ஒரு வேரைப் பிடித்தபடி ( சிறுகதை ) / வண்ணதாசன்.

[ A+ ] /[ A- ]

வண்ணதாசன்.

பொதுவாகப் பத்திரிக்கை வைக்கிறவர்கள் காலையில் தான் வருவார்கள். அதுவும் ஆழ்வாரப்பன் வீட்டில் இருக்கிறாரா, அவரது புல்லட், அல்லது பெரிய வண்டி , ஜீப் நிற்கிறதா என்று பார்த்துவிட்டுத்தான் வருவார்கள். இப்படி விளக்கு வைத்த பிறகு மேல வீட்டுப் பெரிய பிச்சம்மாவும் சின்னப் பிச்சம்மாவும் ஒன்றாக நடந்து வருவது காசியம்மாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அதுவும் இன்றைக்குக் கார்த்திகை மாதப் பிறப்பு. காசியம்மா வீட்டுத் தலை வாசலில் இரண்டு விளக்குகளை ஏற்றியிருந்தாள். இரண்டும் யானை விளக்குகள். பர்மாவில் இருந்தோ ரங்கூனில் இருந்தோ அவளுடைய அம்மா வழி மூதாதை யாரோ கொண்டு வந்தது. சதைப்பற்று இல்லாமல் யானைகள் உயரமாக இருக்கும். அதன் மேல் ஒரு அம்பாரி. அம்பாரியின் உச்சிப் பகுதியில் விளக்குக் குழிவு. திரியை நன்றாக நுனியில் கனியவிட்டு, கோபிப் பொட்டு வைத்தது போல சுடர் ஒளிர ஆரம்பித்த சமயம் இரண்டு பேரும் தூரத்தில் வருவது தெரிந்தது.

மேல வீட்டில் எல்லோருடைய பெயரும் பிச்சை என்றே ஆரம்பிக்கும். பெரிய பிச்சம்மா பெயர் பிச்சை பார்வதி. சின்னப் பிச்சம்மா பெயர் பிச்சை லச்சுமி. ஆனால் ஊரில் எல்லோரும் கூப்பிடுவது பெரிய பிச்சம்மா, சின்னப் பிச்சம்மா தான். அனேகமாக காசியம்மா ஒருத்தி மட்டுமே அவர்களைப் பார்வதி அக்கா, லட்சுமி அக்கா என்று கூப்பிட்டிருப்பாள். காசியம்மா வெளியூர்க்காரி. என்பது முக்கியமான காரணம்.

ஆழ்வாரப்பன் இவ்வளவு தூரம் அசலில் பெண் எடுப்பான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே படித்து முன்னிலைக்கு வந்து வடக்கே காலேஜில் வேலை பார்க்கும் மூத்தவனுக்கு போலீஸ் கமிஷனர் வீட்டில் படித்த பெண்ணாகப் பார்த்துவிட்டார்கள்.. அப்பாவோடு ஊரோடு இருந்து தென்னந்தோப்பையும் விவசாயத்தையும் பார்த்துவந்த, கர்லா சுற்றி, கசரத் எடுத்து ஆள் பீமன் போல இருக்கிற, தோப்புக்காரரின் இளைய மகன் இப்படி மரப்பாச்சி பொம்மை போல ஒருத்தியைக் கட்டிக்கொள்வான் என்று எப்படித் தெரியும்? சொல்லப் போனால், மேல வீட்டுக்காரருக்கும் தோப்புக்காரர் வீட்டுக்கும் அந்தக் கல்யாணத்திற்கு அப்புறம் போக்குவரத்து சுமூகமாக இல்லாமல் போய்விட்டது. நல்லது கெட்டதில் பெயருக்குத் தலையைக் காட்டுவதோடு சரி.

