சிகரெட் அட்டை விடுதூது ( சிறுகதை ) / சோ.சுப்புராஜ்

[ A+ ] /[ A- ]

images (8)

சென்னைப் புத்தகச் சந்தையில் வைத்து மறுபடியும் அவனைப் பார்த்த லெனினாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. அன்றைக்கு அங்கிருந்த பவளமல்லி என்னும் பதிப்பக ஸ்டாலில் அவளுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியாக இருந்தது. பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் அவளின் சிறுகதைத் தொகுப்பிற்கு ஒரு அற்புதமான முன்னுரை எழுதிக் கொடுத்து அவரே வெளியிடவும் இசைந்திருந்தார்.

யாரைப் பெற்றுக் கொள்ளச் சொல்லலாம் என்பது பற்றி பதிப்பாளரிடம் லெனினா பேசிய போது அவர் தான் அந்த ஆலோசணையைச் சொன்னார். இன்றைய தினத்தில் நம்முடைய ஸ்டாலுக்கு வருகை தரும் தீவிரமான இலக்கிய வாசகர் ஒருவரைப் புத்தகத்தின் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்ளச் சொல்லலாம் என்றார்.

”எப்படி ஒருவர் தீவிரமான வாசகரா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பீர்கள் ஸார்….”என்று அவரிடம் லெனினா சிரித்துக் கொண்டே கேட்டாள்.

“அதெல்லாம் சுலபமா கண்டுபிடிச்சிடலாம்மா. தீவிர இலக்கிய வாசகர்ன்னா கொஞ்சம் மந்திரிச்சு விட்டது மாதிரி இருப்பாங்க….”என்று சிரித்துக் கொண்டே சொன்ன பதிப்பாளர், “ஜோக்ஸ் அபார்ட். நம்மோடது ஒன்னும் பிரபலமான பதிப்பகம் இல்லம்மா. ரொம்பக் கொஞ்சம் பேர் தான் வருவாங்க. அவங்க எப்படிப்பட்ட புத்தகங்கள எடுத்துப் பார்க்குறாங்க, என்ன மாதிரியான புத்தகங்கள வாங்குறாங்கங்குறதக் கவனிச்சமின்னாலே கண்டுபிடிச்சிடலாம்…” என்றார்.

அதன்படியே அன்றைக்கு அவர் பதிப்பகத்திற்கு வருகிற ஒவ்வொருவரிடமும் பேசிக் கொண்டிருந்தார். கடைசியில் ஒருவனை லெனினாவிடம் அழைத்துக் கொண்டு வந்து, “இவர் பேரு இடும்பையன். இவர் தான் உங்களோட புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளப் போகிறார்….” என்று அறிமுகப் படுத்தி வைத்தார்.

இடும்பையன் என்கிற அவனுடைய பேரே லெனினாவிற்கு ஆச்சர்யமானதாகத் தோன்றியது. அதை விடவும் அவனைப் பார்த்ததும் மூன்று நாட்களுக்கு முன்பு அவனை வேறொரு சூழ்நிலையில் சந்தித்திருந்தது அவளுக்கு ஞாபகத்தில் நிழலாடியது.

அன்றைக்கு ஒரு மாலை நேரம். இருட்டுவதற்கு இன்னும் சற்று நேரமிருந்தது. லெனினாவும் அவளுடைய தோழன் இக்பாலும் – அவனுக்கும் கொஞ்சம் இலக்கியக் கிறுக்கு உண்டு – ஏதேதோ பேசியபடி கடற்கரை சாலையில் காலாற நடந்து கொண்டிருந்தார்கள்.

அவர்கள் நேப்பியார் பாலத்திற்கு அருகில் வரவும் ஒருத்தன் தலை தெறிக்க ஓடி வருவதும், ‘அவனைப் பிடிங்க; அவனைப் பிடிங்க…’ என்று சிலர் கத்தியபடி அவனைத் துரத்திக் கொண்டு வருவதும் தெரிந்தது. இக்பால் தான் ஓடி வந்தவனை எதிர்கொண்டு போய்க் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டான். அவன் திமிறிக் கொண்டிருக்க, விரட்டி வந்தவர்கள் அருகில் வரவும் அவர்களிடம் அவனை ஒப்படைத்தான்.

