கணபதிபப்பா மோரியா ( சிறுகதை ) -சத்யா

[ A+ ] /[ A- ]

download (1)

உங்களுக்கு மதுரையைப் பற்றித் தெரியுமா? ஒரு காலத்தில் இங்குதான் முஸ்லிம் தீவிரவாதம் தலைவிரித்தாடியது. உலக பயங்கரவாதிகளெல்லாம் இங்கேதான் வந்து தலைமறைவாக ஒளிந்திருந்தனர்.

இது குறித்து முதுபெரும் நடிகரும் இயக்குனருமான தாமரைமணாளன் முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்பே விஸ்வரூபம் என்ற ஒரு ஆவணப் படத்தை எடுத்துள்ளார். நான் பள்ளி படிக்கும்போது அந்த படம் எங்கள் பாடமாக இருந்தது. பதினொன்றாம் வகுப்பு வரலாற்றில் அந்த படத்தின் கதை முக்கிய பாடம். இரண்டு பத்து மார்க் கேள்விகள் அதிலிருந்து கண்டிப்பாக கேட்கப்படும். அதுபோக தாமரைமணாளன் வாழ்க்கை வரலாறு தமிழில் உண்டு.

எனவே அவருடைய படங்களெல்லாம் எங்களுக்கு மனப்பாடம், “பாப்பாத்தி அந்த சிக்கன டேஸ்ட் பாரு” முதல் “செத்துட்டா? மன்னிச்சுடலாமா? ஹிட்லர் செத்துட்டார், மன்னிச்சுடலாமா?” என்பதெல்லாம் அவரது மாடுலேஷனில் சொல்லிப் பார்த்துக்கொள்வோம். அந்தப் படத்திலிருந்தும், எங்கள் பாடங்களில் இருந்தும் நாங்கள் புரிந்துகொண்டது ஒன்றுதான். இரண்டு வகை முஸ்லிம்கள் உண்டு.

ஒன்று தீவிரவாதி முஸ்லீம், இரண்டு தேச பக்தி முஸ்லீம். தீவிரவாதி முஸ்லீம் என்றால் தனியாக ஒளிந்திருப்பவர்கள் அல்ல, போலிஸ் அன்பளிப்பு கேட்டு தராத தீவிரவாதி, பைக்கில் போகும்போது ஓன்வேயில் வரும் ஹிந்து ஆட்டோக்காரரைத் திட்டும் தீவிரவாதி, ஒருவேளை ஆட்டோ ஓட்டியாக இருந்து ஐநூறு ரூபாய் கம்மியாக வாங்கி ஒரு ஹிந்து தொழிலாளியின் சவாரியைப் பிடுங்கிக்கொண்டு போகும் தீவிரவாதி, ஹிந்து பெண்களை தன் வலையில் விழவைக்கும் லவ் ஜிகாதி தீவிரவாதி, செத்துப்போன கோமாதாவை தின்னும் மிலேச்சத் தீவிரவாதி, அல்லாவின் புகழை பிரசங்கம் செய்யும் தீவிரவாதி என்று சீசனுக்கு சீசன் தீவிரவாதிகள் இந்த பாரத தேசத்தில் முளைத்துக்கொண்டே இருந்தனர்.

இவர்களெல்லாம் மக்களோடு கலந்திருக்கும் ஸ்லீப்பர் செல்கள். இதைக்குறித்து சுப்ரமணிதாஸ் என்பவர் துப்பாக்கி என்ற படம் எடுத்திருந்தார். அது எங்கள் பத்தாம் வகுப்பு பாடத்தில் வந்தது. இரண்டாம் வகை முஸ்லிம்கள் நல்லவர்கள், யார் வம்புதும்புக்கும் போகாதவர்கள், அன்றாடம் தங்கள் பிழைப்பைப் பார்க்க ஓடிக்கொண்டிருப்பதில் குறியாய் இருப்பவர்கள். சுதந்திரதினம் வந்தால் இவர்கள் நெஞ்சில் தேசியக்கொடி மின்னும்.

ஹிந்துக்களை தங்கள் சொந்த சகோதரர்களாக எண்ணி அவர்கள் தங்களை அடிக்கும்போதோ அல்லது வையும்போதோ மூத்த சகோதரனின் அன்பான அடியாக எண்ணி பொறுத்துக் கொள்பவர்கள். சிலர் ராணுவத்தில் சேர்ந்து தேசசேவை ஆற்றப் போவார்கள். முக்கியமாக “பாய்” என்று அழைத்து தீவிரவாதம் போதிக்கும் முஸ்லிம்களிடம் இருந்து விலகி நிற்பவர்கள். இது குறித்து “உங்கள் மகனுக்கு யாரேனும் அழைத்து பாய் என்று கூப்பிட்டால் அந்த எண்ணை உடனே அணைத்துவிடுங்கள்” என்று மைலேந்திர சாபு என்ற முன்னாள் போலிஸ் அதிகாரி ஒருவர் கூட எச்சரிக்கை செய்திருந்தார்.

என் பெயர் முகமது நவாஸ். இரண்டாம் வகை முஸ்லீம். பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரி ஒன்றரை ஆண்டோடு கைவிடப்பட்டவன். நன்றாகத்தான் படித்துக்கொண்டிருந்தேன், ஒருநாள் மீத்தேனையும் கார்போஹைட்ரேட்டையும் கலந்தால் என்ன வரும் என்ற சந்தேகம் வந்தது.

