கசப்பு ( சிறுகதை ) / பாலா கருப்பசாமி

[ A+ ] /[ A- ]

பாலா கருப்பசாமி

சாலையில்தான் எத்தனை வாகனங்கள்
இங்கே மின்விசிறி சுழல்கிறது
புத்தக மேலட்டை நடுங்குகிறது
அதைக் கட்டியணைத்து
ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை
என்று தேற்றவேண்டும்போல
பூமி சுழலும் வேகத்தில்
தலை கிறுகிறுத்து, வியர்த்து
பாதங்கள் நழுவி முடிவற்ற
இருள்வெளியில் தள்ளுகிறது
கொஞ்சம் ஞாபகங்கள்
சில கண்ணீர்த் துளிகள்தவிர
விட்டுச்செல்பவை ஏதுமில்லை

ஒடுக்கமான அந்த நீண்ட நடைக்கூடம் ஒவ்வாமையைத் தந்தது. தான் பார்ப்பவை எல்லாம் ஏன் இப்படி இந்த உலகத்தில் இருக்கத் தகாததாகவே இருக்கின்றன என்று அவன் வியந்துகொண்டான். ‘இதோ, முன்னால் காத்திருக்கும் இருவரில் முதல்பெண் படபடப்புடன் இருக்கிறாள். அப்படியே கொப்பளித்துச் சிந்திவிடுபவள் போல. இரண்டாவது பெரியவர் இருக்கையின் மேல்முனையைத் தாண்டி நீண்டிருக்கும் பின்னந்தலை சுவரில் சாய்ந்திருக்க (வழுக்கைத்தலை) சுவரில் எண்ணெய்த்தடம் தெரிகிறது. உள்ளேயிருந்து கசப்பு எதுக்களித்துக்கொண்டு வருகிறது.

வாந்தியாய் எடுத்துவிட்டால் எத்தனை நிம்மதியாய் இருக்கும். ஒவ்வாமை, ஒவ்வாமை, ஒவ்வாமை. மனிதர்களும், மனிதர்களால் அறிவுறுத்தியும், அறிவுறுத்தாமலும் கடைபிடிக்கப்படும் நாகரீகங்கள், அது கண்டுகொள்ளாது விட்டுச்செல்லும் மனித உணர்வுகளை ஸ்மரணையற்றுப் போகச்செய்யும் மொண்ணைத்தனம், இவையெல்லாம் சேர்ந்து வயிற்றில் சுழன்று சுழன்று மேலேற முடியாது தவிக்கும் அந்தக் கசப்பு.

சுப்புராஜ் சொன்னதுபோல இது செய்வினையாக இருக்கும் என்று வி.கே.புரத்திலிருக்கும் ஒரு சாமியாரைப் போய்ப் பார்த்தான்.
பிரதான சாலையிலிருந்து இடதுபுறம் பிரிந்துசெல்லும் நீண்ட தெருவில், வடிவ ஒழுங்கில்லாத வீடுகளைக் கடந்து, மீண்டும் இடதுபுறம் திரும்பினால் ஒதுக்குப்புறமாய் வரிசையாய் காம்பவுண்டு வீடுகள். காம்பவுண்டுகளை ஒட்டி சின்ன வாய்க்கால் பன்றியின் நிறத்தில் நிலைத்திருந்தது. சின்ன சிமிண்டுப் படிக்கட்டுகளைத் தாண்டி காம்பவுண்டுக்குள் நுழைய இடமும் வலமுமாய் இரண்டிரண்டு வீடுகள். வலதுபுறம் முதல்வீட்டு வாசலில் காவித்துண்டை மேலே போட்டபடி புருவமத்தியில் குங்குமக் கீற்றுடன் சாமியார் டெஸ்கில் ஒரு நோட்டில் ஏதோ கணக்குகள் போட்டுக்கொண்டிருந்தார். சுப்புராஜ் விவரங்கள் சொன்னான். அவர் அவனையே இமைமூடாமல் பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென்று இங்கு என்ன செய்கிறோம் என்ற உணர்வும், எதற்குமே அர்த்தமோ நோக்கமோ அற்ற வெயில்போல் மரத்த உணர்வு மேலிட, அப்போது அது மீண்டும் நடந்தது. கசப்பு.

