குற்ற வாசனை ( சிறுகதை ) / செந்தூரன் ஈஸ்வரநாதன்

[ A+ ] /[ A- ]

பெரு நகரங்கள் இரவுகளில் முழித்துக்கொள்கின்றன. கண்களில் வெறிசரியக் காத்திருக்கின்றன; அச்சத்தையும் உலைச்சலையும் ஒருசேர உண்டாக்கும். பரிமாணமடையும் இரவுகள். ஒவ்வொரு இரவும் மாற்றமடைகின்றன.

மாநகரப் பேருந்து நிறுத்தங்கள்; பிரபல மதுபானக் கடைகள்; இருளடர்ந்த சில அபூர்வமான திருப்பங்கள்; ஆள்நடமாட்டமற்ற ஆற்றுப் பகுதிகள், சாக்கடைகள்; எல்லாவற்றிலும் வன்முறை தூங்கிக் கிடந்தது. அகலக் கண்களை அது விரிக்கிறபோது மனிதர்கள் அதில் சிக்கினார்கள். இடம் மாறி இடம் மனிதர்களே அந்த வன்முறைகளை உருவாக்கினார்கள். அவர்களே அதன் தோற்றுவாய். இரவுக் காவலர்கள் பெரும் போதையுடன் உலவித் திரிந்தார்கள். வோக்கியில் ஒலிக்கும் கட்டைளைகள் எந்தப் பரபரப்பையும் உண்டாக்காமல் உறைய வைத்துவிடுகின்றன. ஒரு நடு இரவில் அந்தக் குரல் ஒலித்தது. ஆணும் ஆணுமாக இரு காதலர்கள் சிக்கிக்கொண்டார்கள்; கெக்கலிப்புடன் அயர்ச்சியாக அது அலறியது.

துயரமே, கேளுங்கள். மன்றாடுவதைத் தவிர என்னிடம் வேறு வழிகள் இல்லை. உங்களிடம் தவிர அந்த அல்பினிச வியாதிக்காரனான விசாரணையாளனிடமும் சிறை அதிகாரியிடமும் – அவர் குற்ற நுண்ணறிவுப் பிரிவில் இருந்தவர், தவறாக நிகழ்த்திய எண்கவுண்டருக்காக சிறை அதிகாரியாக மாற்றப்பட்டிருந்தார் – உளறிக்கொண்டியிருக்கிறேன். மிகுந்த அச்சத்தை உண்டுபண்ணும் உயர்ந்து நெடிந்த அந்த அதிகாரி சில்லறைத்தனங்களை மட்டும்தான் பெறுமதியான குணங்களாகக் கொண்டிருந்தார்.

சிறையில் இருப்பவர்களுக்கென கிறித்தவச் சபைகளிலிருந்து எடுத்து வரப்படும் பொருட்களையும் திருடிக்கொள்வார். பாகுபாடெல்லாம் பார்த்து அவர் எதையும் எடுத்துக்கொள்வதில்லை. பள்ளிகளிலிருந்து சிறைக் கைதிகளுக்கு கடிதங்களும் வாழ்த்து அட்டைகளும் குட்டிக்குட்டி எழுத்துக்களிலும் வண்ணவண்ண நிறங்களிலும் வந்து சேரும். சாரைக் கண் வர்ணத்தில் பொம்மைப்படம் வரைந்து ஒரு குழந்தை அனுப்பியிருந்தது. சிலவேளை கடிதங்களோடு எழுதுபொருட்களும் வந்துசேரும். வருபவற்றை ஏமான் எடுத்துக்கொண்டு மிஞ்சியதுசொஞ்சியதெல்லாம் கைதிகளிடமும் கையளிக்கப்பார். அதிலும் அந்த அதிகாரிக்கு வேண்டப்பட்ட கைதிககளிடமே அவற்றை அவர் கையளிப்பார்.

எல்லோருக்கும் ஒரேவிதமான முறைதான் அவரது சிறப்பம்சம். அவரின் ஆடைகளைக் கைதிகள் சீரான முறையில் துவைத்து உலர்த்திக் கொடுத்தோம். சிறை அதிகாரியை; அச்சத்தை உருவாக்கும் இங்கு, கைதிப் பெண்ணொருத்தி காதலித்தார் என்பது எங்களிடையே உண்மையில் ஒருவித அதிர்ச்சியையும் விடுப்புப் பிடுங்கும் உணர்வையும் உருவாக்கியது. யாராவது ஒருவர் ஏதாவது ஒரு செய்திக்காக வாயை அகலத் திறந்து மூடியபடியும்; துணிகளை நீரில் அமிழ்த்தி எடுக்கும்போதும் வெண்ணிறச் காற்சட்டைக்குள் கைகளை நுழைத்து ஒரு பாட்டம் உணவுக்குக் காத்திருக்கிறபோது, சிறைத் தொழிலாளிகளின் முடையப்பட்ட பாய்களை ஏற்றும்போதும் எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

அவர் கவர்ச்சிகரமான மனிதரொன்றும் இல்லை.. ஆனால் அவரிடம் சிறைகுறித்த சுவாரசியமான கதைகள் இருந்திருக்கலாம். அந்தப் பெண் துயரம் நிரம்பிய கண்களோடு சோகத்துடன் கிழிந்துபோன வழிதெரியாக் கருமையான ஒரு வரைபடத்தைப் பார்ப்பதாக கண்ணைத் தின்கிற இரவுகளில் கற்பனை செய்தேன். வெகு விரைவிலேயே எனது சதத்திற்குதவாக் கற்பனைக்குள் நீரேறி அது இற்றுப் போய்க்கொண்டிருந்தது.

விசாரணை : 1: ஹெல்த் லைன் முதலாம் மாடி

ஐயா, அந்த உயிர்கொல்லி உங்களை மிகக் கவர்ந்தவன். அவனுக்காக இந்தச் சிறையில் நீங்கள் உருவாக்கிய வசதிகளைப் பற்றியும் தெரிந்திருக்கிறேன். ஆனால் அவன் உங்களை மதிப்பதே இல்லை. ஏன்? திரும்பிக்கூடப் பார்ப்பதுமில்லை; ஐயா, என் உருவத்தைப் பார்த்து என்னால் பயனில்லை என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது. நான் மிகத் திறமையானவன். ஆளில்லாக் கட்டடங்களில் ஏறி இறங்குவேன். மிக உயர்ந்த சுவர்களை மிக இலகுவாக என்னால் தாண்டிவிட முடியும். ஆனால் உங்கள் பாதுகாப்பில் இருக்கும் வரைதான் பாதுகாக்கப்படுவேன்.
விஷமமான அந்தக் கைதி திறமைசாலி அவனை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.

அவனது கண்கள்; என்றென்றைக்குமாக அதில் பூத்துக் கிடக்கும் மஞ்சளும் சாம்பலும் அவனை மிகுந்த கவர்ச்சிகரமானவனாக ஆக்கியிருந்தன. உறங்குகிற நேரங்களில் அவன் உறுமல், ஒடுக்கமான அறைக்குள் பட்டுத் தெறித்து அடங்கும். பசிகொண்ட ஒரு விலங்கின் அமைதியற்ற கண்கள். சரியாகச் சொன்னால் தீப்பற்றியெரியும் ஒருசோடிக் கண்கள்; உறக்கத்தைக் கெடுத்து இல்லாமலாக்கிவிடும்.

விசாரணை:2 : சவுத் எக்ஷ்டென்ஷன் ஹர்

அன்று அறைக்கு வீரக்குட்டியார் வந்திருந்தார்; கைகளில் பயணப் பொதியும் ஒரு சோடாப் போத்தலும். அவர் குறித்து அப்போதே ஐமித்திருந்தேன். அவர் நெருங்கப்படக்கூடாதவர் என்ற எண்ணம் காரணமின்றியே எனக்குள் படர்ந்திருந்தது. அவரின் உடல்; மிக லேசானதாகத் தோன்றவில்லை. மிகுந்த ஒல்லியான தோள்கள்; குறுகின கஜூப்பழத்தை ஒத்த ஒடுக்கமான அந்த மனிதரின் வளவளப்பான கறுத்த முகத்தில் தொக்கையாகக் கத்து முடிகள் ஒட்டப்பட்டிருந்தன. கரிய ஆழமான அந்த முகத்தில் சிரிக்கும்போது குழைவு தெரியும். அறைக்கு வந்தவுடனேயே புறுபுறுக்கத் தொடங்கியிருந்தார். பழைய சோகம் நிரம்பிய பாடலைப் புனையும் பாணன்.

