கனவென்பது ( சிறுகதை ) / ரமா சுரேஷ்

[ A+ ] /[ A- ]

அவன் தன் வாழ்க்கையில் நீண்டதூர பயணங்கள் எதுவும் மேற்கொண்டதில்லை. தன் ஊரும் ஊரைச் சுற்றியிருந்த சிறு நகரங்களும் மட்டுமே உலகமென இத்தனை காலம் நம்பிக் கொண்டிருந்தவன், மேற்கொண்டுள்ள இந்த பயணத்தை வாழ்வில் மிக முக்கியமானதாய் உணர்ந்தான். எந்த பயணமும் தொடங்கும் இடத்தில் முடிவதில்லை என்பது மாமா அவனுக்கு சொல்லிக்கொடுத்த பாடங்களில் ஒன்று. தன் வயதை விடவும்

அதிகமாக வாழ்நாள் முழுவதிற்கும் மாமாவைக் குறித்த நினைவுகள்தான் அவன் தோள்களில் வேதாளம் போல் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அவனைப் போலவே பருவத்தில் அதிகம் ஊர் சுற்றியிருக்காத அவனது மாமா இப்படியானதொரு பயணமாகத்தான் சிங்கப்பூர் வந்தார். அது நடந்து முடிந்து இருபது வருடங்களாகின்றன. அதன்பிறகு அவர் வாழ்வின் பாதியை இந்த சின்னஞ்சிறிய தேசம் எடுத்துக் கொண்டிருந்தது.
விமானத்தின் உள்ளிருந்து ஜன்னல் வழியே அதன் ரெக்கைகளை வினோதமாக பார்த்தான். மேக கூட்டத்திற்குள் அது மட்டும் தனித்து பறப்பது போன்றிருந்து.

பயத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டான். வாழ்க்கையில் இக்கட்டான நேரங்களில் எல்லாம் கண்களை மூடிக்கொண்டால் எவ்வளவு எளிதாக இருக்கும் என்று நினைக்கும்போதே அவன் தோள்களை மேகமூட்டங்கள் உரசுவது போலிருந்தது. ‘எக்ஸ்க்யூஸ்மி’ என்ற குரல் காதுகளை உரச கண்களை திறந்தான். “சீட் பெல்ட் ப்ளீஸ்” விமான பணிப்பெண் சொல்லியபடி நகர்ந்துசென்றாள். பட்ஜெட் விமானத்தைவிட, தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு வந்த சொகுசு பேருந்து அவனுக்கு வசதியாகவே தெரிந்தது. ஜன்னல் கண்ணாடி வழியே மீண்டும் ரெக்கைகளை பார்த்தான். கண்களுக்கு புலப்படவில்லை. சூரியன் இன்னும் விழித்தெழாத ஒரு குட்டி தேசம் இரவும் இல்லாமல், பகலும் இல்லாமல் நீரின் ஒளியில் மின்னிக்கொண்டிருந்தது. அந்த சிறிய சன்னல் தீவின் முழு அழகையும் காட்ட மறுத்தது.

உணர்ச்சிவயத்தில் எழுந்து நின்று பார்க்க முயன்றவனை பணிப்பெண் சிரித்தப்படியே அதட்டி அமரவைத்தாள். பெரும் மலை முகடுகள் அற்ற காடும், பேரலைகள் அற்ற கடலும் பின்னி பிணைந்துகிடந்தன. எனக்கு நீ உனக்கு நான், நமக்கான தனித்துவமே இந்த அமைதிதான் என்று அவர்கள் போக்கிலேயே கிடந்தார்கள். தனக்காக இந்த தீவில் ஒரு ஜீவன் காத்துகிடப்பதாக அவன் உள் மனம் கூறியது. “அஞ்சு லச்சத்தை வட்டிக்கு வாங்கிட்டு சிங்கப்பூருக்கு வேலைக்கு போகும் நீ, உன் மாமன் மாதிரி எங்களை நடு ரோட்டில் விட்டுடாத” அம்மா அழும்போது அவன் ஏதும் பேசாமல் நின்றிருந்தான். அவன் வாழ்வில் அர்த்தப்பூர்வமான எல்லா தருணங்களிலும் மாமாதான் ஒரு முன் மாதிரியாய் அவனுக்கு இருந்திருக்கிறார். அவரின் தோள்களிலிருந்தபடியே இந்த உலகைப் பார்க்க பழகியவன் என்கிற வரையில் இவனுக்கு எல்லாமே மாமா சொல்லிக் கொடுத்ததுதான். முதல் மழையை, முதல் சூரைக்காற்றை, திருவிழாக் கூட்டத்தையென அவன் குழந்தை பருவத்தின் சந்தோசங்கள் எல்லாம் தரும், அவரின் வியர்வை கலந்த அருகாமையிலிருந்து துவங்கியவையே.

