கொங்கு வட்டாரக் கவிதைகள்-அண்மைக் காலப் போக்குகள். / சென்னிமலைதண்டபாணி

[ A+ ] /[ A- ]

images (5)

கொங்கு என்ற சொல்லுக்கு, தேன், பூந்தாது, காடு,நறுமணம், பொன் என்றெல்லாம் பல பொருள்கள் உண்டு. கொங்கு நாடு என்பது நீலகிரி,கோவை,ஈரோடு, சேலம் மாவட்டங்களும் திண்டுக்கள், கரூர் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது. இந்த எல்லைவரையரை காலத்திற்கேற்ப மாறக்கூடியது. தமிழ்க் கவிதையுலகில் கொங்கு வட்டாரக் கவிஞர்களின் பங்களிப்பு என்பது அர்த்தம் செறிந்தது. ஆழமானது. கொங்குத் தமிழே கவிதை மொழிதான். மரபின் வேர்கள் ஆழ வேரோடிய கொங்கு மண்ணில்தான் புதுமைகளின் அத்தனை கிளைகளும் பூத்தன என்றால் மிகையன்று. தேசியக் கவிஞர் நாமக்கல் கவிஞர், திராவிட இயக்கக் கவிஞர்கள் புலவர் குழந்தை, உடுமலைநாராயண கவி, பொதுவுடைமைக் கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம், காந்தியக் கவிஞர் காந்திதாசன் என்று பல திசைகளிலும் எமது முன்னோடிக் கவிஞர்களின் முகங்களே தெரிகின்றன. கொங்குவட்டாரக் கவிதைகளின் அண்மைக்கால நோக்கையும் போக்கையும் அளவிடுவதற்கும் ஆழம் காண்பதற்கும் ஒரு பறவைப் பார்வை பார்ப்பதே ஏற்புடையதாக இருக்கும்.

வாழும் காலத்தில் ஒரு கவிஞன் மறக்கடிக்கப்பட்டாலும் இருட்டடிக்கப் பட்டாலும் பின்னொரு காலத்தில் மீண்டெழுவான் என்பதற்கு

“கூட்டி யெறியடா கூட்டியெறி—கூடும்
குப்பைகூ ளங்களைக் கூட்டியெறி
நாட்டு நலந்தனில் நாட்டமிலாச்சுய
நாயகக் குப்பையைக் கூட்டியெறி
வீட்டில் வெறுமை விதிப்பய னேயெனும்
வேதியக் குப்பையைக் கூட்டியெறி
கூட்டி யெறிந்திடக் கூசிடின் நாடொரு
குப்பை மேடாய் மாறிடும் கூட்டியெறி..”
என்று பாடிச்சென்ற கொங்குக் கவிஞர் வெள்ளியங்காட்டானே காலத்தின் சாட்சியாக நிற்கிறார். மகாகவி பாரதி “காசிப்பட்டுப் போல பாட்டு நெய்ய வேண்டும். அல்லது உறுதியான உழவனுக்கு வேண்டிய கச்சை வேஷ்டி போல நெய்ய வேண்டும். “மல்“ நெசவு கூடாது. “மஸ்லின் நீடித்து நிற்காது. பாட்டிலே வலிமை, தெளிவு, மேன்மை,ஆழம், நேர்மை இத்தனையும் இருக்க வேண்டும். இதற்கு மேலே நல்ல வர்ணம் சேர்ந்தால் குற்றமில்லை. சேராமலிருந்தால் விசேஷம்” என்றார். அப்படிப்பட்ட கவிதைகளை இன்று வரை இந்தக் கொங்குமண் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

பாவேந்தருக்குப் பின் எண்சீர் விருத்தங்களை எழுதி எழதி அழுது தீர்த்த மரபுக் கவிதையைப் புதுக்கவிதை வெள்ளம் புறமொதுக்கிப் பாய்ந்தபோது, திடுக்கிட்டுப் போன திசைகள் கொங்கு மண்ணைத்தான் கூர்ந்து கவனித்தன. ஏனெனில் வானம்பாடிக் கவிஞர்கள் சிறகு விரித்தது இந்த மண்ணில் இருந்துதான். சமுதாயச் சிந்தனைகளை முன்னெடுத்து உலகப் பார்வையோடு எழுதிய கவிஞர்கள், தமிழ்க்கவிதைக்குள் பல புதிய முயற்சிகளை முன்னெடுத்து அதைப் பொதுமக்கள் தளத்திற்குக் கொண்டுவந்ததில் பெரும்பங்கு வகித்தார்கள். அதே நேரத்தில் எழுத்து, கசடதபற வழிவந்த கவிஞர்களும் தங்கள் பங்களிப்பைத் தரத் தவறவில்லை.

சி.மணி

சி.மணி

நவீன கவிதையின் முன்னோடிகளான நடை.சி.மணி, மீட்சி பிரம்மராஜன், சுகுமாரன் போன்றவர்களின் படைப்பாளுமையும் இம்மண்ணில் இருந்துதான் எழுந்தது. அவரவர்க்குக் கிட்டிய வாழ்வியல் அனுபவங்களை அவரவர் மொழியில் கவிதையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். புதுக்கவிதையில் பெரும் பாய்ச்சலை நடத்திவிட்டு அவரவர் திசையில் பறக்கும் கொங்கு வட்டாரக் கவிஞர்களின் கவிதை ஆளுமையைக் காலம் தன் நினைவேட்டில் பத்திரப்படுத்திவைக்கும் என்பது நிச்சயம்.

வானம்பாடிக் கவிதை இயக்கத்தின் கவிஞர்கள்தான் ஏறக்குறைய முப்பதாண்டுகளுக்குப்பின் கவிதைக்காக சாகித்ய அகாதமி விருதுகளைப் பெற்றவர்கள். கொங்கு மண்ணின் கவிஞர்களான சிற்பியின் “ஒரு கிராமத்து நதி”யின் ஓட்டமும் ஈரோடு தமிழன்பனின் “வணக்கம் வள்ளுவ..” என்கிற வள்ளுவத்தின் மீது அடுக்குகிற சிந்தனை அடுக்குகளும் புவியரசின் கவிதைக் ”கையொப்பமும்” விருதுகளை அள்ளிக் கொண்டு வந்தன என்பதும் சிற்பி, புவியரசு,சேலம் தமிழ்நாடன் ஆகியோர் மொழிபெயர்ப்புக்கு விருதுகளை பெற்றதும் வேறு எந்தக் கவிதை இயக்கமும் இந்திய இலக்கிய வரலாற்றில் பெறவில்லை என்பது பதிவுசெய்வதற்குரியது.

திறனாய்வாளர் அறிஞர் ஞானி வானம்பாடி இயக்கம் ஒரு பாய்ச்சல் என்று குறிப்பிடுகிறார்.“கலீல் ஜிப்ரானுடைய மொழிபெயர்ப்பு, நா.காமராசன்,தமிழன்பன் போன்றவர்களின் கவிதை, தமிழவன் மற்றும் சிலரால் தொகுக்கப்பட்ட “ஆக்டோபசும் நீர்ப்பூக்களும்“ இவைகள் எல்லாம் வானம்பாடிக்கு முன்னோடி என்று சொல்ல வேண்டும்.இதிலிருந்து வானம்பாடி இயக்கம் ஒரு பாய்ச்சல் என்று தான் சொல்ல முடியும்” என்கிற கருத்தை முன்வைக்கிற அதே வேளையில் “ஆரம்பத்தில் ரொம்பத் தீவிரமான ஒரு இயக்கமாக வானம்பாடி இருந்தது. பின்னால், மழை எல்லாம் கொட்டித் தீர்ந்தபிறகு ஒரு தூறல் மாதிரிப் போனது என்று நான் நினைக்கிறேன்” என்ற கருத்தையும் முன்வைக்கிறார்.

உற்று நோக்கிக் கவனித்தால் சமூக அவலங்களுக்கு எதிரான அறச்சீற்றம் கவிஞர்களுக்கு இருந்ததும் ஒரு மாற்றுத் தீர்வை முன்னெடுக்க வேண்டும் என்ற உந்துதல் அவர்களை ஒன்றிணைத்தது என்பதும் கண்கூடு. 1970களில் முல்லை ஆதவன், அக்கினிபுத்திரன்,இளமுருகு, சிற்பி,புவியரசு, சக்திக்கனல், சிதம்பரநாதன், தேனரசன்,ஆதி,ஞானி, கங்கைகொண்டான்,சேலம்.தமிழ்நாடன் போன்ற வானம்பாடிக் கவிஞர்களின் பங்களிப்பு இன்றும் பேசப்படுவதாகவே இருக்கின்றது

அறிவியல் உண்மைகளை அழகியல் அனுபவமாக மாற்றி இயற்கையின் இயக்கத்தைப் பாடுபொருளாக்கி, அறிவியல் பார்வையின் வழியே சமூக விமர்சனத்தை முன்னெடுத்தவர் கவிஞர் இளமுருகு. அவருடைய கவிதை ஒன்றைச் சுட்டிக்காட்டுவது தகும் என்றெண்ணுகிறேன். “சாலைக்கடவுள்” என்ற கவிதையில் தன் முற்போக்குப் பார்வையை முன்வைக்கிறார்.

“சாலைக் கடவுள்களே— நடுச்
சாலைக் கடவுள்களே” என்று தொடங்கி
“மாதா கோவிலாய் மசூதித் தளமாய்
மாரியாய் காளியாய் மாதவன் கோயிலாய்
எங்கோ மூலையில் இருந்த நீங்கள்
எங்கள் வழிகளில் ஏன் முளைக்கின்றீர்?” என்ற வினாவை முன்வைத்து
“இன்று
சுயநலக் கைகளின் கேடயம் நீங்கள்
வஞ்சகர் மார்புக் கவசம் நீங்கள்
ஊரை விழுங்கும் மூர்க்க முதலைகள்
உறங்கும் ஆழ்ந்த அகழிகள் நீங்கள்”
என்ற உண்மையைச் சொல்கிறார்.