‘அழிவான்’ என ஆரம்பித்துப் பச்சைத் தூஷணத்தோடு அவர் முடித்துக் கொள்வார். நானும் வேலையின்றி யாரைத் திட்டித் தீர்க்கிறார் என்று ஆராய்ச்சியும் செய்துகொண்டிருந்தேன். பதில்கள்; குறுகின வட்டாரங்களிருந்தே கிடைத்துவிடும். 360 பாகையிலிருந்து 180 பாகைக்கு வர முன்னரே எதிரிலிருப்பவரின் ஆடை அவிழ்க்கப்பட்டிருக்கும். நிறுத்தல் குறிகளைக் கூட அச்சமயத்தில் மட்டும்தான் பயன்படுத்திக் கொள்வார். ‘‘ஏன் சாமி இப்படி கத்திக்கொண்டிருக்கிறீங்கள்?‘ என்றால் அவரிடமிருந்து எவ்விதப் பதில்களும் வராது. ஒரு சிரிப்புடன் ஆடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள்ளோ அல்லது மேற் தளத்திற்கோ கடமையுணர்வுடன் விரைந்து வெளியேறிச் செல்வார்.

ஒரு மாலை நேரம்; சூரியன் பதிந்து இறந்ங்கிக்கொண்டிருந்தது. அழுத்தம் நிறை மாலை. மூலையில் சுழன்றாடிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அறை பச்சை ஏறிப்போயிருந்தது. தொளதொளத்துப் போன ஆடைகளை ஒவ்வொன்றாய் கழற்றி அவர் எறிந்தார். அப்போது அவரின் செய்கைகள் எனக்கு எவ்வளவு அருவெறுப்பை உண்டாக்கின? அவரது வழமையான சுற்றாடல் அன்றைக்கு இல்லாது போய்விட்டதைப்போல் எதையும் அண்டாமல் அங்குமிங்குமாக அலைந்தார்.

அவர் என்னைப் பார்த்தபோதும்கூட தன் புலம்பலை நிறுத்திக் கொள்ளவில்லை. நீர்மையான வன அலரிகளாய் அப்போது என் கண்கள் பூத்துப் பீழை தள்ளின; உண்மையில் அவ்வாறுதான் எண்ணிக்கொண்டேன். எங்கள் கண்கள் ஈரலிப்புடன் சந்தித்துத் திரும்பின. அப்போதே அங்கிருந்து வெளியேறிவிடமேண்டுமெனத் தவித்தேன், உள்ளங்கால்கள் வியர்த்தன. குடலைப் புரட்டியது. கண்ணீருடன் வெளியேறிப் போனேன்.

அவரிடம் சொல்லிக்கொள்ளாமல் ஏறத்தாழ ஓடினேன். அன்றைக்கு நான் வெளியேறாமல் இருந்திருந்தால் இன்றைக்கு நீங்கள் இந்த முடுக்கில் வைத்து என்னைக் கேள்வியெழுப்பியிருந்திருக்க முடியாது ஐயா.
விசாரணை: 3 : மஹாராஷ்ட்ரா டெஸ்க்
இதற்குமேல் அறையை வெறிக்க முடியாது. மூன்றாம் இலக்க ஜில்ஜில்லே வழி. வீரக்குட்டி இன்றைய இரவை புதிய தன் இளம் நண்பர்களுடன் ஆரம்பித்திருந்தார். கொண்டாட்ட நாளொன்றை அவர் தயாரித்துக்கொண்டிருந்தார். தொந்தி பெருத்த மனிதர்; வேகமான அந்த மனிதரின் கைகளில் ஏதாவதொன்று உழன்றுகொண்டேயிருக்கும்.

வீட்டுச் சாவி, கைபேசி, மெழுகுவர்த்தி, சிகரெட், சாராய கிளாஸ், பிளாஸ்டிக் கிளாஸ், சாகஸக் கதைப் புத்தகம், பாஸ்போர்ட், அடகுச் செயின், திருட்டு மோதிரம் இன்ன பிற திருட்டுச் சாமானுகள் இப்படி எதையாவது ஒன்றை வைத்து கதையளந்துகொண்டிருப்பார். புதியவர்கள் அவரைக் கூடி இருப்பார்கள். ஏதாவது ஒரு கதையை உழப்ப ஆரம்பிப்பார். ஆனால் அவருடைய புதிய இளம் நண்பர்கள் அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்கள் அவரை ஒரு பெரிய அதியமாகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு அந்த மனிதர் அற்புதம்.

விசாரணை: 4 : ஔரா மேல் பாலம்

வீரக்குட்டி வீடு நிரம்பிப் போயிருந்தது. எனக்குத் தெரிந்து வீரக்குட்டியை அந்த வீட்டின் டீ மாஸ்டராகத்தான் அறிந்திருந்தேன். யாராகினும் சம்பளம் கொடுப்பார்கள்; என்றாலும் அதற்கும் வாய்ப்பு அரிதுதான். தாமதமாகத்தான் அந்த வீடு வீரக்குட்டியுடையதுதான் என்பதை அறிந்துகொண்டேன். அதேபோல் இந்த ஆள் பெயர் வீரக்குட்டி தானா? இல்லையென்றால் வேறு யாரிடமாவது கேட்கலாம். ஆனால் அங்கிருந்த மூத்த இளம் தலைமுறையினர் எல்லோருமே இயக்கத்தில் இருந்திருந்தார்கள். மேஜர். கப்டன், சென்றி, ரவுண்ஸ், சொரியன்கள், அட்டை, துண்டு, வெளிநாடு, துரோகி, வெஸ்ச, புண்டயாண்டிகள் என்ற மாதிரியே குழப்பமாகவே திரும்பத்திரும்பக் கதைத்தார்கள்.

வீரக்குட்டியிடம் இரண்டு முறையான பொருட்கள் இருந்தன. ஒன்று, அவரின் டமாரம் ஏறின வாய்; முழங்கும். இரண்டு, அவர் கையில் என்றென்றைக்குமாக தங்கி நின்ற ஃபைல்.
அந்த ஃபைலை அவரிடமிருந்து திருடிக்கொள்ளும் ஆண்டவரே என்று ஊளைச் சத்தமிட்டு அலறிக் கெஞ்சுமளவிற்கு மோசமான ஆனால் வீரக்குட்டியின் சத்துள்ள சாமான். ‘‘எல்லாம் ஃபைல்லதான் இருக்கு. அவாவிட்ட சொல்லு’’ நிறைபோதையில் தெரு முழுக்க இரைச்சலிட்டுக் கோடு கீறுவார். வீரக்குட்டியின் ஃபைலில் என்ன இருந்தன என்பது புதிர். கொத்துக் கடைகளில் வீரக்குட்டி ஃபைல் பற்றி சில புராணக் கதைகளும் சேர்ந்துகொண்டன. ‘வீரக்குட்டி கிசுகிசுக்கள்’ எழுதுமளவிற்குத் தகவல்கள் பரம்பலடைந்துகொண்டே இருந்தன.

வீரக்குட்டி ஜிம்மிலிருந்துகொண்டு ப்ரான்ஸ் போய்விட்டேன் என்று ஸ்கைப்பில் சொல்லுமட்டும் ஏதோ ஒரு வதந்தி சுடுதீயைப்போல் வளர்ந்திருக்கும். அவருக்கு நகரைப் பற்றி அலையும் வேடிக்கையான மனிதர்கள் கடும் தோழர்களாயிருந்தார்கள். அவரது உணவுப் பழக்கமும் மூன்றிலிருந்து இரண்டாக மாறிப்போனது. உணவிலும் வித்தியாசமான மனிதர்தான்.

