சமீபத்தில் படித்த புத்தகங்கள் – 1 – பி.கே. சிவகுமார்

[ A+ ] /[ A- ]

முன்னுரை:

பொதுவில் விரிவாகப் பகிர்கிற, எழுதுகிற, பெயர் வாங்குகிற மனநிலை முதலில் இப்போதெல்லாம் வாய்ப்பதில்லை. இது வரமா, சாபமா எனத் தெரியாது. என் வசதிக்கு வரமென நினைத்துக் கொள்கிறேன். மனநிலை வாய்த்தால் நேரம் எப்படியும் கிடைத்துவிடும். ஆனாலும் ஒத்த ஆர்வம் உடைய நட்புகள் மிகச் சிலர் கொண்ட சிறு வாட்சப் குழுமங்களில் படித்தவை என்ன, பார்த்தவை என்ன என்ற பெயர்களையேனும் தொடர்ந்து பகிர்ந்துதான் வருகிறேன். இயலும்போதெல்லாம் அவை குறித்த சிற்சில வரிகளையும். அந்தத் திருப்தியில் அடுத்தது நோக்கி நகர்ந்து விடுகிறேன்.

தேடல் இருக்கிறது. அதைப் பொதுவில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா என்ற எண்ணம் அடிக்கடி தலைதூக்குகிறது. ஒருவிதமான அலுப்பு, உற்சாகமின்மை, என்னவோ நினைத்துக் கொள்ளட்டும் என்ற விட்டேற்றி குணம் உலகத்தைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாய்ப் பரவுகிறது. என்ன சொல்லி என்ன ஆகப் போகிறது என்ற அலுப்பு அல்ல. சொல்லிக் கொள்ள வேண்டியவை முதலில் எனக்கே என வந்த தெளிவு.

வயதாக ஆக எது குறித்தும் இருந்த திட்டவட்டமான கருத்துகள் கேள்விக்குரியதாகின்றன. இது வளர்ச்சியா குழப்பமா எனத் தெரியவில்லை. குழப்பமும் கூட வளர்ச்சிக்கான விரைவான படிக்கல்தான். எல்லாவற்றையும் கேள்விக்குரியதாக்கும் சிந்தனைகளுக்குப் பொதுவில் பெரிய ஊக்கம் கிடைப்பதில்லை. நான் எதிர்பார்ப்பதுமில்லை. எதிர்மறை கருத்துகளும் எதிர்ப்புமே மிகும். அவற்றுக்குப் பதில் சொல்வதில் விரயமாகிற நேரத்தோடு அது நம் சிந்தனையை நம் போக்கில் வளரவிடாது முட்டுக்கட்டை போடுகிறது. இப்போதெல்லாம் எல்லாவற்றைப் பற்றியும் உறுதியிட்டு அறுதியாகக் கூறுகிறவர்களை நான் கவனிப்பதோடு சரி. அப்படிப்பட்ட நிலைகளில் இருந்து நானும் நகர்ந்தவன் என்ற முறையில், மாற்றத்துக்கு உதவாத நிலைப்பாடுகள் எனக்கு அயர்ச்சியளிக்கின்றன. அவை அரசியல், இலக்கியம் , சமூகம் எது குறித்து இருந்தாலும்.

தமிழின் செழுமையான மரபிடம் இருந்தும், அதை எனக்குப் போதித்த இடதுசாரி ஆசான்களிடம் இருந்தும், மகாத்மா காந்தியிடமிருந்தும் நான் பெற்ற மனிதாபிமானமும், ஜனநாயக நம்பிக்கையும், அஹிம்சையும், கோட்பாடுகளுக்குள் முடங்காது திமிறும் சுதந்திரச் சிந்தனையுமே என் ஆதார சுருதிகள். ஆதார சுருதிகளையும் உரசிப் பார்க்கும் சுதந்திரத்தையும் என் ஆசான்களே கொடுத்திருக்கிறார்கள். கீழே விழுந்து கிடக்கிறவர்களும், அடிப்படை அறம் மறுக்கப்படுகிறவர்களுமே என் ஆதரவுக்குரியவர்கள். ஆனாலும் அவர்களின் போராட்டமும் அற விழுமியங்களை மீறக் கூடாது என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருக்கிறது. எதிரியே நம் ஆயுதத்தைத் தீர்மானிக்கிறார் என்பது போன்ற தத்துவங்களில் எனக்கு இப்போது நம்பிக்கை இல்லை.

என்னுடைய உள்முகமான தேடலின் பொருட்டுப் பொதுவில் நான் எழுதுவதை நிறையக் குறைத்து விட்டேன். இடையில் பொருள் தேடும் உலகின் கடமைகள் பெரிய தடை இல்லை என்றாலும், என்னைப் பின்னிருந்து எழுது எழுது என உலுக்குகிறப் பிரச்னைகள் இல்லை. நான் வேண்டுமானால் பிறருக்குப் பிரச்னையாக இருக்கலாம்.