எங்கு போனாலும் மாமாவுக்கு இவன்தான் காவடி. தோளில் தூக்கிக்கொண்டு வீதி முழுவதும் சுற்றித் திரிவார். இந்த கொண்டாட்டங்கள் எல்லாம் மாமா சிங்கப்பூர் வரும் வரை அவன் வாழ்வில் நடந்தேறியது. சிறு வயதில் தண்ணீர் என்றால் குடிக்க கூட பயப்படுபவனை குளிக்க வா என்றால், நாடு நகரத்தையே சுற்றி வருவான். இரண்டு நாளைக்கு ஒரு முறை இவனை தோளில் தூக்கிக்கொண்டு மாமாத்தான் குளத்திற்கு அழைத்துச்செல்லுவார். அப்படியொரு நாள் போகையில் “ஏண்டா மாப்ள, ஏதோ கெட்ட நாத்தமா வருதே உனக்கு ஏதாவது தெரியுதா!” மாமா மூக்கை சொறிய இவன் பல்லை கடவாய் வரை இளித்தப்படி “நான்தான் இன்னும் குண்டி கழுவல,” என சிரித்தான். “அடப் பீக்குண்டி பயல, டவுசரு கூட போடாம மேல ஏறி ஜம்முன்னு உக்காந்துருக்க,” குளக்கரையில் நின்றபடியே குளத்துக்குள் வீசி, மாமாவும் வாளையாய் பாய்ந்தார்.

“ஏண்டா என்னத்த தின்னு தொலச்ச, பிசினு மாதிரி ஒட்டிகிட்டு போகமாட்டேங்குது!” என்று குளத்தில் கிடந்த கொடிப்பாசியால் தேய்த்து குளுப்பாட்டிவிட்டதை நினைக்கையில் சத்தமாகவே சிரித்துக்கொண்டான். மேக மூட்டங்கள் கலையாமல் ஒரே இடத்தில் தவழ்ந்து கொண்டிருந்தன. விமானம் பறக்காமல் ஒரே இடத்தில் நிற்பது போன்றும், உறக்கத்தில் நடப்பவன் போல் குலுங்கி குலுங்கி நகர்வதும், நிற்பதுமாக இருந்தது. திடீரென அடிவானம் பீறிட்டு சிவப்பு குழம்புகளை கக்கத் துவங்கியது. செவ்வான ஒளியில் தீவு தங்கத்தை விழுங்கியவள் போன்று மின்னியது. காதில் ‘கொய்ங்’ என்ற சத்தத்துடன் அடைத்துக்கொள்ளவே அப்போதுதான் கவனித்தான் விமானம் மெல்ல தரையிறங்கி, கடகடவென்ற சத்தத்தோடு சாலையில் ஓடிக்கொண்டிருந்தது. மாமாவுக்கு வெள்ளை வேட்டி சட்டை வாங்கி வைத்திருந்த பையை மார்போடு அணைந்திருந்தான்.

மாமா வீடும், அவன் வீடும் ஒரே தெருவில்தான் இருந்தது. மாமாவின் உயரத்திற்கு ஏற்றார் போல் பரந்து திரண்டுகிடக்கும் மார்பின்மேல் சட்டை இல்லாமல் கைலியுடன் தெருவிற்குள் சுற்றும்போதெல்லாம் இவனின் மிகப்பெரிய நாயகனாக மாமாதான் காட்சியளித்தார். காலையில் எழுந்தவுடன் மாமா இவன் வீட்டு வாசலில்தான் நிற்பார். தலையில் துண்டை முண்டாசாக சுற்றிக்கட்டி, வாயில் வேப்பங்குச்சியை பீப்பி ஊதுவதுப்போல் ஒருகை நீளத்திற்கு குச்சியின் முனையில் இலையை கூட ஒடிக்காமல் வருவார்.

