்றிய விபரங்களைக் கேட்காமல் விட்டிருந்தேன்.ஆனால்,இனிமேல் இலங்கைக்கு வரவே போவதில்லை என முடிவெடுத்திருந்தபடியால் வரவேற்பறைப் பெண்ணிடம் அந்த விபரங்களைக் கூச்சமின்றிக் கேட்டேன்.முதலில் அவள் என்னை சந்தேகக் கண்ணோடு பார்த்தாள்.பின்,நான் ஒரு வெளிநாட்டவன் என்பதாலும் என்மேலிருந்த நட்பிலும் அதைச் சொன்னாள்.”இளநீர் பற்றிய சச்சரவு நடந்ததற்கு அடுத்த நாளே அந்த அறையிலிருந்தவர் அறையைக் காலி செய்து விட்டார்.அந்த அறையில் இப்போது யாருமே இல்லை.”

நான் விமான நிலையம் நோக்கிப் பயணித்தேன்.எனது முதுகுப் பையில் இரண்டு லினன் சட்டைகளும் ஒரு அரைக்கால் சட்டையும் ஒரு ஆணுறையும் இன்னும் தீராத குழப்பம் ஒன்றும் கனத்துக் கொண்டிருந்தன.

•••

Comments are closed.