என்றாலும்
“ஆயிரம் யானைப் பலத்தொடு நிற்கும்
நவீன விஞ்ஞான வாகன மேறி
நாளை நாங்கள் பயணம் தொடர்கையில்
நீங்கள் எங்கள் கால்களில் சிக்கி
நிச்சயம் நிச்சயம் அழியப் போகிறீர்”
என்று பாடுகிறார். ஆனால் இந்தக் கனவு நனவாகுமா என்பதை யாரறிவார்? தன் 86 வயதில் தன் கவிதைகளைத் தொகுப்பாக்கியிருக்கிறார் என்கிற போதே இவருக்குள் இருக்கும் கவிதையின் வீச்சை விளங்கிக் கொள்ள முடிகிறது.

வானம்பாடிக் கவிஞர்கள் பலரின் கவிதைகளில் சமூகக்கோபம் வார்த்தைகளைக் கொண்டு வந்து கொட்டிவிடுகிறது. அதுவே அவர்களில் பலருக்கு பலவீனமாகவும் அமைந்து விடுகிறது.

இன்றைய காலத்தில் கவிதையின் நோக்கும் போக்கும் பெருமளவு மாறிவிட்டது. வானம்பாடிக் கவிஞர்களின் கவிதையோட்டத்திலிருந்து விலகி பல்வேறு தளங்களில் கவிதையும் கவிஞர்களும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“சொற்கள்
மனிதனை நாடுகடத்துமோ?
சொந்தமண்ணில் அவனை அயலவன்
ஆக்கிவிடுமோ?
என் தாய்மொழியின் இடத்தைக் கைப்பற்றி
அதை வெளியேற்றி விட்டதென்ன கொடுமை?(திசைகடக்கும் சிறகுகள் பக் 43) என்று தமிழன்பன் கொதிப்பதோடு உலகலாவிய கவிதையைப் பார்வையை “திசை கடக்கும் சிறகுகள்” தொகுப்பிலும்

“பகல்
வந்து போனதற்கு
நட்சத்திரங்கள் அடையாளம்
இரவு
வந்து போனதற்கு
விடியலே அடையாளம்
நீ
வந்து போனதற்கு
என்ன அடையாளம்?” என்றும்

“வாழ்க்கையில் இல்லை
கவிதையின் இயக்கம்
கவிதையின் கழிவிலா
வாழ்க்கை இயக்கம்?” (மாற்று மனிதம்நூல் )என்றும் கேட்கிற பொழுது அறத்தை முற்றாகத் தொலைத்துவிட்ட ஒரு காலகட்டத்தில் வாழும் நமக்கு இக் கவிதைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்ற கேள்வி எழுவதைத் தடுக்கமுடியவில்லை. இன்னும் ஹைகூ, சென்ரியு. லிமரைக்கூ, கஜல் என்று பலவகைகளிலும் இவரின் பயணம் விரிந்து கொண்டே போகிறது. தமிழில் முதல் சென்ரியு தொகுப்பான “ஒரு வண்டி சென்ரியு” முதல் லிமரைக்கூப் படைப்பான “சென்னிமலை கிளியோபாத்ராக்கள்” முதன்முதல் வினாக்களாலேயே படைக்கப்பட்ட கவிதை நூல் ”கனாக்காணும் வினாக்கள்” புதுக்கவிதையில் முதல் பயண நூலாக “உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன் வால்ட்விட்மன்”,தமிழில் முதல் பேரத்தமிழ்- கவின் குறுநூறு, மரபுவழி முன்னை இலக்கியம் குறித்த முதல் புதுக்கவிதை நூல் “வணக்கம் வள்ளுவ..” என்று கவிதையில் புதுப்புதுத் திசைகளின் கதவைத் திறந்து வைத்தவர் இந்தக் கொங்குமண்ணின் கவிஞர் ஈரோடு. தமிழன்பன் என்பது குறிக்கப்பட வேண்டியது.

சிற்பியின் “பூஜ்யங்களின் சங்கிலி” நமக்குப் பல்வேறு தத்துவ தரிசனங்களைத் தருகிறது. எனினும்

“உதிராத பூ வேண்டும் குருவே”
“சீடா..அப்படியானால்
முதிராமல் இரு” என்றும்

“உலகத் தொழிலாளிகளை
ஒன்றுபடச் சொன்ன மே மாதத்தில்
தனித்தனி ஊர்வலம்”
என்றும்
“யானைக்குப் பயந்தவன்
கண்டுபிடித்த
கடவுள் அல்லவா
விநாயகன்?”(கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை) என்றும் சொல்லிக் கொண்டே வெவ்வேறு தளங்களுக்குள் சிறகு விரிக்கிறார்.

நம் காலத்தின் மாறத் துயரம் ஈழத்தில் நடந்த கொடூரத்தைத் தன் தனித்த மொழிநடையில் கவிதையாக்குகிறார் முல்லை ஆதவன்.

“வந்தார்கள்..அடித்தார்கள்
அடிக்க விரும்பினோம்.அடித்தோம் என்றார்கள்
வநதார்கள் எரித்தார்கள்
எரிக்க விரும்பினோம்..எரித்தோம் என்றார்கள்.
வந்தார்கள் அழித்தார்கள்
அழி்க்க விரும்பினோம்.. அழித்தோம் என்றார்கள்
வந்தார்கள் கொன்றார்கள்
கொல்ல விரும்பினோம்..கொன்றோம் என்றார்கள்
அடிபட்டோம்..எரிபட்டோம்..அழிபட்டோம்
கொல்லப்பட்டோம்.
இன்னும் மிச்சம் என்ன இருக்கிறது?
கொல்லப்பட்ட பின்னும் வாழ்கிறோம்.” (யாருமில்லை என்றான போது பக் 55).

இந்தக் கவிதை ஈழத்தின் துயரம் தோய்ந்த வரலாற்றை மட்டுமன்றி அகதிகளாய் அலைந்து திரியும் யாவருக்கும் பொருந்தக் கூடியதுதான் என்பதை

“எந்த நாடானால் என்ன எந்த மொழியானால் என்ன
எந்த உணவானால் என்ன எந்த உறவானால் என்ன
எனக்கான அசைதலை அறுத்தபின்?”(பக் 51)

என்ற கேள்வியில் கிளர்ந்து எழுகிறது. நாகரிகம் மிக்க சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோமா என்கிற கேள்வி நம்மைக் குடைந்தெடுக்கிறது. தமிழில் இந்தக் கவிதைத் தொகுப்பி்ன் நடை தனித்துவமிக்கதாக விளங்குகிறது. ஆன்மிகத்தின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களை (பசித்த சிந்தனை 31)“காஞ்சி நகர்க் காட்சி“ என்ற கவிதையில்

“ஜாலிலோ ஜிம்கானா“ என்கிற தலைப்பில்
அர்ச்சகர் அரங்கேற்றிய
அந்தரங்க லீலை பார்த்து
ஆனந்தப் பரவசமடைந்த
ஆண்டவர் அவசரமாய்
அம்மன் கோயிலுக்கோடினார்
ஆலயம் காலி
அய்யருக்கு ஜாலி.
(பசித்த சிந்தனை 126)

என்கிறார் புவியரசு.

கவிஞன் காலத்தின் கண்ணாடி. சமுதாயத்தின் மனசாட்சி. அவன் குரல் என்பது அவனுடைய குரலன்று. காலத்தின் குரல். மக்களின் குரல். இன்றைக்கு முற்போக்குச் சிந்தனைகளை முன்னெடுக்கும் படைப்பாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் நசுக்கப்படுவதையும் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். கருத்துக்களை எதிர்கொள்ள முடியாதவர்கள் வன்முறையைக் கைகளில் எடுக்கிறார்கள். கோவிந்த்பன்சாரே, நரேந்திர தபோல்கர், எம்.எம். கல்புர்கி, கவுரி லங்கேஷ் என்று பலரைக் காவுகொண்டு விட்டார்கள்.இப்படிப்பட்டவர்களுக்கு எத்தனை முகங்கள் என்பது எவருக்குத் தெரியும்? கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிப்பதற்குப் புழுத்துக் கிடக்கும் அழுக்குச் சிந்தனையாளர்கள் எப்படிப்பட்ட தந்திரங்களையெல்லாம் கைக்கொள்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆதிக்கச் சக்திகளோடு மோதமுடியாமல் மவுனத்தில் உறைந்து போயிருந்த பெருமாள் முருகனின் சமீபத்திய கவிதை “கட்டைவிரல்“ தன்நிலையைக் குறிப்பதாக அமைகிறது.

“வெட்டப்பட்ட
கட்டைவிரலை
ஒட்டிக்கொள்ளக்
கடவுள் அனுமதித்துவிட்டார்.
கடவுளின் பேச்சுக்கு
மறுபேச்சேது.
ஒட்டிக்கொள்கிறேன்.
இனி
என் கட்டைவிரல்
கட்டைவிரல் அல்ல..
ஒட்டுவிரல் (மணல்வீடு இதழ் 27 டிசம்பர் 2016)

ஒவ்வொன்றிற்கும் ஒரு சராசரி மனிதன் எப்படி நீதிமன்றத்தைத் தேடி ஓடிக்கொண்டிருக்க முடியும்?. நீதிக்குத் தலைவணங்குகிற மனிதர்களுக்கிடையிலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.? கவிதை அவரது ஆழ்ந்த மனவேதனையைக் கொட்டித் தீர்க்கிறது.

