கபாலி – கனவுக்கும் நனவுக்கும் இடையே / கவின் மலர் –

[ A+ ] /[ A- ]

download
கபாலியின் முன்னோட்டக் காட்சிகள் வெளியானபோது அது இன்னுமொரு ரஜினிகாந்த் படம் என்கிற தோற்றத்தையே ஏற்படுத்தியது. ஆகவே பெரிதாக படம் குறித்த எதிர்பார்ப்பு ஏதுமில்லை. ஏனெனில் ரஜினி படத்தில் எதிர்பார்க்க எனக்கு எதுவுமில்லை. ஆனால் இயக்குவது ரஞ்சித் என்கிற வகையில் இப்படத்தில் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருக்கும் என்றே நினைத்தேன். ஆனால் ரஜினியே வித்தியாசமாக இருப்பார் என்பது இனிய அதிர்ச்சியே.

முதல்முறை பார்க்கையில் கபாலியில் என்ன இருக்கிறது என பிடிபடவில்லைதான். பிடித்திருக்கிறதா என தெளிவாகச் சொல்ல முடியவில்லை. சிறிய ஏமாற்றமும் மிஞ்சியது. ஒருவேளை திரையரங்கத்தின் தரமற்ற ஒலியமைப்பும், ரசிகர்களின் அதிக ஆரவாரமும் நம்மை திரைப்படத்திற்குள் உள்ளே செல்ல முடியாமல் தடுக்கிறதோ என்று தோன்றியது. மீண்டும் பார்த்தேன்.

முதன்முறை ஒரு திரைப்படம் பொதுத்தளத்தில் பெரும் விவாதத்தைத் தோற்றுவித்திருக்கிறது. நான் கூறுவது அதன் வியாபாரம் குறித்தல்ல; அதன் உள்ளடக்கம் குறித்து. ரஜினியுடன் ரஞ்சித் என்கிற கூட்டணியின் விளைவு இது என்றாலும் படத்தின் உள்ளடக்கம் முக்கிய காரணமாக இருக்கிறது.

ரஞ்சித்தின் முந்தைய இரு படங்களை எடுத்துக்கொண்டால், ’அட்டகத்தி’யில் அவர் ஒரு நீரூற்று போல வெளிப்பட்டார். அந்த நீருற்று பார்க்க மிக அழகாக ரம்யமாக இருந்தாலும் அதை நுணுக்கமாகப் பார்த்தால் அதில் நீலநிறம் தெரிவதை உணர்வது அரசியல் நுண்ணுணர்வு கொண்டவர்களுக்கு சாத்தியமானதே. ஆனால் நீல நிறம் எதைக் குறிக்கிறது என்கிற தெளிவு இல்லாத சாமானியர்களுக்கும் அப்படம் ஒரு பெருவிருந்தாக அமைந்தது.

ஒரு நேரத்தில் சாமானியர்களையும் விஷயமறிந்தவர்களையும் கவர்வது இயலாத காரியம். அதை ’அட்டகத்தி’ செய்தது. அதன்பின் வந்த மெட்ராஸ் இன்னுமொரு பாய்ச்சல். சற்றே மறைபொருளாக தலித் அரசியலைக் கொண்டிருந்தது ‘முடிஞ்சவுங்க புரிஞ்சுக்கோங்க’ என்பதாக இருந்தது. ஆனாலும் அது ஒரு பெரிய ஹிட் திரைப்படம். ரஞ்சித்தின் அடுத்த கட்ட நகர்வு வெளிப்படையாக வருவதாக இருக்குமென்கிற எதிர்பார்ப்பு நிலவியபொழுதில் வெளியான கபாலி நினைத்தபடி வெளிப்படையாகவே இருந்தது.

ஒரு சினிமா பார்க்கையில் நாம் யாராய் இருந்து பார்க்கிறோம் என்பதில்தான் அப்படம் பிடித்திருக்கிறதா இல்லையா எனச் சொல்ல முடியும். எனக்குள் ஒரு நல்ல சினிமா ரசிகை இருக்கிறாள். அதே சமயம் எனக்குள் ஒரு அரசியல் புரிந்துணர்வு கொண்ட பெண்ணும் இருக்கிறாள். ஒரே நேரத்தில் இருவருமே படம் பார்க்கின்றனர். இவர்கள் இருவருக்குமிடையே பெரும் போராட்டம். போராட்டத்தின் முடிவில் யார் வெல்கிறார்கள் என்பதே கபாலியின் விமர்சனமாக இருக்கக் கூடும்.

