கலையுலகின் தாந்திரீகச் சிற்பி கலைச்செம்மல் கே.எம்.கோபால் (Kalaichemmal Dr.K.M.Gopal)

[ A+ ] /[ A- ]

கே.எம்.கோபால்

கே.எம்.கோபால்

தமிழ்நாட்டில் சேலத்தில் பிறந்து, தமிழக அரசின் கலைச்செம்மல் விருது (1990), இந்திய அரசின் கலைக்கான உயரிய விருது (1988) என பல உயரிய விருதுகளைப் பெற்று, சப்பான்(1980), ஆத்திரேலியா (1982), செர்மனி (1984), டென்மார்க் (1988), நெதர்லாந்து (1989), என உலகின் பல நாடுகளிலும் கண்காட்சியை நடத்தி, தாந்திரீக ஓவிய மற்றும் சிற்பக்கலையை உலகம் முழுதும் பரப்பியக் கலைஞனின் சாதனைகளைப், பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு கலை உலகில் மீண்டும் அறிமுகப்படுத்துவது, அவரோடு இணைந்து பணியாற்றிய மூத்த கலைஞர்களுக்கு ஒரு மலரும் நினைவாகவும், அதே நேரத்தில் இளம் ஓவியர்கள் மற்றும் கலைஞர்களுக்கு ஒரு ஊக்கமாகமும் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஆரம்பகாலம்: தேவி பிரசாத் ராய் சௌத்ரியின் மாணவர்

சேலத்தில் 1928 இல் பிறந்து, சென்னை கவின்கலைக் கல்லூரியில் (Madras School of Fine Arts) அப்போதைய கல்லூரி முதல்வர் திரு தேவி பிரசாத் ராய் சௌத்ரியின் சிறந்த மாணவனாகத் திகழ்ந்த கே.எம். கோபால், தான் கல்விகற்ற காலத்திலேயே மைசூர் தசரா கண்காட்சியில் (1950) முதல் பரிசை வென்றவர். தேவி பிரசாத் ராய் சௌத்ரியின் வழிகாட்டலில் பிரித்தானிய அரசின் MBE (Member of British Empire) க்கு விண்ணப்பித்து தேர்ந்தெடுக்கப்பட்டாலும், பெற்றோர்கள் விரும்பாததால் அதனைத் தொடரமுடியாமல், சென்னையிலேயே தங்கி, ஜெமினி, வாகினி போன்ற திரைக்கூடங்களில் கலை இயக்குனராகப் பணியாற்றினார். மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் நெருங்கிய நண்பரான கே.எம்.கோபால், திறன்பட தபேலா வாசிக்கும் பழக்கம் உள்ளதால், நாட்டியமணிகளான லலிதா, பத்மினி, ராகினி, வைஜெயந்திமாலா ஆகியோரின் நடனங்களுக்குத் தபேலாவும் வாசிக்கத் தொடங்கினார்.

“Apart from K.M.Gopal’s draftsmanship as a painter which is considerable, I have no hesitation to write that he is an artist – a rebellion – a dare devil who means to go forward in the difficult path of experiments. His compositions not only reveal a precise decision on filling up the space but also a pre-conceived colour scheme which I admit do scream, but still the poise has a subdued and uncanny musical element which creates an atmosphere. There is depth in the feeling which reveal conviction, that is to be an asset for an artist who wants to remain a student all his life.”

Debi Prasad Roy Chowdhuri,
Principal, Madras School of Art

ஓவியக்கலையில் கவனம் செலுத்தாமல் இருக்கும் கே.எம்.கோபாலைக் கண்ட தேவி பிரசாத் ராய் சௌத்ரி, திரு.நரசிம்மாச்சாரி என்பவரை அனுப்பி இலட்சுமி, சரசுவதி, இராசராசேசுவரி போன்றோரின் ஓவியங்களை வரைந்துதரும் பணியைக் கொடுத்தார். கோபாலின் ஓவியங்களின் தத்ரூபங்களைக் கண்ட நரசிம்மாச்சாரி, தனக்கு ஒரு ஸ்ரீ சக்கரம் ஒன்றும் வரைந்துத் தரச் சொன்னார். இந்த ஸ்ரீ சக்கரத்தை வரையும் முயற்சியே கோபால் அவர்களை மீண்டும் ஓவியக்கலைக்கு இழுத்தது, அதிலும் குறிப்பாக தாந்த்ரீக ஓவியக்கலைக்குள் இழுத்தது.