பொங்கிப்பொங்கித் திரண்டு, மாதங்களை நொடியில் தாண்டும் குதிரைபோல மனம் ஓட்டமெடுத்து ஓட, அவ்வேகத்தில் வளரும் மரம்போல கசப்பு வளர்ந்து எல்லாவற்றையும் இருளைப்போல மூடிக்கொள்ள, சாகப்போவதுபோல, பிடியில்லாமல், நிற்கமுடியாமல் உட்காரமுடியாமல் தத்தளிக்க, இங்கே இருக்கக்கூடாது, எதுவும் சரியில்லை என்று நினைத்துக்கொண்டிருக்கையிலேயே வாந்தியெடுத்தான். வெறும் எச்சில் மட்டும்தான் வந்தது. ஐந்து நிமிடத்தில் சரியாயிற்று. காற்று வியர்வையில் பட்டு குளிர்ந்தது. மரக்கிளைகள், செடிகள், பளிச்சென்று சிரிக்கும் வெயில் ‘என்ன, இதுக்குப்போயி இத்தனை அமர்க்களமா’ என்று கேலி செய்வதுபோல் இருந்தது. சாமியார் திருநீறை வாயில்போட்டு தண்ணீர் குடிக்கச் சொன்னார்.

இரண்டு அரக்குநிற உருண்டைகளைக் கொடுத்து இரவு படுக்கப்போகுமுன் ஒன்றுவீதம் சாப்பிடக் கொடுத்தார். ‘செய்வினைதான். செய்வினைங்கறது தகடு இல்லை. நீங்க இருக்கதை நினைச்சி, அவங்க முன்னாடி நீங்க இல்லாட்டியும் உங்களை மனசிலே கறுவிக்கிட்டிருக்கவங்களோட, இறந்த ஆத்மாக்களோட கோபம் எல்லாமாச் சேந்து பண்றதாக்கும். மூதாதைகளுக்கு தவறாம திதி குடுங்க. சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள்ளு வச்சிக் கும்பிடுங்க. பைரவருக்கு பூசணிக்காயில விளக்கேத்துங்க. எல்லாம் சரியாப் போவும்’
இது நடந்தது போனமாதம். போய் வந்த ஒருவாரத்திலேயே மீண்டும் ஆரம்பமாயிற்று. அவனுக்கு சடங்குகளில் எந்த நம்பிக்கையுமில்லை. ஆனால் மனதுக்குள் வேண்டிக்கொண்டான்.

‘அப்பா, நான் பார்த்திராத என் தந்தைகளே, மூதாதைகளே, உங்களின் ஒரு துளி நான். என் மீது கருணை கொள்ளுங்கள். என்னை இங்கே இருக்க அனுமதியுங்கள். வேரறுத்துவிடாதீர்கள். தெய்வங்களே, என் மனதை எனக்குத் திருப்பித் தாருங்கள்.’ யாருமே இல்லாமல், மனதின் நூற்றுக்கணக்கான குரல்களில் இதுவும் ஒன்றோ என்று தோன்றியது. மிகுந்த மனச்சோர்வை அடைந்தான். இரவுகள் தான் மோசம். பகல் முழுக்க மேலாண்மை பார்த்த புத்தி உறங்கும் நேரம். மனதிலிருந்து அவர்கள் கல்லறை மீட்புப் போல எழுந்து வருவார்கள். தர்க்கமே இல்லாமல் ஓடும் எண்ணங்கள் நெடுநேரம் நீளும்.
சாமியாரைப் பார்த்துவந்த பத்து நாட்களில் மீண்டும் அவனுக்கு ஒவ்வாமை தாக்கியது.

