சங்கிலி ( சிறுகதை ) / கலைசேகர் ( மலேசியா )

[ A+ ] /[ A- ]

images (3)

பற்களை நறநறவெனக் கடித்துக்கொண்டே செல்வத்தைப் அகன்றக் கண்களால் பார்த்து ஒரு முறை முறைத்தார் வாசு ஐயா.

பாண்டியன் வீட்டில் காணாமல் போயிருந்த சங்கிலியைத் திருடியவர் யார் என்பதை மூன்று நாட்களில் அடையாளம் சொல்வதாய் ஐயா வாக்கு கொடுத்திருந்த மூன்றாவது நாள் அது. திருடனை அறிய… அறிந்தவுடன் அவனை அடித்து நொறுக்க… நொறுக்குவதைப் பல கோணங்களிலிருந்துக் காணொளியாக்க… காணொளியை இணையத் தளங்களில் பதிவேற்றம் செய்ய என பாண்டியனின் நண்பர்கள் பல நோக்கங்களுக்காக அங்கே திரண்டிருந்தனர்.

‘ஆ ஆ ஆ…ஆஹ் ஆஹ்’ என அலறல் போல தொடங்கி முடிவில் ‘ஜெய் முனி’ எனக் கண்களை உருட்டியபோது….பூஜைக்கு பொருந்திவந்து அனைவரையும் மிரட்டிவிட்டார் அவர்.

இதுவரை ஐயனிடம் இப்படியொரு ஆங்காரத்தை கண்டிடாத செல்வம் “சாந்தம் ஐயா சாந்தம்” என, ஸ்டவுட்டை எடுத்து நீட்டியதும் மடக் மடக்கென குடித்து முடித்து, மூன்று சுருட்டுகளை ஒன்றாக பற்றவைத்து பெரும் புகையெழுப்பி சுற்றும் முற்றும் பார்த்தவர் ஒரு அசட்டுச் சிரிப்புடன் “திருடன் இங்கேதான் இருக்கிறான்…இன்னும் இரண்டே நாட்கள் அவனுக்கு அவகாசம் தருகிறேன். நான் காட்டிக்கொடுத்து அவனை அவமானம் படுத்துவதற்குள், அவனே சங்கிலியை கொண்டு வந்து என் காலடியில் வைத்து, “ஜெய் முனி… என்னை மன்னி” என்று மன்றாடினால் தப்பிப்பான். தவறினால்… ம்ம்ம்ம்ஹ்ஹ்ஹஜ்ஜை…. என்னை பற்றி தெரியுமுல” என்று ஆவேசத்துடன் அவருக்கே உரிய கரகரக்கும் ஓங்கார குரலிலே எச்சரித்தார். பலர் அப்படியே அவர் காலில் விழுந்ததும் கூட்டத்தில் ஒரு சாந்தம் நிகழ்ந்திருந்தது.

எந்த அசம்பாவிதமும் நடக்காமல் அன்றைய அருள் பூஜை முடிந்திருந்ததை வாசு ஐயாவும், செல்வமும் பெரும் அதிஷ்டவசமென்றே கருதினார்கள். கூட்டம் கலைந்து செல்லும்வரை இருவரும் நீண்ட நேரம் ஐயாவின் நாமங்களை ஜபித்தவாறு அமர்ந்திருந்தனர். உள்ளுக்குள்ளேயே வாசு ஐயாவுக்கு எல்லோரின் மீதும் சந்தேகம் மாறி மாறிப் பாய்ந்து. எந்த அறிகுறியும் தோன்றாத குழப்பத்துடன் வீட்டுக்கு புறப்பட்டார். அந்நேரமும் செல்வம் கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியிருந்தான்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, பாண்டியனுடைய தந்தை சண்முகம் என்பவரால்தான் இந்த முச்சந்தி முனியாண்டி ஐயா கோவில் ஒரு சூலத்துடன் சிறிய கொட்டகையாக தோற்றுவிக்கப்பட்டது. அவர் உடம்பில் ஐயன் இறங்கி குறி சொன்னால் அப்படியே பலிக்கும் என மிக பரவலாக பேசப்பட்டது. அவரை ‘சாமி’ என்றுதான் அனைவரும் அழைப்பார்கள். சாமியென்பதே அவரின் நிஜப்பெயர் எனப் பலரும் நினைத்திருந்தார்கள். அதற்கேற்ப அவரும் நீண்ட முடியும் அடர்த்தியான மீசை தாடியுடன் காணப்படுவார். அவரின் மானசீக சீடர்களாக வாசுவும், செல்வமும் சில காலங்கள் தொண்டாற்றியிருந்தனர். வயதாகிவிட்டதால் சண்முகம் சாமிக்கு உடல் நலமின்றி, அருள் பூஜைகள் கொஞ்ச நாட்களுக்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. சன்னதியின் தீபாராதனை பூஜைகளை வாசுவும் செல்வமும்தான் கவனித்துக்கொண்டனர்.