சில சமயம் அவன் அம்மாயி வீட்டு ஆடு மாமா வாயில் இருக்கும் இலையை தின்பதற்காக கூடவே ஓடிவரும். அன்று அவன் தூங்கி எழுந்து வரும்போது வீட்டு வாசலில் ஊர் பெரியவர்கள் சிலர் நின்றுக்கொண்டிருந்தார்கள். “மச்சான் என்ன இருந்தாலும் இன்னொருத்தனுக்கு பரிசம் போட்ட பொண்ணை, கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து நிக்கிறியே இது நல்லாவா இருக்கு?” அவனுடைய அப்பா மாமாவை கடிந்துகொண்டிருந்தார். அப்பொழுதுதான் கவனித்தான், திண்ணையில் மாடிவீட்டு அத்தை மிரட்சியுடன் பேந்தப்பேந்த விழித்தபடி நின்றுக்கொண்டிருந்தாள்.
“என்னது! மாமாவுக்கு கல்யாணம் ஆச்சா? என்னைய தூங்க வெச்சுட்டு பந்தல் போட்டு, பீப்பி ஊதி, மோளம் அடிச்சு கல்யாணம் பண்ணிட்டிங்களா!” அவன் வயிற்றில் அடித்துக்கொண்டு வாசலில் உருண்டு ஆழ ஆரம்பித்துவிட்டான்.

“இவன் வேற நேரகாலம் புரியாம” அதட்டியப்படியே அவனை தூக்கி சமாதானம் செய்ய ஆரம்பித்தாள் அம்மா. சிறிது நேரத்திற்கெல்லாம் வீட்டு வாசலில் ஊர் பெரியவர்கள் அனைவரும் கூடவே, இனிதான் கல்யாணம் என்ற நம்பிக்கையுடன் மாமாவை கட்டிக்கொண்டான். நேரம்தான் கடந்ததே தவிர கல்யாணமும் நடக்கவில்லை, சாப்பாடும் போடவில்லை சண்டையாகத்தான் மாறியது. மாடிவீட்டு தாத்தா இடுப்பில் இருந்த வேட்டியை அவுத்து தாண்டினார். “அவ, செத்தா கூட முகத்தில் முழிக்க மாட்டேன், அதே மாதிரி அந்த ஓடுகாலி சிறுக்கி என் வீட்டு வாச நிழலை கூட மிதிக்க கூடாது” தாத்தா கோபமாக போய்விட்டார். மாடிவீட்டு அத்தை அழுதுக்கொண்டே இருப்பதை அவன் பாவமாக பார்த்துகொண்டிருந்தான் .

“இந்த வெறும் பய சிவப்பு தோலையும், வாட்ட சாட்டத்தையும் பார்த்து மயங்கியாடி வந்த, சாதி சனம் முன்னாடி மூக்கறுத்துட்டியே பாவி, நீ நடுத்தெருவுலதான் நிப்ப!” அத்தையை திட்டிய மாடிவீட்டு பெண்கள் மண்ணை வாரி தூற்றியபடியே சென்றார்கள். யார் பேச்சையும் சட்டை செய்யாமல், “என் புள்ள, பொண்டாட்டிய எப்படி காப்பாத்துறதுன்னு எனக்கு தெரியும்” ஆவேசமாக கத்தியவன் அவனை தூக்கி தோளில் வைத்துக்கொண்ட மாமா “டேய் மாப்ள, அஞ்சே மாசத்துல உனக்கு ஒரு தேவதைய பெத்து தாறேன், கட்டிக்கிட்டு சந்தோசமா இருடா” மாடிவீட்டு அத்தையின் வயிற்றில் குட்டி பாப்பா இருக்கும் சந்தோசத்தில் அவன், மாமாவின் தோளில் காவடியாக சுழன்று ஆடத் துவங்கினான்.

இவன் சிங்கப்பூர் வரும்போது அம்மா எப்படி அழுது ஊரைக் கூட்டினாளோ, அப்படித்தான் மாமா சிங்கப்பூர் வரும்போதும் அழுது ஊரைக் கூட்டி வைத்திருந்தாள். “இப்ப நீ எதுக்கு அழுதுட்டே இருக்க நான் சிங்கப்பூருக்கு விசிட்டிங் விசாவுலதான் போறேன், நாலு மாசம் ஒளிஞ்சுகிடந்து வேலப்பாத்தா நம்ம கஷ்டமெல்லாம் ஓடிடும்” ஆறுதல் சொன்ன மாமா அவனை அணைத்து முத்தமிட்டான். “அவளை நல்லா பாத்துக்கக்கா செல்வாக்கா வாழ்ந்தவ” சொல்லும் போதே மாமாவின் குரல் உடைந்தது. “அடியே உங்க அப்பன் வீட்டு வாசலில் அடி வெச்ச, என்னைய மறந்திடனும்.” மனைவியை அதிகாரத்துடன் அதட்டினாலும் கண்கள் என்னென்னமோ சொல்லியது.