எனக்குள் இருக்கும் திரைப்பட ரசிகை இதில் இன்னும் வலுவான திரைக்கதையை ரஞ்சித் உருவாக்கி இருக்கவேண்டும் என ஆதங்கப்படுகிறாள். தொய்வை நோக்கிச் செல்லும் திரைக்கதையை இழுத்துப் பிடித்து தன் அற்புதமான நடிப்பின்மூலம் சமன் செய்கிறார்கள் ரஜினி, ராதிகா ஆஃப்தே, தன்ஷிகா இன்னபிற நடிகர்கள். ரஜினியின் நடிப்பு அவர் கையுயர்த்தி காவல்துறை அதிகாரியை எச்சரிப்பதிலேயே தொடங்கிவிடுகிறது. படம் முழுவதும் ஒவ்வொரு ஃபிரேமிலும் அவருடைய ஆட்சிதான். அவர் வெளிப்படுத்தும் முகபாவங்களும் வசன உச்சரிப்புகளும் ஒரு 65 வயது முதியவருக்கானதாகவே இருப்பது கபாலி பாத்திரத்திற்கு வலுவூட்டுகிறது.

சிறையிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் சாப்பிடும் காட்சியில் ‘நல்ல சாப்பாடு சாப்பிட்டு எத்தனை நாளாச்சு.. சாப்பிட விடு’ என்று சொல்லும்போது, கல்லறையில் மனைவியைப் புதைத்த இடத்தைத் தேடுகையில் வரும் பானுவிடம் ‘அடடே பானுவா? எப்டி இருக்கே…உன் புருஷன் எப்டி இருக்கான்?’ எனக் கேட்குமிடத்தில் குரலில் வெளிப்படும் ஒரு சிறிய வயோதிக நடுக்கம் அவரின் கதாபாத்திரம் இதுதான், இப்படித்தான் என நமக்குச் சொல்லாமல் சொல்கிறது. எதிரியிடம் சவால் விடும்போது அப்படியான குரலும் பாவமும் இல்லை ரஜினியிடம். அதில் எல்லாம் ‘நெருப்புடா’ ரகம்தான். இப்படி இரட்டை கபாலியாக ரஜினி வலம் வருகிறார்.

மெட்ராஸ் திரைப்படம் போலவே பின்னணியில் ஒரு குரல் கதைமாந்தர்கள் பலரை அறிமுகப்படுத்துகிறது. இத்திரைப்படத்தில் வரும் ஏராளமான கதாபாத்திரங்களை ஞாபகம் வைத்துக்கொள்வதில் பெரும் சிக்கல் இருக்கிறது. ஒவ்வொரு பாத்திரத்தையும் அறிமுகப்படுத்த ஒரு காட்சி என்று வைத்துக்கொள்கையில் திரைக்கதை சில நேரம் அங்குமிங்கும் அலைபாய்கிறது. ஆனால் வலுவான காட்சிகள் எல்லா பாத்திரங்களுக்கும் அமைந்துவிடவில்லை என்பதால் சிலரை நினைவில் வைத்துக்கொள்வது சிரமமாக இருக்கிறது.

பெட் ஷாப்பிற்கு வருகையில் பறவைகளைக் கூண்டில் அடைத்திருப்பது குறித்து கபாலி பேசும் வசனம் நுட்பமானது. “கோழிக்கறி” (செம விருந்து சிக்கியிருக்கு என மலேசியாவில் அர்த்தம்) என்பதை சீனி சொல்லும் முறையும் திரும்பிச் செல்கையில் கபாலி சொல்லும் முறையும், அடுத்த ஷாட்டில் கூண்டைத் திறந்தவுடன் பறவைகள் வானத்தை நோக்கிக் கிளம்பும் காட்சியும் சிலிர்ப்பு. டாப் ஆங்கிளில் பறவைகள் பறப்பதைக் காட்டிய முரளியின் கேமிராவுக்கு முத்தங்கள். அந்த வசனத்தின் முக்கியத்துவத்தை அந்த டாப் ஆங்கிள் ஷாட் நியாயப்படுத்துகிறது.

கபாலி லோகாவை கார் ஏற்றிக் கொல்வதற்கு முன் அவரிடம் ஒரு புகைப்படத்தைக் காண்பிக்கிறார். அது என்ன புகைப்படம் என்று தெளிவாகத் தெரியவில்லை. மீனா பாத்திரம் அறிமுகமாகும்போது அவர் திடீரென சிரிக்கிறார். ‘ஏன் சிரித்தாய்?’ எனக் கேட்கையில் ‘நான் சிரிக்கவில்லை’ என்று கூறி அழுகிறார். போதை மருந்து உட்கொள்வோரின் ஊசலாட்ட மனோபாவம் இது என்றாலும் மீனா போதைக்கு அடிமையானவர் என்பதை முதலில் நமக்குக் காட்டிவிட்டு பின் இக்காட்சியை வைத்தால், அவர் சிரிப்பதற்கும், அழுவதற்குமான காரணம் புரிந்து அக்காட்சியில் ‘இப்ப எதுக்கு இந்தப் பொண்ணு தேவையில்லாமல் அழுகிறது’ என்று நமக்குத் தோன்றுவதை தவிர்த்திருக்கலாம்.