வீரக்குட்டியின் ‘எல்லாம்’ ஃபைலில் சில ஆவணங்களைத்தான் அவர் வைத்திருந்தார். அரசிடம் மன்னிப்புக்கோரி, தண்டனையின் அடிப்படையில் நாடு கடத்தக் கேட்டு எட்டுத் துண்டாய் மடிக்கப்பட்ட கி-4 தாள்; அவற்றைப் பிரதிகளெடுத்து குடியேற்ற – குடியகல்வுத் துறை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் என யார் யாருக்கோ அனுப்பி அவர்கள் புரிந்தும் புரியாத மாதியும் சில கடிதங்களை அனுப்புவார்கள். அவர் அவற்றையும் சேர்த்து வைத்திருந்தார். ஒரு முறை இவரின் கடிதம் வீகேஎஸ் என்ற ஆள்பிடிக் கம்பெனிக்குப் போய் அவர்கள் இவரைக் கடத்தாத குறை மட்டும்தான். அதேபோல் கொஞ்சம் சேர்டிபிக்கேடுகள்; இலங்கை போலீஸ் ஐசி, ஆர்மி ஐசி, நேவி ஐசி, உள்ளூர் பொலிஸ் நிலையப் பதிவு அவரிடம் கைக்காவலாக இருந்தன.

அதையும் விட மனிதர் விளையாட்டுப் போட்டிகளில் வென்ற சில சான்றிதழ்களையும் வைத்திருந்தார். பொலிஸ் நிலையத்தில் அவர் அடையாள அட்டைகள் தொடங்கி பல்வேறு ஆவணங்களையும் காண்பிக்கும் வேளையில் தன் விளையாட்டுச் சான்றிதழ்களையும் காண்பிப்பார். முக்கியமாக, அந்த ஃபைலின் ஓரத்தில் கங்காருப் பை அடுக்கில் தன் வயதுவாரிப் படங்களையும் அவர் பாதுகாத்து வைத்திருக்கிறார்.

பழுப்பு, கறுப்பு – வெள்ளை, கொஞ்சம் சாயம் போன கலர் படங்கள். ஒரு ஐந்தாறு வகைப் படங்கள். அவற்றின் பின்புறங்களில் திகதிகள் காலக்கிரமமாக எழுதப்பட்டிருக்கும். இலகுவாகச் சொன்னால் அவர் ஒரு தகவல் மய்யம். அவரிடம் ‘பன்னிரெண்டாம் தேதி அறுபத்தேழாம் ஆண்டு என்ன நடந்தது?’ என்று கேட்டால், ‘சிவராசன் பாம்பு கடிச்சு கண் பொட்டையாகிச் செத்துப் போனான்; இதில ரெண்டு சிவராசன்கள் இருக்கிறாங்கள். ஒருவன் ஊரிலேயே செத்துப் போனான். இன்னொருத்தன் நாயில அடிபட்டு வண்டியேறிச் செத்தான். உதில நீ ஆரைக் கேக்கிறாய்’ என அதிர்ச்சியளிக்கக்கூடிய மனிதர்.

விசாரணை: 5 : பெங்களூர் சிவா இண்டஸ்ரியல்

மூன்று நாட்கள் கழித்து முத்துக்குமார் இறந்தபோது பனகல் பார்க் மூலையில் ஏதோவொரு அமைப்புக்காரர்களோடு நின்று கத்திக்கொண்டிருந்தாகச் சொன்னார். சில பதாகைகள் தயார் செய்யப்பட்டதாம். அமைப்பு மூத்த உறுப்பினர்கள் பாடல்களைப் பாடினார்களாம்; கோஷங்கள் எழுப்பப்பட்டதாம். ‘‘கூட்டம் ஒன்றுபோல் எழுந்து கூவியது. போர் முழக்கம்; நாங்கள் கூவிக்கொண்டிருந்தோம்.

முற்றிலுமாகப் போர் முடிந்துபோனது; சனம் இராணுவத்திடம் தஞ்சமடைந்திருந்தார்கள். பாரிய படுகொலைகள் நிகழ்ந்துகொண்டிருந்தன. ’வெளியேறு… வெளியேறு… இந்தியாவே வெளியேறு’ ’புலிகளைக் கொல்வதை நிறுத்து’’‘, தமிழக அரசே மாநில அரசே தமிழ்ஈழ ஆதரவாளர்களைக் கைது செய்வதை நிறுத்து’, ஈழத்தமிழர்கள் மீதான இனவெறிப் போரை நிறுத்து.’’ முழுதாக வீரக்குட்டியார் சொல்லி முடித்தபோது நான் இடியப்பத்துக்கு என்ன கறி என்று யாப்பாணத் றமிழ்ஸ் ஒருவரிடம் படு அக்கறையாக விசாரித்தேன்.

விசாரணை: 6 : திலக் மார்க் ஸி ஸ்கீம்

நான் பொய் சொல்லவில்லை. என் கண்கள் மருட்சியில் இமைக்க மறந்திருந்தன. நம்ப முடிகிறதா? ஆனால் பயமுறுத்தும் பல இரவுகளை அவரோடு ஒடுங்கிய அறையில் கழித்தேன். கோடைகாலங்களில் உணவுண்டு சுருள்கிற பாம்பின் வயிறை ஒத்ததாய் அறை வெப்பமேறியிருக்கும். நான் சாப்பாடு எடுக்கப் போகவில்லை. மூன்றுநாளாகவே அரைபோதையும் அரைப்பட்டினியுமாக பெத்தாய்ச்சிச்சிக் கிழவி வீட்டுக்குப் போகாமலே அறையிலேயே ஒடுங்கினேன். பெத்தாய்ச்சிச்சி அறைக்கே சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்தார். ‘‘அங்க வாரதுக்கு உமக்கு என்ன ஐசே, வெளிக்கிட்டு வீட்ட வாறீங்கள் என்ன?’’ நான் என்ன சொல்லப் போகிறேன், கேட்காமலேயே வெளியேறிப் போனார்.

பெத்தாய்ச்சிச்சிக் கிழவி ஆடித் தொங்குகிற திரைச்சீலைகளை தைத்துத் அறையில் தொங்க விட்டிருந்தார். அம்பரல்லாக் காய்களின் நிறத்தில் தூய்மையாக இருந்த திரைச்சீலைகள். அவை அந்தக் கிழமைக்கானது. தேந்தெடுத்துக் கொழுவியிருந்தார். மஞ்சள் வெளிச்சத்தில் தகரங்கள் பளபளக்கும் சமையலறையை அவர் நித்திரைக்குப் பயன்படுத்தினார். அவருக்காக மட்டுமே அந்த அறை உருவாக்கப்பட்டிருக்கும். நாலுக்குப் பத்தடி அறையில் அவர் எப்போதையும் போல சமைத்துத் துவைத்து வாழ்ந்துகொண்டிருந்தார்.

பெத்தாய்ச்சிச்சிக் கிழவி பாக்கோவனுக்கு வீடுமாறிப் பல ஆண்டுகள் ஆகியிருந்தன. ஒரே வீட்டில் அவர் பல காலம் வாழ்ந்தார் என்பது எனக்கு அப்போது பெரிய ஆச்சரியத்தையே ஏற்படுத்தியிருந்தது; ஒரு வருடத்தில் 14 வீடுகள் மாறினேன். ஏறத்தாழ என்னிடமிருந்த வீட்டு முன்பணத்தில் பாதியை வீட்டு உரிமையாளர்களிடம் கொஞ்சம்கொஞ்சமாக இழந்திருந்தேன். பெத்தாய்ச்சிச்சி இங்கே வந்து 17 வருடங்கள் ஆகியிருந்தன. நீண்ட குன்றுகளையும் பவளம் நிறைந்த கடற்கரைகளையும் தாண்டி அவர் வந்து சேர்ந்திருந்தார்.