உடனே பேராசிரியர் கமலக்கண்ணனை அழைத்து கேட்டேன். அவர் கேசுவலாக, “வாட் டு யூ வான்ட் மை பாய்” என்றார். முடிந்தது ஜோலி. அவர் பாய் என்றது அத்தாவின் காதில் விழுந்து “மவனே அல்லா புண்ணியத்துல நீ எங்களுக்கு பொறந்த, இந்த தீவிரவாத பயலுகளோட சேந்து கேட்டுப் போயிடாத” என்று அழ ஆரம்பித்துவிட்டார்.

நான் எவ்வளவு சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை. என்னை கல்லூரியிலிருந்து நிறுத்திவிட்டுத்தான் மறுவேலை பார்த்தார். அடுத்த வாரமே அத்தாவின் நண்பர் ஒருவரிடம் கூறி எனக்கு ஒரு கெமிக்கல் கடையில் வேலை வாங்கிக் கொடுத்தார். அப்பாடா படிப்பு சம்பந்தமாய் வேலை கிடைத்ததே என்று சந்தோசமாய் போனவனுக்கு முதல் நாளே ஏமாற்றம் காத்திருந்தது.

அந்த கடையின் பெயர்தான் “ராயல் கெமிக்கல்ஸ்”. மற்றபடி பெனாயிலும் கக்கூஸ் கழுவும் ஆசிடும் விற்கும் கடை. மாதம் அஞ்சு லட்சம் சம்பளம் சொல்லியிருந்தார்கள். அதெல்லாம் எம்மாத்திரம் இப்போதெல்லாம் கத்திரிக்காய் கிலோ முப்பதாயிரத்துக்கு விற்கிறது.

தக்காளியெல்லாம் அம்பதாயிரம். ஒழுங்காக எம்எஸ்ஸி முடித்திருந்தால் ஒரு அறுபது லட்சம் எழுபது லட்சத்துக்கு வேலை கிடைத்திருக்கும், இல்லையா அல்லா கருணை இருந்தால் துபாயக்கோ, சவுதிக்கோ போய் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம். சரி நம்ம தலையில் அல்லா இதைதான் எழுதினான் போல என்று நினைத்துக்கொண்டு வேலைக்குப் போகிறேன். இன்னியோடு ஏழு வருடம் முடிகிறது. இன்னும் அஞ்சு லட்சம் சம்பளம் கிணத்துல போட்ட கல்லு மாதிரி இருக்கிறது.

இந்த பஹ்ரீத் வந்தால் சம்பளம் கூட்டி தருகிறேன் என்று முதலாளி சொல்லியிருக்கிறார். என்ன செய்ய குடுக்கும் அஞ்சு லட்சத்தில் பஸ்ஸுக்கே மாதம் ஒரு லட்சம் செலவாகிறது. மாரிப்பாளையத்தில் எனக்கு வீடு. அங்கிருந்து ஆன்டி இண்டியன் பஸ் ஸ்டாண்டுக்கு வர வேண்டும். பின்பு திண்டுக்கல் ரோட்டைப் பிடித்து ரெண்டாவது லெப்ட் எடுத்து ஒரு அஞ்சு நிமிஷம் நடந்தால் நம்ம கடை வந்துவிடும்.

பஸ் ஸ்டாண்டு பேரை நினைத்தால் எனக்கு சிரிப்பு வரும், “ஆன்டி இண்டியன்”. இந்த பேருக்கு பின்னால் ஒரு சுவாரசியமான வரலாறு இருக்கிறது. ஒருகாலத்தில் இந்த பஸ் ஸ்டாண்டுக்கு பெயர் பெரியார் பஸ் ஸ்டாண்ட். அவர் சுதந்திர காலத்திலும் அதற்கு பின்பும் நிறைய போராட்டங்கள் நடத்திய தலைவர்.

ஆனால் ஹிந்து மதத்தின் கலாசார அடையாளமும் கோடானுகோடி மக்களின் நம்பிக்கையுமான சாதியையும், குறிப்பாக பிராமணர்களையும் அவர் திட்டினார். தாழ்த்தப்பட்ட ஜனங்களை அவர் முஸ்லீமாக மாற சொன்னதாக சொல்லி சில தீவிரவாத அமைப்புகள் அவரை பாராட்டுவதுகூட உண்டு. ஆனால் ஹிந்து மத தலைவர்களுக்கு அவரைக்கண்டால் பிடிக்காது.

குறிப்பாக ஒரு தலைவர் இருந்தார், அவர் தம்மை விமர்சனம் செய்யும் எல்லாரையும் ‘ஆன்டி இண்டியன்’ என்று அழைப்பார். பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டால் ஆன்டி இண்டியன், முஸ்லீம்களுக்கு ஆதரவு சொன்னால் ஆன்டி இண்டியன், கம்யூனிஸ்ட் என்றால் ஆன்டி இண்டியன், முஸ்லீம் வீட்டில் பிரியாணி தின்றால் ஆன்டி இண்டியன், பெரியார் என்ற பேரைச் சொன்னாலே ஆன்டி இண்டியன், இவ்வளவு ஏன் யாராவது மொச்சக்கொட்டையை தின்று விட்டு வந்து வாயு கோளாறில் வாயு பிரித்தால் கூட “ஆன்டி இண்டியன் பாம் போட்டுட்டான்” என்பார். இப்படியே சொல்லிச்சொல்லி காலப்போக்கில் காலப்போக்கில் அவர் பெயரையே எல்லாரும் மறந்து போனார்கள்.