இப்படி ஒரு பாத்திரத்தின் செயலை முதலில் காண்பித்து பின் அப்பாத்திரம் இப்படி எனச் சொல்வதும் ஒரு வகை யுக்திதான். மீனா அழும்போது ஏற்படும் நெருடலான உணர்வை அவள் போதை மருந்துக்கு ஆட்பட்டவள் என்று தெரியவரும்போது மனம் சமாதானம் செய்கிறது. ஆனால் நெருடல் தோன்றிய தருணம் இல்லை என்றாகாதே. இப்படிச் சிறிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்தியிருந்தால் கபாலி இன்னும் மெருகேறியிருக்கும்.
download (50)
கபாலியை மாணவர்கள் கேள்வி கேட்கும் காட்சியில் முதலில் பேசும் மீனா போதை மருந்துக்கு அடிமையானவர்களின் திக்கித் திணறிய பேச்சை கண்முன் நிறுத்துகிறார். அதற்காகவே அவரைப் பேச விட்டிருக்கிறார் இயக்குநர் என்று தோன்றியது. ஆனால் ரஜினியிடம் கேள்விகள் கேட்குமுன் ஒரு மாணவர் தன்னைக் குறித்துப்பேசுவது, ஒரு மாணவர் கவிதை வாசிப்பது போன்ற சில விஷயங்களைத் தவிர்த்திருக்கலாம். அதுவே இக்காட்சி அதிக நீளமாக இருப்பதான உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் கபாலியின் முன்கதையை நமக்குச் சொல்ல இக்கேள்விபதில் அமர்வை திறமையாக கையாள்கிறார் இயக்குநர்.

அதில் ஓரிடத்தில் ‘குமுதவல்லியை உங்களுக்கு அவ்ளோ பிடிக்குமா?’ என்று கேட்கப்படும்போது ரஜினி கையை விரித்துக் காண்பிப்பதும், ‘உலகம் ஒருவனுக்கா’ பாடலில் இடையில் இரு கதவுகளுக்கிடையே கூலிங்கிளாஸை ஏற்றிவிட்டவாறு பின்னால் திரும்பி சிரித்தபடி செல்லும் ரஜினியின் ஒரே நொடி ஷாட் ஒன்றும், சென்னை விடுதி அறையில் அவர் சொல்லும் ‘மகிழ்ச்சி’யும் மறக்க முடியாத பிம்பங்களாக நினைவில் என்றைக்கும் நிற்கும் தன்மை வாய்ந்தவை.

இப்படத்தின் உயிர்நாடியாக இருந்திருக்கவேண்டியது கபாலியின் முன் கதைதான். ஆனால் அவை உணர்வுபூர்வமான காட்சிகளைக் கொண்டிருக்காது, சம்பவங்களின் தொகுப்பாக இருப்பது படத்திற்கு வலுசேர்க்கவில்லை. தமிழ்நேசனின் இறப்புக்குப்பின் கபாலியின் எழுச்சி என்பது மக்களுக்காகப் போராடியதால் கிடைத்தது. ஆனால் அவர் கேங்க்ஸ்டராக உருமாறுவது ஏன் எப்படி என்பது குறித்த தெளிவு படத்தில் இல்லை. இதில் தமிழ்மாறன் கபாலியின் முன்னேற்றம் கண்டு வெதும்புகிறான். அதனால் துரோகம் செய்கிறான். முன்னதாக அவனை அழைத்து எதிரிகள் பேசுகிறார்கள். இக்காட்சி போலவே நபர்களை மட்டும் மாறி மாறி அமர வைத்ததுபோல பல்வேறு துரோகக் கதைகள் படத்தில் கபாலிக்கு உண்டு.

படம் முழுவதும் டோனி லீ, வீரசேகரன் குழுவினரில் யாராவது நீண்ட பெரிய டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கின்றனர். ஒருவேளை இது மலேசிய கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றாலும் அந்த டைனிங் டேபிள் காட்சிகள் அடிக்கடி இடம்பெறுவது சற்றே அலுப்பூட்டுகின்றன என்பதை சொல்லத்தான் வேண்டும். இதற்கு நேர்மாறாக ஒரு டைனிங் டேபிள் காட்சி நம்மை வலியில் ஆழ்த்துகிறது. கபாலி சிறைமீண்டு வீட்டுக்கு வருகையில் கார் ஒரு பாதையில் பயணித்து வந்து வீட்டின் முன் நிற்கிறது. ஆளரவமற்ற ஒரு வெறுமைத் தன்மை கொண்ட பாதை வழியே அந்த கார் வருகிறது.

இந்த ஷாட் ஒன்றே பின்னால் வரும் கபாலியின் தனிமைகுறித்த காட்சிகளுக்கு முன்னோட்டமாய் இருக்கிறது. இதிலேயே நம் மனம் அதற்குத் தயாராகி விடுகிறது. அந்தப்பாதையைக் கடந்து வந்து பார்க்கையில் வாசலில் கபாலியை வரவேற்க சிறிய கூட்டம் இருக்கிறது. அவர் பார்வையோ அங்கே இல்லாத, ஆனால் அவர் மட்டுமே உணரும் குமுதவல்லியின் உருவத்தில் நிலைக்கிறது. “வாங்க! ஏன் லேட்டு? எல்லோரும் வந்தாச்சு” எனும் அந்தக் குரலின் கையைப்பற்றியவாறே பின்னால் செல்கிறார் கபாலி.

