சூர்யாவின் ஆறு கவிதைகள்

[ A+ ] /[ A- ]

download (93)

இரண்டு கால்கள்

•••

ஒருநாள் அடால்ப் ஹிட்லர்

தன் சிந்தனைகளுக்கு

இரண்டு கால்கள் இல்லாமலிருப்பதை உணர்ந்தார்
“வாழ்க்கை நிச்சயம் பலவீனங்களை மன்னிக்காது ”

யென முணுமுணுத்துக் கொண்டார்

இரும்பு பட்டறைக்கு அழுதுகொண்டே பயணித்த

ஹிட்லர்

தனது சிந்தனைகளுக்காக இரண்டு கால்களை

உருவாக்கத் தொடங்கினார்

மழைக்கு பின் முளைக்கும்

காளான்கள் போல் எதிர்கால வன்முறைகளை

புனிதப்படுத்த

அப்போதே எழத் தொடங்கின மேடைகள்

பசுமையான வயல்வெளியில் முளைக்கும்

பசுமையான புற்களை போல் எதிர்கால போருக்காக

அப்போதே பிறக்கத் தொடங்கின ஆயுதங்கள்

சுயமைதுனம் செய்ய தயாராகும்

இளைஞனை போல் எதிர்கால

வதைமுகாம்களுக்காக

அப்போதே தயாராகத் தொடங்கினர் மக்கள்

ஒவ்வொருவருக்குள்ளிரு­ந்தும்

மிக வேகமாக அடால்ப் ஹிட்லர் வந்து

கொண்டிருந்தார்

ஒரு அசரிரீ அறிவித்தது

“தீவிரமான சுய பாதுகாப்பு உணர்வு மட்டும் தான்

இறுதியில் வெற்றியடையும்”