அந்த தலைவர்.. ஏதோவொரு மரியாதைக்குரிய ஜி, ஒரு நாள் இரவு மதுரையில் பொதுக்கூட்டம் முடித்து திரும்புகையில் பெரியார் பஸ் ஸ்டாண்டின் பின் புறம் மண்டை பிளந்து விழுந்து இறந்து கிடந்தார். உடனே இது பாகிஸ்தான் தீவிரவாதிகளின் செயல் என்று பெரிய கலவரம் நடந்தது. கலவரத்தில் கண்ணில் பட்ட முஸ்லிம்களையெல்லாம் அடித்து உதைத்தனர். அது நடக்கும்போது அத்தா இளம் வயதில் இருந்தார்.

அதில் அடிபட்டு கால் உடைந்து சிலமாதம் வீட்டில் இருந்தார். அதில் பட்ட தழும்பைக்கூட அடிக்கடிக் காட்டி பயமுறுத்துவார். நான் கல்லூரி செல்வேன் என்று அடம் பிடித்தபோது கூட அதைக் காட்டி பயமுறுத்தினார். அவ்வளவு பயங்கர கலவரம் அது. கலவரத்தில் ஈடுபட்ட ஹிந்து அமைப்புகளை சமாதானப்படுத்த இறந்து போன அந்த ஜீயின் பெயரை இந்த பஸ் ஸ்டாண்டுக்கு சூட்டுவதாக அப்போதிருந்த ஜிபிஎஸ் அரசு முடிவு செய்தது.

பிறகு கொலையாளிகளைக் கண்டிபிடிக்க ஒரு சிபிசிஐடி குழுவை அமைத்தது. பின்பு ஆட்சி கலைக்கப்பட எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்து விசாரணையை துரிதப் படுத்த, கடைசியில் அந்த ஜீயை யாரும் கொல்லவில்லை அவர் வாழைப்பழ தோல் வழுக்கி சிலாப் கல்லில் மண்டை இடித்து செத்துப்போனார் என்பது தெரியவந்தது.

அதன் பிறகு அவர் பெயரை நீக்கி பெரியார் பெயரை வைக்க வேண்டும் என்றும், பெயரை நீக்கக்கூடாது என்றும் இரு தரப்பும் போராட்டம் நடத்த. கடைசியில் வெறும் டவுன் பஸ் ஸ்டாண்ட் என்று பெயர் வைக்கப்பட்டது. இருந்தாலும் விடாப்பிடியாக ஹிந்து அமைப்பினர் அவர் பெயரிலேயே பஸ் ஸ்டாண்டை அழைக்க கொஞ்ச கொஞ்சமாக அவர் பெயர் மறைந்து “ஆன்டி இண்டியன்னு சொல்லுவாரே அவர் பேருல இருக்கற பஸ் ஸ்டாண்ட்” என்று சொல்லி அப்படியே மருவி “ஆன்டி இண்டியன்” பஸ் ஸ்டாண்ட் ஆனது.

பஸ் ஸ்டாண்டை விடுங்கள், எங்கள் ஊர் மாரிப்பாளையம் கூட ஒரு காலத்தில் கோரிப்பளையம் என்ற பெயரில் இருந்ததாக சொல்வார்கள். உண்மையை நாங்கள் அறிந்ததில்லை. என்னதான் சம்பளம் கம்மியாக குடுத்தாலும் என் முதலாளி தங்கமானவர், என்ன கடையில் வியாபாரம் இருந்துகொண்டே இருக்கும் என்பதால் லீவுதான் கிடைக்காது.

பஹ்ரீத் ரம்ஜானுக்கெல்லாம் மட்டும்தான் லீவு. மற்றபடி வேறெந்த ஹிந்து பண்டிகைகளுக்கும் லீவு இல்லை. ஒன்றை தவிர. பிள்ளையார் சதுர்த்தி. அன்று மட்டும் எங்கள் கடை இருக்கும் தெருப்பக்கமாக பிள்ளையார் ஊர்வலமாக வரும். “இந்த நாடு ஹிந்து நாடு, துலுக்கனெல்லாம் பாகிஸ்தான் ஓடு”, “தாடி வெச்ச ஆடு, பாகிஸ்தானுக்கு ஓடு” என்றெல்லாம் கோஷம் போட்டு போவார்கள். நானும் சின்ன வயதில் இவர்கள் கூட ஆடிக்கொண்டு போயிருக்கிறேன், போனால் கடைசியில் லட்டு, ஜாங்கிரி பால்கோவாவெல்லாம் கிடைக்கும் என்பதற்காக. ஆனால் ஒருநாள் அத்தா கூப்பிட்டு அங்கெல்லாம் போனால் கர்வாப்ஸி செய்துவிடுவார்கள் என்று போக விடாமல் தடுத்துவிட்டார்.