அவனுக்கு முப்பது வயதுக்குள் இருக்கும். நல்ல உயரமாய் திடகாத்திரமாய் பூசின மாதிரியான உடல்வாகுடன் இருந்தான். துரத்தி வந்தவர்களில் இருவர் ஓடி வந்தவனை மாறிமாறி முகத்திலும் வயிற்றிலுமாய் அடிக்கத் தொடங்கினார்கள். அதற்குள் அங்கு ஒரு சிறு கூட்டம் கூடிவிட்டது.

“என்ன ஸார், எதுவும் திருடிட்டு ஓடி வந்துட்டானா….?”என்று கேட்டான் இக்பால்.

”இல்லைங்க; திருடி இருந்தாலும் பரவாயில்லைங்க. நானும் என் பொண்டாட்டியும் பீச்சுல ஒரு படகுக்குப் பக்கத்துல உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தோம். இவன் கொஞ்ச தூரத்துல உட்கார்ந்து எங்களையே கவனிச்சிக்கிட்டு இருந்திருப்பான் போலருக்கு. என் மனைவி சாப்பிடுறதுக்கு ஏதாச்சும் வாங்கியாரச் சொன்னாள்.

நான் எழுந்து போகவும் இவன் என் மனைவி கிட்டப் போய் ஏதோ சம்பந்தம் சம்பந்தம் இல்லாமப் பேச்சுக் கொடுத்துட்டு இருக்கான். நான் திரும்பி வரவும் ஒரு சிகரெட் அட்டைய அவ கைல திணிச்சிட்டுத் திரும்பிப் பார்க்காமப் போறான். அதுல என்ன இருக்குன்னு பார்த்தா, இவனோட மொபைல் போன் நம்பர் எழுதி இருக்கு. பொம்மனாட்டிகளுக்கு எதுக்குங்க போன் நம்பர் குடுக்குறான்….” என்றார் ஓடி வந்தவர்களில் வாட்ட சாட்டமாய் இருந்தவர்.

அவருக்கும் நாற்பத்தைந்து வயதிற்கும் மேலிருக்கும். வயிற்றில் இருந்த தொப்பையும் கருகருவென சாயம் பூசப்பட்டிருந்த தலைமுடியும் அதை உறுதி செய்தன. ”எதுக்குடா போன் நம்பர் எழுதிக் குடுத்த….” என்றார் கூட்டத்திலிருந்த ஒருவர் அவனுடைய சட்டைக் காலரைப் பிடித்து உலுக்கியபடி.

”தவணைமுறையில ஃபேன், மிக்ஸி, கிரைண்டர் எல்லாம் வாங்கி விக்கிறேன் ஸார். தவணைய மாதாமாதம் வீட்டுல போயே வாங்கிக்குவேன். எதுவும் வேணுமின்னா போன் பண்ணுங்கன்னு சொல்லிக் குடுத்தேன்…..” என்றான் அவன் இலேசாய் விசும்பிக் கொண்டே. ”பொய்யுங்க; பீச்சுல வந்தா தவணை முறையில பொருட்கள் விப்பாங்க….” என்றார் விரட்டி வந்தவர்களில் இன்னொருத்தர்.

“சரி, என்ன கம்பெனிடா…..” என்றார் கூட்டத்திருந்து முதலில் கேள்வி கேட்டவர்.

“கம்பெனியெல்லாம் இல்லைங்க. நானே தனிப்பட்ட முறையில முதல் போட்டு பொருட்கள வாங்கி கொஞ்சமா லாபம் வச்சு விக்கிறனேன்ங்க….” என்றான் அடிபட்டவன்.

”எப்படி முழுப் பூசணிக்காயை சோத்துக்குள்ள அமுக்குறான்னு பாருங்க…..” என்றார் கோபமாய் தன்னுடைய மனைவிக்கு போன் நம்பர் எழுதிக் கொடுத்ததாகப் புகார் பண்ணியவர். அதற்குள் அங்கு சிறு கூட்டம் கூடி விட்டதை மோப்பம் பிடித்த போலீஸ்காரர் ஒருத்தர் ஓடி வந்தார். ”இங்க எதுக்குக் கூட்டம் போட்டுக்கிட்டு இருக்கீங்க, கலைஞ்சு போங்க….” என்று பொத்தாம் பொதுவாய் எல்லோரையும் விரட்டினார்.

