ஒரு பெண் உறவுகளைப் பேணுகிறவளாக ஏன் இருக்கவேண்டும் : சக்தி ஜோதி

[ A+ ] /[ A- ]

images (11)

மனித வாழ்க்கைக்கு அர்த்தம் தருவது உறவுகள்தான். உறவுகளின்பால் எனக்கு நம்பிக்கை அதிகம். இதனைக் குலைப்பது போன்ற சம்பவங்களை பத்திரிக்கைகளில் வாசிக்கும் பொழுது மனம் கலங்கிப்போகிறது. சமீபத்தில் வாசித்ததில் அவ்விதமாக மனதை பாதித்த ஒரு பத்திரிக்கைச் செய்தி, மகன் வெளிநாட்டில் இருக்க, மும்பையில் அவருடைய அம்மா மட்டும் அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக இருந்திருக்கிறார். பதினான்கு மாதங்களாக அம்மாவோடு தொடர்பு இல்லாமல் இருந்த மகன், ஒருநாள் அம்மாவைப் பார்க்க மும்பை வந்திருக்கிறார்.

பலமுறைகளின் அழைப்புமணிக்குத் திறக்காமல் போனதால், மாற்றுச்சாவி ஏற்பாடு செய்து வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார். அங்கே, அவருடைய அம்மா இறந்து பலநாட்கள் ஆன நிலையில், நாற்காலியில் எலும்புக்கூடாக. அம்மா எப்போது இறந்தார் என்று மகனுக்குத் தெரியவில்லை. “மகனின் அலட்சியத்தால் தாய்க்கு நேர்ந்த துயரம்” இவ்வளவுதான் செய்தி. ஆனால் இவ்வளவுதானா இந்தச்செய்தி.

ஆஷா ஷகானி என்கிற அந்தத் தாய்க்கு வயது 63. கணவன் இறந்து மூன்று ஆண்டுகள் அந்தப்பெண் தனிமையில் இருந்திருக்கிறார். அமெரிக்காவிலிருந்த மகனுக்கு அம்மாவோடு தொலைபேசியில் பேசக்கூட நேரம் இல்லை. அத்தனை வேலைப்பளு அல்லது அம்மாவின் மீது கவனமின்மை.
ஒருவர் மீதான அன்பை வெளிப்படுத்துவதே அவர் நலனின் மீதான அக்கறைதான். குழந்தைகள் நலனில் பெற்றோர் அக்கறையுடன் இருப்பதும், வயதான காலத்தில் பெற்றோர் நலனை குழந்தைகள் பேணுவதும்தான் மனித உறவுகளின் நியதி. இந்த ஒழுங்கு கலைந்து போவதற்கு பெரும்பாலும் இருவருமே காரணமாக இருப்பார்கள். மேலும் மனிதஉறவு என்பது வெறும் குடும்பம் மட்டும் சார்ந்தது அல்ல. நாம் நிற்கிற நிலம் மட்டுமே நம்மைச் சுமப்பது இல்லை. அந்த நிலத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் பக்கவேர்கள் இருந்தால்தான், நம்முடைய கால்கள் ஊன்றியிருக்கும் நிலத்தினால் நம்மைத் தாங்கிக் கொள்ளமுடியும்.
மகன்தான் வெளிநாட்டில் இருக்கிறார். ஆனால் இங்கே இந்த அம்மாவைத் தேடும்படியாக உறவினர்களோ, தெரிந்தவர்களோ, நண்பர்களோ இல்லையா. அவர் குடியிருந்தது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. அங்கே மின்கட்டணம், தொலைபேசிக்கட்டணம், பராமரிப்பு வசதி என எதற்காகவும் ஒருவருமே அந்தப்பெண்மணியைத் தேடவில்லையா. 63 ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்ந்தவரைத் தேடுவதற்கு ஒருவர்கூட இல்லாமல் போனது மிகுந்த துயர் தருகிற செய்தி.

