காலவரம்பற்ற கன்னிமைச் சொற்களின் ஒழுங்கின்மை — கவிதை / மொழிபெயர்ப்பு கவிதைகள்; மூலம் : தியோடர் ரோத்கே தமிழில் : தி.இரா.மீனா

[ A+ ] /[ A- ]


–தியோடர் ரோத்கே
தியோடர் ரோத்கே ( Theodore Roethke1908-1963 ) அமெரிக்கக் கவிஞர்.தற்சோதனை ஒலிநயம்,புனைவாற்றல் கற்பனை என்பவை அவர் கவிதாம்சங்களில் சில வாகும்.கீட்ஸ், எலியட்,ஆடென் என்று அவரது போற்றுதலுக்குரிய கவிஞர் கள் இருப்பினும், மிக வெளிப்படையாகத் தன் அனுபவங்களையே பெரும் பான்மைக் கவிதைகளின் பாடுபொருளாக்கியது ரோத்கேயின் தனிச் சிறப்பு என்று விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர். அவர் கவிதைகளை வரிசைப்படுத்திப் படிக்கும்போது வாசகன் எல்லாக் கவிதைகளிலும் குறிப்பிட்ட பாங்கும்,கருது பொருள்களும் தவிர்க்க முடியாது வெளிப்பட்டிருப்பதை உணரமுடியும். இயற் கைக்கு ஒத்த கலைசார்ந்த தொனி, பரிணாம வளர்ச்சி கருக்கள்,அழுத்தத்தின் பின்னணியிலான அனுபவங்கள் என்ற பார்வை தொடர்ந்து வெளிப்பட்டிருப் பதை அறியமுடியும்.இந்த வெளிப்பாடுகளால் அவரை முறைசார்பு கவிஞர் என்றோ சோதனை சார்பு, கவிஞர் என்றோ குறையேற்பு கவிஞர் என்றோ எதற்குள்ளும் அடையாளப் படுத்த முடியாமல் போகிறதெனவும், எல்லாம் ஒருங்குடைய கவிஞராக வெளிப்படுத்துவதாகவும் Simonetti குறிப்பிடுகிறார். The Waking, The Lost Son, The Far Field, Words for the Wind அவருடைய குறிப்பிடத் தக்க படைப்புகள். Pulitzer Prize, National Book Award ஆகியவை அவருக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க சிறந்த விருதுகள்

ஓர் இருள் நேரத்தில்
ஓர் இருள் நேரத்தில் கண் பார்க்கத் தொடங்குகிறது,
நான் என் நிழலை ஆழமான சாயையில் சந்திக்கிறேன்;
நான் என் எதிரொலியை வனத்தின் எதிரொலியில் கேட்கிறேன்.
இயற்கைக் கடவுள் ஒரு மரத்திடம் அழுகிறது.
நாரைக்கும் சிறுகுருவிக்கும் மலை விலங்குகளுக்கும்
பாம்புகளின் குகைகளுக்கும் இடையில் வாழ்கிறேன்.
பித்துப் பிடித்தலென்பது சூழ்நிலைக்கான முரண்பாடுகளில்
ஆத்மாவின் பெருந்தன்மை? அந்த நாள் அக்னியில் எரிகிறது
பரிசுத்தமான மனத்தளர்ச்சியின் தூய்மை என்பது எனக்குத் தெரியும்
என் நிழல் ஒரு புழுங்கலான சுவற்றிற்கு எதிராகப் பொருந்தியிருக்கிறது
பாறைகளுக்கு இடையிலான இடம்-ஒரு குகையா,
அல்லது சுழலுகிற வழியா? எனக்குத் தெரிவது விளிம்புதான்.

ஒரு நிலையான சூறாவளியின் தொடர்புகள்!
ஓர் இரவு பொங்கி வழியும் பறவைகளுடன், ஒரு கந்தை நிலா,
கடும்பகலில் இரவு மீண்டும் வருகிறது!
ஒரு மனிதன் தான் யாரென்பதைக் காணத் தொலைவில் போகிறான்-
கண்ணீரற்ற நீண்ட இரவில் சுயத்தின் இறப்பு
எல்லா இயற்கையானவடிவங்களும் இயற்கைக்கு மாறாகச் சுடர் விடுகின்றன

இருள்,என் விளக்கையும் ,என் விருப்பத்தையும் இருளாக்குகிறது.
என் ஆன்மா சூட்டில் தவிக்கும் கோடைக்கால ஈயாய்
நிலைவிட்டத்தில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது.நான் எந்த நான்?
ஒரு விழுந்த மனிதன் ,நான் அச்சத்திலிருந்து எழுகிறேன்.
மனம் மனதிற்குள் போகிறது, கடவுள் மனம்,
ஒன்று ஒன்றேதான், கிழியும் காற்றில் சுதந்திரமாய்.

