செய்திகள் (சிறுகதை ) எம்.ஜி. சுரேஷ்

[ A+ ] /[ A- ]

எம். ஜி. சுரேஷ்

எம். ஜி. சுரேஷ்

செய்திகளை நான் பெரும்பாலும் நம்புவது இல்லை. ஆனாலும் எனக்கு செய்திகள் படிக்கப் பிடிக்கும். தலைப்புச் செய்திகள், பத்திச் செய்திகள், துணுக்குச் செய்திகள், எல்லாமும். செய்திகள் மர்மத்தன்மை கொண்டவை. பூடகமானவை. புதிர்களால் நம்மை அலைக்கழிப்பவை.

செய்திகளைத் தாங்கி வரும் செய்தித்தாள்கள் வசிகரமானவை. ஜன்னலில் தென்படும் ஒரு அழகான பெண்ணின் முகத்தைப் போல. செய்தித்தாள்களை மீறி செய்திகள் காற்றைப் போல் உலவுகின்றன. போகும் வழி தோறும் இடறுகின்றன. என்னைப் படி, என்று மன்றாடுகின்றன.

நீங்கள் கீழ்க்காணும் தலைப்புச் செய்தியைப் படிக்கிறீர்கள், என்று வைத்துக்கொள்வோம்.

கஞ்சா கடத்திய ஆட்டோ டிரைவர் கைது!

அப்புறம் என்ன செய்வீர்கள்? பரபரப்புடன் அதன்கீழ் அச்சிடப் பட்டிருக்கும் வரிகளுக்குத் தாவுவீர்கள். பதற்றமும் பரபரப்பும் உங்களைத் தொற்றிக் கொள்ளும். உங்களுக்கு சுவாரஸ்யம் தேவைப்படுகிறது. புனைகதைகளும், முட்டாள்பெட்டியும் தரும் சுவாரஸ்யம் உங்களுக்குப் போதவில்லை. எனவே ஒரு ஆட்டோ டிரைவர் கஞ்சா கடத்தியதைப் படிப்பதில் உங்களுக்கு அத்தனை ஆர்வம்.

எனக்கு இதெல்லாம் சலித்து விட்டது. நான் தலைப்புச் செய்தியைப் படித்ததும் அதன்கீழ் அச்சிடப் பட்டிருந்த வரிகளைப் படிக்க மாட்டேன். கண்களை மூடிக்கொண்டு யோசிப்பேன். எனது புனைவைக் கட்டமைக்க நான் முனைவேன். மேலே யோசிக்க ஆரம்பிப்பேன்.

இந்த ஆட்டோக்காரன் யாராக இருப்பான்? சிவதாணுவாக இருக்குமோ? அல்லது பக்கத்து வீட்டு பவானியின் தம்பி கோழி சேகர் – (கோழி திருடுவது அவனது உபதொழில்.) – ஆட்டோ ஸ்டாண்டில் தினமும் புன்னகையுடன் என்னை எதிர்கொள்வானே, நமஸ்காரம் சரவணன் – (யாரைப் பார்த்தாலும் நமஸ்காரம் என்பான்.)

சிவதாணு தான் ஒரு ஆட்டோ டிரைவர் என்பதை அடியோடு வெறுப்பவன். தான் இருக்கவேண்டிய இடமே வேறு, தனது போதாத காலம் இப்படி ஆட்டோ ஓட்ட வேண்டியதாகி விட்டதே, என்று சதா வருந்துபவன். தனியார் திரைப்படக் கல்லூரியில் நடிப்பைப் பயின்றுவிட்டு, எல்லா சினிமா கம்பெனிகளிலும் வாய்ப்பு கேட்டு அலைபவன். உதவி இயக்குநர்களுக்கு இலவசமாக ஆட்டோ ஒட்டுவான். பைசா பெறமாட்டான். நாளைக்கு இவர்களில் யாராவது டைரக்டர் ஆனால் தனக்கு வாய்ப்பு தருவார்கள் அல்லவா? பல சினிமாக்களில் நடித்திருக்கிறான். எடிடிங்கில் வெட்டு பட்டது போக மிஞ்சி நிற்கும் சில ஷாட்களில் தட்டுப்படுவான்.