அச்சமயம் வியாபாரத்தில் பெரும் நஷ்டங்களை சந்தித்து, பெரும் பணச்சிக்கலால் திண்டாடிக் கொண்டிருந்த வோங் என்ற சீனர், சாமியின் சிறப்பைக் கேள்விப்பட்டு ஆலயத்தை நாடி வந்தபோது, அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே முதன் முறையாக வாசுவின் உடம்பில் ஐயன் இறங்கி… கணித்துக் கொடுத்த நான்கு இலக்கண எண்கள் முதல் பரிசில் வெற்றி பெற்றது.

தேவைக்கும் அதிகமான தொகையை வென்ற மகிழ்ச்சியில் வோங் ஒரு பகுதியை ஆலயத்திற்கே நன்கொடை செய்தார். கொட்டகையாக இருந்த ஆலயம் ஓர் அழகான சிறியக் கோயிலாக உருமாறியது.

நுழைவாயின் இரு புறத்திலும், முன்னங்கால்களை உயர்த்தி நிற்கும் குதிரைகள் பக்தர்களைத் தலைசாய்த்தப்படி வரவேற்கும்படி அமைக்கப்பட்டிருந்தது. உள்ளூர்காரர் செய்த சிலைகளென்பதால் குழந்தைகள் அவற்றை குதிரைகளென்று நம்பாமல் பதற கூடும். பக்தர்கள் உள்ளே நுழைந்ததும் நின்று ஐயனை தரிசிப்பதற்கு, அமர்ந்து அருள் பூஜைக்காகக் காத்திருப்பதற்கும் வசதியான முகப்பறை அமைக்கப்பட்டிருந்தது. சுவர்களில் முனியாண்டி ஐயாவின் பலவித அவதார உருவப் படங்கள் வண்ணவண்ணச் சாயங்களால் வரையப்பட்டிருந்தன. மூலஸ்தானத்திற்கு முன் அகன்ற சிகப்பு திரைசீலை மாட்டப்பட்டது. உள்ளே ஆறடி உயரத்தில் ஆங்கார திருவுருவச் சிலையாய் முனியாண்டி ஐயா அமைக்கப்பட்டார். அவரின் இரு பக்கங்களிலும் நாய் உருவ சிலைகள் அமர்ந்திருக்கும். சன்னதியின் உள்ளேயே குறி சொல்லும் பூஜைகள் நடப்பதற்காக விசாலமான இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

புதிய ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடந்து சில நாட்களில் சண்முகம் சாமி மாரடைப்பால் காலமானார். அதிலிருந்து ஆலயத்தின் முழுப் பொறுப்பும், குறி சொல்லும் அந்தஸ்தும் வாசுவுக்கே அமையப்பெற அவர் ‘வாசு ஐயா’ என பக்தர்களால் அழைக்கப்பட்டார். வாசுவின் கருமை நிறமும் கட்டான உடல் வாகும், சுருட்டை முடியும், முறுக்கு மீசையும், முனியாண்டி ஐயா அவதாரத்திற்கு மிக பொருந்தியிருந்தன. ஒரு தலைப்பாகை கட்டி, கழுத்தில் சாட்டை, ஒரு கையில் கத்தி, மறு கையில் சுருட்டும் கொடுத்துவிட்டால் அப்படியே தத்ரூபமாக முனியாண்டி தான்.

