சொர்க்கம் தொலைத்தவள் / யாவுஸ் எகின்சி (துருக்கி) / தமிழில் எஸ். சங்கரநாராயணன்

[ A+ ] /[ A- ]

 யாவுஸ் எகின்சி

யாவுஸ் எகின்சி

ஆரம், நானொரு ஏப்பை சாப்பையான சோப்ளாங்கி, அசடு தான். எனக்கு யாருமே இல்லை. என் பேரன் பேத்திகள் என்னைக் கேலியடிக்கிறார்கள். என்னைப் பார்க்க வருகிறாட்கள் என்னைப் பற்றி குசுகுசுத்துக் கொள்வதும் எனக்குத் தெரியும். ‘கிழவி ரொம்ப காலம் வாழ்ந்தாச்சி. செத்துப் போகலாம் அவள். அவள் இனி சாவில் தான் அமைதி காண முடியும்.’ நான் ஒரு அதிர்ஷ்டக் கட்டை. சோம்பேறி. தனிக்கட்டை. துடைப்பக்கட்டை. இனி வாழ்வதில் எனக்கு என்ன சந்தோஷம் கிடைத்துவிடப் போகிறது. வெறுப்பும் வெறுமையும் கடுப்புமாய்க் கழிகிறது என் காலம்.

ஆரம், இப்ப என் இந்த நொந்த வாழ்க்கையை நீ பார்த்தால் உனக்கு எப்படி இருக்கும்? எப்பவும் உன்னிடம் இருக்குமே, அந்தத் துப்பாக்கியால் என்னை சுடுவாயா? ஹ… ஆரம், என் அத்தனை கேள்விக்கும் ஒரே விடை. மரணம். நான் இறந்துபோக விரும்புகிறேன். சாவுக்கு ஏங்குகிறேன் ஆரம் நான். ஆனால் சாவு தான் வரமாட்டேன் என்கிறது. செத்துப்போக நானே எடுத்த முயற்சி… சைமன் மாமா அதைத் தடுத்துவிட்டார். ‘ஏசப்பாவை நினைச்சிக்கோ’ என்றார் அவர். ஏசப்பா பட்ட பாடுகளை நினைத்தபடியே தான் இத்தனை வருடங்களாக நான் அல்லாடிக் கொண்டிருக்கிறேன்.

ஆகா சாவு. அது வருகிறாப் போலவே இல்லை. நான் நினைச்சது எதுதான் நடந்திருக்கிறது. அதுவும் சாவு… ஆரம், அதை ஆசைப்படும் போது அது கிட்ட அண்டாதா? அப்படித்தானா? நமக்கு ரொம்ப அசௌகர்யப்பட்ட எதிர்பாராத நேரம் சடாரென்று அது புகுகிறது. இவர்… ஹசன்! அவர் மரணம்… இப்ப அவர் துக்கத்தில் இருப்பாரா தெரியவில்லை. இப்ப அவர் நரகத்தில் எரிஞ்சிட்டிருப்பார்னு நினைக்கிறேன். ஹசன், நீர் பண்ணின அக்கிரமம் கொஞ்சமா நஞ்சமா, அத்தனை பாவத்துக்கும் பிராயச்சித்தம் பண்ணி தொலைக்க முடியுமா அவற்றையெல்லாம்? நடக்கிற கதையா அது?

ஏய் மிர்சா, நீ தயவுசெஞ்சி என்னை அந்தாளு பக்கத்தில் புதைச்சிறப்டாது. உன்னை வேண்டி விரும்பிக் கேட்டுக்கறேன். டேய் கேட்டியா. நீ என்னை மல்பெரி மரத்தடியில், ஆரம் உறங்குகிறானே, அவன் பக்கத்தில் அடக்கம் செய். ஆரம், அவனே என் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வானவன், என் சூரியன்… என் கண்ணீரைத் துடைப்பவன்… நான் உன்னாண்ட வந்துவிடுகிறேன் ஆரம்.

நான் இப்பிடி சாவு வராதான்னு அல்லாடிட்டிருக்கிறேன். ஹசன், அந்தாளு ஆயிரம் வருஷம் வாழணும்னு ஆசைப்பட்டாரு! தினசரி ஒவ்வொரு நாளையும் இதேமாதிரி நாக்கத் தொங்கப்போட்ட ஆசையோடதான் அவர் ஆரம்பித்தார். வீட்டு வெளி முற்றத்தில் இருந்த கல்லை பாறையை யெல்லாம் அப்புறப் படுத்தினார். குன்றுகளையே அவர் திராட்சைத் தோட்டங்களாக மாற்றிவிட ஆவேசப்பட்டார்.

கரடு முரடான பொட்டல்களை வயல்களாக தோட்டங்களாக உருமாற்றம் செய்ய உத்வேகங் கொண்டார். கல்சுவர் அரண்களும், உள்ளே கல்லுவீடுகளும் சமைத்தார். அவையெல்லாம் காலத்தால் கலைக்கப் படாது என்கிறாப் போன்றே அவர் கொண்டாடினார். ஒரு ஆயிரம் வருஷம் அவரே இருந்து எல்லாம் பார்த்து அனுபவிக்கிறாப் போல நினைப்பு அவருக்கு. அந்தக் காலங்களில் சாவோ, அதன்பின்னான போக்கிடமோ பற்றி அவருக்கு யோசனையே இல்லை!

மொல்லா மாஃபஸ் கூட அவரை வேடிக்கையா கிண்டலடிப்பார். ‘யப்பா, மரணமிலாப் பெருவாழ்வு, யாருமே வாழ்ந்ததா சரித்திரமே கிடையாதப்போவ்!’ அந்த நக்கலடிக்கும் குரல் இப்பக்கூட காதில் கேட்கிறது. ‘மகா சுலைமான்… அவங்களே மண்ணோடு மண்ணா ஆயிட்டாரு!’