கூட்டத்திலிருந்த ஒருவர் அவரிடம் அரையும் குறையுமாய் விஷயத்தைச் சொல்லவும், “என்கிட்ட விடுங்க; நான் விசாரிக்கிறேன்….” என்றவர், “இப்படி ஆளாளுக்கு சட்டத்தைக் கையிலெடுத்து ஒருத்தனை அடிக்கிறது எவ்வளவு பெரிய குத்தம் தெரியுமா?” என்றும் கூட்டத்தினரைக் கடிந்து கொண்டார்.

”எவனையும் அடிக்கிறதுக்கு உங்களுக்குத் தான் ஹோல்சேல் உரிமை கொடுத்திருக்கோ….” என்றான் கூட்டத்திலிருந்த ஒருவன் நக்கலாய். “எவண்டா அது, இப்படி எடக்கு மடக்காப் பேசுறது? தைரியம் இருந்தால் எனக்கு முன்னால வந்து நின்னு பேசுடா….” என்று சவால் விட்டார்.

யாரும் எதுவும் பேசவில்லை. அவருக்கு முன்னாலும் யாரும் வரவில்லை. “என்ன தான்யா உங்களுக்குப் பிரச்னை; சம்பந்தப்பட்ட ஆள் வந்து முழுசாச் சொல்லுங்கய்யா….?” என்று பொதுவாய்க் கூட்டத்தினரிடம் விசாரித்தார்.

மனைவிக்கு போன் நம்பர் எழுதிக் கொடுத்ததாகப் புகார் பண்ணியவர் அவருக்கு முன்னால் போய் முதலிலிருந்து நடந்ததையெல்லாம் விலாவாரியாக விவரித்தார். அதைக் கேட்டதும் கோபம் வந்த போலீஸ்காரரும் ஓடி வந்தவனுக்கு ஓங்கி ஒரு அறை கொடுத்தார்.

”பொம்பளைங்க மனசக் கலைச்சு அவங்கள கெட்ட காரியங்களுக்கு இழுத்துட்டுப் போறதுக்கு இவன மாதிரி ஒரு கூட்டமே அலையுதுங்க. சமயத்துல போலீஸ்காரன் பொண்டாட்டிகளையே கைவச்சுருனானுங்க. பொம்பளைங்கள நம்பி வீட்டுல உட்டுட்டு வேலைக்குப் போய் வரமுடியுறதுல்ல…..” என்ற போலீஸ்காரர், “நீங்களும் என்கூட ஸ்டேசனுக்கு வாங்க ஸார். அங்க வந்து ஒரு கம்ப்ளெயின்ட் மட்டும் எழுதிக் குடுங்க. இவன உண்டு இல்லைன்னு பண்ணீடலாம்….” என்றார் ஆக்ரோஷமாய். அவரின் வேகத்தையும் கோபத்தையும் பார்த்தால் இது அவருக்கே நேர்ந்து விட்ட பிரச்னை என்பது போல் வெளிக் காட்டிக் கொண்டார்.

”அங்க என் மனைவி தனியாத் தவிச்சிக்கிட்டு இருப்பாள் ஸார். நீங்க இவனக் கூட்டிக்கிட்டுப் போங்க. நான் என் மனைவிகிட்டச் சொல்லீட்டு ஸ்டேசனுக்கு அப்புறமா கொஞ்ச நேரங் கழிச்சு வர்றேன்….” என்றபடி அவர் வந்த பாதையிலேயே திரும்பி நடக்கத் தொடங்கினார்.

“எதுக்கும் சீக்கிரம் போங்க ஸார், அங்க இன்னும் எவனாச்சும் உங்க மனைவிக்கு வேற ஏதும் ஆஃபர் குடுத்துக்கிட்டு இருக்கப் போறான்….” என்று கூட்டத்திலிருந்து ஒருத்தன் கிண்டலாகச் சொல்லவும், அவர் திரும்பிப் பார்த்துக் கோபமாய் முறைத்து விட்டு வேகமாக நடக்கத் தொடங்கினார்.

