சுயாந்தன் கவிதைகள் / ( இலங்கை )

[ A+ ] /[ A- ]

images (30)

1. முடிவிலி.
=====
பறவைகள் பறந்து போகின்ற திசையின் எதிர்முடிவில் நின்று கொண்டது சூரியன்.
வழியனுப்ப நிலவும், நட்சத்திரங்களும் இன்றியே தம் பயணத்தை ஆரம்பித்திருந்தன.

வானத்துக்குக் கீழாகவே தொடர்ந்து பறப்பது பறவைகளுக்கு இடையறாத ஒரு தளர்ச்சியைத் தந்திருக்க வேண்டும். இல்லையேல்
தாழ்வு மனப்பான்மையில் தத்தளித்திருக்க வேண்டும்.
அவ்வேதனையின் களிம்பாக அவற்றின் சிறகுகள் அருகிலுள்ள சிறுபான்மையினரின் குக்கிராமத்தின் குளத்தின் மீது வீழுகின்றன.

தொடர்ந்து ஏதோவொரு “சிற்றினங்களின்” நீர்நிலைகள் மீது தம்சிறகுகளை வீசிவிட்டே செல்கின்றன.

கழுத்து நெரிக்கப்பட்ட இனங்களின் காயங்களை கண்மாயில் சொல்லிவிட்டு,
மீதமுள்ள தம் நிர்வாணம் மூலமே சூரியனை நெருங்க முனைகின்றன.

அதனால் தான் என்னவோ சூரியனின் ஆதித்தூரம் பறவையின் முடிவிலியற்ற பறத்தலால் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும்….

2. கடிதக்கவிதை.
======
கவிதைகள் பொதுவாகக் காகிதத்தால் எழுதப்பட்டும், கடிதங்கள் தனியான காதலால் புனையப்பட்டும் கொண்டிருக்க, ஏன் அவற்றுக்குள் திரிகின்ற வார்த்தைகள் மட்டும் வெறுப்பினால் உமிழப்படுகின்றன…..
ஒரு பிரம்மச்சாரியின் தொல்படிமம் போல கவிதை தன்னையுணரும் நாளேதுமுண்டா???

3. சிலம்பு
======
யாக்கை உடுத்திய மாதவியின் கண்களில் சிலம்பின் தெளியுருவம்.
மின்னும் கதகதப்பில் கண்ணகியின் உருகுநிலை கூடி இந்த நீலம் எரிந்து தொங்குகிறது.
நீயும் நானும் அந்த மணிமேகலையைத் தேடியிந்த மலைக்காடுகளில் பாளிமொழி பயில்வோம்….

4. மணல்நதி.
======
பெருங்கடலின் தீரத்தில் அலைநனையக் கூடாதென நதிநனைந்து கடலேகும் போதெல்லாம் அது தீரமாகும் என்பதறியாதிருந்தேன்.
பின்னொருநாளில் அலைநனையும் வேளையில்தான் அதையுணர்ந்தேன்…

5. பார்வையைப் பழக்கப்படுத்துதல்
======
உன்னிடம் எல்லாம் இருந்தும், எந்த சந்தர்ப்பத்திலும் புருவம் தாழ்த்த வேண்டிய தேவையற்ற போதும்,
எங்கிருந்தோ வந்த காதலால் நீ தூக்கிச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறாய் என்றால், அதுவே நீ தேடிய காதல்.
பற்றிப்படித்தபடியே உன்னிடமிருக்கும் அனைத்தையும் அதனிடம் வழங்க இனியாவது புருவங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ளு……..

6. தத்துவத்தின் குதி.
=====
நீராலான உயிரைக்கொண்டு, திரிகிறது,
வளைகிறது,
பொழிகிறது
இந்தக் கற்பனை நதி.

எங்குசென்றாலும் உடற்கடலினை அடைதல் வேண்டுமென்ற உண்மை தெரிந்ததும், ஒடுங்குகிறது தத்துவத்தின் குதிக்கால்களில்……..

••••

Comments are closed.