‘‘தனியவா வந்தனீங்கள்?‘‘

அவரின் புன்னகையான முகம் ஒருமுறை ஒளிர்ந்து அடங்கியது.
‘‘இல்லை.’’

விசாரணை: 7 : சௌவக், ராய்பூர்

அறைக்குள் வேண்டா விருந்தாளியாய் ஒரு பெண் நுழைந்தாள். அரை மண்டைத் தலை அவளுக்கு நரையேறிக் கிடந்தது. பார்வைக்கு பெத்தாய்ச்சிச்சியைப் போலவும் இருந்தாள். அது பிரமையாகவும் இருக்கலாம். திடீரென்று கண்களை மூடித் திறந்தபோது என்னைக் கடந்து பெத்தாய்ச்சிச்சிக் கிழவியை அவள் நெருங்கியிருந்தாள். தேன் நிறப் பெண்ணின் கண்கள் பெத்தாய்ச்சிச்சியிடம் கடுமையாக நடந்துகொண்டன. பெத்தாய்ச்சிச்சியை அவர் மிரட்டினாள். பெத்தாய்ச்சி தன் எதிரிலிருந்த மேஜையில் தட்டி சப்தம் எழுப்பிக் கூவினார். அவள் சோர்வுறாமல் பெத்தாய்ச்சிவோடு மல்லுக் கட்டினாள். திட்டியபடி கதவை இழுத்து அறைந்து வெளியேறினாள். பெத்தாய்ச்சி அதிர்ச்சியுற்று அவள் வெளியேறியதை வரவேற்பதைப்போல் கண்களைச் சிமிட்டினார்.

‘அவள் என்னுடைய மகள்’

முகத்தை அவர் தொங்க விட்டிருந்தார். என்னை அழைப்பதற்கும் சிரிப்பதற்கும் பலமுறை முயன்று தோற்றுக் கொண்டிருந்தார். நான் அவரைப் பார்ப்பதற்கோ அவரை நோக்கித் திரும்புவதற்கு தைரியமற்று அமர்ந்திருந்தேன்.

அறையில் பெத்தாய்ச்சிவும் நானும் தனித்திருந்தோம். பெத்தாய்ச்சி பூக்கும் மலரைப் பார்க்கக் காத்திருக்கும் சிறுமியாக ஏக்கமடைந்திருந்தார். நான் குளத்தின் கரையில் அமர்ந்திருந்து பார்க்கும் செங்காந்தள் நிறக் கண்களைக் கொண்ட சிறுவனாயிருந்தேன்.

இரு சிறுவர்களுக்கும் பேசிக்கொள்வதற்கு ஒன்றுமிருக்கவில்லை. “அன்றிரவு இவளின் அப்பா விவாகரத்தினை உறுதி செய்வதற்கான ஆவணங்களுடன் வந்திருந்தான். என்னைப் போலவே அவன் முகமும் இறுக்கமடைந்து கிடந்தது. அவனிடம் எதைப் பேசினாலும் எரிந்து விழுவதற்குத் தயாரானவனாயிருந்தான். அன்றைக்கு அவன் கொஞ்சம் வெளுத்தும்தான் போயிருந்தான்.’’

பெத்தாய்ச்சிவை அவன் ஏச ஆரம்பித்தான். ‘‘உன் அகதி ஆவணங்களைத் தாரை வார்த்துவிட்டு இரவுகளில் வருகிறாய். ஒருநாள் இரவு திடீரென திருடியைப்போல் நுழைந்தாய். அன்று என்ன கோலத்தில் இருந்தாயென உனக்கு நினைவில் இருக்கிறதா?’’ மெல்லிய ஆடைகளை அன்று அவன் அணிந்திருந்தான்.

அவரை அவன் உருக்கினான். பெத்தாய்ச்சிவின் கண்கள் நிறைந்து கிடந்தன. ஆவேசமாய் கையிலிருந்த ஆவணங்களைப் பெத்தாய்ச்சிமீது எறிந்தான். பெத்தாய்ச்சி அவனைச் சமாதானப்படுத்த முயன்றார். அவன் செய்கைகள் அவருக்கு பயத்தையே உருவாக்கியிருந்தன.

‘‘அன்றிரவு அவனைக் கொல்வதென தீர்மானித்தேன். உண்மையில் என்றைக்கும்விட அன்றைக்கு அவன் பேசியவை தெளிவாய் இருந்தன. அவன் உயிர்ப்பாய் இருந்தான், ஒரு நீல மலரைப்போல. அவன் அவசரத்தில் அச்சம் இருப்பதாய்த் தென்படவில்லை. ஆச்சர்ய வளைவுடன் முதுகோடு ஒட்டி, செவிமடல் ரோமங்கள் சிலிர்க்கும் ஒரு கணம் அருகிலேயே நின்றிருந்தான். அவனுக்குப் பூராய்ந்து பார்க்கிற குணம் உண்டு.’’

விசாரணை: 8 : ராஜ்பவன் மூன்றாம் மாடி

அவன் பரபரப்பாய் இயங்கும் நாட்கள், வேதனையோடு ஒரு புன்னகையில் அல்லது பெரிய கத்தலோடு பெத்தாய்ச்சிஅவனைக் கடந்துகொண்டிருந்தார். ஆடைகளை எறிந்தான்; கிழித்து நடமாட்டமற்ற தெருக்களில் வீசினான். கட்டிலில் பெத்தாய்ச்சி ஆடைகளைக் காணவில்லை; இவன்தான் கிழித்தான் என்பதை அறிந்தேயிருந்தார்.

பெத்தாய்ச்சிவின் காதுகளில் அவன் கிசுகிசுப்பான். மிக நெடிய நீண்ட மௌனமான இரைச்சலற்ற இரவுகளில் அவர்கள் இருவரும் கூடினார்கள். பெத்தாய்ச்சி பரந்த மூச்சோடு வெளியேறிப் போவார். ஆனாலும் மீண்டும்மீண்டும் அவனை அவர் சீண்டிப் பார்க்கவே விரும்பினார். தொடர்ந்து அவனைப் புணர்ச்சிக்கு வற்புறுத்தினார். அவன் சோர்ந்து விழுகிற நேரங்களில் முகத்தைக் கோணலாக்கி அவனை அவமானமடையச் செய்தார்.
‘‘அந்த நாள் எனக்குத் தெளிவாக நினைவில் இருக்கிறது. அவன் ஆடைகளைக் களைந்து கழிப்பறை சென்று வெளியேறிய ஒரு தருணத்தில் அவனை இல்லாமலாக்குவதென முடிவு செய்தேன். கழிப்பறையிலிருந்து வெளியே வந்து தன் ஆடைகளைப் போட்டுக்கொண்டான். நாற்சதுரமான மெல்லிய என் கண்ணாடி முன்நின்றான். மூன்றாம்தரமான பளிங்குகளாலும் அரிக்கப்பட்ட சிப்பிகளாலும் அமைக்கப்பட்டிருந்தது அந்தக் கண்ணாடி. நான் அவனைப் பார்த்துச் சிரிப்பதற்கு தயாரித்துக்கொண்டிருந்தேன். தொலைவிலிருந்தே கத்தினான். மூன்று தெருக்களைத் தாண்டியும் அந்தக் குரல் அன்றிரவு ஒலித்தது மகன். அவன் கத்தினான். ‘வேசையாடப் போ.’’
றெக்கைகள் அடிபட கழுத்தறுந்த தவிப்புடன் வெளியேறினேன்.

விசாரணை: 9 : ACB போபால் சதுக்கம்

அவன் உடல் பிரேதக்குழியில் வீழ்த்தப்பட்டபோது எந்த வருத்தமுமின்றி நுழைந்தேன். காவலதிகாரி நல்லவனாக இருந்தான். என்னிடம் சமத்தான ஒரு தொகையை பெற்றுக்கொண்டான். அவனிடம் வழக்குக்கான பத்திரம் எப்போதும் கூடவே இருந்தது. புழுத்த அவன் உடல் விரைவிலேயே அழிந்தது. அவனை சந்திரன் நாயரின் லாட்ஜில் ஒழிப்பது என்ற எனது எண்ணம் நிறைவேறாமலேயே அழிந்துபோனான். ‘சமாதானத்தின் விடுதலை’ என உச்சரித்து அந்தச் சவத்தின் படுகுழியை மூடினார்கள்.