உள்ளே சென்றால் ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி “காலெல்லாம் ஒரே வலி. போ..கொஞ்சம் தண்ணி கொண்டுவா” என்று சற்றே கண்டிப்புடன் கூறிவிட்டு ஒரு சின்னப் புன்னகையைத் தவழவிடும் ராதிகா ஆப்தேவைக் கண்டு நீர் எடுக்க உள்ளே போகிறார். டைனிங் டேபிளில் அங்கே “வாங்க வாங்க.. சாப்பிடலாம். எல்லோரும் வெயிட் பண்றாங்க” என்கிறார் குமுதவல்லி.

காட்சி மாறி நிகழ்காலத்தில் தனியே அங்கே டைனிங் டேபிளில் அமர்ந்திருக்கிறார் கபாலி. அவர் யார், அவர் மனது என்ன, முதுமை தரும் தனிமை எத்தகையது. சிறையில் இத்தனை காலம் எப்படிக் கழித்திருப்பார் என்பதை எல்லாம் இக்காட்சிகள் சட்டென்று விளக்கி விடுகின்றன.

பெரும்பாலான பெண்கள் கணவனை ஒருமையில் பிறர் முன் அழைக்க மாட்டார்கள். ஆனால் தனியாக இருக்கையில் அப்படி அழைப்பதுண்டு. கபாலியின் கற்பனையிலும் அப்படியே குமுதவல்லி இருக்கிறார். யாராவது அருகிலிருந்தால் அவர் “வாங்க” என்கிறார். தனியாக இருக்கையில் “வா” என்கிறார். ஆனால் இது ஒரே இடத்தில் மட்டும் மாறிவருகிறது. இரவு நேரத்தில் நீர்நிலை ஒன்றின் கரையில் குமுதவல்லி அமர்ந்திருப்பதாகக் கற்பனை செய்து வண்டியை நிறுத்திவிட்டு கபாலி இறங்கி வருகிறார்.

மிக அற்புதமான காட்சி இது. படத்தின் மிக ஜீவனுள்ள காட்சிகளின் ஒன்றும்கூட. ”நான் எங்கே இருக்கேன்னு உங்களுக்குத் தெரியாதா?” என்று பன்மையில் தொடங்கி “புள்ளதாச்சிப்பொண்ணை இப்படித் தவிக்க விடாதே” என்கிறார்.

இவ்வசனத்திற்குப் பின் ரஜினியின் பக்கவாட்டில் யாரையோ பார்த்து காட்டும் முகபாவத்தில் பயம் இல்லை. திகில் இல்லை. ஆனால் ஒரு மிரட்சியும், பதட்டமும், இருக்கிறது. கணநேரத்தில் மாறும் ராதிகா ஆஃப்தேயின் புதிர்த்தன்மை கொண்ட கண்கள் மனதிலிருந்து அகல மறுக்கின்றன. அக்கண்கள்தான் கபாலியின் எச்சரிக்கை மணி. சட்டென்று திரும்பி தன்னைக் கொல்ல வந்த கலையரசனை அடித்துத் தள்ளுகிறார்.

யாரோ கண்காணிப்பதான உணர்வையும், தாக்கவரும் உணர்வையும் உள்ளுணர்வில் அறிவதையும்கூட தன் hallucinationஇன் விளைவாக வரும் மனைவியின் கண்கள் மூலமாகவே கண்டுகொள்வதான இயக்குநரின் காட்சிப்படுத்துதல் வியக்கவைக்கிறது.

இக்காட்சி தொடங்கும்போது ஒலிக்கும் “வானம் பார்த்தேன்’ பாடலின் நான்கு வரிகள் உள்ளத்தை உருக்கிவிடுகின்றன. சந்தோஷ் நாராயணன் ”மாயநதி” பாடலில் தூய நரையின் காதலை மெல்லிய கொண்டாட்டத்தோடு அமைத்திருக்கிறார். பின்னணி இசையும் பாடல்களும் இப்படத்தில் ஏறக்குறையை ஒரே பங்கை வகிக்கின்றன. ’உலகம் ஒருவனுக்கா’ பாடல் தவிர அனைத்துப் பாடல்களையுமே கதைசொல்ல பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் இயக்குநர்.

