கலேவலா (பின்லாந்தின் தேசிய காவியம்) அஸ்கோ பார்பொலா ( உதயணன் மொழிபெயர்த்த பார்பொலா முன்னுரையைத் திருத்தி அமைத்தவர் கால சுப்ரமணியம்)

[ A+ ] /[ A- ]

 

பல வருடங்களாகக் கடினமாக உழைத்ததின் பலனாகத் திரு. ஆர். சிவலிங்கம் கலேவலா என்னும் காவியம் முழுவதையும் கவிதைநடையில் தமிழாக்கி 1994இல் வெளியிட்டிருந்தார். இது ஓர் உயர்ந்த உன்னதமான இலக்கியப்படைப்பாக வெளிவந்திருந்தபோதிலும், பின் லாந்து நாட்டின் தேசியகாவியமான இந்த அரிய இலக்கியச்செல்வத்தின் தமிழாக்கம், உலக இலக்கியத்திலும் நாட்டுப்பாடல்களிலும் ஆர்வமுள்ள அறிஞர்களால் மட்டுமே படிக்கப்படுமோ என்ற அச்சமும் அவர் உள்ளத்தில் எழுந்தது. இந்த அற்புதமான ஆக்கம் சாதாரணமான தமிழ் வாசகர்களைக் குறிப்பாக இளம்தலைமுறையினரைச் சென்றடையாது விட்டால், அது வருத்தப்படக்கூடிய செயலாகும் என்றும் அவர் கருதினார். எனவே கலேவலாவின் முழுக்கதைகளையும் எளிமையான உரைநடையில் மீண்டும் தமிழில் மொழிபெயர்க்கத் தீர்மானித்தார்.
கவிதைநடையில் வெளிவந்த தமிழாக்கத்துக்கு தகவல்பூர்வமான ‘அறிமுக உரை’ ஒன்றை நான் எழுதியிருந்தேன். கலேவலா என்னும் இந்தக் காவியத்தின் பின்னணி என்ன, இது எப்படி எப்பொழுது ஓர் உருவத்தைப் பெற்றது என்பன போன்ற பல விஷயங்களை அதில் கூறியிருந்தேன். நாடோடி இலக்கிய, வரலாற்றுத் தகவல்கள்பற்றியெல்லாம் அந்த அறிமுகஉரையில் நான் அலசியாராய்ந்து இருப்பதால், ‘உரைநடையில கலேவலா’ என்னும் இந்தத் தமிழாக்கத்துக்கு ஒரு முன்னுரை எழுதி, அதில் பின்லாந்து நாட்டைப் பற்றிய பொதுப்படையான சில விவரங்களைத் தமிழ் வாசகர்களுக்குக் கூறும்படி திரு சிவலிங்கம் என்னைக் கேட்டிருந்தார். இது ஒரு நல்ல ஆலோசனை என்று எனக்குத் தோன்றியது. அதனால் பின்லாந்து பற்றிய சில அடிப்படைத் தகவல்களை இங்கு சொல்ல விரும்புகிறேன். ஆனால் இன்றைக்குக் கவிதைநடைத் தமிழாக்கத்தை எல்லோரும் பார்க்க வாய்ப்பில்லாமல் போகலாம் என்ற காரணத்தால், அதன் ‘அறிமுக உரை’யில் கூறப்பட்ட சில விஷயங்களையும் இதில் சுருக்கமாகக் கூறுவேன்.

பின்லாந்தும் அதன் இயற்கை வளமும்
பின்லாந்து, ஐரோப்பாவின் வடகரையில் 1600 கிலோமீட்டர் நீளம்கொண்ட ஒரு மிகப்பெரிய நாடு. மேற்குப்பக்கத்தில் ஸ்கான்டிநேவிய நாடுகாளான நார்வே, சுவீடன் நாடுகளுக்கும் கிழக்கே ரஷ்யாவுக்கும் நடுவில் அமைந்திருக்கிறது. இந்த நாட்டின் பெரும்பகுதியில் காடுகள் மண்டிக்கிடக்கின்றன. இந்த நாட்டைப் போன்ற சமஅளவு குளிருள்ள இந்தியாவின் இமயமலைப் பிரதேசத்தில் வளரக்கூடிய தேவதாரு மரஇனங்களை (Spruce, Pine, Birch) பின்லாந்தின் காடுகளில் காணலாம். பின்லாந்து ஒரு தட்டையான நாடு அல்ல; இமயமலைத் தொடர்போலப் பாரிய மலைகள் நிறைந்த நாடுமல்ல; பதிந்த குன்றுகள் நிறைந்த நாடு. பென்னம்பெரிய பாறைகளைப் பெரும்பாலும் எங்கும் காணலாம். இங்கே சிறிதும்பெரிதுமாக இரண்டு லட்சம் ஏரிகள் இருக்கின்றன. பின்லாந்தின் மேற்குத் தெற்குப் பக்கங்களில் பால்டிக்கடல் (Baltic Sea) இருக்கிறது.

தென்மேல் கரையோரத்தில் ஏராளமான தீவுகளும் இருக்கின்றன. கடலிலும் ஏரிகள் ஆறுகளிலும் மக்கள் நீந்துவார்கள்; படகுச்சவாரி செய்வார்கள்; மீன் பிடிப்பார்கள். சிலர் காடுகளில் வேட்டைக்குப் போவார்கள். ஓநாய்களும் கரடிகளும் வாழும் காடுகளில் வேட்டையாடுவது ஒருகாலத்தில் ஆபத்து மிகுந்ததாக இருந்தது. இந்த நாட்களில் மாமிசபட்சணிகள் அருகி வருகின்றன. பெரிய காடுகளில் பயணம் செய்த சிலர் வழிதவறிப்போன சம்பவங்களும நடந்திருக்கின்றன – ஏன், இன்னமும் நாட்டின் பெரும்பகுதிகளில் மக்கள் அடர்த்தியாக வாழவில்லை. பின்லாந்து நாட்டின் மொத்தக் குடிசனத்தொகையே ஐம்பது லட்சம்தான். அந்த நாட்களில் குடிசனத்தொகை இன்னமும் குறைவாகவே இருந்தது.
காடுகளையும் சதுப்பு நிலங்களையும் தவிர, விவசாய வயல்களும் ஏராளம். இங்கே நெல் விளைவிப்பதில்லை. வேறு தானியங்களான பார்லி, கோதுமை, மற்றும் புல்லரிசி வகைகள் (Oats, Rye) விளைவிக்கப்படுகின்றன. இவற்றுடன் உருளைக்கிழங்கும் உணவு எண்ணெய் தயாரிப்பதற்கு Rypsi (Brassica rapa oleifera) என்னும் செடியும் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. பின்லாந்தின் தென்பகுதியில் மட்டுமே விவசாயம் செய்யலாம். அதுவும் மூன்று நான்கு மாதங்கள் இருக்கக்கூடிய குறுகிய கோடையில் மட்டுமே செய்யலாம். அந்த நாட்களில் காலநிலை பொதுவாக 10-30 பாகையாக (Centigrade) இருக்கும். இதுவும் வெய்யில் மழை மப்பு மந்தாரத்தைப் பொறுத்து ஏற்ற இறக்கமாக இருக்கும். விவசாயிகள் பசுக்கள், கோழிகள், பன்றிகள், செம்மறி ஆடுகளை வளர்த்து, அவற்றிலிருந்து பால், முட்டை, இறைச்சி, கம்பிளி ஆகியவற்றைப் பெறுவார்கள்.