பருவங்கள் மாறிக்கொண்டிருந்தன, கூதிர்காலத்தின் இரவொன்றில் அந்தச் சங்கடங்களை எல்லாம் மறந்திருந்தேன் மகன்.’’

நான் மறுத்தபோது அவன் எந்தச் சிந்தனையுமின்றி நிற்பவனைப்போல, தன் கையிலிருந்து அந்த மொபைலை தூக்கிப் பிடித்து விளையாடினான்; அல்லது அதை அவன் விளையாட்டாக விளையாடினான். ஒற்றை, இரட்டை எண்கள் பற்றிய நம்பிக்கை ஒன்று அவனிடம் இருந்தது. அது சுவாரசியமான எண் விளையாட்டு; அவனைப் பரிசோதித்துக் கொள்வதற்காகவும் சாரல் மழையோ பேருந்துகள் வருகிற நேரத்தைக் கணிப்பதற்காகவும் அவன் முயல்வான். மகன் இந்த நாட்டிலிருந்து, கனம்பொருந்திய மூன்றாம் உலக நாட்டிலிருந்து நான் வெளியேற்றப்படுவேனாம்; அந்த நேரங்களிலெல்லாம் அவனது கண்களிலும் எச்சில் தெறித்த உதடுகளிலும் வன்மம் பிசாசாய் அமரும்.

இறுக்கம் குலையாமல் என்னைக் கூராய்வான். அந்த இறுக்கத்தை இன்றைக்கு வரையும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடிந்ததில்லை மகன். அவன் கண்களில் வெண்மைபோல ஏதோவொன்று அடர்ந்து பரவும். அவன் உருவம் முன்னும்பின்னுமாய் நகர்ந்து கன்னங்கள் உப்பியும் உள்நோக்கி நடுங்குவதைப் போலவும் மாறும். அவனைத் தள்ளினேன்.

“உனக்குப் பைத்தியமா? எங்கே ஓடுகிறாய்?”.

‘‘அவன் பதற்றத்துடன் அன்றிரவு முழுக்க முழித்திருந்திருப்பான். அவனுடன் இரவும் கூடவே விழித்துக்கொண்டிருந்திருக்கும். அப்போது முழுமையாக அறையை விட்டு நீங்கியிருந்தேன்.’’
பெத்தாய்ச்சி சொல்லி முடித்துத் தன் தலையை சிலுப்பிக்கொண்டு மெதுவாக தன் இருக்கையைப் பிடித்தபடி எழுந்து நின்றார். கால்கள் நடுங்க கடந்துபோனார். ”உண்மையில் இப்போது நேரம் என்ன?.”

’இரவில் மணிக்கு அவசியம் இருக்கிறது மகன். ’

நான் புரியாது அந்தக் குடிகாரக் கிழவியை மருண்டு பார்த்தேன்.
கண்களைச் சிமிட்டிச் சிரித்து, மீண்டும் இரண்டு குவளைகளிலும் ஊற்றினார். மூன்றாவது குவளையிலும் அவர் ஊற்றினார்.

சுழன்றுகொண்டிருந்தார். சில வேளைகளில் திடீர்திடீரென்று அறைக்குள் நுழைந்தார். “நான் இதை மறந்துவிட்டேன்” எனச் சிரித்தபடி அறைக் கதைவை அடிக்கடி திறந்தும் மூடிக்கொண்டும் இருந்தார். அறை நீலமாய் ஆகியிருந்தது. தூசு படிந்திருந்த மேசை, நீல ஒளியில் புராதனப் பேரெழில் சிற்பமாய் ஒளிர்ந்தது. அதனுடன் கூடவே பொருத்தமான இருக்கையொன்றும்.

பெத்தாய்ச்சி அதுக்கும் ஒரு கதை சொல்லாமலிருக்க வேண்டும். ‘‘தோடம் பழத்தைப் பிழிந்துகொள்” அவர் எதைஎதையோ அலுமாரிக்கு அடியிலும் கதிரைக்குக் கீழும் கிளறிக்கொண்டிருந்தார். அகப்படவில்லையென்ற புன்னகை. அவர் ப்லோவா கைக்கடிகாரத்தை அவசரஅவசரமாக அணிந்துகொண்டு அருகே வந்தார்.

உடலுக்கு மேலே தலை கனத்தது. என் தலை பெரிய பொதியாக ஆகியிருந்தது.

விசாரணை: 10 : ஹஸார்டகன் தெரு, கைவிடப்பட்ட மாளிகை.

நகரம் எப்போதுமே முழிப்பாய்த்தான் இருக்கிறது. பரபரப்பாக மின்னிமறைகின்றன வாகன வெளிச்சம் பட்டு மனிதர்களின் கண்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. நகரத்துள் அச்சத்துடன் அலைகிற சில மனிதர்கள் மட்டும் கொக்குகளாய் நின்று கிடந்தார்கள். நகரத்தின் ஓட்டத்திற்குத் தேவையில்லாத லும்பன்கள் மட்டுமே அந்த நகரத்தை திரும்பித் திரும்பி ஆர்வத்துடன் பார்த்தார்கள்.

“இவையெல்லாம் தேவையா?”

“ஐயா, விசாரனை என்ற் வந்துவிட்டால் அனைத்தையும் தெரிவிக்க வேண்டுமென்றூம் அப்படித் தெரிவித்தால்தான் நான் குற்றமற்றவன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். அந்தப் பெத்தாய்ச்சிக் கிழவியும் எதற்கும் உதவாத அந்த அசட்டுக் கிழவ்னும் என்னைத் தெருவில் அந்தரிக்க வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். நீங்கள்தான் இப்போது எனது ஆபத்தாந்தவர். நான் கூறுகிறேன் கேளுங்கள்.”
கறுப்பிலிருந்து பழுப்பு நிறமடைந்துவிட்ட தன் முடிகளைக் குறித்து சில குறைபாடுகள் பெத்தாய்ச்சியிடம் எப்போதுமிருக்கும். ஆனால் தன் ஆடைகள் குறித்துத்தான் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டிருந்தார்.

தன்னைப் பற்றிய எவ்விதமான சந்தேகங்களும் மற்றையவர்களுக்கு (குண்டுப் பெண்ணின் குடியிருப்பில் பெத்தாய்ச்சியோடு சேர்த்து 13பெண்கள் இருந்தார்கள். அவர்கள் நகரச் சதுக்கத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிபவர்களாய் இருந்தார்கள்.) ஏற்பட்டு விடக்கூடாதென்பதில் படு அக்கறையுடனிருந்தார். அதற்கு காரணங்கள் சிலது இருந்தன அவரிடம்.

’நான் இங்கேயே இருந்துவிடப் போகிறேன். போலிச் சான்றிதழ்களை உருவாக்கிவிடலாம். என்ன சொல்கிறாய்?’ எனக் கண்களைப் பெத்தாய்ச்சி சிமிட்டியபோதும் எனக்கு எதுவும் சொல்வதற்கிருக்கவில்லை. அந்த இரவில் தேவையில்லாத விருந்தாளியைப்போல் அங்கு அமர்ந்திருந்தேன்.