சக மனிதனுக்கு நேர்கிற துன்பத்துக்குத் தோள்கொடுக்காமல் ஒரு படைப்பாளியால் எப்படி இருக்க முடியும்?. இந்த ஆண்டு மருத்துவம் படிக்க விரும்பிய நம் மாணவச் செல்வங்களைக் கலங்கடித்தது தேசியத் தகுதியறி நுழைவுத் தேர்வு என்கிற ”நீட்” தேர்வுதான் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை. கல்வியாளர்கள் அனைவருக்கும் தெரியும். எத்தனை வகையான பாடத்திட்டங்கள் நாடுமுழுவதும் இருக்கிறது என்பது. அப்படியிருக்கையில் இப்படிப்பட்ட ஒரு தேர்வு தேவையா என்பது கேள்விக்குறியாகத் தொக்கியே நிற்கிறது. அவற்றைச் சரிப்படுத்திவிட்டுத் தேர்வைவைப்பதுதானே சரியான வழிமுறை. அந்த அறிவிப்பு வெளிவந்த உடனே “என்ன தேசமடா இது” என்ற கவிதையை எழுதினேன். அது கவிஞனின் குரல் என்பதைவிடவும் எளிய மக்களி்ன் குரல் என்பதே பொருந்தும் .(.“ என்ன தேசமடா இது?” என்கிற கவிதை( ஜனவரி—மார்ச்2017 காவ்யா தமிழ் இதழ்)

படித்துப் படித்துப்
பொசுங்கிய இரவுகளின்
முகத்தில் கலவரம்.
உறக்கத்திலும்
பகலைக் கரந்து கரந்து
பாடங்களில் மேய்ந்த
கண்களில் படர்கிறது
படபடப்பு.
என்ன ஆகுமோ
நம் எதிர்காலம்?
நீதி தேவதையின்
தராசில்
ஊசலாடுகிறது
உயிர்காக்கத் துடிப்பவனின்
உயிர்.
அழுத்தப்பட்டுக் கிடப்பவன்
எழக்கூடாது என்பதற்காகவே
இப்படி ஓர்
வலைவிரிப்பா?
இதுவரை எழுதியதெல்லாம்
தேர்வில்லையா?
மனங்கனக்க வாங்கிய
மதிப்பெண்கள் எல்லாம்
மழையில் எழுதிய
எழுத்துக்களா?
இன்னுமொரு
தேர்வில்தான்
அறியமுடியும் தகுதியென்றால்
எதற்கிந்தப்
பாழாய்ப்போன
பள்ளிக்கூடங்கள்..
பாடத்திட்டங்கள்..?
ஒரே தேசத்திற்குள்
விளக்குமாறுக் குச்சிகளாய்
வெவ்வேறு
பாடத்திட்டங்கள்..
இதில்
எந்தக்குச்சி நன்றாய்க்
கூட்டும் என்பதற்கா
இனியுமொரு தேர்வு?
இங்கிருப்பவன் படிக்க
எங்கிருப்பவனோ
நம்மை
எடைபோட்டுப் பார்ப்பது
என்ன நியாயம்?
சிதறிக் கிடக்கும்
செங்கற்களாய்
அங்கங்கு அங்கங்கு
அவனவனுக்கு
ஒரு பாடத்திட்டம்.
இதில்
ஒற்றைக் செங்கல்லில்
இங்கிருப்பவனுக்குக்
கல்லறை கட்டக்
காத்துக் கிடப்பவர்களை
எந்தத்தராசில் வைத்து
எடைபோட?
புதிய வெளிச்சத்தைக்
மருத்துவத்துக்குள்
புகுத்தப் போகிறார்களாம்..
இவர்களுக்கு
யார் முதலில்
வைத்தியம் பார்ப்பது?
பெற்றவர்களின் கனவுகளைப்
பிய்த்தெறியத் துடிக்கும்
இவர்களைக்
கற்றவர்கள் என்று
எந்தக் கழுதை ஏற்கும்?
சுரண்டிச் சுரண்டியே
நாட்டைச்
சுடுகாட்டுக்கு அனுப்பிய
பேர்வழிகள்
மருத்துவக் கல்விக்கு
மதிப்பீடு செய்கிறார்களாம்.
கொழுத்த பெருச்சாளிகளிடம்
கல்வியைக்
கலவிக்கு அனுப்பிய பேர்வழிகள்
மவுனமாய்
நமுட்டுச் சிரிப்பு
சிரிக்கிறார்கள்.
புற்றீசல்கள் போல்
இனிப் புறப்படலாம்
பயிற்சிக் கூடங்கள்.
சீமான்களின் பிள்ளைகள்
இனி
மருத்தவராக
மறுபிறப்பெடுக்கலாம்..
ஏதமில்லா ஏழைக்குடிகளும்
நாள்களை நகர்த்தும்
நடுத்தர வர்க்கமும்
நோயாளிகளாக
நிற்கலாம் வரிசையில்.
நல்ல தேசமடா இது..
நல்ல கல்வியடா இது..

இந்தக் கவிதையில் எதிரொலித்த துயரம் மாணவி “அனிதா” மரணத்தில் பொங்கி வழிந்தது. அந்த ஏழைத் தந்தையின் குரலாகவும் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவக் கல்வி கனவாகப் போய்விட்டதையும் கண்டு கலங்கி நிற்கும் பெற்றோர்களின் குரலாகவும் “நியாயந்தானா..நீதிமாரே..” என்ற கவிதை எழுந்தது.

“நீதிமாரே..நீதிமாரே
நியாயந் தானா நீதிமாரே..

ராத்திரிப் பகலாப் படிச்ச புள்ள
ராவும் பகலும் தூக்கம் இல்ல
காத்திருந்தோமே கனவாச் போச்சு
கல்வி இங்கே கடைச்சரக்காச்சு..

நீதிமாரே நீதிமாரே
நியாயந் தானா நீதிமாரே.

கூழைக் குடிச்சுப் படிக்க வச்சோம்
கும்பி கருகிப் படிக்க வச்சோம்
ஏழை வயிறு எரியுது சாமி
என்ன நீதி? தாங்குமா பூமி?

நீதிமாரே நீதிமாரே
நியாயந்தானா நீதிமாரே.

அரசாங்க நடத்துற பள்ளியில் படிச்சு
டாக்டரு ஆவான்னு மனசுல நினைச்சு
இரவும் பகலுமா நாங்க ஒழைச்சு
இப்படிப் போட்டீங்க நாமத்தைக் கொழைச்சு

நீதிமாரே நீதிமாரே
நியாயந்தானா நீதிமாரே.

என்னமோ பெரிசா அளந்தாங்க அளப்பு
எல்லாமே அவங்க பொழைக்கிற பொழப்பு
சொன்னாங்க என்னமோ “நீட்டு”ன்னு ஒன்ன
சொல்லாமப் புடுங்கினீங்க எங்களோட கண்ண

நீதிமாரே நீதிமாரே
நியாயந்தானா நீதிமாரே

ஒங்க புள்ளைக படிக்கிற .இஸ்கூலு
ஒசந்தவங்க படிக்கிற இஸ்கூலு
எங்க கொழந்தைக படிச்சது எல்லாம்
இளிச்ச வாயக் கவர்மன்டு இஸ்கூலு.

சட்ட விட்டம் தெரியாது சாமி
சட்டுனு கோபம் வந்துடும் சாமி
கெட்ட குடியைக் கெடுத்துப் போட்டீக
கேக்க ஆளில்லைன்னு எழுதிப் போட்டீக..

இத்தனை காலம் எங்களுக்காக
எத்தனை பேரு செத்தாங்க சாமி
அத்தனை ஒழைப்பையும் அடக்கப் பாத்தா
அழியற காலம் வந்துடுஞ் சாமி

வெங்காயத் தீர்ப்பை உரிச்சுப் பாத்தா
விளக்கெண்ணெய்ப் பேச்சா இருக்குதே ஆத்தா
ஒங்கப்பன் என்ன படிச்சா கிழிச்சான்
எங்கப்பன் முதுகுல ஏறி முழிச்சான்.

பணத்தைக் கொட்டி வாரி எறைச்சுப்
பாடம் தனியே படிச்சு முடிச்சு
எடத்தைப் புடிச்சா சரியாப் போச்சா?
சமூக நீதி செத்துப் போச்சா?

நீதிமாரே நீதிமாரே
நியாயந்தானா நீதிமாரே.

இந்தக் கவிதை மாண்பமை நீதியரசர்களையோ நீதிமன்றங்களையோ விமர்சிப்பதாகப் பொருள்கொள்ளக் கூடாது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடும் எளிய மனங்களின் வேதனைக் குரலாகவே கருத வேண்டும். இப்படிப்பட்ட சமூக நிகழ்வுகளையெல்லாம் கவிமனம் கவிதையாக்காமல் இருக்க முடியாது

மிக ஆழமான அர்த்தச் செறிவைக் கொண்டவை உருது கஜல் கவிதைகள். குறியீடுகள் ஆழ்ந்த பொருள் கொண்டவையாக விளங்கக்கூடியவை. இதுவரை தமிழில் மூன்று பேர்தான் எழுதியிருக்கிறார்கள். புதுக்கவிதையில் கஜலின் புறவடிவத்தை உதிர்த்துவிட்டு எழுதியவர் அப்துல்ரகுமான். மின்மினிகளால் ஒரு கடிதம், ரகசியப்பூ என்ற இரண்டு தொகுதிகளும் புதுக்கவிதையில் எழுதப்பட்ட கஜல் கவிதைகள். பின் கஜலின் புறவடிவத்தையும் ஏற்றுக்கொண்டு “கஜல் பிறைகள்” என்று எழுதியவர் தமிழன்பன். அதன்பின் முழுக்க முழுக்க உருது மரபை ஒட்டி சென்னிமலைதண்டபாணி எழுதியதுதான் “உனக்காக உதிர்ந்த கஜல்கள்” என்ற கவிதைகள். இன்று கஜல் கவிதைகள் காதல் என்கிற உணர்வைத் தாண்டி ஆன்மிக உணர்வுநிலை தாண்டி, எல்லாப் பாடுபொருள்களையும் ஏற்றுக் கொள்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே கஜல் கவிதையை மரபிலக்கணத்தில் தமிழுக்குக் கொண்டுவந்தவர்கள் கொங்குக் கவிஞர்கள்தான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியும். ஈரோடு தமிழன்பனின் ”கஜல்பிறைகள்“ மரபில்முதல் முயற்சி.