வட பின்லாந்தில் கலைமான் (Raindeer) வளர்த்தல் ஒரு முக்கிய தொழிலாகும். குளிர்காலமும் மூன்று நான்கு மாதங்கள் நீடிக்கும். அப்போது காலநிலை கடும் குளிராக இருக்கும். +5லிருந்து -40 பாகை வரை (plus 5 to minus 40 degrees centigrade) இருக்கும். குளிர்காலத்தில் பனிமழை (Snow) பெய்து நாடு முழுவதையும் மூடியிருக்கும். சில நேரங்களில் சில இடங்களில் ஒரு மீட்டர் தடிப்பமான பனிக்கட்டி தரைக்குமேல் இருக்கும். வெப்பவலய நாடுகளில் தண்ணீரில் நடப்பது ஒரு மந்திர தந்திர நிகழ்ச்சி என்பார்கள். ஆனால் இங்கே குளிர் காலத்தில் கடல் ஏரி ஆறுகளில் சாமானிய மனிதர்கள் சாதாரணமாக நடந்து போகலாம். அந்த அளவுக்கு நீர்உறைந்து கட்டியாகி வயிரமாகிப் பாறையாகிப்போயிருக்கும். நடப்பது மட்டுமல்ல, பனிக்கட்டிமேல் மோட்டார் காரிலேயே பயணம்செய்து அக்கரைக்குப் போகலாம். குளிர்கால விளையாட்டுகளில் வழுக்கியோடுதலும் சறுக்கிப்பாய்தலும் முக்கியமானவை.
வசந்தகாலத்தில், அதாவது மார்ச் ஏப்ரல் மாதங்களில் பனிமழையும் பனிக்கட்டியும் உருகும். மரங்களில் பசுந்தளிர்கள் தோன்றும். இலையுதிர் காலத்தில், அதாவது அக்டோபர் மத்தியில் பசுமரம் என்றழைக்கப்படும் தோவதாரு இனத்தைச் சேர்ந்த spruce, pine தவிர்ந்த மற்ற எல்லா மரங்களும் இலைகள் அனைத்தையும் உதிர்த்துவிட்டு மொட்டையாய் மவுனமாய் நிற்கும். அதைத் தொடர்ந்து குளிர்காலம் ஆரம்பிக்கையில் நிறைய மழையும் பெய்யும். கோடைகால வெப்பமும் குளிர்காலத் தட்பமும் கதிரவனிலேயே தங்கியிருக்கிறது. பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியா, இலங்கை நாடுகளைப் போலல்லாமல் இங்கே சூரிய உதயமும் மறைவும் வித்தியாசமானவை.

குளிர்காலத்தில் பின்லாந்தின் வடகோடியில் இரண்டு மாதங்களுக்குச் சூரியன் உதிப்பதில்லை. அங்கே கோடையில் இரண்டு மாதங்களுக்குச் சூரியன் மறைவதுமில்லை. வசந்த இலையுதிர் காலங்களில் வரும் சமராத்திரி நாட்களில், அதாவது சூரியன் பூமத்தியரேகையைத் தாண்டும் நாட்களில் உலகின் ஏனைய இடங்களைப்போலவே இங்கேயும் சூரியன் காலை ஆறுமணிக்கு உதித்து மாலை ஆறுமணிக்கு மறையும். கடக மகர ரேகைகளுக்கு நேராகச் சூரியன் பிரகாசிக்கும் காலங்களில், அதாவது பூமத்தியரேகைக்கு அதிக தூரத்தில் சூரியன் இருக்கக்கூடிய நடுக்கோடை நடுக்குளிர்கால நாட்களில் (solstice) பகல் மிகவும் நீண்டதாக இருக்கும். இந்த நாட்களில் தென் பின்லாந்தில்கூட இரண்டொரு மணி நேரமே சூரியன் மறைந்திருக்கும்.

கோடையின் மத்தியநாள் விழாவைப் பின்லாந்து மக்கள் நள்ளிரவில் சொக்கப்பனை எரித்துக் கொண்டாடுவார்கள். இந்த நாட்களில் நள்ளிரவில் சூரியனைப் பார்ப்பதற்காக உலகின் பல பாகங்களில் இருந்தெல்லாம் மக்கள் வடபின்லாந்தில் திரளுவார்கள். இதிலிருந்து சூரியன் தாமதமாக உதித்து முன்னதாக மறையத் தொடங்கும். இப்படியே பகற்பொழுது குறைந்து குறைந்து மிகச்சிறிய பகற்பொழுதான நடுக்குளிர்கால நாள்வரை செல்லும். இன்றைக்குப் பின்லாந்து மக்கள் யேசுநாதர் பிறந்தநாளை நத்தாரன்று கொண்டாடுகிறார்கள். ஆனால் முன்னாட்களில், அதாவது கி.பி. 12ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் பின்லாந்துக்கு வருவதற்கு முன்னர் இது சூரியனின் பிறந்தநாளாகவே கருதப்பட்டது. கோடையில் பகற்பொழுது நீளமாக இருப்பதாலும் அளவான வெப்பம் இருப்பதாலும் போதிய மழை பெய்வதாலும் எங்கும் இயற்கை பச்சைப்பசேல் என்றிருக்கும். மரஞ்செடிகள் செழித்து வளர்ந்து கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும் மனத்துக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

 

இன்றைய பின்லாந்தின் பொருளாதாராம், சமூகம், கலாசாரம்
குளிர்காலத்தில் பல மாதங்கள் கடும் குளிராக இருப்பதால் வீடுகளை அதற்கேற்பக் கட்டி வெப்பமூட்ட வேண்டியது அவசியமாகிறது. தொழில்நுட்பத்தில் முன்னேறியுள்ள இந்த நாட்களில் இதுவொன்றும் சிக்கலான விடயமல்ல. பெரும்பான்மையான மக்கள் இப்பொழுது நகரங்களிலும் மாநகரங்களிலும் பலமாடிக் கல்வீடுகளில் வசிக்கிறார்கள். இவை பெரும்பாலும் வெப்பமூட்டும் வசதிகள் உடையவை. உதாரணமாக, தலைநகரான ஹெல்சிங்கியில் ஒரு அனல்சக்தி நிலையம் நிலக்கரியை எரித்து மின்சக்தியை உண்டுபண்ணுகிறது. அதேவேளையில் அந்த நிலையம் பெருமளவு நீரைக் கொதிநிலைக்குக் கொதிக்க வைக்கிறது. இந்தக் கொதிநீர், வெப்பம் கடத்தாத அடிநிலக் குழாய்கள் மூலம் அநேகமாக ஹெல்சிங்கி நகரத்து அனைத்துக் கட்டிடங்களுக்கும் அனுப்பப்படுகின்றது. இந்தக் கொதிநீர், வெப்பத்தைப் பரவச்செய்யும் சாதனங்களுக்கு அனுப்பப்படுவதால், வெளியே உறைகுளிராக இருந்தாலும் கட்டிடங்களின் உள்ளே +20 பாகையாகவே (plus 20 degrees centigrade) இருக்கும். வீட்டுக்குழாய்களில் தண்ணீரும் வெந்நீரும் சாதாரணமாக வந்துகொண்டிருக்கும்.
இங்கே பெருமளவு காடுகள் இருப்பதால், இந்த நாட்டின் பொருளாதாரம் உயர்தரமான காகிதம் மரப்பொருள் ஆகியவற்றிலேயே தங்கியிருக்கிறது. கப்பல் கட்டுதல், தகவல் தொழில்நுட்பம் போன்றவை மேலதிகத் தொழில்களாகும். சமீபகாலமாகத் தகவல் தொழில்நுட்பத்திலும் கணிசமான வளர்ச்சி காணப்படுகிறது. உதாரணமாகக் கைத் தொலைபேசி (Mobile Phone) உற்பத்தியில் நோக்கியா (Nokia) நிறுவனத்தின் துரித முன்னேற்றத்தைக் குறிப்பிடலாம். பின்லாந்து அரசு, கல்வித்துறைக்கு நிறையச் செலவு செய்கிறது. வெகுகாலமாகவே பின்லாந்து மக்கள் நூறுசதவிகிதம் படிப்பறிவு உள்ளவர்கள். இந்த நாட்களில் பெரும்பான்மையான மக்கள் உயர்கல்லூரி மற்றும் பல்கலைக்கழகக் கல்வியறிவு உடையவர்கள். பெருமளவில் கணினியைப் பயன்படுத்துதல் மற்றும் வலைப்புலத் (IIInternet) தொடர்பு வசதிகளில் முன்னேறிவரும் உலகநாடுகளில் ஒன்றாகப் பின்லாந்தும் விளங்குகிறது. இந்த நாடு 1917இல் சுதந்திரம் அடைந்த பின்னர் ஒரு ஜனநாயக நாடாளுமன்ற அமைப்பையும் கொண்டுள்ளது.
பின்லாந்து, குறிப்பாக 1950களில் தொழில்மயமாக்கப்பட்டது. இரண்டாவது உலக யுத்தத்தின்போது, பின்லாந்து மண்ணை ஆக்கிரமிக்கும் எண்ணம் கொண்டிருந்த சோவியத் யூனியனுடன் ஐந்துவருடங்களாகப் போர்புரிந்து, கடைசியில் பின்லாந்து தோல்விகண்டது.