விதி. அதுவும் ஹசன் நினைச்சதை நடத்த விடவில்லை. அவர் வாழ்க்கை. அவர் தேகம். அவரது அபிலாஷைகள். இஷ்டங்கள்… எல்லாமே அழிந்துபோயின. அவர் நோய்வாய்ப் பட்டார். எல்லா ஆஸ்பத்திரிகளும், மடங்களும், மதகுருமார்களும், ஊழியக்காரர்களும்… ஆளுக்காள் ஒண்ணைச் சொன்னார்கள். அவர் உடம்பு தேறவே இல்லை. நாளுக்கு நாள் அது ஷீணமாயிட்டே வந்தது.

என்ன காத்திரமான தேகம் அது, அதாலயே இத்தனை மருந்தும், இந்த வேதனையையும் தாள முடியாமல் ஆச்சு. மலையத்துவஜன் மாதிரி இருந்தார். பாறைகளையே தம் பிடிச்சி நகர்த்தி வைப்பார். கற்களை அப்படியே பொடியாக்குவார். அந்த உடம்பே சிதிலமாயிட்டது. அட அவரால, தானே எழுந்து உதவியில்லாமல் கால்கழுவி வரவே லாயக்கில்லாமல் போச்சு. படுக்கையிலேயே சில சமயம் ஒண்ணுக்கடிச்சிர்றாரு. தாகம்னால் தானே ஒரு தம்ளர் தண்ணி தன் கையால எடுத்துத் தூக்கி வாயில் தானே விட்டுக்கொள்ளக் கூட துப்புக் கெட்டுப் போயிட்டார். ஒரு தீ விபத்து, ஆத்திர அவசரம்னால் அவரால படுக்கையில் இருந்து சடாரென்று எழுந்து ஓடி தப்பிக்க இயலாது.

அவரைப் பத்தி எனக்கு இரு வேறுபட்ட அபிப்ராயம் இருந்தது. யப்பா அத்தனை பலசாலி இப்பிடி ஒடுங்கிட்டாரேன்னு எனக்கு வருத்தம் இருந்தது. அதேசமயம் உள்ளூற எனக்கு அதில் ஒரு திருப்தி… கடவுள் வெச்ச ஆப்புல்ல அது, என்ன ஆட்டம் ஆடினாரு…

படுத்த படுக்கைன்னு ஆனதும் ஹசனுக்கு மிர்சாவின் பரிவு, உபசாரம் வேண்டியிருந்தது. நல்லா இருந்த வரை அவனை கேவலமா நடத்தி பாடாப் படுத்திய மனுசன். ஒரு பெத்த அப்பனா அவனுக்கு அவர் தன் அன்பையும் பாசத்தையும் தந்ததே கிடையாது. ஆனால் இப்ப அவருக்கு மகனாக, மகானாக அவனிடம் அது வேண்டியிருந்தது. நல்ல பையன் அவன். மிர்சாவுக்கு அப்பாவிடம் அத்தனை வெறுப்பும் ஆத்திரமும் இருந்தது என்றாலும், அப்பாவை அவன் துடைத்து, குளிப்பாட்டி, சவரம் செய்து, உடையுடுத்த உதவி என்று பணிவிடைகள் செய்யத்தான் செய்தான். குண்டூசி அளவு கூட அவன் அவரைக் குத்திக்காட்டிப் பேசவில்லை. அவனது பரிவில் அப்பாதான் வெட்கப்பட்டு திக்கு முக்காடிப் போனார்.

ஆ ஹசன்… என என்னை யறியாமல் சத்தமாய்ப் பேசியிருக்கிறேன் போல. பக்கத்துப் பெண்கள் ஒருத்தரையொருத்தர் இடித்து சாடைகாட்டிக் கொள்கிறார்கள்.

‘பாவப்பட்ட பெண். புருசன் நினைவில் அவர் பெயரை சத்தமா முணுமுணுக்கிறாள். அவர் செத்து இத்தனை வருஷம் ஆகியும் இவ அவரை மறக்கவில்லை. பாவம், அவளுக்கு அந்தாள் மேல என்ன ஒரு இது…’ ஒரு பெருந்தலைப் பெண்மணியின் அனுமானப் பினாத்தல். அவ முகத்தின் சிரிப்பில் குறும்பும் குத்தலும் தெரிந்தது. திரும்பிக்கொண்டு ஜன்னலைப் பார்க்கப் படுத்தேன். அட ஹசன்… அதோ வயலும், திராட்சைத் தோட்டங்களும், கல்லுக் கட்டடங்களும்… அத்தனையும் ஒரு வலியை உணர்த்துகிற நினைவுச் சின்னங்கள். இந்த துக்கப்பட்ட, சந்தடியடங்கிய கிராமத்தில் இப்போது. அவற்றை நினைக்கிற ஒவ்வொரு கணமும் நான் உள்ளேயே லேசாய் செத்துப் போகிறேன்…

நடு நிசி. யாரோ வெளிக் கதவை இடிக்கிறார்கள். சிலீரென்று ஒரு பயம் என்னுள். என்ன கேடு சம்பவிக்கப் போகிறது என்பது எனக்கு முன்பே தெரிந்தாப் போல நடுக்குகிறது. வாரிச் சுருட்டிக்கொண்டு அந்த வீட்டை விட்டு நாங்கள் வெளியேறினோம். மிர்சா அவர்களைத் தடுக்க என முனைந்தபோது, ஆத்திரக் குமுறலுடன் அவனைப் பார்த்து அலறுகிறேன். ஐயோ அவர்கள் அவனைக் கொன்றுவிடுவார்கள், என திகிலெடுக்கிறது. மொல்லா மாஃபசை அவர்கள் அவன்வீட்டில் இருந்து ஒருநாள் அழைத்துப் போனார்கள். பின் அவன் சடலம் ஆற்றங்கரைப் பக்கம் கிடந்தது. மிர்சா, சனியனே, அவர்களோடு முரண்டாதே… வாயை மூடிக்கிட்டு இருடா. ம். நான் அப்படித்தான் உயிர் தப்பித்தேன். அப்படியே வாயைத் திறக்காமல், அவனும் பிழைத்துக்கொள்ள நான் விரும்பினேன். அடங்கினான் மிர்சா.