ஆனாலும் – தனிப்பட்ட அளவில் தொடர்ந்து படித்துக் கொண்டும் திரைப்படங்கள் பார்த்துக் கொண்டும்தான் இருக்கிறேன். சொல்லப்போனால், கடந்த ஒன்றரை வருடங்களாகப் பார்த்ததைவிட நிறைய படித்தேன். இவையெல்லாம் எனக்குள் நான் கொண்டிருக்கிற அலைச்சலின், தேடலின் ஒரு பகுதிதான். இதையே உடற்பயிற்சி அல்லது ஓட்டம் ஆகியவற்றின் மூலமும் என்னால் நிரப்பிக் கொள்ள முடியும். அவற்றையும் முயல்கிறேன்.

எழுத்தும் திரைப்படமும் எனக்கு ஒரு முழுதான கிரியா ஊக்கியாகவோ, மருந்தாகவோ இல்லை. எனக்குள்ளில் இருந்துதான் வாழ்வதற்கான, வாழ்வை நோக்குவதற்கான பார்வைகளும், உறுதியும் எனக்குப் பிறக்கின்றன. எனக்குள்ளில் இருந்துதான் என் தற்கால நம்பிக்கைகளுக்கு வலுவான எதிர்த்தரப்பும் கிடைக்கிறது.

அந்த வாழ்க்கை புரட்டிப் போடுகிற சமயங்களில், பாலையென வெக்கை கக்கும் பொழுதுகளில், பாறையென என்னையாக்கிவிடுமென அச்சுறுத்தும் சந்தர்ப்பங்களில், ஒரு சிறிய இளைப்பாறல் போலவே நான் புத்தகங்கள், திரைப்படம், உடற்பயிற்சி ஆகியன பக்கம் ஒதுங்குகிறேன். இவ்விஷயங்களில் எனக்குள் இருக்கும் ஓர் உள்ளொழுங்கு, தொடர்பயிற்சி காரணமாக இவற்றைத் தொடர்ந்து செய்ய முடிகிற தேர்ச்சி பெற்றிருக்கிறேன். புத்தகங்கள், திரைப்படங்கள் இல்லாமலும் தனக்கான பாதையை ஒருவர் கண்டடைய முடியும். அதனால் வாசிப்பை அளவுக்கு மீறி புனிதப்படுத்துகிற மார்க்கெட்டிங் யுக்திகளை இப்போது நான் நம்புவதில்லை.

வெளிப்பார்வைக்கு நான் கரை தொட்டு ஓடினாலும், மணல் வெளுத்துக் காய்ந்தாலும், உள்ளுக்குள் என் தாகம் மட்டுமேனும் தீர்க்கும் சுனைநீர் எனக்குள் சுரந்து கொண்டேதான் இருக்கிறது. எனக்கு அந்த நீர் போதும். அந்த நீர் அடுத்தவருக்கு ஏற்குமா என்றும் எனக்குத் தெரியாது.

என் வாசிப்பில், ரசனையில், கருத்துகளில் – உடன்பட்டாலும் எதிர்பட்டாலும் – மதிப்பு வைத்திருக்கிற அன்பு நண்பர்கள் சுரேஷ் கண்ணன், வெற்றிவேல், தமிழில் பெண் எழுத்தாளர்களில் எழுத்தின் உச்சம் தொட்ட மிகச் சிலரில் ஒருவர் என நான் நினைக்கும் உமா மகேஸ்வரி ஆகியோர் எனக்குப் பிடித்த 10 புத்தகங்களைப் பட்டியலிட அழைத்திருக்கிறார்கள். அவர்களின் அன்புக்கு முதலில் நன்றி.

இப்படியான “பிடித்த 10 புத்தகங்கள்” விளையாட்டை வலைப்பதிவு காலங்களில் விளையாடிய நினைவு இருக்கிறது. அதனால் அதையே திருப்பிச் செய்யாமல், சமீபத்தில் படித்த புத்தகங்கள் குறித்துச் சிலவரிகளேனும் இத்தொடரில் எழுத ஆசை. இந்த இழை மாற்றத்துக்கு என்னைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

மேலும் நான் இப்போது பெரும்பாலும் மின்னூல்களுக்கு மாறிவிட்டேன். அதனால், இதழின் அட்டைப்படத்தை மின்னூலில் இருந்து எடுத்துப் பகிர இயலாவிட்டால், நூலின் தலைப்பையும் ஆசிரியர் பெயரையும் தர முயல்கிறேன். அதற்கும் பொறுத்துக் கொள்ளவும்.

தமிழ் மின்னச்சைக் கைத்தொலைபேசியில் செய்கிற வழக்கத்துக்கு நான் வந்துவிட்டேன். மடிக்கணினி பயன்பாடு அலுவலகத்துக்கு மட்டும் என்றாகி விட்டது. இப்பதிவைக் கூட நேரடியாகக் கைத்தொலைபேசியில்தான் எழுதுகிறேன். ஆதலால், என் பதிவுகள் தொடர்பற்ற குறிப்புகளாகத் (Bullet Points) தெரியலாம்.

(தொடரும்)

Comments are closed.