மேல வீட்டுக்காரர் தன் மூத்த மகளை கம்மாய்ப்பட்டியில் ஒரு பெருங்கொண்ட விவசாயக் குடும்பத்தில் கட்டிக்கொடுத்தார். எட்டாம் கிளாசுக்கு மேல் படிப்பு வராத சின்னவள் பிச்சை லச்சுமியை வீம்புக்குப் பக்கத்து கல்லாங்கல் டவுண் முன்னாள் எம்.எல்.ஏ மகனுக்குக் கட்டிக் கொடுத்தார். அந்தப் பையன் வக்கீலுக்குப் படித்திருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் ரோடு காண்ட்ராக்டில் நல்ல சம்பாத்தியம். என்றாலும் சின்னப் பிச்சம்மா மழைக்கும் வெயிலுக்கும் மேலவீட்டில் தான் இருக்கிறாள். காசியம்மா கல்யாணம் ஆழ்வாரப்பனுக்கு வாழ்க்கைப்பட்டு இந்த ஊருக்கு வந்ததும் முதலில் பார்க்கவந்த சிலரில் பிச்சை லச்சுமியும் ஒருத்தி.

காசியம்மாவுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அன்றைக்குப் பொசுபொசு என்று தூரல் விழுந்தபடி இருந்தது. இந்த வீட்டில் இருந்த அம்பாசிடர் கார் போக, காசியம்மா வீட்டில் இருந்து தனிக்குடித்தனச் சாமான்கள் ஏற்றிவந்த ஒரு வேனும் அரை பாடி வண்டியும் தெருவில் நின்றன. பழுத்த வாழைத் தார்க் குலைகள் சாத்திவைக்கப்பட்டிருந்தன. ஜன்னல் கதவில் கழற்றிப் போட்ட வதகல் பூமாலைகள். ஒரு பச்சைப்பசேல் என்ற புல் வெளியை சதா மாடுகள் குனிந்து குனிந்து மேய்ந்தபடியே இருப்பது போல உண்டான வாசனையைக் காசியம்மாவுக்குப் பிடித்திருந்தது.

ஜமுக்காளம் விரித்து உட்கார்ந்திருந்த காசியம்மாவின் பக்கத்தில் சின்னப் பிச்சம்மா வந்து உட்கார்ந்தாள். ரொம்பப் பக்கத்தில் அவ்வளவு நெருக்கி உட்கார அவசியமில்லை. நிறைய இடமிருந்தாலும் சின்னப் பிச்சம்மா அப்படித்தான் அமர்ந்தாள். புதுச் சேலையாக இருக்கவேண்டும். கரும்புத் தோகை விளிம்பு போல அது காசியம்மாவின் தோலை உரசியது.

காசியம்மா கையை அவள் தன்னுடைய கையில் எடுத்து பூப் போல மடியில் வைத்துக்கொண்டாள். அவளுடைய அடிவயிற்றுக்கும் கீழே என்று சொல்ல வேண்டும். வெது வெதுப்பு இன்னும் இருக்கிறது. அப்படி ஒரு சம்பிரதாயம் எல்லாம் கிடையாது. அவள் எழுந்து போனாள். யாரோ கூட, ‘என்ன வேணும்?’ என்று அவளிடம் கேட்டார்கள். ஒன்றும் சொல்லாமல், விளக்குக்கு முன்னால் இருக்கும் தாம்பாளத்தில் இருந்து சந்தனக் கும்பாவை எடுத்துவந்து காசியம்மாவின் இரண்டு கன்னங்களிலும் சந்தனம் வைத்தாள், முழங்கையில் இருந்து மணிக்கட்டு வரை இழுவினாள். அடிக்கழுத்தில் பூசினாள். மார்பில் கைபட்ட மாதிரித்தான் இருந்தது. காசியம்மாவுக்குக் கூசியது. சின்னப் பிச்சம்மா சிரித்தாள். அவளுடைய பருத்த உதடுகள் நடுங்கின. கண்கள் நிரம்பியிருந்தன.

‘ஆழ்வார் செஞ்சா சரியாத்தான் இருக்கும்ணு நினைச்சேன். சரியாத்தான் இருக்கு’ என்று காசியம்மாளிடம் சொன்னாள். விரல்களைக் குவித்து முத்திக்கொண்டாள். காசியம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. யார் இவள்? ஆழ்வாரப்பன் என்கிற தன்னுடைய கணவனை ரொம்ப இயல்பாக ‘ஆழ்வார்’ என்று சொல்கிறாள்.