இருவருக்குமாகச் சேர்த்து பெத்தாய்ச்சிச்சி தேநீரைச் சூடாக்கிக் கொண்டிருந்தார். ஜன்னல்களைத் தாண்டி எப்போதாவது ஒரு சிறு வெளிச்சம் கடந்து போகும். அதைத் தவிர மாநகரத்தில் இதைப் போன்றதொரு அபூர்வமான தொல்லைகள் அற்ற இயல்பான வீதிகள் அரிது. இரவுகளில் போக்கிரிகளைத் அனாதரவானவர்களை, உதிரிகளைத் தேடித்திரிகிற காவலர்களின் வாகனத்தை எங்கள் குடியிறுப்புப் பகுதியின் முன் நிறுத்தியிருப்பார்கள். அவலமான சிரிப்புகள், சன்னதம் வந்தாடும் சில எதிர்ப்புக் குரல்கள், பச்சாதாபத்துடன் ஏறிஇறங்கும் குரல்கள் என்று நிச்சாமத்தில் மட்டும் அந்தத் தெரு குரல்களின் தெருவாகிவிடும் மாயம் அடிக்கடி நிகழ்ந்துகொண்டிருக்கும். இரவுகளில் ஜன்னல்களில் சிவப்பு நீல விளக்கு மின்னும்போது பெத்தாய்ச்சி முற்றாக, ஏறத்தாழ நம்மை விட்டால் அவருக்கு வேறு வழியே இல்லை என்பதுபோல கழிவிரக்கத்தில் மூடுண்டுபோவார்.

அவரின் முகத்திலும் கைகால்களிலும் இருக்கும் பூனை மயிர்கள் குத்தி சிலிர்த்து அவரின் உடல் ஒருமுறை துள்ளலெடுத்து அடங்கும். அந்நேரங்களிலெல்லாம் குடியிருப்புப் பெண்கள் யாராவது அருகே வந்தால் அவரின் உடல் கூச்சமெடுத்து நடுங்க ஆரம்பிக்கும். பதைபதைப்பில் அவர் நீர்முட்டியைத் தேடுவார். அந்தப் பகுதி கட்ட்டப்பட்டதிலிருந்தே மாற்றப்படாத, ஒரு இடத்தைவிட்டு அகற்றப்படாத அதே நீர்முட்டியை அவர் தேடிக்கொண்டிருப்பார். அவரின் மூளை ஒரேடியாக எல்லாவற்றையும் மறந்துபோயிருக்கும். அவரையும் சேர்த்து, உண்மையில். இது மிகையில்லை.

வண்டி இரவுகளில் அங்கு நிற்கும்போது அவரது வாய் முணுமுணுக்கும். அந்த உரையாடலை வேறு ஒன்றின் மூலம் ஆரம்பித்தாலும் அது இறுதியில் காவலர்களிடம் வந்து முடிந்தன. ஆனால் அடர்மழை பொழிகிற நேரங்கள் அவருக்கு மிகுந்த இலகுவான தருணங்கள் போல் தொடர்ந்து அமைந்தன. அப்போது அவர் என்றைக்கும் இருப்பதைப்போலன்றிச் சற்றும் பதற்றமும் இல்லாமல் இருப்பதையும் நீர்க்குடத்தைத் தேடாமலிருப்பதையும் கவனித்திருக்கிறேன்.

வெளிப்பதிவு அகதிப் பெண்கள் பலரும் அங்கு தங்கியிருந்தார்கள். அவர்கள் வெளிநாடுகளிற்குச் செல்வதற்காகக் காத்துக்கொண்டு இருந்தார்கள்; அல்லது அவர்களுக்கு பெருமளவில் மேற்கிலிருந்தும் சிறிய மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் பணம் வந்துகொண்டிருந்தது. பின்பொரு காலத்தில் பிரபலக் குற்றவாளியின் இடமாக அந்தப் பகுதி முத்திரை குத்தப்பட இருக்கிறது.

விசாரணை: 11 : EVK சம்பத் வீதி, தில்லைராஜன்.

நகரின் அதளபாதாள வீதிகளில் அலைந்துகொண்டிருந்தேன். மம்மல் பொழுதுகளில் அந்தத் தெருவில் பாங்கொலி கேட்கும்; ஒரு சூரிய அஸ்தமனத்தை வரவேற்பதைப்போல். மிக ஆழமான அந்த முகத்தில் இரு கண்கள் உறைந்து போயிருக்க, பள்ளியிலிருந்து குல்லாயைக் கழற்றிச் சட்டையில் செருகியபடி அஹமத் அருகில் வந்தான்.

‘‘இன்னிக்கு நா சொல்லி வுட்றே… நீ போவியா?”

முதலில் அவனுக்கு வலியுறுத்த விரும்பினேன். நேசமான அஹமத் நான் வேலைக்குச் செல்வதில்லை; குறிப்பாக இந்த நாசமத்த நகரத்தைவிட்டு வெளியேற வேண்டும். தப்பித்து வெளியேற வேண்டும். ஒரு குளிர் அங்கியோடு மட்டும் மேல் நகரத் தெருக்களில் அலைந்தாலும் பரவாயில்லை. இங்கு இருக்கவே நான் விரும்பவில்லை. அப்படி இருக்கும்போது லூசன்போல் என்னை பணிக்குத் திரும்ப அனுப்புவதில் குறியாக இருக்கிறான்.

விசாரணை: 12 : பண்ட்ரா கிழக்கு இல்லம்

பெத்தாய்ச்சியிடம் நான் உன்னைப்போல் இங்கே தங்கிக்கொண்டிருக்கப்போவதில்லை. நான் இப்போதே தொலிந்துபோவேன் என்று அவரிடம் உருக்கமான குரலில் தெரிவித்துக்கொண்டிருந்தேன். அவர் என் தலையில் சிநேகமாகக் கைகளை வைத்துத் தடவிக்கொடுத்தார். ஏறத்தாழ அந்தத் தொடுதலில் நான் ஒரு குட்டிநாயாக மாறிப்போயிருந்தேன். பெத்தாய்ச்சியின் வசியமான விரல்கள் என்னிடம் சில கதைகளைச் சொல்ல ஆரம்பித்தன.

”குற்றம் நடக்கத் தயாரான மஞ்சள் ஒளிபொருந்திய நாளை எண்ணிப் பார்க்கிறேன். அவன் ஒன்றும் பெரிதாகக் கத்திக் கொண்டிருக்கவில்லை. மிக ஒடுக்கமான அந்தப் பழைய பொருட்கள் வைக்கக்கூடிய அறையில் ஒளிந்துகொண்டிருந்தான். அவனைப் பார்த்தபோது நிதானத்தை இழந்தேன். அவன் உடலை அப்போது பார்த்ததைப்போல் என்றைக்கும் பார்த்ததாக நினைவுகளிலில்லை. ஆனால் அவனின் உடலைச் சுற்றி கதகதப்பான ஒரு சுகந்தம் பரவியிருந்தது. அழுக்கேறிய கண்ணீர் தாண்டியும் அந்தச் சுகந்தம் வியாபிக்கத் தொடங்கியிருந்தது. அப்போதுதான் அந்தத் துயரார்ந்த சம்பவம் நிகழ்ந்தது.

நாங்கள் இருவர் இருந்த அறையில் நான் மட்டுமே தனித்திருந்ததைப்போல், என் கால்களின் கீழ் நிலம் வழுக்கிக் கொண்டிருந்தது. தலையும் உடலும் மாயக் கைகள் தள்ளி விளையாடுவதைப்போல் முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்தன. ஆண்டுக் கணக்கில் தன்னிலையற்று நிற்பதைப்போல் என்னைச் சுற்றி ஒரு அவமான உணர்வும் கெக்கெரிப்புச் சப்தங்களும் எழுந்தன. இப்போது நான் என்றென்றைக்குமாகச் சரிந்தேன். அப்போது எனக்கான துயரமும் கண்ணீரும் சேர்ந்த அந்த அதளபாதாளமும் ஆவெனத் திறந்துகொண்டது.”

வீட்டிற்குத் திரும்பினேன். துயரமும் கருணையும் நிரம்பிய பெத்தாய்ச்சிவின் முகம். வஞ்சிப்பின் கோடுகளும் அதில் பரவிக் கிடந்தன. மெல்லிய விசும்பல் அவரிடம் அடிக்கடி வெளியேறும். ஒரு நடு இரவு; அன்று கடுமையான மழை. மஞ்சள் நிரம்பிய எங்கள் அறை வெறிச்சோடிக் கிடந்தது. பகல் புழுக்கம்; அறையை நிறைத்துக் கிடந்தது. கழுத்தில் வடிந்த வியர்வையுடன் எழுந்து வெறித்தேன். மின்சாரம் போயிருந்தது. மழையே பொழிந்தாலும் எங்கள் அறை குளிராது. உள்ளிருக்கும் சூடு வெளியே போகாது; வெளியிலிருந்தும் எதுவும் வராது.