இவன் கஞ்சா கடத்த வாய்ப்பு இல்லை. சதா தொண தொணவென்று வாய்பேசிக் கொண்டிருப்பவன். ஆதலால் எவனாவது கஞ்சாக்காரன் சினிமா பேச்சுக் கொடுத்து இவனைப் பயன்படுத்திக் கொண்டிருப்பானோ?

கோழி சேகருக்கு தினமும் கோழி குழம்பும், கோழி வறுவலும் இல்லாவிட்டால் சோறு தொண்டையில் இறங்காது. பணம் இல்லாத காலங்களில் திருடியாவது சாப்பிடுவான். அதனால் எங்கே, யார் கோழி, காணாமல் போனாலும், துப்பு துலக்குபவர்கள் முதலில் இவனைத்தான் தேடுவார்கள். கோழிக்கு ஆசைப்பட்டு கஞ்சா கடத்தியிருப்பானோ?

நமஸ்காரம் சரவணன் நல்ல மனிதர். அவரது மனைவி தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் வேலை பார்க்கிறாள். மூத்த பையன் மெக்கானிக்காக இருக்கிறான். மிகவும் மரியாதையான ஆட்டோக்காரர். சரியாக ஓடும் மீட்டர் வைத்திருக்கும் ஒருசில ஆட்டோக்காரர்களில் இவரும் ஒருவர். மீட்டருக்கு மேல் போட்டுக்கொடுக்குமாறு நிர்ப்பந்திக்காத உத்தமர். இவர் நிச்சயம் இந்தக் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டிருக்க வாய்ப்பே இல்லை.

தீவிர அலசலுக்குப் பின் அவர்களில் யாராவது ஒருத்தனைத் தேர்ந்தெடுப்பேன். சரி, கோழி சேகராக இருக்கலாம், என்று முடிவு செய்வேன். பின்பு செய்தியைப் படிப்பேன்.

‘ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னலூர்ப் பேட்டையைச் சேர்ந்தவர் கணேசன். (வயது 30.) இவர் மனைவி கோமதி. (வயது 28.) பட்டதாரியான கணேசன் வேலை கிடைக்காததால் ஆட்டோ ஓட்டிவந்தார். சம்பவம் நடந்த அன்று இவரது ஆட்டோவில் கஞ்சா இருந்தது போலிசாரால் கண்டுபிடிக்கப் பட்டது.’

கோழி சேகர் இல்லை என்று தெரிந்ததும் உள்ளுக்குள் ஏமாற்றமாக இருக்கும். அதேசமயம், இதென்ன அபத்தம், அவனுக்கும் எனக்கும் என்ன பகை. பாவம் பிழைத்துப் போகட்டுமே, என்றும் தோன்றும்.

அன்றைக்கு ஒருநாள் அப்படித்தான்.

இலஞ்சம் வாங்கிய

பஞ்சாயத்து யூனியன் ஆணையர் கைது!

என்ற செய்தியைப் படித்துப் பரபரப்படைந்தேன். ஏனெனில் இரு ஒரு ருசிகரமான செய்தி. என் இதயம் சுவாரஸ்யம் தாங்க முடியாமல் தட்தட்டென்று அடித்துக் கொண்டது. எனக்கு இரண்டு பஞ்சாயத்து யூனியன் ஆணையர்களைத் தெரியும். இரண்டு பேரில் யார் மாட்டிக் கொண்டிருந்தாலும் எனக்கு சந்தோஷம்தான்.

ஒருத்தன் என் அண்ணன் நாகராஜன். கொஞ்சகாலம் சென்னையில் வேலை பார்த்தான். அப்புறம் பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி, புழல் என்று பதவி உயர்வுகளாகப் பெற்றுக்கொண்டே போனான். போலிசிடம் சிக்காமல் லஞ்சம் வாங்குவதில் சூரன். அனேகமாக எங்கள் பக்கத்துத் தெருவில் இருந்த எல்லா வீடுகளையும் வாங்கிவிட்டான், என்றே தோன்றுகிறது.