அதன்பிறகு தான் அமைதிக்கு புது பெயர்

சூட்டப்பட்டது

•••

1. பிரார்த்தனை

அசிரத்தையாய் ஏராளயிலைகள்

உதிர்கின்றன

ரெக்கார்டரிலிருந்து குயில் கூவும்

சப்தம் புறப்படுகிறது

மிக அமைதியாக மதில் மேல்

அமர்ந்திருக்கிறது குருவி

மூன்று வீடுகளின் மூன்று வாசலிலும்

மூன்று நாய்க்குட்டிகள் நிற்கின்றன

ஒரு அருவி நிலவிலிருந்து வழிகிறது

தூரத்தெரியும் மலை என்னோடு

ஏதோ பேசுகிறது

தற்சாவின் தேவனே தயவுசெய்து எனை இன்றுமட்டும்

சாக விடாதீர்கள்

•••

2.சின்னஞ்சிறிய சந்தோஷங்கள் இருண்ட காலத்தில் வாழ்கின்றன

1

பெரிய சந்தோஷங்கள் வரும்போது சின்னஞ்சிறிய சந்தோஷம்

கண் விரிய மிரட்சியுடன் பார்க்கிறது

என்ன செய்ய

யாரோ ஒருவன் தான்

அதனிடம் தைரியமாக இருக்கச்சொல்கிறான்

2

ஒரு சின்னஞ்சிறிய சந்தோஷம்

டீக்கடையில் நின்று சிகரெட் பிடித்து கொண்டிருக்கிறது

இருசக்கர வாகனத்தில் முறைத்துக் கொண்டே போகிறது பெரிய சந்தோஷம்

3

ஒரு சமயத்தில்

சின்னஞ்சிறிய சந்தோஷத்தை கரப்பான் பூச்சி உட்பட

யாருமே கண்டுகொள்ளவில்லை

சுவரில் முட்டிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுகிறது

4

சின்னஞ்சிறிய மீனை பெரிய மீன் விழுங்கியதை போல

சின்னஞ்சிறிய நட்சத்திரங்களை பெரிய நட்சத்திரங்கள் மறைத்ததை போல

சின்னஞ்சிறிய வரலாறை பெரிய வரலாறு மறக்கச்செய்ததை போல

சின்னஞ்சிறிய தெய்வங்களை பெரிய தெய்வங்கள் ஒடுக்கியதை போல

சின்னஞ்சிறிய சந்தோஷங்கள் ஆதியிலிருந்தே பெரிய பெரிய சந்தோஷங்களால் ஒடுக்கப்பட்டன

இனி நீங்களும் நானும் சின்னஞ்சிறிய சந்தோஷங்களுக்காக போராடியாக வேண்டும்

•••

3. தனுஷ்கோடி

எப்போதாவது அந்த தீவிற்கு செல்வதுண்டு

இரவென்றால் குடியும் இசையும் எங்களிடமிருந்து

அலைக்கு போட்டியாய் புறப்படும்

கொண்டாட்டத்தின் நிர்வாணத்தை

வெறித்தமர்ந்திருப்போம்

பகலென்றால் பேச்சுக்கு

துணையாய் அமைதியின் சிப்பாய்கள் வருவார்கள்

வெறுமையின் சூரியன் எங்கள் ஆன்மாவை

எரித்துச் சிரிப்பான்

பிறகு துயரத்தின் எண்ணற்ற முகங்களோடு

நகரத்திற்கு திரும்புவோம்

எங்களை விட்டு அந்த தீவும்

வெகுதொலைவாய் புறப்படும்

அந்த தீவு தான் நாங்கள் நகரத்தின் அடிமைகளென்பதை

நினைவூட்டும்

நன்றி நன்றி யென முணுமுணுத்து விரைவோம்

•••

4. மிருகக்காட்சி சாலை

அவனுக்கு அவ் விடம் தான் பயம் பற்றிய

வரையறைகளை கற்றுக்கொடுத்தது

அங்கிருந்து தான் யுவதிகள் குளிப்பதை மறைந்திருந்து

பார்க்கும் பழக்கம் தொடங்கியது

புலி குதறிச் சாகும் சாத்தியத்திற்கும்

அரவம் தீண்டி மரிக்கும் சாத்தியத்திற்கும்

மத்தியில் ஒரு சிரிப்பை

சிரிக்க அவ் விடம் தான்

அவனை பழக்கியது

அவ் விடத்தை மனதிற்குள் சுமந்து சுமந்து காலபோக்கில்

அவ் விடமாகவே மாறிவிட்ட

அவன் நான் ரொம்ப நல்லவன் யெனச் சொல்கிறான்

ஏற்கனவே அவ் விடமாக நாம் மாறிவிட்டதை அவன்

அறிந்திருக்கவில்லை போலும்

•••

5. மீண்டு(ம்) வந்த நண்பன்

ஹெராயின் பொட்டலம் எனக்கு கிடைத்தது

எனக்காக நண்பனொருவன் வாங்கி வந்தான்

அதை கையிலெடுத்து கொஞ்சம் கொஞ்சமாக உண்ண வேண்டுமென்றான்

அந்த பொட்டலத்தை சில வருடங்களுக்கு பிறகின்று மறுபடியும் பார்த்தேன்

அந்த பொட்டலம் தீச்சோகமாய் அவனை நினைவுபடுத்தியது

துரதிஷ்டவசமாக அவனை காலம் ஹெராயினென தன் வயிற்றுப் பசிக்கு உண்டுவிட்டிருந்தது

நண்பா இது உனக்காக யென்று

அந்த பொட்டலத்திலிருந்து அள்ளி திருநீறென வாயில் போட்டுக்கொண்டேன்

பார்வை நிறவளையங்கள் ஆக மிதந்தன

கால்கள் தலையாகின

எங்கே போனாய் நண்பா யென முணுமுணுத்தன நினைவின் உதடுகள்

நீங்கள் நம்ப மறுக்கும்படி அந்த நண்பன் வந்து சொன்னான்:

இப்படி மொத்தமாக பயன்படுத்தக்கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக . சரியா ?

•••

Comments are closed.