எம்.ஜி. சுரேஷ்: காற்றில் கரைந்த தமிழ்ப் பின்-நவீன முகம் / -ஜிஃப்ரி ஹாஸன்

[ A+ ] /[ A- ]

எம்.ஜி. சுரேஷ்

எம்.ஜி. சுரேஷ்

தமிழ் இலக்கியத் தளத்தை புதிய திசைகளை நோக்கி நகர்த்திச் சென்ற படைப்பாளிகளுள் ஒருவர் எம்.ஜி. சுரேஷ். தமிழில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படைப்புகளைத் தந்த அவர் அண்மையில் மறைந்தார். அவர் தமிழ்ச் சூழலில் படைப்பாளியாக மட்டுமன்றி கோட்பாட்டு உரையாடலாளராகவும் இயங்கிவந்தார். தமிழ் இலக்கியத்தை நவீனத்துவத்தின் எல்லைகளைத் தாண்டி நகர்த்தி முன்கொண்டு செல்வதில் மிகுந்த முனைப்புடன் அவர் இயங்கி வந்திருப்பதை அவரது படைப்புகளின் வழியேயும், கோட்பாட்டு நூல்கள் வழியேயும் அறிந்துகொள்ள முடியும்.

சுரேஷ் பின்-நவீனத்துவத்தை வாசிப்புச் செய்து அதனை உள்வாங்கி தமிழ்ச் சூழலில் அதனை விரிவானதும், எளிமையானதுமான உரையாடல்மயப்படுத்துவதற்கு முன்னரே அது சார்ந்த படைப்புகளை எழுதத் தொடங்கி இருந்தார். அந்தவகையில் அவரது அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும், அட்லாண்டிக் மனிதன் மற்றும் சிலருடன். யுரேகா என்றொரு நகரம், சிலந்தி முதலான பின்-நவீன பரிசோதனை நாவல்கள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியன.

நவீனத்துவம் கலையை மனித வாழ்வு பற்றிய உண்மையாகவே நோக்குகிறது. அதன்படி, ஒரு இலக்கியப் படைப்பின் தொழிற்பாடு மனித வாழ்வை உள்ளபடி சித்தரிப்பதாகும். தமிழில் புதுமைப்பித்தன் தொடங்கி சுந்தரராமசாமி வரைக்கும், ஜெயகாந்தன் தொடங்கி ஜெயமோகன் வரைக்கும் வாழ்வை உள்ளபடி சித்தரித்தல் என்ற நவீனத்துவ நோக்கின் ஏக பிரதிநிதிகளாகவே வலம் வந்தனர். வாழ்வை உள்ளபடி சித்தரித்தல் என்ற நவீனத்துவ கோஷத்தின் பின்னால் உண்மையில் மறைந்திருப்பது வாழ்வைப் போதிக்கும் படைப்பாளியின் தன்னகங்காரமும், அதிகாரத் தொனியும்தான் என்பதை வாசகன் கண்டுணரும் போது ஒருவித அலைக்கழிப்புக்குள்ளாகிறான். வாழ்வை உள்ளபடி சித்தரிக்கின்ற நவீனத்துப் படைப்புகள் மூலம் வாழ்வைப் புரிந்துகொண்டவர்கள் எத்தனை பேர்? அது நிகழ்ந்தால் உண்மையில் அந்தப் பணியை நவீனத்துவ இலக்கியப் பிரதிகளால் மட்டும்தான் செய்ய முடிகிறதா? என்ற கேள்விகளுக்கு இதுவரை நவீன இலக்கியத் தரப்புகளிடமிருந்து எந்த பதிலுமில்லை.

இத்தகைய நவீன இலக்கியமே (Modern Literature) இலக்கியம் என்ற புரிதலோடு மட்டுமே தமிழ் இலக்கியச் சூழல் இயங்கிவந்த ஒரு தீவிரமான காலகட்டத்தில்தான் அதன் மீது ஒரு புதிய உடைப்பை, அதன் செல்நெறியில் ஒரு புதுத் திருப்பத்தை தமிழ் இலக்கிய சூழலில் சிலர் உருவாக்கினர். நவீன இலக்கியமே இலக்கியம் எனப் புரியப்பட்டு, பின்பற்றப்பட்டும் வந்த தமிழ் இலக்கிய சூழலில் அதற்கு முற்றிலும் எதிர்மாறான இலக்கியப் போக்கை முன்வைத்த பின்-நவீனக் கோட்பாடு ஒரு வெடிகுண்டு போல தமிழ் இலக்கியச் சூழலில் சலசலப்புகளை ஏற்படுத்தியது. அது தமிழ் இலக்கியத்தின் தேக்கமாகவோ, பின்னடைவாகவே அன்றி இன்னுமொரு பாய்ச்சலாகவே அமைந்தது.