அவன் கைகள் நிறைய காசுகளை அள்ளி கொடுத்த மாமா, “வெச்சுக்கடா மாப்ள, நான் சம்பாதிக்கறது எல்லாம் உனக்குதான், இந்த ஊர்லயே பெரிய வீடா கட்டி, என் பொண்ணையும் உனக்கே கட்டிதாறேன்,” அப்படி சொல்லிவிட்டு வந்த மாமா ஒரே வருடத்தில் சிங்கப்பூரில் காணாமல் போனார்.
சாங்கி விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் அவனுக்கு தெளிவாக ஒன்று புரிந்தது, ஊரில் சொன்னதுபோல் ஒரே நாளில் சிங்கப்பூரை சுற்றி வர இயலாது. சிங்கப்பூர் வந்த புதிதில் மாமாவை தேடுவது அவனுக்கு மிக சிரமமாக இருந்தது. எப்படி, எங்கு யாரிடம் விசாரிப்பது? எந்த அடையாளத்தை சொல்லி கேட்பது என்ற தயக்கத்துடன் சிவந்த உயர்ந்த மனிதர்களை பார்த்தால் அவர்கள் பின்னால் ஓடி ஏமாந்தான். விடுமுறை நாட்களில் லிட்டில் இந்தியா முழுவதும் சுற்றி திரிவான். முதலில் வாட்சப்பில் மாமா பெயரில் ஒரு குரூப்பை துவங்கி ஊர்க்காரர்களுடன் தேடத் துவங்கினான்.

“பங்காளி மாமாவை மாதிரி தேக்காவில் இருக்க வீராச்சாமி ரோட்டில் பார்த்தேன்டா, புக்கீஸ் பக்கம் தாய்லாந்துகாரிகூடப் பார்த்தேன்,” இப்படி, அப்படியென மாமாவை பற்றி வதந்திகள் பரவினாலும், அவன் மாமா யார் கண்ணிலும் படாமல் காத்துபோல உலாவினான். ஒரு நாள் பெரியப்பா, போன்போட்டு “ஏண்டா உன் மாமா என்ன தியாகியா? பல வருசமா ஒளிஞ்சு கிடந்து வேலைப்பாத்துட்டு கிடக்கிறவன், நீயே அவன் போட்டோவை சிங்கப்பூர் முழுவதும் அடிச்சு ஒட்டி போலீஸ்கிட்ட காட்டி கொடுத்துடுவ போலயிருக்கே. சூதனமா தேடுங்கடா.” பெரியப்பா சொன்னது அவனுக்கு சரியாகப் படவே காதும் காதும் வைத்தார்போல் மாமாவை தேட ஆரம்பித்தான்.

சாப்பாட்டு கடை ஒன்றில் மேனேஜர் வேலை என்று சொல்லித்தான் ஏஜெண்டு ஐந்து லட்சம் வாங்கிக்கொண்டான். ஆனால், இங்கு வந்தபிறகுதான் தெரிந்தது, ஒரு கடை அல்ல முப்பது கடைகளை உள்ளடக்கி மிகப்பெரிய உணவகம் என்று.

முதல்நாள் வேலைக்கு சென்றபோது, மேனேஜர் வேலையும் அல்ல, தட்டு கழுவும் வேலையென்று புரிந்தபோது குடும்ப சூழலும், மாமாவின் ஏக்கங்களும் அவனை தலையசைக்க வைத்தது. யூசூன் எம்.ஆர்.டி நிலையத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் இயங்கும் உணவகத்தில் ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் குறையாமல் சாப்பிடும் இடத்தில் தட்டு, மங்கு கழுவுவது அவ்வளவு சுலபம் அல்ல. சோப்பு தண்ணீர்க்குள் கை ஊறி, நகம் கருத்து உப்பிக்கொண்டு நின்றது. B.Com படித்த அவனுக்கு அங்கு இருந்த ஆறுதல் அவனுடன் வேலைப்பார்க்கும் MBA, MCA மற்றும் BE நண்பர்களே. “ஏண்டா முதலாளிகூட ஓடியாடி வேலை பார்க்கணும் நீ உட்க்காந்த இடத்தை விட்டு நகராம வேலை பார்க்கலாம்னு சொல்லி கூட்டிட்டு வந்திருப்பாங்களே,” இப்படியாக தங்கள் சோகங்களை கேலியாக மாற்றி சிரித்துக்கொள்வார்கள்.

