என் படைப்புகளில் நான் அலைந்து திரிகிறேன் / கே,பாலமுருகன் ( மலேசியா ) நேர்காணல்: குமாரி தீபா

[ A+ ] /[ A- ]

download (6)

என் படைப்புகளில் நான் அலைந்து திரிகிறேன்

மலைகள் இதழுக்காக நேர்காணல்: குமாரி தீபா

கேள்வி: உங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ள முடியுமா?

கே.பாலமுருகன்: நான் ஓர் எழுத்தாளன். ஆசிரியரும்கூட. எனது கே.பாலமுருகன் வலைத்தளத்தில் என்னைப் பற்றி தேவையான அறிமுகம் உண்டு. இப்படி எல்லாம் நேர்காணல்களிலும் என்னைப் பற்றி நான் கிளி பிள்ளை போல ஒப்புவிப்புவதில் சோம்பேறித்தனமாக இருப்பதால் வலைத்தளத்தின் முகவரியை இணைக்கிறேன். (http://bala-balamurugan.blogspot.com/). உங்களையும் சேர்த்து இந்தத் தமிழ்ச்சமூகத்தின் தேடல்கள் மீது எனக்கு எப்பொழுதுமே நம்பிக்கை உள்ளது.

கேள்வி: இலக்கியத்தில் அடுத்த திட்டங்கள் ஏதும்?

கே.பாலமுருகன்: கொஞ்சமான சோம்பேறித்தனம் இருக்கிறது. அதனை விரைவில் களைந்தால் மட்டுமே மேலும் தமிழ் இலக்கியத்திற்குச் சில காரியங்களைச் செய்ய முடியும் என நினைக்கிறேன். இப்போதைக்குக் களம் இதழை ஒரு தீவிரமான போக்குடன் தொடர்ந்து வருடத்திற்கு நான்கு இதழையாவது கொண்டு வரத் திட்டம் உண்டு. அதனையடுத்து சிறுவர் மர்ம நாவலை பத்து பாகங்களாக எழுதவும் தீர்க்கமான முடிவுண்டு. மற்றதைக் காலம் தீர்மானம் செய்யும். அதிகமான நடவடிக்களைப் போட்டு என்னையே ஏமாற்றிக் கொள்ளாமல், என்னால் செய்ய முடியும் என நம்புகிற இந்த இரு திட்டங்களுடன் இருக்கிறேன்.

கேள்வி: களம் அடுத்த இதழ் வெளிவரவில்லையே, என்னவாயிற்று?

கே.பாலமுருகன்: களம் இதழ் மூன்று நண்பர்களின் முயற்சியில் தொடங்கியதாகும். முதலாவதாக இதில் யாரும் யாருக்கு மேலும் இல்லை. ஆசிரியர், துணை ஆசிரியர் என்ற பதவிகள் எல்லாம் இல்லை. ஆசிரியர் குழு மட்டுமே உண்டு. நான், எழுத்தாளர் அ.பாண்டியன், சு.தினகரன் மூவரும் சேர்ந்து முதல் இதழை வெளியிட்டோம். 1000 பிரதிகளைச் சுலபமாகக் கொண்டு போக முடிந்தது. நாங்கள் நம்பும் இலக்கியத்திற்கான தீவிரத்தை வேண்டுமென்றே குறைத்துக் கொண்டு நடுநிலை இதழாகக் கொண்டு வர முயற்சித்தோம். இதனைச் செய்ததற்குக் காரணம் ஜனரஞ்சகமான இலக்கியத்திலிருந்து தீவிர இலக்கியத்தை நோக்கி முன்னகர ஒரு நடுநிலை சூழல் வேண்டும் எனத் தோன்றியது. தமிழ்நாட்டில் சுஜாதாவைப் போல. ஆனால், என்னவோ மனம் அதில் ஒட்டவில்லை. காலம் முழுவதும் தீவிர இலக்கியத்தை முன்னெடுக்கவே விரும்பும் மனநிலை மட்டுமே வாய்த்துள்ளதால் களம் இதழை மீண்டும் செம்மைப்படுத்துகிறோம்.