எங்கள் குடும்பத்தில் அவன்தான் மூத்த பையன். அவனுக்கு அப்புறம் நான். என் தம்பி குமரேசன். என் தங்கை சுந்தரி… எல்லாருக்கும் வேலை கிடைத்தது முதல் அவன் எங்கள் குடும்பத்துக்கு பைசா கொடுத்தது இல்லை. இரண்டு வருஷங்களுக்கு முன்பு தங்கை சுந்தரிக்குக் கல்யாணம் நடந்தபோது கூட அவனிடமிருந்து ஒன்றும் தேறவில்லை. பைசாகூடத் தராமல் தப்பித்துக் கொண்டான். சுந்தரிக்கு இப்போது ஒரு பெண்குழந்தை கூட பிறந்துவிட்டது. லதா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆறு மாதத்துக்கு முன்பு என் அப்பா மாரடைப்பு வந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டபோதும் பாராமுகமாக இருந்து ஒளிந்துகொண்டான். எல்லா செலவுகளும் எங்கள் தலைமேல். (நான் மற்றும் என் தம்பி.) குடும்பத்தில் செலவு வரும்போதெல்லாம் எங்களை வசமாக மாட்டிவிட்டு ஓடிப்போன திருடன். இப்போது வசமாக மாட்டிக்கொண்டானோ?

இன்னொருத்தன் ராமசாமி. துரோகி. அவனுக்கும் எனக்கும் பத்து வருஷப் பகை. பத்து வருஷத்துக்கு முன்னால் சர்விஸ் கமிஷன் மூலம் ஹைகோர்ட்டில் கிளார்க்காகப் போய்ச் சேர்ந்தேன். அப்போது ராமசாமியும் கிளார்க்காக வந்து சேர்ந்தான். அங்கே வக்கீல்களுக்குத் தான் பதவி உயர்வு கிடைக்குமே தவிர கிளார்க்கு வர்க்கம் அப்படியே கிடந்து காலந்தள்ள வேண்டியது தான். அப்போது என் அண்ணன் ஊரக வளர்ச்சித் துறையில் இருந்தான்.

அந்தத் துறையில் போய்ச் சேர்ந்தாலாவது சீக்கிரம் பிரமோஷன் கிடைக்கும். எனவே நான் ராமசாமியிடம், ஊரக வளர்ச்சித் துறைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு போய்விடலாம், என்று சொன்னேன். அவனும் உற்சாகமாய்த் தலையாட்டினான்.

அரசாங்க அலுவலகங்களில் அவ்வப்போது வேறு துறைகளிலிருந்து, ஆள் தேவை, என்று சுற்றறிக்கை வரும். ஊரக வளர்ச்சித் துறையிலிருந்து வரும் சுற்றறிக்கைகளுக்கு நானும் ராமசாமியும் ஆவலாகக் காத்திருந்தோம்.

திடீரென்று ராமசாமி ஊரக வளர்ச்சித் துறைக்கு மாற்றலாகிப் போனபோது நான் பெரிதும் நிலைகுலைந்து போனேன். எனக்குத் தெரியாமல் ரகசியமாக அங்கிருந்து வந்த சுற்றறிக்கையை மறைத்துவைத்து அவன்வரைக்கும் மாற்றல் பெற்றுப் போன சங்கதி எனக்கு அப்புறமாய்த்தான் தெரிந்தது. அவன் போய்ப் பத்து வருஷத்தில் இப்போது ஆணையராகி விட்டான். நான் அதே கிளார்க்காக அதே ஹைகோர்ட்டில் பெஞ்ச் தேய்த்துக் கொண்டிருக்கிறேன்.

அந்த நாய் போலிசிடம் மாட்டிக் கொண்டிருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்! பதற்றத்துடன் செய்தியை வாசிக்க ஆரம்பித்தேன்.