அன்று சாப்பாட்டு மேசையில் இருந்த காலி மங்குகளை எடுக்கும் போது எதேச்சையாக அருகில் நின்றவரை இடித்துவிட்டான், “பார்த்துலா பொடியா” என்று அதட்டலாக சொல்லிவிட்டு எதிர் மேசையில் அந்த கும்பல் அமர்ந்துகொண்டது. அவர்கள் அனைவருமே மலேசிய தமிழர்களாகத்தான் இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான அதுவும் பலநாட்டு, பல இன மக்கள் வந்துபோகும் சாப்பாட்டு கடையில் இந்த மனிதன் இன்னாட்டுக்காரன், இந்த இனத்தான் என்று சொல்வது புதியவர்களுக்கு வேண்டுமானால் கடினமான ஒன்று. ஆனால், மனித முகங்களை மட்டுமே பார்த்து பழகிப்போனவர்களுக்கு கண்ணையும் மூக்கையும் வைத்தும், அவர்கள் வாங்கும் சாப்பாட்டை வைத்தும் எந்த நாடு என்று கண்டு பிடிப்பது சுலபமான காரியம்.

பொதுவாக சிங்கப்பூர் தமிழர்களை விட மலேசிய தமிழர்கள் உயரமாகவும், தடிமனாகவும் இருப்பார்கள். அதோடு மலேசிய தமிழர்கள் உடம்பில் கை கால் முதுகு என்று உடல் முழுவதும் பச்சை குத்தி இருப்பார்கள். தலையில் சாயம், காதில் கடுக்கன் என்றும் கூடுதல் அடையாளமாக இருக்கும்.
“தம்பி எந்தவூருப்பா!” என்று தோளில் கை விழவே அவன் தடுமாறித்தான் போனான்.

“சார் தெரியாமல்தான் கை பட்டுச்சு,” அவன் தயங்கி நின்றான்.
“தஞ்சாவூர் பக்கமா?” கைகள் அவன் தோளை இறுக்கியது. அவன் அப்போதுதான் அந்த முகத்தை உற்றுப்பார்த்தான். சில உருவங்கள் அடையாளமாக மனதில் பதிவதில்லை. அப்படித்தான் அவர்கள் இருவரும் சந்திக்கும் போது உணர்வுகள் மட்டுமே அடையாளம் கண்டுக்கொண்டது. அவன் மாமாவை இறுக்கி கட்டிக்கொண்டு “மாமா! மாமா!” விசும்பலாக வெகு நேரம் அழுதுக்கொண்டிருந்தான்.

ஒரே இரவில் அவனும் மாமாவும் இருபது வருட வாழ்கையை கடை விரித்துப் போட்டார்கள். இருவருக்கும் எதை எப்படி துவங்குவது, யாரைப்பற்றி பேசுவது, என்று புரியாமல் ஆடு மாடு குலம் வாய்க்கா வரப்புன்னு பேசவும் செய்தார்கள். இருவரும் கடந்த வாழ்க்கையின் காரணங்களை தேடவில்லை. மீண்டும் சந்தித்துக்கொண்டோம் என்ற நிதர்சனமே கடந்தகால சோகங்களை தகர்த்தெறிந்தது. உனக்கு இரட்டை பொண்ணுங்க நினைவு இருக்கா மாமா? உன் பொண்ணுங்க இரண்டுபேரும் உருவத்திலும் சரி, குணத்திலும் சரி அப்படியே நீந்தான்? அவன் ஆதங்கத்துடன் மாமாவை பார்த்தான்.

இடது கை முழுவதும் குத்தியிருந்த வண்ண பச்சையை தடவிய மாமா “தனா உன்னிடம் சொல்ல தயக்கம் என்னடா?” பல வருடங்களாக தனா என்று அழைக்கப்படாத தன் பெயரை மாமா அழைத்தபோது சிறு வெட்கத்துடன் மாமாவுடன் அணைந்தும், அணையாமலும் நெருங்கி உட்கார்ந்துகொண்டான் தனசேகர். மனிதனின் மனநிலைக்கும், சூழலுக்கும் ஏற்றார் போல் வியர்வையின் வாசனை மாறத்தான் செய்கிறது. படிப்பறிவு இல்லாத மாமா கலெக்டர் வேலைக்காகவா இங்கே வந்தார், சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு தெரியாமல் ஒளிந்திருந்து ஏதோ நாலு காசு சம்பாதிக்க எந்த வேலை கிடைத்தாலும் போதும் என்று எண்ணி வந்தார். இருபது வருடங்களுக்கு முன்பு ‘ஓவர் ஸ்டெ’ என்பது சிங்கப்பூரில் பரவலாகவே இருந்த காலம்.