காசியம்மா அவளையே பார்த்தாள். கையும் காலும் உறுதியாக இருந்தன. முடி அவ்வளவு அடர்த்தி. நடுவகிடு எடுத்து, ஒரு மாதிரிக் காது ஓரம் வளைத்து மூடியிருந்தாள். இரண்டு முழங்கைகளிலும் ஃபேன் காற்றில் நலுங்கும் அளவுக்குப் பூனை முடி. காசியம்மாவுக்குக் கொஞ்சம் பொடிக் கண்கள். அவளுக்குப் பருமனாக இருந்தன. கன்ன எலும்பு துருத்தி, சிரிக்கும் போது திரளாமல் சதையைத் தோலோடு இழுத்துக் கட்டின. உயரமும் ஜாஸ்திதான். நிலைப்படியில் குனிந்து தான் வீட்டுக்குள் அவள் வர, போக வேண்டியதிருக்கலாம்.

‘என்ன பார்க்கே? நானும் ஆழ்வாரும் பால்வாடியில இருந்து ஒண்ணாப் படிச்சோம்’ அவள் சிரித்தாள். அவள் சிரிக்கும் போது மீண்டும் கன்ன எலும்பு துருத்தியது. அவளுக்குச் சட்டென்று அந்த முகத்தின் அடையாளம் பிடிபட்டது. வாய்விட்டுச் சொல்லியே விட்டாள். ‘உங்களைப் பார்த்தால் அச்சு அசல் என்.டி.ராமாராவ் செகண்ட் ஒய்ஃப் சிவபார்வதி மாதிரி இருக்கு’ என்றாள். சின்னப் பிச்சம்மாளுக்கு என்.டி. ராமாராவ் யார் என்று தெரியவில்லை. அப்புறம் சிவபார்வதி எப்படித் தெரிந்திருக்கும்? மேலும் காசியம்மாவுக்கு அது சிவபார்வதியா, லட்சுமி பார்வதியா என்று சந்தேகம் வேறு வந்துவிட்டது.

அதற்குப் பின், இதோ இப்படிக் கார்த்திகை மாதப் பிறப்பு அன்றைக்கு விளக்கேற்றும் நேரத்தில் பெரிய பிச்சம்மாவுடன் அவள் வருகிறது வரை, காசியம்மா எத்தனையோ தடவை பார்த்திருக்கிறாள். ஒவ்வொரு தடவையும் அவளுக்கு அந்த சிவ பார்வதி சாயல் ஞாபகம் வராது இருந்ததே இல்லை. அக்காள், தங்கை இரண்டு பேரும் ஒன்று போலச் சேலை எடுத்துக் கட்டியிருக்கிறார்கள். அகல அகலக் கட்டம் போட்ட, பல வர்ணங்கள் நேர்த்தியாகக் கலந்திருந்த சேலை. காசியம்மாவுக்கு இப்போது நாற்பத்தைந்து நாற்பத்தாறு இருக்கும் எனில் பிச்சை லச்சுமிக்கு ஒன்றிரண்டு கூடுதலாக இருக்கலாம். அவளுடைய அக்காவுக்கு ஐம்பது இருக்கக் கூடும். இரண்டு பேரும் பின் கொசுவம் வைத்துக் கட்டியிருந்தார்கள்.

முன்பு உடையார் கோவில் கொடைக்குப் பொங்கல் இடும்போதும் அப்படித்தான் கட்டியிருந்தார்கள். தெரு முழுவதும் கோலம் போட்டு வாசல் முன் பொங்கல் பானை வைத்து பிச்சை லட்சுமி பனை ஓலையை அடுப்புக்கட்டிக்குள் தள்ளிவிட்டுக்கொண்டு இருந்தாள். இரண்டு வெங்கலப் பானைகள். ஒன்றில் கழுத்து தாண்டி விளிம்பு வரை தளதள என்று வட்ட நுரை அலம்பியது. எரிந்த ஓலையின் சாம்பல் அவ்வப்போது படிந்து அதன் கொதிநிலை தீர்மானித்த ஒரு நுண் கணத்தில் அது தேர்ந்துகொண்ட ஒரு திறப்பில் பொங்கி வழிந்தது.