இப்படித் தனிமையில் இறந்து கிடந்த முதியவர் யாரையேனும் இரண்டு, மூன்று நாட்கள் அல்லது சிலவாரங்கள் கழித்துக் கதவை உடைத்துத் திறந்ததான செய்திகளை மிக எளிதாகக் கடந்துவிடுகிறோம். இன்றைய நவீன நகர்ப்புற வாழ்வியலும், இதனைப் போலவே கொஞ்சம்கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கும் கிராமப்புற மக்களின் வாழ்வும் சக மனிதர்களின் மீதான அக்கறையை இழந்து கொண்டிருப்பதைத்தான் இதுபோன்ற பல செய்திகள் காட்டுகின்றன.

ஒருகாலத்தில் வீட்டில் சமைக்கும்பொழுது எதிர்பாராத ஒரு விருந்தினருக்கும் சேர்த்தே சமைக்கிற வழக்கம் இருந்தது. இரவு உணவை முடித்துவிட்டுத் தூங்கும் பொழுது ஒரு பாத்திரத்தில் சிறிய அளவிலாவது சாதம் வைத்து தண்ணீர் ஊற்றி வைப்பார்கள். அதாவது இரவு நேரத்தில் உலாவுகிற காவல் தேவதைகள் சாப்பாடு இல்லாமல் ஏமாந்து போய்விடக் கூடாது என்று இதற்கு ஒரு கதையும் சொல்வார்கள். ஆனால் இது, யாராவது ஒரு விருந்தினரை எதிர்பார்த்துக் கொண்டே வாழ்ந்த முன்னோரின் வாழ்க்கை முறையைக் குறிக்கிறது.

விருந்தும் மறந்து, உறவினரும் அற்றுப்போன வாழ்க்கை முறைக்கு நகர்ந்திருப்பதை இன்றைக்கு பல வீடுகளில் காணமுடிகிறது. இதனுடைய வெளிப்பாடாகவே மும்பையில் தனித்து இறந்து கிடந்த ஒரு அம்மாவைப் பார்க்க முடிகிறது. இது ஏதோ மும்பையில் நடந்த நிகழ்வாக கருதி ஒதுக்கிவிட முடியாது.

எத்தனையோ வகைகளில் இன்றைய தகவல் தொடர்புகள் பெருகியுள்ளன. மனித உறவுகளை நெருங்கியிருக்கச் செய்வதற்கான தொழில்நுட்பங்கள்,
பக்கத்து வீட்டில் ஆண்டுக்கணக்காக வசிக்கிற மனிதரின் பெயர் கூட தெரியாத நிலைக்கும் நகர்த்தியுள்ளது. பலசந்தர்ப்பங்களில் நம் அண்மையில் வசிக்கிற, நம்முடைய நலனில் அக்கறை கொண்டிருப்பவரைக்கூட சமூகவலைத் தளங்கள் வழியாகக் கிடைக்கிற நட்புகளுக்காக புறக்கணிக்கிறோம். தொலைத்தொடர்பு வசதியற்ற காலத்தில் பக்கத்துவீட்டில் வசிப்பவர் மீதிருந்த கவனம் இன்றைக்குக் குறைந்துவிட்டது. ஆதார் அட்டை உட்பட பல்வேறு விதமான வழிமுறைகளில் தொடர்ச்சியாக நம்மைப் பற்றிய தகவல்களை முற்றிலும் கணினி வயமாக்கிவிட்டோம். மேலும் இரயில்நிலையம், பஸ்நிலையம், கல்யாண மண்டபம், உணவு விடுதிகள், கடைகள், பெரிய வீடுகளின் வாசல் புறத்திலிருந்து தெரு முனைவரை என யார்யாராலோ அன்றாடம் கண்காணிக்கப் படுகிறோமே தவிர அக்கறையோ பிரியமோ கொண்டிருப்பவர்களின் அண்மையை இழந்து கொண்டிருக்கிறோம்.