ஆரம்பத்தில் கிடைத்த வேலைகளையெல்லாம் செய்து வந்தவர், இரட்டை பெண் குழந்தைகள் என்ற கடுதாசியை பார்த்தபிறகு, தன் குழந்தைகளை எப்படி வளர்த்து ஆளாக்கப்போகிறோம் என்ற பயத்தில் தாறுமாறாக சிந்திக்க துவங்கினான். மனிதனின் ஆசையை விட, பயம் கொடியது. பயம் யோசிக்க விடாமல் எதை வேண்டுமானாலும் செய்யச்சொல்லும், அந்த பயமே அவனை வழிநடத்த துவங்கியது. கடன் கொடுக்கும் முதலாளிகளிடம் வேலைக்கு சேர்ந்தான். வட்டிக்கு கடன் கொடுக்கும் முதலாளிகளை சிங்கப்பூரில் செல்லமாக ‘முதலைகள்’ என்றும் கூப்பிடுவார்கள். முதலைகள் கொடுத்த கடனை வசூல் செய்துகொடுக்க அவர்கள் சில கேங்ஸ்டர்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்திருந்ததும் உண்டு. அவன் உயரமும், உடல்வாகும் முதலைகளுக்கு மட்டும் அல்ல, சில சமயம் தாய்லாந்து, இந்தோனேசியாவில் இருந்து வரும் அழகிகளுக்கும் அடியாளாகவும் செல்வான். அப்படி அறிமுகமானவள்தான் தாய்லாந்து பேரழகி.

உறவையும், உரிமையையும் எளிதில் இழக்கும் மனிதன் தன் உடலையும், அது கொடுக்கும் வெட்கையையும் அவ்வளவு எளிதில் இழக்க முடிவதில்லை. மனித வாழ்வின் அடையாளமாக மட்டும் அல்லாது உலகின் அடையாளமாகவும் இந்த வெப்பம் மிதமிஞ்சியே கிடக்கின்றது. பல உடல்களின் வெப்பத்தை உள் வாங்கவே அவள் தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வந்துபோவாள். கிராஞ்சி அருகில் இருக்கும் பேக்டரியில்தான் அவளுக்கு நிறைய கஸ்டமர்ஸ். ஓடாத கண்டனையர்கள் அவளுக்கு அழகிய படுக்கையறையாக அலங்கரிக்கப்பட்டு காத்திருக்கும். அவளுக்காக வரிசையில் காத்து கிடக்கும் உயிர்களை ஆராதித்து அரவணைத்துக்கொள்வாள். ஒருவன் கலைத்து, களைந்து வெளியே வரும் போது இன்னொருவன் உள்ளே செல்வான். வேட்டையாட தெரிந்த மனிதனுக்கு, வேட்டையின் நுட்பங்கள் புரிவதில்லை. பலர் உள்ளே சென்றவுடனே வெளியே வந்துவிடுவார்கள், சிலரை இவன்தான் அதட்டி வெளிய இழுத்துவருவான். அவள் உள்வாங்கிய வெப்பத்தின் அளவைப்பொறுத்தே கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

யாரிடம் எவ்வளவு வாங்க வேண்டும் பத்தா, இருபதா, முப்பது வெள்ளியா என்று உள்ளிருந்து சொல்லுவாள், அதில் பல பய கடன் சொல்லிட்டு போவான்! காவலுக்கு வெளியில் நிற்கும் இவன் கடனாளிகளின் பெயரை நோட்டுப்போட்டு எழுதி வைத்துக்கொண்டு மாத முதல் வாரத்தில் வசூல் செய்து கொடுப்பான். வங்கதேசத்தை சேர்ந்த ஊழியர்கள் சம்பளத்தை வாங்கி அப்படியே கொடுத்துவிட்டு போவதும் உண்டு. இதையெல்லாம் யாருக்கோ நடந்தது போல் சாதாரணமாக மாமா சொல்லிக் கொண்டிருக்க, தனா மலைப்போடு கேட்டுக் கொண்டிருந்தான்.