அப்பொழுது ஏற்பட்ட அமைதி உடன்படிக்கை விதிகளின்படி, சோவியத்யூனியனுக்குப் போரினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளைப் பின்லாந்து ஈடுசெய்ய வேண்டிவந்தது. இதன் பிரகாரம் கப்பல்கள் உழவு யந்திரங்கள் மற்றும் போரில் அழிந்த கவச வாகனங்கள் விமானங்கள் துப்பாக்கிகளுக்குத் தேவையான பொருட்களையும் கொடுக்க நேர்ந்தது. இந்தச் சூழ்நிலை தொழிற்சாலைகளைக் கட்டியெழுப்ப வேண்டிய அவசியத்தை உண்டாக்கியதோடு விவசாயத்தையும் காட்டுத் தொழிலையும் யந்திரமயமாக்க வழியமைத்துத் தந்தது. அதுவரை வயல்களில் கலப்பைகளை இழுத்துவந்த குதிரைகளை அவிழ்த்துவிட்டு உழவு யந்திரங்களைக் களத்தில் இறக்கினார்கள். அதிலிருந்து நாட்டின் வளர்ச்சியில் ஒரு வேகம் காணப்பட்டது. பின்லாந்து இப்பொழுது ஐரோப்பிய சமூகத்தில் அங்கம் வகிப்பதோடு ஓர் உலகளாவிய கலாச்சாரத்தையும் கொண்டுள்ளது. அதேவேளையில் பின்லாந்து தனது சொந்தக் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பேணிப்பாதுகாப்பதில் கவனமாக இருக்கிறது. இதில் ‘கலேவலா’ என்னும் இந்த நாட்டின் தேசிய காவியத்துக்குப் பெரும் பங்கு உண்டு.

கலேவலாவும் பின்லாந்திய தேசிய அடையாளமும்
உண்மையாக எழுதப்பட்ட பின்லாந்தின் வரலாறு, சுவீடனால் பின்லாந்து கைப்பற்றப்பட்ட கி.பி. 12ஆம் நூற்றாண்டில்தான் ஆரம்பமாகிறது. அப்பொழுது தமது இனத்துக்கென ஒரு சொந்த மதத்தைக் கொண்டிருந்த பின்னிஷ்மொழி பேசும் குடிமக்கள் பலவந்தமாகக் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றப்பட்டார்கள். பின்லாந்து சுவீடனின் ஆட்சியின் கீழ் 800 வருடங்கள் இருந்தது. பெரும்பான்மையான குடிமக்கள் பின்லாந்து மொழியைப் பேசியபோதிலும் நிர்வாகம் கல்வித்துறைகளில் இலத்தீன் சுவீடன் மொழிகளே ஆட்சி மொழிகளாக இருந்தன. 1809இல் சுவீடனுக்கும் ரஷ்யாவுக்கும் ஏற்பட்ட போரில் சுவீடன் தோல்வி கண்டதால், பின்லாந்து ரஷ்யாவின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்தது. புதிய ஆளுனரான ரஷ்யமன்னர் பின்லாந்துக்குக் கணிசமான அளவு சுயஆட்சியைக் கொடுத்திருந்தார். அதனால் பின்லாந்தின் சட்டசபை (senate) பல அரச அலுவல்களைத் தாங்களே தீர்மானிக்கக்கூடியதாக இருந்தது. எனினும், 19ம் நூற்றாண்டு முடிவடையும் காலகட்டத்தில், ரஷ்ய ஆட்சியாளர்கள் ரஷ்யமயப்படுத்தும் இயக்கம் ஒன்றைத் தொடங்கினார்கள். அதை எதிர்த்த பின்லாந்து மக்கள் சுதந்திரத்துக்கான பல்வேறு திட்டங்களை ஆரம்பித்தார்கள். மேற்கூறியவாறு, கடைசியில், கம்யூனிஸ்ட் புரட்சியோடு பின்லாந்து சுதந்திரம் பெறும் வாய்ப்பு வந்தது.
சுவீடனின் ஆட்சிக்காலம் முழுவதிலும் பெரும்பான்மையான மக்களின் தாய்மொழியாக இருந்த பின்னிஷ்மொழி, பின்னர் பின்லாந்தியர் அனைவரையும் ஒன்றுசேர்க்கக்கூடிய ஒரு தேசிய அடையாளத்தை உருவாக்க உறுதுணையாக அமைந்தது. சமூகத்தில் மேல்மட்ட மக்கள் சுவீடன்மொழி பேசுபவர்களாக இருந்தபோதிலும், 19ம் நூற்றாண்டில் பல உயர் வகுப்புக் குடும்பத்தினர் தங்கள் சொந்தமொழியாகப் பின்னிஷ்மொழியை ஏற்கத் தீர்மானித்தனர். பின்லாந்தின் பாரம்பரிய நாடோடி இலக்கியங்களை உயர்கல்வி வட்டாரங்களில் படிக்கத்தொடங்கினார்கள். அத்துடன், தூரஇடங்களில் வாழ்ந்த சாமானிய கிராமத்து மக்கள் அரிய பழைய நாடோடிப் பாடல்களைப் பாதுகாத்து வைத்திருந்ததையும் கண்டுபிடித்தார்கள்.

அத்தகைய பாடல்கள், பல பாரம்பரியக் கதைகளைக் கூறின; கிறிஸ்துவுக்கு முந்தியகாலத்துக் கடவுள்கள் மாவீரர்கள் பற்றிய கதைகளையும் கூறின. அவற்றைச் சேகரித்துப் படித்து ஆராய்ந்து பார்த்ததின் உச்சப்பயன், பின்லாந்தியர் சுயவிழிப்புணர்வையும் தேசியப் பற்றையும் தூண்டும் சக்திபடைத்த ‘கலேவலா’ என்னும் காவியத்தின் வெளியீடாக விளைந்தது. ஆயிரம் ஆண்டுகளாக சுவீடனும் ரஷ்யாவும் ஆண்டு வந்த போதிலும், பின்லாந்தியர் ஒரு பாரம்பரிய வீரவரலாற்றுக் காவியத்தைத் தமக்கெனப் பெற்றிருக்கிறார்கள். அதனால் உலக நாடுகளில் தமக்கென ஓர் இடத்தையும் பெருமையுடன் பெற்றிருக்கிறார்கள்.