தன்னுடைய அந்தரங்கத்தில் பிறர் தலையிடக்கூடாது என்பது மேற்கத்திய மனோபாவம். இந்த மனோபாவம் படித்த, மேல்தட்டு வர்க்கத்தவர் வசிக்கும் நகர்ப்புறங்களில் அதிகமும் பின்பற்றப்படுகிறது. கிராமப்புறத்திலோ இந்நிலை நேரெதிர். கணவன், மனைவி சண்டை என்றால் கூட அடுத்த வீட்டில் உள்ளவர்கள் தலையிட்டு சமாதானம் செய்வார்கள். கிராமத்தில் உள்ள இம்மாதிரியான செயல்பாடுகள் அடுத்தவர் உரிமைக்குள் அத்துமீறி நுழைவது போலவோ தனிநபர் சுதந்திர நெருக்குதல் என்பது போலவோத் தோன்றலாம். ஆனால் கிராமங்களில் வாழ்கிற முதியவர்கள் தனிமையில், கேட்பார் யாருமற்று இறந்து போவதற்கான சாத்தியம் மிகக்குறைவு.

சங்ககாலத்தில் உள்ள அந்தரங்கம் என்பது தோழியோ பாங்கனோ அறிந்ததாகவே இருந்தது. சமூக உறவுகள் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ குடும்ப அமைப்புக்குள் தங்களை இணைத்துக் கொண்டிருந்தன. சமூக மனநிலைக்கு அடையாளமாக சங்ககாலத்தைக் கொள்ளலாம். சங்கத்தமிழ் இலக்கியங்கள் காதல், வீரம், கொடை போன்றவை மட்டுமன்றி இல்லறத்திற்குறிய அறமாக விருந்தோம்பலைப் பற்றி சிறப்பித்துக் கூறியுள்ளன. விருந்து என்றாலே புதுமை என்றும் ஒரு பொருளுண்டு. புதியவர்களின் வரவைக் குறித்த சொல்லின் அடிப்படையிலேயே விருந்து என்பது செயலாக மாறியிருக்கிறது. யாரேனும் ஒரு புதிய மனிதருக்கான உணவு அல்லது தண்ணீர் அல்லது வழிப்போக்கர்கள் தங்கிச் செல்லும் திண்ணை வைத்த வீடுகள் என நம்முடைய முன்னோர்கள் எப்பொழுதும் யாரேனும் ஒரு மனிதருடன் தொடர்பில் இருந்தார்கள். வாசலில் அமர்ந்தபடி போவோர் வருவோரைக் கவனித்து “சாப்பிட வாங்க என்றோ, மோர் குடிக்கிறீங்களா என்றோ”
யாருடனாவது பேசிக்கொண்டே இருப்பார்கள்.

தன்னைத் தேடி வருகிற புலவர், பொருநர், பாணர், கூத்தர், விறலியர் போன்றோருக்கு விருந்து கொடுத்து மகிழ்கின்ற அரசர்கள் இருந்தார்கள். “மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து” எனக் கருதி, விருந்தினர் மனம் வாடாத அளவிற்கு விருந்தோம்பலை செய்தனர். என்றபோதிலும் அந்த விருந்தினை ஏற்றுக்கொண்ட எந்தப்புலவரும், பொருநரும் அல்லது மற்றவரும் வாழ்நாள் முழுக்க அங்கேயே தங்கிவிடுவதில்லை. குறிப்பிட்ட சில காலம் தங்கி, பரிசில்கள் பெற்றுக்கொண்டு தங்கள் ஊருக்குத் திரும்பவே ஆர்வம் கொண்டவர்களாக இருந்தார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கக்கூடும். ஒன்று, இவர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புகிற விருப்பத்தையே எப்பொழுதும் கொண்டிருந்தார்கள், இரண்டாவது, தங்களைப் போன்று தேவையில் உள்ள மற்றவர்களுக்கு வழிவிட்டுச் சென்றார்கள்.