அவர் போன தோரணையைப் பார்த்தாலே அவர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போக மாட்டார் என்பதும் காவலரும் பிடித்துக் கொண்டு போகிறவனிடம் கொஞ்ச தூரம் போனதும் அவனுடைய கையிலிருப்பதைப் பிடுங்கிக் கொண்டு அனுப்பி விடுவார் என்பதும் லெனினாவிற்குத் தெரிந்தது.

அன்றைக்கு கடற்கரை சாலையில் சிலர் விரட்ட ஓடிவந்து அவர்களிடம் அடிவாங்கியது இதே இடும்பையன் தான் என்பதில் அவளுக்கு கொஞ்சமும் சந்தேகம் இருக்கவில்லை. ஆனால் தனியாக இருக்கும் பெண்ணிற்கு தன்னுடைய போன் நம்பரைக் கொடுக்கிற பொறுக்கி மனோபாவம் உள்ளவன் எப்படி ஒரு இலக்கிய வாசகனாக இருக்க முடியும் என்று அவளுக்குக் குழப்பமாக இருந்தது.

புத்தக வெளியீடு முடிந்ததும் அவனுடன் கொஞ்சம் பேசிப் பார்க்கலாம் என்று முடிவு செய்து அவனைத் தன்னுடன் ஒரு தேநீர் அருந்த வரமுடியுமா என்று அழைத்தாள்.

அவன் முதலில் ”அதெல்லாம் வேண்டாம் மேடம்….”என்று மறுக்கவே செய்தான். அவள் அவனை வற்புறுத்தி அழைத்துப் போனாள்.

ஹோட்டலில் இடம் தேடி உட்கார்ந்ததுமே ”மிஸ்டர் இடும்பையன், நீங்க இதுவரைக்கும் என்னோட கதை எதுவாச்சும் வாசிச்சிருக்கீங்களா?” என்று தான் ஆரம்பித்தாள்.

”கோவிச்சுக்காதீங்க மேடம். உங்க பேர நான் கேள்விப்பட்டது கூடக் கிடையாது. அதென்ன லெனினான்னு ஒரு பேரு. புனைப்பெயரா மேடம்….?”என்றான்.

“எங்க அப்பாவுக்கு லெனின் மேல ரொம்பவும் ஈடுபாடு. பையன் பிறந்திருந்தா லெனின்னு வச்சிருப்பார். நான் பொண்ணாப் பிறந்துட்டதால லெனினான்னு வச்சுட்டார்னு நெனைக்கிறேன்….” என்றவள், “உங்க பேரும் வித்தியாசமாத் தான் இருக்கு….” என்றாள்.

”அது எங்க குலசாமி பேருங்க. எங்க குடும்பத்துல பலபேருக்கு இதைத் தான் பேரா வைப்பாங்க….” என்று சொல்லி சிரித்தான்.

”நீங்களும் கதை கவிதைன்னு எழுதுவீங்களோ…..?” என்றாள் லெனினா.

”அய்யோ, அந்தத் தப்பெல்லாம் செய்றதில்ல மேடம். வாசகர் கடிதம் கூட எழுதுனது இல்ல. என்னோட இலக்கிய ஆர்வமெல்லாம் வாசிக்கிறதோட சரி. ஆமாம் நீங்க எந்தந்த பத்திரிக்கைகள்ல எல்லாம் கதைகள் எழுதியிருக்கீங்க மேடம்….?”என்றான்.

”பெரும்பாலும் சிறு பத்திரிக்கைகள்ல அதுவும் தனிச்சுற்றுக்கு மட்டும்னு வர்ற பத்திரிக்கைகள்ல தான் எழுதியிருக்கேன்; நீங்க சிறுபத்திரிக்கைகள் எதுவும் வாசீப்பீங்களா…?”

”ம். வாசிப்பேனே மேடம்….! கணையாழி, காலச்சுவடு, உயிர்மை, உயிரெழுத்து, அம்ருதா, அந்திமழை, தீராநதி, இப்ப வர்ற தடம் வரைக்கும் எல்லாமே வாசிப்பேன் மேடம். ஆனா இதுல எதுலயுமே நீங்க எழுதுன எதுவும் வாசித்த ஞாபகமே இல்லையே மேடம்…..”