 

பின்லாந்தின் நாடோடிப் பாடல்களைச் சேகரித்தலும் கலேவலா வௌியீடும் எலியாஸ் லொன்ரொத் (Elias Lonnrot 1802-1884), தானும் மற்றும் முன்னோடிகளும் கரேலியாக் காட்டுப்பிரதேசங்களில் சேகரித்த சிறந்ததும் பாடபேதங்கள் நிறைந்ததுமான பின்லாந்தின் நாட்டுப் பாடல்களிலிருந்து கலேவலாவைத் தொகுத்து வெளியிட்டார். ஒரு மருத்துவராகத் தனது தொழிலைத் தொடங்கிய லொன்ரொத், ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் பின்னிஷ் மொழியின் பேராசிரியராக மாறினார். பாரம்பரியச் சொத்தை அழிவிலிருந்து காத்து உலக இலக்கியத்துக்கு லொன்ரொத் செய்த சேவையை, பழைய தமிழ்ச் சங்க இலக்கியங்களுக்கு உயிரூட்டிய பிரபல உ.வே. சாமிநாதையரின் அரும்பணிக்கு ஒப்பிடலாம். ஜீன் சிபெலியூஸ் (Jean Sibelius 1865-1957) கலேவலாப் பாடல்களுக்கு இசையமைத்துப் பின்லாந்து மக்களின் இதயங்களில் பிடித்த இடம் தமிழ்மக்களின் இதயங்களில் தியாகராஜரின் கீர்த்தனைகள் பெற்ற இடத்துக்கு இணையாகும்.

கலேவலாவின் பாடல்கள் பின்லாந்தின் மிகச்சிறந்த ஓவியக்கலைஞர்களுக்கும் ஊக்கத்தையும் உள்ளக்கிளர்ச்சியையும் உண்டாக்கியிருக்கின்றன. அவர்களில் ஒருவரான அக்செலி கல்லேன்-கல்லேல (Akseli Gallen-Kallela 1865 -1931)வின் ‘போர்ப்பாதையில் குல்லர்வோ’ என்ற வர்ண ஓவியம் இந்நூலின் அட்டையை அலங்கரிக்கிறது.
‘பழைய கலேவலா’ என்னும் முதற் பதிப்பை லொன்ரொத் 1935இல் வெளியிட்டார். முதற் பதிப்பிலும் பார்க்க இரண்டு மடங்கு நீளமானதும் முழுமையானதுமான இரண்டாவது பதிப்பு 1849இல் வெளிவந்தது. ‘கந்தலேதார்’ என்னும் ஓர் இசைநூலின் தொகுப்பை லொன்ரொத் 1840-41இல் வெளியிட்டார்.

கலேவலாவுக்கும் கந்தலேதாருக்கும் அடிப்படையாக அமைந்த மூல நாடோடிப் பாடல்களின் ஒரு மாபெரும் தொகுதி ‘பின்லாந்து மக்களின் பண்டைய பாடல்கள்’ என்ற பெயரில் 33 பெரிய பாகங்களாக 1909-1948இல் வெளியிடப்பட்டது. இந்தப் பெரிய செயற்பாடுகூட நூற்றுக்கணக்கான கல்விமான்களாலும் தாமாக முன்வந்த சேவையாளர்களாலும் பின்னிஷ் இலக்கியமன்றத்தின் ஆவணக்காப்பகத்தில் குவித்து வைக்கப்பட்ட செழிப்புமிக்க சேகரிப்புச் செல்வங்களை வற்றச்செய்ய முடியவில்லை. பின்னிஷ் இலக்கிய மன்றம் 1831இல் நிறுவப்பட்டது. லொன்ரொத் சில அடிகளைத் தானும் இயற்றிக் கலேவலாவில் சேர்த்திருந்தபோதிலும், பாரம்பரிய மூலக்குறிப்புகளையும் கதைகளையும் ஒழுங்குபடுத்தி முரண்பாடில்லாத இசைவான முழுமையான நூலைத் தந்த பெருமை அவரையே சாரும்.

தப்பிப்பிழைத்த பின்லாந்தின் நாட்டுப்பாடல்கள்
கி.பி. 1155இல் சுவீடன் மக்கள் கிறிஸ்தவ மதத்தை மேற்கிலிருந்து பின்லாந்துக்குக் கொண்டுவந்தார்கள். அதோடு பின்லாந்தில் நிலைகொண்ட ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தினர் கிறிஸ்துவுக்கு முந்தியகாலத்து மதநம்பிக்கையற்றவர்களின் பரம்பரை வழக்கங்களைச் சகிக்கமுடியாதவர்களாக இருந்தார்கள். 16ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சீர்திருத்தத்துடன் மேற்படி தேவாலயத்தினரின் இடத்தைப் பிடித்த லுத்தரன் சபையினர் இந்தப் பரம்பரை வழக்கங்களை வேரறுக்கும் முயற்சியில் தீவிரமானதோடு அதை இன்னமும் தொடர்கின்றனர். ஆனால் ரஷ்யாவில் நிலவிய கிரேக்க ஆர்தடாக்ஸ் கிறிஸ்தவர் உள்நாட்டு நாடோடி நம்பிக்கைகளைப் பொறுத்துக்கொண்டார்கள்.

எந்த நாட்டுப்பாடல்களின் அடிப்படையில் கலேவலா தோன்றியதோ அந்த நாட்டுப்பாடல்கள் கரேலியாவில் தப்பிப் பிழைத்திருந்தன. இப்பொழுது இந்தக் கரேலியாவின் பெரும்பகுதி பின்லாந்தின் கிழக்கு எல்லைக்கு அப்பால் ரஷ்யாவில் இருக்கிறது. நெடுந்தூரங்களினாலும் காடுகளில் செறிவில்லாத குடியிருப்புகளாலும் பின்னிஷ்-கரேலியக் கலாச்சாரத்தின் பரிமாணம் ஏனைய கலாச்சார மையங்களுடன் தொடர்பில்லாமலே இருந்தது. லொன்ரொத்தும் அந்தக்காலத்து நாடோடி இலக்கிய வேட்டைக்குப் புறப்பட்ட மற்றைய சேகரிப்பாளர்களும் பாதைகளேயில்லாத காட்டுவளிகளில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் காகிதமும் பேனாவுமாக நடந்து திரிந்தே குறிப்பெடுத்தார்கள். ஒலிப்பதிவுக் கருவிகளெல்லாம் அந்த நாட்களில் இருந்ததில்லை.

பின்லாந்து மொழியும் மக்களின் முந்திய வரலாறும் கலேவலாவின் பொருளடக்கமும்
1548இல் அச்சிடப்பட்ட புதியஏற்பாட்டின் மிக்கல் அகிரிகோலாவின் (Mikael Agricola) மொழிபெயர்ப்பே பின்னிஷ் மொழியில் இருக்கும் மிகப்பழைய நூலாகும். பின்னிஷ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடைய கரேலியமொழியில் உள்ள மிகச் சிறிய எடுத்துக்காட்டுகள் மூன்று நூற்றாண்டுகள் பழையன. அவற்றில் மிலாறு மரப்பட்டையில் எழுதப்பட்ட மந்திரக் குறிப்புகள் இருக்கின்றன. இவை ரஷ்யாவில் நொவ்கொராட் (Novgorod) நகரில் கண்டெடுக்கப்பட்டன.