அவர் சொல்லும் குறிகளும் ஆசீர்வாதமும் நிறைய பேருக்கு பலனளிக்க, மாற்றங்களைக் கண்ட பல பக்தர்கள் ஆலயத்தின் மானசீக நலம் விரும்பிகளாகியிருந்தனர். தங்களுக்கு நடந்த நன்மைகளை பார்ப்பவர்களிடமெல்லாம் பகிர்ந்துகொண்டனர். அதே சமயம் இவ்வாலயத்தைப் பற்றியும், பூஜைகளைப் பற்றியும் தவறாக பேசிய ஒருத்தன், ஐயன் எல்லைக்கு முன்னேயே விபத்துக்குள்ளாகி மரணித்த செய்தி இவ்வாலயத்தையும் வாசு ஐயாவையும் மிக பிரபலமாக்கியது.

ஒரு சுற்றுலா தளம் போல பேருந்து பிடித்தெல்லாம் மக்கள் வருவதால், குறி சொல்லும் பூஜைகள் அனுதினமும் நடந்தேறத் தொடங்கிற்று. பூஜைப் பொருட்கள் விற்கும் கடை, பூக்கடை, தோசை தேநீர் கடைகளென சில வியாபாரங்கள் ஆலயத்தின் வளாகத்தில் நிரந்தரமாக செயல்படலாகின.

வரிசைப் பிரகாரமாக ஐயாவை சந்திக்க எண்கள் வழங்கப்படும். பிரச்சனைகளோடு வரும் மக்களை ஒவ்வொருவராக செல்வம்தான் முதலில் நேர்காணல்கள் செய்வார். பிரச்னைகளுக்கேற்ப பூஜைப் பொருட்களைப் பட்டியலிடுவது, தட்சணையை நிர்ணயிப்பது, ஐயனிடம் முறையிட்டு தயார்படுத்துவது போன்ற பணிகள் யாவையும் கவனிக்கும் பொறுப்புகளை செல்வமே சீராக நிர்வாகிப்பார். ஆலயத்தையும், ஐயா அலங்காரங்களையும், பூஜைகளையும் மிகச் சிறப்புடன் வழிநடத்தவும் வாசு ஐயாவின் வலது கரமாக செயல்படுபவர் செல்வமே.

செய்வினைகளை அகற்றும்படியாக, பக்தர்கள் மேனியில் உருட்டியப் பழங்களிலிருந்து ஊசிகள் மற்றும் தலைமுடிகளை எடுப்பது போன்ற விடயங்களை நம்பும்படி தயார் செய்யும் வித்தகரும் செல்வமே. ஒற்றை ஆளாகவே நின்று கோவிலின் எல்லா வேலைகளையும் செய்யக்கூடியவர் செல்வம். மற்றபடி பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும் சமயங்களில் மட்டும், உதவிக்கு சில நம்பத்தக்க நலம் விரும்பிகள் அழைக்கப்படுவர். ஆலயத்தின் மாதாந்திர வருமானம் அங்கிருந்த மருத்துவமனைகளையே மிஞ்சத் தொடங்கிற்று.