அதுபோல இன்றும் பிள்ளையார் சதுர்த்தி விடுமுறை. ஆனால் காலை பதினோரு மணிக்கெல்லாம் முதலாளி கூப்பிட்டு “டேய் நவாஸு, நம்ம கடையில டேப்லெட் அத மறந்துட்டு வந்துட்டேன். அதுலதான்டா நம்ம கடையோட மொபைல் பாங்கிங் ஆப் இருக்கு, இன்னிக்கு ஒரு கிளைண்ட் மீட்டிங் வேற இருக்கு. அதுலதான் அப்டேட்டட் வெர்ஷன் ஸ்கைப் இருக்கு. போய் எடுத்துட்டு வரியா? அப்படியே சார்ஜரும் எடுத்துட்டு வாடா” என்று சொன்னார். நானும் அவசர அவசரமாய் கிளம்பி போனேன். எவ்வளவு சீக்கிரம் போகிறேனோ அவ்வளவு நல்லது.

முன்னால் சொன்னேனில்லையா, இரண்டு வகை முஸ்லிம்கள் என்று. பிள்ளையார் சதுர்த்தி வந்தால் மட்டும் ஒரே வகை முஸ்லிம்தான். ‘முஸ்லிம்ல நல்ல முஸ்லீம் கெட்ட முஸ்லீம் ஏதுங்க? முஸ்லீம் என்றாலே தீவிரவாதிதான்’ என்று முப்பது வருடம் முன்பு கடல்பழம் என்ற ஒரு டைரக்டர் வசனம் வைத்திருந்தார்.

அப்படிதான் பிள்ளையார் சதுர்த்தி அன்றும். பார்க்கும் முஸ்லிம்களெல்லாம் அடிக்கப்படுவார்கள், இல்லை கொல்லப்படுவார்கள். நாங்கள் வளைக்குள் ஒளிந்திருக்கும் எலிகள் போல பிள்ளையார் சதுர்த்தி வந்தால் வீட்டுக்குள் ஒளிந்துகொள்வோம். அடுத்த நாள் போனால்தான் கடைவீதியில் உடைந்த எல்ஸீடி போர்டுகளையும் அலங்கார விளக்குகளையும் சரி செய்ய முடியும். சில சமயங்களில் போலிசின் கெஞ்சலை மீறி கடைகள் உடைத்து சூறையாடப்படும். இப்படிதான் ஒருமுறை காஜா மொய்தீன் தனது ஹோட்டலை காலையில் மட்டும் திறந்திருந்தார்.

மதியம் மூடுவதற்குள் ஊர்வலம் வந்துவிட அவசர அவசரமாய் பூட்டிக்கொண்டு ஓடினார். ஆனால் அதைப் பார்த்துவிட சிலர் ஓடி வந்து கடையை உடைத்து பிரியாணியைத் தின்றுவிட்டு பாத்திரத்தை உருட்டிவிட்டனர். நல்லவேளை அன்று காஜா மொய்தீன் பிழைத்ததே அல்லாவின் கருணை. இப்படி பல பிரச்சினைகள் இருக்கும் ஊர்வலம் வரும் முன்பு கிளம்பிவிட வேண்டும் என்று அவசர அவசரமாய் போய்க்கொண்டிருந்தேன். கடையின் பூட்டை என் கண்ணைக் காட்டி திறந்தேன். “நமஸ்கார் நவாஸ்” என்றபடி திறந்தது. உள்ளே போய் முதலாளியின் ட்ராவினை திறந்து டேப்லேட்டை எடுத்து பையில் வைத்தேன்.

சுற்றிலும் பார்த்தேன், நான்கு வரிசையாக ஷெல்ப்களில் பல்வேறு பாட்டில்களில் பெனாயிலும், இன்ன பிற கெமிக்கல்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. யாரும் இல்லை என்ற உணர்வு ஒரு அதீத சந்தோசத்தை கொடுத்தது. முதலாளி போன்ற தோரணையில் இரு கைகளையும் இடுப்புக்குப் பின்னால் கட்டிக்கொண்டு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அண்ணாந்து பார்த்தபடி காலை அளந்து வைத்து இருபுறமும் திரும்பித் திரும்பி பார்த்தபடி நடந்தேன். மனதுக்குள் கம்பீரமாக இருந்தது.

பையை எடுத்துக்கொண்டு கிளம்பும்போதுதான் அந்த சத்தம் கேட்டது, “கணபதிபப்பா மோரியா”, நெஞ்சிலிருந்து எதோ ஒரு ஆவி கிளம்பி வந்து தொண்டையை அடைத்துக்கொண்டது. கண்கள் அகல விரிந்தபடி உள்ளூர பயத்தோடு மெதுவாக எட்டிப் பார்த்தேன். ஊர்வலம் ஆரம்பித்து விட்டது. அவர்களைத் தாண்டி ஆன்டி இண்டியன் பஸ் ஸ்டாண்டுக்கு போவது சாத்தியமில்லை. தலையை உள்ளிழுத்துக்கொண்டு சுவற்றில் சாய்ந்து “யா அல்லா” என்றபடி நெஞ்சில் மெதுவாக தட்டிக்கொண்டு யோசித்தேன். ஆம் அதுதான் வழி. பொத்தானை அமுக்கி கதவை மூடினேன். பேசாமல் ஊர்வலம் கிளம்பும்வரை கடைக்குள்ளேயே இருந்துவிட வேண்டியதுதான்.