”இதுல எதுலயுமே என் கதைகள் எதுவும் வந்ததுல்ல; குறி, கனவு, பேசும் புதியசக்தி, காவியம், புதுப்புனல், தளம், நவீன விருட்சம், காக்கைச் சிறகினிலே மாதிரி இன்னும் நெறையாப் பத்திரிக்கைகள் வருது. அந்தப் பத்திரிக்கைகள்ல தான் என் கதைகள் வந்துருக்கு…..” என்றவள் அப்புறமும் நிறையப் பேசினாள்.

அவன் எந்த மாதிரி எழுத்தாளர்களை விரும்பி வாசிப்பான், அவனுக்குப் பிடித்த படைப்புகள் எவை என்றெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.

அப்புறம் தான் அவள் அன்றைக்கு அவனைக் கடற்கரை சாலையில் வைத்துப் பார்த்த சம்பவத்தைப் பற்றி அவனிடம் விசாரித்தாள். அவன் முகத்தில் இருள் சூழ்ந்தது.

கொஞ்சநேர தயக்கங்களுக்குப் பிறகு அது அவன் தான் என்பதை ஒத்துக் கொண்டான். ’அன்னைக்கு அப்படி ஆயிருச்சு….’என்றபடி அந்த சம்பவத்தைக் கடந்து போகவே அவன் விரும்பினான்.

அவளும் அதைப் பற்றி அதிகம் துருவிக் கொண்டிருக்காமல் ”என்ன வேலை பார்க்குறீங்க இடும்பையன்….?”என்றாள்.

லெனினாவின் கேள்விக்குக் கொஞ்ச நேரம் பதில் சொல்லத் தயங்கிய இடும்பையன், “பொதுவா இந்தக் கேள்விய யார் கேட்டாலும் நான் பொய் சொல்றது தான் வழக்கம்; ஆனால் ஏனோ உங்ககிட்ட பொய் சொல்ல மனசு வரல…..”என்று பெரிதாய்ப் பீடிகை போட்டான்.

“அம்பையோட பயணம்ங்குற சிறுகதை ஒன்னு வாசிச்சிருக்கீங்களா மேடம்?” என்று எதிர் கேள்வி கேட்டான். ”அவங்க பயணம்ங்குற பேர்ல நிறைய சிறுகதைகள் எழுதியிருக்காங்களே…..!” என்றாள் லெனினா.

“ஆமா. இது அனேகமா பயணம் – 9ங்குற கதைன்னு நெனைக்கிறேன். கதை மும்பையில வி.டி.ஸ்டேசன்ல வச்சு நடக்கும். அதுல கோபால் மிஸ்ரான்னு ஒரு கேரக்டர் வருமே….” என்று அவன் சொல்லத் தொடங்கவும் லெனினாவிற்கு ஞாபகம் வந்து விட்டது.

அந்தக் கதையில் குடும்பத்தில் கணவன்களிடம் முழுதிருப்தி அடையாத முதிர்வயதுப் பெண்களுக்கு நூறு சதவிகித சுகம் தருவதைச் சேவையாகச் செய்வதாய்ச் சொல்லிக் கொள்ளும் கதாபாத்திரம் தான் கோபால் மிஸ்ரா.

ஒரு விலைமகனை – விலைமகளுக்கு பெண்பாற் சொல் விலைமகன் தானே – மையப்பாத்திரமாக வைத்து எழுதப்பட்ட அற்புதமான கதை அது. அந்த மாதிரியான காண்செப்ட்டில் வந்த கதை எதையும் லெனினா அதற்கு முன்பும் வாசித்ததில்லை. அதற்குப் பின்பும் வாசித்ததில்லை.

அதை எதற்கு இவன் குறிப்பிடுகிறான் என்கிற சந்தேகத்தில் “ஆமாம், அந்தக் கதைக்கென்ன வந்தது இப்பொழுது….?” என்றாள் லெனினா.

“அந்தக் கதையில் வரும் கோபால் மிஸ்ரா மும்பையில் செய்த சேவையைத் தான் நான் இங்கு சென்னையில் செய்து கொண்டிருக்கிறேன். அது சம்பந்தமாக மாட்டிக் கொண்டு தான் அன்றைக்கு பீச் ரோட்டில் உதையும் வாங்கினேன்….” என்றான் இடும்பையன் தலையைக் கவிழ்ந்து கொண்டு.