தமிழ்மாறன் ஓரிடத்தில் கபாலியை “உன்னை எல்லாம் எங்க வீட்டுக்குள்ள விட்டதே தப்பு” என்கிறார். இதன்மூலம் கபாலி என்ன சாதி, தமிழ்மாறன் என்ன சாதி என்று நாம் உணர்ந்துகொள்ளலாம். ஆனால் அடுத்த காட்சியிலேயே “மதுரைவீரன் கோயிலுக்குப் போகப்போறோம். நீயும் வா” என்று கபாலியை தமிழ்மாறன் அழைக்கும்போது மதுரை வீரன் தலித்துகளின் சிறுதெய்வமாயிற்றே என்கிற குழப்பம் ஒரு சிலருக்கு வரக்கூடும்.

மதுரை வீரன் தலித்துகளின் சிறுதெய்வம் என்கிற உண்மையை அறிந்தவருக்கு மட்டுமே இந்தக்கேள்வி எழும். மலேசியாவின் புலம்பெயர் தமிழர்களில் மதுரைவீரனை வழிபடும் பழக்கம் உள்ளது என்கிற கூடுதல் தகவலை அறிந்திருந்தால் குழப்பம் தீரும். இத்தகவல்கள் எதுவுமே அறியாதோர் மிக எளிதாக ஒரு கலைப்படைப்பைப் பார்த்து அனுபவிக்க முடியும். நுண்ணரசியல் உணர்வு கொண்டோருக்கு எதை ரசிப்பதிலும்தான் எத்தனை நிபந்தனைகள்!
images (43)
காந்தி அம்பேத்கர் உடைகள் குறித்த வசனம் மிகவும் கூர்மையானது. இப்படியான வசனங்கள் பல உண்டு. அவை ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக ஒலிக்கின்றன. ஆனால் அவ்வசனங்களை ஒலிக்க விடுவதற்குமுன் மலேசியாவில் சாதியுணர்வு எப்படி இருக்கிறது என்பதற்கான காட்சிகளை ஒன்றிரண்டாவது மனதில் பதியும்படி வைத்திருந்தால் அவ்வசனங்களுக்கு இன்னும் கூடுதல் வலு இருந்திருக்கும். ”எங்கு சென்றாலும் தமிழர்கள் சாதியையும் மதத்தையும் சேர்த்து அழைத்துச் செல்கின்றனர்” என்று கபாலி வசனமாகவே சொல்கிறார்.

மதுரை வீரன் கோயிலில் வைத்து “பிறக்கும்போதே கோட் சூட் போட்டுட்டுத்தான் பிறந்தியா?” என்று கேட்டு வீரசேகரன் அதைக் கிழிக்க முற்படும் காட்சியும் கூலிங் கிளாஸைக் கழற்றி வீசி உடைக்கும் காட்சியிலும் சாதிய பாகுபாடு வெளிப்படுகிறது. இப்படியான சாதிய பாகுபாடுகள் நிறைந்த காட்சிகள் இன்னும் ஒன்றிரண்டை இணைத்திருந்தால் இவ்வசனங்களுக்கான கூடுதல் பலம் இருந்திருக்கும். அக்காட்சியில் திரைக்கு வெளியே நம் மனம் ஒரு கணம் சென்று பாமக தலைவர் ராமதாஸின் “கூலிங் கிளாஸ், டிஷர்ட் போட்டு பெண்களை மயக்குகின்றனர் தலித் இளைஞர்கள்” என்கிற அநாகரிக அராஜகப் பேச்சை நினைக்காமலிருக்க முடியுமா?

தமிழ்நாட்டை தலித், தலித் அல்லாதோர் என்று பிளவுபடுத்திய ராமதாஸிற்கு ரஜினியை வைத்து ஓர் எதிர்வினையை இக்காட்சி மூலம் புரிந்திருக்கிறார் ரஞ்சித் என்பதே என் புரிதல். இன்னும் கூடுதலாக ராமதாஸ் எதிர்க்கும் காதல் திருமணத்தையே கபாலியும் புரிகிறார். “கறுப்புதான் பவர்” என ரஜினி சொல்லுமிடத்தில் திரையரங்கம் அதிர்கிறது. தலித் இளைஞர்கள் பெண்களை மயக்குகிறார்கள் என்கிற ஆதிக்கசாதிகளின் பிரசாரத்தை நாம் பார்த்துக்கொண்டிருக்கும் காலம் இது. கபாலியின் குமுதவல்லியோ “உன் கண்களைப் ரெண்டு நிமிஷம் பார்த்தேன். அப்படியே மயங்கிவிட்டேன்” என்கிறார்.

’ஏய் மூஞ்சி இங்க இருக்கு?’ என்றபடி அறிமுகமாகும் தன்ஷிகா இப்படத்தில்தான் நிறைவாக இருக்கிறார். இந்த அறிமுகக் காட்சி போல வேறு படங்களிலும் பார்த்திருப்போம். அதில் எதிரிலிருக்கும் நபர் அப்பெண்ணை எங்கே பார்த்தான், எப்படிப் பார்த்தான் என்று விலாவாரியாகக் காண்பித்து எரிச்சலேற்றுவார்கள். இக்காட்சி அத்தனை நாகரிகமாக ஆனால் தன்ஷிகாவின் உக்கிரக் கோபத்தோடு வெளிப்படுகிறது.