உள்ளே டிவியை ஆன் செய்து, சிசிடிவி கேமரா வழியாக ஊர்வலத்தைப் பார்த்தேன். ஐநூறுபேர் ஆக்ரோஷமாக எதையோ கத்தியபடி வந்துகொண்டிருக்க அவர்களுக்கு நடுநாயகமாய் இவர்கள் போடும் கூச்சலெல்லாம் தனக்கு மிகவும் சந்தோசம் அளிக்கிறது என்று கூறுவதுபோல் மாறாத புன்னகையுடன் பிள்ளையார் வந்துகொண்டிருந்தார். ஊர்வலம் நெருங்கி நெருங்கி வந்தது. அவ்வளவுதான் ஏழெட்டு கடை தள்ளி இருக்கும் பீர்முகமது கடைக்கு வந்துவிட்டிருந்தார்கள்.

எப்படியும் இன்னும் அரைமணி நேரத்தில் கிளம்பி விடுவார்கள் என்று நான் நினைத்துக்கொண்டிருக்கும்போதே ஒருவன் கையில் வைத்திருந்த கட்டையால் பீர் முகமதின் கடை எல்சிடி ஸ்க்ரீனை உடைத்தான். அதைத் தொடர்ந்து பலரும் கடை கதவு என அனைத்தையும் உடைக்கத் தொடங்கினார்கள். பாவம் பீர்முகமது, எனக்கு மிகவும் நெருங்கிய நண்பன். என்னோடுதான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தான், அப்போது பிள்ளையார் ஊர்வலத்தில் சிக்கிக்கொண்ட அவனது அத்தா செத்துபோனார். வேறு வழியில்லாமல் தள்ளுவண்டியில் பழைய இரும்பு வியாபாரம் செய்யத் தொடங்கியவன் கொஞ்சம் கொஞ்சமாக இரும்பு வியாபார கடை வைத்திருந்தான். இன்றோடு அதுவும் ஒழிந்தது. அவனது இருபது வருட உழைப்பு வீணாகப் போகிறது.

“அய்யய்யோ” மனதுக்குள் சுரீரென்றது. கடைகளை உடைக்கத் தொடங்கிவிட்டார்கள். விரைவில் எங்கள் கடையும் உடைக்கப்படும். அப்படி உடைக்கப்பட்டால் என் கதி? இதை மறந்து நான் அவனுக்காக பரிதாபப்படுகிறேனே? நான் உண்மையில் பரிதாபத்துக்கு உரியவனா இல்லை பரிதாபப்பட வேண்டியவனா? அல்லா, நான் எப்படி தப்பிப்பது. பீர் முகமதின் கடையின் கதவு உடைக்கப்பட்டு சடசடவென்று உள்ளே புகுந்தவர்கள் கையில் கிடைத்த இரும்பு ராடு, கடப்பாரை என எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு வந்து அடுத்த கடையை உடைக்க ஆரம்பித்தனர். அடுத்ததாக முகாஸ் கடை, பின்பு முஸ்தாக் கடை, அடுத்து ஜாகிர் உசைன் கடை என்று எங்கள் கடையை நெருங்கிக்கொண்டிருந்தார்கள்.

“தொம்” என்று பெரும் அதிர்வை கிளப்பியது எங்கள் கடை கதவு. உள்ளுக்குள் வாயைப் பொத்திக்கொண்டு பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தேன். சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. டிவியை அணைத்துவிட்டு முதலாளியின் டேபிளுக்குப் பின்னால் போய் ஒளிந்துகொண்டேன். “டமார்” கதவு உடைக்கப்பட்டது. “டமார்”, “டமார்”, “டமார்” நன்றாக கிழிக்கப்பட்டதுபோல் திறந்துகொள்ள முண்டியடித்தபடி ஓவென்று கத்திய கூட்டம் உள்ளே நுழைந்தது. “ஜி, பெனாயில் கடை ஜி” என்றான் ஒருவன் ஏமாற்றமாக. “டேய் லச்சுமா.. வெள்ளை கலர்ல இருக்கு, பாலுன்னு நெனச்சு குடிச்சுராத.. அப்பறம் உனக்கு பால் ஊத்திருவாங்க” என்று ஒருவன் சொல்ல எல்லோரும் சிரித்தனர்.

“இங்க ஒருத்தன் ஒளிஞ்சுருக்கான்..” என்ற குரல் கேட்டு எனக்கு பகீரென்றது. நல்லவேளையாக குரல் வெளியே கேட்டது. உள்ளேயிருந்தவர்கள் திபுதிபுவென்று வெளியே ஓடினர். என் உடலைக் குறுக்கிக்கொண்டு ஒரு கண்ணை மட்டும் நீட்டி மெதுவாக எட்டிப் பார்த்தேன். ஒரு உருவத்தை எல்லோரும் போட்டு அடித்துகொண்டிருந்தனர். ஒருவன் எட்டி அடி வயிற்றில் மிதிக்க “அல்லா…” என்றபடி புரண்டபோதுதான் அவன் முகம் தெரிந்தது. நாசர். அவன் குரலிலிருந்தும், கண்களிளிருந்தும்தான் அவனை அடையாளம் காண முடிந்தது. கன்னம் வாய் மூக்கு என எல்லாம் இரத்தமாக இருந்தது. நாசர் யாருடைய வம்புதும்புக்கும் போகாதவன். போன வருடம்தான் நிக்காஹ் முடிந்திருந்தது.

