சிறகா கவிதைகள்

[ A+ ] /[ A- ]

download (4)

இரத்தத்தின் மொழி

உலகில் பல மொழிகளை வியந்தபடி கேட்டு வந்தேன்

பறவைகளின் கீதமொழி

விலங்குகளின் ஓசைமொழி

தாவரங்களின் மெளனமொழி

மானுடம் பறிமாறிக் கொல்லும் பல்லாயிரம் மொழிகள்

சற்றே குமிழ்வடிவில் திறந்திருந்த

உன் வாயிலிருந்து

பச்சை ரத்தம் துடிப்புடன் வெளிவர முயல்கிறது

யாருக்கும் கேட்காமல்

துல்லியமாக என் காதுகளில் ஒலித்து

இறுதிவிடை பெறும் இரத்தத்தின் மொழியை

அதிர்ச்சியுடன்

சற்றும் பயமின்றி உள்வாங்கிக் கொள்கிறேன்

உள்ளங்கையோடு

ஒட்டிக்கொண்டிருக்கும் விரல்களைப்போல்

உயிர்வாழும்போது விலகிப்போன

கைப்பிடியளவே உறவுகள்

உன்னைக் குழியில் இறக்குவதற்கு

துரிதமாக நீளுகின்றன

உன் சமாதியை அமைக்கின்றன

வலிகளின் வாழ்வைத் தாங்கிய

இதயம்

மூச்சுக்காற்று இல்லாத வெளியில்

இரத்தம் கக்கத் துவங்கியது எப்போது

இனி

ஆவது உன் ஆத்மா….

•••


என் தானியம்

சிறு குருவியே

என் பிரிய சிட்டுக்குருவியே

எப்போதும் துணையுடன் பறந்து செல்லும் நீ

எங்கே ஒளித்துக் கொண்டாய் உன்னை

மிகவும் மிருதுவாக்குவாயே

இலேசாக்குவாயே இந்த வானை

உன் அழகான தோற்றமும்

உடலமைப்பும் பிடிக்கும் எனக்கு

இதமாய் குரல் ஒலித்து

என் மனவானில் உல்லாசமாக

சிறகடித்துப் பறந்து வரும் உனக்கு

வழக்கம்போல் இன்று காலை

நான் வைத்த

தானியத்தை

பார், காக்கைகள் கொத்துகின்றன

அலைபேசிக் கோபுரத்தில்

கழுகுக் குஞ்சுகள் கிறீச் கிறீச்சிடுகின்றன

அங்கொரு மரத்தில்

மைனா குருவிகளின் ஓசையில் புரண்டு

வருகிறது குயிலின் இனிய கானம்

இருப்பினும்

உனக்காகவென்றே

தினம் விழுகிறது என் காலை தனியம்

ஜல்லடை

சலிக்காது சலிக்கிறாள் மணலை

சரிந்து விழும் பொடிமணல்

கீழும்

சிறுகற்கள் மேலும் என

தரம் பிரிக்கின்றது ஜல்லடை

பட்டாம்பூச்சிகளின் சிறகசைப்பில்

உலரும் வேர்வைத்

துளிகளை

மிதமாகக் கரைத்தபடி.

ஒற்றியெடுத்துச் செல்லும்

மழைத் துளி

••••

Comments are closed.