ஊரே தூக்கக் கலக்கத்துடன் அந்த இரவு எப்படி கொடூரமாக உருவெடுக்கிறது என்று பார்த்தது. ஊரின் மொத்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என திடல் பக்கம் கூடியதும், சிப்பாய்கள் எங்கள் வீடுகளைத் தீயிட்டார்கள். எங்களது உடைமைகள் எல்லாமே உள்ளேயே இருந்தன. எங்களது லாயங்களையும், பிராணிகள் உள்ளேயே அடைந்து கிடந்தன, தீக்கிரை யாக்கினார்கள். வெறுமனே எங்களை வீடுகள், உடைமைகள், சொத்தபத்துக்கள் என்று இல்லை, நாங்கள் எங்கள் கடந்த காலத்தையே, எங்கள் நல் நினைவுகளையே, நம்பிக்கைகளையே அல்லவா இழந்தோம்.
தீயின் நாக்குகள் வீட்டைச் சுவைத்து வானுக்கு எகிறிக் குதிக்கிற சமயம், என் சாபப்பட்ட கல்யாண ராத்திரி ஞாபகம் வந்துதொலைத்தது எனக்கு. மாப்பிள்ளை மரம். அடியில் நான் உட்கார்ந்திருந்தேன்.

அதன் கிளையெல்லாம் கனமாய்ப் பழங்கள், இனிப்புகள், கொட்டையும் பருப்புமாய்த் தொங்கின. கருப்பு சிவப்பு சேவல் ஒன்றை அப்போதுதான் அறுத்து காலில் கட்டி தலைகீழாக மர உச்சியில் தொங்க விட்டிருந்தார்கள். அதன் கழுத்தில் இருந்து சொட்டுச் சொட்டாய் ரத்தம் சொட்… கிளைகள் ரத்தத்தில் நனைந்தன. பார்க்கவே திக்கென்றது. அந்த நேரம் ஹசன், நீ எப்படி சந்தோஷமாய் இருந்தாய். சனங்கள் உன்னைச் சுற்றி ‘ஹாலே’ ஆட்டம் ஆடுகிறார்கள். நான் வீடு சேர, அந்த ஆட்டக்காரர்கள் எல்லாருமே மரத்தின் பழங்களுக்கும், இனிப்புகளுக்கும், கடலை, பருப்புகளுக்கும் முட்டியடித்து சூறை…

பெருஞ்சத்தம். ஆகாயத்துக்கு எகிறும் ஜுவாலைகள். அந்த மாப்பிள்ளை மரமே சடசடவென்று சரிந்தது. மிர்சா கையைப் பற்றிக்கொண்டேன். தீக்கிரையான வீட்டை விட்டுவிட்டு என்பக்கமாக இழுத்தேன். வீடு, அதன் பொக்கிஷங்கள், நினைவுகள் எல்லாவற்றிலும் இருந்து அவனை வெளியே இழுத்தேன். பினவ்ஸ் குட்டி, அவளுடைய மரப்பாச்சி பொம்மையைத் தன்னுடன் எடுத்துக் கொண்டாள். திகுதிகுவென்று எலலாமே பற்றி எரிகிறதைப் பார்த்தபடி அவள் பொம்மையை இறுக்கி அணைத்துக்கொண்டாள். ஒரு சிப்பாய்க்கு அது பொறுக்கவில்லை போல. அவன் வந்து அவள்கையில் இருந்த பொம்மையைப் பிடுங்கினான். அதை அவன் தீயில் வீசுமுன் இன்னொரு சிப்பாய் பாவம்பார்த்து அதை அவனிடம் இருந்து வாங்கி என் மகளிடம் திருப்பித் தந்தான்.

ஃபட்மா என் கையைப் பற்றிக்கொண்டாள். ‘அம்மா, யாரு வந்திருக்கான்னு பாரு.’ வந்தவளை எனக்கு ஞாபகம் இல்லை. ‘இவளைத் தெரியலையா,‘ என்று ஃபட்மா கேட்டாள். ‘திலன். நம்ம பக்கத்து வீடு அப்பாஸ்… அவரோட பொண்ணு. உங்களை ரெண்டு மூணு வாட்டி ஆஸ்பத்திரிக்கு வந்து அவ பாத்துட்டுப் போனாள்… அம்மா, இவளுக்கு இப்பதான் கலயாணம் நிச்சயம் ஆகியிருக்கு.‘ ஃபட்மா அப்படியே ஓரக்கண்ணால் ஜேனப்பைப் பார்த்தாள். அவன்பாட்டுக்கு ‘யாசின்’ உச்சாடனம் செய்துகொண்டிருக்கிறான். அவனைச் சீண்ட ஃபட்மா ஆசைப்பட்டாப் போலிருந்தது. ‘இதெல்லாம் சிலப்ப, அவங்கவங்க அதிர்ஷ்டம்னு ஆயிருது.இல்ல?‘ என்றாள் ஃபட்மா.

என்னைப் பார்க்க முத்தமிட குனிந்தாள் ஃபட்மா. அவள் முகம் நாணத்தால் சிவந்தது. அவளது நகையலங்காரம் பார்க்கிறேன். கழுத்து நகை, வளையல்கள், காதணிகள், மோதிரம்… அவளைப் பார்த்துப் புன்னகைக்கிறேன். ‘எப்படி இருக்கீங்க,‘ என சத்தமாய்க் கேட்டாள் அவள். நான் தலையாட்டினேன். அவ்வளவுதான், வந்த வேலை முடிந்தது, என்கிறாப் போல அவள் அவசரமாய் என்னைவிட்டு வெளியே போனாள். எனது மூப்பு, அவளைத் தொத்திக்கும் என்று பயந்தாப் போல. கண்ணை மூடிக்கொண்டேன். அவர்கள் வெளியே கிசுகிசுப்பதும், பேச்சுகளும் எனக்கு வேண்டாம். என் துக்கம் எனக்கு. பேசாமக் கிடந்து தூங்க முடியுமா பார்க்கலாம்.