அவன் மனைவி நிறைமாத கர்ப்பிணி. இன்னும் பத்து நாளில் குழந்தை பிறக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கு நெஞ்சுப் பக்கமாய் ஒரு அதிர்வு கிளம்பி உடல் குலுங்கி அழத் தொடங்கினேன். என் முதுகில் ஓங்கி ஒரு அறை விழுந்து, ஒரு கை என் சட்டைக் காலரைப் பிடித்துக்கொண்டதை உணர்ந்தேன். “ஜீ.. இங்க ஒருத்தன் ஒளிஞ்சிருக்கான்” சாராய வாடையுடன் கூடிய குரல் என் காதில் விழுந்தது. அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தேன்.

சுருட்டை முடியுடன் பெரிய மீசை வைத்த ஒருவன் என்னைப் பிடித்துக்கொண்டிருந்தான். நான் பார்த்ததும் எச்சில் தெறிக்க என்னைப் பார்த்து சிரித்தான். நான் அவனிடமிருந்து திமிரிக்கொள்ள முயலும்போதே திபுதிபுவென உள்ளே நுழைந்து ஏழெட்டு கைகள் என்னை இழுத்துச் சென்று வெளியே போட்டன.

“ஐயா.. ஐயா.. என்ன விட்டுடுங்க. நான் இங்க சம்பளத்துக்கு வேலை பாக்குறேன்”என்றேன். கையால் தடவி கிடைத்த கால்களை பிடித்தேன். சேலையும் கொலுசும் உள்ள கால்கள் கூட கையில் தட்டுப்பட்டது.

“யாரா இருந்தாலும் நீ துலுக்கன்தானடா?” என்றபடி என் இடுப்பில் ஒரு மிதி விழுந்தது.

என் மூளையை அவசரமாய் விரட்டி விட்டேன். நான் முஸ்லீம் என்பதற்கு எந்த அடையாளமும் இல்லை. தாடி வைத்தவன்தான் கெட்ட முஸ்லீம் என்று விஸ்வரூபத்தில் சொல்லியிருந்ததால் நாங்கள் யாரும் தாடி வைப்பதில்லை.

சில பெண்கள் இருப்பதால் நான் சுன்னத் செய்திருக்கிறேனா என்று பார்க்க மாட்டார்கள். அதுபோக பல மருத்துவ காரணங்களுக்காக பலரும் சுன்னத் செய்யத் தொடங்கியிருந்தனர். இதையெல்லாம் முடிவுசெய்து, “இல்லைங்க. என் பேரு ராஜா” என்று அழுதபடி சொன்னேன்.

“என்ன ராஜா? ரபீக் ராஜாவா?” என்றபடி ஒருவன் கையில் ஓங்கி மிதித்தான். அவன் எடை கையில் இறங்கி சுரீரென்ற வலி கிளம்பியது. “ஓ”வென்று கத்தியபடி கையை இழுத்து தொடைகளுக்குள் சொருகிக் கொண்டேன்.

“ஜீ.. விடுங்க ஜீ” எனக்கு ஆதரவு குரல் ஒன்று கேட்டது. “டேய் நீ நெஜமாவே ஹிந்துவா? பொய் சொன்னது தெரிஞ்சுது உன்ன வெட்டிப் போட்டுடுவோம்” என்றான் ஒருவன். அவன் குரலில் இன்னும் குழந்தைமை மாறவில்லை. காக்கி நிக்கரும் வெள்ளை சட்டையும் போட்டிருந்தான். தலையில் கருப்பு தொப்பி. வயது பதினைந்துதான் இருக்கும். மீசை முளைப்பதற்கான தடம் போல் இப்போதுதான் பூனை முடிகள் எட்டிப் பார்க்கத் தொடங்கியிருந்தன.

நாசரிடம் திரும்பி “டேய் உண்மைய சொல்லு, இவன் துலுக்கன்னா உன்ன விட்டுடுவோம்” என்றான். நாசர் என்னை நிமிர்ந்து பார்த்தான். அவனது வாயில் பற்கள் உடைந்து போயிருந்தது. முகம் ரெண்டு மடங்காய் வீங்கியிருந்தது. வீங்கிய முகத்துக்குள் புதைந்துபோனதுபோன்ற கண்களோடு என்னைப் பார்த்தான். “இல்ல, இவன் முஸ்லீம் இல்ல” என்று சொன்னான். என் இதயத்துக்குள் யாரோ ஏறி உட்கார்ந்தது போல் இருந்தது. சாகும் நிலையிலும் என்னைக் காட்டிக்கொடுக்காத நாசருக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன்?

“இங்க பாரு பொய் சொன்னா உனக்கும் இந்த கதிதான்” என்றபடி நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவனை வேட்டையாடத் தொடங்கினார்கள். கட்டைகளைக் கொண்டு அவன் முட்டியில் அடித்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக அவனது கால் உடைந்தது. ஒவ்வொரு அடியிலும் அவன் கண்கள் துடித்ததேயன்றி வேறொன்றும் செய்யவில்லை.உடைந்த காலை விரித்து ஒருவன் ஆண் குறியில் மிதித்தான். “ம்ம்ம்..” என்று கத்தியபடி கண்கள் பிதுங்கி விழுமளவு விரித்து, தன்னிச்சையாய் உடல் எம்பி கைகளால் பிடித்துக்கொண்டு வலதுபக்கமாய் சாய்ந்து விழுந்தான். “ஹோ.. ஹோ…” என்று கத்தியபடி சுற்றி நின்றவர்கள் வலுக்கட்டாயமாய் அவன் கைகள் இரண்டையும் இழுத்து இரண்டு பக்கமும் ஏறி நின்றுகொண்டனர்.