விசாரணை: 13 : CGO விருந்தினர் மாளிகை பின்புறம்

துக்ககரமான இரவில் பாடும் பெண் அவள் பெத்தாய்ச்சி இல்லை. அந்தப் பெண் குரல் மூன்று கடல்களின் தூரத்தில் இருந்து சன்னமாய் வழிவதைப்போல் இருட்டில் கரையும். அவள் அந்த ராவைப் பழிப்பாள். பாரதூரமானவை இரவுகள் எனச் சாபமிடுவாள். உழைவை ஏற்படுத்தும் பாடலில் அவள் கூறுவாள்: என் மகளே, உன் சிறிய விரல்களைப் பற்றி இழுத்துச் சென்றேன். நீ எண்ணியிருக்கமாட்டாய். நான் உன்னை இல்லாமலாக்குவேன் என்று. ஆனாலும் கடவுளின் சாட்சியாய் நிகழ்ந்தது அதுதான். உடைந்துபோன இதயத்தோடு நான் உன்னைத் தேடினேன். நீ என்றென்றைக்குமாக என்னிடம் இருந்து விலகிப் போவாய் என நான் எண்ணியதே இல்லை மகளே.’’

விசாரணை: 14 : SC – II, A பிரிவு இல்லம்

வீரக்குட்டியாரின் யாரோ கூறிய கதைகளையும் பெத்தாய்ச்சி என்னிடம் மட்டும் கூறிய கதைகளையும் மட்டுமே அதுவரை அறிந்திருந்த எனக்கு வீரக்குட்டியார் சொன்ன பெத்தாய்ச்சியின் கதை ஆர்வத்தை தூண்டியது. மேலும் அவரின் வாயையே நான் பார்த்துக் கிடந்தேன். அவர் சொல்ல ஆரம்பித்தார்: ”அந்த நாளில் அந்த ஊரே படபத்திரகாளிக் கோவிலின் முன்பு அமர்த்தி வைக்கப்பட்டிருந்தது. பதினெட்டிலிருந்து இருபது வயதுக்காரர்கள் தனி லைனில வாங்க என்றபோது தக்காளியரோட மூத்த மகன் விசர் முருகன் ‘89ஆம் ஆண்டு பிறந்தவங்க எங்க நிக்கோனும்’, என்று கடைக்காரியைப் பார்த்து ஒரு இளிப்பு இளித்தான். மூன்றாவது நிமிடம் பனை வடலிகளுக்கிடையில் அவன் செருகப்பட்டுக் கிடந்தான்.

மற்றையவர்கள் எந்த மூச்சுப் பேச்சுமின்றி லைனிலேயே புதைந்து போயிருந்தார்கள். ஊரின் ஏழு பிள்ளைக்காரி வீட்டில் பெத்தாய்ச்சி ஏழாவது பிள்ளை. அவரின் தாய் நான்கு பிள்ளைகளைப் பறி கொடுத்திருந்தார். பெத்தாய்ச்சி கடைக்குட்டியென்று இருந்தார். தெத்திப்பற்கள் தெரிய அவர் சிரித்தால் தாய்க் கிழவிக்கு கனிஞ்சு நெஞ்செல்லாம் பூரிச்சுப் போன மாதிரி இருக்கும்.

பெத்தாய்ச்சிச்சிட்ட இருந்து அவள் காசக் களவெடுத்துப் பிள்ளையளோட சேர்ந்து ஐஸ்பழம் வேண்டிக் குடித்துத் திரிந்தாள்.
தாய்க்கும் பிள்ளையெண்டால் ஒரே கொண்டாட்டம். பிள்ளைக்கு ஐஸ்கிரீமும் சொக்லேட்டும் என்று பாத்துப் பாத்துச் செய்தாள். பிள்ளையின் முடி நன்றாகக் கறுப்பாக வளர வேண்டுமென்று ஒலிவொயிலையும் தேங்காயெண்ணெயையும் ஒன்றாகக் கலந்து பிள்ளையின் தலையில் வைத்துவிடுவாள்.

தாய்க்கிழவிக்கு பெருசா யாரோடயும் தொடர்பில்ல சொந்தக் காரங்கள் என்டு நானும் யாரையும் கேள்விப்படேல. ஆனால் கிழவி ஆரோ ஒரு சின்னப் பெடியோட தொடர்பாம். தாயும் மோளும் பெருசா கதை வார்த்தைகளில்ல. அதுவும் அங்க ஊர்ல வச்சாம். அவன் ஏதோ சிப்பித்திடல் பொடியனாம்.”

இப்போது என் மண்டைக்குள் சிப்பித்திடல் (ஊருக்கு ஒதுக்குப் புறமான தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி) என்ற வார்த்தை கணத்தே கேட்டது.

வீரக்குட்டியார் கதைக்கிறதெல்லாம் ‘ நானும் மனுசன் நீயும் மனுசன் எல்லாரும் மனுசன்தானேயடா?’’. லோ கதையள் கதைக்கிறதெண்டால் இவர அடிக்கிறதுக்கும் ஆளில்லை. விசம். இனிமேல் பெத்தாய்ச்சியைப் பற்றி இந்த வெங்காய மனிசனிடம் கேட்கக் கூடாது என்று முடிவு எடுத்திருந்தேன்.

ரிச்சி ஸ்ரீட்ஸ் தாண்டிப் போயிருந்தேன். அறைக்கு வந்தபோது இருட்டியிருந்தது. முதலில் அறை மாற வேண்டும்; இந்தக் கதைகளைக் கேட்க ஆரம்பித்ததிலிருந்தே கிட்டத்தட்ட ஆறேழு தடவைகள் மாற வேண்டும், மாற வேண்டும் என முடிவெடுத்திருந்தேன்.

விசாரணை: 15 : சீமாட்வார், டெஹ்ரான் சதுக்கம்

பெத்தாய்ச்சிச்சியைப் பற்றி அறிய முயற்சி செய்து ஏறத்தாழ அகழ்வராய்ச்சியின் சாகசத் திகீர் முடிவுகளைத்தான் எதிர்பார்த்தேன். ஆனால் கிழவி கதை சுவாரசியம் அதிகமாகும் பாம்பு வளையாக மாறிவிட்டிருந்தது.

விசாரணை: 16 : ஹபூர் சிங்கி, மூன்றாம் இலக்க வீடு

வீரக்குட்டி சாமானை என்ன மாதிரி சோதிக்கலாம் என யோசித்தேன். இறுதியில் ரூமில் இரண்டு பெரிய ஸ்பீக்கர் பெட்டிகளைப் பொருத்தினேன். அது ஓரளவுக்கு வேலை செய்யவே செய்தன. அந்த அறையில் சோகமான பாடல்களை ஒலிக்க விட்டேன்; நான் நினைத்ததே நடந்தது. இறுதியில் பெத்தாய்ச்சிக் கிழவி சொன்னதால் அந்த ஸ்பீக்கர்களைக் கடன் வாங்கியவனிடமே திருப்பிக் கொடுத்தேன்.

விசாரணை: 17: ஹபூர் சிங்கி, மூன்றாம் இலக்க வீடு

எலிகள் நகருக்குள் புகுந்து அட்டகாசம் செய்திருந்தன. அடுத்த நாள் அதிகாலையில் எலிப் பீதியில் அச்சடிக்கப்பட்டிருந்தன பத்திரிகைகள். ‘எலிகள் அட்டகாசம்-பொதுமக்கள் பீதி‘ திகில் தலைப்புடன் செய்தி வெளியாகியிருந்தது. நகர் முழுக்க பாண்டையான வாசனை எழத் தொடங்கியிருந்தது.