ரஜினி படங்களில் பெண்களின் சித்தரிப்பு எப்படி இருக்குமென நாம் அறியாததல்ல. மன்னன் தொடங்கி, முத்து, படையப்பா என்று தொடரும் படங்களில் எல்லாவற்றிலும் “பொம்பளைன்னா இப்படி இருக்கணும்” என்கிற அறிவுரைகளை அள்ளிவிடுவார் ரஜினி. இப்படத்தில் குமுதவல்லியே கபாலியை “அவனைத் திருப்பி அடி. கன்ஃப்யூஸ் ஆகாதே” என்கிறாள். “ஒழுங்க டிரஸ் பண்ணு. அப்போத்தான் மதிப்பாங்க” என்று கோட் சூட்டுக்கு மாற்றுகிறாள்.

“போய் தண்ணி எடுத்திட்டு வா” என்று அதட்டுகிறாள். இப்படி வரிசையாக கட்டளைகளை அவள்தான் போடுகிறாள். கபாலியை அவளே வடிவமைக்கிறாள். “இன்னைக்கு நான் இப்டி இருக்கேன்னா அதுக்கு அவதான் காரணம். சின்னச் சின்ன விசயங்கள்ளகூட என்னை ரொம்ப மோடிவேட் பண்ணுவா” என்று கபாலியே கூறுவதாக வசனமுண்டு.

இது ரஜினி படத்தில் நாம் காணாத ஒன்று. ரஜினி என்கிற நாயகன் தான் எந்தப் பெண்ணுக்கு ஆபத்து வந்தாலும் சூப்பர் மேனாக வந்து காப்பாற்றுவார். கபாலியில் இதற்கு நேர்மாறாக உயிருக்கு ஆபத்து வருகையில் மகள் வந்து காப்பாற்றுகிறாள். யோகிதான் தன் மகள் என்று கண்டுகொள்ளும் காட்சி இது. குண்டுகள் தன் முகத்தை உரசும் அளவுக்கு அருகில் பாய்ந்து செல்ல, யோகி ‘அப்பா’ என்று அழைப்பதைப் பார்த்துத் திகைத்து நிற்கும் கபாலியை நோக்கி வீசப்படுகிறது ஒரு துப்பாக்கி.

அதைப் பெற்றுக்கொண்டாலும் திகைப்பும் அதிர்ச்சியும் நீங்காதவராய் நிற்கும் கபாலியை கைபிடித்து அழைத்துப்போய் காப்பாற்றுகிறாள் யோகி. ஒரு சண்டைக் காட்சியை ஸ்லோமோஷனில் வைத்ததில் இருக்கிறது இயக்குநரின் திறமை. இக்காட்சி ஆக்‌ஷன் சீன் மட்டுமல்ல, அது உணர்வுபூர்வமானதாக மாற்ற அவர் பயன்படுத்திய யுக்தி இது. சந்தோஷ் நாராயணனின் பொருத்தமான பின்னணி இசைக்கு நடுவில் அந்த ஸ்லோமோஷன் துப்பாக்கிச் சண்டைக்கு நடுவே மகளைக் கண்டுகொண்ட தந்தையைப் பார்த்து நமக்கு கண்ணில் நீர் சுரக்கிறது. ரஜினி அற்புதமாக மிகையின்றி நடித்திருக்கிறார். கார் கண்ணாடியின் குண்டு துளைத்த ஓட்டையின் வழியே காருக்குள் அமர்ந்து தப்பிக்கும் கபாலியைக் காட்டுவது அபாரம்.

அடுத்த காட்சியிலேயே கபாலி சுடப்படுகிறான். இடைவேளை விட்டு படம் தொடங்கியவுடன் கபாலி உயிர்பெற்று ரஜினியாகி சோஃபாவில் அமர்ந்து அலைபேசியில் வில்லன்களுக்கு சவால் விடுகிறார். இப்படி கபாலி ரஜினியாக மாறிவிடும் தருணங்கள் அநேகமுண்டு. நாமும் அடிக்கடி ரஞ்சித் படம் பார்க்கிறோம் என்கிற மனநிலை மாறி ரஜினி படம் பார்க்கிறோம் என்பதையும் அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்கிறோம்.

மனைவி உயிருடன் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்ட நொடியில் மூச்சடைத்துவிட்டதுபோல ரஜினி காட்டும் முகபாவம் அற்புதம், பின் உற்சாகமாகி தமிழ்நாட்டுக்குப் புறப்படுவோம் என்று சொல்கையில் கூலிங் கிளாஸ் கழன்று விழ தலையாட்டும் தினேஷின் உடல்மொழிக்கு அரங்கமே அதிர்கிறது.