இப்புதிய அடைவை, புதிய பாய்ச்சலை சாத்தியப்படுத்தியவர்களுள் ஒருவராகவே எம்.ஜி. சுரேஸ் இருந்தார். இதனால் தமிழ் இலக்கிய சூழலில் அவரது இடமும் இருப்பும் எந்தவிதத்திலும் புறக்கணிக்கப்பட முடியாதது. எந்த மலையிலும் எதிரொலிக்கக் கூடிய பின்-நவீன குரல் அவருடையது. தமிழ்ச் சூழலில் பின்-நவீனத்துவம் தொடர்பான உரையாடல்கள் புதிதாக தொடங்கப்பட்ட சூழலில், ஒரு கோட்பாட்டுச் சட்டகத்துள்ளிருந்த அதனை ஒரு படைப்பு உத்தியாக தமிழ்ச் சூழலில் முதன் முதலில் மாற்றிக் காட்டியவர்களில் ஒருவராகவும் எம்.ஜி. சுரேஷ் விளங்கினார்.

சுரேஷின் அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும், அட்லாண்டிக் மனிதன் மற்றும் சிலருடன். யுரேகா என்றொரு நகரம், சிலந்தி ஆகிய அனைத்து நாவல்களுமே தமிழின் பரிசோதனை முயற்சிகளாகவும், தமிழின் நாவல் எடுத்துரைப்பு முறையிலும் (narrating the story), கதையம்சத்தில் புதுமையானதாகவும் புனையப்பட்ட நாவல்களாக உள்ளன. அந்தவகையில் தமிழ்ப் பின்-நவீன முன்னோடி நாவலாசிரியராக எம்.ஜி. சுரேஷைக் கருத முடியும் அல்லது குறைந்தபட்சம் தமிழ்ப்பின்-நவீன முன்னோடி நாவலாசிரியர்களுள் ஒருவராகவேனும் அவரைக்கொள்ள முடியும்.

எம். ஜி. சுரேஷின் புனைவுகள், அவர் உருவாக்கும் கதாபாத்திரங்கள் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இன்றைய உலகின் புனைவுத் தன்மையையும், நிச்சயமற்ற தன்மையையும் வாழ்வை எந்த நம்பிக்கைக்கூடாகவும் புரிந்துகொள்ள முடியாத சிக்கல் தன்மையையும் ஒருவித மிகைப் புனைவுத் தன்மையுடன் வாசகனுக்கு காட்சிப்படுத்த எத்தனிக்கின்றனர். வாழ்வை விளக்க முற்படும் படைப்பு என நாம் கொண்டாடும் நவீன நாவல்களின் கதாபாத்திரங்களுடன் சுரேஷின் கதாபாத்திரங்களும் நெருங்கி வருகின்றனர். ஒரு வகையில் பார்த்தால் சுரேஷின் பின்-நவீனக் கதைகளும் மனித வாழ்வைப் பற்றிப் பேசுபவைதான். ஆனால் அது வாழ்வை யதார்த்தத்தின் வரண்ட மொழியால் வரையறுத்துக் காட்டாமல் கற்பனையின் அதீத மொழியால் புனைந்து காட்டுகிறது. அந்தவகையில் எம்.ஜி. சுரேஷ் தமிழ் இலக்கியத்தின் பொதுப் போக்கிலிருந்து விலகி ஒரு உப இலக்கியப் போக்கைத் தீவிரமாக நிறுவுவதில் அக்கறை கொள்கிறார். இலக்கியம் குறித்த பின்-நவீனக் கதையாடல்களை அதற்காக அவர் கைக்கொள்கிறார்.