இன்னொரு முறை , அந்தச் சுற்று
எது உயர்ந்தது, கூழாங்கல் அல்லது குளம்?
எது அறியமுடிவது? அறிய முடியாதது.
என் மனச்சாட்சி ஒருமலையை நோக்கி ஓடுகிறது.
இன்னும்! ஓ, இன்னும் மறைவற்றதாக
நான் இப்போது என் வாழ்க்கையைப் போற்றுகிறேன்
பறவையுடன்,தொடரும் இலையுடன்,
மீனுடன் , வேட்கையான நத்தையுடன்,
பார்வை எல்லாவற்றையும் மாற்றுகிறது.
நான் வில்லியம் பிளேக்குடன் நடனமாடுகிறேன்.
காதலுக்காக, காதலுக்கான காரணமாக
நாம் நடனமாடும்போது , நடனமாடும் போது
எல்லாம் ஒன்றாகிறது.

சரியான விஷயம்

இயலுமெனில் மற்றவர்கள் புதிரை கண்டறியட்டும்.
கைதிகள் அனுமதிப்பின் வாழ்க்கை அதன் போக்கில் அமையும்
சந்தோஷமான மனிதனுக்கு சரியான விஷயமே நடக்கிறது.
பறவை வெளியே பறக்கிறது,மீண்டும் உள்ளே வருகிறது;
மலை பள்ளத்தாக்காகிறது, இன்னமும் அப்படி;
இயலுமெனில் மற்றவர்கள் புதிரைக் கண்டறியட்டும்.
கடவுள் வேர்களை ஆசீர்வதிக்கிறார்! -உடலும் ஆன்மாவும் ஒன்றுதான்!
சிறியது மிக உயரியதாகிறது, உயரியது சிறியதாகிறது;
சந்தோஷமான மனிதனுக்கு சரியான விஷயமே நடக்கிறது.
இரவின் குழந்தை சூரியனில் பாய முடியும்,
அவனிருப்பு தனிதான் அது எல்லாமாகவும்;
சந்தோஷமான மனிதனுக்கு சரியான விஷயமே நடக்கிறது
அல்லது, சுயஅழிவு மற்றவர்களை அச்சுறுத்துறுத்தும் போது
அவன் திட வடிவாய் இன்னமும் அமர்ந்தபடி ,
தனக்குண்டான புதிருக்குள் அமிழ்கிறான்

இரவு மெதுவாக ஊடுருவும் போது நிலை மாறுகிறது
தன் விருப்பங்களை சரணடையச் செய்து தன்னை மறைக்கிறான்
புதிர் இல்லாதவரை ;செய்ய முடிவதும் எதுவுமில்லை
சந்தோஷமான மனிதனுக்கு சரியான விஷயமே நடக்கிறது .

கணக்கிடுதல்
எல்லா லாபங்களும் மறைந்து விட்டன; சுலபமான
ஆதாயத்தின் பயன் பதுக்குதல்,ரகசியத் தொகை
இப்போது அச்சம் தருகிற லக்கம் பழைய வலி என்று
எங்கள் வீட்டைத் தாறுமாறாகத் திருப்பியிருக்கிறது
அழிவுக்கான காரணத்தைத் தேடுகிறோம்,கூட்டல்,
கழித்தல் என்று எங்களை அடமானம் வைக்கிறோம்;
அட்டையை நாங்கள் எவ்வளவு உரசித் தேய்த்தாலும்,
விழுந்த பிழையை எங்களால் அடையாளம் காணமுடியவில்லை

ஏழைகளை அபகரிக்கும் நாணயமாய்
அந்தக் குறைபாடு எங்களை அடையாளப்படுத்தும்;
நாங்கள் தேடுவது எதுவெனில் ஒரு வழிச்
சவாரிதான்,பாதுகாப்பிற்கான ஒரு வாய்ப்பு:

ரோத்கேயின் சில மேற்கோள்கள்:
எல்லா மலர்களும் ,ஆழமான வேர்களில் ஒளியைத் தேக்கியிருக்கின்றன
கவிதையின் அழகான கால வரம்பில்லாத கன்னிமை கொண்ட சொற்களின் ஒழுங்கின்மையால் நான் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறேன்
நான் என்கிறது சுயம் :நான் குறைந்தவன் என்கிறது மனம்;நீ எதுவுமற்றவன் என்கிறது ஆன்மா
கட்புலம் என்னை வெளியேற்றுகிறது.நான் நிழலில் கரைந்து போகிறேன்.

Comments are closed.