முடத்தாமக்கண்ணியார் என்கிற பெண்பாற்புலவர் எழுதிய பொருநராற்றுப்படை, கரிகால் வளவனிடம் பரிசு பெற்ற பொருநன் வறுமையில் உள்ள பொருநனை அரசனை நோக்கி வழிப்படுத்துகிற விதமாகப் பாடப்பட்டுள்ள 248 வரிகள் கொண்ட பாடல். இந்தப் பாடலில், அரசனிடம் பரிசு பெற்று மகிழ்ந்து திரும்பும் பொருநன், எதிரே வந்த வறிய பொருநனின் யாழின் அமைப்பு, அவனுடன் சென்ற பாடினியின் உடல் வருணனை, கரிகாலனின் சிறப்பு, விருந்தோம்பல், கொடைத்தன்மை, சோழ நாட்டின் வளம், வெண்ணிப்போர் பற்றிய குறிப்பு, காவிரியின் வெள்ளச்சிறப்பு, வயல்வளம் போன்றவற்றைக் குறிப்பிடுகிறார்.

விருந்தினரை வரவேற்று கவனிக்கிற முறையைப் பற்றி பொருநராற்றுப்படையில் உள்ள பாடல் வரிகள்,

“கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்பக் கூறிக்
கண்ணிற் காண நண்ணுவழி இரீஇப்
பருகு அன்ன அருகா நோக்கமொடு
உருகு பவைபோ லென்பு குளிர்கொளீஇ
ஈரும் பேனும் இருந்திறை கூடி
வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த
துன்னற் சிதாஅர் துவர நீக்கி
நோக்குநுழை கல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவுரி யன்ன அறுவை நல்கி
மழையென மருளும் மகிழ்செய் மாடத்து
இழையணி வனப்பி னின்னகை மகளிர்
போக்கில் பொலங்கல நிறையப் பல்கால்
வாக்குபு தரத்தர வருத்தம் வீட
ஆர வுண்டு பேரஞர் போக்கிச்
செருக்கொடு நின்ற காலை மற்றவன்
திருக்கிளர் கோயி லொருசிறைத் தங்கித்
தவஞ்செய் மாக்கள் தம்முடம் பிடாஅ
ததன்பய மெய்திய வளவை மான
ஆறுசெல் வருத்தம் அகல நீக்கி
அனந்தர் நடுக்க மல்ல தியாவதும்
மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து..”

இந்தப் பாடலைப் பாடுகிற பொருநன், தான் மிகுந்த வறுமையில் இருந்த நிலையில் கரிகாலனை நாடி வந்திருக்கிறார். கரிகாலனைச் சந்தித்தவுடன் தன்னிடமிருந்த இசைக் கருவிகளை இசைத்து பாடத் தொடங்கும் முன்பாக கரிகாலன் எழுந்துவந்து, தன்னோடு பொருந்தியிருந்த பழைய நண்பரிடம் உறவுடைமையைக் காட்டுவதுபோல நெருக்கத்தைக் காட்டியுள்ளான். இனிய உரையாடலைத் தொடங்கியிருக்கிறான். அவன் தன்னுடைய கண்களினால் முழுமையாகக் காணும்படி தனக்கு மிக அண்மையான இடத்தில் அமர வைத்துக் கொண்டான். கண்களினால் பருகும் தன்மையை ஒத்த கரிகாலனின் பார்வையினால் தன்னுடைய எலும்புகளை நெகிழ்ந்து உருகும்படி குளிர்ச்சி கொள்ளச் செய்திருக்கிறான். ஈரும், பேனும் நிறைந்து, வியர்வையால் மிகவும் நனைந்து, உடையின் கிழிசலை வேறுபட்ட பல நூல்கள் கொண்டு தைத்து நைந்து போயிருந்த ஆடையை அகற்றி, புத்தாடை அணிவிக்கச் செய்திருக்கிறான். அந்த ஆடை, நூலிழையின் வழித்தடம் தெரியாத அளவு நுட்பமாக நெய்யப்பட்ட பாம்பின் தோலை ஒத்த மெல்லிய தன்மையுடன் பூவேலைப்பாடுகளுடன் அமைந்திருந்தது. வழிநடையின் வருத்தம் தீர, அழகிய ஏவல் மகளிரால் பலமுறை பறிமாறபட்ட கள்ளினைப் பருகிய பொருநன் தன்னுடைய சுற்றத்தோடு மன்னனின் அரண்மனையில் மனக்கவலை ஏதுமின்றி உறங்கி, வைகறையில் துயில் நீங்கியிருக்கிறார்.