முதலையிடம் கடன் வாங்கியவர்கள் சொன்ன தேதியில் பணத்தை திருப்பி தரவில்லை என்றால், அவர்கள் வீட்டு வாசலின் முன் கலர் சாயத்தை ஊத்தி, வீட்டு தொலைப்பேசி எண்ணைய் குடியிருப்பு பகுதி முழுவதும் எழுதி போட்டு விடுவார்கள். ஒரு முறை அவனும் அவன் கூட்டாளியும் வேலையை முடித்துவிட்டு வரும் வழியில், கடன் வாங்கியவன், அவர்களை ஆள் வைத்து அடித்து லொங்கானில் வீசிவிட்டான். அதில் அவன் கூட்டாளி இறந்துபோனது மட்டுமல்லாமல் இவனின் நிலை கவலைக்கிடமாகவும் இருந்தது.

பாஸ்போர்ட், விசா இல்லாத அந்த நேரத்தில் போலீசாரிடம் இருந்து அவனை காப்பாற்றியதும் தாய்லாந்தழகியே! முதலையிடம் சண்டைபோட்டு அவன் மருத்துவ செலவிற்காக பணத்தை வாங்கி மலேசியா வழியா தாய்லாந்து கூட்டி போனாள். சிறிது காலம் தாய்லாந்து, மலேசியா என்று சுற்றி திரிந்தவன் மலேசிய பாஸ்ப்போட், குடியுரிமையை திருட்டுத்தனமாக பெற்றான். இந்த இருபது வருட வாழ்க்கையில் அவன் மட்டும்மல்ல, சிங்கப்பூரும் பல சட்டதிட்டங்களை கடுமையாக்கியது. கடன் கொடுக்கும் முதலைகள், தாய்லாந்து அழகி போன்ற பெண்கள் நினைத்த நேரத்தில வந்து, கிடைத்த இடத்தில தொழில் செய்ய முடியாது. மாமா தன் துயரத்தை எல்லாம் சொல்லி “என் வாழ்கையையே இழந்துட்டு நிக்கிறேன் தனா.” மாமா எதை நினைத்து பெருமூச்சு விட்டார் என்று தெரியவில்லை. ஆனால், தனாவின் கண்கள் கலங்கி கண்ணீர் கசிந்தது. வார்த்தைகள் இருந்தும் பேச விரும்பாதவன் போல், தலையை கோதிக்கொடுத்த மாமாவின் கைகளை எடுத்து, மடியில் வைத்துக்கொண்டான்.

நம் வாழ்வில் நடைப்பெறும் அனைத்து சம்பவங்களுக்கும் பின் ஆயிரம் காரணங்களை அடிக்கிக்கொண்டே போகலாம். ஏழு வயதில் மாமாவின் தோளில் இருந்து இந்த உலகை மட்டுமல்லாமல் மாமாவின் வாழ்க்கையையும் பார்த்து ரசித்தவன். திருவிழா கூட்டத்திலும் சரி, நிலவற்ற இருளிலும் சரி மாமாவை பார்த்து மிரளும் அந்த அழகிய கண்களை தனா ஆவலுடன் பலமுறை பார்த்து இருக்கிறான். மாடிவீட்டு அத்தையாக பார்த்ததைவிட தனாவின் அத்தையாக அவளை மிகவும் பிடித்து போனது. மாமாவிற்கு பிறகு தனாவின் மிகப்பெரிய சந்தோசம் அத்தைதான். மாமாவிடம் இருந்து வரும் கடிதத்தை அத்தையின் மிரளும் விழிகள் கண்ணீருடன் படிக்கும் போது இவனும் காரணமே புரியாமல் அத்தையுடன் சேர்ந்து அழுது இருக்கிறான். திடீரென அத்தையின் விழிகளில் இருந்த மிரட்சி காணாமல் போய்விட்டதாக தனா நினைத்துக்கொள்வான். ஆனால், வருகிறேன் என்று கடைசியாக மாமா போட்ட கடிதத்தை அத்தை இப்போதுக்கூட மிரட்சியுடன் ஒரு முறை படித்திருப்பாள் என்பதையும் உணர்வான். ஒரு முறை மாமாவீட்டு வாசலில் ஊரும், உறவும் ஒன்றுகூடி மாமா இறந்துவிட்டதாக ஒப்பாரி வைத்து அழுதார்கள். அன்று தனாவும் அழுதான், அப்போதுதான் அத்தையின் கண்கள் எரிச்சலை உமிழ துவங்கியதை கவனித்தான்.

