கல்யாண்ஜி கவிதைகள்

[ A+ ] /[ A- ]

download

சுமார் அடுக்ககப் பால்கனியிலிருந்து

இடது மூக்குத்தியணிந்த ஒரு சின்னஞ்சிறு அல்லாத பெண்

புறாக்களைப் பறக்க விடுகிறாள்.

அவளின் உள்ளிருந்து வெளியேறி

இளம் வெயிலைச் சிறகுகளால் ஒதுக்கி மேலேறுகின்றன.

ஒன்று மட்டும் பிடிவாதமாகப் பறத்தல் மறுத்து

திரும்பவும் போய் பால்கனியில் அமர்ந்தது.

வேற்று பாஷையில் கொஞ்சியபடிக்கு அவள் சிரிப்பில் ஒளிர்ந்தாள்.

நான் பார்த்தேன், எந்தச் சிரமமும் இன்றி

சொந்த வீடு போல அது அவளுக்குள் போவதை.

2.

முண்டும் முடிச்சுமான சுற்றுலாப் பாறை அது.

அன்றைய வெயில் முழுவதையும் தன் கீழ் வைத்திருந்தது.

வழியும் திரவம் உறைந்தது போன்ற வழவழப்பில்

எங்களை அது உட்காரச் சொன்னது.

இங்கே உட்கார்கிறேன் என நான் உட்கார்ந்தேன்.

அங்கே உட்கார்வதாக அவன் உட்கார்ந்தான்.

எங்கள் உரையாடல் நிகழத் துவங்கியது

வேறு வேறு பாறைகளிலிருந்து

வேறு வேறு காலங்களிலிருந்து.

.3.

அவர்களின் அறைக்குள் நுழைந்தவுடன் பார்த்த எதிர்ச்சுவர்

மிகுந்த படபடப்பு உண்டாக்கிஅது.

பிடிபடப்போவது போலிருந்த அந்தப் பட்டாம்பூச்சி

செயற்கையானது என்றார்கள்.

பிறவியின் முழு தினங்களுக்குச் சேர்த்து இரையெடுத்திருந்த

பல்லியும் உயர் ரக ரப்பரால் ஆனது என்றார்கள்/

என் பதற்றத்தை முற்றிலும் தணிக்கும் குவளைகள்

அவர்களிடம் உண்டென்று சிரித்து ஆற்றுப்படுத்தினார்கள்.

நடுங்கும் விரல்களுடன் குனிந்து என் காலணியைக் கழற்றுகையில்

தெரிந்தது

உலோகத்தால் ஆனவனாக பாதங்களிலிருந்து நான் மேல் நோக்கி

மாறிக்கொண்டிருப்பது.

4.

உலர்ந்து காய்ந்த வடி கஞ்சி போல

உரியும் சுவரொட்டிக் கிழிசல் போல

ஒரு சொல் அல்லது சில சொற்கள் என் தொண்டைக்குள்.

எச்சிலையும் திரட்டிக்கொண்டே இருக்கிறேன்.

ஒரு சிரங்கைத் தண்ணீர் கிடைக்கும் எனில்

அச் சொல் அல்லது சொற்களை நனைத்துக் கொள்வேன்.

என்ன தாவரம் என அவை முளைக்கையில் எனக்கும் தெரிந்துவிடும்.

அதன் நாளைய மலர்கள் உங்களுக்கானதா, உங்களுக்கு எதிரானதா என்றும்.

ஒருபோதும் அது பெற்ற உள்ளங்கைத் தண்ணீருக்கு

எதிரானதாக இராது என்பது உத்தரவாதமானது.

%

கல்யாண்ஜி

18-07-2017

Comments are closed.