அம்மா, அண்ணன், தங்கை, மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பொருட்கள், இடங்கள், கடவுள் எல்லாம் யாரோ கத்தரியால் வெட்டிவிட்டதுபோல் அந்நியமாக அந்தரத்தில் இருளில் மிதக்கும் அனுபவம். வானவீதியில் வெகுதொலைவில் மீண்டும் மனிதர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு இருக்குமா என்றே தெரியாத நிலையில் ஒருவரை நிறுத்திவைத்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு அனுபவம். பிறரெவரும் உள்ளே நுழையமுடியாத தனிமை. தனிமை. தனி…..மை.

ஏகமனதாக மனோதத்துவ நிபுணரைப் பார்ப்பதுதான் சரியாக இருக்கும் என்று முடிவுக்கு வந்து, டவுணில் மேலரத வீதியில் இருக்கும் கிளினிக்குக்கு வந்தான். அந்தப் பெரியவர் போய் ஒருமணிநேரமாகிறது. மீண்டும் ஒரு தாக்குதல் நிகழ்ந்துவிடுமோ என்று பயமாய் இருந்தது. முன்னெல்லாம், இதைப் போக்க கம்ப்யூட்டரில் கேம் விளையாடினான்.

ஒவ்வொரு குறிக்கோள்களையும் தாண்டிச் செல்வதில் ஆர்வத்துடன் ஈடுபட்டான். ஒருகட்டத்தில் அது அபத்தமாகத் தெரிய ஆரம்பிக்க நிலைமை இன்னும் மோசமானது. யாரோ தன்னை ஏமாற்றுகிறார்கள். அர்த்தமேயில்லாமல், போலியாய் ஒரு அர்த்தத்தை உருவாக்கிக்கொண்டு காலத்தைக் கடத்த இப்படிச் செய்கிறார்கள்.

இந்த வாழ்க்கையும் இதைவிட மோசமான விளையாட்டு. வெற்றி, தோல்வி என்பதெல்லாம் பெரும் பித்தலாட்டம். எந்த அர்த்தங்களுக்கும் பொருளில்லை. அர்த்தங்கள் தனியொருவரிடம் தொடங்கி, அவரிடமே முடிந்துவிடுகிறது. அர்த்தங்கள் குறித்து இந்த உலகுக்கு அக்கறையில்லை. நரகம்.

‘இதோ அருகிலிருக்கும் இவரை என்னால் புரிந்துகொள்ள முடிவதில்லை. சுவரில் அந்தப் பல்லி எதற்கு அரைமணிநேரமாய் நின்றுகொண்டிருக்கிறது? இந்த மருத்துவரைத்தான் புரிந்துகொள்ள முடியுமா? அவருக்கு கொஞ்சமும் மனதளவில் ஒட்டாமல் கேள்விகள் கேட்டு சில தீர்வுகளை, அல்லது மருந்துகளைக் கொடுப்பார். நான் காசு கொடுக்க வேண்டும்.

தொழில். என்னை நானாகவே எடுத்துக்கொள்பவர் யார்? ஒரு நண்பனால் முடியுமா? எத்தனை கழித்தும் மீதமிருக்கிறது வெறுமை’. உள்ளே அந்தப் பெரியவர் அழுவது கேட்கிறது. எல்லோருமே பரிதாபத்துக்குரியவர்கள்.

அவனுக்கு வாலிபவயதில் காதலித்த பெண்ணின் ஞாபகம் வந்தது. அவள் பெயர் தமிழ்ச்செல்வி. ஒளிர் கருமை நிறம். பார்த்துத் தீராத முகம், கோவில் சிலைபோல. அவனுக்கு 2 அக்காவும், ஒரு தம்பியும் உண்டு. 16 வயதில், 11வது படித்துக்கொண்டிருந்தபோது தமிழ்ச்செல்வியை காதலிக்க ஆரம்பித்தான்.