‘கும்மிடிப்பூண்டி, டிச. 16. கும்மிடிப்பூண்டியில் பஞ்சாயத்து ஒன்றிய ஆணையராக இருக்கும் நவநீத கிருஷ்ணன் (வயது 45) நிலப்பட்டா வழங்குவது தொடர்பாக லஞ்சம் வாங்கியபோது ரகசியப் போலிசாரால் கைதுசெய்யப் பட்டார். சம்பவம் நடந்த அன்று ரகசிய போலிசார் அவருக்கு மாறுவேடத்தில் வந்து லஞ்சம் கொடுத்தனர். அவர் அதை வாங்கிய உடனேயே அந்த இடத்திலேயே கைதானார். இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.’

எம்.ஜி. சுரேஷ்

எம்.ஜி. சுரேஷ்


நாசமாய்ப் போச்சு. நாகராஜனும், ராமசாமியும் தப்பித்துக்கொண்டு விட்டார்களே?

இம்மாதிரி தருணங்களில் தான் செய்திகள் அயர்ச்சியை ஏற்படுத்தி விடுகின்றன. செய்திகளின் சிறப்பே அவை நமது அனுமானங்களை மீறிப் போய்விடுவதுதான். நமது அனுமானத்தின் படியே நடந்தால் அவற்றின் விறுவிறுப்பு, கவர்ச்சி, ருசி எல்லாம் போய்விடுமே. சரி. கிடக்கட்டும். நாகராஜனும் ராமசாமியும் என்றைக்காவது அகப்படாமலா போகப் போகிறார்கள்!

காலையில் கண் விழிக்கும்போது படுக்கையில் காபியும் செய்தித்தாளும் காத்திருக்க வேண்டும், என்று விரும்புபவரா நீங்கள்? நான் அப்படிப்பட்டவன் அல்ல. காலையில் எழுந்ததும் ஒரு சின்ன வாக்கிங். அப்புறம் ஹோட்டலில் ஒரு காபி. அப்புறமாய் கடையில் செய்தித்தாளை வாங்கவேண்டும். வாங்கும்போதே பெட்டிக்கடையில் தொங்கவிடப் பட்டிருக்கும் செய்திச் சுவரொட்டியில் தலைப்புச் செய்திகளை மேய வேண்டும். இதுதான் எனது நிகழ்ச்சி நிரல்.

விமான விபத்தில் 80 பேர் பலி.
அமைச்சரவையில் அதிரடி மாற்றம்.
கப்பல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.
பிரபல நடிகை தற்கொலை.

அனேகமாக செய்திச் சுவரொட்டிகள் மேற்கண்ட பாணியிலான செயதிகளைத் தாங்கியபடி தொங்கிக் கெண்டிருக்கும். மேற்கண்ட செய்திகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரிவினரைத் திருப்திப்படுத்தும். என் போன்ற பிரிவினருக்கு நடிகையின் தற்கொலைதான் பெரிதும் திடுக்கிட வைக்கும். மற்ற செய்திகளில் எனக்கு அக்கறை இல்லை. நானோ, என் உறவினர்களோ யாரும் விமான விபத்தில் சிக்கும் பிராப்தம் இல்லாதவர்கள். அவ்வளவு வசதி எங்களுக்கு ஏது? அதனால் விமான விபத்து செய்தி என்னைக் கவராது. அமைச்சரவை என்பது அடிக்கடி மாறக் கூடியது. துரதிர்ஷ்டசாலியான அரசியல்வாதிகள் என்று யாரும் இல்லையாதலால் இந்த மாற்றம் எனக்கானது இல்லை. ஆட்டோ, பஸ் டிரைவர்கள் வேலை நிறுத்தம் என்றாலாவது பயம் பிடிக்கும். கப்பல்… ஓடினால் என்ன, ஒடாவிடடால் என்ன?