கேள்வி: அப்படியென்றால் அடுத்த களம் இதழ் தயாராகவுள்ளதா?

கே.பாலமுருகன்: களம் இதழைச் சிறுகதை சிறப்பிதழாகக் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறோம். அதற்காக நாட்டில் எழுதி வரும் சில படைப்பாளிகளை அணுகியுள்ளோம். அதற்கான வேலைகள் முடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அநங்கம் சிற்றிதழைச் சிறுகதை சிறப்பிதழாகக் கொண்ட வந்தபோது மிகுந்த கவனம் கிடைத்தது. சிங்கை மூத்த படைப்பாளி இராமக்.கண்ணபிரான் அவர்களின் பேட்டியும் இடம்பெறவிருக்கின்றது.

கேள்வி: இலக்கியத்தில் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

கே.பாலமுருகன்: மிகவும் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். சிறுவர் இலக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். தொய்வடைந்துவிட்ட நீரோட்டத்தின் அடைப்புகளை விடுவிக்க முதலில் இந்நாட்டின் சிறுவர்களின் மனங்களில் இலக்கியத்திற்கான தீவிரத்தைக் கூட்ட வேண்டும். அதன் பாய்ச்சல் வருங்காலத்தில் தேக்கங்களை அடித்துச் செல்லும். மேலும் என்ன செய்து கொண்டிருக்கிறேன் எனக் கேட்டால் எதையோ செய்து கிழித்து சாதித்துவிட்ட நினைப்பில் பேசுபவர்களின் ஆர்பாட்டங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். படிக்க வேண்டியதற்கும் படைக்க வேண்டியதற்கும் மத்தியில் இருக்கும் இடைவேளியைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். என் கவனம் முழுவதும் நான் கண்காணிக்கும் நிதானத்தின் மீதே இருக்கிறது. ஓர் ஊற்றுக்காகக் காத்திருக்கிறேன்.

கேள்வி: இலக்கிய சர்ச்சைகள் ஏதிலும் மாட்டியதுண்டா?

கே.பாலமுருகன்: இலக்கிய சர்ச்சை என நான் முடிவு செய்யாதவரை மற்றவைகளை நான் அப்படிக் கருதுவதில்லை. இதற்குமுன் நான் சம்பந்தப்பட்ட எந்தச் சர்ச்சைகளும் கடைசியில் இலக்கிய விவாதமாக முடிந்ததில்லை. நாம் சொல்ல வரும் கருத்தின் மீது சிலருக்கு ஏற்படும் முரணே அதனைச் சர்ச்சையாக மாற்றுகிறது. ஆனால், அக்கருத்தின் மீது தனது அறிவதிகாரத்தைச் செலுத்த முனைபவர்களுடன் ஏற்படுவது வாய்ச்சண்டை மட்டுமே. வாய்ச்சண்டைகள் வசைகளுக்கு இடமளித்து சுயப் பகமைகளை மட்டுமே கக்கிச் செல்கின்றன. ஆகையால், இதுவரை எந்த இலக்கிய சர்ச்சைகளிலும் சிக்கியதில்லை. ஆனால், இலக்கியக் குழுக்களால் அதிகம் வசைப்பாடப்பட்டுள்ளேன். இங்கு அதற்குப் பஞ்சமில்லை. அமைதியாக படைப்பூக்கம் பெறுபவர்களைவிட கூச்சலிட்டு தன் பெருமைகளைப் பேசிக் கொள்பவர்களே அதிகம் என்பதால் இலக்கிய சர்ச்சை சாத்தியமா என்பதே சந்தேகம்தான். சுருக்கமாகச் சொல்வதென்றால் தற்போதைய இலக்கிய சண்டை என்பது மாமியார் மருமகள் சண்டையைப் போல மலிவாகிவிட்டது.