லெனினாவிற்கு சிலீரென்று இருந்தது. அவன் பொய் சொல்கிறானோ என்று சந்தேகமாகவும் இருந்தது. அவள் அந்தக் கதையையே நம்பவில்லை. அம்பை எதையோ மிகைப்படுத்தி வாசிப்பவர்களுக்கு அதிர்ச்சியூட்டுவதற்காக அப்படி எழுதியிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் ஒருமுறை அவள் மும்பைக்குப் போயிருந்த போது அவள் பார்த்த காட்சிகள் இங்கு எல்லாமே சாத்தியம் தான் என்று அவளை உணரச் செய்தன. ஆனால் கலாசாரமும் கற்புக்கரசிகளும் நிறைந்ததாய் அவள் கற்பனை செய்து வைத்திருக்கும் சென்னையில்….?

”சரி மேடம். நான் கிளம்பட்டுமா…?” என்று எழும்பிய இடும்பையனிடம், “எவ்வளவு அதிர்ச்சிகரமான செய்திய அசால்ட்டாச் சொல்லி இருக்கீங்க, உட்காருங்க ஸார். உங்ககிட்ட இன்னும் நெறையப் பேசனும். அம்பையப் போல நானும் உங்களவச்சு ஒரு கதை எழுத முடியுமான்னு பார்க்கிறேன்…..” என்ற சொன்ன லெனினா அவனிடம், ”என்ன படிச்சிருக்கீங்க இடும்பையன்….” என்றாள்.

இடும்பையன் சொன்ன பதில் அவளை இன்னும் திக்குமுக்காடச் செய்தது. திணறிப் போனாள். அவளின் ஆச்சர்யத்தை அவளுடைய முகத்திலிருந்து வாசித்த இடும்பையன் அலுத்துக் கொண்டபடி சொன்னான்.

”ரொம்ப எல்லாம் ஆச்சர்யப் படாதீங்க மேடம். இப்பல்லாம் பி.இ. படிப்பிற்கு பெருசாய் மரியாதை எதுவுமில்ல. டீக்கடை மாதிரி இஞ்சினீயரிங் கல்லூரிகளத் திறந்து மழை ஈசல்கள் போல இஞ்சினீயர்கள் வந்துக்கிட்டு இருக்குறோம்…..” என்றவன், அடங்கிய குரலில் அவனுடைய கதையை மெல்லச் சொல்லத் தொடங்கினான்.

”என்னோட நேட்டிவ் பிளேஸ் கோவில்பட்டிக்குப் பக்கத்துல இருக்குற பெருநாழி மேடம். படிச்சு முடிச்சிட்டு ரெண்டு வருஷம் போல அங்கேயே அலைஞ்சுக்கிட்டு இருந்தேன். வீட்டுல திட்டத் தொடங்கவும் சென்னைக்குப் போனால் பெரிய ஆளாயிடலாமின்னு கிளம்பி வந்தேன். வண்டலூரத் தாண்டி வர்றப்ப, சென்னை உங்களை வரவேற்கிறதுங்குற போர்டப் பார்த்து நிஜமாகவே சந்தோஷப் பட்டேன்.

ஆனா இங்க வந்த மூனே மாசத்துல சென்னை யாரையும் வரவேற்காது; பசி, பட்டினி, வெயில்னு வறுத்துத் தான் எடுக்கும்னு புரிஞ்சிக்கிட்டேன் மேடம். பெரிய கம்பெனி எதுலயும் எனக்கு வேலை கிடைக்கல. கிடைச்சதெல்லாம் சின்னச் சின்ன வேலைகள் தான்.

பெரும்பாலும் கால் செண்டர்லயும் சுயநிதி கல்லூரியிலும் தான். கொள்ளை கொள்ளையா சம்பாதிக்கிறானுங்க. ஆனா சம்பளத்தப் பிசுக்கிப் பிசுக்கித் தான் தருவானுங்க. அதையும் மாசாமாசம் குடுக்காம, சில சமயங்கள்ல மூனு நாலு மாசத்துக்கு ஒருக்கா தான் தருவானுங்க.