நடிகையின் விவகாரம் வேறு. அன்றைய பொழுது முழுக்க அந்த நடிகையின் மரணத்தைப் பற்றிப் பேசியே பொழுது கழிந்துவிடும். வீட்டிலேயே அது ஆரம்பித்துவிடும். பஸ்சில் தொடரும். ஆபிஸ் வரை நீட்சியடைந்துகொண்டே போகும். கான்ட்டீனில் விவாதிக்கப்படும். அவளது வாளிப்பான உடம்பு, தளராத மார்பகங்கள் குறித்து ஏக்கப் பெருமூச்சுடன் அனுதாப வார்த்தைகள் உதிரும். யார் யார் அவளுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். இந்தத் தற்கொலையில் எந்த நடிகன், அல்லது எந்தத் தயாரிப்பாளன் மாட்டப்போகிறான் என்ற திசையில் விவாதம் பயணம் செய்யும்.

கடைசியாக அந்த நடிகை ‘இன்ன ஹீரோவுடன் சுற்றினாள்’, என்பாள் டைப்பிஸ்ட் மல்லிகா. நானும் ராமசாமியும் வேலைக்குச் சேர்ந்த புதிதில் தான் இவளும் டைப்பிஸ்டாக வேலைக்குச் சேர்ந்திருந்தாள். அப்போது ஒல்லியாக அழகாக இருப்பாள். நானும் ராமசாமியும் அவள்மேல் காதல் கொண்டிருந்தோம். அவளுக்கு ராமசாமியிடம் லயிப்பு இல்லை. என்னிடம் மட்டும் நெருக்கமாகப் பழகிவந்தாள். தான் கொண்டுவரும் ஊசல் நெடி பரப்பும் உணவுகளை என்னுடன் மட்டுமே பகிர்ந்துகொள்வாள். ஒருவேளை ராமசாமி என்னைப் பழிவாங்கியதற்கு இவளது நெருக்கமான நட்பும் ஒரு காரணமாக இருந்திருக்குமோ என்று சமயங்களில் எனக்கு தோன்றுவது உண்டு.

ஆனால் இப்போது அவள் ஒரு பூதகி. திருமலை நாயக்கர் மகால் தூணையொத்த அவள் இடுப்பைக் கட்டிப்பிடிக்கக் கூடிய நீண்ட கைகள் உடையவன் எவனும் இந்த அவனியில் இல்லை.

நடிகையின் மரணம் பற்றிய பேச்சுக்கள் மென்று மென்று ருசிக்கும் அவல் போல் அதிகச் சுவை கொண்டவை.

காலையில் விழிப்பு வந்தபோதுதான் தெரிந்தது. நான் நிறைய நேரம் தூங்கி விட்டிருக்கிறேன். ஹம்ஸா யாரையோ சத்தம் போட்டுக்கொண்டே காபியும் போட்டுக்கொண்டிருந்தாள். பிள்ளைகள் இரண்டும் இன்னும் இரண்டாம் ஜாமத்தில் இருந்து மீண்டு வராமல் தூங்கிக் கொண்டிருந்தன. ஹம்ஸாவின் காபிக்கு பயந்து சந்தடி செய்யாமல் வீட்டை விட்டு வெளியேறினேன். வாசலில் ஒரு அவசரக் கோலம். ஹம்ஸா போட்டிருக்கிறாள். தெருவில் தாவணி போட்ட இளம் பெண்களும், நைட்டி அணிந்த பேரிளம் பெண்களும் அக்ரோபேடிக்ஸ் போல விதவிதமான போஸ்களில் வளைந்தும் நெளிந்தும் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கு என்னமோ விசேஷம் போலிருக்கிறது.

மணி ஏழரை. பொதுவாக நான் ஆறுமணிக்கே எழுந்து வெளியே போய்விடுவேன். இன்றைக்குப் பார்த்து தாமதமாகி விட்டது. வாக்கிங் வேண்டாம். வெறும் செய்தித்தாளும் காபியும் போதும் என்று முடிவு செய்துகொண்டேன். நடையின் வேகத்தை அதிகரித்தேன். தாமதித்தால் செய்தித்தாள் விற்றுத் தீர்ந்துவிடும். அப்புறம் அக்கம் பக்கத்து டீக்கடை, அல்லது சலூன் கடைக்குப் போய்க் கசங்கிப்போன பேப்பரில் செய்தி படிக்க நேரிடும். யாராவது படித்துவிட்டுப் போட்ட செய்தித்தாளைப் புரட்ட எனக்குப் பிடிக்காது. என்னுடைய செய்தித்தாளை நானே புரட்டிப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு செய்தித்தாளும் ஒரு தனித்த பிரதியைப் போன்றது. நீங்கள் படிக்கும்போது அது உங்களுக்கான பிரதி. நான் வாசிக்கும்போது அது எனக்கான பிரதி.

