கவிஞர் திலீப் குமார லியனகே / அவர்கள் நம் அயல் மனிதர்கள் 14 / பத்திக் கட்டுரைத் தொடர் / – எம்.ரிஷான் ஷெரீப்

[ A+ ] /[ A- ]

கவிஞர் திலீப் குமார லியனகே

கவிஞர் திலீப் குமார லியனகே

இக் கால கட்டத்தில் போட்டிகள் மலிந்து விட்டன. அனைத்திலுமே போட்டி. எல்லாவற்றிலும் வென்று விட வேண்டுமென மக்கள் ஓய்வெடுக்க நேரமற்று ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். நவீன காலம் அனைத்தையும் இலகுவாக்கித் தந்திருக்கிறது. ஆனால் அது இலகுவாக்கித் தந்த அனைத்தும் மனிதனை நெருக்கடிக்கு உள்ளாக்கிக் கொண்டேயிருக்கின்றன.

இவற்றுள் முக்கியமானது கல்வி. மூன்று வயது சிறு குழந்தையின் மூளைக்குள் திணிக்கப்படும் ஆரம்பக் கல்வி தொடக்கம், முதுகலைக் கல்வி முடிக்கும் மத்திய வயது மாணவர் வரைக்கும் கல்வியானது வேட்டை விலங்கொன்றென பின்னால் துரத்திக் கொண்டேயிருக்கிறது. அது தரும் அழுத்தமானது, மனிதர்களை இயல்பாக வாழ்வதற்கோ, பொழுதுபோக்குகளுக்கோ, அவர்களது திறமைகளை வெளிப்படுத்தவோ அனுமதிப்பதேயில்லை.

தற்கால பெற்றோரும் தமது பிள்ளைகளின் கல்விக்கென கடன் பட்டேனும் எவ்வளவு பணம் கூடச் செலவழித்துவிடத் தயாராக இருக்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டுள்ள பாடசாலைக் கல்விக்கு மேலதிகமான பிரத்தியேகக் கல்வி வகுப்புக்கள் அநேகமானவை, பணம் சம்பாதிப்பதையே தமது இலக்காகக் கொண்டுள்ளதை இக் காலத்தில் காணக் கூடியதாக இருக்கிறது.

பல ஆசிரியர்கள், தாம் பணம் சம்பாதிப்பதற்காக வைக்கும் பிரத்தியேக வகுப்புக்களுக்கு வருகை தராத, தாம் கற்பிக்கும் பாடசாலை மாணவர்களை கடுமையாகத் தண்டிப்பது குறித்தும், பரீட்சைகளில் புள்ளிகளைக் குறைத்து இட்டு அம் மாணவர்களைத் தோல்வியடையச் செய்வதையும் தினந்தோறும் செய்திகளில் பார்க்கிறோம். பிள்ளைகள் தம் பெற்றோருக்கு அடுத்தபடியாக உயர்ந்த ஸ்தானத்தில் மதிக்கும் குருவின் நிலைமை இன்று இப்படித்தான் இருக்கிறது. பணத்தின் பின்னால் நேரம் காலமற்று அவர்களில் பலரும் ஓடத் தொடங்கி விட்டார்கள்.

அவ்வாறான ஒரு ட்யூஷன் ஆசிரியரின் நிலைப்பாட்டையே கவிஞர் திலீப் குமார லியனகே சிங்கள மொழியில் கவிதையாக எழுதியிருக்கிறார். இந்த டியூஷன் ஆசிரியருக்கு கவிதை எழுதும் இளகிய மனம் வாய்த்திருக்கிறது. தினந்தோறும் கவிதை எழுதி விட நினைக்கிறார். ஆனால் நேரம் வாய்ப்பதில்லை. அவரது நேரமெல்லாம் பிரத்தியேக வகுப்பின் வெற்றிக்காக ஓய்வற்று செலவழிந்து கொண்டேயிருக்கிறது. அந்த மன அழுத்தம் இங்கு கவிதையாக வெளிப்பட்டிருக்கிறது.

ட்யூஷன் ஆசிரியரின் கவிதை

இன்றொரு கவிதை எழுத வேண்டும்
சொல்லும்பொழுதே தாளொன்று
பாதி நிறுத்தப்பட்ட குறிப்பேடொன்று
உம்மென்றிருந்தன எடுக்கும்வரைக்கும்

விடிகாலையில் பாடங்களை மீட்டும் வகுப்பு
ஒன்பது மணிக்கு குழு வகுப்பு
இரவில் விடைதிருத்தும் வேலை
சிவப்புப் பேனையிலிருந்து வழிவது
மனைவியின் முறைப்பு

செஞ்சாயத் தேனீரருந்தியபடி சிற்றுண்டிச்சாலையில்
எழுதிய எளிய கவிதைப் புத்தகத்தின்
கவிதைத் தலைப்புகளே இங்கு
சுவர் முழுதுமிருந்து என்னைப் பார்த்துச் சிரிப்பவை

கரும்பலகையில் வெண்கட்டிபோல
தேய்ந்து போகும் வாழ்விடையே
கவிதைகள் கைவிட்டு நழுவி
எனக்கே மிதிபட்டு அலறும்

இலக்கிய வானில் கவிதையொன்றை
கற்பனை செய்கிறேன்
இரவில் வந்து அரைமயக்கத்தில்
நித்திரை கொள்கிறேன்
கண்களில் வீழ்கின்றன நிலாக் கிரணங்கள்
எவ்வாறு நாளை
கவிதையொன்றை எழுதுவேன்

—–

பிரத்தியேக வகுப்பின் ஆசிரியராக ஆக முன்பு, கவிதைத் தொகுப்பொன்றைக் கூட வெளியிட்டுள்ள கவிஞர், ட்யூஷன் ஆசிரியராக ஆன பின்பு, ஒரே ஒரு கவிதையையேனும் எழுதிடவோ, தனது திறமையை வெளிப்படுத்தவோ, தனது பொழுதுபோக்குக்கோ, தனக்குப் பிடித்ததைச் செய்யவோ நேரமும், வழியுமற்று நிற்பதை எடுத்துரைக்கிறது இந்தக் கவிதை.

இது அனைத்து சமூகங்களுக்கும் பொருந்தும். வேலை நெருக்கடி உருவாக்கும் இந்த மன அழுத்தம்தான் மாணவர்கள் மீது தண்டனையாகவும், குடும்பச் சண்டைகளாகவும், வன்முறைகளாகவும் பரிணமிக்கின்றன. இந்த மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் தைரியம் அனைத்து இளகிய மனங்களுக்கும் அத்தியாவசியமானது.

•••

mrishanshareef@gmail.com

Comments are closed.