அன்னிக்கு, ஹசன் முடிவெட்டி, மழுமழுன்னு ஷேவ் எடுத்திருந்தார். அவரது மேல்கோட்டு மகா தொள தொள. ஒருமாதிரி பரவசப் பரபரப்போட இருந்தார். நான் கொட்டகையில் அவர் தந்த எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அந்த மனுசன் குனிந்து தன் காலைப் பார்த்தபடி காலாட்டிக் கொண்டிருந்தார். ஒரு கணம் எங்கள் கண்கள் சந்தித்துக்கொண்டன. சட்டென பார்வையை விலக்கிக்கொண்டார். பின் திடீரென என்னை அவர் கண்ணுக்குக் கண்ணாக ஊடுருவுகிறாப் போல உறுத்துப் பார்த்தார். சொன்னார். ‘ஏய் ஹதைஸ், நீ என் பொண்டாட்டியா வரப்போறே. நாம கல்யாணங் கட்டிக்கப் போகிறோம்!‘

எனக்கு உடம்பே லேசாய் அதிர்ந்தது. ஆரமுடைய சிதைக்கப்பட்ட சடலம், மரத்தில் தொங்கிய காட்சி என்னில் பெரிசாய், இன்னும் பெரிசாய் வளர்ந்தாப் போல ஒரு நடுக்கம். அழுகையை மீறிய ஒரு திகைப்பும் திணறுலும். எதைப்பத்தி அழுவேன் நான்? என் பெயர்… அல்மஸ்ட். இப்ப பேர் மாத்தியாச்சி, ஹதைஸ். கிறித்துவச்சி இப்ப துலுக்கச்சி ஆனதையிட்டு அழறதா? எங்க ஐயா, அண்ணன், சகோதரிகள் எல்லாருமே கொல்லப்பட்டு விட்டதை நினைச்சி அழறதா? அவர்கள் எல்லாருடைய சடலங்களுமே மலைப்பகுதியில் அப்படியே அழுக விடப்பட்டதே, அதற்கு அழறதா? அப்புறம், கிஞ்சித்தும் காதலோ, அன்போ இல்லாத இந்த மனுசனுக்கு நான் வாழ்க்கைப்படப் போகிறதை நினைத்து அழறதா? ஏற்கனவே எனக்கு அழுதழுது கண்ணீரே வத்தியாச்சி. தனியே எனக்குள்ளயே நான் அத்தனை அழுது தீர்த்தாச்சி… அப்படியே என் கண்ணுக்குள் பார்த்தபடி எதுவும் பேசாமல் கிடந்தேன்.

அடுத்த நாள் என்னை கொட்டகையை விட்டு வெளியே அழைத்து வந்தார் ஹசன். இடையில் எவ்வளவு காலம் ஆனது என்கிற கணக்கே விட்டுப் போச்சு எனக்கு. மரங்களில் இலைகளின் வண்ணங்கள் மாறி யிருந்தன. சில மரங்கள் இலைகளே இல்லாமல் மொட்டையாய் நின்றன. சுற்றுச் சூழலின் மாற்றங்களை வைத்து இந்த இடைப்பட்ட காலத்தை அளக்க முடியுமா என நான் முயற்சி செய்தேன். அந்த வெளிச்சமே என் கண்ணைக் குத்துவதாய் இருந்தது. என் கண்கள் இருட்டுக்குப் பழகிக்கொண்டிருந்தன. மாடிக்குப் போனோம். ழேசி, ஹசனின் அம்மா, கொட்டகைக்கு அவள் ரெண்டே வாட்டி தான் வந்தாள். அறையின் நடுவில் அவள் உட்கார்ந்திருந்தாள். என்னையே பார்த்த அவள் கண்ணில் அத்தனை ஆங்காரம். ஹா, மாமியார்க்காரியுடன் நான் நட்பு பாராட்டவே முடியாது. அவளைப் பொருத்தமட்டில் நான் வேற்று மதக்காரி. அவங்க சாமியை விட்டு வேற சாமி கும்பிடற பாவி நான். அதை மறக்கவோ மன்னிக்கவோ எப்பிடி முடியும்?

எனக்கு கடைத்தேற்றம், விமோசனம் இல்லை. ஹசன் கல்யாண ஏற்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்தார். என்ன நடக்குதுன்னு எனக்கே தெரியாமல் பல நாள் ஏற்பாடுகள். நான் வீட்டுக்குள்ளே யாரு என்ன வேலை சொல்றாங்களோ அதைத் தட்டாமல் செய்தபடி யிருந்தேன். ஏன் எதுக்கு என்று நான் கேள்வி கேட்கவே இல்லை. எனக்கு ஒரே தீர்மானம்.. நான் வாழ வேண்டும்… எத்தனை சோதனை வந்தாலும், அதையெல்லாம் ஏற்றுக்கொண்டு, கடந்து நான் வாழ்வேன்… என்றாலும் ராத்திரி படுக்கப் போகும்போது, வாழ வேண்டும் என்ற உந்துதலில் நான் தலைவணங்கிய காரியங்கள், எனக்குள் அடக்கி வைத்திருந்த அதன் குமுறல்கள்… எல்லாமே மேலெதுத்து வந்தது. விடியும் வரை நான் அழுது தீர்த்தேன்.

கல்யாண நாள். வீடு நிறைய ஹசனின் உறவினர்கள். அலப்போவில் பழக்கமான நபரின் மகள், என அவர் என்னை எல்லாருக்கும் அறிமுகம் செய்தார். அப்போதைய என் உணர்ச்சிகளை எனக்கே வெளிப்படுத்தத் தெரியாதபடி நான் திகைப்பில் இருந்தேன். மூதாட்டிகள் என்னைப் பார்த்து என் அழகை வியந்தார்கள்.

கண்கள். சிகை, கழுத்து, இடை, உயரம், கைகள், பாதங்கள் என அவர்கள் அளவெடுத்து ஆகா, எனப் பாராட்டினார்கள். என் வதனத்தின் எடுப்பான மச்சங்களை, வரிகளையெல்லாம் சுட்டிக்காட்டிப் பேசினாள் ஒருத்தி. இதோ, இந்தா இது… என எண்ணி எண்ணிக் காட்டி வியந்தாள். என் உதட்டோரத்து ஒரு மச்சத்தை அவள் தொட்டுக்கூட பேசினாள். பிறகு அவர்கள் என்னைவிட்டு முகம் திருப்பி தங்களுக்குள் என்னென்னவோ பேசிக்கொண்டார்கள். ஆரம் எப்பவுமே என் கூந்தலை, கண்களை, அந்த முக மச்சங்களைப் பற்றியெல்லாம் ரசித்துப் பேசுவான்.

