கே.ஸ்டாலின் கவிதைகள்

[ A+ ] /[ A- ]

images

#

அப்பாவை உணர்தல்.

மயங்கிச் சரியும் இவ்வந்தி
சிறுவனாக அப்பாவிற்கென
சிகரெட் வாங்கி வந்த
மாலையை நினைவூட்டுகிறது.
வெண்தாளில் சுற்றப்பட்ட
புகையிலைச் சுருள்களென
இன்றைய மதியம்
இம்மாலைக்குள் பொதிகிறது.
இன்னும் சற்று என்னை
நெருங்கி வருவீர்களெனில்
அன்றென் பிஞ்சு உள்ளங்கையின் வியர்வை
கசகசப்பில் ஊறிய புகையிலையின் கார நெடியை
நீங்கள் உணரக்கூடும்.
இதோ தலைக்கு மேலே
நகர்ந்து கொண்டிருக்கும்
இவ்வெண் மேகம்
அப்பாவின் தொண்டைவழி
பிரசவமானதாயிருக்கலாம்.
அப்பாவிற்கென சிகெரெட்டும்
மதுப்புட்டிகளும் வாங்கி வர
சபிக்கப்பட்ட சிறுவர்கள் வழியே
இன்றென் தந்தையை உணர்கிறேன்.

#

நித்தியமானவர்கள்
ஆறு ரன்களுக்காக
பந்தை மேலே தூக்கி பாண்ட்யா
வான் நோக்கும்
அச்சிறு கணத்தில்
தொலைக்காட்சியின் திரையில்
தோன்றி மறைவது
இளம் வயதில் பலா மரமொன்றில்
தூக்கிட்டு இறந்த
எங்கள் குழுவின் கஜேந்திரன்.

நேர் வகிடு முடிந்து
பின்னல் ஆரம்பிக்கும்
சரியான இடைவெளியில்
ஒற்றை ரோஜாவை சூடியிருக்கும்
முன் இருக்கை பெண்மணி
திரும்பி முகம் காட்டாதவரை
பிரசவத்தின்போது இறந்து போன
எனது அத்தையேதான்.

அந்த வங்கியின் பணம்செலுத்தும்
அறை முன்பு கை நுழைக்கும்
சிறிய கம்பி சட்டகத்தின் வழியே
அவ்வப்போது குனிந்து
வாடிக்கையாளர்களுக்கு
பதிலுரைக்கும் அந்த யுவதிக்கு
அச்சு அசல் சில்க் ஸ்மிதாவின் கண்கள்.

உறவினர் வீடுகளில்
தோசைக்கு ரசம் ஊற்றி
சாப்பிடும் அனைவருமே
பால் பேதமின்றி
விபத்தில் இறந்த
எனது சகோதரனே.

கூட்டத்தினிடையில்
“மாமோய்…நீ எங்க இருக்க”
என்ற அழைப்பொலியுடன்
அலறும் தொலைபேசிகளை எடுக்க
தலையில் சுமந்திருக்கும் செங்கற்களை
அப்படியே போட்டுவிட்டு
தொலைவிலிருக்கும்
சட்டைப்பையை நோக்கி ஓடி வருவது எங்கள் வீட்டில்
சித்தாளாயிருந்து
சென்ற மாதம் சிதையேறிய
முருகனேதான்.

இறந்தவர்கள் எல்லோரும்
இருந்து கொண்டேதான்
இருக்கிறார்கள்
எந்நேரமும் யார் வழியாகவேனும்
வெளிப்பட்டுவிடக்கூடிய
சாத்தியங்களுடன்.

•••
இந்நள்ளிரவில்
சோடியம் விளக்கொளியில்
தடித்த கம்பியொன்றை
சிறு சிறு கம்பிகளால்
இணைத்து
கட்டிக்கொண்டிருக்கிறான்
மேம்பாலத்தின்
கட்டிடத்தொழிலாளி.
பின்னாளில்
விழித்த இவனது இரவுகளை
நசுக்கி விரையும்
சொகுசுப் பேருந்தின்
நடு இருக்கையில்
இளையராஜாவின்
மென்னிசைக்கு
அன்னையின் மடியில்
ஆழ்ந்துறங்கும்
சிறு குழந்தையின்
மூடிய இமைகளில்
உறைந்திருக்கும்
இவனது இழந்த
இன்றைய உறக்கம்.

#

வாழ்வெனும் ஈசல்

மழைக்கால முன்னிரவின்
பேருந்து நிலைய காத்திருப்பில் காணக்கிடைத்தது
மின் விளக்குகளை சூழும்
ஈசல் கூட்டங்களை
பக்கத்தில் புகைத்துக் கொண்டிருப்பவன் பொருட்டில்லையென
பொரியுடன் தாத்தா என்றோ கலந்து கொடுத்த
வறுத்த ஈசலின் மணம்
நாசி நிறைத்தது
ஒற்றை தீப்பந்தத்தால் கவரப்பட்டு எங்களுக்கு உணவாகிப்போனதும்
இதோ இங்கே வாகனங்களின் முகப்பு விளக்கில் மோதி நசுங்கி
மரித்துக்கொண்டிருக்கும் ஈசலும் ஒரே ஈசல் அல்ல
மனம் இன்னமும் ஈசல் குழியில் புதையுண்டிருக்க
அதன் இறகினும் மெல்லிய
இதயம் கொண்டு நகர வாழ்வெனும் காததூரத்தை கடக்க எத்தனிக்கும்
நானும் ஒரே நானல்ல
என்பதைப்போல.

•••

Comments are closed.