பிச்சை லச்சுமி குலவையிட்டபடியே நடந்துபோய்க்கொண்டு இருந்த காசியம்மாவைப் பார்த்தாள். குலவையை நிறுத்தாமல், ஒரு வெங்கலக் கரண்டியால் பானையைத் துளாவியபடியே, பக்கத்தில் இருந்த சருவச் சட்டியில் கோதி ஊற்றும் போதும் சிரித்தாள்.

ஒரு காகமும் அதன் பின் இன்னொரு காகமும் பறந்து போனதன் நிழல் கடக்கக் காத்திருந்து, சின்னவள் நகர்ந்துவந்து காசியம்மா கையைப் பிடித்துக் கொண்டு, ‘ நீ வாரது தெரிஞ்சதும் பால் எப்படிப் பொங்குச்சு பாரு’ என்று சிரித்தாள்.

ஒவ்வொரு முறை இப்படிக் கையைப் பிடித்துக்கொண்டு சொல்லும் போதும் அவள் சிரித்துக்கொண்டா, அழுதுகொண்டா சொல்கிறாள் என்பதை யாராலும் தீர்மானிக்க முடிவதில்லை. கண்கள் ஈரம் பூசிப் பளபளப்பதை வைத்து என்ன முடிவுக்கு வந்துவிட முடிகிறது?
எப்போதும் ஊரின் கடைசியில் அடிவாரத்தில் இருக்கும் கருணா அணை தண்ணீர் பெருகித்தான் கிடக்கும். தூரத்தில் இருந்து பார்த்தால் வெவ்வேறு கூர்முனைகளுடன் மலைத் தொடர்ச்சி தண்ணீருக்குள் அமிழ, அணை மட்டம் மலை ஏறுவது போல, நீலமாகவும் கருநீலமாகவும் அருவம் கொள்ளும்.அந்த வருடம் மழை கொஞ்சம் அதிகம். மலைக்கு அந்தப் பக்கம் பெய்தது அனைத்தும் கால் காலாக இறங்கி வழிந்து அணையின் கொள்ளளவு தாண்டிவிட்டது. எச்சரிக்கைக் கொடி நாட்டிவிட்டார்கள். மதகுகள் திறக்கப் பட்டு புகைப்படலமாக நீர் சீறிக்கொண்டு போனது.

ஊரே திரண்டு போய்ப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். எல்லோர்க்கும் நாள் குறித்துச் சொல்கிற புளியமரத்து விட்டு வள்ளுவர் அன்று நிறையக் குடித்திருந்தார். பச்சைத் தலைப்பாகை கட்டிக்கொண்டு, ஒன்று மாற்றி ஒன்று ஏதோ நிறுத்தாமல் பாடிக்கொண்டே இருந்தார். கிழியவே கிழியாத குருத்து வாழையிலை பற்றிய ஒரு பகுதியை அவர் பாடும் சமயம் விவசாயம் செய்கிறவர்கள் எல்லோரும் செண்ட்ராயன் கோவில் இருக்கும் திக்கைப் பார்த்து, தலைக்குமேல் கை உயர்த்திக் கும்பிட்டார்கள். காசியம்மாவை பைக்கில் கொண்டுவந்து விட்டுவிட்டு ஆழ்வாரப்பன் தென்னந்தோப்புக்குப் போயிருந்தான்.

காசியம்மாவுக்கு மலையின் கருநீலமும் கருணா அணைத் தண்ணீரின் ஊதாத் தகடும் என்னவோ செய்தன. அவள் யாருடனும் அல்லாமல் தனியாகப் போய் நின்று பார்த்தாள். ஏழு எட்டு எண்ணம் உள்ள ஒரு யானைக் குடும்பம் அடிவாரத்தில் ஒரு முடிச்சுப் போல நகர்ந்துக்கொண்டு இருந்தது. சேலைத் தலைப்பைத் தோளின் வழியாக வலக்கழுத்துக்குச் சுற்றி முன்னால் கொண்டுபோய் நுனியைப் பல்லால் கடித்தபடி அப்படியே நின்றாள். அசையாது கிடந்த நீர் ஒரு ஊதா நிலம் போல அவளுக்குத்தெரிந்தது. தன்னால் அதன் மேல் நடந்து விட முடியும் என்று தோன்றியது.