ஒருநாள் அவனிடமே கேட்டேன், ‘ஏய் என் பிரிவு உன்னை எந்த அளவு பாதிச்சிருக்கு?‘ அந்தக் கேள்வியே அவனைத் திகைக்க வைத்துவிட்டது. என்னையே உற்றுப் பார்த்தான் அவன். ‘அதை எப்பிடிச் சொல்றது… ம்ஹும். போதாது… இது, இதுவும் பத்துமா என்ன? என் வார்த்தைக்கும் மேலா ரொம்ப, ரொம்ப உன்னை இழந்துவிட்டேனடி…‘

மூதாட்டிகள் உள்ளே என் மாமியாரிடம் போய் என் அழகை அவர்கள் கொண்டாடிப் பேசினார்கள். ஆனால் என் மாமியார், அவ யாரையோ பறிகொடுத்தா மாதிரி உட்கார்ந்திருந்தாள். அவர்களிடம் ஆத்திரப்பட்டாள் அவள். ‘பாருங்க அவளை…‘ என இரைந்தாள். ‘அவ முகம் பூரா புள்ளிகள். அதையா போயி அழகுன்றீங்க?‘ வேணுமென்றே அவள் குத்தலாய்ப் பேசினாள். ‘என் பிள்ளை ஹசன், அவனையும் பாருங்க.

இந்த புள்ளிக்காரி இவளையும் பாருங்க. பாத்திட்டுச் சொல்லுங்க…‘ அவளைக் கேட்டபடி நான் தலையைக் குனிந்துகொண்டேன். இந்த மச்சங்கள்… ஆரம் இவற்றை ரசித்தான். கொண்டாடினான். எனது உடலின் ஒவ்வொரு மச்சத்துக்கும் அவன் தனியே பேரே வைத்திருந்தான்! ஒவ்வொரு மச்சமாய் நான் மெல்ல வருடியபடியே அவற்றின் பெயர்களை, ஆரம் சொன்ன பெயர்களை, உச்சரித்துக் கொண்டேன். ‘மாதுளைமுத்து. ஆலவிதை. இசைப்பொததான். அன்னம். ஆடம். மேரி. நட்சத்திரம். புள். ஆகாயம்…‘

சமையல் ஆகி எல்லாம் தீன்று தீர்த்தார்கள். ‘ஹாலே‘ (சடங்கு) முடிந்தது. ஆக சட்டுப்புட்டென்று கல்யாண வைபவம் முடிவுக்கு வந்தது. விருந்தாளிகள் ஒவ்வொருவராய் அவரவர்வீடு திரும்பினார்கள். என் மாமியார்க்காரி என்னைக் கையைப்பிடித்து தனியறை வரை அழைத்துப்போனாள். என் முகத்தை சிவப்புச் சல்லாவால் மறைத்திருந்தார்கள். அறை நடுவே பெரிய கட்டில். அதில் என்னை அமரப்பண்ணினார்கள். இவள், என் மாமியார்ப் பிசாசு என்னைப்பார்க்க குனிந்து மெல்ல என் சல்லாத்திரையை நீக்கினாள்.

என்னை கண்ணோடு பார்த்தபடி அந்த ராத்திரி நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எடுத்துச்சொன்னாள். என்னவெல்லாம் நடக்கும் என்று விலாவாரியான விளக்கம். பூவேலையிட்ட பருத்தித் துணி ஒன்றை எனக்குத் தந்தாள். இதைப் பயன்படுத்து… என்றபடி திரும்ப என் முகத்திரையைப் போட்டாள். அவள் அறையைவிட்டு வெளியேறியபோது என் உயிரே வெளியே போனாப்போல இழப்பு திக்குமுக்காட்டியது. குரல்களே ஒலிகளே கேட்டாலும் வார்த்தைகள் புரிய மறுத்தன. அந்தத் துணிக்குட்டையைப் பார்த்தபோது ஒரு நடுக்கம் என்னுள் தண்டுவடம் வரை வெட்டியது.

ராணுவம் போல வெளியே இரைச்சல். கூக்குரல்கள். கைதட்டல்கள். அறையைநோக்கி வருகிறார்கள். வாசல் கதவருகே அவர்கள் அப்படியே நின்றார்கள். சத்தக்காடு. பாடல்கள். ஹுங்கரிப்புகள். பகடி… என் தலைக்குள் வெடித்தன அவை. ஒரே குழப்பம். திடுதிப்பென்று கதவு திறக்கப்பட்டு, ஹசனை முதுகில் ஒரு உந்து! ஹா ஹு என சப்த சைரன். வெளியே அந்த வெடிச்சிரிப்பும் கைதட்டல்களும் தொடர்ந்தன.

இந்தப் பகல்கனவை மிர்சாவின் குரல் கலைக்கிறது. ஜேனப் என்னருகே சத்தமாய் குரான் வாசிக்கிறது கேட்கிறது. இனிய குரலில் கண்பனிக்க வாசிக்கிறான். திலன் எல்லாருக்கும் தண்ணீர் விநியோகிக்கிறாள். என் முதுகை நிமிர்த்தி தம்ளரை உதட்டில் பதித்து எனக்கும் சிறிது தண்ணீர் புகட்டுகிறாள். தண்ணீர் என் வாயில் இருந்து கழுத்தில், நெஞ்சில் வழிகிறபோது என் படுக்கையில் அருகே கிடந்த சிறு துண்டுத்துணியை எடுத்து அழுத்தமில்லாமல் துடைக்கிறாள்.

