கறுப்பு நிற நீர்வீழ்ச்சி / பஸ்லி ஹமீட்

[ A+ ] /[ A- ]

download (26)

கறுப்பு நிற நீர்வீழ்ச்சி

உச்சியிலிருந்து வடியும்
அந்த நீர்வீழ்ச்சி
காற்றடிக்கும்போதெல்லாம்
பறக்கத் தொடங்கிவிடுகின்றது
நீர்வீழ்ச்சி நார் நாராய்ப் உறிந்து
காற்றில் சிறகடிப்பது
கண்களுக்கு அழகாக இருந்தது
ஆனாலும் அவளுக்கு
அது கொஞ்சம் கூடப்
பிடிக்கவில்லை
நான் இரசித்துக்கொண்டிருக்கும் போதே
காற்றில் பறந்துகொண்டிருந்த
நீர்வீழ்ச்சியை
கைகளால் வளைத்துப் பிடித்து
கயிற்றினால் கட்டி வைத்தாள்
சில நேரங்களில்
நீர்வீழ்ச்சி பறக்கவிடாமல்
ஒரு பூவாக அதனை
மாற்றிவிடுவாள்
இன்னும் சில பொழுதுகளில்
பாம்பாக நெளிய விடுவாள்
சில சமயங்களில் சிற்பமாகவும்
செதுக்கி விடுவாள்
அவள் அந்த நீர்வீழ்ச்சியை
அரிதாகத்தான் கண்டிருக்கிறாள்
ஏனனில்
அந்த நீர்வீழ்ச்சி
அவளின் உச்சந்தலையிலிருந்து
பின்பக்கமாகத்தான்
வடிகின்றது

எறும்போடு தேனீர்

அந்த எறும்புக்கு
தேனீர் அருந்த வேண்டும்
என்ற எண்ணம்
தோன்றியிருக்கலாம்
நான் தேனீர் பருகிக்கொண்டிருந்த
வேளையில்
என் வீட்டுக்கு வந்தது எறும்பு
எனது தேனீர்க் கோப்பை
வைக்கப்பட்டிருந்த
சிறிய மேசையின் மேல்
அது ஏறிக்கொண்டது
நான் ஒரு மிடறு தேனீரை
உறிஞ்சும் போது
ஒரு குளத்தையே தூக்கி
வாயில் வைத்துக் குடிப்பதுபோல்
ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்து
எறும்போடு தேனீர் அருந்துவது
ஒரு அலாதியான அனுபவம்தான்
எனது தேனீர் கோப்பையில்
எஞ்சியிருந்த கடைசிச் சொட்டை
அந்த எறும்பு
பருகிவிட்டுச் செல்லட்டும்
என்று கோப்பையை
மேசைமீது வைக்கலாம்
ஆனாலும் மேசையை மேடையாக்கி
எறும்புகள் கூட்டம் கூடி
மாநாடு நடத்துவதில்
எனக்கு துளியும் விருப்பமில்லை

காகிதத்தில் நகர்ந்த நத்தை

நான் ஒரு ஓவியன்
வெற்றுக் காகிதத்தில்
ஒரு நத்தையை விட்டேன்
அது மெதுவாக
நகரத் தொடங்கியது
நத்தை காகிதத்தில் ஊர்ந்தூர்ந்து
ஒரு ஓவியத்தை வரைந்தது
இதை நான் ஒரு
கவிஞரிடம் சொன்னபோது
அவரும் ஒரு காகிதத்தில்
நத்தையை விட்டார்
அது ஊர்ந்து சென்று
ஒரு கவிதையை வரைந்தது
இப்படித் துறைசார் வல்லுனர்கள்
பலரிடத்திலும் சொன்னபோது
அவர்கள் விட்ட நத்தைகள்
அத்தத் துறைசார் விடயங்களை
வரைந்து காட்டின
நீங்களும் காகிதத்தில்
ஒரு த்தையை விட்டுப் பார்க்கலாம்
அதற்காக நீங்கள்
வெளியில் சென்று நத்தை
தேட வேண்டிய அவசியமில்லை
ஒரு பேனாவை
விரல்களால் பிடித்துப் பாருங்கள்
உள்ளங்கை உடனே
நத்தையாகிவிடும்

தேனீர்க் கோப்பைக்குள் பகல்

கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த
ஒரு கோப்பைக்குள்
இரவு குவிந்திருந்தது
அவள் கோப்பையை
மறுபக்கம் திருப்பி
அதனைப் பகலாக்கினாள்
வெறுமையாய் இருந்த பகலை
இனிமையாக்கட்டுமா
என்று கேட்டாள்
பிழிந்தெடுத்த அன்புபோல்
கோப்பையினுள்
தேயிலையைத் தேனாய் வடித்தாள்
அளவான புன்னகை கலந்து
அதற்கின்னும் சுவை சேர்த்தாள்
தங்கத் திரவமாய் நெளிந்த பகலை
என்னிடத்தில் பருகத்தந்தாள்
இருவரும் மாறிமாறிப் அருந்தினோம்
அவள் உணர்ந்த
பகலின் இனிமையை
நானும் அனுபவித்தேன்
பின்பு பழையபடி
கோப்பையை கவிழ்த்து வைத்தாள்
இரவு அதற்குள்
மீண்டும் வந்து குவிந்தது
அவளின் கரத்தினால்
ஒரு தேனீர் கோப்பை
பருகினால் போதும்
வெறுமையான பகல்களெல்லாம்
இனிமையாகிவிடுகின்றன

***

Comments are closed.