மல்லாக்கப் படுக்கவைக்கப்பட்ட நிலையில் ஒன்று, இரண்டு, பத்து, இருபதுபேர் அவன் உயிர்நிலையில் ஏறி மிதித்தனர். ஒவ்வொரு முறையும் அவன் உடல் எம்பி எம்பிக் குதித்தது. கடைசியில் கொஞ்சம் கொஞ்சமாக துடிப்பு நின்றது. பிறகு முகத்தில் மிதிக்கத் தொடங்கினர். கன்னமெல்லாம் கிழிந்து போகும் வரை வரிசையாக மிதித்தனர். ஒருவன் ஓங்கி மிதித்ததில் கண் ஒரு பக்கம் கிழிந்து வெளியே தொங்கியது.

அதைப் பார்த்ததும் ஒருவன் கையிலிருந்த கட்டையால் அதை பிடுங்கி வெளியே போட்டு நாசரின் இன்னொரு கண் முன்னாலேயே நசுக்கினான். எனக்கு குடலைப் பிரட்டிக்கொண்டு வாந்தி வந்தது. பிறகு மண்டையில் ஓங்கி மிதித்துக்கொண்டே இருந்தனர். கையிலிருந்த கத்திகளைக்கொண்டு உடலைக் கிழிக்கத் தொடங்கினர். ரத்தம் சதை என எல்லாம் வெளியேறி நாசரைச் சுற்றி மிதக்கத் தொடங்கியது. மெதுவாக.. மிக மெதுவாக செத்துபோனான் நாசர்.

பின்பு என் பக்கம் திரும்பினார்கள். என் பின் மண்டையில் யாரோ ஓங்கி அறைந்தார்கள். நான் தலை குப்புற கீழே விழுந்ததும், என் சட்டை காலரைப் பிடித்து தூக்கப்பட்டேன். மண்ணில் பட்டு உப்புச் சுவையோடு உதட்டோரம் ரத்தம் கசியத் தொடங்கியிருந்தது.

“நிறுத்துங்க” என்று தடுத்தபடி ஒருவன் வந்தான். “அவன்தான் ஹிந்துன்னு சொல்றான்ல” என்று அதிகார தோரணையில் சொன்னான். உடனே அவனைச் சுற்றி பலத்த விவாதம் நடந்தது.

சிலர் என்னை விட்டுவிடவேண்டும் என்றும் சிலர் விடக்கூடாது என்றும் மாறி மாறி பேசிக்கொண்டிருந்தனர். ‘அல்லா.. நிறைவானவனே.. இந்த சைத்தான்களிடம் இருந்து என்னைக் காப்பாற்று’ என்று வேண்டிக்கொண்டேன். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தவர்களாய். “சரிப்பா.. நீ ஹிந்துன்னா உன்ன விட்டுடறோம்.. ஆனா இங்க நடந்தத யார்கிட்டயும் சொல்லக்கூடாது” என்றனர். நான் அழுதபடி “சத்தியமா சொல்ல மாட்டேங்க” என்றேன். அவர்களைக் கையெடுத்துக் கும்பிட்டபடி.

“எதுக்கும் ராமர்ஜீய கூப்பிட்டு கேட்டுடுவோம்” என்று ஒருவன் சொன்னான்.

“சரி ராமர்ஜீய கூப்பிடு” என்றனர். கொஞ்ச நேரத்தில் கூட்டத்தை விலக்கியபடி ஒரு போலீஸ்காரர் வந்தார். வந்தவர் மெதுவாக நடந்து போய் நாசர் பக்கத்தில் நின்றார். தனது பூட்ஸ் காலால் அவனது முகத்தை நகர்த்திப் பார்த்தார். “என்னய்யா.. முழுசா செத்துட்டானா இல்ல மிச்சம் மீதி வெச்சு எங்க கழுத்த அறுப்பீங்களா?” என்றார். “அதெல்லாம் இல்ல ஜீ. முடிஞ்சுது” என்று முன்னால் நின்ற ஒருவன் சொன்னான்.

அவனை ஆமோதித்து பல குரல்கள் மரியாதையாக ஒலித்தது. அந்த போலீஸ் மெதுவாக நடந்து என்னை நோக்கி வந்தார். பளாரெனே என் கன்னத்தில் அறைந்தார். என் வாய்க்குள் கன்னம் கிழிந்து ரத்தம் வடிந்தது நாக்குக்கு இம்சையான சுவையை தந்தது. நான் நடுங்கும் கைகளைத் தூக்கிக் கும்பிட்டேன். “மரியாதையா நீ யாருன்னு சொல்லு. உன்ன நானே பத்திரமா கூட்டிட்டு போறேன்.

பொய் சொன்ன.. உன்ன நானே பொதைச்சுடுவேன்” என்றார். ஏற்கனவே வேகமாய் துடித்துக்கொண்டிருந்த என் இதயம் வெளியே வந்து விழுந்துவிடும்போல் துடித்தது. “சார் நான் உண்மையதான் சொல்றேன்” என்று அழுதபடி சொன்னேன்.