கடையில் கூட்டமில்லை. யாரோ ஒருவர் கடைக்காரனிடம் செய்தித்தாள் கேட்க அவரிடம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தான். செய்தித்தாள் விற்றுத் தீர்ந்துவிட்டது போலிருக்கிறது. எனக்குள் பதற்றம் தொற்றியது. ஒருநாள் கூட என்னால் செய்தித்தாள் படிக்காமல் இருக்க முடியாது. செய்தித்தாள் படிக்காத தினம் மூளியான தினம் போல் தோன்றும். அனிச்சையாகக் கடையை நோக்கி வேக வேகமாகப் போனேன்.. அதனால் பயனில்லை என்று தெரிந்தும்.

கடைக்காரன் என்னைப் பார்த்துத் தனது கறைப் பற்களைக் காட்டி அசட்டுத்தனமான சிரிப்பை உதிர்த்தான். உயிரற்ற ரெடிமேட் சிரிப்பு. எனக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. இவனுக்கு இந்தச் சிரிப்பு ரொம்ப முக்கியம். பேப்பர் இல்லை என்று சொல்வதற்கு முஸ்திபாக ஒரு தரித்திரம் பிடித்த சிரிப்பை விநியோகித்திருக்கிறான்.

சிரிப்புக்குப் பின் பேசவும் செய்தான். ‘இன்னிக்கு ஏன் சார் லேட்?’

முகத்தில் அப்படியே அறையலாம் போல இருந்தது. எத்தனை கரிசனம்! முட்டாள். முட்டாள்.

‘சார் நீங்க வருவீங்கன்னு உங்களுக்காக ஒரு பேப்பர் எடுத்து வெச்சிருக்கேன்.’

மீண்டும் அவன் தன் அசட்டுத்தனமான சிரிப்பை உதிர்த்தபோது அது உன்னதமான சிரிப்பாகத் தெரிந்தது. இப்போது அசட்டுச் சிரிப்பை உதிர்க்க வேண்டியது என் முறை. உதிர்த்தேன். அந்த நொடியில் அந்தக் கடைக்காரன் மகத்தான மனிதனாகத் தோன்றினான்.

‘ரொம்ப தேங்ஸ் பாபா’ என்றேன். (அவன் பெயர் ரொம்ப காலமாகவே பாபா என்றுதான் இருந்தது. சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்துக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. ஆனாலும் அந்தத் திரைப்படம் வெளியானதில் இருந்து இவன் நிறைய கேலிக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறான்.)

சில்லரையைக் கொடுத்து செய்தித்தாளை வாங்கிக்கொண்டேன். புத்தம் புது செய்தித்தாளின் நியூஸ் பிரின்ட் வாசனை எனக்குப் பிடித்தமானது. செய்தித்தாளை மூக்கருகே வைத்து முகர்ந்தேன்.

தற்செயலாக என் பார்வை சுவரொட்டியைத் தடவிச் சென்றது.

ரயில் விபத்து 10 பேர் பலி.
நடிகை ரம்யகுமாரி விவாகரத்து.
வெடிகுண்டுகளுடன் வந்த தீவிரவாதி கைது.

ரயில் விபத்து, தீவிரவாதிகள், வெடிகுண்டு போன்றவையெல்லாம் நமக்கு சம்பந்தம் இல்லாதவை என்றே தோன்றியது. எங்கோ நடக்கிறது. யாரோ செய்கிறார்கள்.