பழைய எழுத்துமூல ஆதாரங்கள் எதுவும் இல்லாதபோதிலும், பின்னிஷ்மொழி மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற மொழிகளைக் கட்டடக்கலைக் கல்வியுடன் இணைத்து ஆராயும்போது பின்லாந்தியரின் முந்திய வரலாறு பற்றிச் சிறிது அறியக்கூடியதாக இருக்கிறது. பின்னிஷ் மொழி, இன்றைக்கு மொத்தமாகச் சுமார் இரண்டுகோடி மக்களால் பேசப்படும் யூராலிக் மொழிக்குடும்பத்தைச் (Uralic language family) சேர்ந்தது. இந்தத்தொகுதியில் அதிகமக்களால் பேசப்படுவன ஹங்கேரிய, பின்லாந்திய, எஸ்தோனிய மொழிகளாகும். இவை முறையே ஒரு கோடியே நாற்பது லட்சம், ஐம்பது லட்சம், பத்து லட்சம் மக்களால் பேசப்படுகின்றன.

மற்றைய மொழிகள் ரஷ்யாவில் சிறிய சிறுபான்மையினரால் பேசப்படுகின்றன. இந்த மொழிகளைப் பேசுவோரின் முன்னோர் வேட்டையாடுபவராகவும் மீனவராகவும் தென்கிழக்கு ஐரோப்பாவின் காட்டுப் பிரதேசங்களில் கற்காலத்திலிருந்தே வாழ்ந்திருக்கிறார்கள். இரவற் சொற்கள் பற்றிய ஓர் ஆய்வு, தென் ரஷ்யாவில் முன்-இந்தோ-ஐரோப்பிய மொழி (Proto-Indo-European language) பேசி வாழ்ந்த நாடோடி இனத்தவருக்கும் யூராலிக் மக்களுக்கும் 6000 வருடங்களுக்கு முன்பே தொடர்பிருந்தது என்பதைக் காட்டுகின்றது.
சுமார் 5000-4000 வருடங்களுக்கு முன்னர், இத்தகைய தென்புறத்து அயலவர்களின் மொழி, சமஸ்கிருதத்தின் தாய்மொழியான தொல்-ஆரியமாக (Proto-Aryan) மாறிற்று. கி.மு. 2000இல் மத்திய ஆசியா வழியாக வந்த மேற்படி நாடோடி இனத்தவரில் ஒரு பகுதியினர் இம்மொழியை இந்தியாவுக்குக் கொண்டுவந்தனர். பின்னிஷ் மொழியில் இன்னமும் நூறு எனப் பொருள்படும் ‘sata’ என்ற சொல் சமஸ்கிருதத்தில் ‘சத’ என்ற சொல்லுடன் தொடர்புடையது. ஆதியில் இருந்த பின்லாந்து மதம் ஆரியக் கொள்கைகளின் தாக்க விளைவாகக்கூட இருந்திருக்கலாம்.

இவ்வாறு ‘கடவுள்’ என்னும் பொருளுடைய ‘jumala’ என்ற பின்னிஷ் மூலச்சொல், இருக்குவேதப் பாடல்களில் போருக்கும் இடிமுழக்கத்துக்கும் தெய்வமான இந்திரனைக் குறிப்பிடும் ‘பிரகாசித்தல்’ என்னும் பொருளுடைய ‘dyumat’ என்ற பழைய ஆரியச்சொல்லிலிருந்து வந்திருக்கலாம். பண்டைய இந்தோ-ஆரிய தேவதாகணத்தில் இந்திரன் உயர்ந்த பதவியை வகித்திருக்கிறார். அப்படியே பின்லாந்தின் கடவுள்களிலும் ‘உக்கோ’ (Ukko) என்னும் முழக்கத்தின் கடவுள் உயர்ந்தவராகக் கருதப்பட்டிருக்கிறார்.

இன்னொரு எடுத்துக்காட்டு கலேவலாவில் வரும் ‘சம்போ’ என்னும் அற்புத ஆலை. சுழலும் சுவர்க்கத்தின் நட்சத்திரப்புள்ளிகளுடைய இசைவான பிரபஞ்ச ‘ஆலை’யிலிருந்து இந்த அற்புத ஆலைக்கான எண்ணம் ஏற்பட்டிருக்கலாம் என்று ‘சம்போ’வின் ‘புள்ளிகளுள்ள மூடி’ என்ற நிலையான அடைமொழி கருதவைக்கிறது. ‘சம்போ’ (sampo) என்னும் சொல்லிலிருந்து வரும் ‘தூண்’ என்னும் பொருளுள்ள திரிபுருவான sammas என்பது, skambha அல்லது ‘ஸ்தம்பா’ என்ற சமஸ்கிருதச் சொல்லை நினைவூட்டுகிறது; வேதத்தில் இது வானத்தைத் தாங்கி நிற்கும் இயலுலக அண்டத்துக்குரிய தூணைக் குறிக்கிறது.
5000-4000 வருடங்களுக்கு முன்னர், முன்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் (Proto-Indo-European language) வழிவந்த வேறு சில மொழிகளின் தாக்கமும் பின்னிஷ் மொழியில் ஏற்படத் தொடங்கியது. இத்தகைய மொழிகள் சுவீடன் மக்களின் முன்னோர் பேசிய தொல்-ஜெர்மானிக் (Proto-Germanic) மொழியும் லித்துவேனிய லத்வியா நாடுகளது மக்களின் முன்னோர் பேசிய தொல்-பால்டிக் (Proto-Baltic) மொழியுமாகும். ஆதியில், ரஷ்யமொழி பேசியோரின் முன்னோர் பின்னிஷ் மொழி பேசியோருடன் தொடர்பில்லாமல் வெகு தூரத்தில் தெற்கில் வாழ்ந்தார்கள். ஆனால் பின்னர் அவர்களும் பின்லாந்து மக்களின் அயலவராகி அந்தத் தாக்கமும் ஏற்பட்டது.
5000 ஆண்டுகளுக்கு முன்னர் பின்லாந்தைச் சுற்றியுள்ள பகுதியில் வாழ்ந்த யூராலிக் மக்கள் இரு வகுப்பினராகப் பிரிந்திருந்தார்கள்.

அப்போது ஒரேமொழியைப் பேசிய பின்லாந்து எஸ்தோனிய நாடுகளது மக்களின் முன்னோர்கள், தங்கள் அயலவரான இந்தோ-ஐரோப்பியரின் விவசாயம் கால்நடை வளர்த்தல் ஆகியவற்றைச் செய்துகொண்டு பின்லாந்து எஸ்தோனிய நாடுகளின் தென்கரைகளில் வாழ்ந்துவந்தார்கள். தற்கால லாப்பியரின் முன்னோர் வேட்டையாடுவோராகவும் மீனவராகவும் பழைய யூராலிக் முறையில் தென் பின்லாந்தில் வாழந்துவந்தார்கள். தென்பகுதியைச் சேர்ந்த கலேவலாப் பாடல்கள், பின்லாந்தியரின் வடதிசை நகர்வையும் லாப்பியர்பால் இருந்த பகையுணர்வையும் அவர்களுடைய மொழியுறவையும் பிரதிபலிக்கிறது.

இந்த லாப்பியர் ஸ்கான்டிநேவிய நாடுகளான பின்லாந்து சுவீடன் நார்வேயின் வடகோடியில் வடசமுத்திரத்துக்கு அருகில் சிறிய சிறுபான்மையராக வாழ்கிறார்கள். அவர்கள் இன்னமும் வேட்டையாடுவோராகவும் கலைமான் வளர்க்கும் நாடோடி இடையராகவுமே வாழ்கிறார்கள். கி.பி. 98இல் ரோமன் நூலாசிரியர் டஸிட்டஸ் (Tacitus) ஐரோப்பிய வடபுற எல்லைகளைப் பற்றி விபரிக்கையில் வேட்டையாடி, உணவுகள் சேகரித்து வாழ்ந்த நிரந்தர வீடுகளில்லாத ‘பென்னி’ (Fenni) என்ற ஓர் இனத்தவரைப் பற்றிக் கூறியிருக்கிறார். இது பெரும்பாலும் இந்த லாப்பியராக இருக்கலாம்.