களைப்புத் தீரத் தூங்கி எழுந்த அடுத்தநாள் காலையில் அரசவைக்குச் சென்று அரசனைப் பார்க்கிற பொருநன், அரசனைப் பாடி மகிழ்விக்கிறான். முழவு இசைக்க, சிறிய யாழை உடைய விறலியர் நடனமாடினர். உணவு உண்ணுகிற நேரம் வந்தவுடன் அருகம்புல் பழுதை உண்டு கொழுத்த ஆட்டின் பருத்த தொடைக்கறியை நன்கு வேகவைத்து சமைத்த உணவை கரிகாலன் பரிமாறினான். ஆடலும், பாடலும் விருந்துமாகப் பலநாட்கள் கழிந்தபின், தங்களுடைய ஊருக்குத் திரும்ப பொருநன் விரும்புகிறார். இவர்களைப் பிரிய மனமில்லாத கரிகாலன் “எம்மைவிட்டு பிரிந்து செல்லப் போகிறீரோ” என வெகுண்டு, பின்பு பொருநன் தன்னுடைய ஊருக்குத் திரும்பிச் செல்லக் கேட்கும் விதத்தினால் ஒத்துக்கொண்டு “யானைககளையும், கன்றுகளையும், ஆடைகளையும் பரிசிலாகப் பெறுவீராக” எனச் சொல்கிறான்.

பொருநன் வறுமை நிலையில் உள்ளவன். அவனது வறுமைக்கு இவ்வளவு கொடுத்தால் போதுமென அரசன் முடிவு செய்வதில்லை, எவ்வளவு வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என்று தன்னுடைய தகுதிக்கு ஏற்ப வழங்குகிறான். அரசன் கொடுக்கிறான் என்பதற்காக பொருநன் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளவில்லை. “என்அறி அளவையின் வேண்டுவ முகந்து கொண்டு, இன்மை தீர வந்தனென்.” என தன்னுடைய தகுதிக்கேற்ப பொருநன் எடுத்துக் கொண்டு தன்னுடைய ஊர் திரும்புகிறான். கொடுப்பது என்பது தாராளமாகவும், பெறுவது என்பது தன்னுடைய தகுதி அறிந்தும் இருப்பதாக இந்தப்பாடலில் அறிய முடிகிறது.

கொடுப்பது என்பது ஒருவரின் இயல்பாக இருக்கும் பொழுது அது முழுமையானதாக இருக்கும். தான் அறிந்த கல்வியை போதிப்பது, தான் சேர்த்த செல்வத்தை வழங்குவது, அன்பு செய்வது என இம்மூன்றுமே முழுமையாக வழங்கப்பட வேண்டியவை. பெறுபவர் அவரவர் தகுதிக்கேற்ப தான் ஏற்றுக்கொள்வார்கள். விருந்தோம்பலும் அப்படித்தான்.

வறுமையில் வாடுகிறவர்கள் எந்தக் காலத்திலும் இருக்கிறார்கள். செல்வம் குவிந்திருப்பவர்கள் உதவி செய்வதுதான் குறைந்து விட்டது. மிகக்குறைந்த எண்ணிக்கையில் பிறர் நலனில் அக்கறை கொண்டு உதவுகிறவர்கள் சிலர் இருக்கிறார்கள். தாங்கள் பெற்ற உதவியை, தாங்கள் உண்ட உணவை, தாங்கள் உறங்கிய நிம்மதியை, தாங்கள் பெற்ற பரிசில்களை மற்றவர்களும் பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் அருகிவிட்டார்கள்.