இந்த வயதில் தான் காதலிக்கவேண்டும் என்று முடிவெடுத்து, யாரைக் காதலிக்கலாம் என்று யோசித்து தற்செயலாய் அவளைப் பார்க்கையில் அவளும் அவனைப் பார்த்தாள். சந்தோசமாக இருந்தது. பின்னர் இருவரும் ஒருவரையொருவர் கவனிக்க ஆரம்பித்தார்கள். இருவருக்கும் ஒரே தெருவில்தான் வீடு. குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு தெருக்கோடியைக் காட்டுவதுபோல் அவனை நோக்கி விரல்நீட்டுவாள். குழந்தையை முத்தமிடுவாள். பொங்கிப் படர்ந்துகொண்டிருந்தான். மணம்வீசும் பூப்பூத்த செடியைப் போல வாழ்க்கை நிரம்பி வழிந்தது. ஆனால் கடைசியில் இது ஒத்துவராது வேண்டாம் என்று அவள் விலகிவிட்டாள். காரணம், இருவருக்கும் 1 வயதே வித்தியாசம்.

தனது அக்காக்களுக்கு திருமணம் முடிந்து அவனுக்கு வருவதற்குள் பல வருடங்கள் ஓடிவிடும். அவன் நொறுங்கிப் போனான். எப்படியிருப்பினும் ஏற்றுக்கொள்ளும் தாய்மைக்குப் பிறகு, பால்யகாலம் கடந்து வாலிபத்தை எட்டிப்பிடிக்கையில் ஒரு செடி தானாக வளர முயலும் முயற்சியைப் போலத்தான் காதல். அது உலகில் தன்னைப் பிடித்துவைத்துக்கொள்ள ஆதார சக்தியின் இயக்குவிசை. காதல் மறுக்கப்படும்போது வாழ்க்கை ஒருவகையில் மறுக்கப்படுகிறது. இரண்டு உயிர்களுக்குள் ஏற்படும் தொடர்பும், அதன் நிமித்தம் பூரிக்கும் காதலும் மறுக்கப்படும்போது அவர்கள் அந்நியப்படுகிறார்கள்.

தனிமை. தனிமை. தனி…மை. காதலைத் தவிர்த்து இன்னொரு உயிரிடம், ஒன்றாகிவிடுவதுபோல் கலப்பது எப்படி சாத்தியம்? இந்த அந்நியம் பிறகு உலகோடு ஒட்டவைக்கவே முடியாதபடி அந்தரத்தில், பூமியில் தங்காது தொங்க ஆரம்பிக்கிறது. எந்த உறவும் நெருங்கமுடியாதபடி சுருங்கிக் கொள்கிறது. காதல் நிராகரிக்கப்படுவது குரூரமானது. எவ்வகையிலேனும் மனிதன் காதலிக்க வேண்டும். அவனது தனிமை இந்தக் காதல் நிராகரிப்பிலிருந்துதான் தொடங்கியது என்பது அவனது எண்ணம்.

‘காதல் காதல் காதல், காதல் போயின், சாதல், சாதல், சாதல்.’
இருப்பதற்கான நியாயங்கள் வேண்டும். தான் இங்கே, இவ்விதம் இருப்பதில் மகிழக்கூடிய மனிதர்கள் சூழ இருப்பது வரம். எல்லோரும் சுயநலமிகளாய் இருக்கும் உலகில், இருத்தலுக்கான நியாயம் சுரண்டுவதும், சுரண்டப்படுவதுமாய் அமைந்துவிடுகிறது. எல்லா உறவுகளிலும் அவனால் இப்படியான சுரண்டலை மட்டுமே பார்க்கமுடிகிறது. கண்ணில் வழியும் கண்ணீர் கூட சுயத்தைப் பறைசாற்றியபடி வருவதால், இரக்கமும் மரத்துப் போய்விடுகிறது. அழகான நாய்க்குட்டி வாங்கி வளர்த்துப் பார்த்தான், மீன்தொட்டி, கிளி. எல்லா உயிரினங்களும் தன்னுடைய வாழ்க்கையைக் கொண்டாடுகின்றன.