கலேவலாப் பாடல்களின் வேறு கருப்பொருட்கள்
கி.பி. 800-1100 காலகட்டத்தில், வைக்கிங் கடலோடிகளின் தாக்குதல்களும் கலேவலாவின் போர்ப்படையெடுப்புக்குப் பின்புலமாய் இருந்திருக்கின்றன. ஸ்கான்டிநேவிய நாடுகளான சுவீடன் நார்வே டென்மார்க் நாடுகளில் – அனேகமாகப் பின்லாந்தில் இருந்தும் என்றும் சொல்லலாம் – கடலோடிகள் மேற்கு, தெற்கு ஐரோப்பாவில் இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் கிழக்கே ரஷ்யா ஊடாகக் கருங்கடலிலும் தாக்குதல்களை நடாத்தினார்கள்.
எனினும், கலேவலாப் பாடல்கள் போர் நடவடிக்கைகளை மட்டும் கருப்பொருளாகக் கொண்டவையல்ல. அவை பண்டைய பின்லாந்தியரின் நாளாந்த வாழ்க்கை பற்றியும் கூறுகின்றன. அவற்றுள், விவாகங்கள், மருத்துவச் சடங்குகள், தத்துவங்கள், இளைஞரின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், உலகநோக்குகள், மதங்கள் ஆகிய பலதரப்பட்ட நாடோடிப் பழக்க வழக்கங்கள் அடங்குகின்றன. யூராலிக் மொழிகள் பேசிய மக்களின் மிகப் பழைய மதம் அனேகமாகச் ‘ஷமானிசம்’ (Shamanism) ஆக இருந்திருக்கலாம்.

ஆனால் கலேவலாவில் பிரதிபலிக்கும் மதம், பால்டிக் பின்லாந்தியருடன் தொடர்புபட்ட வேறு இன மக்களின் தாக்கத்தால் ஏற்பட்டதாகத் தெரிகிறது. உண்மையில், கலேவலாவில் உலகின் பல நோக்குகளைக் காணலாம். எடுத்துக்காட்டாக, கற்காலம்வரை பின்னோக்கிச் செல்லக்கூடிய புராணக் கதைகள், மாபெரும் சிந்தூர மரத்தைப் படைத்தலும் வீழ்த்தலும், வைக்கிங் காலத்து வீரர்களின் பரம்பரைப் பராக்கிரமக் கதைகள், கிறிஸ்தவ மதமும் பின்லாந்தில் அதன் வெற்றியும் (கலேவலாவின் கடைசிப்பாடல் கிறிஸ்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டது), விவசாயிகள் பெண்களின் பாடல்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஏற்கனவே வெளிவந்த கலேவலாவின் செய்யுள்நடைத் தமிழாக்கத்தில் மொழிபெயர்ப்பாளர் போதிய விளக்கக் குறிப்புகளைத் தந்திருக்கிறார். எனவே, நான் மேற்கொண்டு விரிவாகக் கூறாமல் சில முக்கிய வியங்களைப்பற்றி மட்டும் சொல்லப் போகிறேன். பாடல்களே வாசகர்களுடன் பேசட்டும்.

சில முக்கிய கதாபாத்திரங்கள் பற்றிய குறிப்புகள்
‘கலேவலா’ என்னும் பெயர் பின்லாந்திய இடப்பெயர் விகுதியான ‘-லா’ (-la) வில் முடிவடைகிறது. ‘கலேவா’ என்னும் முற்பகுதி பின்லாந்தியரின் சந்ததியின் ஆதிமுதல்வரின் பெயராகக் கருதப்படுகிறது. அவருக்குப் பன்னிரண்டு ஆண்மக்கள் இருந்தனர் என்றும் அவர்களுள் கலேவலாவின் முக்கிய நாயகர்ளான வைனாமொயினனும் இல்மரினனும் அடங்குவர் என்றும் சொல்வர். பின்னிஷ்மொழியில் ‘கலேவா’ என்பது விண்மீன்களின் பல பெயர்களாக வருகிறது. கையில் கத்தியும் அரைக்கச்சும் உடைய போர்வீரன் போன்ற உருவமுள்ள நட்சத்திரக் கூட்டத்தைக் ‘கலேவாவின் வாள்’ என்று அழைப்பர்.

இடியேறு போன்ற வானுலகக் காட்சியை ‘கலேவாவின் நெருப்பு’ என்பர். கலேவாவின் ஆண்மக்களை, வயல்களை உண்டாக்குவதற்காகக் காட்டுமரங்களை எரித்தழித்த காட்டு விவசாயத்தின் அதிசக்தி வாய்ந்த பூதங்கள் என்பர். கலேவா என்னும் பெயரின் சொல்லாக்க விளக்கம் உறுதியாகச் சொல்வதற்கில்லை. கொல்லன் என்னும் பொருள்வரும் Kalvis என்னும் லித்துவேனியச் சொல்லும் பழைய பால்டிக் கொல்வேலைத் தெய்வம் Kalevias என்பதும்தான் தொடர்புபடுத்தக்கூடிய மிக நெருக்கமான விளக்கமாகும்.
கலேவலாவின் முக்கிய நாயகர்களில் ஒருவனான இல்மரினன் தேவகொல்லன் என்னும் தனிச்சிறப்புடையவன்.

இவனுடைய முக்கிய அருஞ்செயல்களில் சில: இரும்பைப் படினமாக்கியது, சம்போ என்னும் அற்புத ஆலையைக் கொல்லுலையில் உருவாக்கியது, தங்கத்தில் ஒரு மங்கையைத் தட்டியெடுத்தது, விண்ணுலக ஒளிகளை வடபுலப் பாறைகளில் இருந்து விடுவித்தது என்பனவாம். இல்மரினன் சம்போவைச் செய்ததுபோலவே விண்ணுலகின் கவிகை விமானத்தையும் செய்தவன் என்று பண்டைய நாட்டுப் பாடல்கள் கூறுகின்றன. லாப்புலாந்திலிருந்து கிடைத்த 1692ஆம் காலத்தைய ‘ஷமானிச’ முரசின்படி (drum) இல்மரிஸ் என்னும் மன்புனைவான தெய்வம் காற்றையும் காற்று வீச்சையும் ஒழுங்கிசைவுப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

பின்னிஷ் மொழியில் ‘இல்மா’ (ilma) என்னும் சொல்லுக்குக் காற்று என்று பொருள். ரஷ்யாவில் வாழும் வொத்யாக்ஸ் (Votyaks) இனத்தவர் இன்னமும் இன்மர் (Inmar) அல்லது இல்மெர் (Ilmer) என்னும் வான்கடவுளை வழிபட்டு வருகின்றனர்.
கலேவலாவின் முக்கிய நாயகனான வைனாமொயினன் தெய்வச் சிறப்பு மனிதச் சிறப்பு எனப் பலமுகங்கள் கொண்ட பாத்திரமாகும். புராணத்துறைத் தனிச்சிறப்புகளின் அடிப்படையில் லொன்ரொத் (Lonnrot) பின்னதற்கே சாதகமாக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. முதலாவது பாடலில் வைனாமொயினனே ஆதிகாலத்துக் கடலில் பிறந்த படைப்புக் கடவுளாகிறான். அகன்ற ஆறு அல்லது விரிகுடா என்னும் பொருளுடைய வைனா (Vaina) என்னும் சொல்லிலிருந்து வந்ததால், அவன் தண்ணீருடன் தொடர்புடைய கடவுளாகவும் இந்தியப் புராணங்களில் வரும் வருணனைப் போலவும் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