திரும்பவும் என் முதுகைத் தளர்த்தி அவள் படுக்கையில் சரிக்கிறபோது, வெளியே குரல்கள் கேட்டன… குரல்கள்! நடமாடும் காற்று போல மெல்ல அடங்கும் குரல் ஒலிகள். சூழும் நிசப்தம். கதவுப்பக்கமாய் ஹசன். மகா உடைகளுடன். சிவப்பு சல்லாவூடாக அவரைப் பார்க்கிறேன். அவை அவருடைய உடை போலவே இல்லை. வேறு யாரோ ஆஜானுபாகு, வீரபாகுவுடைய உடைகளாய் அத்தனை தொளதொளத்துக் காண்கின்றன. மேல்உடையை உருவியெடுத்தார். தொண்டையைச் செருமிக்கொண்டார். உள்ப்பையில் இருந்து தங்க கழுத்தணி ஒன்றை வெளியே எடுத்தார்.

என் கழுத்தில் அதை அணிவிக்க அவர் என்னை நெருங்கி… திரும்ப வேறொரு ராத்திரி என் நினைவுக்கு வருகிறது. ஆயுதங்களுடன் எங்களைத் தாக்கிய அந்த திருட்டுப் பட்டாளம். பெண்கள் எல்லாரிடமும் இருந்த எல்லா நகைகளையும் அவர்கள் பறித்துக் கொண்டார்கள். கொட்டகையில் பெருச்சாளி ஒன்றை சாவடிக்கிற ஒலியைக் கூடக் கேட்டேன். அந்த ராத்திரி… மெர்யம், அவளுக்கு தன் கழுத்தணியை விட்டுத்தர ஒப்பவில்லை. அவள் முரண்டு பிடித்தாள். ஒரு கொடும்பாவி சட்டென துப்பாக்கியை உயர்த்தி, அவளை… சுட்டே விட்டான். அவளது உடலை அவன் பார்த்த பார்வையில் இருந்த ஆத்திரம். அவளைப்பார்க்க குனிந்து அந்த நகையை வெடுக்கென அறுத்தான்.

என் முகத்தின் சிவப்பு சல்லாவை மெல்ல ஹசன் உயர்த்தினார். வெளி சந்தடிகளும் இரைச்சலும் மங்குவதை நான் கவனித்தவாறிருந்தேன். என்னருகே சிறிது தயக்கத்துடன் குனிந்தவாக்கில் ஹசன். பின் எழுந்து தன் உடைகளைக் களைய ஆரம்பித்தார். மேலுடை. கால்சராய். சட்டை. வேறு யாருடையதோவான உடைகளை விடுவித்தார். என் உடைகளை அவிழ்க்க அவரது வியர்த்த கரங்களில் சிறு நடுக்கம். படுக்கையில் என் இடுப்புக்குக் கீழே மாமியார் தந்த அந்தத் துணியைப் பரப்பிக் கொண்டேன். பார்வை மேல் உத்திரத்தில். என் கண் ரப்பையடியில் பதுக்கி வைத்திருக்கிற ஆரம், அவனைப் பார்க்கக் கூடாது என்கிற தீர்மானம்.

வேணாம் வேணாம் என மறுக்க மறுக்க, அவன் முகமும், குரலும் மேலெழும்பி வருகிறது… கண்ணீர் பெருகி கன்னத்தில் வழிகிறது. என் குடும்பத்தின் ஞாபகம். நிர்வாணப்படுத்தி அவர்களை மிருகங்களைப் போல சுட்டுத் தள்ளினார்கள். அந்த உடைகளை எடுத்துக்கொண்டு போன சிப்பாய்களை நினைத்துக்கொண்டேன். முகங்களும், குரல் இரைச்சல்களுமாய் என்னை மூழ்கடித்தன… ஹசன் விளக்கணைக்க எழுந்துபோனார். பதட்டமான அந்த விளக்குச் சுடர் அமர்ந்து, இருள்… இருள் சுற்றிவளைத்து முற்றுகையிட்ட அந்த ராத்திரி. என் பார்வையை உத்திரத்தில் இருந்து நான் மீட்டுக்கொள்ளவே யில்லை. இருள் கண்ணுக்குப் பழகியிருந்தது. நானும் அடங்கிக் கிடந்தேன்.

***

அட ஆரம், ஆரம், நான் மரணப்படுக்கையில் கிடக்கிறேன். என் மகன், பேரக்குழந்தைகள், மருமகப் பிள்ளைகள், எனது சிநேகிதப் பட்டாளம். எல்லாரும் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள். எல்லாரும் என்னைக் கரிசனமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அன்பு, இரக்கம், துக்கம். என் நிலையில் தாங்கள் இல்லையே என அவர்கள் சந்தோஷமும் படலாம். அவர்கள் கண்களைப் பார்த்தேன். சாவுதான் எனக்குத் தோதானது. இப்பவே கூட நான் எங்கே வாழ்கிறேன்… செத்த கணக்குதான் இது, சும்மா மூச்சு போய்வருது, என அவர்கள் நினைத்தார்கள். எல்லாருமே கவலையாய்ச் சவலையாய் இருந்தார்கள்.

ரெண்டு நிமிஷத்துக்கொருதரம் ரஸ்டம் தன் மொபைலைப் பார்த்து, அதில் குறுஞ்செய்தி பரிமாறுகிறான். என் நிலைமை இத்தனை களேபரமாய் இல்லையென்றிருந்தால் அவனைப் பள்ளிக்கூடம் அனுப்பியிருப்பார்கள். இங்கேயே வந்து நாள்க்கணக்கில் தங்கியிருக்கிறாட்கள், இப்ப வந்தாட்கள், எல்லாரும் என் முகத்தையே… ஐய ஏம்மா இவ்வளவு பிடிவாதமா கஷ்டப்படறேன்றாப்ல பார்க்கிறார்கள்.

ஜேனப், தில்பர் நாள்பூரா குரான் வாசிக்கிறார்கள். சீக்கிரம் என் ஆத்மா என் தேகத்தைவிட்டுச் செல்லட்டும்… அவர்கள் அலுத்துக் களைத்திருக்கிறார்கள். கிழவிக்கு இன்னும் அந்த வைராக்கியம் விடுதா பாரு, என அவர்கள் நினைக்கலாம். அவர்களின் பொறுமையின்மை என்மீது காத்துப்போல மோதியது. என் தலை கிர்ரென்றது.