கையில காசே இல்லாத ஒரு கறுப்பு நாள்ல தான் நான் வாடகைக்குத் தங்கி இருந்த வீட்டோட ஓனர் அம்மா அந்த மாச வாடகைக்குப் பதிலா அவங்கள படுக்கையில சந்தோஷப் படுத்த முடியுமான்னு கேட்டாங்க. இதத்தான் கரும்பு திங்கக் கூலிங்கிறது. சம்மதிச்சேன். அவங்க இழுத்த இழுப்புக்கெல்லாம் ஒத்துழைச்சேன்.

அவங்களுக்கு என்னை ரொம்பவும் பிடிச்சுப் போயிருச்சு. அதுக்கப்புறம் அவங்க கூப்டப்பல்லாம் போனேன். நெறையப் பணமும் குடுத்தாங்க. அந்தரங்கமாப் பேசுவாங்க. ஒருநாள் அவங்களோட தோழிகள் சிலரையும் எனக்கு அறிமுகப் படுத்தி அவங்களயும் சந்தோஷப் படுத்த முடியுமான்னு கேட்டாங்க. சரின்னேன். அவங்களும் பணம் குடுத்தாங்க. அப்புறம் தான் இதுலயே வருமானம் பார்க்கலாம் போலருக்கேன்னு வேலைய விட்டுட்டு இதையே தொழிலா செய்யத் தொடங்கீட்டேன் மேடம்.….” என்றான்.

”அதெப்படி தொடர்ந்து இதுல வருமான வரும். சில மாசங்கள் ஆளே கிடைக்கலைன்னா அல்லது அது தேவைப்படுற பொண்ணுங்கள உங்களால கண்டடைய முடியலைன்னா வருமானத்துக்கு என்ன செய்வீங்க?”என்றாள் லெனினா ஒருவிதக் குறுகுறுப்புடன்.

”ரெகுலர் கஷ்டமர்னு கொஞ்சப் பேர் இருக்காங்கள்ள. அவங்ககிட்டருந்து எப்படியும் மாசம் ஒருதடவையாவது அழைப்பு வந்துடும். அதுவும் அமையலைன்னா கையில இருக்கிற காச வச்சு சமாளிக்க வேண்டியது தான். ஏன்னா கால் செண்டர் வேலைய விடவும் அதிகமாகவே இதுல வருமானம் வருது மேடம்….” என்றான் சிரித்தபடி.

அவனே தொடர்ந்து, “ஆனா அது மாதிரி ஒருமாதம் கூட நேர்ந்ததே இல்ல மேடம். எப்படியும் மாசம் நாலஞ்சு கிராக்கியாவது மாட்டீடும். எழுத்தாளர் சாருநிவேதிதா சொன்னது போல இது பாலியல் வறட்சி மிகுந்த தேசம் மேடம். கல்யாணம் பண்ணி ஒரு குழந்தை பொறந்ததுமே நம்ம பெரும்பாலான ஆண்கள் பொண்டாட்டிகளோட தேவைகளப் பத்தி அலட்டிக்கிறதே இல்ல.

சம்பாத்தியம் சம்பாத்தியம்னு தேடி ஓடுக்கிட்டு இருக்குறாங்க. அவங்களோட தேவைகளுக்கு வெளியில மேய்ஞ்சுக்கிறாங்க. அப்புறம் குடும்பத்துல இருக்கிற நடுவயது தாண்டுன பெண்களுக்கு செக்ஸ் எப்படிக் கிடைக்கும்? அதான் தைரியமான சில பொம்பளைங்க எங்கள மாதிரியானவங்களப் பயன் படுத்திக்கிறாங்க…..”

”கேட்குறேன்னு கோவிச்சுக்காதீங்க. உங்களப் பார்த்தா அவ்வளவு ஒன்னும் பாடிபில்டர் மாதிரி எல்லாம் இல்ல. சராசரி ஆண்கள் மாதிரித்தான் இருக்குறீங்க. நீங்க எப்படி புருஷன்கள்கிட்ட ஏமாற்றமடைஞ்ச பொண்ணுங்கள நூறு சதவிகிதம் திருப்திப் படுத்துவீங்க….”

