செலீனா ( அறிமுகப் படைப்பாளி ) கவிதைகள்

[ A+ ] /[ A- ]

images (35)

ஒரு சொல்

ஒரு சொல்லால் மட்டும் தான் உன்னிடம்
என்னை வர வைக்க முடியும் என்பது
உனக்கு எப்படியோ தெரிந்திருந்தது.

முதல் சந்திப்பில்
ஒரு மஞ்சள் ரோஜா மலரின்
ஒவ்வொரு இதழ்களையும்
ஒரு சொல்லால்
நிறைத்துத் தந்தாய்.

ஒரு சொல்லால் தான்
நம் முதல் முத்தம் ஆகியிருந்தது.

ஒரு அந்தியில்
ஒரு சொல்லின் வழி தான்
நாம் ஆரத்தழுவியிருந்தோம்.

இருள் காட்டில்
ஒரு சொல்லின் வெளிச்சத்தில் தான்
வீடடைந்தோம் .

இப்படி ஒரு அத்தியாவசியத் தேவையாக
நமது எல்லாவற்றிலும்
ஒற்றை சொல்லையாவது
நிர்பந்திக்க வேண்டியிருக்கிறது.

சதா சொற்களாலே வடிவமைந்திருக்கிற
நம் உலகத்தின் சொற்கள்
ஒரு நிரம்பும் குவளையின்
குமிழிகளாய் மொத்தமாய்
மேலெழுகின்றன.

மகாகனம் பொருந்திய
உனது சொல்லும்
எனது சொல்லும்
நமது சொல்லாகியிருந்த போது
ஆதியிலிருந்த அந்த ஒரு சொல்
நம்மிடம் வந்து சேர்ந்திருந்தது.

அப்போது அந்த சொல்
மீண்டும் தேவனாகியிருந்தது.

***

புனித வெள்ளி

உன்னிடம் பேசி ஒரு வாரமாகிறது.
எனக்கு இப்போது அழைக்க முடியுமா??
அண்ணனும் அத்தாவும்
ஜும்மா தொழுகைக்கு சென்றிருக்கிறார்கள்.

ஒரே ஒரு மணி நேரம் மட்டும் தான்
எனக்கு தரப்பட்டிருக்கின்றது

எல்லா வெள்ளிக் கிழமைகளிலும்
இந்த ஒரு மணி நேரத்திற்கென சொல்லும் பொய்களுக்கு
கொஞ்சம் மன்னிப்பு
அல்லாஹ்விடமிருந்து தரப்படுகிறது என்றே நம்புகிறேன்.

வெள்ளிக் கிழமையின் மதிய தொழுகைகளில் தான்
பர்க்கத் அதிகம் இருக்கிறது என்கிறாள் அம்மா.

வெள்ளிக் கிழமைகளில் தான் உலகம் அழியும்
அந்நேரம் உலகின் எல்லா உயிர்களும்
கடவுளை நோக்கிப் பிரார்த்திக்க துவங்கும் என்று
ஒரு முறை குரான் வகுப்பில் சொன்னார்கள்.

இப்போது அழைக்க முடியமா?
எனக்கு ஒரே ஒரு மணி நேரம் தான் தரப்பட்டிருக்கின்றது.

***

வேறு யாருக்காகவோ நீ எழுதியதை
எனக்கென எழுதினாய் என்று தான் நினைத்தேன்.

ஒரு முறை ஒருத்திக்கு காதல் சொல்லி ஒரு கவிதையும்
இன்னொரு முறை தனிமையின் சிக்கலால்
ஒருவரின் கைகளை இறுகப் பிடிப்பது பற்றியும் எழுதியிருந்தாய்.

இரண்டிலுமே நான்
ஒரு நூலிழையைப் பின்னி
என்னைத் தொடர்பு படுத்திக் கொண்டேன்.

நீ காதலிக்கிற யாரகவோ
என்னை மாற்றிக் கொள்ள
எவ்வளவு பிரயாசப்படுகிறேன் நான்.

***

Comments are closed.