“ஆழங்கள் உரையாடக் கரையோரம் வருமா?
வருமென்றால் ஆழமென்ற பெயரையவை பெறுமா?
எனையேந்தித் தெருத்தெருவாய் எந்தவினாப் போகும்?
என்வாழ்க்கை விடைபெறுநாள் விடையொன்று தருமா?
பாதையில்லா ஊருக்குள் துடிக்குமென்றன் ஆன்மா
பயணங்கள் கல்லறைக்குள் உள்ளதென்ன சுகமா?
எனைவளர்த்த நாள்களைநான் காலவங்கிக் கணக்கில்
இட்டுவைக்க முடியமா? வங்கியும் நிலைக்குமா?“
என்று கஜலின் போக்கைக் காட்டுகிறார்.

கஜலின் புறவடிவம் இரண்டிரண்டு அடிகளைக் கொண்ட தனித்தனிக் கண்ணிகளால் ஆனது. மற்ற கண்ணிகளோடு இயைபுத் தொடையால் இணைந்து கொள்வது.

கஜலின் முதல் கண்ணியின் இரண்டு அடிகளிலும் அதற்கு அடுத்துவரும் கண்ணிகளின் ஈற்றடிகளிலும் இறுதியாக இயைந்து வரும் சொல் “காஃபியா” எனப்படும். அதற்கு அடுத்துவரும் ஒரே மாதிரியான இறுதிச்சொல் அல்லது சொற்றொடர் “ரதீஃப்” எனப்படும். ஒரு கஜல் கவிதையில் காஃபியாதான் முக்கியம். “ரதீஃப்” இருக்கலாம். இல்லாமலும் போகலாம். நான் எழுதிய ஒரு கஜல் கவிதையைச் சொல்கிறேன்.

எனக்கென்று மகுடத்தைச் சூட்டியது நீயா?
இருவிழியால் மனநெருப்பை மூட்டியது நீயா?

கனவுகளில் விதவிதமாய் வர்ணங்கள் பூசிக்
கைகுலுங்க மனங்குலுங்கப் பூட்டியது நீயா?

வருவாயோ மாட்டாயோ எனத்தவிக்க விட்டே
மனதிற்குள் துயரத்தை ஊட்டியது நீயா?

அலைமோதும் நெஞ்சிற்குள் அலையாக மோதிக்
கரையாக வெறும்மனலைக் கூட்டியது நீயா?

கனவுகளில் நந்தவனம் போலிருந்த எனக்குள்
காதலெனும் நடைவண்டி ஓட்டியது நீயா?(உனக்காக உதிர்ந்த கஜல்கள்)

இதில் மூட்டியது, பூட்டியது, ஊட்டியது,கூட்டியது, ஓட்டியது என்று வருகிற சொற்கள் தான் காஃபியா. நீயா நீயா என்று வருவது ரதீஃப். தமிழில் இப்படி இயைபுத் தொடையைக் கொண்டுவரும் பொழுது வழக்கில் உள்ள இயைபுத் தொடையின் அமைப்பைப் பின்பற்றுவது இயல்பானது. இறுதிக் கண்ணியில் கஜல் கவிஞன் தன் புனைபெயரைப் பயன்படுத்துவது வழக்கம். கட்டாயமல்ல. இதில் சிறப்பென்ன வென்றால் கஜலின் ஒவ்வொரு கண்ணியையும் தனித்துப் பயன்படுத்தலாம். மற்ற கண்ணிகளைத் தனித்துப் பயன்படுத்தும்பொழுது தன் இயைபுத் தொடையின் அடையாளத்தை இழந்து நிற்கும். அதன் தொனியும் பொருளும்தான் முக்கியத்துவம் பெற்றிருக்கும். குறிப்பிட்ட கஜலுக்குள் இருக்கும்வரைதான் இதரக்கண்ணிகள் இயைபுத்தொடை உணரும் வண்ணம் திகழும்.மூலக்கஜலில் இருந்து பிரிந்த இதர கண்ணியின் இயைபுத் தொடை பொருள்பொதிந்த இறுதிச் சொல்லாக மட்டுமே காணப்படும்

கஜலில் குறியீடுகளின் கையாடல் எந்த அளவுக்கு உகந்ததாக அமையுமோ அந்த அளவிற்குப் பொருள் விரிவும் பொருள் திரிவும் உண்டாகும். இதனால் கருத்துக் செறிவுடன் கஜல் கண்ணிகள் மேன்மையடையும்.

“என்னுடைய பிரார்த்தனையில் எதனை வேண்டுவேன்?
உனையென்றன் பிரார்த்தனையாய் இருக்கத் தூண்டுவேன்.

உதிர்ந்துவிழும் கண்ணீரின் போதை ஏறவே
உலகத்தை ஒருநொடியில் எட்டித் தாண்டுவேன்

என்தனிமை எனக்கில்லை என்ற போதிலும்
உன்னினைவில் நான்வந்தே உன்னைச் சீண்டுவேன்.

எனைமறந்து நீஎங்கே இருந்த போதிலும்
உனைவந்து உனைவந்து சுகமாய்த் தீண்டுவேன்.

புயற்காற்றில் அகப்பட்ட தோணி யாகவே
போனாலும் உனைத்தானே இங்கு வேண்டுவேன்.(உனக்காக உதிர்ந்த கஜல்கள்)

இனி வருங்காலங்களில் கஜல் கவிதைகள் குறித்து எழுதவருகிற எவரும் கொங்குமண்ணின் கவிஞர்களைக் குறிப்பிடாமல் எழுத முடியாது.

புதுக்கவிதை வெள்ளத்தில் தத்தளித்து நீந்திக் கொண்டேயிருக்கிறது மரபுக்கவிதை. எனினும் பொன்னடியான், குலோத்துங்கள், புலவர் புலமைப்பித்தன்,மணிவேலனார், தமிழன்பன் ப.முத்துசாமி,கருமலைத்தமிழாழன்,கண்ணிமை, “தும்பை” தேனிரா.பாண்டியன்,ஸ்ரீமதிவாணன், மரபின்மைந்தன் முத்தையா, கவியன்பன் பாபு என்று மரபில் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கொங்கு மண்ணின் மரபுக்கவிதைகளைக் குறித்துத் தனியே விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். இருந்தாலும் என் கவிதைப் பயணத்தை மரபிலிருந்து தொடங்கியவன் என்பதால் இன்றும் இந்தக் கொங்கு மண்ணின் கவிஞர்கள் மரபுக் கவிதையிலும் எப்படிப் புதுமையைப் புகுத்துகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என் பார்வைக்கு வந்த நூலைப்படித்துப் பார்த்துக் களித்தேன். வெண்பாக்களில் குளித்தேன். கவியன்பன் பாபுவும் கவிஞர் பா.மீனாட்சிசுந்தரமும் கோவையின் இரட்டைப் புலவர்களாய் “நேரிசையில் ஊரிசை” என்று 102 நேரிசை வெண்பாக்களில் கொங்கு மண்ணைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். எப்படி? செல்லிடப்பேசியில் முதலிரண்டு வரிகளை ஒருவர் சொல்வார். 35 கிமீ தாண்டியிருக்கும் மற்றொருவர் பின்தொடர்ந்து வெண்பாவை முடிப்பார். கொங்குமண்ணின் பெருமிதங்களை வெண்பாவில் முடிந்துவைத்திருப்பது மட்டுமல்ல மறந்து போன வரலாற்றுச் செய்திகளையும் வாரித் தந்திருக்கிறார்கள். பேரூர்த் திருக்கோயிலில் நடைசாத்துமுன் தீவட்டி ஒளி காட்டப்படும். அதைச் சடங்கு என்றுதான் எவரும் நினைப்பர். ஆனால் இவர்களோ திப்பு சுல்தான் கோயிலுக்குச் செய்த மரியாதை என்பதைத் தெளிவுபடுத்தி அந்த மாமன்னனின் சமயம் கடந்த சமரச நோக்கைச் சரியாகக் காட்டுகிறார்கள்.

“தீவட்டி தூக்கிச் சிவவணக்கம், பின்புதான்
கோவில் நடையடைப்பு! காரணம்சொல்!—என்று கவியன்பன் கேட்க செல்பேசி வழியே
—கோவையர்
நாவினிக்கப் போற்றுகின்ற நற்பேரூர் ஈசனுக்குத்
தீவணக்கம் செய்தவன் திப்பு“
என்கிறார் பா.மீனாட்சிசுந்தரம். இப்படிப் கொங்கு மண்ணைப் பற்றி எத்தனையோ செய்திகள்.இன்றைய காலகட்டத்தில் செல்பேசியில் பேசியே வெண்பாக்களால் உருவான முதல்நூல் இதுதான். இதுவும் கொங்குக் கவிஞர்களின் சாதனைதான்.