கேள்வி: தற்பொழுது மலேசிய இலக்கியத்தின் மீது உங்கள் நிலைபாடு?

கே.பாலமுருகன்: ஆசிரியர் பயிற்சிக் கழகங்களில் தற்போது எழுதிவரும் இளம் படைப்பாளிகளை உரையாற்றவும் இலக்கியப் பயிற்சி அளிக்கவும் வாய்ப்பை வழங்குவதைக்கூட நான் ஆரோக்கியமான முன்னேற்றமாகப் பார்க்கிறேன். இது கல்வி அமைச்சு வரை விரிய வேண்டும். சமூகத்தை நேரடியாகத் தொடர்பு கொள்வது கல்வி அமைப்பே. அறிவையும் அனுபவத்தையும் கல்வியின் வழியாகப் பெற முடியும் என்றும் அதற்கான அதிகாரப்பூர்வ அமைப்பாகக் கல்வி அமைச்சுதான் என்றும் கருதப்படுகிறது. கல்வி அமைச்சின் பாடநூல் பகுதியும், கலைத்திட்டப் பிரிவும், தேர்வு வாரியமும் நவீன இலக்கியத்தை உள்வாங்கிக் கொண்டு இலக்கியத்தையும் சிந்தனைத்துறையையும் முன்னெடுத்தால், அப்பொழுதே நான் எதிர்ப்பார்க்கும் மாற்றம் சாத்தியம். அதுவரை சில முயற்சிகள் மட்டுமே பொதுவில் தொடரும். அதற்கான விளைவுகளை இப்பொழுது கணிக்க இயலாது.

கேள்வி: மலேசியத் தமிழ் இலக்கியத்தில் உங்கள் இடம் எது?

கே.பாலமுருகன்: எந்த இடமும் இல்லை. அப்படி இருந்தாலும் அதனை எதிர்காலமே முடிவு செய்யும். இப்போதைக்குப் படைக்கிறேன். அதனால் உயிருடன் இருக்கிறேன். என் படைப்புகளினூடாக அலைந்து திரிகிறேன். அது என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இதை மலேசிய இலக்கியத்தின் ஒரு துரும்பு என்றுகூட சொல்லிக்கொள்ளலாம், பிரச்சனையில்லை.

கேள்வி: இப்போது எழுதிக் கொண்டிருக்கும் படைப்பாளர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

கே.பாலமுருகன்: நான் எதைச் சொல்லி யார் கேட்டுவிடப் போகிறார்கள்? கூச்சலிட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான். அதைத்தான் பலர் இன்று செய்து கொண்டிருக்கிறார்கள். சேர்ந்து இயங்க நான் தயார். யார் மேலும் நின்று கொண்டு சர்வதிகாரம் செய்ய நினைக்கவில்லை. ஏதாவது சொல்ல வேண்டும் என நினைக்கின்ற கணமே குருபீடத்தில் ஏறி அமர்ந்து கொண்டு இருமாப்புக் கொள்ள வைத்துவிடுகிறது. ஆகையால் அதனைத் தவிர்த்து வருகிறேன். என் படைப்புகளின் வழி சமூகத்துடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன். இது எந்த வகையிலான தாக்கங்களை உருவாக்குகிறது என வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.

கேள்வி: சிறுகதைகளில் ஆர்வம் அதிகமா அல்லது கவிதையா?

கே.பாலமுருகன்: சிறுகதையே எனது எப்பொழுதுமான தேர்வு. கவிதை மொழியுடன் நான் விளையாட நினைக்கும் போதெல்லாம் எழுதுவது. பலமுறை நான் மொழியிடம் தோல்வி கண்டுள்ளேன். சில சமயங்களில் நல்ல கவிதைகள் தோன்றியதுண்டு. சிறுகதைகளும் அப்படியே. சொல்லத் தகுந்த நல்ல கதைகளும் எழுதியுள்ளேன். விரைவில் எனது சிறுகதை தொகுப்பு ஒன்றைக் கொண்டு வர முயற்சித்து வருகிறேன். இதற்கு முன் வல்லினம் பதிப்பகத்தில் ஒரு சிறுகதை நூலும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மூலம் ஒரு நாவலும், சுடர் பதிப்பகம் மூலம் மூன்று நாவல்களும் பிரசுரித்துள்ளேன்.