நாடுவிட்டு நாடு பெயர்ந்து மன்னர்களைச் சந்தித்து பாடல்கள் பாடி, ஆடி பிழைப்பு நடத்திய பொருநர்கள் தங்கள் சொந்த நிலத்தில் தங்கி இருப்பதற்கே விரும்புகிறார்கள். முடத்தாமக்கண்ணியார் தன்னுடைய பொருநராற்றுப் படையில் கரிகாலனின் அன்பையும், கருணையையும், கொடையையும் பாடினாலும் தங்கள் ஊருக்குத் திரும்புகிற பொருநன் ஒருவனின் சொல்லெடுத்தே தொடங்கியுள்ளார். எத்தனை உயர்வான விருந்தோம்பலையும் ஒருகட்டத்தில் போதும் என்று சொல்லி விலகுகிற தன்மையும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

தன்னுடைய குழந்தைகள் மட்டுமே முதுமைக்காலத்தில் தங்களைக் கவனித்துக் கொள்வார்கள் என்கிற அழுத்தம் முந்தைய தலைமுறை வரையில் இருக்கவில்லை. கூட்டுக்குடும்ப வாழ்வும், உறவினர்களைப் பேணுகிற தன்மையும் இருந்த காரணத்தினால், முதுமை என்பது அத்தனை துயர் தரக்கூடியதாக இருந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைய வாழ்க்கை முறையில் தொழில் சார்ந்து குழந்தைகள் வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு என்று செல்லவேண்டிய கட்டாயம் இருக்கிறது. மிக நீண்ட வருடங்கள் இணைந்திருந்த நிலத்தையும் மக்களையும் விட்டுவிட்டு தங்கள் மகனோடு அல்லது மகளோடு தங்கியிருக்கிற பெற்றோரும் கூட தங்களுடைய ஆழமான விருப்பமாக தங்கள் ஊருக்குத் திரும்புவதையே பெரும்பாலும் விரும்புகிறார்கள்.

மகன், மகள் எல்லோரும் எங்காவது அயல்நிலத்தில் தங்கி செழுமையாக இருந்தாலும், தான் பிறந்து வளர்ந்து இடத்தில் தங்கள் முதுமையைக் கழித்துக் கொண்டிருப்பவர்கள் பலரை அறிந்திருக்கிறோம். ஆஷா ஷகானி என்கிற ஒரு அம்மாவுக்கு அப்படியான சொந்த நிலமோ மனிதர்களோ அற்றுபோய் விட்டார்களா என்பதுதான் அந்தச்செய்தியைப் படித்தவுடன் தோன்றியது. பெரும்பாலும் இந்திய ஆண்களை விட பெண்கள் தனிமையில் இருப்பதில்லை. உறவினர்களை, நண்பர்களைப் பேணுவது தான் பெண்களின் அடிப்படையான இயல்பாக இருக்கிறது. கணவன் இறந்த பிறகு தங்களை பக்தி மார்க்கத்திலோ, பேரன் பேத்திகளை வழிநடத்துவதிலோ தங்களை இணைத்துக்கொள்வார்கள். பல சமயங்களில் பெண்கள் யாருடனாவது நட்பு கொண்டாடுவது போல அல்லது யாரையேனும் குற்றம் சொல்லிக் கொண்டாவது மற்றவர்களோடு இணைந்திருக்கிறார்கள்.
இவ்விதமான இயல்பைத் தவறவிடாத பெண்கள் ஒருபோதும் தனிமையில் இறந்துபோவதில்லை.

*********************************************************************************************************************

ஆற்றுப்படை :

பத்துபாட்டிலுள்ள திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் என்கிற கூத்தராற்றுப்படை போன்ற நூல்கள் அத்தனையுமே தான் பெற்ற பரிசில்களை மற்றவர் பெறவேண்டி வழிபடுத்தப் படுவதற்காக எழுதப்பட்டவை.

புறநானூற்றில் பாணாற்றுப்படை, விறலியராற்றுப்படை, புலவர் ஆற்றுப்படை போன்றவையும் இவ்வகைப் பாடல்களே.