சோழமண்டலம் கலைஞர்கள் கிராமம்

ஐரோப்பிய நாடுகளில் கலைஞர்களுக்காக தனியான ஊர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவையே கலைஞர்கள் ஒருங்கிணைந்து கலைப்படைப்புகளை உருவாக்க உதவும் என்பதை உணர்ந்த தமிழ்நாட்டு ஓவியர்கள் சென்னைக்கு அருகில் ஈஞ்சம்பாக்கத்தில் சோழமண்டலம் கலைஞர்கள் கிராமம் என்ற ஒன்றை உருவாக்கினர். இதனை உருவாக்கியக் கலைஞர்களுள் கே.எம்.கோபாலும் ஒருவர்.

இந்தியாவில் கலைஞர்களுக்கான பெரிய அமைப்பு லலிதா கலா அகடமி ஆகும். இதனுடைய பிரதிநிதியாக சிறப்பாகப் பணியாற்றியவர் கே.எம்.கோபால். சென்னையில் ஓவியம் நுண்கலைக்குழு என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர்களில் கே.எம்.கோபாலும் ஒருவர். 1976-ஆம் ஆண்டில் மறுமலர்ச்சி ஓவியர் எழுத்தாளர் மன்றம் ஒன்றை தோற்றுவித்த கே.எம்.கோபால், சேலம் கண்காட்சியகம் அமையவும் முக்கியக் காரணமானவர்.

பல்துறைக் கலைஞர்கள் இணைந்து ஒரே இடத்தில் இயங்கி, கலைப்படைப்புகளை உருவாக்கினால், அவற்றின் பரிணாமம் மென்மேலும் மேம்படும் என்பதை உணர்ந்த கே.எம்.கோபால், கவிஞர் கண்ணதாசன், மற்றும் சிற்பி. கணபதி தபதி அவர்களுடன் இணைந்து “கலைமையம்” என்ற அமைப்பைச் சென்னையில் துவங்கினார். பல்வேறு காரணங்களால் இந்த அமைப்பு பிற்காலத்தில் இயங்காமல் போனது.

ஐரோப்பியப் பயணம்

1988-இல் புதுதில்லியில் நடந்த அகில இந்திய ஓவியக்கண்காட்சியில், தேசிய அளவில் முதல் பரிசு பெற்றார் கே.எம்.கோபால். இவரது திறமையைப் பாராட்டி இங்கிலாந்து அரசு, இங்கிலாந்திற்கு வருகைத் தரும் ஓவியர் என்ற கௌரவத்தைக் கொடுத்தது. அது மட்டுமல்லாமல், ஐரோப்பிய நாடுகள் அனைத்திற்கும் சென்று வருமாறு அழைப்பு விடுத்தது. பிரான்சு, நெதர்லாந்து, மேற்கு செர்மனி, பெல்சியம், போன்ற நாடுகளுக்குக் கலைப்பயணம் மேற்கொண்ட கே.எம்.கோபால், தான் சென்ற இடமெல்லாம் தாந்த்ரீக ஓவியங்களின் சிறப்பைப் பற்றி விவரித்து, இந்தியாவின் ஓவிய பாரம்பரியத்தை ஐரோப்பிய நாடுகளில் முறையாக அறிமுகம் செய்து வைத்தார்.