செல்வத்திற்கும் மருள் வரும். முதல் முறை பார்ப்பதற்கு ஐயனே வந்து இறங்கியதைப் போலிருந்தாலும், அது ஐயனின் காவல் விலங்கான பைரவன் என்பது வாசு ஐயா சொல்லித்தான் பிறருக்கு தெரிய வந்தது. அதைக்கேட்டவுடன் வந்து இறங்கியிருந்த பைரவனும் நாக்கை நீட்டிக்கொண்டு, ஊளையெல்லாம் விடுத்தது. ஒவ்வொருநாள் அருள் பூஜையின் முடிவிலும் வாசு ஐயா உடம்பில் முனியாண்டியும், செல்வத்தின் உடம்பில் பைரவனும், ஒரே நேரத்தில் இறங்கியிருக்க, குனிந்து அமர்ந்து ஊளையிடும் பைரவன் முதுகில், ஒய்யாரமாய் இடதுகாலை தூக்கி வைத்துக்கொண்டு, பற்களைக் கடித்துக்கொண்டே முனியாண்டி ஐயா நிமிர்ந்து நிற்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும். பக்தர்கள் அந்தக் காட்சியை படம் பிடித்துக்கொண்டு தங்கள் திறன்பேசியின் முகப்பு பக்கத்திலும், முகநூலிலும், புலனக்குழுக்களிலும் பரவலாக பதிவிடுவது வழக்கம். நண்பர்கள் மத்தியில் செல்வத்திற்கு ‘நாலு காலு’ என்ற புனைப்பெயரே உருவாகியிருந்தது.

ஆலயத்திற்கு அடிக்கடி வந்துச் செல்லும் தேவியுடன் செல்வத்திற்கு காதல் மலர்ந்திருந்ததை அறிந்து, முனியாண்டி ஐயா வன்மையாக கண்டித்தார். மாங்கல்ய பொருத்தமே கிடையாது….இல்லறம் நிலைக்காது என்று தேவியின் பெற்றோரை எச்சரித்தார். ஆலயம் பக்கமே வரக்கூடாதென்று செல்வத்தையும் விரட்டி விட்டார். மறந்துவிடுவதாக வாக்களித்து மன்னிக்ககோரியப் பிறகே செல்வம் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

பத்து நாட்களுக்கு முன்பு, சண்முகம் சாமியின் தலை திவச பூஜையை பாண்டியன் வீட்டிற்குச் சென்று நடத்த வேண்டிய நிலையில், இருவரும் சென்றிருந்தனர். சண்முகம் சாமியின் புகைப்படத்தில் அணிவிக்கப்பட்டிருந்த புலி நகங்கள் பொருத்திய பத்து பவுன் தங்க சங்கிலிதான் காணாமல் போய்விட்டதாம். பாண்டியனின் குடும்பத்தார், நண்பர்கள். அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் என நிறைய கூட்டம் வந்திருந்ததால், இந்த திருட்டுக் காரியத்தை யார் செய்திருப்பார்கள் என கண்டறிவதில் பெரும் குழப்பாகி விட்டது.

பூஜையை முடித்து விட்டு ஆலயத்திற்கு திரும்பியபோதுதான், சங்கிலி தொலைந்துவிட்டது என்ற தகவலோடு பாண்டியனும் அவனது சில நண்பர்களும் சன்னதிக்கு வந்திருந்தார்கள். மிக ஆவேசத்துடன், “ஐயனை உடனே பார்க்க வேண்டும்”. “திருடியவனை அடித்தே கொல்ல வேண்டும்” என துடித்தார்கள். அவர்களின் பேச்சும் பார்க்கும் பாணியும் வாசு ஐயாவையே சந்தேகப் படுவதுப்போல் புலனானது. பதற்றத்துடன் அன்றிரவு ஐயனை அழைத்ததில், ஐயா மூன்று நாட்களில் கண்டிப்பாக சொல்வதாய் கூறி சூழ்நிலையை தற்காலிகமாக நிதானமாக்கியிருந்தார்.

அந்த மூன்று நாட்கள் ஏதோ நரகத்தில் நகர்வதாய் உணர்ந்தார்கள். ஒரே குழப்பம். நிம்மதியாய் எதையும் செய்ய முடியவில்லை. செல்வம்தான் பக்கபலமாய் இருந்து “ஐயா நிச்சயமாக திருடனை அடையாளம் காட்டுவார்” என நம்பிக்கையூட்டினார். அந்த வார்த்தைகள் மேலும் மன அழுத்தத்தை தருவதை செல்வத்திடம் காட்டிக்கொள்ள முடியாமல் தவிக்கலானர் அவர்.