கேள்வி: மலேசிய சிறுகதை சூழல் பற்றி சொல்ல இயலுமா?

கே.பாலமுருகன்: பத்திரிகைகளில் வரும் சிறுகதைகளை மட்டும் வைத்துக் கொண்டு மலேசிய சிறுகதை சூழலை விமர்சிக்க இயலாது. ஆனால், பெரும்பாலும் அப்படித்தான் தீர்மானிக்கவும் படுகிறது. அவை ஒரு காலக்கட்டத்தின் சிறுகதை தொடர்ச்சியை உள்ளடக்கியதாகக் கருத முடியாது. தனித்தனியாகச் சில நல்ல கதைகள் எப்பொழுதும் எழுதப்பட்டே வருகின்றன. தன் வாசிப்பின் ஆழம் பொறுத்தே ஒரு படைப்பாளியின் சிறுகதையின் ஆழமும் நேர்த்திப் பெறுகிறது. மேலும், வாழ்க்கை அனுபவமும் இதில் முக்கியமானதாகக் கருதுகிறேன். கற்பனையைவிட சுய அனுபவங்களே சிறுகதைகளில் எடுப்படுகின்றன எனத் தோன்றுகிறது. அந்தச் சுய அனுபவம் எப்படிச் சமூகத்துடன் உரையாடுகிறது; தன்னைப் பொறுத்திக் கொள்கிறது என்பதும் முக்கியம். அவ்வகையில் நாட்டில் நான் எப்பொழுதும் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்கள் எனக் கருதுவது சு.யுவராஜன், கோ.புண்ணியவான், சீ.முத்துசாமி, அமரர் எம்.ஏ.இளஞ்செல்வன், அ.பாண்டியன், மகேந்திரன் நவமணி, மீராவாணி, முனிஸ்வரன் குமார், கங்காதுரை மேலும் சிலர் ஆகும். என் வாசிப்பு நிலையிலேயே இவர்கள் நல்ல சிறுகதைகளைப் படைத்துள்ளார்கள் எனக் கருதுகிறேன். சு.யுவராஜனின் சிறுகதை மொழி எந்தச் சாயலும் இல்லாதது. தன் தீவிரமான வாசிப்பின் வழி அவர் அவருக்கான மொழியைக் கண்டடைந்தார். மனத்திற்கு நெருக்கமாக வந்து கிசுகிசுக்கும் மொழியைப் போன்றது. இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். புதிய பார்வை நாளிதழில் தொடர்ந்து மலேசிய சிங்கப்பூர் சிறுகதைகளை அடையாளங்கண்டு கட்டுரை எழுதி வருகிறேன். 24 வாரங்களுக்கு அது தொடரும். இது எதிர்காலத்தில் மலேசிய சிறுகதைகளைப் பற்றி ஒரு மேலோட்டமான பார்வையை உருவாக்கலாம்.

கேள்வி: மலேசியக் கவிதைகளும் இதே நிலைதானா?