அப்படியே பக்கத்தில் உள்ள ஹோட்டலுக்குள் நுழைந்து (வழக்கமாக நான் காபி சாப்பிடும் ஹோட்டல்தான். கல்லாவில் உட்காரும் உடுப்பி ஐயர் கன்னடம் கலந்த தமிழில் பேசுவது கேட்க வேடிக்கையாக இருக்கும். காபிக்குச் சொல்லிவிட்டு டேபிளின் எதிரே உட்கார்ந்தேன். டேபிளில் ஈரம் எதுவும் இல்லை என்று ஊர்ஜிதப் படுத்திக்கொண்டு செய்தித்தாளைப் பரப்பினேன்.

முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தி வந்திருந்தது. வண்ணப் புகைப்படம் கவிழ்ந்த ரயிலையும் நசுங்கிக் கிடந்த உடல்களையும் தத்ரூபமாகக் காட்டியது. மனித ரத்தம் அப்படியே அப்பட்டமாகப் பதிவாகி இருந்தது. ‘குட்’ என்றேன். ரசித்தபடி நவீனத் தொழில்நுட்பத்தை எண்ணி வியந்தபடியே செய்தியில் மூழ்கினேன்.

கோவையிலிருந்து சென்னை வந்த
எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து
10 பேர் பலி. 50 பேர் காயம்.

என் மூளை தீவிரமாக இயங்க ஆரம்பித்தது. கோவையில் எனக்குத் தெரிந்தவர்கள் யார் யார் இருக்கிறார்கள்? யோசித்துப் பார்க்கையில் அப்படியொன்றும் நெருக்கமான நண்பர்கள் யாரும் இல்லை என்றே தோன்றியது. ஆமாம்.. நான் எப்போது கோவைக்குப் போனேன். பத்து வருஷத்துக்கு முன்னால் முதல்முதலாக பவானிசாகரில் இருக்கும் ஒரு பயிற்சி நிலையத்துக்கு என்னை அனுப்பினார்கள். அப்போது கோயம்புத்தூர் போய் இறங்கி அங்கிருந்து பஸ் பிடித்து பவானிசாகர் போனேன். (கோவையில் இருந்து சத்தியமங்கலம் போய் அங்கிருந்து இன்னொரு பஸ் மாறின மாதிரி ஞாபகம்.) அதற்கப்புறம் பயிற்சிக் காலத்தில் கோவையில் இருந்த அரசு அலுவலகங்களுக்குப் பயிற்சி மாணவனாகப் போனேன். காந்திநகர், பீளமேடு, ஆர்.எஸ்.புரம், தூக்கநாயக்கன்பாளையம் போன்ற இடங்களுக்கெல்லாம் போய்வந்ததாகத் தோன்றுகிறது. அப்புறம் ஊட்டிக்குப் போகும்போதெல்லாம் கோவைக்குப் போய்த்தான் போவோம். மற்றபடி கோயம்புத்தூரில் எனக்கு பரிச்சயமானவர்கள் யாரும் இல்லை. அட கஷ்டமே. கோயம்புத்தூரில் தெரிந்தவன் என்று ஒருத்தன் கூட இல்லாதது வருத்தம் தருவதாக இருந்தது. முன்பின் தெரியாதவர்களின் மரணம் என்பது வெறும் வார்த்தையால் ஆனது. அது நம்மை உலுக்குவதில்லை. அந்த வார்த்தைகளுக்கு உயிர் இல்லை.

சுவாரஸ்யமின்றி தலைப்புச் செய்திகளுக்குக் கீழே தட்டையாக வாசிக்கத் தொடங்கினேன். முன் தீர்மானங்கள் இன்றி வெறுமனே செய்தி வாசிப்பதில் சுவாரஸ்யம் இல்லை. இருந்தாலும் என்ன செய்வது, வாசித்தாக வேண்டி இருக்கிறது.