கணபதியம்

ஆரம்ப காலத்தில் பாத்திக் (Batik) எனப்பட்ட துணியின் மேல் வரையும் ஓவியமுறையில் பிரசித்திபெற்ற கே.எம்.கோபால், தன் கொல்லிமலை ஆன்மீகப் பயணத்திற்குப் பிறகு, சித்தர்களின் வழியில் தாந்திரீக ஓவியங்களைத் தீட்டினார். பிள்ளைத்தமிழில் எழுத்தப்பட்ட பல பழம்பெரும் ஓலைச்சுவடிகளைப் படிப்பதில் புலமைப்பட்ட கே.எம்.கோபால், தமிழர் ஒகக்கலையின் (யோகா) மூலக்குறியீடே கணபதி என்ற விநாயகர் என்பதை அறிந்து கணபதி ஆராய்ச்சியில் இறங்கினார்.

download (36)
படம்: கே.எம்.கோபால் அவர்களின் பாத்திக் வேலைப்பாடு

ஓகக் கலையில், வலது மற்றும் இடது நாசி வழியே செல்லும் காற்றிற்கு முறையே சூரிய கலை மற்றும் சந்திர கலை என்று பெயர். இவற்றை உள்ளிழுத்தல், வயிற்றில் தக்கவைத்தல் மற்றும் வெளியிடுதல் போன்றவற்றின் காலத்தை மாற்றித், தண்டுவடத்தின் கீழ் மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி என்ற சக்தியைத் தூண்டி, அதைப் பூலோக இன்பங்களில் சற்றும் விரயம் செய்யாமல், மெய்ப்பொருளை நோக்கி நகர்த்தி, பசி மற்றும் தாகம் அற்ற நிர்விகல்ப சமாதி நிலையை அடைவதே தாந்திரீக ஒகக்கலையின் நோக்கம்.

K.M.Gopal - Tantra Work

படம்: கே.எம்.கோபாலின் தாந்திரீக ஓவியம்

விநாயகர் வடிவமே ஒகக்கலையின் முதல் குறியீடுதான். ஓகக் கலையை ஒரு குரு தன் சீடனுக்குப் போதிக்கும் போது, அதன் அடிப்படையை உணர்த்துவதற்காக வரைந்த வடிவமே காலப்போக்கில் விநாயகராக வணங்கப்பட்டது. ஓகத்தில் கட்டுப்படுத்தப்படும் மூச்சுக் காற்று, விநாயகரின் துதிக்கை என்றும், மூச்சுக் காற்றை வயிற்றில் நிறுத்துவதைக் காட்டவே, பெரிய வயிறு என்றும், மூச்சை உள்ளிழுக்கும் போது வலது கடைவாய் பல்லைக் கடிக்க வேண்டும் என்பதைக் குறிக்கவே, விநாயகர் தன் வலது தந்தத்தை உடைத்து கையில் வைத்திருக்கிறார் என்றும், ஒகத்தின் போது உரைக்கும் “ஓம்” என்ற சொல்லே, விநாயகரின் யானைத் தலையின் மூலம் என்றும் நீள்கிறது கே.எம்.கோபாலின் விநாயகர் பற்றிய விளக்கம்.

download (37)

படம்: கே.எம்.கோபாலின் கணபதி – உலோகப்புடைப்பு

வேதநூல்கள் கூறும் 1008 கணபதியர்களை இதுவரை ஓவியர்கள் ஓவியங்களில் தீட்டியதில்லை என்பதை அறிந்து, பெயரால் மட்டுமே அறியப்பட்ட வினாயகர்களுக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தார் கோபால். வாழ்வின் படிநிலைகள் 32 என்பதைக் குறிக்க முதல் 32 விநாயகர்கள் உருவத்தை உருவாக்கினார். அவை முறையே 1. பால கணபதி, 2. தருண கணபதி, 3. பக்த கணபதி, 4. வீரக் கணபதி, 5. சக்தி கணபதி, 6. திவ்ய கணபதி, 7. சித்தி கணபதி, 8. உசித்த கணபதி, 9. விக்ன கணபதி, 10. சிப்ர கணபதி, 11. கெரம்ப கணபதி, 12. இலட்சுமி கணபதி, 13. ருத்திர கணபதி, 14. உருத்துவ கணபதி, 15. மகா கணபதி, 16. வர கணபதி, 17. எகட்சர கணபதி, 18. விசய கணபதி, 19. திரி அட்சர கணபதி, 20. விநாசன கணபதி, 21. ஏகாந்த கணபதி, 22. சிருட்தி கணபதி, 23. ஞான கணபதி, 24. உத்தண்ட கணபதி, 25. குந்தி கணபதி, 26. திவ்முக கணபதி, 27. திருமுக கணபதி, 28. சிம்ம கணபதி, 29. துர்க கணபதி, 30. யோக கணபதி, 31. சங்கட்ட கணபதி, 32. வல்லப கணபதி.