கதவு திறந்தது. பினவ்சின் சின்னப் பெண், என் பேத்தி ஸ்ட்ரான் உள்ளே வந்தாள். வெள்ளை கவுன். கூந்தலைப் பின்னிவிட்டிருந்தாள். பாவம் சிறு குட்டி. பெண்கள் குரான் வாசிக்கிற அந்த அறையே அவளுக்குச் சங்கடமாய் இருந்தது. எனது கனமான மூச்சிறைப்பு வேறு. அவள் முகம் வெளுத்தது.

ரஸ்டம் குறுஞ்செய்தி யனுப்பிய வண்ணம். மிர்சா ஸ்ட்ரானைப் பிரியத்துடன் பார்த்தபடி. நான் ஸ்ட்ரானைப் பார்த்தபோது அவளை அவள்அம்மா தன் மடியில் தூக்கி வைத்துக்கொண்டாள். நான் குழந்தையைப் பார்த்து புன்னகைகாட்ட முயன்றேன். அது முகத்தைத் திருப்பிக்கொண்டது. பேசவேயில்லை. அதற்கு பயமாய் இருந்தது போல. என்னைக் காட்டிவிட்டு அப்படியே அம்மாவை அது இறுக்கிக் கட்டிக்கொண்டது.

பக்கத்துவீட்டுக் குழந்தை பெர்வின். தில்பரின் காதில் என்னவோ சொன்னது. ஓரக்கண்ணால் என்னையே அது பார்த்துக்கொண்டிருந்தது. அவள் உதடு அசைவதையே பார்த்தேன். தில்பர் அவள் பக்கமாய்த் திரும்பிச் சொன்னான். ‘அவங்களுக்கு வயசு நூறாயிட்டது. கூடக் கூட இருக்கும்!‘ பெர்வினுக்கு ஆச்சர்யம்.

என்னையே அது குறிப்பாய்ப் பார்த்தது. ‘அவ்வளவு பெரியவங்களா. மாஷா அல்லா! கடவுள் அவங்களை அழைச்சிக்கிடட்டும். அவங்க அமைதியா ஓய்வு எடுத்துக்கட்டும்…‘ அதைக்கேட்டு தில்பர் தலையாட்டினான். ‘ஆமாம். அவங்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. மரணம்னால் அது அவங்களுக்கு இப்ப இந்த வலியில் இருந்து நிவாரணம். அதைத்தான் விதின்னு சொல்றோம்.‘ தலையைத் திருப்பி அவங்களை உதறுகிறாப்போல கண்ணை இறுக்க மூடிக்கொண்டேன்.

ஆரம்… எல்லாரும் நான் செத்துப்போகப் பயப்படுகிறாப் போல நினைக்கிறார்கள். நான் சீக்கிரம் செத்துட்டா நல்லதுன்றாப் போல நினைக்கிறார்கள். என் கண்ணில் மண்ணைக் கொட்டுவது எனக்கு பயங் கிடையாது. உடலுக்குள்ளே புழுக்கள் துளைக்கிறதிலோ, என் சதையும் எலும்புகளும் அரித்துப் போவதிலோ, என் இதயத்தையும், நுரையீரல்களையும் பூச்சிகள் தின்கிறதிலோ எனக்கு பயம் கியம் எதுவும் இல்லை. எல்லாமே உண்மைக்கு மேலானது இல்லை. இவற்றைத் தவிர்க்க யாரால் முடியும்? இதெல்லாமும் எனக்கு பயம் தரவில்லை. என் யோசனை என்ன, நான் இறந்து போனால்… ஆரம், உன்னிடம் வந்துவிடுவேன்! மரணம் என்னை உனக்கு கல்யாணப்பெண்ணாய்ப் பரிசளித்துவிடும்!

என் கண்ணே, கண்ணின் கருமணியே நீதான். என் விடிவெள்ளி நீயே. என் பிரார்த்தனைகளின் வரம் நீயே. இத்தனை வருஷமாய் நான் ஒரு ரகசியத்தை வைத்திருந்தேன். முதலில் எனக்குள்ளேயே அதை வைத்திருந்தேன், எனக்கே தெரியாமல். தெரிந்தபோது என்னைச் சுற்றியுள்ள எல்லாரிடமும் அதை மறைத்து பாதுகாத்தேன். ஆனால் இந்தவேளையில், அதை என்னோடு சுமந்து போக முடியவில்லை. கல்லறை மண்ணோடு அதைப் புதைத்துக்கொள்ள முடியாது என்னால். அதற்கான வலிமை என்னிடம் இல்லை. அந்த ரகசியமே என் மூச்சைத் திணறடிக்கிறது. நெஞ்சுக்குள் அனலைப் பாய்ச்சுகிறது மூச்சு. என் உயிர்த்துடிப்பு மெல்ல உடலைவிட்டு அகல்வதை என்னால் உணர முடிகிறது. நான் மேலும் மேன்மேலும் எடை இழந்து வருகிறேன். இந்த வரப்பட்டிக்காட்டில் என் சொந்தக்காரர்களும், சிநேகிதர்களுமாய் என்னைச் சுற்றி. எனக்கு விடைதர தயார் நிலையில். ஜேனப் என் பக்கத்தில் அமர்ந்து குரான் ஓதியபடி. ரொம்ப சிரமம் இல்லாமல் என் ஆத்மா உடலைப் பிரியட்டும்.

இருள் மெல்லப் பரவுகிறாப் போலிருந்தது. ம். இவைதான் என் இறுதிக் கணங்கள். என் அறையில் இருக்கிறாட்களை வெளியே போகச் சொல்லி ஜாடை காட்டினேன். தங்களுக்குள் என்னென்னவோ பேசியபடி அவர்கள் எழுந்து வாசலைப் பார்க்க நகர்ந்தார்கள். ‘கடவுள் அந்த பாவப்பட்ட ஆத்மாவை சீக்கிரம் அழைச்சிக்கட்டும். மரணம் தான் அவளுக்கு ஆறுதல். அவளை ஆசுவாசப்படுத்தும் கடவுளுக்கு நன்றி.‘ ஆமாம், ஆரம், எனக்கு மரணத்தை அளித்த கடவுளுக்கு நன்றி. அதிர்ஷ்ட நட்சத்திரங்களுக்கு நன்றி. மரணம்னு ஒன்று இல்லாவிட்டால், ஆரம், நான் எப்பிடி உன்னாண்ட வந்துசேர முடியும்?