அப்போது அவளைப் பின்னால் இருந்து யாரோ கட்டிப் பிடித்தார்கள். காசியம்மாவின் வயிற்றின் மேல் கைகளை இறுக்கினார்கள். உச்சித் தலையில் முகவாய் நாடியால் அழுத்தினார்கள்.

அடுக்கடுக்கடுக்காகச் சிரித்தார்கள். ‘ஆழ்வார் உன்னைத் தனியா விட்டுட்டு எங்கே போனான்?’ என்று கேட்டபடியே காசியம்மாவின் முதுகோடு அப்பியிருந்த தன்னை உரித்து எடுத்துக்கொண்டு பிச்சை லச்சுமி முன்னால் வந்து, மறுபடியும் காசியம்மாவின் கைகளை எடுத்துத் தன்னிடம் வைத்துக்கொண்டாள். சின்னப் பிச்சம்மாவின் கைகள் ஏன் அவ்வளவு சூடாக இருந்தன? தண்ணீர் இல்லாமல் வெகு நேரம் அடுப்பில் இருந்த செப்புப் பானையின் வாசம் போல, இந்த இடத்தில் எப்படி அந்த வாசனை உண்டாயிற்று?

இன்னொரு தடவை இப்படித்தான் வினோதமாக ஒன்றைச் சொன்னாள். காசியம்மாவுக்கு அதைக் கேட்கும் போது பிச்சை லச்சுமிக்கு ஏதாவது கிறுக்குப் பிடித்திருக்கிறதா என்று தோன்றியது. அவர்கள் இருக்கும் மேலவீட்டின் முன்னால் ஒரு நூறு வயது அரசமரம் நிற்கிறது.

அது மேல வீட்டின் தபசில் சொத்தின் எந்த எல்கைகளுக்கும் வராது என்றாலும், மேல வீட்டுக்காரர்கள் அது அவர்களுக்கு மட்டும் பாத்தியமான மரம் என்றே சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

அதிலும் பிச்சை லச்சுமியின் அப்பா சுத்த மோசம். ‘இந்த மரம் நிற்கிற இடம் மட்டும் இல்லை. அது வேர் போகிற இடம் வரைக்கும், தெற்குத் தெரு கடைசி முடிய எங்க குடும்ப குலசாமி சொத்தாக்கும்’ என்று சண்டைக்கு நிற்பார்.

சின்னப் பிச்சம்மாள் சண்டைக்கு எல்லாம் வரவில்லை. ஒரு சொப்பனம் போல ஒன்றைச் சொன்னாள். பகல் முழுவதும் யாரோ அரசமர உச்சியில் இருந்து விடாமல் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டே இருந்தார்களாம். ஊர் முழுவதுக்கும் அது யார் என்று தெரியவில்லை. அவளுக்குத் தெரியும். அது ஆழ்வார் தானாம்.
வெளியே சொல்லாமல் இருந்துவிட்டாள்.

அன்றைக்கு இரவே பூமிக்கு அடியில் இருக்கிற ஒரு வேர் வழியாக அவள் காசியம்மா வீட்டுக்குப் பாதாள மார்க்கமாகவே வந்து சேர்ந்துவிட்டாள். பார்த்தால் ஆழ்வார் நன்கு அசந்து தூங்குகிறானாம். எத்தனை மயிர்க்கால் உண்டோ அத்தனையிலும் வியர்வை பூத்திருக்கிறது. பிச்சம்மாவுக்கு வெட்கமாகப் போய்விட்டது. அந்த நேரம் பார்த்துக் காசியம்மா குளித்த தலையை விரித்துப் போட்டுக் கொண்டு ஒரு துண்டை மட்டும் கட்டியபடி வருகிறாளாம்.