காவிய முயற்சிகளுக்கும் இந்த மண்ணில் பஞ்சமில்லை. குலோத்துங்கனின் “மானுட யாத்திரை” சிற்பியின் ”இராமானுஜர் காவியம்“ மணிவேலனாரின் ”பீலிவளை” குறுங்காப்பியங்களாக வெளியங்காட்டானின் காவியங்கள்.இரா.வடிவேலனின் “மருதமலைச்சாரல்” சிற்பியின் “மௌனமயக்கங்கள்” “சிரித்த முத்துக்கள்” முருகுசுந்தரத்தின் “வெள்ளையானை, சக்திக்கனலின் “தீரன் சின்னமலை“ “சொல்வேந்தன், சூலூர் கலைப்பித்தன் ஆகியோர் தனித்தனியே எழுதிய தேவர் காவியம், ஞானி எழுதிய “கல்லிகை”, கவிதை நாடகங்களாக அரங்கசாமியின் “அம்பாபலி,“ சிற்பியின் ”ஆதிரை” புவியரசு எழுதிய “மூன்றாம் பிறை” முருகுசுந்தரத்தின் “எரிநட்சத்திரம்” சென்னிமலைதண்டபாணியின் ”யாத்திரை” என்று கவிதை சார்ந்த படைப்புலகம் விரிந்து கொண்டேபோகிறது.

பெண்கவிஞர்களின் படைப்புலகமும் கவிதைக்கு அழகு சேர்க்கிறது. உதகை ரோகினி, கிவி, தேவமகள், தாமரை, மீ.உமாமகேசுவரி, சுகந்தி சுப்பிரமணியன் என்று பட்டியல் விரிகிறது.

“என் மணவிழாவில்
நான் தொலைந்து போனேன்.
ஆனால், யாரும் என்னைத்
தேடவேயில்லை.” என்றும்
“நகரத்தில்
நாற்பது ஐம்பது
நியாயவிலைக் கடைகள்
நியாயம் என்ன விலை?”
என்றும் தாமரையின் கவிதைக்குரல் ஒலித்துக்கொண்டிருப்பது ஆணாதிக்கச் சமூகத்திலிருந்து வெளிவரத் துடிக்கும் துடிப்பாக ஒலிக்கிறது.

பெண்களுக்கான பாதுகாப்பும் சுதந்திரமும் எந்த அளவுக்கு உள்ளது என்பதை மீ. உமாமகேசுவரியின் கவிதைகள் படம்பிடித்துக் காட்டுகின்றன. “தாய்மண்ணே வணக்கம்!” என்கிற கவிதை

‘தானியங்கி மின்தூக்கியில்
தனித்திருக்கிறாள் பெண்ணொருத்தி
இசைஒலி எழுப்பிப்
பிளவுபடும் கதவின்வழி நுழைகிறார்
அறிமுகமற்ற ஆடவர்
பயணிக்க நேரிடும்
அந்தப் பத்து நொடிகள்
இதயம் படபடக்காமல்
இயல்பாய் நிற்க
அவளுக்கு வாய்க்குமெனில்
சொல்லியனுப்புங்கள்.
நாங்களும் கொண்டாடுகிறோம்
தாய்மண்ணின் சுதந்திரத்தை”

கவிஞர் மீ. உமாமகேஸ்வரியின் கவிதைகளில் பெண்களின் அக, புற உலகை அறியமுடிகிறது.

தனக்கான மனவுலகின் தரிசனங்களை, மனப்பிறழ்வுகளின் தெறிப்புகளைக் கவிதைகளாக்கியிருக்கிறார் சுகந்தி சுப்பிரமணியன்.

download (6)

யாப்பின் நுட்பங்களை நன்கறிந்து மரபில் காலூன்றிய கவிஞர்கள்தான் புதுக்கவிதையிலும் வெற்றிபெற்றிருக்கிறார்கள். கலாநிதி கைலாசபதி அவர்கள் ”ஓசைநயம் முற்றிலும் புறக்கணிக்கப்படுமாயின், வசன கவிதை எனப்படும் வெற்றுச் சொற்கூட்டம் கிடைக்கும். ஓசைநயத்தை அளவுமீறிப் பிரதானப் படுத்தினால், தெளிவு குன்றிய சலங்கை நாதம் பெறப்படும். ஓசை வறுமையுடைய வசனக் கவிதைகள் போலவே,கருத்துத் தெளிவில்லாத கிண்கிணிச் சிலம்பல் ஒலி்ப்பாட்டுகளும் தரம் குறைந்தவையே.“(கவிதைநயம் பக் 133) என்பார். மரபில் கைதேர்ந்தவர்களுக்கு யாப்பு தடையாக இருப்பதில்லை. யாப்பிலும் மரபிலக்கியத்திலும் தோய்ந்து நிற்கும் கவிஞனின் படைப்பின் ஆற்றல் வீரியமிக்கதாக விளங்கும். மொழியின் நவீனத்துவத்தைப் புதுப்பித்துக்கொள்ள அவை பெருமளவு பயன்படும். “காமக்கடும்புனல்“ மகுடேசுவரன், இளங்கோ கிருஷ்ணன், பா.மீனாட்சிசுந்தரம் போன்றவர்களின் கவிதைகள் குறிப்பிடத்தக்கவை. மகுடேஸ்வரனின் கவிதைகள் நெடுங்கவிதைகளாகவும் குறுங்கவிதைகளாகவும் செறிவான சொற்களோடும் வெளிப்படுகின்றன.

“வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலைமுடிக்கும் போது
உற்றுக் கேள்..
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை” என்ற “வலியின் ஒலி” என்கிற கவிதையில் நசிந்து போன ஒரு குடும்பத்தையே எந்த ஒப்பனையுமின்றிக் காட்டிவிடுகிறார். (விகடன் 75 முத்திரைக்கவிதைகள்பக் 15)

நெருக்கடி மிக்கதாக இருக்கிறது இன்றைய வாழ்க்கை. எங்கே ஓடினாலும் தப்பிக்க இயலாது. திரும்ப நடைமுறை வாழ்க்கைக்கு வந்தாக வேண்டும். அதே பாடுகள் பட்டுத்தான் தீரவேண்டும். மீண்டும் மீண்டும் நாம் நசுக்கப் படுகிறோம். இளங்கோ கிருஷ்ணன் “கொட்டும் மழை” கவிதையில்

“கொட்டும் மழையில்
எங்கொதுங்கித் தப்பிக்க
எங்கொதுங்கித் தப்பிக்க
ஓடும் ஒரு லாரியின்
சக்கரத்தினடியில்..”(பட்சியன் சரிதம் பக்33)

என்று எழுதுகிற பொழுது ஏற்படுகிற மன அதிர்வு அடங்க வெகுநேரமாகும். என்றாலும் வாழ்வின் மீதான பற்றுதலோ ஆசையோ போய்விடுவதில்லை.மிக ரம்மியமான ஒரு கவிதை “பின்னொரு காலை” என்று மலர்கிறது.
“இரவெல்லாம் கொட்டி
ஓய்ந்திருக்கிறது மழை
இப்போதுதான்
எவ்வளவு நிம்மதி
எவ்வளவு ஆசுவாசம்
பரிதியின் இளஞ்சூடு
மெல்லப்
பரவுகிறது மேதினியெங்கும்
புதுப் பச்சையம்
அசைகிறது தாவரங்களில்
திடமான
ஓர் இனிய நம்பிக்கையோடு
ஈரக்காற்று உடலெங்கும் நழுவ
மலர்கிறேன் பரவசத்தில்
இந்தக் காலை
இந்த வாழ்க்கை
இதன் ரம்யம்
அற்புதம்
தேங்கிய நீரில் சுடரும் சூரியனே
உன் வருகைக்கு நன்றி.”(பட்சியன் சரிதம் பக் 62)

இக்கவிதையைப் படிக்கிற எவருக்குள்ளும் ஓர் இனம்புரியாத பரவசம் எழத்தான் செய்யும். இதுவே கவிதையின் ரகசியம். சமூகத்தின் மீதும் அதன் நடப்புகள் மீதும் அக்கறை கொண்டு, மன ஈரம் காய்ந்துவிடாமல் எழுதுகிறவர் பா.மீனாட்சிசுந்தரம். எப்படியெல்லாம் சக மனிதன் புறக்கணிக்கப்படுகிறான், அவன் புறக்கணிக்கப்படுவதற்கு எதுவெல்லாம் காரணமாக இருக்கிறது என்பதைக் கோடிட்டுக் காட்டுவதைப் போல

“மகுடேஸ்வரனின்
சென்ட் ரப்பரை
நான் திருடியதாய் நினைத்து
முழிகளை வீங்கவைத்த
இரண்டாம் வகுப்பு மிஸ்ஸிற்கு
குற்றத்தை நிரூபிக்கக் கிடைத்த
ஒரே தடயம்
என் கறுப்பு முகம்” (நிறமறியாத் தூரிகை பக் 52) இந்தக் கவிதை உண்மையில் ஒரு தேர்ந்த அரசியல் கவிதை. இந்தக் கவிதைக்குள் சொல்லப்பட்டிருக்கிற நுட்பமான அரசியல்தான் நம்மை எவர்எவரோ ஆட்டிப் பார்க்க ஆசைப்பட வைக்கிறது.