ஓர் உயிரின் மீது அன்பு செலுத்த என்ன காரணம் தேவை. அது இருக்கிறது அவ்வளவுதான். தொடர்பு எல்லைகளுக்கு அப்பால் இருக்கும் ஒரு மனிதன் எப்படித் தொடர்பு கொள்வது. அவனுக்கு எதிலும், யாரிடமும் ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது. வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமானது. இந்த மூன்றாவது மாடியிலிருந்து குதிக்க நினைத்தால் குதித்துவிடலாம். மரணமடைய நிறைய வாய்ப்புண்டு. அல்லது பிளேடால் மணிக்கட்டில் கீறிக்கொள்ளலாம். கயிறு மாட்டிக் தொங்கலாம். அது வலி மிகுந்த சாவு. மரணம் வாழ்க்கைக்கு எத்தனை அருகில் இருக்கிறது. பைனரியின் அடுத்த ஒரு வாய்ப்பாக அதன் கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது. எந்த நியாயமுமே இல்லாமல் உலகில் வாழ்வது பெரும் கோழைத்தனம்.

அவன் டெலி மார்க்கெட்டிங்கில் மூன்றாண்டுகளாக வேலை பார்த்துவருகிறான். பணம் என்ற ஒன்றுக்காக, ஓர் அபத்தமான பொருளை, அபத்தமான மனிதர்களிடம் விற்க, அபத்தமாய்ப் பேசவேண்டியிருப்பதுவும் பெரும் ஆயாசத்தைத் தந்தது. கடந்த ஆறு மாதங்களாக அவனது நாற்காலியில் உட்கார்ந்ததும் இந்தக் கசப்பு பொங்க ஆரம்பித்துவிடுகிறது. பரந்துவிரிந்த புறவுலகு எங்கும் அவனை நெருக்கியடித்தபடி, மூச்சுக்குத் தவிக்கும்படி செய்கிறது. அதே இடம்தான், ஆனால் தொடமுடியாத கிரகத்தின் தூரம். ஒழிந்து போவென்று அழுத்துகிறது.

இம்மாதிரி சமயங்களில் வியர்த்து ஊற்றும். மலம் கழிக்க வேண்டும்போல, சிறுநீரும் முட்டிக்கொண்டு, கையைக்கூட தூக்கமுடியாத பலவீனத்தோடு, அடுத்த நொடி மயங்கிவிழுந்துவிடுவோம் அல்லது இறந்துவிடுவோம் என்ற பீதியைக் கொடுக்கும். ஆனால் உடல் இப்படி அவஸ்தையில் இருக்கையில் மயக்கமடைய முடியுமா என்றும் தோன்றும். அவன் அறிந்தவரை மயக்கம் ஒரு தூக்கத்தைப் போல அவஸ்தையின்றி வருவதாக நினைத்துக் கொண்டிருக்கிறான். மரணம் அவஸ்தையோடு தான் வரும். எப்போது அது வந்தாலும் தன்னால் செய்யக்கூடியது எதுவுமில்லை என்றுதான் அவனுக்குத் தோன்றியது. ஒருவேளை இதுதான் நரகம். இந்தத் தண்டனைகளெல்லாம் முடிந்துவிட்டால், இந்தக் கனவு தெளிந்துவிட்டால் பதற்றமில்லாத, தனக்கே தனக்கான ஓர் உலகத்தில் நுழைந்துவிட முடியும். அதற்கெல்லாம் உத்தரவாதம் தருவது யார்?

இரவைப்போல வெளியை இருளுள் மூழ்கடிக்கும் பகல்களும் இருந்தால் எத்தனை நன்றாயிருக்கும். தான் மட்டுமான நிஜம். கண்ணை மூடிக்கொள்ளும் பூனையுலகம். இதுவும் பொய்யென்று அவனுக்கும் தெரியும். ஆயினும் இருள் அவனுக்குக் கசப்பிலிருந்து சற்று ஆறுதல் அளிக்கிறது. மனைவி இவனை நோக்கி நகர்கையில், ரொம்ப எச்சரிக்கையாய்த் தானியத்தை எடுக்கவா வேண்டாமா என்று தயங்கும் ஒரு குருவி படக்கென்று கொத்தித் திரும்புவதைப் போல ஓடிவிடுகிறான். மற்றவையெல்லாம் ஓர் ஆழ்ந்த கருணை. இரவில் வெளியெங்கும் ஒரே நிறம். வெளிதான் முழுமை போலும். தான் மட்டும் ஊர்ந்துகொண்டே இருக்கும் பூரானைப் போல சதா மனதின் அரிப்பு. தன்னிருப்புதான் இங்கு பிரச்சினை. தானற்ற உலகு முழுமையானது.