இப்போது அறைக்குள் மிர்சாவும் ரஸ்டமும் மாத்திரமே. கொஞ்சம் பதட்டமாகவும் பயமாகவும் அவர்கள் என்னைப் பார்த்தார்கள். என் கடவாய்ப் பற்கள் போன்ற குலக் கொழுந்துகள் அவர்கள். தூரத்து ஆனால் ஒட்டிய உறவுகள் தான். ரஸ்டம் வாசித்துக் கொண்டிருக்கிற புராணக்கதை. கடவுளுக்கு இஸ்மாயிலை தியாகம் செய்யத் தயாராகும் இப்ராகிம்! அவன் இப்ராகிமையே உற்று நோக்கினான். இஸ்மாயில், வெண் பலியாடு. சிறகடிக்கும் தேவதை. நான் அவனையே அசுவாரஸ்யத்துடன் கவனித்தேன். அவனோ என்னைப் பார்ப்பதையே தவிர்த்தான்.
அவர்கள் இருவரையும் என் அருகே அழைத்தேன். என் இடவாக்கில் ரஸ்டம். வலமாய் மிர்சா. மகனையும், பேரனையும் பார்த்தேன். என் கையோடு அவர்கள் கைகளைப் பற்றிக்கொண்டேன். அவற்றை லேசாய் அழுத்தி இன்னும் கிட்டமாய் வரும்படி கூப்பிட்டேன். மிர்சா என் வாயருகே குனிந்து நான் பேசுவதை கிரகிக்க முயன்றான். திடுதிப்பென்று மகா இரைச்சலாய் ரிங்டோன். அலைபேசியை எடுக்கிற ரஸ்டமை மிர்சா கோபமாய்ப் பார்த்தான். ‘ஏய் அதை அணைடா.‘ ஆனால் ரஸ்டம் அழைப்பை செவிமடுத்தான். ‘கண்ணே, நான் அப்பறம் கூப்பிடட்டுமா உன்னை?‘ பிறகு அப்பாவை, உனக்கு இதெல்லாம் புரியாதுப்பா, என்கிறதாய் ஒரு பார்வை. என்னடா இவன், என ஆங்காரமாய் மிர்சா அவனைப் பார்த்தான்.

திரும்ப மிர்சா என்னிடம் நெருங்கிக் குனிந்தான். ‘ஆரம்… ஆரம்‘ என அவன் காதில் நான் பெருமூச்செறித்தேன். அந்தப் பெயரை உச்சரிக்கிற போதே இதமாய் இருந்தது. ஆழ்ந்து மூச்சிழுத்தேன். இன்னுமாய் அவனைக் கிட்டத்தில் வைத்துக்கொண்டேன். ‘என் மகனே. என் மிர்சா… நான் சொல்றதை கவனமாக் கேளு…‘ மேலும் பேசத் திராணியற்று திகைக்கிறது. தொண்டை வறள்கிறது. திரும்ப ஆழ்ந்து மூச்சிழுத்தேன். ‘எய்யா, மிர்சா!‘ அவனுக்குக் கேட்கவில்லை போல. திரும்ப அவன் ‘ஷாகதா‘ வசனங்களை வாசிக்கப் புகுந்தான்.

கையை உயர்த்தி அவனை நிறுத்தினேன். அவனை இன்னுமாய் என் கிட்டத்தில் இழுக்க திணறலாய் இருந்தது. அவன் வாய் என் காதை ஸ்பரிசிக்கிற நெருக்கம். ஹசனைப் பத்தி, ஆரம் பத்தி, எனது கடைசி சடங்கு பத்திப் பேசினேன்.

‘என்னை ‘அங்க‘ புதைச்சிரு, எனன? அதான் என் கடைசி விருப்பம். இதை நீ செஞ்சாகணும். என் ஆசிர்வாதம் வேணுன்னால் அதை நீ எனக்குக் கட்டாயம் செய்யணுண்டா.‘ அவன் முகம் வெளிறியது. தொண்டையில் மயிர சிக்கினாப் போல அவன் திணறினான். என்னவோ பேச வந்தவனை வாயைப் பொத்தி நிறுத்தினேன். ‘என்னோட அருமைப் பிள்ளை நீ, என் வீர மகன் நீ என்றால், என்னை ‘அங்க‘ தான் புதைக்கணும். செய்வியா இவனே? சத்தியம் பண்ணிக்குடு எனக்கு.‘
‘ம். சரி. சத்தியம்…‘ அவன் என் கைகளை அழுத்தினான்.
நடுங்கும் பிம்பங்களை விட்டுப் பிரித்து கண்ணை மூடினேன்.

மிர்சா தன் மகனை ஒரு தீர்மானத்துடன் பார்த்தான். ரஸ்டமுக்கோ என்ன நடந்ததுன்னே தெரியவில்லை. அவன் துக்கமாய் இருந்தான். எனது கடைசி வேண்டுகோள், அவர்களுக்கு அது பெரிய அநியாயச் செயல், குற்றம் அல்லவா? மிர்சா இப்போது அதைத் தேறிவர, அதன் இறுக்கம் ரஸ்டமிடம் வந்து சேர்ந்தாற் போலிருந்தது. மிர்சாவிடம் இப்போது ஒரு உறுதியும், உசுப்பிவிட்ட உக்கிரமும் வந்திருந்தது. எனக்கு நாக்கே உலர்ந்து இறுகிக்கொண்டு வந்தது. பெருமூச்சுகள். ‘ஆரம்! ஆரம்!‘ என் குரல் அப்படியே அந்த அறையில் அந்தரங்கத்தில் தொங்கியது. நான் பார்க்கிற திறனை இழந்தேன்.

•••

The lost lands of Paradise – Yavuz Ekinci –
originally in Turkish –
trs. English by Kardalen Kala
(courtesy Words without borders)

Comments are closed.