எப்போதும் கேங்க்ஸ்டர்களின் அடியாட்களில் எள்ளென்றால் எண்ணை வேகத்தில் நிற்போர் உண்டு. அப்படி ஒருவர்தான் தினேஷ். எப்போதும் அவசரமான துடிப்பான உடல்மொழி கொண்டவராக அவரைக் காட்டியதன் பின் ஒரு காரணம் தெரிகிறது. அதே அவசரத்தை டோனிலீயின் சட்டையைப் பிடிப்பதிலும் காண்பித்து செத்துப்போகிறார்.

கபாலியும் யோகியும் பயணப்படும் காட்சியில் குமுதவல்லியைத் தேடிச் செட்டியார் பங்களாவிற்குச் செல்கையில் ஒரு பாதை வருகிறது. ஏறத்தாழ அப்பாதை மலேசியாவிலிருந்து சிறைமீண்டு வரும் கபாலி தன் வீட்டிற்கு வரும் பாதை போலவே இருக்கிறது. ஆனால் அதில் தெரியும் தனிமையும் வெறுமையும் இப்பாதையில் இல்லை. சங்கிலி முருகன் சிறிது நேரமே வந்தாலும் மிக இயல்பாக நடித்திருக்கிறார்.

ஆரோவில்லில் பிரிந்த குமுதவல்லியும் கபாலியும் இணையும்போது கண்ணீரோடு இருவரும் கட்டிக்கொள்ளும் காட்சியைத் தொடர்ந்து வரும் ‘மாயநதி’ பாடலில் கவிதையாய் சில காட்சிகள் உண்டு. கட்டிலின் மறுமுனையில் ரஜினி படுக்கை விரிப்பை தள்ளிவிடும் காட்சியும், குமுதவல்லி சேலை கட்டுகையில் “போங்க” என்று வெளியே அனுப்பும் காட்சியும் குறிப்பிடத் தகுந்தவை. ”ஆமாம்…செத்துத்தான் இருந்தேன். உன்னைப் பார்க்கிற வரை” வசனம் இன்னும் ஒலிக்கிறது. ”ஒரு ரெண்டு வருஷம் இது மாதிரி வீட்டில் நாம வாழ்ந்திருப்போமா?” என்று கேட்கும் கபாலியிடம் குமுதவல்லி இத்தனை ஆண்டுகள், இத்தனை மாதங்கள், இத்தனை நாட்கள் எனத் துல்லியமாய்க் கூறுகிறார். சிறையில் இருக்கும் கபாலிக்குத்தான் நேரம் அதிகம். கம்பி எண்ணுவதோடு சேர்த்து இந்த நாட்களையும் எண்ணும் வாய்ப்பு அவருக்கு அதிகம் இருக்கிறது. ஆனாலும் இது ஓர் ஆண் மனோபாவம்.

பெரும்பாலான ஆண்களுக்கு தேதி மறப்பதும், இப்படியான காலம் எவ்வளவு என்பதை மறந்துவிடுவதுமாக இருப்பார்கள். பெண்கள் ஒவ்வொரு தேதியையும் நினைவு வைத்துக்கொண்டு இருப்பதும், அடுத்து காதலனையோ கணவனையோ எப்போது சந்திக்க முடியும் என்று நாட்களை எண்ணிக்கொண்டிருப்பதும், சேர்ந்திருந்த நாட்களை கணக்கிட்டுக் கொள்வதுமாக கூடுதலான காதலில் திளைக்கும் பெண் மனதை மிக இயல்பாகச் சொல்கிறது இவ்வசனம். இயக்குநர் ரஞ்சித் ரொமான்ஸ் காட்சிகளை உணர்வுபூர்வமாக அமைப்பதில் மூத்த இயக்குநர்களுக்கு இணையானவராக இருக்கிறார். அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி என அனைத்துப் படங்களிலும் அவை மிகச் சிறப்பாகவே அமைந்துள்ளன.

சென்னைக்கு வரும் கபாலியும் மகளும் விடுதி அறையில் தங்குகையில் உடன் வரும் கறுப்பான மனிதரான விஷ்வந்த்தை (அட்டகத்தியில் தினேஷின் அண்ணனாக நடித்தவர்) சந்தேகப்படும் மகளிடம் “முகத்தை வைத்து முடிவு செய்யாதே…” என்கிறார். ஆனால் அவர்தான் இறுதிவரை உதவுகிறார். ஆரோவில்லில் கபாலி குடும்பத்தை போட்டோ எடுத்து வில்லனுக்கு அனுப்புவது யார் என்கிற கேள்விக்கு படத்தில் விடை இல்லை.