எல்லா மொழிக்கவிதைகளிலும் பல்வேறு சிந்தனைப் பள்ளிகள் உண்டு. மொழியைப் பயன்படுத்தும் திறன், பாடுபொருள் என்று பலநிலைகளில் மாறுபடக் கூடிய கவிதைகளாக இருந்தாலும் இதுதான் கவிதை என்று வரையறுத்துவிட முடியாது. “எழுத்து” வகையறாக்களின் தொடர்ச்சியாக சிபிச்செல்வன், வே.பாபு, ஷாஅ போன்றோரின் படைப்புகளும் கொங்கு மண்ணின் படைப்புகள்தான். இடதுசாரிச் சிந்தனைகளை முன்னெடுக்கும் நவகவி, பெரியாரிய,மார்க்சிய.அம்பேத்காரியத்தை முன்னெடுக்கும் ரவீந்திரபாரதி, ஆதவன் தீட்சண்யா, விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் அனுபவங்களையும், அவர்களின் மனக்கோலங்களையும் பதிவுசெய்யும் தவசிக்கருப்பசாமி என்கிற கூத்துக்கலைஞர் ஹரிகிருஷ்ணன், வெய்யில், கதிர்பாரதி, பா.ராஜா, வா.மு.கோமு, “நானும் நானல்லாத உறவுகளும்” என்ற நிலைப்பாட்டில் “கவிதைக்குள்ளிருந்து கவிதை” என்று சொல்லும் க.வை.பழனிசாமி, அம்சப்ரியா,இரா.பூபாளன், இசை, இளஞ்சேரல், பொன்.இளவேனில், ஜான்சுந்தர், ஸ்ரீபதிபத்மநாபா, சூர்யநிலா, பொன்.குமார், அவைநாயகன், “புதுஎழுத்து” மணோன்மணி, மயூரா.ரத்தினசாமி, தென்பாண்டியன், ”முனியமரம்” பாலா,பூ.அ.ரவீந்திரன் என்று ஏராளமான கவிஞர்கள் தங்களுக்குக் கைவரப்பெற்ற மொழியில் அவரவர் கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கவிதை என்பதே மொழியின் மலர்ச்சிதான்.

விளிம்புநிலை மக்களின் வாழ்வைப் பற்றி ஏதும் கவலைப்படாத சமூக அமைப்பையும் அரசியல்கட்சிகளின் நிலைப்பாட்டையும் தவசிக்கருப்பசாமி எடுத்துரைக்கும் போக்கு கவிதையின் வேறொரு பரிமாணத்தைக் காட்டுகிறது.

“நான் விரும்புவது சனநாயகம்
நடந்து கொண்டிருப்பதோ பணநாயகம்.
உடையவர் கைத்தட்டில் ஒருதட்டு தாழ்ந்தாலென்ன
கடிநட்பு காவலர் உறவில், சட்டவொழுங்கு என்கையில்
கட்சிக் காரர்களிடம் காசுவாங்கி
சாதிக்காரனுக்கு ஓட்டுப் போடுவேன்
நேர்மை உண்மை- அரசு அமைச்சு
உபதேசம் எனக்கில்லையடி கண்ணாட்டி
உடம்பு நோகாத வேலை அடிநாவு கட்டாத கூழ்
ஆசாப்பாசம் அங்கே அங்கவஸ்திரம் இங்கே
படிக்கறது ராமாயணம் இடிக்கறது அல்லாக்கோயில்
நான் விரும்புவது சனநாயகம்.” (அழிபசி பக் 21).

உண்மையில் சனநாயகம் என்ற பெயரில் என்ன நடக்கிறது? கவிதை நடப்பு வாழ்வைச் சித்தரித்துச் செல்கிறது. இவரின் அழிபசி,தாண்டுகால்,அங்குசம்,ஆகிய கவிதைத் தொகுதிகளின்வழி எளிய மக்களின் துயரப்பட்ட வாழ்வின் பக்கங்கள் படபடக்கின்றன.
இசையின் “ராஜகிரீடம்” என்கிற கவிதை

“ராஜகிரீடம்
உன் சிரசில் பொருந்தாதற்கு
யார் என்ன செய்யமுடியும் நண்பா
இந்த வாயில்காப்போன் உடையில்
நீ எவ்வளவு மிடுக்கு தெரியுமா?”( சிவாஜிகணேசனின் முத்தங்கள் பக்42) என்று கேட்கிறது. இந்தக் கவிதையைக் குறித்துச் சற்றுச் சிந்தித்துப் பார்த்தால் அரசியல் கட்சித் தலைவர்களின் முகங்கள் வந்து போவதைக் காணமுடியும். நுட்பமான மொழிதல்முறையைக் கைக்கொண்ட இசையின் “தென்றல் என்றழைக்கப்படும் ஞாயிற்றுக்கிழமையின் காற்று” என்கிற கவிதை ஞாயிற்றுக் கிழமை என்கிற விடுமுறைநாள் எப்படியிருக்கிறது என்பதைக் கவித்துவத்தோடு சொல்கிறது. காற்று கூடப் பிறநாளில் காற்றாக இருப்பதில்லை. அத்தனை கொதிநிலையோடு ஒவ்வொரு நாளையும் கடத்த வேண்டியிருக்கிறது. இதை

“பிஸ்கட்டைப் பிட்டு
தேநீரில் நனைத்துச் சுவைப்பது போல
இந்த ஞாயிற்றுக்கிழமையைப் பிட்டு
ஒரு கோப்பை மதுவில் நனைத்துச் சுவைக்கிறேன்.
மூளைக்குள் கத்திக்கொண்டிருந்த
அலுவலகத்தின் நா
அறுக்கப்பட்டுவிட்டது.
மைதானங்களில் ஒரு ரப்பர் பந்தெனத்
துள்ளிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்.
இக்கொதிநிலம் திடீரென்று குளிர்ந்து
பெய்கிறது ஒரு ரம்யமழை.
ஞாயிற்றுக்கிழமையின் காற்றுக்குத்தானா தென்றல்
என்று பெயர்
என்றொரு வரி தோன்றியது.
இதையடுத்து உருகிவழிந்த
கண்ணீரின் துளியொன்று
கோப்பைக்குள் சிந்த
எடுத்து அருந்தினேன்.
தாளாத தித்திப்பு அது!
தாளாத தித்திப்பு அது!( சிவாஜிகணேசனின் முத்தங்கள் பக்16)

அன்றாட வாழ்க்கையின் நெருக்கடிச் சூழலில் ஒரு விடுமுறை தினம் எப்படி அழகானதாக இனிமையானதாக இருக்கிறது என்பதைக் கவிதை சொல்லிச் செல்கிறது.

இன்றைய காலகட்டம் எப்படியிருக்கிறது? வாங்கிய சுதந்திரம் என்னாயிற்று? “சொல்ல பயம்” என்கிற கவிதையில் இளஞ்சேரல்

“எங்கள் கொள்ளுத்தாத்தாமார்கள்
வாங்கிக்கொடுத்தார்கள்.
எங்கள் தாத்தாமார்கள்
அனுபவித்தார்கள்
எங்கள் அப்பாமார்கள்
விற்று விட்டார்கள்
நாங்கள் மீண்டும்
வாங்குவதற்காக
சந்தைக்கு வந்திருக்கிறோம் ( கொட்டம் பக் 11)

என்கிறார். பெற்ற சுதந்திரத்தை விற்றுவிட்டார்கள். யாருக்கு விற்றார்கள் எப்படி விற்றார்கள் என்பது தெரியாது. இழந்ததைப் போராடிப்பெறும் வேகமும் சுதந்திர தாகமும் இன்றில்லை. விலை கொடுத்து வாங்குவதற்காக வந்திருக்கிறார்கள். யாரிடத்தில் பேரம் பேசுவது? என்ன விலை? எதுவும் தெரியாது. இப்படிப் போராட்ட உணர்வு மங்கிப் போய்விட்ட காலத்தைக் காட்டுகிறது கவிதை.

”முனியமரம்” பாலாவின் “அம்மாவின் வாசனை” என்கிற கவிதை நினைக்கும் தோறும் எழும் அம்மாவின் நினைவை மிக இயல்பாகக் கொண்டுவந்து சேர்க்கிறது.
“அதே அளவு உப்பு
அதே அளவு புளிப்பு
அதே அளவு காரம்.

அம்மாவின் சமையலை
அப்படியே ஆக்கிவைத்தாள்
மனைவி

ஆனால்
கடைசிவரை தேடியும்
கிடைக்கவேயில்லை அதில்
அம்மாவின் வாசனை. (முனியமரம் பக் 18) இந்தக் கவிதை ஒரு தளத்தில் இயங்குகிறது என்றால் வெய்யில் எழுதிய “ஒரு பூ பூத்துச்சாம்” என்கிற கவிதை வேறொரு தளத்தில் இயங்குகிறது.

“அப்பப் பாலுறிஞ்ச ஏலாத
சீக்காளிப் பிள்ளையா இருந்தேனாம்
அம்ம சொல்லும்.
கொள்ளையில் நிக்கும் கருவேலத்தூர்லதான்
மார்ப்பால பீச்சிவிடுமாம்.
முகத்துல தெறிச்சி
கையெல்லாம் வழிஞ்சி
தொழுவத்து சாணவாடையை மீறி மணக்குமாம்
வறண்ட ஆத்த பாக்குறப்பல்லாம்
எதுக்குன்னே தெரியல
அந்தக் காட்சி கண்ணுல கண்ணுல வருது.” (கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட் பக் 9)

கிராமத்தில் எங்கோ நடக்கும் நடப்பைக் கவிதையில் அதன் மணம் மாறாமல் தருகிறவர் வாமு.கோமு. கிண்டலும் கேலியுமான அவரின் மொழிநடை கவிதைக்குள் இயல்பான கொங்கு வழக்கில் வந்து விழுகிறது.

கண்களுக்கு சிக்குவன

இவடத்திக்காலிக்கி மாடி மேல
நின்னுட்டு சைசா கிழக்கால பாக்கப்ப
ஒரு எழவும் கண்ணுக்கு சிக்கலப் போங்க!
என்னத்துக்குத்தான் நைசாப் பாத்தனோ?