இரவுகள் குளிர்ந்து ஒடுங்கிக் கிடந்தன. பரபரத்துக் கிடந்த நகரம் சிவந்தும் மஞ்சளும் நீலமும் பாரித்து ஒரு விடியாத விநோதமான அமைதியில் துவண்டு கிடந்தது. செய்திப் பேப்பர் விற்கும் ரோஸ் கடைக்காரி மட்டும் அன்றைக்குக் கடையைத் திறந்து வைத்திருந்தாள். அவளும் சிறிது நேரத்தில் கடையை அடைக்கப் போவதாகவும் நகரமே அழியப் போகிறது எனவும் கைகளை ஆட்டி ஆட்டி ஒரு ஒருவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். சிகரட்டுகளும் ஒரு தண்ணீர் போத்தலும் வாங்கிக்கொண்டு அறைக்கு வந்தேன். ஊரே ஓடித்திரிகிறது. ஸ்பீக்கர்ப் பெட்டி உதவியால் வெறிக்குட்டியைத் துரத்தியது துரத்தியதுதான். ஆள் இன்று வரைக்கும் இல்லை.

கட்டாயம் கிழவியைப் போய்ப் பார்க்கத்தான் வேண்டும். ஏற்கனவே கிழவிக்கும் எலிக்கும் ஏழாம் பொருத்தம். பெத்தாய்ச்சிச்சி குசினிப் பைப் அடைத்துவிட்டதென்று அதற்குள் கையைவிட உள் சிக்கிக் கிடந்த எலி ஏதோ பெரிய விசக்கிருமிதான் தன்னைக் கொல்லப் போகுதென்டு நினைச்சு ரெண்டு முன்னங்கையாலையும் பிடிச்சு கொய்யாப்பழத்த கடிச்சிப் பிய்ச்சு இழுக்கிற மாதிரி கொரண்டி இழுத்துவிட்டது.

கிழவி நப்பி; ஆசுப்பத்திரிக்கு போனால் செலவெண்டு இங்கயிருந்து நடந்துபோய் எம்ஜிஆர். ஆசுப்பத்திரிக்கு போயிட்டு வந்த கதையை கிழவியே என்னிடம் ஒருநாள் சொல்லியிருக்கிறார்.

ஒரு முறை அவரிடம் வீரக்குட்டியார் பற்றிப் பேச்செடுத்தபோது ‘‘கேட்டிக்கம்பு பிய்யும் ஐசே உமக்கு. அந்தத் தேவாங்கு பற்றி நீர் என்னட்ட ஒண்டும் சொல்லாதயும். விசரன்…’’ என்று புறுபுறுத்தார்.

யாரைத் திட்டுகிறாரெனத் தெரியாமல் முழித்தது மட்டும்தான் மிச்சம்.

நகரில் எலிகள் ஒடுக்கப்பட்ட பிறகு நகரம் சற்றுப் பரபரப்போடு இயக்க ஆரம்பித்திருந்தது. அமைச்சர்மார்கள் மக்கள் கலங்க வேண்டாம்; எலிகள் மட்டுமல்ல கரப்பான்களையும் ஒழிப்பதற்கான டொனிக் ஒன்றும் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் அதை மனிதர்கள் குடித்தாலே போதுமான கரப்பான்கள் நீங்கள் இருக்கும் பக்கமே நுழையாது என மாறிமாறிச் சேனல்களில் கூவிக் கொண்டிருந்தனர்.

விசாரணை: 18 : நுங்கம்பாக்கம், ராஜ்பவன்

தொப்பிகளையும் தோல்பொருட்களையும் மட்டும் கடிக்கும் எலி குறித்த குறிப்புகளை லிட்டன் எழுதியுள்ளார். 1878இன் லிட்டனின் ‘28நூற்றாண்டுக் கப்பல் பயணக் குறிப்பு’களில் மூன்று வாரங்களுக்கு ஒருமுறை திகதி வாரியாக குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. லிட்டனின் தொப்பியை கடித்த எலியைக் குறித்து அவர் புகார்கூட அளித்திருக்கிறார். தொப்பியை ஒழித்த எலியை ஒழிப்பவர்களுக்கு கம்பனி அரசிலேயே மூன்று தலைமுறைப் பணி உறுதி செய்யப்படும் எனவும் தந்தி அடித்தார். அதன்படி பிரிக்கப்படாத மதுரை ஜில்லாவில் தற்போதிய இராமநாபுரத்திலிருந்து சின்னான் என்கிற விசமுறிவு வைத்தியர் வரவழைக்கப்பட்டார். மூன்றரை அடி உயரமும் கால்களும் கைகளும் வளைந்த அந்த மனிதர் தோம்ஸன் மன்ஹட்டன் கில்லர் என்ற அந்த எலியைக் கொல்ல பாஷாணத்தைத் தயாரித்தார். கடைசியில் சின்னான் டிஎம்கே (சுருக்கப் பெயர்) வைக் கொன்று தன் ஏழு தலைமுறைக்குமான சாபத்தைத் தேடிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. சின்னான் நன்கு கறுத்துத் துண்டும் கோவணமும் மட்டும் கட்டியிருந்த அவர் புளித்த வாடையான ஒரு திரவத்தை அடிக்கடி குடித்துக்கொண்டிருந்ததாகவும் அந்தச் சுரைக்குடுவை மிகுந்த கலை ரசனை மிகுந்ததாகக் காணப்பட்டதாகவும் லிட்டன் குறிப்பிடுகிறார்.

இறுதியில் இறந்த எலியைக் காண்பித்து ‘இதுதான் எம்எச்கே என்று எப்படி நம்புவது?’ எனக் கேட்டு சின்னானைத் துரத்தி விட்டதாகவும் லிட்டன் தெரிவிக்கிறார். மூன்று நாட்கள் எதுவும் உண்ணாமல் இருந்த சின்னான் டிஎம்கேவுக்குத் தயாரித்த நீலப் பாஷானத்தை மென்று தின்று இறந்தார். சுத்தநாகமும் சிறிது காலங்களிலேயே இறந்து போனார். சுத்தநாகம் – சின்னான் தம்பதியினரின் இரு குழுந்தைகள்; ஆணும் பெண்ணும், விஷமுறிவு வைத்தியமும் வரலாற்றின் இருள் மூலைக்குள் கருநாகமெனச் சுருண்டு போனது. இன்றும் ஏழரைக்கோயிலில் சின்னானுக்கு வழிபாடும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மார்கழி மாசமும் நல்ல குளிரான காலையில் சின்னான் இறங்குவதாக ஒரு உபரித் தகவல்: ஏழரைக்கோயில் கல்வெட்டு இந்தியாவின் புகழ்பெற்ற கல்கத்தா அருங்காட்சியகத்தில் இல்லை. அது அடால்ப் ஹிட்லரைப் படையில் இணைத்த மூன்றாம் லுட்வி மன்னனின் நிலச்சுவாந்தார் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மூன்று குறிப்புகள்:

வீரக்குட்டியார் : வீரக்குட்டியார் பன்னிரண்டு வருடம் இந்தியாவில் கல்கத்தாவிலும் சென்னையிலுமாக இருந்துவிட்டு தற்போது மனுஸ்தீவு நலன்புரி முகாமில் தொண்டூழியம் செய்துகொண்டிருக்கிறார்.

பெத்தாய்ச்சி : பாகிஸ்தான் அரசுக்கு நேரடியாக துப்புக் கொடுத்ததாக இந்துமுன்னணியின் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடமிருந்து மூன்று சிம் கார்டுகளும் நோக்கியா உயர்ரகத் தொழிற்நுட்ப செல்போனும், 1200 ரூபாய் ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டது. கிடைத்த மூன்று சிம்மிலும் இருந்த பதினான்கு நபர்களும் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் மூன்று சிம்மிலும் பொதுவாகப் பதிக்கப்பட்டிருந்த இருவருக்கு பெத்தாய்ச்சிவோடு நெருங்கிய தொடர்பிருந்திருந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. குறித்த நபர்கள் கண்காணிப்பில் சிக்கியுள்ளார்கள்.

‘தினத் தந்தி’ 2014 – செப்டம்பர் – 07

* * * * * * * *

Comments are closed.