இவள் யாருக்கும் தெரியாமல் வந்தது போலவே, சத்தம் காட்டாமல், பூமிக்கு அடியில் வேர்கள் வழியாக மேல வீட்டில் போய்ப் படுத்துக்கொண்டாளாம். இவ்வளவையும் சொல்லிவிட்டு, ‘இதையெல்லாம் போய் ஆழ்வார் கிட்டே சொல்லிக்கிட்டு இருக்காதே ‘ என்று முடிக்கும் அவளைப் பார்க்க காசியம்மாவுக்குப் பாவமாக இருந்தது.

இப்படிப் பார்க்கிற நேரம் எல்லாம் எதையாவது சொல்கிற அவள் இன்றைக்கு என்ன சொல்லப் போகிறாளோ என்று அசையாமல் நடுங்காமல் நின்று நிலைத்து நிதானமாக எரிந்துகொண்டு இருந்த யானை விளக்குகளையே காசியம்மா பார்த்துக்கொண்டு இருந்தாள். இரண்டு யானைகளும் அப்படியே பெரிய உருவமாக வளர்ந்து , தன்னுடைய வீட்டை நோக்கி வந்துகொண்டு இருக்கும் பெரிய பிச்சம்மா, சின்னப் பிச்சம்மா இருவரையும் அம்பாரியில் ஏற்றிக்கொண்டு வரட்டும் என்று விரும்பினாள். அந்த வெண்கல யானைகளின் மஞ்சள் நிறமும் சுடரின் ஒளிர் நிறமும் அந்த இரு பெண்களின் பாத மட்டத்தில் தரையோடு தரையாய்ப் பெருகிக் கிடந்தன. அவர்கள் அவர்களை அறியாது அந்தத் தடத்தில் நடந்துவந்தபடி இருந்தார்கள்.

சின்னப் பிச்சம்மாவுடைய மருதாணி இட்ட கையில் ஒரு தாம்பாளம் இருந்தது. பழங்கள், குங்குமச் செப்பு எல்லாம் இருந்தன. செதுக்குவதற்கு முந்திய பாறையை கல்தச்சன் புரட்டி வருவது போல ஒரு உறைந்த புன்னகை முகத்தில் இருந்தது. அவளின் மூத்த சகோதரி பிச்சைப் பார்வதி சிரித்தாள். அவள் போட்டிருந்த வெற்றிலை அப்படிச் சிவந்திருந்தது. கீற்றுப் போன்ற உதடுகள், ஒரு பாடகியுடையதைப் போல் பிரிந்தன. சின்னப் பிச்சம்மா வலது பக்க மூக்குத்தி எனில், இவள் இடது பக்க மூக்குத்தி இட்டிருந்தாள். அகன்ற நாசித் துவாரத்தில் திருக்கும் சுரையும் தெரிந்தன.

‘உங்க வீட்டுக்குத்தான் தாயி’ என்று பெரிய பிச்சம்மாள் கும்பிட்டாள். ஒரு கனத்த புஜங்கள் உள்ள சிலை ஆகம சாஸ்திரப்படி வணங்குவது போல அந்தத் தோற்றம் இருட்டின் வசந்த மண்டப வரிசையில் இருந்து முன்னால் நகர்ந்துவந்து காசியம்மா முன்னால் நின்றது. அவளுடைய கையில் உச்ச வேனல் காலத்தில் மொட்டுவைத்த மல்லிகைப் பூ பந்து ஒன்று எப்படி வந்தது என்று தெரியவில்லை. காசியம்மாவிடம் அதை நீட்டினாள். கீழ்க் குரலில் ‘மகராசியா இரு’ என்றும் சொன்னாள்.

