கண்காணிப்பின் இருள்வெளி – வெளி ரங்கராஜன்

[ A+ ] /[ A- ]

திணைநிலவாசிகள் குழுவின் நாடகம்

கண்காணிப்பின் இருள்வெளி வெளி ரங்கராஜன்
எழுத்து,இயக்கம்: பகுர்தீன்

இன்றைய பாசிச அரசியல் சூழலில் அதிகாரத்தை கேள்விகேட்கும் எழுத்தாளர்கள் கொல்லப்படுகிறார்கள்.சாதீய ஒடுக்கு
முறையால் கல்விவளாகங்களில் மாணவர்கள் மீது வன்முறை ஏவப்படுகிறது.சாதிவிட்டு மணம்புரியும் காதலர்கள் ஆணவக்
கொலை செய்யப்படுகிறார்கள்.மீனவர்கள் மீன்பிடிக்க முடியாது கொலையாகிறார்கள்.விவசாயிகள் தற்கொலைக்கு தூண்டப்
படுகிறார்கள்.இவ்வாறு சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பாதிப்புக்குள்ளாகும் ஒரு ஒடுக்குமுறை சூழலை பின்புலமாகக்
கொண்ட இந்த நாடகத்தில் கொலையுண்டவர்களின் ஆவிகள் தங்கள் இழந்த வாழ்க்கையை பேசுகின்றன.கவிதைதன்மை
கொண்ட உரையாடல்கள் மூலமாகவும்,படிம மொழியும் நடன அசைவுகளும் கொண்ட உடல் இயக்கங்கள் மூலமாகவும்,கூட்டு
மனநிலைகளின் வெளிப்பாடாகவும் நாடகம் விரிவுகொள்கிறது.

கல்விவளாகங்களின் அறிவியல் ஒடுக்குமுறையில் சிக்குண்ட பின்னறை மாணவர்களுக்கு தூக்குக்கயிறுகளும்,அம்மாவின்
சேலைகளும்தான் முடிவாக இருக்கின்றன.புதிய சமூகத்தைப் பற்றிக் கனவுகள் கண்ட படைப்பாளிகளின் வீட்டுக்குள் ஆட்கள்
புகுந்து விரல்களைப் பிடித்துக் கத்திகளால் கோலமிட்டார்கள்.காதலை,புதுவாழ்வை சிதைத்தன சாதீய ஆணவங்கள்.

குண்டில் செத்த மீனவர்களும்,புயலில் செத்த மீனவர்களும் மீன்களின் செதில்களாக மாறி கடலில் நீந்தியபடி இருக்கிறார்கள்.மீன்கள்
சொல்லும் சாட்சியை நீதிமன்றங்கள் ஏற்குமா?விவசாயியின் பூமி செத்துக் கிடக்கிறது.வெடித்துவிட்ட நிலத்திலிருந்து வீசும் அனல்
விவசாயியை சுட்டெரிக்கிறது.பயிரோடு உயிரும் கருகிக் கொண்டிருக்கிறது.இந்த உணர்வுகளையெல்லாம் தாங்கிய பாத்திரங்கள்
பாடியும்,புலம்பியும்,ஓலமிட்டும்,வீழ்ந்தும் வீழ்ச்சியின் கீதங்களை இசைத்தபடி எங்கும் நிறைந்தனர்.ஏமாற்றங்கள் நிறைந்த
வாழ்வியல் சித்திரங்கள் இருள்வெளியாய் மிதந்து வியாபித்தன.

மிகுந்த படைப்புத்தன்மையுடன் பகுர்தீன் இந்த நாடகத்தை இயக்கி வடிவமைத்துள்ளார்.அவர் முருகபூபதியின் மணல்மகுடி
நாடகக்குழுவில் கடந்த பத்தாண்டுகளாக செயல்பட்டவர்.தற்போது சென்னையில் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து
நாடகம் மற்றும் நாட்டுப்புறக்கலை வடிவங்களில் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருபவர்.முற்றிலும் அந்த மாணவர்களைக்
கொண்டே இந்த நாடகம் சென்னையில் ஸ்பேசஸ்,கூத்துப்பட்டறை,பியூர் சினிமா ஆகிய இடங்களில் நிகழ்த்தப்பட்டது.

——–

Comments are closed.