”செக்ஸ்ங்குறது உடம்போட பலத்த பிரயோகிக்கிறதுல இல்லைங்க மேடம். அது வேறுசில எளிமையான விஷயங்கள்ள இருக்கு. அதெல்லாம் கம்பெனி ரகசியம். வெளியில சொல்லப்படாது….” என்று சிரித்தவன், “சில பெண்களுக்கு அவங்க கூட உட்கார்ந்து அனுசரணையாப் பேசினாலே போதுமானதுன்னு சொன்னா, உங்களால நம்ப முடியுமா? ஆனால் அதுதான் உண்மை…..” என்றான் மறுபடியும் சிரித்தபடி.

”அது சரி. எப்படி ‘அது’ தேவைப்படுற பொண்ணுங்களக் கண்டுபிடிப்பீங்க. தப்பா யார்கிட்டயாவது கேட்டுட்டீங்கன்னா அடி பின்னி எடுத்துடுவாங்களே, அன்னைக்கு பீச்ல நீங்க மாட்டிக்கிட்டது போல நெறைய மாட்டிக்கிட்டு அடி வாங்கி இருக்கீங்களா…..”என்றாள் லெனினா சிரித்துக் கொண்டே.

”அதெல்லாம் சுலபமா கண்டுபிடிச்சிடுவேன் மேடம். அவங்க கண்ண ஒரே ஒருதடவை நேருக்கு நேராப் பார்த்தாலே அவங்களுக்கு என்னோட சேவைத் தேவைப்படுமா இல்லையான்னு கண்டு பிடிச்சிடுவேன். உடனே அவங்கள அணுகிட மாட்டேன். சில நாட்களுக்கு அவங்கள நிழல் போல ஃபாலோ பண்ணுவேன். அவங்களோட வாழ்க்கை முறைகள ஸ்டடி பண்ணுவேன்.

பணம் குடுத்து என்னோட சேவைய இவங்க பயன்படுத்திக்குவாங்கன்னு உறுதியாத் தெரிஞ்சதும் தான் பக்கத்துல போயி பேச்சுக் குடுப்பேன். கடைசியா சிகரெட் அட்டையில எழுதி இருக்குற என்னோட அலைபேசி எண்ணைக் குடுத்துத் தேவைப்பட்டா தொடர்பு கொள்ளச் சொல்வேன்.

பெருமைக்குச் சொல்லல. நிஜமாவே சொல்றேன். என் அனுமானம் இதுவரைக்கும் ஒரேஒரு தடவை கூட அது தப்பாப் போனதே இல்ல மேடம். அன்னைக்கு பீச்ல நடந்தது தான் என்னோட அனுபவத்துல ஒரு கரும்புள்ளியா ஆயிடுச்சு. அது எப்படின்னே எனக்கும் புரியல ….” என்றான் மிக மிக உறுதியாகவும் தீர்மானமாகவும்.

பேசிக் கொண்டிருக்கும் போது அவனுடைய அலைபேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. ”ஆமாங்க; அது நான் தாங்க. சரிங்க; கண்டிப்பா வர்ற செவ்வாய்க் கிழமை உங்கள வந்து பார்க்குறேன்ங்க. உங்க முகவரிய குறுஞ்செய்தியா அனுப்பி வைங்க….” என்று சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்தான்.

அப்புறம் லெனினாவிடம் “இப்பப் பேசுனது யாருன்னு நெனைக்குறீங்க….! அன்னைக்கு பீச்ல என்னை விரட்டி வந்து அடிச்சவனோட மனைவி தாங்க….” என்றான் ஒருவித வெற்றிக் களிப்புடன்.

அவனே “என்னோட அனுமானம் எப்பவுமே தப்பாப் போகாதுங்க……” என்று சொல்லி கடகடவென்று சிரித்தான். சிரிப்பில் அவனுடைய கண்களில் கண்ணீர் தழும்பியது.
லெனினாவும் சிரித்தபடி, “நீங்க நிஜமாகவே வித்தியாசமான ஆளுதாங்க இடும்பையன். உங்ககிட்டப் பேசுனதுல ரொம்ப சந்தோஷம்.….”என்று சொல்லி விடைபெற்றுக் கொள்ள எழுந்து அவனுக்குக் கை கொடுத்தாள்.
இடும்பையன் அவளிடமும் அவனுடைய அலைபேசி எண் எழுதப் பட்டிருந்த ஒரு சிகரெட் அட்டையை எடுத்து நீட்டினான் மிகமிக நம்பிக்கையாக.

••

Comments are closed.