“ராஜ குமாரியாட்டம் வளர்ந்தவ, ஆயியப்பான் பேச்சை கேக்காம போனதால நடு ரோட்டில நிக்கிறாத பார்த்தியா” என்று ஊரில உள்ள வயது பிள்ளைகளுக்கு உதாரணமா காட்டும் போதும், திருவிழா கூட்டத்திலும், இழவு வீட்டிலும் ஒத்த மனுசியாக தனிச்சு நிற்கும் அத்தையை பார்க்கும் போதெல்லாம் அவள் கண்களில் கசிந்து வரும் ஒளியில் நவரசங்களும் கரைவதை பார்த்து இருக்கிறான். அத்தைக்கும் தனாவிற்கும் பத்து வயதுதான் வித்தியாசம். ஆனால் அவன் வளர்வதற்குள் அத்தை கிழவியாகி விட்டதுப்போல் உணர்ந்தான். மாடிவீட்டு தாத்தா கெஞ்சியும், உறவுகள் அதட்டியும் மாடிவீட்டு பக்கம் போக மறுத்த அத்தைக்காக, தனா மேற்கொண்ட பயணத்தில் துக்கத்திலும், சந்தோசத்திலும், கோபத்திலும் மாறி மாறி மாமாவின் மடியில் அழுதுக்கொண்டிருந்தான்.

ஓரிரு நாட்களில் மாமாவை அழைத்துக்கொண்டு ஊருக்கு போகப்போகிறோம் என்ற நினைப்பே தனாவை தூங்க விடவில்லை. ஊருக்கு போனவுடனே ஊரை கூட்டி அத்தையின் கையால் விருந்து வைக்கணும், எந்த முன்னறிவுப்பும் இல்லாமல் மாமாவை அத்தை முன் நிப்பாட்டி பதினெட்டு வயதில் அவள் தொலைத்த வாழ்க்கையை திரும்ப கொடுக்கும்போது அவள் முகத்தை பார்க்கணும், என்று மாமாவின் கைகளை இருக்க பற்றிக்கொண்டான். அதில் இருந்த குளிர்ச்சியும் வெப்பமும் சிரித்துக்கொண்டன.

அதிகாலை கனவைப்போல இருந்தது எல்லாம் அவனுக்கு, அம்மாவிடம் இருந்து ஃபோன் வரும் வரை. இவன் ஹலோ என்று சொல்வதற்கு முன்பே “ஏலே தம்பி நாம மோசம் போயிட்டோம்டா உங்க அத்த!” அம்மா அதற்கு மேல் பேச முடியாமல் திணறினாள்.
“கொஞ்ச நாளா சந்தோசமா இருந்தாடா, மாரியாத்தா கண்ண தொறந்துட்டான்னு பல வருசத்துக்கு பிறகு கோயிலுக்கு போயிட்டு வாரேன்னு சொல்லிடு இரண்டு நாளைக்கு முன்ன போனவ இன்னும் வீடு வரலடா,”

“அம்மா முதல்ல அழுவதை நிப்பாட்டு, அத்தை எங்கயும் போயிடாது வந்துடும்.” சொல்லும் போதே அவன் குரல் உடைந்தது, மாமாவுக்கு தெரியாமல் கண்களை துடைத்துக்கொண்டான்.

“இல்லடா, ஊமச்சி வரமாட்டா! அவ இனி வரமாட்டா!” பல அழுகை குரல்கள் கேட்டன. தனாவுக்கு உறுதியாக ஒன்று மட்டும் தெரிந்தது மாடி வீட்டு அத்தை இறந்திருக்க மாட்டாள். இத்தனை காலம் காத்திருந்தவள் திடீரென எங்கு போயிருக்க முடியும்? துக்கங்களை சந்தோசமாக ஏற்றுக் கொண்டவள் சந்தோசமாக வாழ்வைத் துவக்க வேண்டிய நேரத்தில் ஏன் யாரிடமும் சொல்லாமல் மறைந்து போக வேண்டும்? தனாவின் தலைக்குள் பூச்சிகள் பறந்தன. யாரோ நினைவு தப்புமளவிற்கு ஓங்கி காதில் அறைந்துவிட்டதைப் போல் சுயநினைவற்று நின்றான். “மாப்ள நான் ஊருக்கு கிளம்பிட்டேன். போகலாமா?” மாமாவின் குரல் எங்கோ ஒலிப்பது போன்று இருந்தது அவனுக்கு.

***

Comments are closed.