சரிப் போச்சாதுன்னு மறுக்கா மேக்கால
சைசா எட்டிப் பாத்தங்காட்டி தான்
என் கண்ணுக்கு என்ன சிக்கோணுமின்னு
நெனச்சனோ அது சிக்குச்சு!
ரெண்டூடு தாண்டி மூனாவுது ஊட்டுல தான்
பாட்டுக்கச்சேரி போல! பால் கறந்துட்டு
சொசீட்டிக்கி போசி தூக்கிப் போற அண்ணன்
லேடியாப் பொட்டீல மம்மத ராசா! பாட்டுக்கு
செமெக் குத்து போட்டுட்டு இருந்தாப்ல
மாடுவளுக்கு எஜமானியம்மாவோட!
ஐயோ! பட்டப்பவல்ல காலங்காத்தால இதுக
ரெண்டும் இப்புடி குதியாளம் போடுதுகளே
அந்தம்மாவோட வூட்டுக்காரான் வந்தா
என்னாத்துக்கு ஆவும் நெலமென்னு
அடிச்சுக்குது பாருங்க படப்படன்னு எனக்கு!
ஐயோடா சாமி!
இதுனால தான் எப்பயுமே நானு சைசாவும்
நைசாவும் மாடில இருந்து பார்த்துத் தொலைக்கிறது!
எல்லாருத்து வண்டவாளமும் தண்டவாளம்
ஏறுறது நமக்கு மட்லும் கண்ணுக்கு சிக்கிக்குது!

000

அம்மாவின் குலதெய்வம்

“எங்கள் குலதெய்வம் ஒரு ஆலமரத்தடியில்
சிறு திண்டின் மீது அமர்ந்திருக்கிறது.
எப்போதேனும் அம்மாவுக்கு சாமியாட ஆசை
எழுந்தால் என் இருசக்கர வாகனம் கிளம்பிவிடும்.
பூசாரி மணியடித்தாரென்றால் அம்மாவுக்குள்
சாமி இறங்கி விடும். -கோவிலுக்கு நான்கைந்து
பேராவது வந்திருந்தால் அம்மாவிடம் குறி கேட்பார்கள்.
ஆனால் செல்வதே இருவரும் தானே!
“எனக்கு கோவிலை எழுப்புங்கடா! கும்பாபிசேகம்
நடத்துங்கடா!” அம்மா சப்தமிட்டபடி ஆலமரத்தடியில்
கைகளை உயர்த்தி கோர்த்துப் பிடித்து அங்குமிங்கும் செல்லும்.
பூசாரி அம்மாவின் தலையில் திருநீரு தூவி,
“செஞ்சுடலாஞ் சாமி” சொன்னால் சாமி மலையேறும்.
அப்படித்தான் அம்மாவாசை நாளொன்றில் அம்மா
கிளம்பச் சொல்லிவிட்டது கோவிலுக்கு. செல்கையில்
கணிசமான கூட்டமுமிருந்தது அங்கு. – நான்கைந்து
சாமிகள் ஆலமர நிழலில் ஆடிக் கொண்டிருந்தன.
அம்மாவுக்கும் சாமி வந்துவிடுமென திரும்பி பார்த்தேன்.
ஐஸ் பொட்டிக்காரனிடம் குச்சி ஐஸ் வாங்கி
சப்பிக் கொண்டே சாமியாடுபவர்களை வேடிக்கை
பார்த்தது. -இனி அம்மாவுக்குள் சாமி இறங்குவது
சந்தேகம் தான்.“

இந்த இரண்டு கவிதைகளிலும் வாமு.கோமு இரண்டு வெவ்வேறு காட்சிகளைச் சித்தரித்துக் காட்டுகிறார். உளவியல் சார்ந்த பிரச்சனைகளைக் கவிதை வேடிக்கையும் விநயமுமாகச் சித்தரிக்கிறது.

“எதையாவது கிறுக்கித் தள்ளலாம்
நமக்கு நல்ல கவிதையென
தோன்றினால் லாபம்.
கவிதை மாதிரி
எழுத
எழுத
கழுதை
வராமலா போய்விடும் கவிதை?”(ஒளி செய்தல் பக் 73) என்று பொன். இளவேனில் எழுதிச் செல்வதுபோலப் பலர் எழுதிக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
602784_10200198662103337_515294167_n
இன்றைய காலகட்டத்தில் பலவிதமான கவிதைப்போக்குகளைக் காணமுடிகிறது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய மாற்றங்கள் கவிதைக்குள்ளும் வந்து குவிகின்றன. முந்தைய கவிதைச் சிந்தனைகள் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாயிருக்கின்றன. எந்தப் பொருள் வேண்டுமானாலும் கவிதைக்கான கருப்பொருளாகிறது. ”லாபிங் தெராபி“ என்றொரு கவிதை. ” மலைகள்” சிபிச்செல்வன் எழுதியது.

“கடற்கரையில் முதன்முதலாக அந்தக் காட்சியைப் பார்த்தேன்.
இன்று காலையில் அந்த மாநகரப் பூங்காவில் நடைபயிற்சி
மேற்கொண்ட போதும் கவனித்தேன்.
ஒரு கூட்டமாக
ஒரு குழுவாக இணைந்து
மொத்தமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
சிரிப்பை அவர்கள் அடிவயிற்றிலிருந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
விதவிதமாக வகைவகையாகச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்
வினோதமாக ஒருகணம் நின்று பார்த்துவிட்டு
பைத்தியங்கள் எனநினைத்தபடி குறுநகையோடு போகிறார்கள்.
இவர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துக் கொள்கிறது
லாபிங் தெராபி.“(மலைகள்.காம்- இதழ் 125-சிபிச்செல்வன்). காதலின் மெல்லிய உணர்வுகளை க.மோகனரங்கன்

“ஒரு முத்தத்தின்
ஈரம் போதும்
பின் எப்போதும்
களையவியலாப்
பித்தின் வித்துகள்
நம்
மூளைமடிப்புகளின்றும்
முளைத்தெழும் (க.மோகனரங்கன் மலைகள்.காம் இதழ்59- அப்டோபர் 2015 நெடுந்தொகை கவிதைகள்) என்கிறார். சமீபத்தில் 500 ரூபாய் 1000- ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு வந்து என்ன நிலையை ஏற்படுத்தியது என்பதை அறிவீர்கள். அம்சப்பிரியா தன்னுடைய ”அருக்காணியின் ஐநூறு ரூபாய்” கவிதையில் என்ன சொல்கிறார் தெரியுமா?

”மறுபடியும் மறுபடியும்
எந்நேரத்திலும்
எப்போதெல்லாமோ
கண்ணீர் கசிய
டிரங்க் பெட்டியில் சேலை மடிப்புக்குள்
பத்திரப்படுத்தியிருக்கிற
அந்த ஐநூறு ரூபாயை
ரசித்தபடி இருப்பாள்.
இனி செல்லாதெனினும்
செல்லும்படியாகவேயிருக்கிறது
பிரியமான காலமொன்றிலிருந்து “
(புன்னகை அம்சபிரியா முகநூல் பதிவு 19.9.2017) என்கிறார். சமூக விளைவுகளைக் கவிதையாக்கவில்லை. தனிமனதின் மெல்லிய தவிப்பைக் கவிதையாக்கியிருக்கிறார். அதற்கு நேர்மாறாக கவிஞர் ரவீந்தர பாரதி வங்கிக் கடன் பெற்றதன் விளைவைத் தீர்ககமான சமூகக் கவிதையாக்குகிறார்.

அம்பல்

“எப்படியோ நகர்ந்து கொண்டிருந்தது வாழ்வு
வீட்டில் தோட்டத்தில் கூடமாட
பாத்தி பிடிப்பது வரப்பு கட்டுவது
வாய்க்காச் செதுக்குவது தண்ணி பாச்சுவது
தீனிகட்டுவது பால்கறப்பது
ஓய்ந்த நேரத்தில் எதையாவது படிப்பது
கிறுக்குவது
இப்படிப்போய்க்கொண்டிருந்தது
எங்கிருந்தோ வந்தது ஒரு தென்றல்
அடடா
கருத்துப் பூக்குமோ தாமரை இப்படி?
வரிசைகொள்ளுமோ நட்சத்திரங்கள்?
உயிர்தொலையுமோ பின்னலின் அசைவில்?
சொர்க்கம் இப்படித் தரையில் நடக்குமோ?
அலைமேல் அலையடித்து அதிலேய மூழ்க
அப்பா வந்தார் ஆவேசமாக
வங்கிக்காரன் மோட்டாரத் தூக்கிட்டான்
தம்பிக்குக் கடேசி வருசம்
தவமணிக்கு இப்பவோ அப்பவோ அதுக்கும்மேல
என்ன சாதியோ என்ன எழவோ
இந்த மயிருக்கு இதுதாண்டா கொறச்சல். (செப்டம்பர் 19 முகநூல் பதிவு)

என்று சமகால நடப்பைக் கவிதைக்குள் கொண்டுவருகிறார்.

இன்று ஹைகூ, சென்ரியு, பழமொன்ரியு என்று கவிதை படர்ந்து கிடப்பதையும் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். ஹைகூ என்பது

மூன்றடியில் எழுதப்படுகிறது
அனுபவத்தெறிப்பாக இருக்கிறது
மூன்றாவது அடியில் ஓர் அதிர்வு இருக்கிறது.

நிகழ்காலத்தில் எழுதப்படுகிறது.

பொதுவாக ஹைகூவில் நீ நான் என்பது தவிர்க்கப்படும். மூன்று வரிகளுக்குள் நீங்கள் பெற்ற அனுபவத்தை அப்படியே வாசகனுக்குக் கடத்துவது ஹைகூ.

சொற்சிக்கனம் வேண்டும். படிமம் வேண்டும். ஒரே தடவையில் படித்துவிடக்கூடியதாக இருக்கவேண்டும்.

இறுதிவரியின் இறுதிச் சொல் ஆற்றல்மிக்க வெளிப்பாட்டுக்காக பெயர்ச்சொல்லாக இருக்க வேண்டும்.

1968ல் ஜப்பானிய ஹைகூக் கவிதைகளை நடை இதழில் மொழிபெயர்த்துத் தந்தவர் கொங்கு மண்ணின் கவிஞர் சி.மணி. மாதிரிக்குச் சிலவற்றைச் சொல்லிவிடுகிறேன்.