‘டிசம்பர் 6. பாபர் மசூதி நினைவு நாளான நேற்று பிற்பகல் கோவையில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோவை எக்ஸ்பிரஸ் காட்பாடிக்கு அருகே தடம் புரண்டது. இதில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளில் 10 பேர் உயிர் இழந்தனர். 50 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் நடந்திருப்பது டிசம்பர் 6ஆம் தேதி என்பதால் இந்த விபத்துக்கு தீவிரவாதிகளின் நாசவேலை காரணமாக இருக்குமா என்ற கோணத்தில் ஆராய்ந்து வருகிறார்கள்..’

காபி வந்தது. பேப்பரில் இருந்து தற்காலிகமாக கவனத்தை காபிக்குத் திருப்பினேன். சூடான காபியை ஆசைதீர உறிஞ்சிக் குடித்தேன். உடுப்பி காபியின் மணமும் ருசியும் மயக்கின. பின்பு டம்ளரை டேபிளில் வைத்தேன். அப்புறம் விட்ட இடத்தில் இருந்து கம்பீரமாகத் தொடர்ந்து படிக்கலானேன்.

. . . விபத்தில் பலியானவர்களில் சிலருடைய உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.

சுந்தரி (வயது 25)
மோகன் (வயது 30) சுந்தரியின் கணவர்.
லதா (ஒரு வயதுக் குழந்தை)
. . . .
. . . .

எனக்கு திகீர் என்றது. திடீரென்று அசௌகர்யமாக உணர்ந்தேன். அந்த ஹோட்டலே ராட்டினம் மாதிரி சுற்றியது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. இற்றுப்போன மாதிரி கீழே விழுந்து கொண்டிருந்தேன்.

எக்ஸ்பிரஸ் என்னவோ கோவையில் இருந்து புறப்பட்டதுதான். அதற்காக அத்தனை பேரும் கேவையில் இருந்தே புறப்பட்டு வந்திருக்க வேண்டும் என்பது இல்லை. சிலர் ஈரோட்டில் இருந்தும் ஏறியிருக்கலாம். சேலத்தில் இருந்து கூட சிலர் ஏறியிருக்கலாம் அல்லவா? இதைப் பற்றியெல்லாம் நான் யோசிக்கவே இல்லை. என் தங்கை சுந்தரியை சேலத்தில் தான் கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறோம். அவள் கணவர் மோகன் அங்கேதான் சேலம் உருக்காலையில் பொறியாளராக இருக்கிறார். லதா அவர்களின் ஒரே பெண் குழந்தை. அவர்கள் ரயிலில் புறப்பட்டு வந்திருக்கிறார்களா? ஸ்மரணை தப்புதற்குக் கடைசித் தருணத்தில் என் மண்டையில் ஓடிக் கொண்டிருந்த சிந்தனைகள் இவை.

விழிப்பு வந்தபோது என்னை ஆஸ்பத்திரியில் கிடத்தி யிருந்தார்கள். என்னை இங்கே கொண்டுவந்து அனுமதித்தபோது கையோடு அந்தச் செய்தித்தாளையும் கொண்டுவந்து போட்டிருந்தார்கள். ஸ்மரணை வந்தவுடன் அதுதான் முதலில் என் கண்ணில் பட்டது. கவிழ்ந்த ரயில். நசுங்கிக் கிடந்த உடல்கள். ரத்த சேறு. தத்ரூபமான அந்த வண்ணப்படம்!.. இப்போது அதைப் பார்க்கப் பார்க்க வேறு மாதிரி தெரிந்தது. என் முதுகுத் தண்டு சில்லிட்டது. குடலைப் புரட்டியது. வாந்தி வருவது போல உணர்ந்தேன்.

‘இது என் ரத்தம். என் ரத்தம்…’ என்றேன். என் குரல் குழறலாக எனக்கே விநோதமாக ஒலித்தது. ரத்த அழுத்தம் ஏகமாய் எகிற அந்தப் பேப்பரை சுக்கல் சுக்கலாகக் கிழித்து எறிந்தேன். மலங்க மலங்க விழித்தபடி நின்றேன். ஒன்றும் புரியாமல் என் மனைவியும், வார்டு நர்சும் என்னையே திகிலுடன் பார்த்தார்கள்.

•••

Comments are closed.