ஆனால் அப்படிச் செய்தது கூடவே வந்த விஷ்வந்த் என்கிற எதிர்பார்ப்பை உருவாக்கி பின் அவர்தான் தப்பிக்க உதவுகிறார் என்று காட்டப்படுகிறது. அப்படியெனில் படமெடுத்து அனுப்பியவர் யார் என்கிற கேள்விக்கு விடையில்லை. ஏனெனில் அந்த விஷ்வந்த் அதைச் செய்யவில்லை என்று காட்டுவதே காட்சியின் நோக்கம். ஆனால் ஏர்ப்போர்ட்டில் ‘நாங்க மெட்ராஸ்காரங்க….நம்பி வந்தவங்களை கைவிடமாட்டோம்’ என அவர் சொல்லும்போதே அவர் நல்லவர் என்று தெரிந்துவிடுகிறது. அப்புறம் விடுதியறையில் வைத்து அம்பேத்கர் மணிமண்டபம் என்று முகவரியை வாசிக்கையில் “நம்ம மணிமண்டபம்னா…” என்கையில் அது நிரூபணமும் ஆகிறது. அதனால் என்னதான் சந்தோஷ் நாராயணன் திகில் பின்னணி இசை எழுப்பினாலும், யோகி சந்தேகப்பட்டாலும் என்னால் சந்தேகப்பட முடியவில்லை. ரஞ்சித்தின் அரசியல் தெரிந்ததால் வரும் புரிதல் இது.

என்னைப் பொறுத்தவரை படம் அவர்களின் குடும்ப சங்கமத்திலேயே முடிந்துவிடுகிறது. அதற்குப்பின் மலேசியாவில் நடப்பவை எல்லாம் நமக்கு வழக்கமான கேங்க்ஸ்டர் படங்களின் காட்சிகளே. அப்படியான இறுதிக்காட்சியில் ‘நான் அப்படித்தான் செய்வேண்டா..பிடிக்கலைன்னா சாவுடா” எனும் வசனம் அக்காட்சிக்கு வலுசேர்க்கிறது. ஒரு வணிக சினிமாவில் இப்படியான கேள்விகள் வைக்கப்படுவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகவே பார்க்கிறேன். ஆனால் துப்பாக்கிச் சண்டைக்கு இடையே வரும் அந்த வசனத்திற்கு அக்காட்சி வலுசேர்க்கவில்லை. ஓர் உணர்வுபூர்வமான காட்சியில் வைக்கப்படவேண்டிய தெறிப்பான வசனங்கள் அவை.

இறுதிக் காட்சி நாயகனை நினைவுபடுத்துகிறது. “அப்போ சுட்டுட்டானா? கபாலியை கொன்னுடறானா?” என்று இறுதியில் ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டே மக்கள் வெளியே வருகிறார்கள். நிச்சயமாகச் சொல்லாமல் ஒரு விஷயத்தை விடுவது என்பது ஒரு பாணி. அது இப்படத்தில் நன்றாகவே வேலை செய்கிறது.
images (44)
மெட்ராஸ் திரைப்படம் இன்னும் சில ஆண்டுகளுக்கு மக்கள் மனதைவிட்டு மறையாது. அதில் நடித்தவர்களே இதிலும் நடிக்கும்போது “டேய் ஜானிடா, இது மாரி, இது அன்பு” என மெட்ராஸ் பாத்திரங்களின் வழியே அவர்களை அறிந்துகொள்கிறார்கள். இது மெட்ராஸின் வெற்றியைக் காட்டும் அதே நேரத்தில், கபாலியின் பாத்திரங்களாக இவர்களை அறிய விடாமல், நம் மனப்பதிவுகள் தடையாக இருக்கின்றன.

அமீர் பாத்திரத்தில் நடித்த ஜான் விஜய் அத்தனை இயல்பு. விஸ்வரூபம், உன்னைப் போல் ஒருவன், வல்லரசு, பயணம் என்று தொடர்ந்து பயணிக்கும் தமிழ் சினிமாவில் அமீர் என்கிற இஸ்லாமியரை நட்பின்வழி நடப்பவராகவும், மிக சாதகமாகவும் காண்பித்த வகையில் கபாலி ஒரு முன்னுதாரணம். உறுத்தாத பிரசாரமில்லாத பாத்திரப் படைப்பு.

படத்தின் பலவீனம் என்றால் அது சீரற்ற திரைக்கதை, அதிக பாத்திரங்கள், அதிகமான வன்முறை ஆகியவற்றைச் சொல்லலாம். துப்பாக்கியால்தான் தீர்வு என்பதை நம்மால் ஒப்புக்கொள்ள முடியுமா? ஆனால் இதையெல்லாம் தாண்டி படம் அதன் அரசியலாலும், உணர்வுபூர்வமான நடிப்பாலும், நெகிழவைக்கும் காட்சிகளாலும், மனதில் நிற்கிறது. லிங்காவின் தோல்விக்குப் பின்னான ரஜினியின் வெற்றி இது என்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை, ஒடுக்கப்பட்டோர் அரசியலை ஒரு வணிக சினிமாவிற்குள் ரஜினியை வைத்துப் பேசவைப்பதிலும், தளபதிக்குப் பின் பார்க்கவே முடியாமல் போன ரஜினி என்கிற மகத்தான நடிகரை மீண்டும் திரையில் உலவவிட்டதன் மூலமும், இயக்குநர் ரஞ்சித் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்வேன்.

மகிழ்ச்சி

•••••

Comments are closed.