ஓட்டுப் போட்டுவிட்டுத்
திரும்பிவந்த பிணம் திடுக்கிட்டது
கல்லறையில் வேறொரு பிணம்.- தமிழன்பன்

பத்தாவது முறையாக விழுந்தவனுக்கு
முத்தமிட்டுச் சொன்னது பூமி
ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ –தமிழன்பன்.

ஒவ்வொரு கவளச் சோற்றிலும்
நிற்கும்
அம்மா நினைப்பு— சென்னிமலைதண்டபாணி

தள்ளுவண்டியில் ரோஜாப்பதியன்கள் “
வாங்கியதும் பூத்தது
விற்றவன் முகம்.

இயற்கையின் அனுபவத்தெறிப்பு ஹைகூ ஆகிறது. மாறாக சமுதாயத்தைக் குறித்துக் கிண்டலும் கேலியுமாக எழுதப்படுவது சென்ரியூ என்றழைக்கப்படுகிறது. தமிழில் ஹைகூ என்ற பெயரில் அதிகம் எழுதப்படுவது சென்ரியூதான். “கைநீட்டி வாங்காத
அதிகாரி மனைவி
கைநிறைய வளையல்கள்- தமிழன்பன்

“பட்டம் வாங்கவே
நேரம் போதவில்லை
எப்போது படிப்பாரோ?”- தமிழன்பன்.

ஆராய்ச்சிமணி அடித்த மாடுகள்
அரண்மனைத் தட்டில்
பிரியாணி- – அவைநாயகன்.

மாமியார் மரணம்
மருமகள்கள் அழுகை
எங்கே இருக்கும் நகைகள்? -சென்னிமலைதண்டபாணி

சாகும் வரை உண்ணாவிரதம்
என்றார் தலைவர்
யார் சாகும்வரை?- சென்னிமலைதண்டபாணி

பழமொன்ரியு

சென்ரியூவின் தன்மைகளோடு நம் பழமொழிகளை இணைத்து உருவாக்கப்பட்ட கவிதை முயற்சிதான் பழமொன்ரியு.
சென்ரியுவில் உள்ள அதே மூன்று வரிகள்தான். முதலில் பழமொழியைச் சொல்லி அதன்பின் சென்ரியுவின் அதிர்வைத் தருவது பழமொன்ரியு. தமிழன்பனின் “ஒரு கூடைப் பழமொன்ரியு” தான் தமிழில் செய்யப்பட்டுள்ள முதல் முயற்சி.

“நீர் இடித்து நீர்விலகாது
நீருக்காக இடித்துக் கொண்டால்
மாநிலங்கள் விலகும்.”

“கந்தையானாலும் துவைத்துக்
கட்டு..துவைத்துத் துவைத்துக்
கந்தலானதை எங்கே கட்ட?”

“கழுதை கெட்டால் குட்டிச்சுவர்
கெடாமல் இருந்தால் அதுக்குப்
பேர் பாராளுமன்றமா?”

“உரளுக்கு ஒருபக்கம் இடி
மத்தளத்துக்கு இருபக்கமும் இடி..மக்களுக்கு
எல்லாப் பக்கத்திலும் இடி”

“கொள்ளிவைக்க ஒரு பிள்ளை
வேணுமாம் ஒரு பெண் வைத்தால்
எரிய மாட்டாயா நீ?”

“கெட்டிக்காரன் புளுகு எட்டுநாளில்
தெரியலாம்..ஒன்பதாம் நாளில்
அவன் தலைவனாய் இருப்பானே”.

கவிதைக்குள் தத்துவவீச்சும், தமிழ்த்திறனும், தனித்துவமும்,பொருள்தெளிவும் , கருத்து அழுத்தமும் வேண்டும் என்பதில் எவருக்கேனும் மாற்றுக் கருத்து இருந்தால் அது ஏற்புடைய கருத்தாக இருக்க முடியாது. மாறிக் கொண்டேயிருக்கும் அத்தனை மாற்றங்களையும் கவிதை தனக்குள் கொண்டுவரத் துடிக்கிறது.

இன்றைய கவிதைகளிலும் வரட்சிப் போக்குகள் காணப்படாமல் இல்லை. அவற்றைக் காலமே களைந்து எறிந்துவிடும். எனினும் மொழியைத் தொலைத்து விடாதிருப்பதுதான் இன்றைய முக்கியத் தேவையாக இருக்கிறது. கவிதை ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது என்று சிலர் விமர்சனத்தை முன்வைப்பார்கள்.உண்மைதான். துரும்பை அசைப்பது அதன் வேலையில்லை. துரும்பு கிடக்கிறது. கண்களில் விழாமல் காத்துக்கொள் என்று பாதையைக் காட்டுவதுதான் கவிதை. தத்துவச் சார்பற்ற கவிதையையும் கவிஞனையும் காலம் கைகளில் தாங்கிப் பிடிப்பதில்லை. கால ஓட்டத்தில் கரைந்து காணாமல் போயிருக்கிறார்கள். கலை இலக்கியம் யாவும் மக்களுக்காகவே என்பதே எமது நிலைப்பாடு.

மொழியைத் தொலைத்துவிட்டால் எந்த இனத்துக்கும் வாழ்வில்லை. தமிழின் மீது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிற தாக்குதல்கள் இன்று நேற்று எழுந்ததல்ல. ஆனால் அத்தனைக்கும் தாக்குப்பிடித்து இன்றும் உயிர்ப்போடும் உவப்போடும் இருக்கின்றதென்றால் அதற்குக் காரணம் நம் செம்மாந்த இலக்கியச் செழுமைதான். அதை மறந்துவிட்டு எழுதினால் எந்தக் கவிஞனும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியாது. எனவே மொழியை நீர்த்துப் போகாமல் காக்கும் பொறுப்பு கவிஞர்களுக்கு உண்டு. எத்தனை தாக்குதல்களைத் தமிழின் மீது தொடுத்தாலும் அதை எதிர்கொள்ள நாம் தயங்கினால் நமது எதிர்காலம் கேள்விக் குறிதான். எனவே

“ அப்படித்தான் செய்வார்கள் அவர்கள்.“ என்ற என் கவிதையை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் உள்ளம் மகிழ்கிறேன்.

அப்படித்தான் செய்வார்கள்
அவர்கள்.
மொழியைத் தொலைத்துவிட்டு
முன்நிற்கச் சம்மதித்தால்
அப்படித்தான் செய்வார்கள்
அவர்கள்.

மைல்கற்கள் என்ன
உன்
மயிர்க்கால்களிலும்
எழுதிவைப்பார்கள்
இந்தியை.
பல்லக்குத் தூக்கவே
சரியாயிருக்கிறது நேரம்.
என்ன நடக்கிறது
என்பதை
எப்படி அறிவாய் நீ?

உன் அடையாளம்
மைல்கற்கள் காட்டும்
அடையாளமல்ல
வரலாறு காட்டும்
அடையாளம்.
அதை
எந்த விலைக்கும்
விற்றுவிடச் சம்மதித்துத்
தலைசொரிந்தபடி நிற்கிறாய்நீ.

எதையோ படித்துத் தொலை..
அதற்குப்
புதைகுழிக்குள் ஏன்
போட்டுவைக்க நினைக்கிறாய்
உன் தாய்மொழியை?

செம்மொழி என்று
சிலிர்த்துக் கொள்கிறாய்.
அது
உன்மொழிதான் என்பது
உனக்குத் தெரியுமா?

தாய்ப்பால் சுரந்த
மார்பகங்கள் எல்லாம்
விசக் கிண்ணங்களா?
அலுங்காமல் குலுங்காமல்
அமர்ந்திருக்கிறாய்
சிம்மாசனங்களில்.
அடித்தளத்தில்
யார் யார் நசுங்கினார்கள்
என்பதைக் குறித்து
ஏதேனும் தெரியுமா உனக்கு?

அன்றாடம் நீ
அன்னதானம் பெறும்
ஆலயங்களில் இல்லை தமிழ்..
அடித்துப்பிடித்து
அலறி நிற்கும்
நீதிமன்றங்களில் இல்லை தமிழ்.
எங்கிருக்கிறது தமிழ்
என்கிறாயா?
தாயின் மார்பகம் தந்த
முதற்சொட்டுப் பாலில்
கலந்திருந்தது.
உனக்குத்தான்
மறந்துவிட்டது.

மார்பிலும் வயிற்றிலும்
அடித்துக் கொண்டு அலறுகிறாள்
தாய்..
இவனுக்கா
பாலூட்டினேன்.
இப்படி
எதற்கெடுத்தாலும்
சுரண்டு கிடக்கும் இவனுக்கு
சுரணை வராமல் போனது எப்படி?

தாய் துடிக்கிறாள்
நீ நடிக்கிறாய்..
மொழியைத் தொலைத்துவிட்டு
எந்த
முகத்தோடு அலையப் போகிறாய்?(புதுப்புனல் செப்டம்பர்2016 இதழ்)

இந்த வினா எப்போதும் நமக்குள் எதிரொலித்துக் கொண்டிருக்க வேண்டும். கொங்குமண்ணின் கவிதை பேராறு செழித்துப் புரண்டோடிக் கொண்டேயிருக்கும். எல்லாத் திசைகளிலும் கொங்கு மண்ணின் கவிஞர்களின் கொடி பறக்கும் என்பதோடு தொடர்ந்த வாசிப்பும், இயக்கமும் கவிஞனை நிலைநிறுத்தி வைக்கும். உள்ளத்தில் ஒளியிருந்தால் வாக்கினிலே ஒளியிருக்கும் என்று கூறி இந்த நல்வாய்ப்பை நல்கிய சாகித்ய அகாதமி நிறுவனத்துக்கும் நிர்மலாக் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன்.

Comments are closed.