மூன்றாவது நாள் அருள் பூஜையில், ஐயன் கட்டளையிட்டதற்கிணங்க, அடுத்த இரண்டு நாட்களில் எந்த திருடனும் முன்வந்து ஒப்புக்கொள்ளவில்லை. இன்றிரவு ஐயன் திருடனை அடையாளம் காட்டியே ஆக வேண்டும் என்ற இக்கட்டான நிலை. எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.

இதுவரை எத்தனையோ அருள் பூஜைகளைச் செய்து அசத்தியுள்ள வாசு ஐயாவும், செல்வமும் இன்றைய தின பூஜையை எண்ணி சற்று கலங்கியிருந்தனர். பாண்டியனின் நண்பர்கள் அவ்வளவு ஆபத்தானவர்கள். இவ்வளவு காலங்கள் ஆலயத்திற்கு கவசம் போல் பாதுகாப்பு அளித்தவர்களும் இந்த படையினர்தான். இன்று மிரட்டலாக வந்து நிற்கின்றனர்.

அனைவரும் ஆவேசமுடன் காத்திருந்த அருள் பூஜை தொடங்கியது. வாசு ஐயா தீபாரத் தட்டோடு ஆலயத்தை சுற்றி வருகையில் “இன்னைக்கு மட்டும் நல்ல பதில் வரல, செத்தாய்ங்க” என்று ஒருவன் காதில் விழும்படி முனவினான். எப்போதும் சிரித்துப் பேசும் பாண்டியனின் குடும்பத்தார், முகத்தைக் கூட பார்க்காமலேயே உம்மென்றிருந்தார்கள். வாசு ஐயாவுக்கு உடம்பில் அறவே தெம்பில்லாதது போலுணர்ந்தார்.

வழக்கமாக ஊதுபத்தியை ஏற்றிவைத்து, உடுக்கையொலி எழுப்பியதும் மின்னல் போல் வந்திறங்கும் ஐயா, இன்று தாமதித்தார். செல்வம் இரண்டு பாடல்களை மன்றாடி பாடி அழைத்தும் ஐயா வந்தப்பாடில்லை.

எலுமிச்சைக் கனியை அறுக்கும் சாக்கில் அப்படியே விரலையும் கொஞ்சம் நறுக்கிக்கொண்டால், சகுனம் சரியில்லை, துஷ்ட தேவதைகளின் தொல்லை, என்று எதையாவது சொல்லி அருள் பூஜையைத் தள்ளிப் போட்டு விடலாம் என செயல்பட்டபோது, கத்தி கைக்கொடுக்கவில்லை. கனியை பிளப்பதற்கே திணறியது. செல்வம் சற்று பதறிப்போய் “மன்னிக்கணும் ஐயா” என தலையைக் குனிந்திக்கொண்டார்.

‘ம்ம்ம்ஹ்ஹ்ஹ’ என உறுமிக்கொண்டே பச்சைக்கனியைப் பிய்த்து நான்குப் பக்கங்களிலும் வீசிவிட்டு, வெட்டாது என்ற நம்பிக்கையில் கத்தியால் ‘சரக் சரக்’கென தோள்களிலும் வயிற்றுப் பகுதியிலும் கீறிக்கொண்டார் அவர். மோசக்கார கத்தியின் கூர்மை திடீரென எப்படி கூடியிருந்ததோ, அவர் மேனியெங்கும் பல இடங்களில் கீறல்கள் ஆழமாக பதிந்து உதிரம் பீறிட்டு வடிந்தோடியது.

வடியும் உதிரத்தை அனைவரின் நெற்றியிலும் சூட்டிக்கொண்டே, இரண்டு புட்டில் ஸ்டவுட்டுகளையும் சிலபல சுருட்டுகளையும் தீர்த்து முடித்திருந்தார். செய்வதறியாமல் திடீரென மயங்கி விழுந்து மலையேறி மனிதனானார். ஜனங்கள் மத்தியில் சலசலப்பு சஞ்சரித்தது.