வைனாமொயினன் ஒரு கலாச்சார நாயகனாகவும் விளங்குகிறான்: ஒரு படகை முதலில் கட்டியவன் அவனே. ஒரு யாழை முதலில் செய்து இயற்கை முழுவதையும் தனது இசையால் வசப்படுத்தியவனும் அவனே. வைனாமொயினனின் பண்பை விளக்கும் சிறப்புப்பெயர்கள் அவனுடைய வயதையும் அறிவையும் அழுத்திக் கூறுகின்றன. அவன் உலகியலுக்கு அப்பாற்பட்ட அறிவுபடைத்த வல்லமைமிக்க ஞானி; மந்திரப் பாடல்களாலும் சக்திவாய்ந்த சொற்களாலும் தனது அருஞ்செயல்களை நிகழ்த்தியவன். ஒரு மந்திர சூனிய மதகுருவைப்போல பாதாள உலகத்துக்குச் சென்று ஒரு பழைய இறந்த பூதத்திடம் தனக்குத் தேவையான மந்திரச்சொற்களைப் பெற்றுவந்தவன்.

வைனாமொயினன் ஒரு போர்வீரனைப்போல பல இடங்களில் தோற்றம் தந்தாலும், அவனுடைய போர்வீரனுக்குரிய செயலாற்றல் அவனுடைய ஞானத்தின் தேர்ச்சியளவுக்குப் பாராட்டப்படவில்லை. இதன் தொடர்பாக, நாயகன், வீரன் என்பதைக் குறிக்கும் பின்னிஷ் சொல் sankari, பாடகன் என்னும் பொருளுள்ள பழைய நார்டிக் (Old Nordic) சொல்லான sangare வரை பின் நோக்கிச் செல்வதைக் கவனித்தல் மனத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும். வைனாமொயினனின் பாத்திரப் பண்பை எளிமையான முறைகளில் தெரிந்துகொள்ளப் பல்வேறு கல்விமான்கள் எடுத்த முயற்சிகள் மிகவும் வித்தியாசமான முரண்பாடான முடிவுகளையே தந்திருக்கின்றன. கலேவலாவில் வரும் வேறு பல பாத்திரங்களுக்கும் இந்தக் கூற்று பொருந்தும்.

பின்லாந்து இலக்கியம்
பின்லாந்து இலக்கியம் பற்றி மேலெழுந்தவாரியாகச் சில முக்கியமான தகவல்களை மட்டும் இங்கு கூறவிரும்புகிறேன். 1809இன் முற்பகுதிகளில் தேசிய கலாசாரத்தையும் பின்னிஷ்மொழி இலக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற மனமார்ந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஸ்நெல்மன் (J.V.Snellman 1806 – 1881) என்பார் ஓர் அரசியல் ஞானி. இவரது தலைமையிலும் எலியாஸ் லொன்ரொத் போன்ற அறிஞர்களின் முயற்சியிலும் 1831இல் பின்னிஷ் இலக்கிய மன்றம் நிறுவப்பட்டது. அரச அனுசரணையுடன் இம்மன்றம் இன்றுவரை சிறப்பாகச் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கலேவலா, கந்தலேதார் நூல்களின் காலகட்டத்துக்குப் பின்னர் ருனேபேர்க் (J.L.Runeberg 1804-1877) என்பார் தனது படைப்புகளால் ஓர் அழுத்தமான முத்திரையைப் பதித்துத் தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். இவருடைய ‘எங்கள் நாடு’ என்ற பாடலே இன்று பின்லாந்து நாட்டின் தேசியகீதமாக விளங்குகின்றது. பின்லாந்து இலக்கியத்தின் இரண்டாவது பெருந்தூண் என்று அலெக்ஸிஸ் கிவி (Aleksis Kivi 1834-1872)யை அழைப்பர். இவருடைய ‘செருப்புத் தைப்பவர்கள்’ ஒரு வித்தியாசமான நாடகம். இது ஒரு செருப்புத் தைப்பவரின் மகன் திருமண முயற்சிகளில் தோல்வியடைவதை நகைச்சுவையாகச் சொல்கிறது.

அலெக்ஸிஸ் கிவியின் படைப்புகள் அனைத்திலும் தலைசிறந்தது ‘ஏழு சகோதரர்கள்’ என்ற நாவலாகும். ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் காணப்படும் அழகும் அலங்காரமும் இந்த நாவலில் இருக்கிறது என்பதும், மனத்தைத் தளர்த்தவல்ல நல்ல நகைச்சுவையும் மனத்தை அழுத்தவல்ல ஆழ்ந்த சோகமும் அருகருகாய்ச் செல்வது ஒரு சிறப்பம்சம் என்பதும் விமர்சகர்கள் கருத்து.இது இருபதுக்கு மேற்பட்ட உலக மொழிகளில் வெளிவந்திருக்கிறது.

அலெக்ஸிஸ் கிவியைத் தொடர்ந்து 1900வரையில் பல படைப்பாளிகளை பின்லாந்தின் இலக்கிய வரலாற்றில் காணமுடிகிறது. சிலர் மிக ஆழமான சுவடுகளைப் பதித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். 1939இல் இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெற்றவர் பின்லாந்து எழுத்தாளர் சில்லன்பா (F.E.Sillanpaa 1888-1964). மரியா ஜோத்துனியும் (Maria Jotuni 1880-1943) ஐனோ கல்லாஸும் (Aino Kallas 1878 – 1956) பெண் எழுத்தாளர்களில் பிரபலமாகப் பேசப்படுபவர்கள்.
உலகளவில் பெரும் புகழீட்டிய எழுத்தாளர் மிக்கா வல்தரி (Mika Waltari 1908-1979) இவர் தனக்கென்று ஒரு சிறப்பான நடையையும் கதைசொல்லும் முறையையும் அமைத்துக்கொண்டு இருபதுகளில் இளைமைத் துடிப்புடன் புறப்பட்டார். 1928இல் வெளியான இவருடைய ‘மாபெரும் மாயை’ என்ற நாவல் இவரை ஓர் இளம் ஹெமிங்வே என அடையாளம் காட்டிற்று. இரண்டாவது உலகப் போரையடுத்து இவர் எழுதிய சரித்திர நாவல்கள் உலகப்புகழ் பெற்றதோடு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. இவருடைய ‘சினுஹே என்னும் எகிப்தியன்’ என்ற நாவல் 29 மொழிகளுக்கு மொழிபெயர்க்ப்பட்டது.
கொஞ்சம் வேகமாக இருபதாம் நூற்றாண்டின் மத்திக்கு வருவோம். அடுத்தடுத்து நடந்த யுத்தங்கள், உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகளில் ஏற்படுத்திய மாற்றங்களினால் தேசிய வரலாற்றில் ஒரு சுயதேடலையும் மறுமதிப்பீட்டு முயற்சியையும் எழுத்தாளர்களிடையே காணமுடிந்தது. இந்தக் காலகட்டத்தில், 1920இல் பிறந்த வைனோ லின்னா (Vaino Linna) முன்னணியில் நிற்கிறார். இவருடைய போர் பற்றிய நாவலான ‘அறிமுகமற்ற போர்வீரன்’ நாடெங்கணும் தர்க்கத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்திப் பெரும் வெற்றியையும் அள்ளித் தந்தது. போர் பற்றிய யதார்த்தமான வர்ணனைகளையும், இராணுவ அதிகாரிகளுக்கும் போர்வீரர்களுக்குமிடையே நிலவும் உறவுகள் பற்றிய உண்மைகளையும் உள்ளத்தைத் தொடும்வகையில் தருகிறார். இது ஒரு நிதர்சமான நேர்மையான புதிய பார்வை. இந்த நாவலின் பாத்திரங்கள் மக்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்து தேசியஅளவில் பேசப்பட்டன.

