என் அம்மாவுக்குத் தெரியும் / இந்தியில் – தாரோ சிந்திக் / தமிழாக்கம் – நாணற்காடன்

[ A+ ] /[ A- ]

download

தாரோ சிந்திக் – அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த முதல் இந்தி கவிஞர். சாகித்ய அகாதமியின் 2017 க்கான யுவபுரஸ்கார் விருது பெற்ற இந்தி கவிஞர். 13 ஆகஸ்ட் 1986 ல் பிறந்தவர். அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு சியாங் மாவட்டத்தில் டோன்யி போலோ அரசுக் கல்லூரியில் இந்தித் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறார்

••••

என் அம்மாவுக்குத் தெரியும்

என் அம்மா

சொற்களுக்கு முன் குருடியாகிவிடுகிறாள்

ஆனால் அந்தக் கறுப்பு எழுத்துகளுக்கு நடுவில்

ஒளிந்திருக்கும் வெளிச்சமான நாளைய தினம்

என் அம்மாவுக்குத் தெரியும்

என் அம்மா

விதவைகளுக்கான அந்த வரிசைகளில் ஒருத்தியாக இருக்கிறாள்

அவர்களுக்கு மொத்த உலகமும்

கதவில்லாச் சிறைச்சாலையாய் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது

ஆனால் இந்தப் பாதையிலிருந்து விலகிச் செல்ல

என் அம்மாவுக்குத் தெரியும்

என் அம்மா

குழந்தைகளுக்கு சிறு அடி விழுந்தாலும் காயமாகிவிடுகிறாள்

ஆனால் மரபின் ஒவ்வொரு போர்க்களத்திலும்

ஆயுதங்களைப் பயிரிட்டு வளர்க்க

என் அம்மாவுக்குத் தெரியும்

என் அம்மா

பூவாக இருந்தவள் இப்போது கல்லாக இருக்கிறாள்

மென்மையை அவளது வயது கைது செய்து தண்டனை தந்திருக்கிறது

ஆனால் பூவுக்கும் கல்லுக்குமிடையில் கழிந்துபோன வரலாற்றை

என் அம்மாவுக்குத் தெரியும்

என் அம்மா

அந்த நூலறுந்த பட்டம் போன்றவள்

ஆனால் அம்மாவிலிருந்து அப்பா ஆக

என் அம்மாவுக்குத் தெரியும்

என் அம்மா

பண்பாட்டின் உச்ச யுகத்தில் இருந்தும் கூட

புத்தகங்களின் உலகில் புதியவளாக இருக்கிறாள்

ஆனால் வாழ்வை எப்படி படிக்கவேண்டுமென்பது

என் அம்மாவுக்குத் தெரியும்

——————

குளிர்ந்த நெருப்பு

நீ எரிந்துகொண்டிருக்கும் நெருப்பில்

வெப்பமும், புகையும் இல்லை

இல்லை, இதில் ஆச்சரியமாக சிந்திப்பதற்கு

எந்த விசயமுமில்லை

இப்படி கூட இருக்கலாம் –

தேகத்திற்கு பதில் புத்தி எரியும்போது

ஆசைகளின் ஒளி ஊடுருவும் விரிப்பில்

கண்கள் எப்போதும் மூடியிருக்கும்போது

உணர்வுத் தூக்கத்தின் பெயரற்ற வீதிகளில்

வாரிசற்ற இலைகளாகி பறக்கும்போது

கோழைத்தனத்தின் வலுவற்ற கை விலங்குகளால்

கைகள் கட்டப்படும்போது

மேலும்

அழுத்தி வைக்கப்பட்ட பாதங்களின் சங்கிலிகள் ஆகும்போது

அந்த நேரத்தில்

புகையற்ற நெருப்பில் நீ சந்தோசமாக எரிகிறாய்

அந்த குளிர்ந்த நெருப்பின் எண்ணையில் கீழ்மைப்படுகிறாய்

என்பதைக்கூட நீ உணரவில்லை

அந்த நேரத்தில்

உன் தினசரி வேலைகள் ஒரு வளர்ப்பு விலங்கு போலாகின்றன

ஏனெனில் மண்ணால் பிசையப்பட்ட உன் உடல்

அப்போது பலமிழந்துவிடுகிறது

உன் வலுவற்ற எலும்புகள் அப்போது கொழுப்பை அதிகமாக்குகிறது

……………………….

இறந்த காலத்தின் கூக்குரல்

காடு, மலை, ஆறு, அருவி

மற்றும் வியாபித்திருக்கும் இந்தக் காற்றில்

இலையுதிர் கால காய்ந்த இலைகள் போல்

சட சடவென உதிரும்

காலத்தின் தடையில்லாச் சக்கரத்தில்

கடந்த காலத்தின் கூக்குரலை

மௌனப் புலம்பலை, அழுகுரலை

கேட்டுக்கொள் .

இன்று உனது இறுமாப்பு

வெவ்வேறு வடிவங்களில் ஊடுருவி

தங்கக் கூண்டுகளை

பலமாக உடைத்துக்கொண்டிருக்கிறது

துண்டுத் துண்டாகப் பிரித்து

சாபமும், தண்டனையும் போல

மறக்கப்பட்ட நம் முன்னோர்களின் மீதியை

மிஞ்சியிருந்த பெருமையை

செல்வத்தை, பொருளை

பெற்று வீணடித்து

அதன் முக்கியத்துவத்தை

மண்ணோடு மண்ணாக்கிவிட்டது

இறுமாப்பின் வழியாக

பண்பாட்டின் வழியாக

மிஞ்சியவற்றை மீண்டும் தொகுத்தளி

காட்டருவின் சக்தியை உருவாக்கு

புதிதாய்ப் படைக்க கதவு திற

கனவின் மூடநம்பிக்கையை உடைத்துப்போடு

சத்தியத்தின் கண்ணாடியைக் காட்டு

ஏனெனில் –

காலனி ஆதிக்கம் இன்று

உனது புத்தியைப் பூட்டிவைத்திருக்கிறது

மேற்கு மீண்டும்

கிழக்கின் பக்கம் ஆதிக்கம் செய்யத் தொடங்கிவிட்டது

ஆடம்பரங்களும், ஊழல்களும் செல்வாக்கு பெற்றுவிட்டன

மதம் நமது பண்பாடுகளின் மேல் ஆதிக்கம் செலுத்துகிறது

( 2017 யுவபுரஸ்கார் விருதுபெற்ற இந்தி கவிதை நூல் “ அக்‌ஷரோ கீ வினதி “ நூலிலிருந்து…. )

•••

Comments are closed.