பொருநராற்றுப்படை :

சங்கத் தொகை நூலான “பத்துப்பாட்டு” வகையில் வஞ்சியடிகள் கலந்த ஆசிரியப்பாவில் எழுதப்பட்ட நூல்.
பாடியவர்: முடத்தாமக்கண்ணியார்.
சோழப் பேரரசனான கரிகால் வளவனிடம் பரிசில் பெற்று மீண்ட ஒரு பொருநன், வழியில் வறுமையோடு எதிர்ப்பட்ட பொருநனை, அவ்வேந்தனிடம் உதவிபெற வழிப்படுத்துகிற பாடல். 248 வரிகள் உள்ள இந்தப் பாடலில், வறிய பொருநனின் யாழின் அமைப்பு, அவனுடன் சென்ற பாடினி வருணனை, கரிகாலன் சிறப்பு, விருந்தோம்பல், கொடைத்தன்மை, சோழ நாட்டின் வளம், வெண்ணிபோர் பற்றிய குறிப்பு, காவிரியின் வெள்ளச்சிறப்பு, வயல்வளம் போன்றவை பாடப்பட்டுள்ளன.
பொருநர்கள் ஏர்க்களம் பாடும் பொழுது உழவர் போலவும், போர்க்களம் பாடும்பொழுது வீரர் போலவும் வேடமிட்டு நடித்து, யாழிசைத்துப் பாடுவர்.

முடத்தாமக்கண்ணியார்:

இவர் கரிகாற்சோழன் மீது பொருநராற்றுப்படை பாடியவர்.
இவரது கால் முடமாக இருந்ததால் “முடம்” என்பது இவரது இயற்பெயரான “தாமக்கண்ணி” க்கு முன்னுட்டாக அமைந்துள்ளது. காமக்கண்ணி (காமாட்சி) போலவே இதுவும் பெண்ணின் பெயராகக் கருதப்படுகிறது.
தாமம் என்றால் மாலை, முடத்தாமம் என்றால் செண்டால் இணைத்து முடியிடப்படாமல் கழுத்தின் வழியே இருபுறமும் தொங்குகிற மாலை என்றும் பொருள். இதனால் கூட முடத்தாமக்கண்ணியார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். இது மருவி முடம் பட்ட தாமக்கண்ணி என உடல் ஊனத்தால் குறிப்பிடப்பட்டிருக்கலாம்.
பொருநனது யாழ் பற்றிய வருணனை, பாடினி பற்றிய வருணனைக்கு இவர் பயன்படுத்தியுள்ள உவமைகள் மூலமாக இவரைப் பெண்பாற் புலவர் என்பர்.
பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை போன்ற மற்ற ஆற்றுப்படைப் பாடல்களில் எதிரே வறுமையோடு வருபவரை ஆற்றுபடுத்துபவர் வழி சொல்லி அனுப்புவார். ஆனால் பொருநராற்றுப்படையில் செல்லத்தக்க வழியினைச் சொல்லாமல் கரிகாலனது கொடைச்சிறப்பு, விருந்தோம்பல், போர்த்திறம், நாட்டின் வளம் மட்டுமே பாடியுள்ளார்.
கரிகாலனைப் பற்றி கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய “பட்டினப்பாலை”யில் சொல்லப்படாத பல செய்திகள் இதில் உள்ளன. மேலும் வறுமையில் உள்ள வேறு ஒரு பொருநனை வழிப்படுத்தியமையால் இது கரிகாலன் வாழ்ந்த காலத்தில் அவனுடைய பாடப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் பட்டினப்பாலையில் குறிப்பிடப்படுகிற பல போர்கள், நகரங்கள் பற்றிய குறிப்புக்கள் இதில் இல்லை. வெண்ணிப்போர் பற்றி மட்டும் குறிப்பிடப்படுவதால் கரிகாலனின் இளமைக்காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என மா. இராசமாணிக்கனார் தன்னுடைய “பத்துப்பாட்டு ஆராய்ச்சி” என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

**

Comments are closed.