கலேவலாவின் தமிழ் மொழிபெயர்ப்பு
கலேவலாவின் தமிழ் மொழிபெயர்ப்பாளரான, இலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு. ஆர். சிவலிங்கம் ஓர் அனுபவம் நிறைந்த தமிழ் எழுத்தாளர்; ‘உதயணன்’ என்ற புனைபெயரில் ஏராளமான சிறுகதைகள் நாவல்களைப் படைத்து தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். பின்லாந்தில் பதினாறு வருடங்கள் வாழ்ந்து இந்த நாட்டு மொழியுடனும் கலாசாரத்துடனும் நன்கு பழக்கப்பட்டவர். 1994இல் வெளிவந்த இவருடைய கவிதைநடைத் தமிழாக்கம் பின்னிஷ்-கரேலிய மூலப்பிரதியிலிருந்து நேரடியாகத் தமிழுக்குக் கொண்டுவரப்பட்டது.

அவ்வாறே இந்த உரைநடைத் தமிழாக்கமும் பின்னிஷ் மூல நூலிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு வந்திருக்கிறது. பல ஆண்டுகளாக அலசியாராய்ந்து கவிதைநடைத் தமிழாக்கத்தை வெளியிட்ட இவருடைய அனுபவம், இந்த உரைநடைத் தமிழாக்கம் மிகச் சிறப்பாக அமைய உதவியிருக்கிறது.
கலேவலா நூலின் கெய்த் பொஸ்லி (Keith Bosley) என்பவரின் ஒரு புதிய ஆங்கில மொழிபெயர்ப்பை ‘உலகளாவிய இலக்கியங்கள்’ என்ற வரிசையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அச்சகம் (Oxford University press) 1989இல் வெயிட்டது. மற்றும் கிர்பி (W.F.Kirby – 1907), மகோன் (F.B.Magoun jr – 1963) என்பவர்களின் மொழிபெயர்ப்புகளுடன் வேறு சில ஆங்கில மொழிபெயர்ப்புகளும் ஆய்வு நூல்களும் இந்த இரு தமிழாக்கங்களுக்கும் துணை நூல்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, இலங்கை போன்ற நாடுகளிலும் பார்க்க நில இயலிலும் கலாசாரச் சூழலிலும் முற்றிலும் மாறுபட்ட இதுபோன்ற மொழிபெயர்ப்பு வேலைகள் ஏராளமான சிக்கல்களைத் தரக்கூடியன. நவீன தொலைத்தொடர்பு வளர்ச்சிகள் ஏற்படுவதற்கு முன்னர் பனிமழையும் பனிக்கட்டியில் சறுக்குதலும் தமிழ் மக்கள் முற்றிலும் அறியாத சங்கதிகள் என்பதை இங்கு நினைவுகூர்வோம். தென்ஆசியாவில் வளராத செடிகளுக்கும் சிறுபழங்களுக்கும் எப்படிப் பெயர் தருவது? கவிதைநடையில் வெளிவந்த தமிழாக்கத்தில் சுமார் ஐம்பது பக்கங்களை இதற்காகவே ஒதுக்கிப் போதிய விளக்கங்கள் தந்ததை வாசகர்கள் அறிவார்கள் என்று நம்புகிறேன்.
தமிழ் மக்கள் ஆர்வமுள்ள வாசகர்கள் என்பதையும் கலாசாரத்தில் ஈடுபாடுடையவர்கள் என்பதையும் நான் அறிவேன்; இவர்கள் கலேவலாப் பாடல்களின் காலத்துக் காவியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற இலக்கியப் படைப்புகளை வைத்திருப்பதற்காகப் பெருமைப்படுபவர்கள். உலகளாவிய இலக்கியங்களில் ஒன்றான கலேவலாவைச் சிறப்பாகக் கவிதைநடை உரைநடை ஆகிய இரு வடிவங்களில் தந்து தமிழ் மக்களின் கலாசாரத்துக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் வளமூட்டிய ஆர். சிவலிங்கம் அவர்களின் சேவையைத் தமிழ்மக்கள் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன்; அதேபோல பின்லாந்திய மக்களாகிய நாங்களும் எங்களுடைய பண்டைய பாரம்பரியச் செல்வம் இந்தத் தமிழாக்கங்கள் மூலம் பூகோளத்தின் மறுபக்கத்தில் இருக்கும் நல்ல இலக்கியப் பிரியர்களை அடையமுடிகிறது என்று மகிழ்ச்சியடைகிறோம். முழுமையான கலேவலா, தமிழ் உட்பட, முப்பத்தைந்து மொழிகளிலும் சுருக்கமான மொழிபெயர்ப்புகள் பதினொரு மொழிகளிலும் வளிவந்திருக்கின்றன.
ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆபிரிக்க நாடுகளின் கல்வி தொடர்பான திணைக்களம், பின்னிஷ் இலக்கிய மன்றம் [பொதுச் செயலாளர்: உர்போ வெந்தோ (Mr. Urpo Vento)] மற்றும் பின்னிஷ் ஓரியண்டல் மன்றம் இந்தத் தமிழக் கலேவலாச் செயற்திட்டத்துக்கு உதவினார்கள். ‘போர்ப்பாதையில் குல்லர்வோ’ என்ற அக்செலி கல்லேன்-கல்லேல (Akseli Gallen-Kallela) வின் ஓவியத்தை இந்நூலின் அட்டையில் மறுபிரசுரம் செய்ய அனுமதித்த அதன் பதிப்புரிமையாளர்களுக்கும் இந்நூலைக் கவர்ச்சியாக அச்சிட்டு இலக்கியப் பிரியர்களான தமிழ்மக்களுக்கு எட்டக்கூடிய விலையில் சிறப்பாக வெளியிட்டு அதன் விநியோகப் பொறுப்பையும் ஏற்ற தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் அதிபர் முனைவர் முத்துக்குமாரசாமி அவர்களுக்கும் நன்றி கூறுகிறோம்.

 

கலேவலா தொடர்பாகப் படிக்கக்கூடிய வேறு நூல்கள்:

The Kalevala: An epic poem after oral tradition by Elias Lonnrot. Translated from the Finnish with an introduction and notes by Keith Bosley, and a foreword by Albert B.Lord (The World’s Classics). Oxford & New York: Oxford University Press. 1989. Lvi+679 pp.

Lauri Honko (ed.). Religion, myth and folklore in the world’s epics: The Kalevala and its predecessors (Religion and Society 30). Berlin & New York: Mouton de Gruyter. 1990, xii+587 pp.

Matti Kuusi, Keith Bosley and Michael Branch (ed. and transl.). Finnish folk poetry: Epic, Helsinki: Finnish Literature Society. 1977. 607 pp. 46 photographs.

Anna-Leena Siikala. Finnic religions. pp. 323-330. in: Mircea Eliade (ed. in chief). Encyclopedia of Religion – Vol. 5. New York and London: Macmillan. 1987.

Lauri Honko. The Great Bear. Helsinki: The Finnish Literature Society. 1993.

அஸ்கோ பார்பொலா,
Institute for Asian and African Studies, University of Helsinki, Finland.
29. 01. 1999.

(காலவேலா, உதயணன் மொழிபெயர்த்த பார்பொலா முன்னுரையைத் திருத்தி அமைத்தவர் கால சுப்ரமணியம்)

 

Comments are closed.