ஹிந்தியில்-நிர்மல் ஆனந்த். / தமிழில் – க்ருஷாங்கினி

[ A+ ] /[ A- ]

download (20)

ஹிந்தியில்-நிர்மல் ஆனந்த்.

தமிழில்-க்ருஷாங்கினி

1-விதை-2

இது விதைகளின்

பயணத்தின் பருவம்.

பழுத்து, வெடித்து விட்டன

இலவம் பழங்கள்.

பட்டைப் பொன்ற மென்மையும்

பறக்கும் கொக்கின் வெண்மையும்

நுரையென வெண்மை.

காற்றில் நீந்துகின்றன,

விதைகள், விதைகள்.

ஒரு வனத்திலிருந்து

மற்றொரு

வனத்திற்கு

ஒரு மலையிலிருந்து

மற்றொரு

மலைக்கு.

ஒரே பழத்தின் பலப்பல

விதைகள்,

வெவ்வேறாகப் பறக்கின்றன.

பறந்து கொண்டும் இருக்கின்றன.

போகும் வழி தெரியாது.

எவ்வளவு தூரம்

பறக்க வேண்டி இருக்கும்?

நிச்சயமில்லை.

எங்கு எந்த மண்ணில்

முளை விடப் போகிறது?

தெரியாது. இது மட்டுமே தெரியும்.

எங்கு விழுந்தாலும்,

எங்கு முளைத்தாலும்,

ஒன்று போலவே இலைகள்,

ஒன்று போலவே பூக்கள்,

இருக்கும் எப்போதும்.

பலன் தரும் காலமும்

எப்போதும் ஒன்று போலவே.

அதே பருவத்தில்.

2-மாதத்தின் கடைசி வாரம்

மிக மெல்ல மெல்ல கழிகிறது,

மாதத்தின் கடைசி வாரம்.

காய்ந்த குட்டையைப் போல

பொருள் அற்று இருக்கிறது,

அனைத்து டப்பாக்களும்.

பல

வீடுகளின் வாசல்களிலிருந்து

இதே நாட்களில்தான்

காலியான கரங்களுடன்

திரும்ப வேண்டி இருக்கிறது

பிச்சைக்காரர்களுக்கு.

இதே நாட்களில்

எங்கள் எல்லோருடைய

சட்டைப் பைகளும்

ஏதுமற்று இருக்கின்றன.

தொங்கிக் கிடக்கிறது,

அப்பாவின் முகத்தில்

கவலையின் நிழல்.

நாங்கள் அனைவரும்,

காத்திருக்கின்றோம்,

இந்நாட்கள் முடிவுக்கு வர.


3-திரும்புதல்

படபடக்கும் வெய்யிலில்,

நண்பா, எங்கிருந்து

வந்து கொண்டிருக்கிறாய்?

வெற்றுப் பாதங்களும்,

கன்றிப்போன முகமுமாக.

குளிர்ந்த நீர் குடி.

இந்தா.

எங்கிருந்தாய்? என்ன செய்தாய்?

இத்தனை நாட்களாக.

தாடி வளர்ந்து கிடக்கிறதே?

கண்களோ குழியில்.

படுக்கையில் கிடத்திவிட்டது,

அப்பாவை, பக்கவாதம், சவமாக.

அம்மாவோ பிறரின்

எச்சில் பாத்திரங்களைத்

தேய்த்து

வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

காத்துக் கிடக்கிறாள்,

ஒரு நாள் நீ திரும்புவாய்

விழும் வீட்டைத் தூக்கி நிறுத்த,

விழும் சுவர்களைத்

தாங்கிப் பிடிக்க

கூரையையும் என.


4-புத்தாண்டு

எங்களை வரவேற்க

ஒளி வீசிக் கொண்டிருக்கிறது,

நாளின் புதிய பக்கங்கள்.

இந்தத் தாளில்தான் நாம்

எழுத வேண்டும், நமது

கதைகளை.

பின்பு, விரிவுரைகளையும்

கொடுக்க வேண்டியிருக்கும்.

நெருப்பின் பிடிலிருந்தும்,

குருதியின் கரங்களிலிருந்தும் கூட

காக்க வேண்டும்.

5-பிறந்த நாள்

(பிரதீப்பிற்காக)

என்னால் ஒன்றுமே

கொடுக்க முடிவதில்லை

நண்பர்களின் பிறந்த நாட்களில்.

இப்போதெல்லாம்,

வாழ்த்தைத் தவிர.

நாள் முழுவதும் கூடவே இருந்தேன்.

ஆனால்,

உடைந்த மனமோ

எங்கோ அலைந்து கொண்டிருக்கிறது,

காலி பாக்கெட்டை சபித்தபடி.

குரல் கொஞ்சம் மாறிவிட்டது.

என்னிடம் இல்லை,

நாளக்கான புதிய முகம்.

6-தாத்தா கயிறு திரிக்கிறார்

மாதம் முழுவதும் கயிறு

திரித்துக் கொண்டிருக்கிறார்,

தாத்தா,

சணல் நாரிலிருந்து.

வாரம் முழுவதும்

தயாராகும், கயிற்றுப் பந்துகள்,

பலப்பல.

கன்றும், பசுவையும் கட்டக் கயிறும்,

காளைக்கு மூக்கணாங்கயிறும்,

ஏர் மாடு கட்டவும்,

தயிர் கடையவும் கூட,

கயிறு திரிக்கிறார், தாத்தா.

கட்டில்கள், சிறியதும், பெரியதும்

சீராக்கக் கயிறும்,

முடிவில்

எங்களுக்கு நீளமான

ஊஞ்சல் கட்டவும்

கயிறு தருகிறார், தாத்தா.

பார்த்துக் கொண்டே இருக்கிறேன்,

நான் தாத்தாவின்

கலை நயம் மிக்க அந்தக் கைகளை,

ஆர்வத்துடன்.

கொண்டு செல்ல வேண்டும், நான்

இந்தக் கலையை,

நயம் மிக்க இந்த இழைகளை,

தாத்தாவின் கைகளை,

கைகளிலிருந்து, அந்த இழைகளை

அறுபடாமல்

என் குழந்தைகள் வரை.

7-பதட்டம்

பல சமயங்களில்

விடுபட்டுப் போகின்றன, பலதும்,

ஏதாவது ஒன்றும்

பதட்டத்தினால்.

தவறுகள் ஏதாவது

நிகழ்ந்து விடுகின்றன

பதட்டத்தினால்,

கடிதம் எழுதும் போது.

ஓவியனின் ஓவியத்தில்

இல்லாமல் போகிறது

நேர்த்தி.

ஓரிடத்தில் வெளுத்தும்,

ஓரிடத்தில் அடர்ந்தும்

விரவிக் கிடக்கின்றன,

வண்ணங்கள், சமனற்று.

விரல்கள் வெட்டுப் படுகின்றன,

காய்கள் நறுக்கி, நறுக்கி.

கழிந்த நாட்களை சற்றே

திரும்பி நாம் பார்க்க,

பக்கங்களில், நம் தவறுகள்

எல்லோரின் சாயலிலும்

புன்னகைக்கிறது.

••••

Comments are closed.