“இங்க நடந்தது ஏதாவது வெளில தெரிஞ்சுது.. உன்ன கண்டு பிடிச்சு, உங்கம்மா மேல பிராத்தல் கேசு போட்டு உள்ள தள்ளிடுவேன்” குரலைக் கடுமையாக்கிக்கொண்டு சொன்னார். அவர் கடுமையாக்கிக்கொள்ளவே தேவையில்லை, இயல்பாகவே அவர் குரல் கடுமையாகத்தான் இருந்தது.

“சொல்ல மாட்டேன் சார்” என்று அவசரமாய் சொன்னேன்.

“சரி போ” என்றவர் கொஞ்சம் நிதானித்து. “டேய்.. உன் ஆதார் கார்டை எடு” என்றார். எனக்கு பகீரென்றது. இடுப்பை தடவிப் பார்த்தேன். நல்லவேளையாக நான் இன்று பர்ஸை மறந்துவிட்டு வந்திருந்தேன்.

“சார் ஆதார் கார்டு எடுத்துட்டு வரல சார்” என்றேன்.

“தேச துரோகி”,”பாகிஸ்தான் ஏஜென்டா இருக்கும் “, “இல்ல ஐஎஸ்”,”லஸ்கர்”, “காஷ்மீர் பிரிவினைவாதி” என்றெல்லாம் திட்டுக்கள் கேட்டது. “முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல, உன்னை மாதிரி ஆளை பிடிக்கத்தான் ஆதார் கார்டு வெச்சுருக்கோம்” என்றபடி மூக்குக் கண்ணாடியுடன் ஒட்டுமளவு நாமம் அணிந்திருந்த ஒருவன் சொன்னான்.

“இப்ப என்ன ஜீ பண்ணுறது?” போலிஸைப் பார்த்து ஒருவன் கேட்டான்.

“ஒன்னும் பண்ண முடியாது”

“ஜீ உங்க ரெட்டினா ஸ்கேனர்ல பாக்கலாமே” என்றான் நாமம்.

“அதெல்லாம் முடியாதுய்யா.. அப்பறம் இவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா என் மண்டைய உருட்டுவாங்க”

நெருப்பும் நீரும் மாறி மாறி கடந்த என் எண்ணத்தில் நடந்த அந்த உரையாடலில் எனக்கு என்ன நடக்குமோ என்ற பயம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

என்ன செய்வது என்று போலீஸ் யோசிக்க ஆரம்பித்தார். முப்பது நொடிகள்தான் யோசித்திருப்பார். எனக்கு வெகுநேரம் போல் தோன்றியது. “டேய் சுப்ரமணியம் இங்க வா” என்றார். வெள்ளை வெளேரென்ற ஆஜானுபானுவானவன் ஒருவன் முன்னாள் வந்தான்.

அவன் நெற்றியில் ரத்தத்தை கொண்டு இழுத்ததுபோல் குங்குமம் வைத்திருந்தான். “நீ என்ன பண்ற.. போயி ஜீப்பு கண்ணாடிய ஒடைச்சு உள்ள இருக்கற ஸ்கேனர எடுத்துக்கோ. அப்படியே சீட்டுல கொஞ்சம் கேஸ் பைல்ஸ் இருக்கு. அதையும் எடுத்து கிழிச்சு போட்டுரு. இங்க பாருடா.. எல்லாம் முடிஞ்சதும் அந்த ஸ்கேனர தூக்கிப் போட்டு உடைச்சுடனும்” என்றார். அவ்வளவுதான் என் மனதில் இருந்த கடைசி நம்பிக்கையும் உடைந்தது. இதோடு முடியப்போகிறது. அல்லா.. உன்னிடம் வருகிறேன். அம்மா, அத்தா என்னை மன்னிச்சுடுங்க. என் கண்ணில் நீர் வழிய ஆரம்பித்தது.

ஆச்சு எல்லாம் முடிந்தது. ஸ்கேனரை எடுத்துக்கொண்டு வந்தான். அல்லாஹு அக்பர். மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். “பாருடா” என்று பின்னால் ஒருவன் என் பிடரியில் அடித்தான். கண்ணைச் சுழற்றிக்கொண்டு வந்தது. அப்படியே சரிந்தேன்.

“கொஞ்சமாவது அறிவிருக்கா ஜீ” என்று அவனைத் திட்டுவது தூரத்தில் கேட்டது. அவன் பதிலுக்கு எதோ சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தான். யாரோ என்னை மடியில் தூக்கிப் போட்டதுபோல் இருந்தது.

என் இமையை யாரோ பிரித்ததுபோல் இருந்தது. ஒரே சிவப்பு நிறம். கண் கூசியது. இறுக்கமாக மூடிக்கொண்டேன். என் வாழ்வில் கடைசியாக ஒரு முறை என்னை மரியாதையாக அழைக்கும் குரல் கேட்டது.

“நமஸ்காரம் முகமது நவாஸ் உங்களுக்கு பாரதப் பிரதமர் ராமானந்த புராணிக்கின் வாழ்த்துகள்”

என் கண்களில் மங்கலாய் சிரித்துக்கொண்டிருந்த பிள்ளையார் முகம் தெரிந்தது.

•••

Comments are closed.