சார்லஸ் புகவ்ஸ்கி – மொழிபெயர்ப்பு கவிதைகள் : ஆங்கிலம் : சார்லஸ் புகவ்ஸ்கி [ Charles Bukowski 1920 – 1994 ] – தமிழில் : தி.இரா.மீனா

[ A+ ] /[ A- ]

சார்லஸ் புகவ்ஸ்கி

சார்லஸ் புகவ்ஸ்கி கவிதை ,சிறுகதை,நாவல் என்ற பன்முகம் கொண்ட படைப்பாளி. ’laureate of American lowlife ” என்று டைம் பத்திரிக்கையால் வர்ணிக்கப்பட்டவர். டி.ஹெச்.லாரன்ஸ்,ஹென்றி மில்லர், பியோதர் தஸ்தா யெவ்ஸ்கி, லி.பை ஆகியோர் இவரின் படைப்புலக முன்னோடிகள்.

**

புன்னகைக்கும் இதயம்
உன் வாழ்க்கை உன் வாழ்க்கைதான்
அதை மற்றவர்களுக்குச் சமர்ப்பிக்காதே.
கண்காணிப்புடன் இரு.
வெளிவர வழிகள் உண்டு.
எங்கோ வெளிச்சமிருக்கிறது.
அது போதிய வெளிச்சமாக இல்லாமலிருக்கலாம் ஆனால்
அது இருட்டை விரட்டுகிறது.
கண்காணிப்புடன் இரு.

கடவுளர்கள் உனக்கு வாய்ப்புகள் தரலாம்.
அவர்களை அறிந்து கொள்.
அவர்களை இணைத்துக் கொள்.
உன்னால் சாவை விரட்ட முடியாது ஆனால்
சில சமயங்களில் வாழ்வின் சாவை, உன்னால் துரத்தமுடியும்.
அதை அடிக்கடி செய்யக் கற்றுக் கொள்வதன் மூலம்,
அதிக வெளிச்சமுண்டாகும்.
உன் வாழ்க்கை உன் வாழ்க்கைதான்.
நீ வாழும்போதே தெரிந்துகொள்.
நீ அற்புதமானவன்
உனக்குள் களித்திருக்க கடவுளர்கள் காத்திருக்கின்றனர்

அதற்கு எதுவும் உதவமுடியாது
மனதிலிருக்கும் அந்த ஓரிடத்தை
என்றும் நிரப்பி விடமுடியாது
ஓரிடம்
மிகச்சிறந்த நேரங்களின் போதும்
மிகச்சிறந்த தருணங்களின் போதும் கூட

நமக்குத் தெரியும்
எப்போதையும் விட அது
நமக்குத் தெரியும்
மனதிலிருக்கும் அந்த ஓரிடத்தை
என்றும் நிரப்பி விடமுடியாது
நாம் காத்திருப்போம்
அந்த இடத்தில்.
ஓ, ஆமாம் ..

தனிமையில் இருப்பதை விட
மோசமான விஷயங்களுமுண்டு.
ஆனால் பெரும்பாலும் இதை உணர்வதற்குள்
பல தசாப்தங்களாகி விடுகின்றன

பெரும்பான்மை நேரங்களில்
நீங்கள் செயல்படும் போது
அது காலம் கடந்ததாகிறது
காலம் கடத்தலை விட
மிக மோசமானது எதுவுமில்லை.

எனில் இப்போது?
வார்த்தைகள் வந்து போய்விட்டன,
நான் நோயுற்றிருக்கிறேன்.
தொலைபேசி ஒலிக்கிறது,பூனை உறங்குகிறது.
லிண்டா சுத்தம் செய்கிறாள்.
நான் வாழ்வதற்காக காத்திருக்கிறேன்.
சாவதற்காக காத்திருக்கிறேன்.
துணிவைக் காட்ட வேண்டுமென்று விரும்புகிறேன்.
அது அசிங்கமான தீர்வு
ஆனால் வெளியிலிருக்கும் மரத்திற்குத் தெரியாது;
பின் மதியத்தின் சூரிய ஒளியில்
காற்றோடு அது அசைவதைப் பார்க்கிறேன்.
இங்கு பிரகடனம் செய்ய எதுவுமில்லை.
வெறும் காத்திருப்புத்தான்.
ஒவ்வொன்றும் அதைத் தனியாய் எதிர்கொள்கிறது.
ஓ, ஒருகாலத்தில் நான் மிகச் சிறியவனாக இருந்தேன்,
ஓ, ஒரு காலத்தில் நம்பமுடியாத அளவிற்குச்
சிறியவனாக இருந்தேன்!
கவிதை
சில நல்ல கவிதைகளை
எழுதுவதற்கு
நிறைய
விரக்தி,
அதிருப்தி மற்றும்
தெருட்சி
ஆகியவை உண்டாகின்றன.

அது எல்லோராலும்
எழுதப்படுவதற்கோ
அல்லது படிக்கப்படுவதற்கோ
இயலாதது.
இரக்கத்துடனிரு
எவ்வளவு காலாவதியானதாக
நகைப்புக்கிடமானதாக அல்லது அருவருக்கத்தக்கதாக
இருப்பினும்
மற்றவரின் அபிப்ராயங்களை
புரிந்து கொள்ள வேண்டுமென்று
நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது.
அவர்களின் முழுத் தவறுகளையும்
அவர்களின் சேதமான வாழ்க்கையையும்
இரக்கத்தோடு ’பார்க்க வேண்டுமென்று ’
சொல்லப்பட்டிருக்கிறது.குறிப்பாக
அவர்கள் முதியவர்களாக இருந்தால்.

ஆனால் நாம் செய்யும் அனைத்திற்கும்
வயதுதான் மூலம்.
அவர்கள் முதுமையடைந்து விட்டனர்.
அவர்கள் பார்க்க மறுக்கின்றனர்,
முன்னிறுத்தலின்றி வாழ்ந்திருக்கின்றனர்

அவர்களின் தவறில்லையா?
யாருடைய தவறு?
என்னுடையதா?

அவர்களின் அச்சத்திற்கு பயந்து
அவர்களிடமிருந்து என் அபிபிராயங்களை
மறைத்துக் கொள்ள
உத்தரவிடப்படுகிறேன்
முதுமை குற்றமில்லை.
ஆனால்
வேண்டுமென்றே வீணாக்கப்பட்ட
வாழ்வு வெட்கத்திற்குரியது.
பல வாழ்வுகள் வேண்டுமென்றே வீணானதாக இருக்கின்றன.

——–

Comments are closed.