பிச்சை லச்சுமி ஒரு வார்த்தை கூடப் பேசாமல் தாம்பாளத்துடன் வந்தபடி இருந்தாள். இப்போதுதான் முதல் முறையாக இந்த வீட்டுக்குள் வருகிறாள் என்பதாக அவளுடைய பார்வை சுவர்களின் உயரத்தின் மீதும், மர வேலைப்பாடுகளின் நெளிவுச் செதுக்கல்கள் மேலும் ஏறி ஏறிச் சருகின.
‘பொண்ணு கொடுக்கல, எடுக்கலைங்கிற கோவத்தில எங்க அய்யா ஆழ்வாரப்பன் புதுசா கட்டின இந்த வீட்டுப் பால் காய்ச்சுக்கு எங்க யாரையும் வர விடலை. இப்போ தான் வாரோம்’ என்று சொன்ன பெரிய பிச்சம்மா, கண்ணைக் காட்ட, சின்னவள் ஆளுயரமாக நின்ற அன்னவிளக்குகளின் பக்கம் இருந்த சாமிபடங்களின் முன்னால் தாம்பாளத்தை வைத்தாள்.

நடுவில் வயிறு எக்கி ஒட்டின கோலத்தில் சம்மணம் போட்டு, உடல் முழுவதும் திருநீறு பூசி, தாடி மீசையுடன் ஒல்லியாக உட்கார்ந்திருந்த பனையடிச் சித்தரின் வரைபடம் இருந்தது. அதற்கு இடமும் வலமும் ஆழ்வாரப்பனின் தந்தையாரான, தோப்புக்காரர் என்றும் பிரசிடெண்ட் பண்ணையார் என்றும் அழைக்கப்பட்ட பெரியவரின் படமும் அவரின் சம்சாரத்தின் படமும் இருந்தது. அவர் தலைப்பாகை கட்டி இருந்தார். அந்த அம்மாள் காது வளர்த்திருந்தாள். இரண்டு படங்களிலும் கதர்மாலை முறுக்கில்லாமல் கிடந்தது.

அடுக்களைக்குள் இருந்து வந்த சோலையம்மாள் வந்திருந்த இருவரையும் வணங்கினாள், செம்பில் இருந்து வெங்கல டம்ளர்களில் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தாள். அன்ன விளக்குகளில் திரியிட்டுக் குளிரக் குளிர எண்ணெய் வார்த்தாள். ஒரு பத்திக்கட்டு, தீப்பெட்டியைக் குலுக்கிப் பார்த்து வைத்துவிட்டு ஓரமாக நின்றாள். காசியம்மா போய் விளக்கேற்றி, பத்தி கொளுத்திச் சாமி கும்பிட்டாள். பெரிய பிச்சம்மாவும் சின்னவளும் பக்கத்தில் நின்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள். காசியம்மா கொடுத்த உலர் முந்திரிப் பழங்களை வாயில் ஒதுக்கிக்கொள்ள அவர்களுக்கு விருப்பமாக இருந்தது..

‘கொழுந்தன் இருக்கும் போது வந்திருக்கணும். என்னமோ ஒரு கூச்சம். யார் காலத்திலோ ஈரத்தரையில வேப்பஞ்சுள்ளியை வச்சுக் கீச்சின கோடுதான். ஒரு எட்டு எடுத்து வச்சிருந்தா எப்பவோ தாண்டி இருக்கலாம். எல்லாம் பரம்பரை பரம்பரையா ஆம்பள ராச்சியம். துணிஞ்சு எங்களால தாண்ட முடியலை. அதுக்கு இப்பதான் வாய்ச்சிருக்கு’ என்று பெரிய பிச்சம்மா சொல்லிக்கொண்டே போய் நிறுத்த, முதல் உளி விழுந்து முதல் சில்லுப் பெயர்ந்தது போல சின்னப் பிச்சம்மா ஆரம்பித்தாள்.

‘கல்லாங்கல் பக்கம் மூனா விலக்குக்குக் கிழக்கே வீடு கட்டிப் பால் காய்ச்சு வச்சிருக்கு. ஆழ்வார், நீ எல்லாரும் வந்திரணும்’ என்று பத்திரிக்கையை மேலே வைத்துத் தாம்ம்பாளத்தை அவள் காசியம்மாவிடம் நீட்டினாள். ‘கணவதி ஓமத்துக்கே வந்திரணும்’ என்று எப்போதும் போல காசியம்மாவின் கையைத் தூக்கித் தன் கைகளில் வைத்துக்கொண்டாள்.