விநாயகர் பற்றிய தமது ஆராய்ச்சிக்கு கணபதியம் என்று கோபால் பெயர் சூட்டினார். கணபதியம்-5 கண்காட்சியை முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் சென்னை லலித் கலா அகடமியிலும், கணபதியம்-6 கண்காட்சியை பெங்களூர் கர்நாடக சித்ரக்கலா பரிசத்தில், அப்போதைய துணை முதலமைச்சராக இருந்த S.M.Krishna அவர்களும் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் அடையாறுக்கு அருகில் இருக்கும் மத்தியக் கைலாசம் ஆலயத்தில் பாதி விநாயகரும் பாதி ஆஞ்சநேயரும் கொண்ட பிரசித்தி பெற்ற “ஆதி-அந்த பிரபு” சிலையை வடிவமைத்ததும் கே.எம்.கோபால் அவர்களே. ஆதியாக கணபதியையும், அந்தமாக ஆஞ்சநேயரையும் இணைத்த கே.எம்.கோபால், எந்த ஒரு செயலையும் கணபதியை நினைத்துத் துவக்கினால், ஆஞ்சநேயர் சிறப்போடு முடித்து வைப்பார் என்ற கருத்தினை உணர்த்தவே இந்த சிலையை வடிவமைத்தார். மக்கள் தங்கள் குறைகளை எந்த ஒரு புரோகிதரின் துணையும் இன்றி இறைவனிடம் நேரே சென்று வழிபட வேண்டும் என்ற கோபாலின் கோரிக்கையாலே, மத்தியக் கைலாசத்தின் ஆதி-அந்த பிரபு சிலைக்கு எந்த புரோகிதரும் அமைக்கப்படவில்லை. இதன் கர்பகிரகத்தை எந்த சாமானியனும் சென்று வழிபடலாம் என்பது இந்த ஆலயத்தின் சிறப்பு.

கே.எம்.கோபாலின் தனித்துவம்

கே.எம்.கோபாலின் படைப்புகள் செப்புத் தகடுகளைச் சிறுக சிறுகத் தட்டி அமைக்கப்பட்ட தகட்டுப் புடைப்புகள் ஆகும். தன் திரையுலக கலை இயக்குனர் பணிக்கு செப்புத் தகடுகளைப் பயன்படுத்திய கே.எம்.கோபால், பிற்காலத்தில் இவற்றை சிறுக சிறுகக் கிழித்து, பின்னர் அழகாக வளைத்து கணபதி சிலைகளை எளிய வடிவில் படைத்தார். கண், வயிறு, தொப்புள், மார்பு போன்ற உடலின் பாகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க, ஆபரணக் கற்களைப் பதித்து வைத்து தனித்துவம் காட்டினார்.

download (1)