யாருமே எதிர்பார்த்திராத நேரத்தில் செல்வத்திற்கு அருள் புகுந்தது. எப்போதும் போல பைரவன் தான் வந்துவிட்டது என மற்றவர் நினைப்பதற்குள், தன் நெஞ்சில் டமார் டமாரென மூன்று முறை குத்திக்கொண்டு….”முனியாண்டிடா” என நெஞ்சை நிமிர்த்தி கர்ஜித்தார். வாசு ஐயாவிற்கு சற்று குழப்பமிருந்தாலும், அவர் கையாலேயே செல்வத்திற்கு தலைப்பாகை அணிவித்து சுருட்டை எடுத்துக் கொடுத்து பற்றவைத்தார்.

“சங்கிலி திருடியவனை காட்டட்டா”? என ஒரு பயங்கர சிரிப்பு சிரித்தார் செல்வம். “சொல்லுங்கய்யா! அதுக்குதான் காத்திருக்கிறோம்” என்று சிலர் ஆவலாய் கேட்டார்கள்!

“அவன் யாரென்று சொல்லிவிட்டால், இங்கே அடிபிடிகள் நடக்கும். பலர் நிம்மதி சிதையும். தற்கொலையொன்று நடக்கும். பரவாயில்லையா?”…..கூட்டம் சற்று நேரம் அமைதிபூண்டது.

“பரவாயில்லை ஐயா சொல்லுங்கள். கூட இருந்தே துரோகம் பண்ண அவன் சாவட்டும்” என்றொரு குரல்.

பாண்டியனின் அம்மா பார்வதியைக் கூப்பிட்டு

“நான் சங்கிலியை இப்போதே மீட்டுத் தருகிறேன். சங்கிலி கிடைத்துவிட்டால், திருடியவன் பற்றி கேட்கக்கூடாது. அவனை நான் பார்த்துக்கிறேன். சம்மதமா?” என்றார்.

“என் வீட்டுக்காரர் ரொம்ப ஆசைப்பட்டு அணிந்திருந்த சங்கிலி அது. கிடைத்தால் போதும் ஐயா” என்றவாறு கண்கலங்கினார் பார்வதி.

“சங்கிலி கிடைத்ததும் யாரும் வாக்கு தவற மாட்டீர்களே” செல்வத்தின் மறு கேள்வி.

“மாட்டோம் ஐயா” என்ற பதில் வந்ததும், செல்வம் பாண்டியனை முன்னாடி வரச் சொல்லி “அந்தத் தேங்காயை எடு” என்றார். தலையைச் சொறிந்துக்கொண்டே பாண்டியன் தேங்காயை எடுத்துக்கொடுக்க, அந்த தேங்காயை எடுத்து சில நொடிகள் தன் நெற்றியில் வைத்து ஏதோ மந்திரங்களை ஜபித்தார். மூன்று முறை ஐயன் சிலையை நோக்கி தேங்காயை சுற்றிவிட்டு தலையால் இடித்து தேங்காயை உடைத்தார்.

அனைவரும் அதிர்ந்துப் போகும்படி சண்முகம் ஐயாவின் காணாமல் போன சங்கிலி அந்த தேங்காயின் உள்ளிருந்து வந்தது. பார்வதி அம்மா “ஐயா” எனக் கதறி அழுதுக்கொண்டே அந்தச் சங்கிலியை தன் கண்களில் ஒத்திவைத்துக் கொண்டு செல்வத்தின் கால்களில் விழுந்து அழுதார். மற்றவர்களும் மனதார செல்வதை மண்டியிட்டு வணங்கினார்கள்.

வாசு ஐயாவும் செல்வத்தின் காலில் விழ, தனது இடதுக் காலை தூக்கி அவர் முதுகில் வைத்து கம்பீரமாய் காட்சித் தந்தார் ‘செல்வம் ஐயா’. தன்னையறியாமல் ‘ஊஊஊ’ என ஊளையிடத் தொடங்கினார் வாசு.

••••

Comments are closed.