‘கண்டிப்பா வந்திருதோம். நல்லா இருங்க லச்சுமி அக்கா’ என்று காசியம்மா சொன்னதும் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். மேலும் மேலும் இறுகிக்கொண்டே போனது அணைப்பு. காசியம்மாவின் முதுகைத் தடவி விட்டாள். இடுப்பை, பின் சதையை எல்லாம் உள்ளங்கை நீவிக்கொண்டே போனது. அவளைவிட உயரமான பிச்சை லச்சுமியின் நெஞ்சுப் பகுதி சேலை மொடமொடப்போடு முகத்தில் அமுங்கியது. பிச்சை லச்சுமி மூசு மூசு என்று அழ ஆரம்பித்து இருந்தாள்.

எதற்கு அழுகிறாள் என்று காசியம்மாவுக்குத் தெரியவில்லை. ‘உனக்கும் எனக்கும் பெரிய வயசு வித்தியாசம் இருக்காது. ரெண்டு பிள்ளை பெத்த நீ எப்படி இருக்கே. நான் எப்படி இருக்கேன் பாரு? சமைஞ்ச பிள்ள மாதிரி அப்படியே இருக்கே. என்னைப் பாரு . எல்லாம் தொங்கிப் போச்சு. நரைச்சுப் போச்சு’ என்று சொல்லிக்கொண்டே மேலும் அழ, அழ காசியம்மா, ‘ஒண்ணும் இல்ல. ஒண்ணும் இல்ல’ என்று எட்டின இடத்தில் அவளைத் தட்டிக்கொடுக்க ஆரம்பித்தாள்.

சின்னப் பிச்சம்மா மெதுவாகக் கூடப் பேசவில்லை. தன்னுடைய அக்கா இருப்பதையோ, அல்லது தண்ணீர் கொடுத்த செம்பும் கையுமாக அடுக்களைப் பக்கம் சோலையம்மா நிற்பதையோ பொருட்படுத்தாமல். அல்லது அவளும் காசியம்மாவும் மட்டுமே இந்த உலகத்தில் இருப்பது போலப் பேச்சைத் தொடர்ந்தாள். ஒன்றும் புரியாமல் அல்லது அவரவர்களுக்குப் புரிந்த வகையில் உணர்ந்து, பெரிய பிச்சம்மாவும் சோலையும் விலகி நின்று காசியம்மா முகத்தையே பார்த்தார்கள்.

‘நீ நல்லா இருக்கிறியா காசி? சந்தோஷமா இருக்கியா? ஆழ்வார் உன்னை நல்லா வச்சுக்கிடுதானா?’ என்று கேட்கக் கேட்க, காசியம்மா முன்னிலும் நிதானமாக அவளைத் தட்டிக்கொடுத்தபடி,’நல்லா இருக்கேன். சந்தோஷமா இருக்கேன்’ என்றாள். கேட்கக் கூடாதைக் கேட்டுவிட்டது போல, பெரிய பிச்சம்மா காசியம்மாவிடம் மன்னிப்புக் கேட்பது போன்ற பாவனையில் கும்பிட்டுக்கொண்டே நின்றாள். அதைவிடவும், காசியம்மா அணைப்பில் இருந்து பெயர்த்து எடுப்பது போல பிச்சை லட்சுமியின் தோளைப் பற்றி அப்புறப்படுத்தவும் முயன்றாள்.
அப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விலகி இருவரும் சிறிய இடைவெளியுடன் தனித்தனியாக நிற்கையில், காசியம்மாவுக்கு மிகுந்த ஆசுவாசமாக இருந்தது. அவளுக்கு சின்னப் பிச்சம்மாவைக் கூட்டிக் கொண்டு போய் அவர்களுடைய படுக்கை அறையைக் காட்டலாமா என்று தோன்றிற்று.

தரைவழியாக, ஒரு வேரைப் பிடித்தபடி பாதாள மார்க்கமாகச் சென்று மேல வீட்டு அரச மரத்தின் உச்சியில் இருந்து ஒருவன் வாசிக்கும் புல்லாங் குழல் இசையால் அந்த அறை நிரம்பியிருப்பதை அவள் கேட்க ஆரம்பித்திருந்தாள்.
%

Comments are closed.