படம்: கே.எம்.கோபால், அர்த்த கணேசுவரி, தேசிய விருது, 1988

செப்புத் தகடுகளை வளைத்து வளைத்து வேலை செய்த கே.எம்.கோபால், அதனை முறையாக முன்னும் பின்னும் பல்வேறு வடிவில் சிறு உளிகளை வைத்து அடிப்பதால் ஏற்படும் வடிவம் இன்னும் பல்லுயிர் பெற்ற கலை வடிவமாக இருப்பதை உணர்ந்து, உலோகப் புடைப்பு முறையை தீவிரமாக தன் கலையில் புகுத்தினார். உலோகப் புடைப்பில் இவர் ஏற்படுத்திய சிற்பங்களில், தாந்திரீகக் குறியீடுகளும், ஓகக் கலை மந்திரங்களும், யந்திரங்களும், கணபதி வடிவில் இடம்பெற்றன. பாதி ஆணும், பாதி பெண்ணுமாக இவர் படைத்த அர்த்த-கணேசுவரி உலோகப்புடைப்பு இந்திய அரசின் 1988 க்கான தேசிய விருதைப் பெற்றது. உலகப் பிரசித்தி பெற்ற கலைஞர் கே.எம்.கோபாலின் ஓவியங்கள், மற்றும் உலோகப்புடைப்பு சிற்பங்கள், உலகின் பல முன்னணி கலைக்கூடங்களிலும், கண்காட்சியகங்களிலும், மற்றும் இந்தியாவின் முன்னணி வணிக நிறுவனங்களிலும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. போலந்து நாட்டின் ஆசிய பசிபிக் அருங்காட்சியகம், அமெரிக்காவில் செனிவா அருங்காட்சியகம், செர்மனியில் ராய் போகி அருங்காட்சியகம், கெல்னா வில்கெய்ம்ன் அருங்காட்சியகம், அங்கேரியில் பாடு பாசிக் அருங்காட்சியகம், விசயநகர் இராணி அரண்மனை, நெதர்லாந்து அரசியார் அரண்மனை, பாரீசில் சோபி லெசுக்காட் இல்லம், புதுதில்லி தேசிய ஓவிய காட்சிக் கூடம், லலிதாகலா அகடமி, புதுதில்லி, கர்நாடக சித்திரகலா பரிசத், சென்னை தேசிய ஓவியக்காட்சிக் கூடம், சேலம் அருங்காட்சியகம், தமிழ்நாட்டில் நீதிபதி.திரு.இராசமன்னார் இல்லம், திவான். இராமசாமி அய்யர், முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் இல்லம் என இவரது கலைப்படைப்புகள் இல்லம் கொண்டுள்ள இடங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

download (10)

கே.எம்.கோபாலின் மறைவும், அதன் பின்னர் நடந்தவைகளும்

கலைச்செம்மல் முனைவர்.கே.எம்.கோபால் அவர்கள் மார்ச் 14, 2000 அன்று சேலத்தில் இயற்கை எய்தினார். தான் வாழும் காலம் முழுவதும் கலைக்காகவே வாழ்ந்த இந்த உன்னதக் கலைஞன், தமிழ் பாரம்பரியக் கலையை நவீன வடிவில் உலகம் முழுவதும் முனைப்போடு கொண்டு சேர்த்தார்.

பெப்ருவரி 6, 2017 அன்று நடைபெற்ற சோழமண்டலம் கலைஞர்கள் கிராமத்தின் 50 ஆவது ஆண்டு விழாவில், சென்னையின் செர்மானிய உயர் ஆணையர் திரு.ஆச்சிம் பேபிக், கே.எம்.கோபாலின் செர்மானிய தாந்திரீகக் கண்காட்சியைப் பற்றி விவரித்து, அவரின் மேற்கோளான “வரிகள் உயிருள்ளவை. அவற்றின் ஆற்றலுக்கு ஏற்ப அவை பல்லாயிரக்கணக்கான் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. பண்டைய இந்தியர்கள் இந்த வரிகளின் குணாதிசயங்களை முழுதும் உணர்ந்து, தங்களுக்குத் தேவையான சக்திகளை வெளிப்படுத்துமாறு அவற்றை வடிவமைத்தனர். இவ்வடிவங்களை தாந்திரீகத்தில் சக்கரங்கள் என்றும், மண்டலங்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன” என்னும் வரிகளைச் சுட்டிக்காட்டினார்.

அதிகாலையில் வீட்டு வாசலைப் பெருக்கி, முற்றத்தில் கோலமிடும் தமிழ்ப் பெண்களை முதல் ஓவியர்கள் என்று வர்ணிக்கும் கே.எம்.கோபால், பாரம்பரியத்தை முன்னிறுத்தாத எந்தக் கலையும் தன் முழுமையை அடையாது என்பதை முழுவதுமாக உணர்ந்தே, நம் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் தன் கலையில் புகுத்தினார்.

கே.எம்.கோபாலின் கலையை அவரது நினைவுநாளான இன்று, கலைப்பயணம் செய்யும் அனைவருக்கும் அர்ப்பணம் செய்வதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலி.

(((())))

Comments are closed.