நவீனத்துவக் கதைகளுக்கு சில நோக்கங்கள் இருந்தன. அந்நோக்கங்களை நிறைவு செய்வதே இலக்கியத்தின் ஈடேற்றமாக அது கருதியது. கதையின் வெற்றி அதன் நோக்கம் நிறைவு செய்யப்படுவதிலேயே தங்கி இருந்தது. தமிழில் புதுமைப்பித்தனில் உக்கிரமாகத் தொடங்கிய இந்நவீனத்துவச் சிறுகதைகள் “எழுத்து“ காலப்பகுதியில் ஒரு தீவிர வளர்ச்சியை எட்டியது. அப்போதிருந்து இப்போது வரை அது ஒரு “கட்டுப்பட்ட வடிவத்தை“ யே கொண்டிருக்கிறது. ஆனால் பின்நவீனக் கதைகள் நவீனத்துவத்தின் இலக்கிய நோக்கின் தலைகீழ் வடிவமாக தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளது. அது நோக்கத்துக்குப் பதிலாக விளையாட்டையும், கட்டுப்படுத்தப்பட்ட வடிவத்துக்கு பதிலாக வடிவமற்ற ஒரு திறந்த நிலையையும் வலியுறுத்தியபடி இருக்கிறது. அது கதைகூறலின் அல்லது எடுத்துரைப்பின் அடுத்த கட்ட வளர்ச்சியாகவோ, மாற்றமாகவோ நோக்குவதற்கு இன்று ஒரு தலைமுறை தயாராக இருக்கிறது.

நவீனத்துவ எடுத்துரைப்பின் தொகுத்தல், ஒருங்கிணைத்தல் போன்ற முறைமைகளுக்கு பதிலாக பின் நவீனத்துவம் தகர்ப்பமைப்பையும் (Deconstruction), எதிர்த்தலையும் சிபார்சு செய்கிறது.

நவீனத்துவச் சிறுகதைகள் எப்போதும் ஏதேனுமொன்றினதோ அல்லது பலவற்றினதோ இருப்பைக்கொண்டே (ஆசிரியரின் இருப்பு, மையக்கதையின் இருப்பு, மையக்கதாபாத்திரத்தின் இருப்பு, சுயத்தின் இருப்பு) தன்னை ஒரு கதையாக வாசகன் முன்னால் முன்னிறுத்திக் கொள்கிறது. பின்-நவீனத்துவக் கதைகள் இந்த “இருத்தல்களை“ மறுத்து “இன்மைகளை“ (absence) ஒரு பொதுத்தன்மையாக முன்னகர்த்தியுள்ளது.

பின்-நவீன கதையில் நம்பிக்கைக்குரிய மையமுடைய பிரக்ஞைத் தன்மையோ, கதைசொல்லியோ இல்லாமல் போகலாம். ஆனால் அதுவே கதையின் கலையம்சத்தை, அதன் தொனியை சிதைத்து விடுவதில்லை. அவை தன்னளவில் வாசகனோடு உரையாடவே செய்கின்றன. பின்நவீன படைப்பின் கதபாத்திரங்கள் கூட மாறும் தன்மையுடையவர்களாகவும் நம்பிக்கைக்குரியவர்களாக இல்லாமலும் இருக்கலாம்.

எம்.ஜி. சுரேஷ்

எம்.ஜி. சுரேஷ்


நவீன வாழ்கை்கையைக் கேலி செய்பவர்களாக கூட இருக்கலாம். ஆனால் அவை கொண்டிருக்கும் இரசனை அந்தவகை இலக்கியப் போக்கின் தேவையை அவசியப்படுத்தி இருப்பதாகவே தோன்றுகிறது. எம். ஜி. சுரேஷ் இந்தவகைக் கதைகள் மூலமே பின்-நவீன இலக்கியவெளியில் வினைபுரிந்தார்.

அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத்தேனீரும்

எம்.ஜி. சுரேஷின் இந்நாவல் தமிழில் ஒரு பின்-நவீன பரிசோனை நாவலாகும். பின்-நவீன எழுத்துமுறையை நாவல் வடிவில் இது தமிழுக்கு அறிமுகம் செய்கிறது. மன்னன் அலெக்ஸாண்டர் பற்றிய நமது மன பிம்பத்தை, பொது அறிதலில் ஒரு சிறு திருப்பத்தை ஏற்படுத்தும் கதையம்சம்கொண்ட நாவல் இது. இது தமிழ் வாழ்கையையைப் பேசும் நாவல் அல்ல. அதேநேரம் தமிழ் வாழ்க்கைக்கு அந்நியமான நாவலுமல்ல. தமிழ் எதார்த்தத்தையே அது உலகத் தளத்தில் பொருத்திப் பேசுகிறது. மையக்கதை என எதுமில்லாத இந்நாவலில் தனிமனிதனின் அடங்காத அதிகாரவெறி மனித குலத்தை எப்படிச் சிதைக்கிறது என்பது ஒரு மையம் போல் வடிவங்கொள்வதும், கதைக்குள் அந்த மையம் அப்படியே கரைந்துவிடுவது போன்ற ஒருவித மாயத்தன்மையையும், மிகை புனைவுத் தன்மையையும் நாவலின் வாசக இரசனையை கூட்டிச் செல்கின்றன.

நாவலில் காலத்தை ஒரு நேர்கோட்டில் எம்.ஜி. சுரேஷ் பயன்படுத்துவதில்லை. காலத்தின் பல்வேறு அடுக்குகளையும், அதன் நகர்வுகளையும் குலைத்துப் போடுகிறது இந்நாவல். அலெக்ஸாண்டர் எனும் தொன்மையான கதாபாத்திரமே நாவலின் கதைக்குள் வாழ்கிறது. நம் பொது மனதில் பதிந்துள்ள அலெக்ஸாண்டர் பற்றிய சித்திரத்தை மாற்றியமைக்கிறது இந்நாவல். ஒரே அலெக்ஸாண்டர் நான்கு வித அலெக்ஸாண்டர்களாக வருகிறார். கதையில் அலெக்ஸாண்டர் தொடர்புபடும் சம்பவங்களோடு காலம் ஒரு ஒழுங்கில் இருப்பதாக சுரேஷ் காட்டுவதில்லை. இது நவீன நாவலொன்றில் காலம் பெறும் முக்கியத்துவத்தையும், சீர் தன்மையையும் இந்நாவலில் அவர் தலைகீழாக்கி விடுகிறார்.

சுரேஸின் புனைவுகளில் வரும் கதாபாத்திரங்கள் மிகைப் புனைவின் மாயத்தன்மையுடன் அலைபவர்களாக இருப்பினும் மனிதகுலத்துக்கு ஏதேனுமொரு செய்தியைச் சொல்பவர்களாகவும் சித்திரிக்கப்படுகின்றனர். அது நவீன நாவலில் வரும் கதாபாத்திரங்களின் குணப்பண்பாக இருப்பினும் சுரேஷின் பின்-நவீன நாவலுக்குள்ளும் அத்தகைய மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவரது நாவல்கள் மனிதனுக்குள் அமுங்கிக் கிடக்கும் வேட்கைகள் எப்படி மனித குலத்துக்கு எதிராகத் திசை திரும்புகின்றன என்பதையும், அவை எப்படி ஒரு மனிதனின் தன்னழிவுக்கும், தன் சூழல் அழிவுக்கும் காரணமாக அமைந்துவிடுகின்றன என்பதை ஒரு நவீனத்துவப் புனைவு போல கதைக்குள் புகுத்திவிடுகிறார். இந்தப் புள்ளியில் சுரேஷ் ஒரேநேரத்தில், ஒரே கதையில் பின்-நவீனத்துவத்தையும், நவீனத்துவத்தினையும் கதையின் செழுமைக்காக பயன்படுத்திக் கொள்ளும் ஒரு படைப்பாளியாகவே தமிழ்ச் சூழலில் இயங்கி வந்திருக்கிறார் என்பதைக்காட்டுகிறது.

புனைவுக்கு அப்பால் பின்-நவீனத்துவம் தொடர்பான இரண்டு கோட்பாட்டு அறிமுக நூல்களையும் அவர் வெளியிட்டார். அவை பின்-நவீனத்துவத்தை வரலாற்றுரீதியாகவும் தத்துவார்த்தரீதியாகவும் மிகவும் எளிமையாக அறிமுகம் செய்பவை. தமிழ்ப் பின்-நவீன இலக்கியச் சூழலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றைக்கும் அவர் பெயரை இலக்கியவெளியில் உச்சரித்துக் கொண்டே இருக்கும்.

•••

Comments are closed.