ஆனால் அவனுக்கு தற்கொலை செய்யுமளவுக்குத் திராணியில்லை. மரணம் பிறப்பைப்போல அருவாகி, கருவாகி, உருவாகி வந்து பிறப்பதுபோல், இந்த இயக்கம் தானாய் செயல் சுருங்கித் தேய்ந்து ஓய்ந்து இயல்பாய் நிற்கவேண்டும். அந்த மரணம் மட்டுமே ஏற்கத்தக்கது. தன் கட்டுப்பாடின்றி நிகழும் விபத்துக்களுக்கு ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் இதையெல்லாம் யாரிடம் முறையிடுவது? கடவுள் பேசாமலேயே போனதினால் அறிவியல் கடவுளின் இடத்தைத் தானே எடுத்துக் கொள்கிறது.

நோயென்றால் யாரும் மந்திரிப்பதில்லை. மருத்துவரிடம் போகிறார்கள். அறிவியலும் கடவுளைப் போலத்தான். நோய்முதல் நாடி எல்லாம் அதற்குத் தேவையில்லை. தொந்தரவு தரும் பிரச்சினை எதுவோ அதைச் சரிப்படுத்தும் வரம் தருகிறது. எந்த வரமும் அதற்கு மாற்றான தீதை உள்ளே வைத்துத்தான் இருக்கிறது. எல்லா புராணக் கதைகளிலும் வரம் பெறுபவர் பெரும்பாலும் வரத்தால் தவறு செய்கிறார். அது அவரை அழிவுக்குத்தானே இட்டுச் செல்கிறது. – இப்படி எத்தனை எத்தனை எண்ணங்கள் இரவில் ஓடுகின்றன. எந்த இடத்திற்கும் இட்டுச் செல்லாத வீணான எண்ண ஒழுக்கு. ஆயினும் இரவுகள் ஆறுதலளிப்பவை.

அவனுக்கு ஒரு புத்தகக்கடையில் பார்த்த ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் புத்தகத் தலைப்பு நினைவுக்கு வந்தது: ‘Truth is a Pathless Land’. எல்லோருக்குமா இந்த அவஸ்தை இருக்கிறது? பாதையற்ற பாதை எனில் எப்படிச் செல்வது. அவனுக்கு வரும் துர்கனவுகளில் ஒன்று (இன்னொன்று பாம்புகள்) உயரமான மலையுச்சியில் ஒற்றைப் பிடிமானத்தில் தொங்கிக் கொண்டிருக்க பட்டென்று கைநழுவி கீழே ஆழமறியா இருளுக்குள் விழுவது. ஒவ்வொருமுறையும் அவனை இந்தக் கனவு நடுங்கச் செய்யும்.

உயிர் பயம் அது. அப்படித் தொங்காமல் துணிந்து அந்த இருளுக்குள் குதிக்க வேண்டுமோ? இருள்தான் எத்தனை அழகானது. கண்ணை மூடினால் போதும். உள்ளே வந்துவிடலாம், தன்னுடைய வீட்டுக்குள் நுழைவதுபோல. எப்போதும் இருள், ஆம் அது தான் தீர்வு. கண்களைத் திறந்தான். வாகனங்கள் பரபரப்பாக இடதும் வலதும் பதட்டத்துடன் ஓடிக் கொண்டிருந்தன. கீய்ங் கீய்ங் ஹாரன் இப்போது தொந்தரவாய் இல்லை. சடாரென்று வேகமாய்ப் பாயும் கார் முன்னால் விழுந்தால் போதும். சாலைக்குச் செல்ல 10 நொடிகள். காரையும் நேரத்தையும் கணக்கிட 10 நொடிகள். பாய ஒரே நொடி. 21 நொடிகள். 21 நொடிகளில் மரணம். சாசுவதமான இருள். அவன் எழுந்தபோது பெரியவர் வெளியே வந்தார். அவன் உள்ளே நுழைந்தான்.

••

Comments are closed.