கே.பாலமுருகன்: எனக்குப் பிடித்தமான கவிஞர்களைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். மலேசியாவில் மக்கள் தொகையில் 90% கவிஞர்கள் இருப்பதால் யாரைப் பற்றி சொல்வதென்று தெரியாததால், அமரர் பா.அ.சிவம், யோகி, பூங்குழலி, சு.தினகரன், நவீன், தோழி, மணிமொழி, போன்றவர்களின் கவிதைகளே நான் வாசித்ததில் மிகவும் முக்கியமானதாகத் தோன்றுகின்றன. யோகியும் மணிமொழியும் பா.அ.சிவமும் நல்ல கவிதைக்கான ஊற்றுள்ளவர்கள். பா.அ.சிவத்தின் இழப்பு மிகவும் வருத்தமிக்கது. அவருடைய கவிதைகள் பற்றி மௌனம் இதழில் எழுதியிருக்கிறேன். அநங்கம் இதழ் நடத்தியபோது பல கவிதைகளும் அனுப்பியிருக்கிறார். என்னைக் கவர்ந்த கவிஞரில் பா.அ.சிவமே தனித்த இடத்தில் நிலைக்கிறார். மணிமொழி மேலும் தொடர்ந்து கவிதைகள் எழுதினால் தனி கவனத்தைப் பெறுவார் என நினைக்கிறேன். யோகியின் யட்சி கவிதை தொகுப்பிற்காகக் காத்திருக்கிறேன். பூங்குழலியின் கவிதைகள் பற்றி இரண்டுமுறை விமர்சித்து எழுதியிருக்கிறேன். இலங்கை கவிஞர் ரியாஸ் குரானா, சிங்கை கவிஞர் எம்.கே குமார் அவர்களின் கவிதை நூல்களுக்கு முன்னுரையும் எழுதியிருக்கிறேன். என் வாசிப்பு நிலையிலிருந்தே மலேசியக் கவிதை முயற்சிகளைக் கவனித்தும் மதிப்பிட்டும் வருகிறேன். இப்பணி மேலும் தொடரும்.

கேள்வி: உங்களை மலேசிய இலக்கிய ஆளுமை எனச் சொல்லலாமா?

கே.பாலமுருகன்: அதையெப்படி நானே சொல்லிக் கொள்வது? காலம்தான் அதற்கும் பதில். ஒருமுறை தொலைப்பேசி உரையாடலில் டாக்டர் மா.சண்முகசிவா நீங்கள் ஆளுமை ஆவதற்கான பயணத்தில் இருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டார். அதனை அப்படியே நம்புகிறேன். அவ்வளவுத்தான்.

கேள்வி: மூத்த எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு அவர்களுடன் உங்களுக்கு ஏதும் பகைமையா?

கே.பாலமுருகன்: வேடிக்கையாக இருக்கிறது உங்கள் கேள்வி. நான் யாருடனும் பகைமை பாராட்டுவதில்லை. எனக்குப் பிடிக்கவில்லை என்றால் நான் விலகிக் கொள்வேன். பிடிக்கவில்லை என்று விலகிய பின்னரும் தூற்றிக் கொண்டிருந்தால் நஷ்டம் எனக்கில்லை என நம்புவதால் நான் யாரிடமும் பகைமையை வளர்த்துக் கொள்வதில்லை. ரெ.கார்த்திகேசு ஐயாவை நான் மலேசியாவின் மிக முக்கியமான சிறுகதை திறனாய்வாளராக மதிக்கின்றேன். அவருடைய பல கருத்துகளில் எனக்கு முரண்பாடும் உண்டு. ஆனால், இலக்கிய சூழலில் முரண்கள்தானே பலரை முன்னகர்த்தியுள்ளன. அதில் சிக்கல் இல்லை. இன்றளவும் அழைத்தால் என்னுடன் அவர் பேசுவார், காரணம் எங்களுக்கு மத்தியில் எந்தப் பகைமையும் இல்லை.

கேள்வி: நாவல் ஏதும் எழுத திட்டமுண்டா?

கே.பாலமுருகன்: இரண்டு முக்கியமான நாவல்கள் என் மனத்தில் இருக்கின்றன. விரைவில் அதனை எழுதினால் மலேசிய இந்தியர்களின் வாழ்வில் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு ஒதுக்கப்பட்ட மனிதர்களைப் பற்றி பதிவு செய்ததாக இருக்கும். அதற்கான சந்தர்ப்பமும் மொழியும் கிட்டும்வரை காத்திருக்கிறேன்.

Comments are closed.